சர்வதேச நாணய நிதியத்துக்கு திருப்தி; மக்களுக்கு ஏமாற்றம்! யாருக்கான வரவு செலவுத் திட்டம்

சர்வதேச நாணய நிதியத்துக்கு திருப்தி; மக்களுக்கு ஏமாற்றம்! யாருக்கான வரவு செலவுத் திட்டம்

~ நியந்தினி கதிர்காமர்

ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுர குமார திசநாயக்கவினால் பாராளுமன்றத்தில் உணர்ச்சிவசப்படாத, அமைதியான உரையுடன் முன்வைக்கப்பட்ட 2027 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திட்டத்திற்கு (பட்ஜெட்) எதிரும் புதிருமான எதிர்வினைகள் கிடைத்துள்ளன. ஒரு தேசிய வரவு செலவுத் திட்டத்தின் உண்மையான சாராம்சத்தை, அதில் ஒதுக்கப்பட்டுள்ள எண்கள் மற்றும் உரைகளில் உள்ள அலங்கார வார்த்தைகளைப் போலவே, அது ஏற்படுத்தும் எதிர்வினைகளை அவதானிப்பதன் மூலமும் புரிந்து கொள்ள முடியும்.

பொருளாதார நிபுணர்கள், வர்த்தகத் தலைவர்கள், தொழில்சார் அமைப்புகள், சிந்தனைக் குழாம்கள் மற்றும் தரப்படுத்தல் நிறுவனங்கள் தேசிய மக்கள் சக்தியினால் உருவாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளை உடனடியாக வரவேற்றுள்ளன. அவர்களின் விமர்சனங்கள் பெரும்பாலும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்தே இருந்தன. மேலும், முன்னேற்றத்திற்கு முக்கியத் தடையாக இருக்கும் அரச துறையைச் சீர்திருத்துமாறு அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சிக்கு நிலையற்ற சந்தையை நம்பியிருப்பது குறித்து சில தயக்கங்கள் வெளிப்படுத்தப்பட்டதைத் தவிர, தேசிய மக்கள் சக்தியின் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கும் வர்த்தகத் தலைவர்களுக்கும் இடையிலான கருத்தியல் உடன்பாடு வெளிப்படையாகத் தெரிந்தது. ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான கொள்கை ரீதியான ஒற்றுமையால், பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகளால் இந்த வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கங்களைத் திறம்பட எதிர்க்க முடியாமல் போனது.

இதற்கு நேர்மாறாக, வரவு செலவுத் திட்ட அறிவிப்புகளைச் சுற்றி வழக்கமாக இருக்கும் ஆரவாரம் சாதாரண இலங்கையர்களிடம் பெரிதாகக் காணப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிகள், அடிப்படைப் பயன்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் குடும்பக் கடன்களில் ஏதேனும் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த குடும்பங்கள் ஏமாற்றமடைந்தன.

வாங்கும் சக்தியின் அடிப்படையில் கணக்கிடும்போது, குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் நாடுகளில் இலங்கை தற்போது மிகக் கீழ்நிலையில் உள்ளது. வருடாந்த பணவீக்கம் 8 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய காலத்தில் ஏற்பட்ட பாரிய விலை உயர்வுகள் மற்றும் ஊதியக் கட்டுப்பாடுகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த குடும்பங்களின் வரவு செலவுத் திட்டங்களை இது மேலும் நெருக்குகிறது. இதன் சுமையைப் பெண்களே அதிகளவில் சுமக்கின்றனர். வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைக் குறைப்பதே 2027 வரவு செலவுத் திட்டத்தின் வெளிப்படையான கொள்கை முன்னுரிமையாக இருந்திருக்க வேண்டும்.

நிலைத்தன்மையும் வளர்ச்சியும்?

