நடக்காத கலை நிகழ்ச்சிக்கும் பணம் கொடுத்த ரசிகர்கள் – இந்தியாவின் ‘தமாஷா ராணி’யின் நெகிழ்ச்சியான வாழ்க்கை!

நடக்காத கலை நிகழ்ச்சிக்கும் பணம் கொடுத்த ரசிகர்கள் – இந்தியாவின் ‘தமாஷா ராணி’யின் நெகிழ்ச்சியான வாழ்க்கை!

(அம்ரிதா கடம் – பிபிசி மராத்தி, சோயா மதீன் – பிபிசி நியூஸ், டெல்லி)

மகாராஷ்டிராவின் நாட்டுப்புற நாடகக் கலையின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான வித்தாபாய் நாராயண்காவ்ங்கரை மேடையிலிருந்து விலக்கி வைக்கக்கூடிய விடயங்கள் மிகச் சிலவே.

தனக்குக் குழந்தை பிறக்கும் தருணத்தில்கூட அவரை மேடையிலிருந்து விலக்கி வைக்க முடியவில்லை.

1960களில் மேற்கு இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் ஷிகர் ஷிங்னாபூர் என்ற கிராமத்தில் பாடகியாகவும், நடனக் கலைஞராகவும், கலைக்குழுவின் தலைவியாகவும் விளங்கிய அவர் நிகழ்ச்சியொன்றை நடத்திக்கொண்டிருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டது.

“நாங்கள் தொடர்ந்து மேடையில் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தபோது, அவர் அமைதியாக மேடைக்குப் பின்னால் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரத்திற்குச் சென்றார்” என அவரது மகளும் மூத்த நாட்டுப்புறக் கலைஞருமான மங்களா பன்சோடே பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.

வெளியே பொறுமையிழந்த ரசிகர்கள், “வித்தா எங்கே?” என்று தொடர்ந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர்.

வித்தாபாய் மீண்டும் மேடைக்கு வந்தபோது, புதிதாகப் பிறந்த தனது ஆண் குழந்தையைக் கைகளில் ஏந்தியிருந்தார். அது அவரது எட்டுக் குழந்தைகளில் ஏழாவது குழந்தையாகும்.

“ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். ஆனால், ‘உங்களது நிகழ்ச்சியைப் பின்னர் பார்த்துக்கொள்கிறோம்’ என்று கூறிவிட்டு அமைதியாக வெளியேறினார்கள்” என பன்சோடே நினைவுகூர்ந்தார்.

வெளிப்படையாகப் பேசும் துணிச்சலும், சமயோசிதமான நகைச்சுவை உணர்வும் கொண்ட வித்தாபாய், பல தசாப்தங்களாக மகாராஷ்டிரா முழுவதிலும் ரசிகர்களைத் தனது கலையால் கட்டிப்போட்டிருந்தார்.

மாநிலத்தின் பாரம்பரிய நாடோடி நாட்டுப்புற நாடகக் கலையான தமாஷாவின் பேரரசி என்பதைக் குறிக்கும் வகையில், அவருக்கு ‘தமாஷா சாம்ராக்ஞி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

பாலிவுட் திரைப்படமாகும் வித்தாபாயின் வாழ்க்கை

அவர் உயிரிழந்து இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், அவரது வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு ‘ஈதா’ (Eetha) என்ற பாலிவுட் இசைத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஷ்ரத்தா கபூர் நடித்துள்ள இத்திரைப்படம் டிசம்பர் 4ஆம் திகதி வெளியாகவுள்ளது.

லக்ஷ்மண் உடேகர் இயக்கியுள்ள இத்திரைப்படம், வித்தாபாயின் வாழ்க்கையை விவரிக்கும் யோகிராஜ் பாகுலின் மராத்தி மொழிப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது.

பக்திப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு தோற்றம்பெற்ற தமாஷா கலை, காலப்போக்கில் இசை, நடனம், நகைச்சுவை மற்றும் நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கிய விறுவிறுப்பான கலை வடிவமாக வளர்ச்சியடைந்தது.

இதன் மையமாக விளங்குவது ‘லாவணி’ எனப்படும் பாடல் மற்றும் நடன மரபாகும். இதில் காமம் கலந்த நகைச்சுவை முதல் கூர்மையான அரசியல் விமர்சனங்கள் வரையிலான பாடல்கள், ‘தோல்கி’ எனப்படும் தாள வாத்தியத்தின் இசைக்கேற்ப நிகழ்த்தப்படுகின்றன.

தமாஷா கலையின் பொற்காலத்தை ‘ஈதா’ திரைப்படம் மீண்டும் கண்முன் கொண்டுவருகிறது.

