~ ஜோ பின்னர் / தி கார்டியன்
2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் நிலவிய கடுமையான உலகளாவிய வெப்பம் காரணமாக, உலகெங்கிலும் உள்ள ஏரிகள், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாக சர்வதேச ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
சீன அறிவியல் அகாடமியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி, வரலாற்றில் அதிக வெப்பம் பதிவான இந்த இரண்டு ஆண்டுகளிலும் பூமியின் மேற்பரப்பு நன்னீர் வளங்கள் கடுமையாகச் சரிவடைந்துள்ளன.
- உலகளாவிய ஆறுகளின் நீரோட்டம் வழக்கமான அளவைவிட 5.7 சதவீதம் குறைந்துள்ளது.
- ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் சேமிக்கப்பட்டிருந்த நீரின் அளவு 9.5 சதவீதம் குறைந்துள்ளது.
குறைந்தபட்சம் 1991ஆம் ஆண்டுக்குப் பின்னர், மேற்பரப்பு நீர்வளங்களில் ஒரே காலப்பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இதுவாகும்.
வெள்ளமும் வறட்சியும் ஒரே காலத்தில்!
புவி வெப்பமடையும்போது நீர்ச் சுழற்சியில் தீவிரமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. வெப்பமடைந்த வளிமண்டலம் மண், ஆறுகள் மற்றும் ஏரிகளிலிருந்து அதிகளவான ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது. நிலப்பரப்பின் வெப்பநிலை அதிகரிப்பதால் நீர் ஆவியாதலும் வேகமடைகிறது.
இவ்வாறு ஆவியாகும் நீர் வேறு பகுதிகளில், குறிப்பாகப் பெருங்கடல்களின் மீது, கனமழையாகப் பொழிகிறது. இதனால் வறட்சிக்கும் வெள்ளத்துக்கும் இடையிலான மாற்றங்கள் மேலும் தீவிரமடைகின்றன.
இதன் காரணமாக, 2023–2024 காலப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிரதேசங்களில்கூட ஆறுகளின் நீர்மட்டம் குறைந்திருந்தது.
இந்த ஆய்வுக்காக, உலகின் 150 பிரதான ஆற்றுப் படுகைகளின் நீரோட்ட அளவீடுகளையும், 1991 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் 12 இலட்சத்திற்கும் அதிகமான ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களைக் கண்காணித்த செயற்கைக்கோள் தரவுகளையும் ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி சுலக்னா மிஸ்ரா கூறுகையில்,
“காலநிலை மாற்றத்தின் முக்கியமான முரண்பாடொன்றை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. வளிமண்டலம் வெப்பமடைவதால் நிலப்பரப்பில் அதிகளவான நீர் கிடைக்கும் என்று அர்த்தமல்ல. இந்தக் காலப்பகுதியில் உலகளாவிய மழைப்பொழிவு அதிகரித்திருந்தாலும், மேலதிக மழையின் பெரும்பகுதி பெருங்கடல்களிலேயே பெய்துள்ளது. அதேவேளை, பல நிலப்பரப்புகள் கடுமையான நீர்ப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன” என்றார்.
தென் அமெரிக்காவில் கடுமையான பாதிப்பு:
நீர்வளங்களில் ஏற்பட்ட சரிவு
2023–2024 காலப்பகுதி
உலகளாவிய ஆறுகள்
−5.7%
உலகளாவிய ஏரிகள், நீர்த்தேக்கங்கள்
−9.5%
தென் அமெரிக்க ஆறுகள்
−17.8%
தென் அமெரிக்க ஏரிகள், நீர்த்தேக்கங்கள்
−16.5%
ஆதாரம்: சர்வதேச ஆய்வு / தி கார்டியன்
இந்தப் பாதிப்புகள் தென் அமெரிக்காவில் குறிப்பாகத் தீவிரமாக இருந்தன. சில பகுதிகளில் அதீத மழைப்பொழிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டிருந்த போதிலும், ஆறுகளின் நீரோட்டம் 17.8 சதவீதத்தாலும், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு 16.5 சதவீதத்தாலும் குறைந்துள்ளது.
கிழக்கு அங்கிலியா பல்கலைக்கழகத்தின் நீரியல் மற்றும் காலநிலை மாற்ற ஆராய்ச்சிக்கான இணைப் பேராசிரியர் கலாநிதி யி ஹே கூறுகையில்,
“2023–2024 காலப்பகுதியில் தென் அமெரிக்காவின் சில பகுதிகள் கடுமையான வெள்ளப்பெருக்கை எதிர்கொண்டன. இருப்பினும், அந்த இரண்டு ஆண்டுகளிலும் கண்டத்தின் ஆறுகளில் வழக்கத்தைவிட மிகக் குறைந்தளவு நீரே பாய்ந்தது. கனமழையின்போது ஓர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். ஆனால், ஆண்டின் பெரும்பகுதியில் அந்த ஆற்றின் நீர்மட்டம் குறைவாகவே இருக்கலாம்” என்றார்.
அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் உலகின் நீர்வளம்:
தீவிர எல் நினோ நிகழ்வு, காலநிலை நெருக்கடியால் ஏற்படும் வறட்சி, நீர் மாசுபாடு மற்றும் அளவுக்கு அதிகமான நீர்வளப் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களை உலகின் நீர் விநியோகம் எதிர்கொண்டுள்ளது.
உலகின் நீர்வளங்கள் எந்தளவுக்கு ஆபத்தான நிலையில் உள்ளன என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காலநிலை நெருக்கடி மனிதர்களையும் இயற்கையையும் பாதிக்கும் பிரதான வழிகளில் ஒன்றாக நன்னீர் வளங்களில் ஏற்படும் மாற்றங்கள் காணப்படுகின்றன. புவி தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், எதிர்காலத்தில் எவ்வளவு நீர் கிடைக்கும் என்பதைக் கணிப்பதும் கடினமாகி வருகின்றது.
பிரித்தானிய சூழலியல் சங்கத்தின் கொள்கைக் குழுத் தலைவர் பேராசிரியர் கிறிஸ்டியன் டன் கூறுகையில்,
“பாரம்பரியமாக அதிக நீர்வளம் கொண்ட பகுதிகளாக நாம் கருதும் இடங்களில்கூட நன்னீர் வளங்கள் எவ்வளவு வேகமாகக் குறையக்கூடும் என்பதே இந்த ஆய்வின் மிகவும் கவலையளிக்கும் அம்சமாகும். வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் மட்டும் நமது நீர்ப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதாகக் கருத முடியாது” என்றார்.
பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டிய அவசியம்:
உலகளாவிய ஆறுகளின் நீரோட்டத்திலும் ஏரிகளின் நீர்மட்டத்திலும் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத சரிவு, அதிக மழைப்பொழிவுக்கும் கடுமையான வறட்சிக்கும் இடையிலான பாதிப்புமிக்க மாற்றங்கள் உலகின் நிலப்பரப்பு நீரியல் அமைப்புகளிலும் வெளிப்படத் தொடங்கியுள்ளதை உறுதிப்படுத்துவதாக ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் தெரிவித்துள்ளார்.
“பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைத்து காலநிலையை நிலைப்படுத்தும் வரையில், இத்தகைய தீவிரமான காலநிலை மாற்றங்களும் அவற்றால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் தொடர்ந்து மோசமடையும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