வர்த்தக சமூகமும் பொருளாதார நிபுணர்களும் வழங்கியுள்ள நேர்மறையான சான்றிதழ், சிறந்த கொள்கைகளுக்கோ அல்லது எதிர்காலத்தில் சுமுகமான பயணத்திற்கோ எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சர்ச்சைக்குரிய வரவு செலவுத் திட்டத்தில் பெருநிறுவனங்களுக்குத் தாராளமாக வரிச் சலுகைகள் வழங்கப்பட்டபோது, நாட்டிற்கு வரவிருந்த பொருளாதார அழிவின் சிறிய அறிகுறி கூட அவர்களின் புகழாரமான பகுப்பாய்வுகளில் இடம்பெறவில்லை என்பதை நினைவுகூர வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதையே இது காட்டுகிறது.

அரசாங்கமும், வர்த்தக மற்றும் பொருளாதார நிபுணர்களும் 2027 வரவு செலவுத் திட்டத்தை “பொருளாதார நிலைத்தன்மையிலிருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கிய மாற்றம்” எனத் தொடர்ந்து புகழ்ந்து வருகின்றனர். இருப்பினும், நிதி ஒழுக்கம் அல்லது பேரினப் பொருளாதாரத் தரவுகளை மட்டும் வைத்து பொருளாதார நிலைத்தன்மையை மதிப்பிட முடியாது. எதிர்காலத்தில் வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் கையிருப்புகள் எவ்வாறு நிர்வகிக்கப்படும் என்பது குறித்த தெளிவான திட்டத்தை இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கவில்லை. எனவே, அரசாங்கத்தின் பேரினப் பொருளாதார நிலைத்தன்மை குறித்த வாக்குறுதியின் நம்பகத்தன்மையை மதிப்பிட முடியவில்லை.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் தொடரப்படும் கடுமையான சிக்கன நடவடிக்கைகள், காலநிலை அனர்த்தங்கள் மற்றும் வெளிநாட்டுப் போர்களால் ஏற்படும் நிலையற்ற தன்மை ஆகியவற்றால் வாழ்க்கை சிதைந்துள்ள உழைக்கும் மக்களின் காதுகளில், பொருளாதார நிலைத்தன்மையை அடைந்துவிட்டோம் என்ற பேச்சு வெற்று வார்த்தைகளாகவே ஒலிக்கிறது. குடும்ப வருமானம் மற்றும் செலவினம் குறித்த ஆய்வின்  சமீபத்திய ஆரம்பத் தரவுகள், வறுமை மற்றும் கடனில் மூழ்கியுள்ள குடும்பங்களின் கவலைக்கிடமான நிலையை வெளிப்படுத்துகின்றன.

முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, எந்தவொரு மறுபேச்சுவார்த்தையும் இன்றி தேசிய மக்கள் சக்தியால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இலங்கையின் கடன் நிலைத்தன்மை ஒப்பந்தத்தில், பொருளாதார வளர்ச்சி விகிதங்களுடன் இணைக்கப்பட்ட கடன் பத்திரங்கள்  உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனால், எதிர்வரும் ஆண்டுகளில் ஏற்படும் அதிக பொருளாதார வளர்ச்சியானது மக்களுக்குப் பலன்களைத் தருவதற்குப் பதிலாக, நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும். மேலும், செல்வத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான பொருளாதாரக் கொள்கைகள் இல்லாமல், வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டும் சமத்துவத்தைப் பெற்றுத் தராது. 2027 வரவு செலவுத் திட்டத்தில் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான எந்தவொரு தொலை நோக்கும் இல்லை.