இதற்கு முன்னர் லாவணி நடனமாடியிராத ஷ்ரத்தா கபூர், ஒவ்வொன்றும் நான்கு கிலோகிராம் எடையுடைய சலங்கைகளை அணிந்து நடனமாடக் கற்றுக்கொண்டார்.

“தமாஷா கலைஞர்களின் வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருந்துள்ளது. எனவே, அவர்களது நடனத்தில் மகிழ்ச்சியையும் வலியையும் ஒருசேரக் காண முடியும்” என திரைப்படத்தின் விளம்பர நிகழ்வொன்றில் ஷ்ரத்தா கபூர் தெரிவித்தார்.

சாதிய ஒடுக்குமுறையும் கலை வாழ்க்கையும்:

வித்தாபாய் உட்பட பல தமாஷா கலைஞர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களது கலைத்திறன் பெருந்திரளான ரசிகர்களை ஈர்த்தபோதிலும், அவர்கள் சாதியப் பாகுபாடுகளுக்கு முகங்கொடுத்தனர்.

அந்த வரலாற்றை ‘ஈதா’ திரைப்படம் எந்தளவுக்குப் பதிவு செய்யும் என்பது குறித்த விவாதங்கள் தொடர்கின்றன.

இது ஒரு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் அல்ல என்று இயக்குநர் உடேகர் கூறுகிறார். எனினும், ‘வித்தாபாய் பாவு மாங் நாராயண்காவ்ங்கர்’ என்ற பெயருக்குப் பதிலாக, திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரத்திற்கு ‘வித்தாபாய் பாவு காவ்கர்’ எனப் பெயரிட்டமை விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

வித்தாபாயின் வரலாற்றில் பெரும்பகுதி அவரது பெயரிலேயே அடங்கியிருந்ததாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

‘மாங்’ என்பது வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்துடனான அவரது அடையாளத்தைக் குறிக்கிறது. ‘நாராயண்காவ்ங்கர்’ என்பது நாராயண்காவ் கிராமத்திலுள்ள அவரது குடும்பத்தின் வேர்களைக் குறிக்கிறது.

தனது தந்தையிடமிருந்து அவர் பொறுப்பேற்ற ‘பாவு–பாபு மாங் நாராயண்காவ்ங்கர் தமாஷா மண்டல்’ என்ற கலைக்குழுவின் பெயரிலும் இந்த இரண்டு அடையாளங்களும் இடம்பெற்றிருந்தன.

சாதி குறித்தும், தமாஷா கலைஞர்கள் எதிர்கொண்ட அவமானங்கள் குறித்தும் வித்தாபாய் வெளிப்படையாகப் பேசினார். அவரது பாடல்களிலும் இந்தக் கருத்துக்கள் வெளிப்பட்டன.

வரலாற்றாசிரியர் ஷைலஜா பாய்க் ஆவணப்படுத்தியுள்ள 1960களின் லாவணிப் பாடலொன்றில், ஆபாசமான சைகைகளைச் செய்த ஆண்களை வித்தாபாய் கடுமையாகக் கண்டித்திருந்தார்.

தான் அவர்களை மகிழ்விப்பதற்காக அல்ல, தனது வாழ்வாதாரத்திற்காகவே நடனமாடுவதாக அவர் நினைவூட்டியிருந்தார்.

எட்டு வயதில் ஆரம்பமான கலைப் பயணம்:

தலைமுறை தலைமுறையாகக் கலைஞர்களைக் கொண்ட தனது குடும்பத்திடமிருந்தே வித்தாபாய் இந்த வாழ்வாதாரத்தைப் பெற்றிருந்தார்.

தனது மகனைப் போலவே வித்தாபாயும் 1935ஆம் ஆண்டு தமாஷா நிகழ்ச்சியொன்று நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே பிறந்தார்.

அவரது தாயார் சாந்தா, கர்ப்பமாக இருந்த காலம் முழுவதிலும் தனது கணவர் பாவுவின் கலைக்குழுவுடன் பயணித்துக்கொண்டிருந்தார்.

எட்டு வயதில் நாடகக் குழுவொன்றில் இணைந்த வித்தாபாய், 13 வயதில் தனது தந்தையின் கலைக்குழுவில் இணைந்து, விரைவிலேயே அதன் நட்சத்திரமாக உருவெடுத்தார்.

அவரது தந்தையும், கலைக்குழுவின் மற்றொரு தலைவரான பாபுவும் குறுகிய கால இடைவெளியில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனது கணவர் மற்றும் உறவினர் ஒருவருடன் இணைந்து கலைக்குழுவின் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.

தமாஷா கலையின் பொற்காலத்திலேயே வித்தாபாயின் கலை வாழ்க்கை செழித்தோங்கியதாக நாட்டுப்புறக் கலை ஆய்வாளர் சுகதா காண்ட்கே தெரிவிக்கிறார்.

