(தொகுப்பு: அஜய்பால் சவுத்ரி/ வியொன்)
மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளின் வளர்ச்சியைத் திட்டமிட்டுக் குறைக்க அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால், 2030ஆம் ஆண்டு முடிவதற்குள் AI மனிதகுலத்தை அழிக்கவோ, தனது எதிர்காலத்தைத் தானே தீர்மானிக்கும் அதிகாரத்தை மனிதகுலத்திடமிருந்து பறிக்கவோ 50–50 வாய்ப்பு இருப்பதாக AI பாதுகாப்பு ஆய்வாளர் நிகோலா ஜுர்கோவிச் எச்சரித்துள்ளார்.
‘என் அன்புக்குரியவர்களுக்கு AI குறித்த ஓர் எச்சரிக்கை’ என்ற தலைப்பில் X தளத்தில் வெளியிட்ட கட்டுரையில், 2027ஆம் ஆண்டிலேயே AI மனிதர்களைவிடப் பல மடங்கு அறிவாற்றல் கொண்டதாக மாறக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய தொழில்நுட்பத்தை மனிதர்கள் தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமா என்ற கவலையையும் அவர் எழுப்பியுள்ளார்.
“மிகவும் மேம்பட்ட AI அமைப்புகளின் வளர்ச்சியைத் திட்டமிட்டு கணிசமாகக் குறைக்காவிட்டால், 2030ஆம் ஆண்டு முடிவதற்குள் மனிதகுலம் அழிக்கப்படுவதற்கோ தனது கட்டுப்பாட்டை இழப்பதற்கோ உள்ள வாய்ப்பு, நாணயம் ஒன்றைச் சுண்டும்போது தலை விழுவதற்கான வாய்ப்பைப் போன்றது என்று நான் கருதுகிறேன்” என அவர் எழுதியுள்ளார்.
AI கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதாலோ அன்றாட வாழ்க்கையில் பெரும் இடையூறு ஏற்படுவதாலோ, 2027ஆம் ஆண்டின் இறுதிப் பண்டிகைகளைக் கொண்டாட முடியாமல் போவதற்கு 5 முதல் 20 சதவீத வாய்ப்பு இருப்பதாகவும் அவர் மதிப்பிட்டுள்ளார்.
AI மீதான கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம்:
மேம்பட்ட AI அமைப்புகள் முக்கிய உள்கட்டமைப்புகளை அணுகக்கூடும் அல்லது உயிரியல் ஆயுதங்களை உருவாக்க உதவக்கூடும் என்று ஜுர்கோவிச் எச்சரித்தார். அரசியல் மற்றும் வணிகத் தலைவர்கள் முடிவெடுக்கும் அதிகாரத்தை அதிகளவில் AI அமைப்புகளிடம் ஒப்படைத்தால், அந்த முடிவுகளிலும் AI செல்வாக்குச் செலுத்தக்கூடும் என்றார்.
“AI மீதான கட்டுப்பாட்டை நாம் இழந்து வருகிறோம்” என்ற அவர், இந்த ஆண்டு ஏற்படும் பாதிப்புகள் பெரும்பாலும் நிதி சார்ந்தவையாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டு AI காரணமாகப் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் கூறினார். அதில் பலர் உயிரிழக்கும் சாத்தியமும் அடங்கும் என்றார்.
AI மனிதகுலத்துக்கு அச்சுறுத்தலாக மாறுவதைத் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்று கூறிய அவர், மேம்பட்ட AI வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உலகளாவிய விதிமுறைகளைக் கொண்டுவருமாறு வலியுறுத்தினார்.
“இந்த இடையூறுகளையும் நமது உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் தவிர்ப்பதற்கான முக்கிய வழி, செயற்கை நுண்ணறிவின் அடுத்தகட்ட வளர்ச்சியைத் தடுக்கவோ அதன் வேகத்தைக் குறைக்கவோ உலகளாவிய விதிமுறைகளை உருவாக்குவதுதான்” என்றார்.
பெரும்பாலான வேலைகள் மறையக்கூடும்:
AI உலகளாவிய வேலைவாய்ப்புச் சந்தையை மாற்றியமைக்கக்கூடும் எனவும் ஜுர்கோவிச் எச்சரித்தார். தற்போது உள்ள பெரும்பாலான வேலைகள் அடுத்த பத்தாண்டுகளுக்குள் மறைந்து, உலக மக்கள்தொகையில் பெரும்பாலானோர் வேலையின்றி இருக்கக்கூடும் என்று அவர் கூறினார்.
சாத்தியமான இடையூறுகளை எதிர்கொள்ள மக்கள் முன்கூட்டியே தயாராக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
“உலகளாவிய பேரிடர்களை எதிர்கொள்ளத் தனிப்பட்ட முறையில் தயாராக இருக்குமாறும் பரிந்துரைக்கிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சுமார் இரண்டு வாரங்களுக்குத் தேவையான உணவையும் தண்ணீரையும் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இணைய வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டால் பயன்படுத்துவதற்குச் சிறிது ரொக்கப் பணத்தையும் வைத்திருங்கள்” என்று அவர் எழுதியுள்ளார்.
வரும் ஆண்டில், “கொவிட் காலத்தைவிட மிகப் பெரிய இடையூறை ஏற்படுத்தும்” ஒரு நிகழ்வு நேரக்கூடும் என்றும் அவர் கூறினார்.
இந்தக் கவலைகளுக்கு மத்தியிலும், ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் மனிதகுலத்தால் இந்த ஆபத்துகளைக் கையாள முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“நிலைமை சாதகமாக இல்லை. ஆனால் அதை மேம்படுத்த நாம் செய்யக்கூடியவை பல உள்ளன. முயற்சியும் ஒருங்கிணைப்பும் இருந்தால், மனித இனமாக நாம் இந்த ஆபத்தைக் கடந்து உயிர்வாழ முடியும்” என்றார்.
AI துறையைச் சேர்ந்த பிற முக்கிய நபர்களும் இந்தத் தொழில்நுட்பத்தின் சாத்தியமான ஆபத்துகள் குறித்து எச்சரித்துள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஜெஃப்ரி ஹிண்டன், அடுத்த பத்தாண்டுகளுக்குள் AI மனிதர்கள் அனைவரையும் கொல்ல 10 சதவீத வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளார். சர்வதேசக் கண்காணிப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கக் கோரிய சுமார் 400 விஞ்ஞானிகளுடன் அவரும் இணைந்ததாக 2026 அக்டோபரில் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.
மனித நாகரிகத்தையே பாதிக்கும் அளவுக்குப் பேரழிவை AI ஏற்படுத்த 10 முதல் 25 சதவீத வாய்ப்பு இருப்பதாக ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடியும் மதிப்பிட்டுள்ளார்.
மூலம்: வியொன்
