~ கருணாகரன்
வாழ்க்கையின் புதிரை எழுதித் தீராது என்பார்கள். மூன்றரை தசாப்தங்களுக்கு முன்பு, 1990இல், கான்ஸ்தந்தின் மிகைலோவிச் ஸீமோனோவ் (Konstantin Mikhailovich Simonov, 1915–1979) எழுதிய ‘போர் இல்லாத இருபது நாட்கள்’ (Twenty Days Without War) என்ற நாவலைப் படிக்க வாய்த்தது. இரண்டாம் உலகப் போரைப் பின்னணியாகக் கொண்ட நாவல் அது. ரஸ்யாவின் போர்முனையில் பணியாற்றும் போர்ச் செய்தியாளரான மேஜர் லோபட்டின் (Vasily Lopatin), 1942ஆம் ஆண்டின் இறுதியில் போர்முனையிலிருந்து இருபது நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு, தாஷ்கண்டிற்குச் சென்று மீண்டும் யுத்தகளத்துக்குத் திரும்புவதைப் பற்றிய கதை. பல அடுக்குகளைக் கொண்ட நாவல். பல தளங்களில் விரிவது.
நாவலைப் படித்துக்கொண்டிருந்த நாட்களில், இரண்டாம் கட்ட ஈழப்போர் (1990) ஆரம்பித்திருந்தது. அதனால், நம்முடைய கதையைப் படிப்பதைப் போலிருந்தது.
யுத்தம் தொடங்கியவுடன் போக்குவரத்து, மின்சாரம், பொருளாதாரம், கடற்றொழில் என எல்லாவற்றிலும் இலங்கை அரசாங்கத்தினால் தடைகள் விதிக்கப்பட்டன. போதாக்குறைக்குக் குண்டுவீச்சு, படை நடவடிக்கைகள், உயிரிழப்புகள், இடப்பெயர்வு, ஊரடங்கு எனப் போர் முழுமையாக விரிந்தது. இதையொத்ததாகவே நாவலும் இருந்ததால், நெருக்கமான உணர்வு ஏற்பட்டது. ஏறக்குறைய நம்முடைய காலத்தின், சூழலின், வாழ்வின் கதையையே ஸீமோனோவ் எழுதியிருந்தார். காலத்தையும் சூழலையும் கடந்து நிற்கும் தன்மையை நாவலில் உருவாக்கியிருந்தார் ஸீமோனோவ்.
நண்பர்களிடம் நாவலைப் பற்றிச் சொன்னேன். ஈழப்புரட்சி அமைப்பின் தலைவர்களாக இருந்த வே. பாலகுமாரன், சின்னபாலா (இளையவன்), விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதன்மை உறுப்பினர்களான யோகரத்தினம் யோகி, பரதன் தொடக்கம் எழுத்தாளர்கள் செ.பொ. சிவனேஷ், இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், ஊடகர்கள் பு. சத்தியமூர்த்தி, கேசவன் (விஸ்வலிங்கம்), தி. தவபாலன் (இறைவன்), கவிஞர்கள் புதுவை இரத்தினதுரை, சு. வில்வரெத்தினம் எனப் பலரும் நாவலைப் படித்தனர். ஒரே பிரதி பல கைகளில் பயணித்துக்கொண்டேயிருந்தது.
வாசிப்பைத் தவிர வேறு எந்த அறிதல் வழியோ பொழுதுபோக்கோ இல்லாதிருந்த சூழல் அது. புத்தக வாசிப்பே தீவிரமாக இருந்தது.
அடுத்ததாக, ‘போர் இல்லாத இருபது நாட்களை வாசிக்கப்போகிறேன்’ என்று ஒளிப்படக் கலைஞரும் கவிஞருமான அமரதாஸ் (இளந்திரையன்) ஒரு காலை நேரம் வந்து நின்றார். அப்பொழுது அவர் மிக இளவயதுப் போராளி. 1995 ஜூலையில் பலாலியிலிருந்து யாழ்ப்பாண நகரை நோக்கி ‘முன்னேறிப் பாய்தல் நடவடிக்கை’ (Operation Leap Forward) என்ற படை நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தது. அந்தப் படை நடவடிக்கையை முறியடிக்கும் அணியில் ஒரு போராளியாக அமரதாஸும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
‘யுத்தகளத்துக்குச் செல்லும்போது, கையோடு – யுத்தகளத்துக்கான பையோடு – ‘போர் இல்லாத இருபது நாட்கள்’ நாவலையும் எடுத்துப் போகப்போகிறேன்’ என்றார்.