அக்காலத்தில் புராணங்கள், வரலாறு மற்றும் சமகால வாழ்க்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பிரமாண்டமான நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டன.

சிறுவயதில் வித்தாபாயின் நிகழ்ச்சிகளைப் பார்த்திருந்த காண்ட்கே, அவரது ஒளிவீசும் கண்களையும், மேடையை ஆளும் ஆளுமையையும் நினைவுகூர்கிறார்.

தனது கால்களின் அசைவுகளால் மட்டுமன்றி, முகபாவனைகளாலும் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் வித்தாபாய் சிறந்து விளங்கினார்.

இராணுவ வீரர்களுக்காகக் கடும் குளிரில் நடனம்:

வித்தாபாயின் புகழ் மகாராஷ்டிராவையும் கடந்து பரவியது.

1962ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் போர் நடைபெற்றபோது, தற்போது பெரும்பாலும் அருணாச்சலப் பிரதேசமாக விளங்கும் வடகிழக்கு எல்லைப் பிராந்தியத்தில் இராணுவ வீரர்களுக்காக அவர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

குழந்தை பிறந்து மூன்று மாதங்களே ஆகியிருந்த நிலையில், உறையவைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர் நிகழ்ச்சிகளை நடத்தியதாக பன்சோடே தெரிவிக்கிறார்.

1996ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாடொன்றில், வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட மகார் மற்றும் மாங் சமூகங்களைச் சேர்ந்த இராணுவ வீரர்களை எல்லைப் பகுதியில் சந்தித்த அனுபவத்தை வித்தாபாய் நினைவுகூர்ந்தார்.

“எமது மகார், மாங் சமூகங்களைச் சேர்ந்த வீரர்கள் நாட்டைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டு உயிர்த்தியாகம் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதே மக்கள் எமது சமூகத்தைச் சேர்ந்த மணமகனைக்கூட கிராமத்தின் நுழைவாயில் வழியாகச் செல்ல அனுமதிக்கவில்லை” என்று அவர் கூறியிருந்தார்.

ராஜ் கபூர் உள்ளிட்ட முன்னணி திரைப்பட இயக்குநர்களிடமிருந்து வாய்ப்புகள் கிடைத்தபோதிலும், மராத்தித் திரைப்படங்களில் நடித்திருந்தபோதிலும், நாடக மேடையை விட்டு விலக வித்தாபாய் மறுத்துவிட்டார்.

திரைப்படப் புகழ் தனக்கு மட்டுமே பயனளிக்கும் என்றும், தனது கலைக்குழுவின் மூலம் சுமார் 50 குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்றுவருவதாகவும் அவர் கருதியதாக பன்சோடே தெரிவிக்கிறார்.

நடைபெறாத நிகழ்ச்சிக்குப் பணம் கொடுத்த ரசிகர்கள்:

வித்தாபாய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையிலான உறவில் அன்பும் நெகிழ்ச்சியும் நிறைந்திருந்தன.

‘ஈதா’ திரைப்படத்திற்கு அடிப்படையாக அமைந்த வித்தாபாயின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில், 1971ஆம் ஆண்டு தீபாவளிக் காலத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்வொன்றை யோகிராஜ் பாகுல் விவரித்துள்ளார்.

மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டபோதிலும், ரசிகர்கள் நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்குவதில் உறுதியாக இருந்தனர்.

மழையால் நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டால், அந்தப் பணத்தை வித்தாபாய்க்கான ‘பாவ் பீஜ்’ (Bhau Beej) பரிசாகக் கருதிக்கொள்ளுமாறு அவர்கள் தெரிவித்தனர்.

பாவ் பீஜ் என்பது சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இடையிலான அன்பையும் உறவையும் கொண்டாடும் பண்டிகையாகும்.

எதிர்பார்த்தபடியே மழை பெய்தபோது, ரசிகர்கள் ‘பாவ் பீஜ், பாவ் பீஜ்’ என்று முழங்கியபடி வெளியேறினர்.

ஒருவர்கூட தாங்கள் செலுத்திய பணத்தைத் திருப்பிக் கேட்கவில்லை.

புகழின் உச்சத்தில் இருந்தும் வறுமையில் வாடிய பேரரசி:

வித்தாபாயின் புகழுக்கு நிகராக அவரது பொருளாதார நிலை உயரவில்லை.

அவரது கணவர் மாருதி சாவந்த், கலைக்குழுவின் நிதியை முறையாக நிர்வகிக்கவில்லை என்றும், வித்தாபாயின் பெயரில் கடன்களைப் பெற்றதாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

1982ஆம் ஆண்டு அவர் தனது கணவரைப் பிரிந்தபோது, பெரும் கடன் சுமையில் சிக்கியிருந்தார்.

