~ டோபி தோமஸ் / தி கார்டியன்
பிரித்தானியாவில் இனச் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் பணியிடங்களில் இனவெறியை எதிர்கொண்டுள்ளதாகவும், தமது முறைப்பாடுகளை மனிதவளப் பிரிவினர் (HR) தீவிரமாகக் கவனத்தில் கொள்வார்கள் என்ற நம்பிக்கை பெரும்பாலானோருக்கு இல்லை எனவும் கருத்துக்கணிப்பொன்று தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் ஐந்து பிரதான இனச் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களில் 70 சதவீதமானோர் கடந்த ஓராண்டில் தமது இனம், இனப் பின்னணி அல்லது மதம் சார்ந்த பாகுபாடு அல்லது நியாயமற்ற நடத்தையை எதிர்கொண்டுள்ளனர்.
இனவெறியை எதிர்கொண்டவர்களில் நான்கில் மூன்று பேர், அது தமது மனநலத்தை ஏதோ ஒரு வகையில் பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மனநல அறக்கட்டளையின் (Mental Health Foundation) சிரேஷ்ட ஆராய்ச்சி முகாமையாளரும், இந்த அறிக்கையின் பிரதான ஆசிரியருமான சூசன் சொலமன் கூறுகையில்,
“இனவெறியை எதிர்கொண்டவர்களில் நான்கில் மூன்று பேர் தமது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும்போது, இனவெறி என்பது வெறுமனே சமத்துவம் தொடர்பான பிரச்சினையல்ல என்பது தெளிவாகிறது. அது பொதுமக்களின் மனநலம் தொடர்பான பிரச்சினையுமாகும்” என்றார்.
பிரித்தானியாவில் இன சமத்துவம் மோசமடைந்து வருவதாகவும், பாகுபாடுகள் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், 2,506 வயதுவந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இன சமத்துவ அறக்கட்டளையின் (Race Equality Foundation) தலைமை நிறைவேற்று அதிகாரி ஜபீர் பட் கூறுகையில், அன்றாட வாழ்க்கையில் இனவெறி எந்தளவுக்குப் பரவலாகக் காணப்படுகிறது என்பதையும், கறுப்பினத்தவர்கள், ஆசியர்கள் மற்றும் ஏனைய இனச் சிறுபான்மையினரின் மனநலத்தில் அது ஏற்படுத்தும் தொடர்ச்சியான பாதிப்புகளையும் இந்த ஆய்வு வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தார்.
பணியிடங்களில் இனவெறி:
பணியிடங்களில் இனச் சிறுபான்மையினத்தவர்களின் அனுபவங்கள் தொடர்பில் இந்த ஆய்வு பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
- 45 சதவீதமான இனச் சிறுபான்மை ஊழியர்கள் கடந்த ஓராண்டில் பணியிடங்களில் இனவெறியை எதிர்கொண்டுள்ளனர். பெரும்பாலும் இத்தகைய நடத்தைகள் சாதாரண கேலி அல்லது நகைச்சுவை என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டுள்ளன.
- 56 சதவீதமானோருக்கு, தமது முறைப்பாடுகளை மனிதவளப் பிரிவினர் தீவிரமாகக் கவனத்தில் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை.
- இனவெறியை எதிர்கொண்டவர்களில் 42 சதவீதமானோர், தமது அனுபவங்களைக் குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களுடனும் ஆர்ப்பாட்டங்களுடனும் தொடர்புபடுத்தியுள்ளனர்.
- 57 சதவீதமானோர் குடியேற்றவாசிகள் அல்லது இனச் சிறுபான்மையினருக்கு எதிரான பதிவுகளை வாரந்தோறும் சமூக ஊடகங்களில் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
- 46 சதவீதமானோர் பிரித்தானியாவின் பிரச்சினைகளுக்குக் குடியேற்றவாசிகளே காரணம் என்று அரசியல்வாதிகள் குற்றம்சாட்டுவதை வாரந்தோறும் கேட்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அரசியல் பேச்சுகளும் சமூக ஊடகங்களும்:
இனவெறி தனித்துச் செயற்படுவதில்லை என்பதை இந்த ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துவதாக ஜபீர் பட் தெரிவித்தார்.
“அரசியலிலும் சமூக ஊடகங்களிலும் தீவிரப்படுத்தப்படும் குடியேற்ற எதிர்ப்புப் பேச்சுகள், இனவெறி மனப்பான்மையையும் நடத்தைகளையும் நியாயமானவை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற இனவெறிக் கலவரங்களுக்குப் பின்னர் எமது ஆய்வுகளில் கண்டறியப்பட்ட விடயங்களுடன் இது ஒத்துப்போகிறது.
இனவெறியைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை வளர்த்துக்கொள்ளுமாறு மக்களிடம் கோருவதோ அல்லது தனிப்பட்ட சம்பவங்கள் குறித்து முறைப்பாடு செய்யுமாறு கூறுவதோ மட்டும் இதற்கான தீர்வாகாது.
அரசியல் தலைவர்கள், தொழில் வழங்குநர்கள், பொது நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் இனவெறியைத் தூண்டும் கருத்தாடல்களுக்கு எதிராகச் செயற்படுவதுடன், அதனைத் தடுப்பதற்கான பயனுள்ள நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
மனநலம் பாதிக்கப்பட்டாலும் உதவி பெறுவோர் மிகக் குறைவு:
இனவெறியை எதிர்கொள்வதற்கும் அதற்கான உதவியையும் ஆதரவையும் நாடுவதற்கும் இடையில் பெரும் இடைவெளி காணப்படுவதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
இனவெறி அல்லது நியாயமற்ற நடத்தையை எதிர்கொண்டவர்களில் பாதிப் பேர், இனவெறிச் சம்பவங்களை எதிர்கொள்ள எப்போதும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
எனினும், இனவெறியை எதிர்கொண்டவர்களில் வெறும் 5 சதவீதமானோர் மாத்திரமே தொழில்முறை மனநல உதவியை நாடியுள்ளனர்.
இது தொடர்பில் சூசன் சொலமன் மேலும் கூறுகையில்,
“வெளிப்படையான பாகுபாட்டுச் செயல்களால் மாத்திரம் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. அன்றாட வாழ்க்கையில் இனவெறியை எதிர்பார்த்து, அதனைச் சமாளித்து, அதற்குப் பதிலளிக்க வேண்டிய தொடர்ச்சியான முயற்சிகளாலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை எமது ஆய்வு வெளிப்படுத்துகிறது.
எங்கு செல்வது, எவ்வாறு நடந்துகொள்வது, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பது பாதுகாப்பானதா என்பதையெல்லாம் சிந்தித்துத் தீர்மானிக்க வேண்டிய, தொடர்ச்சியான எச்சரிக்கை நிலையில் வாழ்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்” என்றார்.
நெருக்கடி நிலையை அடைவதற்கு முன்னரே நடவடிக்கை அவசியம்:
இனவெறியால் ஏற்படும் மனநலப் பாதிப்புகள் தனிப்பட்ட பாகுபாட்டு அனுபவங்களுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை என்பதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்துவதாக சூசன் சொலமன் குறிப்பிட்டார்.
“அரசியல் உரைகள், பத்திரிகைச் செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளிப்படும் குடியேற்ற எதிர்ப்புக் கருத்துகள், பாகுபாட்டைத் தூண்டும் பேச்சுகள் என்பன இந்த மனநலப் பாதிப்புகளை மேலும் தீவிரப்படுத்துகின்றன.
மக்களின் மனநலத்தைப் பாதுகாப்பதில் நாம் உண்மையாகவே அக்கறை கொண்டிருந்தால், இனவெறியால் ஏற்படும் பாதிப்புகள் நெருக்கடி நிலையை அடைவதற்கு முன்னரே அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
மூலம்: தி கார்டியன் | ஆய்வு: Mental Health Foundation