‘யுத்தகளத்துக்குச் செல்லும்போது எதற்குப் புத்தகம்?’ என்று நீங்கள் யோசிக்கக்கூடும். போர்க்களத்திலும் போர்க்காலத்திலும் எதுதான் நிகழாது? அங்கும் காதல் மலர்கிறது. பம்பலும் பகடியும் சிரிப்பும் குதூகலமும் நிகழ்கின்றன. அப்படித்தான் வாசிப்பும் பாட்டும். ஏன், சிலர் கவிதைகளையும் கதைகளையும்கூட அந்தக் களத்திலிருந்து எழுதுவதுண்டு.
இதற்குக் காரணம், அப்பொழுது ஒருவகையான செயற்கையான அல்லது அதீத முனைப்புடைய உளநிலை தீவிரமடைவதாக இருக்கலாம் என எண்ணுகிறேன். நெருக்கடிகளையும் உயிராபத்துகளையும் உணராமல் இருப்பதற்காக இத்தகைய ஓர் ஏற்பாட்டை மனம் உருவாக்க முனைகிறது. அவற்றை மீறி நிற்க வேண்டும் என்ற முனைப்பும் ஒருவிதமான அசாத்தியச் சாகச உணர்வும் யுத்தகளத்தில் நிற்போரிடம் மேலோங்கியிருப்பதுண்டு.
களத்தில் நிலவும் நெருக்கடி, அச்சம் போன்றவற்றினால் சோர்ந்துவிடாமல் இருப்பதற்கு நம்முடைய உள்ளம் கொள்ளும் ஒருவகையான செயல்முனைப்புத் தீவிரம் இது. நாவலில்கூட இதைப் பற்றி ஸீமோனோவ் எழுதியிருக்கிறார்.
பயிற்சியின்போது பல அறிவுரைகளும் விதிமுறைகளும் வழங்கப்பட்டிருந்தாலும், சிலவேளைகளில் அவற்றையெல்லாம் களச்சூழல் தகர்த்துத் தனியானதோர் உளநிலையை உருவாக்கிவிடுகிறது. ஆபத்தான சூழலில்கூட எல்லோரும் ஒன்றாக, அருகருகாக இருக்க வேண்டும் என்ற உணர்வே மேலோங்கியிருப்பதுண்டு. கூட்டமாக இருந்தால் பயம் குறையும் என்ற உளநிலையே இதற்குக் காரணம். ஆனால், சிலவேளைகளில் இதுவே உயிரிழப்புகளையும் அதிகரித்துவிடுகிறது. யுத்தகள அனுபவங்களைக் கொண்ட ஸீமோனோவ் இந்த மானுட நிலையைச் சரியாகவே அவதானித்து எழுதுகிறார்.
நீங்கள் எதிர்பார்த்தபடியே, அமரதாஸ் ‘போர் இல்லாத இருபது நாட்கள்’ நாவலைப் படித்து முடிக்கவில்லை. அதற்கிடையில் அவர் போர்க்களத்தில் காயமடைந்துவிட்டார். வலது கால் உடைந்துவிட்டது. இப்போதும் – முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் – ஊன்றுகோலுடன்தான் நடக்கிறார். நாவல் தொலைந்துவிட்டது.
ஆள் தப்பியதே போதும் என்ற நிலையில், நாவலைப் பற்றி எப்படிக் கவலைப்படுவது?
அதற்கு அடுத்தடுத்த மாதங்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டை விட்டு மக்களும் புலிகள் இயக்கத்தினரும் வெளியேறினர். தொடர்ந்து நடந்த யுத்தத்தில் ‘போர் இல்லாத இருபது நாட்கள்’ மட்டுமல்ல, சேகரித்து வைத்திருந்த அத்தனை புத்தகங்களையும் இழந்தேன். அது வேறு கதை. ஆனால், அதுவும்கூட ‘போர் இல்லாத இருபது நாட்கள்’ நாவலில் உள்ள கதைகளையும் நிகழ்வுகளையும் போன்றதே.
இந்த நாவலின் பிரதான பாத்திரமான லோபட்டினுடைய பயணத்தின் முக்கிய நோக்கம், உயிரிழந்த சக வீரரின் குடும்பத்தினரைச் சந்திப்பதும் தனது போர் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படமொன்றின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதுமாகும்.
போர்முனையின் மரண ஓலங்களிலிருந்தும் நெருக்கடிகளிலிருந்தும் விலகி, அமைதியான நகரத்திற்குச் செல்லும் வழியிலும் போரின் நிழல் அவரைத் தொடர்கிறது. போர் நேரடியாக நடைபெறாத தாஷ்கண்ட் நகரத்திற்கு வந்து சேரும் லோபட்டின், அங்கு மக்கள் பசி, வறுமை, துயரம், அலைச்சல் எனப் போர்க்கால நெருக்கடிகளுடன் போராடுவதைக் காண்கிறார். போர்க்களத்தை விட்டு நெடுந்தொலைவு பயணித்துச் சென்றாலும், போர்ச்சூழலுக்குள் வாழும் உணர்வே நீடிக்கிறது.
அச்சு அசலாக இதுவே நம்முடைய அனுபவமும்.
இதேவேளை, தனது விடுமுறையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக, தனது முன்னாள் மனைவியும் நடிகையுமான செனியா செர்கீவ்னாவையும் சந்திக்கிறார் லோபட்டின். செர்கீவ்னாவோ ஏற்கெனவே வேறொருவருடன் இணைந்து வாழத் தொடங்கியிருந்தார். இருந்தாலும், அவர்களுடைய சந்திப்பில் பழைய நினைவுகளும் பிரிவின் வலியும் போர் சிதைத்த குடும்ப உறவுகளின் ஏக்கமும் அமைதியாக வெளிப்படுகின்றன. இருவரும் பரஸ்பரப் புரிதலுடன் விவாகரத்து நடைமுறைகளை முடித்துக்கொள்கின்றனர்.
பிறகு, தாஷ்கண்ட் நகரத் திரைப்படப் படப்பிடிப்புத் தளத்தில் ஆடை வடிவமைப்பு உதவியாளராகப் பணியாற்றும் நீனாவைச் சந்திக்கிறார் லோபட்டின். இருவருக்குமிடையில் காதல் முகிழ்க்கிறது. போர் ஏற்படுத்திய தனிமையிலும் வறுமையிலும் வாழ்ந்தாலும், யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் முதிர்ச்சியும் மென்மையான குணமும் கொண்டவராக நீனா இருக்கிறார். லோபட்டினின் குறுகிய கால விடுமுறையில் அவருக்கு ஆறுதலாகவும் உணர்வுபூர்வமான துணையாகவும் அமையும் காதலியாகிவிடுகிறார்.
இன்னொரு நிலையில், லோபட்டின் ரயில் பயணத்தின்போது சந்திக்கும் விமானப்படை கேப்டன் யூரி ஸ்ட்ரோகனோவ், போர் வீரர்களின் உளவியல் அழுத்தங்களையும் போர்முனையில் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் பிரதிபலிக்கும் கதாபாத்திரமாக அறிமுகமாகிறார்.
இதெல்லாம் இந்த இருபது நாட்களுக்குள் நடந்துவிடுகின்றன. இதற்குள், போரில் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்வதற்காக மூன்று மடங்கு வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கையும் பதிவாகிறது. யுத்தத்தை அனைவரும் ஏதோ ஒரு வகையில் எதிர்கொள்ள வேண்டிய நிலை. அப்படி எதிர்கொண்டால்தான் வாழ்க்கை என்ற விதிக்குள் சிக்கியிருக்கும் நாடு. அதற்காகத் தங்களால் இயன்ற எல்லாவற்றையும் ஒவ்வொருவரும் செய்கிறார்கள். இப்படிப் பல நிகழ்வுகளும் மனிதர்களும் நாவலில் உண்டு.
நாவலின் இறுதிப் பகுதியைப் படிக்கும் வரையிலும், ‘போர் இல்லாத அந்த இருபது நாட்கள் எவை? அவை எங்கே?’ என்று நம்முடைய மனம் தேடிக்கொண்டேயிருக்கும். அந்தளவுக்குப் போரின் தாக்கமும் போர்ச்சூழலும் நாவலில் தொடர்ந்து கனமாகப் படிந்திருக்கின்றன.
நாவலின் முடிவில், அதாவது அதன் இறுதிப் பக்கத்தில்தான் – இருபது நாட்கள் விடுப்பை முடித்துக்கொண்டு மீண்டும் போர்க்களத்துக்கு லோபட்டின் வந்து சேரும்போதுதான் – போர் இல்லாத அந்த இருபது நாட்கள் எவை, அவை எப்படியானவை என்பது நமக்குப் புரியும்.
அந்தளவுக்குச் சிறப்பாகவும் நுட்பமாகவும் கலைநேர்த்தியோடும் எழுதியிருக்கிறார் ஸீமோனோவ்.
போர் நடக்கும் ஒரு தேசத்தில் போர்க்களம் என்பது யுத்தம் நடைபெறும் பலிக்களம் அல்லது யுத்தமுனை மட்டுமல்ல; அது தேசம் முழுவதும்தான் என்பதை ஸீமோனோவ் தெளிவாக உணர்த்துகிறார். இந்த அவதானம் அல்லது இந்தப் புரிதல் அவருடைய சொந்த அனுபவத்தின் வழியாக வந்தது என்று எண்ணுகிறேன்.
முன்பே சொல்லப்பட்டதைப் போல, ஸீமோனோவ் இரண்டாம் உலகப் போரில் செம்படையுடன் (Red Army) இணைந்து போர்க்களச் செய்தியாளராகப் பணியாற்றியவர். ‘ஸ்டாலின்கிராட் போர்’ உட்படப் பல முக்கியப் போர்க்களங்களை நேரில் கண்டவர். இவ்வாறு பெற்ற தன்னுடைய போர் அனுபவங்களைப் பின்னாளில் கவிதைகளாகவும் கதைகளாகவும் நாவல்களாகவும் நாட்குறிப்புகளாகவும் எழுதினார்.
அவற்றில் ‘எனக்காகக் காத்திரு’ (Wait for Me) என்ற கவிதை, ‘உயிரோடிருப்பவர்களும் இறந்தவர்களும்’ (The Living and the Dead), ‘போர் இல்லாத இருபது நாட்கள்’, ‘பகலும் இரவும்’ (Days and Nights) போன்ற படைப்புகள் முக்கியமானவை. இவை உலகளாவிய அளவில் ஸீமோனோவ்வுக்குப் புகழைப் பெற்றுக்கொடுத்தன. இவற்றில் ‘எனக்காகக் காத்திரு’, ‘போர் இல்லாத இருபது நாட்கள்’ ஆகிய இரண்டும் திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன.
‘எனக்காகக் காத்திரு’ (Wait for Me) என்ற கவிதை ஸீமோனோவ்வுக்குப் பெரும் புகழைப் பெற்றுக்கொடுத்தது. 1941 ஜூலை மாதத்தில், தான் நேசித்த நடிகை வாலன்டினா செரோவாவுக்காக (Valentina Serova) இதனை ஒரு தனிப்பட்ட கடிதத்தைப் போல எழுதினார்.
கீழே உள்ளது அந்தக் கவிதை:
எனக்காகக் காத்திரு
எனக்காகக் காத்திரு, நான் திரும்பி வருவேன்.
மிகுந்த நம்பிக்கையோடு காத்திரு.
மஞ்சள் நிற மழைத்துளிகள்
மனதில் சோகத்தை நிரப்பும்போது காத்திரு.
பனிப்புயல் வீசும்போது காத்திரு.
கடும் கோடை வெப்பத்திலும் காத்திரு.
நேற்றைய நினைவுகளை மறந்து
மற்றவர்கள் காத்திருப்பதை நிறுத்தும்போதும் நீ காத்திரு.
தொலைதூர இடங்களிலிருந்து
கடிதங்கள் வராதபோதும் காத்திரு.
உன்னோடு சேர்ந்து காத்திருப்பவர்கள்
சலிப்படையும்போதும் காத்திரு.
எனக்காகக் காத்திரு, நான் திரும்பி வருவேன்.
மறந்துவிடுவதே நல்லது என
மனப்பாடமாய்ப் பேசுபவர்களின் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்காதே.
நான் இறந்துவிட்டதாக என் தாயும் மகனும் நம்பட்டும்.
நண்பர்கள் காத்திருந்து களைத்துப்போய்,
நெருப்பின் அருகே அமர்ந்து,
என் ஆன்மா சாந்தியடையக் கசப்பான மதுவை அருந்தட்டும்…
நீ மட்டும் காத்திரு;
அவர்களோடு சேர்ந்து மதுவை அருந்த அவசரப்படாதே.
எனக்காகக் காத்திரு, நான் திரும்பி வருவேன்.
அத்தனை மரணங்களையும் வென்று வருவேன்.
காத்திருக்காதவர்கள் வேண்டுமானால்,
‘அவனுக்கு அதிர்ஷ்டம்’ என்று சொல்லட்டும்.
காத்திருக்காத அவர்களுக்குப் புரியாது –
போர்க்களத்தின் நெருப்புக்கு நடுவே
உன் காத்திருப்புதான் என்னைக் காப்பாற்றியது என்பது.
நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்பது நமக்கு மட்டுமே தெரியும் –
ஏனெனில், வேறு எவரையும் போலன்றி
நீ எனக்காகக் காத்திருந்தாய்.
⸻
இந்தக் கவிதை 1942 ஜனவரியில் ‘பிராவ்தா’ (Pravda) பத்திரிகையில் வெளியானதும், சோவியத் வீரர்கள் இதை வெட்டித் தங்கள் சட்டைப் பைகளில் வைத்துக்கொண்டு போருக்குச் சென்றனர். அந்நாட்களில் உயிரிழந்த பல வீரர்களின் சட்டைப் பைகளில் இக்கவிதை கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தளவுக்கு ஒவ்வொருவரும் இதைத் தங்களுக்கு நெருக்கமானதாக உணர்ந்தனர். என்பதால்தான், இது பின்னர் திரைப்படமாக எடுக்கப்பட்டபோதும் வெற்றியடைந்தது.
கவிதையின் அடிநாதம் ‘தீவிரமான நம்பிக்கை’ (Radical Faith) ஆகும். போரில் உயிர் பிழைப்பது என்பது வெறும் அதிர்ஷ்டமோ இராணுவ வியூகமோ மட்டுமல்ல. தனக்காக ஓர் உயிர் அசைக்க முடியாத நம்பிக்கையோடு காத்திருக்கிறது என்ற எண்ணம், மரணத்தின் பிடியிலிருந்தும் மீண்டுவருவதற்கான மனவலிமையை ஒரு வீரனுக்கு அளிக்கிறது என்ற உளவியல் உண்மையை இது பேசுகிறது.
ஏறக்குறைய இதை ஒத்ததாகவும் தொனியில் சற்று வேறுபட்டதாகவும் இரண்டு கவிதைகளை அப்பொழுது அமரதாஸும் எழுதியிருந்தார். ‘போராளியின் காதலி 01’, ‘போராளியின் காதலி 02’ என.
ஆனால், ஸீமோனோவ்வின் கவிதை குறித்த அறிமுகம் அமரதாஸுக்கு அன்று இருக்கவில்லை என எண்ணுகிறேன். ஏனென்றால், அப்போதைய எங்களுடைய உரையாடல்களில் ஸீமோனோவ் கவிதைகளையும் எழுதியிருக்கிறார் என்று நாம் பேசவில்லை. ஸீமோனோவ் ஒரு கவிஞரும்கூட என்ற அறிமுகம் எங்கள் இருவருக்கும் அப்போது இருக்கவில்லை.
ஸீமோனோவ், இரண்டாம் உலகப் போரின்போது செம்படையின் ‘கிராஸ்னயா ஸ்வெஸ்டா’ (Krasnaya Zvezda – சிவப்பு நட்சத்திரம்) இதழின் சிறப்புப் போர்ச் செய்தியாளராகப் பணியாற்றியதோடு, ஸ்டாலின்கிராட் போர் உட்படப் பல முக்கியப் போர்முனைகளில் நேரடியாகக் களத்தில் நின்று செய்திகளையும் இலக்கியப் படைப்புகளையும் உருவாக்கியுள்ளார்.
ஸீமோனோவ்வினுடைய முக்கியத்துவம் என்பது, போரை மிகைப்படுத்தப்பட்ட வீரதீரச் செயல்களாகக் காட்டாமல், சாதாரண வீரர்கள், மக்கள் ஆகிய இரு தரப்பினரதும் உளவியல், அவர்களுடைய அச்சம், வலி, அவர்களுக்குள்ளிருக்கும் மனிதநேயம், மனிதப் பண்புகள் போன்றவற்றையெல்லாம் யதார்த்தமாகப் பதிவு செய்திருப்பதாகும். இது தனிச்சிறப்புக்குரியது. வழமைக்கு மாறானது.
இதற்குப் பின்னணியாக அல்லது அடிப்படையாக அமைந்தது, 1941இல் ஜெர்மன் படைகள் சோவியத் யூனியன் மீது படையெடுத்த காலத்திலிருந்தே ஸீமோனோவ் போர்க்களத்திற்குச் சென்று, அங்கே நடந்தவற்றை நேரில் கண்ட அனுபவமாகும்.
குறிப்பாக, பெலாரஸின் மொகிலெவ் (Mogilev) நகரில் சோவியத் படைகள் பின்வாங்கியபோது ஏற்பட்ட அவலங்களையும் வீரர்களின் மனவுறுதியையும் நேரில் பார்த்திருக்கிறார். அதுமட்டுமல்ல, வரலாற்றின் மிகக் கொடூரமான போர்களில் ஒன்றான ஸ்டாலின்கிராட் போரையும் நேரில் கண்டிருக்கிறார். இடிபாடுகளுக்கிடையில் நிகழ்ந்த போரின் கொடுமைகளையும் வீரர்களின் தியாகங்களையும் மக்களின் துயரத்தையும் அவதானித்திருக்கிறார்.
ஸீமோனோவ்வினுடைய கண் அல்லது பார்வை, ஒரு படைப்பாளியினுடையது; போர் வீரருடையதல்ல. என்பதால், தன்னுடைய அந்த அனுபவங்களை மையமாக வைத்து ‘பகலும் இரவும்’ (Days and Nights) என்ற நாவலை எழுதினார்.
இதற்கப்பால், கருங்கடல் பகுதியில் நடந்த கடுமையான போர் தொடர்பான செய்திகளையும் சேகரித்தார். போரின் இறுதியில் சோவியத் படைகள் ஜெர்மனியின் தலைநகரான பெர்லினைக் கைப்பற்றியபோது, அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தையும் நேரில் பதிவு செய்தார்.
போர்க்காலத்தில் இவர் எழுதி வைத்த குறிப்புகள் பிற்காலத்தில் ‘போரின் வெவ்வேறு நாட்கள்’ (Different Days of War) என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்து, போரின் உண்மையான முகத்தை உலகுக்குக் காட்டின.
1941இல் மொகிலெவ் போர்க்களத்தில் தான் கண்ட சோவியத் வீரர்களின் தீரத்தையும் மரணத்தையும் கடைசிவரை மறக்காத ஸீமோனோவ், தனது மரணத்திற்குப் பிறகு தனது அஸ்தியை அந்தப் போர்க்களத்திலேயே தூவ வேண்டும் என்றும் விரும்பியிருந்தார்.
ஸீமோனோவ் உயிரிழந்தது 1979இல். ‘போர் இல்லாத இருபது நாட்கள்’ நாவலை அவர் 1972இல் வெளியிட்டார். தமிழ் உட்பட உலகின் பல மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டது. அதற்குப் பிறகு திரைப்படமாகவும் வந்து வெற்றியடைந்தது. இப்போதும் அந்தப் படத்தைப் பற்றிய எழுத்துகளும் கதையாடல்களும் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன.
போரில் முதலில் கொல்லப்படுவது உண்மை என்று சொல்லப்படுவதுண்டு. பலவிதமான கட்டுக்கதைகளாலும் கற்பனைகளாலும் உருவாக்கப்படும் உணர்ச்சிகரமான நிலையை ஸீமோனோவ் கடுமையாக எள்ளி நகையாடுகிறார்.
படப்பிடிப்புத் தளத்தில் போர் அனுபவமே இல்லாத இயக்குநரும், போலித்தனமான வீர வசனங்களும், மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளும் லோபட்டினுக்குக் கடும் எரிச்சலையும் அந்நிய உணர்வையும் ஏற்படுத்துகின்றன என்று சொல்வதன் வழியாக, போரைப் பற்றிய தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிடுகிறார்.
போரின் உண்மையான கொடூரத்தையும் வீரர்களின் சாதாரண மனித உணர்வுகளையும் நேரில் கண்ட அவருக்கு, சினிமாவில் காட்டப்படும் செயற்கையான ‘ஹீரோயிசம்’ (Heroism) முரண்பாடாகத் தெரிகிறது.
ஆகவேதான், இதற்கு மாறாக, போர்முனையிலிருந்து லோபட்டின் எழுதிய உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தாஷ்கண்ட் திரைப்படத் தளத்தில் ஒரு போர்த் திரைப்படம் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் ஆலோசகராக லோபட்டின் அழைக்கப்படுகிறார்.
ஆம், மக்களுக்கும் வரலாற்றுக்கும் உண்மை சொல்லப்பட வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துகிறார் ஸீமோனோவ்.
விடுப்பிலிருந்த இருபது நாட்கள் முடிவடையும் தறுவாயில், நீனாவிடம் விடைபெற்றுக்கொண்டு லோபட்டின் மீண்டும் போர்முனைக்குத் திரும்புகிறார். துப்பாக்கிச் சத்தங்கள் இல்லாத இந்த இருபது நாட்களில், போர் என்பது எல்லைகளில் மட்டுமல்லாமல் சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையிலும் கலைகளிலும் உறவுகளிலும் எவ்வளவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தவராகத் தனது பயணத்தைத் தொடர்கிறார்.
வழக்கமான போர் இலக்கியங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, போரின் உளவியல், சமூகத் தாக்கங்களை நுட்பமாகப் பதிவு செய்ததற்காக உலக இலக்கியத்திலும் தமிழ் வாசகர்கள் மத்தியிலும் இந்நாவல் சிறப்பிடம் பெற்றுள்ளது.
துயரம் என்னவென்றால், இந்த நாவலைப் படித்தும்கூட ஈழப்போராட்டத்தில் முதிர்ச்சியோ மாற்றமோ நிகழவில்லை. அதுமட்டுமல்ல, இதைப் படித்தவர்களில் அநேகரைப் போர் தின்றுவிட்டது. அவர்கள் இன்றில்லை. மிஞ்சிய நாமும்கூட போர் சப்பித் துப்பிய சக்கைகளாகவே கைவிடப்பட்டிருக்கிறோம்.
வாழ்க்கை மட்டுமல்ல, போரும் விசித்திரமானதுதான்.
ஆம், போர் இல்லாத மிஞ்சிய நாட்களும் போரின் நாட்களே!
போரின் உண்மையான கொடூரத்திற்கும் அதைத் தூரத்திலிருந்து ரசிக்கும் கலை ஈடுபாட்டுக்கும் இடையிலுள்ள முரணை ஸீமோனோவ் மனிதாயக் கண்ணோடு பார்ப்பதால், நாவல் புதிய பரிமாணத்தைப் பெறுகிறது.
1970களில் சோவியத் ஒன்றியத்தில் போர் குறித்த பெருமிதக் கதைகள் அதிகமாக எழுதப்பட்ட காலத்தில், போரின் கசப்பான உண்மைகளையும் தனிமனித உறவுகளின் சிதைவுகளையும் நேர்மையாகப் பேசியதற்காக விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார் ஸீமோனோவ். இதனால் இலக்கியத்தில் அவருடைய இடம் தனித்துவமானதாகியது.
ஈழத்திலும் இத்தகைய போர்க்களத்தை மையமாகக் கொண்ட புனைவுகளும் கவிதைகளும் எழுதப்பட்டுள்ளன. சில பிரதிகள் மிகைப்படுத்தப்பட்டவையாகவும் யதார்த்த முரண்களைக் கொண்டவையாகவும் உள்ளன. அதாவது, செயற்கையான உணர்வூட்டல்களாலும் நியாயப்படுத்தல்களாலும் கட்டமைக்கப்பட்டவை. அதீதமானவை.
மிகச் சில நாவல்களே மெய்யான நிலை என்ன என்பதை மனிதாய நிலையில் நின்று வெளிப்படுத்துகின்றன. அவையும்கூட இன்னும் ‘போர் இல்லாத இருபது நாட்கள்’ நாவலையோ அதைப் போன்ற வேறு பிரதிகளையோ கடக்கவில்லை.
தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’, குணா கவியழகனின் ‘நஞ்சுண்ட காடு’, ‘கடைசிக்கட்டில்’, மலரவனின் ‘போர் உலா’, ஷோபாசக்தியின் ‘கொரில்லா’, ‘ம்’, சயந்தனின் ‘ஆறாவடு’, ‘ஆதிரை’, ‘திசை ஒன்பது’, யதார்த்தனின் ‘நகுலாத்தை’ போன்றவை ஓரளவு குறிப்பிடத்தக்கன.
ஆனால், போரின் அனுபவங்களையும் போரைப் பற்றிய கண்ணோட்டத்தையும் வெளிப்படுத்தும் பல நாவல்கள் உலகளாவிய அளவில் கவனம் பெற்றுள்ளன.
‘ஸ்டாலின்கிராட்’ (Stalingrad) – வாசிலி கிராஸ்மன், ‘யாரோவுக்காக மணி ஒலிக்கிறது’ (For Whom the Bell Tolls) – எர்னஸ்ட் ஹெமிங்வே, ‘போரும் அமைதியும்’ (War and Peace) – லியோ டால்ஸ்டாய், ‘இரவின் முடிவை நோக்கிய பயணம்’ (Voyage au bout de la nuit) – லூயி-ஃபெர்டினண்ட் செலின், ‘கசாப்புக்கடை எண் 5’ (Slaughterhouse-Five) – கர்ட் வோனெகட், ‘ஏ சஸ்பென்டட் லைஃப்’ (A Suspended Life) – ஆதிஃப் அபு சைஃப் (Atef Abu Saif), ‘தி வாட்ச்மேக்கர்ஸ்’ (The Watchmakers), ‘தி பேஷன்ஸ் ஸ்டோன்’ (The Patience Stone) – அதிக் ரஹிமி (Atiq Rahimi), ‘தர்ஸ்ட்’ (Thirst) – மஹ்மூத் தவ்லதாபாதி (Mahmoud Dowlatabadi), ‘டாட்டர்ஸ் ஆஃப் ஸ்மோக் அண்ட் ஃபயர்’ (Daughters of Smoke and Fire) – அவா ஹோமா (Ava Homa), ‘கிரே பீஸ்’ (Grey Bees) – ஆண்ட்ரி குர்கோவ் (Andrey Kurkov), ‘தி ஆர்பனேஜ்’ (The Orphanage) – செர்ஹி ஜாடன் (Serhiy Zhadan), ‘எண்ட்லிங்’ (Endling) – மரியா ரேவா (Maria Reva), ‘டாட்டர்’ (Daughter) – தமாரா ஹோரிஹா-ஜெர்னியா (Tamara Horiha-Zernia) என இது ஒரு நெடும்பரப்பு.
இவற்றில் சிலவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால், ‘போர் இல்லாத இருபது நாட்கள்’, ‘போரும் அமைதியும்’ போன்ற செவ்வியல் நாவல்கள் தமிழில் பல பதிப்புகளைக் கண்டுள்ளன.
பனையையும் பனை நிற்கும் மண்ணையும் அறிந்த நமக்குப் பனி படர் தேசத்தை முதலில் அறிமுகப்படுத்தியவை ரஸ்ய நாவல்களும் சிறுகதைகளுமே. அவற்றில் போரின் கதைகளைச் சொன்னது என்ற வகையில் இந்த நாவலுக்குச் சிறப்பான இடமுண்டு.
இப்பொழுது தமிழில் மீண்டும் ஒரு புதிய பதிப்பாக இந்த நாவல் வெளிவருவதையிட்டு மகிழ்ச்சி.
போரில் தொலைந்துபோன நாவல் மீண்டும் கிடைப்பதென்பது வாழ்க்கையின் விசித்திரம் அன்றி வேறென்ன?
போர் இல்லாத இலங்கையின் இந்தப் பதினேழு ஆண்டுகளும்கூட போர் நடக்கும் காலத்தைப் போலவே நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
இதை எழுதக்கூடிய இன்னொரு ஸீமோனோவ்வுக்காகக் காத்திருக்கிறது காலம்.