1986ஆம் ஆண்டு மராத்தி நாளிதழொன்றில் வெளியான கட்டுரை குறித்தும் பாகுல் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமாஷாவின் பேரரசி எனப் போற்றப்பட்ட வித்தாபாய், அப்போது பொதுப் பேருந்துகளில் பயணித்துக்கொண்டும், மலிவான தங்குமிடங்களில் தங்கிக்கொண்டும் இருந்ததை அந்தக் கட்டுரை வெளிப்படுத்தியிருந்தது.

பொதுமக்களின் ஆதரவு இருந்தபோதிலும், 1990ஆம் ஆண்டு தனது கலைக்குழுவைக் கலைக்க வேண்டிய கட்டாயத்திற்கு வித்தாபாய் தள்ளப்பட்டார்.

அதே ஆண்டில்தான் இந்தியாவின் நிகழ்த்துக் கலைகளுக்கான உயரிய கௌரவங்களில் ஒன்றான ‘சங்கீத நாடக அகாடமி விருது’ அவருக்கு வழங்கப்பட்டது.

தமாஷா கலைஞர்களுக்கு அரசாங்க ஓய்வூதியம் பெற்றுக்கொடுப்பதற்காக வித்தாபாய் மேற்கொண்ட போராட்டம் வெற்றியளித்தது.

எனினும், அவர் எதிர்கொண்ட பல இன்னல்கள் இன்றும் தொடர்வதாக மராத்தி எழுத்தாளர் பிரக்ஞா தயா பவார் தெரிவிக்கிறார்.

தமாஷா கலைக்குழுக்கள் ஆண்டுக்கு ஏறக்குறைய எட்டு மாதங்களைப் பயணங்களிலேயே கழிக்கின்றன. கலைஞர்கள் தங்களது குழந்தைகளுக்கு உணவளிப்பதற்கும் கல்வி வழங்குவதற்கும் போராடுகின்றனர்.

அரசாங்க உதவிகள் கிடைத்தபோதிலும், பலர் தனியார் வட்டிக்கடன் வழங்குநர்களிடம் கடன்பட்டவர்களாகவே உள்ளனர்.

மருத்துவமனைக் கட்டணத்தைக்கூட செலுத்த முடியாத நிலை:

2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வித்தாபாய் உயிரிழக்கும் வரையிலும் அவரது பொருளாதாரப் போராட்டங்கள் தொடர்ந்தன.

அவர் உயிரிழந்த புனே மருத்துவமனைக்கு 5,900 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தபோதிலும், அவரது குடும்பத்தினரால் 4,000 ரூபாயை மாத்திரமே செலுத்த முடிந்ததாக ‘டைம்ஸ் ஒப் இந்தியா’ செய்தி வெளியிட்டிருந்தது.

சக கலைஞர்களும் ரசிகர்களும் ஒன்றிணைந்து பணம் சேகரித்து, அவரது உடலைச் சொந்தக் கிராமமான நாராயண்காவிற்குக் கொண்டுசெல்ல உதவினர்.

அதன் பின்னர் மகாராஷ்டிரா அரசாங்கம் அவரது பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருதொன்றை நிறுவியுள்ளது.

புதிய தலைமுறைக்கு அறிமுகமாகும் கலைப் பேரரசி:

வித்தாபாயின் கலை நிகழ்ச்சிகளை ஒருபோதும் பார்த்திராத புதிய தலைமுறையினருக்கு அவரை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை ‘ஈதா’ திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது.

எனினும், அவரது பெயரில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

வித்தாபாயின் சாதிய அடையாளத்தை நீக்குவது, அவர் எதிர்கொண்ட இன்னல்களை மறைத்துவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக மராத்தி எழுத்தாளர் பிரக்ஞா தயா பவார் வாதிடுகிறார்.

“அவரது மகத்தான பயணத்தை உருவாக்கிய சமூகப் பின்னணி, போராட்டம் மற்றும் எதிர்ப்பு ஆகியவற்றை இது அழித்துவிடுகிறது. ஓர் அசாதாரணமான கலைஞரின் வாழ்க்கையை வெறுமனே தனிநபர் சாதனையாகச் சுருக்கிவிடுகிறது” என்று அவர் கூறுகிறார்.

ஆனால், தனது தாயுடன் பல ஆண்டுகளாக மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்திய மங்களா பன்சோடே, மகிழ்ச்சியடைவதற்குப் பல காரணங்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.

“பெயர் எனக்கு முக்கியமல்ல. எனது தாயைப் பற்றிய ஒரு திரைப்படம் உருவாக்கப்படுகின்றது என்பதே எனக்குப் பெருமையளிக்கிறது” என்று அவர் கூறுகிறார்.

மூலம்: பிபிசி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *