(கீதா பாண்டே பெண்கள் மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஆசிரியர், பிபிசி)
திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் வல்லுறவை முழுமையாகக் குற்றச் செயலாக அறிவிக்கத் தவறியுள்ளதால், தெற்காசியாவின் எட்டு நாடுகளில் மில்லியன் கணக்கான பெண்களும் சிறுமிகளும் சட்டப் பாதுகாப்பின்றி இருப்பதாகப் புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
தெற்காசியாவில் வாழ்க்கைத் துணையால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் உலகளாவிய சராசரியைவிட 35 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் வல்லுறவைக் குற்றச் செயலாக அறிவித்துள்ளன. எனினும், இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள், இதுவரை அவ்வாறு அறிவிக்காத சுமார் 36 நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் வல்லுறவுக்கும் ஏனைய பாலியல் வல்லுறவுக் குற்றங்களுக்கும் ஒரே மாதிரியான தண்டனை வழங்கும் தெற்காசியாவின் ஒரேயொரு நாடாக மாலைதீவு விளங்குகிறது.
நேபாளமும் பூட்டானும் திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் வல்லுறவைக் குற்றச் செயலாக அறிவித்துள்ள போதிலும், அதற்குக் குறைவான தண்டனைகளையே வழங்குவதாகத் தெற்காசியப் பெண்கள் உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பான ‘சமாஜ்’ (Samaj) மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.
பிரித்தானிய காலனித்துவச் சட்டங்களின் தொடர்ச்சி:
தெற்காசியாவில் திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் வல்லுறவு தொடர்பான சட்டங்கள் பெரும்பாலும் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து தோற்றம் பெற்றவை என, சமாஜ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சர்வதேசப் பெண்கள் உரிமை அமைப்பான ‘ஈக்வாலிட்டி நவ்’ (Equality Now) அமைப்பின் ரஞ்சீதா சில்வால் தெரிவிக்கிறார்.
இந்தியாவிலும் பங்களாதேஷிலும் 1860 ஆம் ஆண்டையும், இலங்கையில் 1885 ஆம் ஆண்டையும் அடிப்படையாகக் கொண்ட இந்தச் சட்டங்களில் பாலியல் வல்லுறவுக் குற்றத்திற்கான சில விதிவிலக்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வயதுவந்த தனது மனைவியுடன் கணவன் மேற்கொள்ளும் பாலியல் உறவும் இந்த விதிவிலக்குகளில் ஒன்றாகும்.
இந்தச் சட்டங்கள் காலாவதியானவை என்றும், பாலியல் உறவை மேற்கொள்பவர் யாராக இருந்தாலும், சம்மதமின்றி வலுக்கட்டாயமாக மேற்கொள்ளப்படும் பாலியல் உறவு வல்லுறவே என்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் வன்முறைகள் பெண்களின் உடல், உளவியல், உணர்வுபூர்வ மற்றும் பாலியல் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
1991 ஆம் ஆண்டு தனது சட்டத்தை மாற்றியமைத்த பிரித்தானியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகள் திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் வல்லுறவைக் குற்றச் செயலாக அறிவித்துள்ளன. ஆனால் இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் திருமணம் சார்ந்த சட்ட விதிவிலக்கு தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.
பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும்:
பாகிஸ்தான் 2006 ஆம் ஆண்டு திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் வல்லுறவு தொடர்பான சட்ட விதிவிலக்கை நீக்கியது. எனினும், பாலியல் வல்லுறவுக்கு எதிரான சட்டங்கள் திருமண உறவுக்குள்ளும் பொருந்தும் என்பதை எந்தவொரு உயர்நிலை நீதிமன்றமும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இதற்கிடையில், அண்மையில் உயர் நீதிமன்றமொன்று வழங்கிய தீர்ப்பு, மனைவியின் சம்மதமின்றி பாலியல் உறவில் ஈடுபடும் கணவர்களுக்குப் பரந்தளவிலான சட்ட விலக்கைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து தலிபான்கள் பெண்களுக்கான பாதுகாப்புகளைப் படிப்படியாக இல்லாதொழித்து வருகின்றனர்.
ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தண்டனைச் சட்டம் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாக சில்வால் தெரிவிக்கிறார்.
இந்தச் சட்டத்தின்படி, மனைவிக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் கணவனால் எலும்பு முறிவு, திறந்த காயம் அல்லது கடுமையான இரத்தக்கன்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டால் மாத்திரமே அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியும். அவ்வாறு குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அவருக்கு வெறும் 15 நாட்கள் சிறைத்தண்டனையே வழங்கப்படும்.
எதிர்பார்த்தபடியே, இந்தச் சட்டத்தில் திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் வல்லுறவு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. தண்டனைக்குரிய வன்முறைக்கான அதன் குறுகிய வரைவிலக்கணம், நடைமுறையில் இத்தகைய பாலியல் வல்லுறவுகளிலிருந்து பெண்களுக்கான பாதுகாப்பை மறுக்கிறது.
திருமணம் செய்துகொண்டால் சம்மதம் தேவையில்லையா?
“திருமணத்தில் பாலியல் உறவுக்கான சம்மதம் இயல்பாகவே வழங்கப்பட்டுவிட்டதாகவும், திருமணம் என்பது சம்மதத்தின் தேவை முடிவுக்கு வரும் ஒரு எல்லை என்றும் கருதப்படும் நம்பிக்கையிலிருந்தே இந்தச் சிந்தனை உருவாகிறது” என்று சில்வால் பிபிசியிடம் தெரிவித்தார்.
“இது விழிப்புணர்வின்மையைக் காட்டுகிறது. நாம் இன்னமும் பெண்களைச் சொத்தாகவே கருதுகிறோம் என்பதையும், ஆணாதிக்கச் சிந்தனையில் ஆழமாக வேரூன்றியிருக்கிறோம் என்பதையும் இது வெளிப்படுத்துகிறது” என்றும் அவர் கூறினார்.
தெற்காசியப் பிராந்தியம் முழுவதும் திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் வல்லுறவு தொடர்பான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்திய உச்ச நீதிமன்றத்தில் 10 மனுக்கள்:
இந்தியாவில் தற்போதைய சட்டத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 10 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவை தொடர்பான இறுதி விசாரணைகள் டிசம்பர் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
கடந்த பல ஆண்டுகளாக இந்திய நீதிமன்றங்கள் இது தொடர்பாக முரண்பாடான தீர்ப்புகளை வழங்கியுள்ளன. சில நீதிபதிகள் தற்போதைய சட்டம் காலாவதியானது என்பதை ஏற்றுக்கொண்டதுடன், திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் வல்லுறவைக் குற்றச் செயலாக அறிவிக்குமாறு நாடாளுமன்றத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு தனது மனைவியைக் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதால் அவர் உயிரிழந்த சம்பவத்தில், கணவனை நீதிமன்றம் விடுவித்தமை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
எனினும், திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் வல்லுறவைக் குற்றச் செயலாக அறிவிப்பது ‘அளவுக்கு அதிகமான கடுமையான நடவடிக்கையாக’ அமையும் எனக் கூறி, இந்திய அரசாங்கமும் மத அமைப்புகளும் ஆண்கள் உரிமைச் செயற்பாட்டாளர்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை எதிர்த்துள்ளனர்.
பங்களாதேஷிலும் பெண்கள் உரிமை அமைப்புகள் திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் வல்லுறவு தொடர்பான சட்ட விதிவிலக்கை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்துள்ளன.
இந்த விதிவிலக்கு, வாழ்வதற்கான உரிமை, சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் சித்திரவதை, கொடூரமான நடத்தைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாக அந்த அமைப்புகள் வாதிடுகின்றன.
குடும்ப அமைப்பு சிதைந்துவிடுமா?
“திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் வல்லுறவைக் குற்றச் செயலாக அறிவிப்பதை எதிர்ப்பவர்கள், அது குடும்ப அமைப்பைப் பலவீனப்படுத்திக் குடும்பங்களைச் சிதைத்துவிடும் எனக் கூறுகின்றனர். எமது நாடுகளில் குடும்பம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது” என சில்வால் தெரிவிக்கிறார்.
“இது எமது மத மற்றும் கலாசார விழுமியங்களைப் பாதிக்கும் என்றும், ஆண்களுக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.”
அதேவேளை, சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுவதால் மாத்திரம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்றும் கூற முடியாது என அவர் தெரிவிக்கிறார்.
இதற்கு பூட்டானை அவர் உதாரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்.
பூட்டானில் திருமண உறவுக்குள் இடம்பெறும் பாலியல் வல்லுறவு ஒரு குற்றச் செயலாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அது ஒரு சிறிய குற்றமாகவே கருதப்படுகிறது. அதற்கு ஒரு மாதம் முதல் ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனையே வழங்கப்படுகிறது.
நேபாளத்தில் பாலியல் வல்லுறவுக் குற்றத்திற்கு ஆறு முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் தனது மனைவியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் கணவனுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மாத்திரமே வழங்கப்படுகிறது.
மூலம்: பிபிசி