வரிக் கொள்கைகள் மூலமாக இந்தப் பகிர்ந்தளிப்புக் கொள்கையை நடைமுறைப் படுத்தியிருக்கலாம். இருப்பினும், அரச வருமானக் கட்டமைப்பில் நேரடி வரிகளுக்கும்  (24 சதவீதம் ) மறைமுக வரிகளுக்கும்  (76 சதவீதம் ) இடையிலான விகிதம் மாற்றமின்றியே உள்ளது. இது குறைந்த வருமானம் பெறுபவர்களிடம் இருந்து அதிகளவில் வருமானத்தைப் பறித்துக்கொண்டு, அவர்களுக்கு மிகக் குறைவான பலன்களையே திருப்பித் தருகிறது. மூலதன ஆதாய வரிக்கான (Capital Gains Tax) சொத்துக்களின் வரம்பை விரிவுபடுத்தியதைத் தவிர, பெருநிறுவனப் பங்குகளிலும், ஒத்திவைக்கப்பட்ட பங்கு இலாபங்களிலும் தங்கள் செல்வத்தை மறைத்து வைத்திருக்கும் அதிபணக்காரர்களுக்கு வரி விதிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

மக்களுக்கு இதில் என்ன இருக்கிறது?

வரவு செலவுத் திட்ட அறிவிப்புக்கு முன்னதாக வெளியிட்ட விசேட அறிக்கையில்,  பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, நலன்புரிப் பலன்கள் அல்லது வரிச் சலுகைகளை அடிப்படையாகக் கொள்ளாமல், வரவு செலவுத் திட்டத்தின் பரந்த பொருளாதாரத் திசையைக் கொண்டு அதனை மதிப்பிடுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் நலன்புரிப் பலன்களுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.6 சதவீதம்  மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது நமது சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரான குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள், நாட்பட்ட நோயாளிகள் மற்றும் முதியவர்களில் ஒரு சிறிய பகுதியினருக்கே போதுமானதாக இருக்கும். பல குடும்பங்களை இது கைவிட்டுள்ளது.

வறுமை அல்லது அதிகரித்து வரும் சமத்துவமின்மையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகிறது என்பதற்கான தெளிவான தொலை நோக்கு 2027 வரவு செலவுத் திட்டத்தில் இல்லை. வறுமை மட்டம் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கு அதிகரித்துள்ள போதிலும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் மாற்றமின்றியே உள்ளன.

நாட்டின் பலவீனமான உணவு முறைமை, வாழ்வாதாரம், சுகாதாரம் மற்றும் கல்வியில் ‘எல் நினோ’  விளைவுகளால் ஏற்படும் தீவிர பாதிப்புகளை எதிர்கொள்ள இந்த வரவு செலவுத் திட்டம் போதிய நிதி ஒதுக்கீடு செய்யத் தவறிவிட்டது. நாட்டின் சனத்தொகையில் பாதிப்பேர் பல பரிமாணங்களில் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதற்குக் காலநிலை நிகழ்வுகளைத் தாங்கிக்கொள்ள முடியாமையே முக்கியக் காரணம் என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம்  சுட்டிக் காட்டியுள்ளது.

செலவினத் தலைப்புகளில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தாலும், அவற்றுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முறையே 1.91சதவீதம், 1.87சதவீதம்  என்ற குறைந்த அளவே ஒதுக்கப்பட்டுள்ளது. இது இத்துறைகளுக்கு மிகக் குறைந்த நிதியைச் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இலங்கையைத் தள்ளியுள்ளது.

“தரமான முதலீடுகள், ஏற்றுமதி சார்ந்த உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம்” ஆகியவற்றின் மூலம் பொது நிதி மக்களுக்குப் பயனளிப்பதை இந்த வரவு செலவுத் திட்டம் உறுதி செய்கிறது என்ற  பிரதி நிதியமைச்சரின்   கூற்றில் உண்மை மிகக் குறைவு. பெரும்பாலான இலங்கையர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக நம்பியிருக்கும் விவசாயத் துறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீதம்  என்ற மிகக் குறைந்த தொகையே முதலீடு செய்யப்பட்டுள்ளது.

வீடமைப்புத் திட்டங்களைத் தொடர்வது மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் நிறைந்த 200 ரூபா கொடுப்பனவைத் தவிர, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவதையும் சுரண்டப்படுவதையும் தடுப்பதற்கான எந்தவொரு ஆக்கப்பூர்வமான ஏற்பாடுகளும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.

படித்த இளைஞர்களிடையே நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் (43 சதவீதம் ) பிராந்தியத்திலேயே மிக அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது (சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் கண்ணோட்டம் – ஏப்ரல் 2026). ஆயினும், வீழ்ச்சியடைந்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) ஏற்படும் வேலை இழப்புகளை ஈடுசெய்வது உட்பட, வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான தெளிவான திட்டத்தை வரவு செலவுத் திட்டம் முன்வைக்கவில்லை. இதற்கிடையில், ஒரு கேள்விக்குரிய முன்மொழிவாக, 18 வயதுடைய இளைஞர்களுக்குப் பங்குத் தொகுப்புகளை வழங்குவதன் மூலம் ஆபத்தான மூலதனச் சந்தைகளில் முதலீடு செய்ய அவர்கள் தூண்டப்படுகிறார்கள்.

வரிச் சலுகைகளைப் பொறுத்தவரை, பெறுமதி சேர் வரியில் (VAT) வழங்கப்பட்ட வெறும் 2.9 பில்லியன் ரூபா நிவாரணத்துடன் ஒப்பிடும்போது, வருமான வரி (16 பில்லியன் ரூபா) மற்றும் இறக்குமதி வரிகளுக்கு (10 பில்லியன் ரூபா) வழங்கப்பட்டுள்ள நிவாரணம் மிக அதிகமாகும். அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தில் பெரும் பகுதி 100,000 ரூபாவிற்கும் குறைவாகவே உள்ளது. மூன்று ஆண்டுகளில் படிப்படியாகச் சம்பள உயர்வுகள் வழங்கப்பட்ட போதிலும், அரச துறை சம்பள அளவுகோல்களில் முரண்பாடுகள் நிலவுகின்றன.

அரச துறையின் மிகப்பெரிய பிரிவான 225,000 ஆசிரியர்களின் நீண்டகாலச் சம்பளப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன. சுபோதினி அறிக்கையின்படி வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பளத் திருத்தத்தின் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கை வழங்கவும், இடைக்காலத்தில் 25,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை வழங்கவும் அரசாங்கம் உடன்படத் தவறினால், அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஆசிரியர் சங்கங்கள் தற்போது அழைப்பு விடுத்துள்ளன.

தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காகப் பெருமளவில் வாக்களித்த நாட்டின் உழைக்கும் மக்கள், அரசாங்கத்தின் முதல் பதவிக்காலத்தில் அது தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பொறுமையுடன் காத்திருந்தனர். பொருளாதார நன்மைகளில் ஒரு பங்கு தமக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என நம்பிக்கை வைத்திருந்தவர்களுக்கு, தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான இந்தத் தொடர்ச்சியான மூன்றாவது வரவு செலவுத் திட்டம் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. வரவு செலவுத் திட்டச் சலுகைகளும் முதலீடுகளும் வாக்களித்த பொதுமக்களின் பெரும்பகுதியினரைச் சென்றடையத் தவறியதால், அவர்களின் பொறுமை தற்போது குறையத் தொடங்கியுள்ளது.

உண்மையில், அடுத்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தைத் (IMF) திருப்திப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ஒரு வரவு செலவுத் திட்டம், வாக்காளர்களிடையே செல்வாக்குப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் கட்டப்பட்டுள்ள ஒரு அரசாங்கத்தால் உண்மையான பொருளாதார நீதியை வழங்க முடியாது என்பதை இது நிரூபித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முழு நாட்டையும் மற்றொரு சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்திற்குள் பிணைத்து விடக்கூடாது.

(கட்டுரையாளர், மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில்  கல்வித்துறையில் கலாநிதிப் பட்டத்திற்கான  ஆய்வாளராகவும், பொருளாதார நீதிக்கான பெண்ணியக் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *