இலங்கை ‘உயர் நடுத்தர வருமான நாடு’? யதார்த்தத்தில் மக்கள் நிலை வேறு!

இலங்கை ‘உயர் நடுத்தர வருமான நாடு’? யதார்த்தத்தில் மக்கள் நிலை வேறு!

(முன்சா முஷ்தாக் / நிக்கேய் ஆசியா)

இலங்கைக்கு வருவதற்கு முன்னர் அந்த நாட்டைப் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடும் சர்வதேசப் பயணிகள், உலக வங்கியின் உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கை இடம்பெற்றிருப்பதைக் கண்டு ஆச்சரியப்படக்கூடும். ஐரோப்பா மற்றும் தென்கிழக்காசியாவில் உள்ள சில பொருளாதாரங்களுடன் இலங்கையும் இந்த வகைப்பாட்டில் இடம்பெற்றுள்ளது. ஆனால், உண்மையான நிலைமை இதற்கு முற்றிலும் மாறானது. கொள்வனவுச் சக்தி குறைந்து வருவதாலும், வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பதாலும் மில்லியன் கணக்கான இலங்கையர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் ஒரு நாள் காலை 7 மணியளவில், 53 வயதான முச்சக்கரவண்டி சாரதியான சுசந்த ஜயவீர, பாடசாலை மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோரின் போக்குவரத்து அதிகரித்துக் கொண்டிருந்த வேளையில், முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் பயணிகளுக்காகக் காத்திருந்தார். ஆனால், பயணிகள் அதிகளவில் வரவில்லை.

ஒரு காலத்தில் அவரது வருமானத்துக்கு ஆதாரமாக இருந்த குறுகிய தூரப் பயணங்கள் தற்போது குறைந்துவிட்டன. பணத்தைச் சேமிப்பதற்காகப் பலர் நடந்து செல்வதையோ அல்லது பேருந்துகளில் பயணிப்பதையோ தெரிவு செய்கின்றனர்.

2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகளிலிருந்து இன்னமும் மீள முடியாமல் தவிக்கும் மக்களுக்கு, அடிப்படையான முச்சக்கரவண்டிப் பயணம் கூட இப்போது ஆடம்பரச் செலவாக மாறியுள்ளது. அந்தப் பொருளாதார நெருக்கடியின்போது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு பாரியளவில் வீழ்ச்சியடைந்ததுடன், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமும் வீழ்ச்சியடைந்தது.

“ஒரு கிலோமீற்றருக்கான குறைந்தபட்சக் கட்டணம் 120 ரூபாய் (0.40 அமெரிக்க டொலர்). ஆனால், நெருக்கடிக்கு முன்னர் இருந்ததைப் போல இப்போது மக்கள் அந்தத் தொகையைக்கூடச் செலுத்துவதற்கு இரண்டு தடவைகள் யோசிக்கின்றனர்” என அவர் நிக்கேய் ஆசியாவிடம் தெரிவித்தார்.

“முன்னர் நான் மாதமொன்றுக்கு 140,000 ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பாதித்தேன். ஆனால், இப்போது எனது கையில் கிடைப்பது சுமார் 100,000 ரூபாய் மட்டுமே.”

பணவீக்கம் சுமார் 8 சதவீதமாக நீடிப்பதுடன், புவிசார் அரசியல் பதற்றங்களால் ஓரளவுக்குத் தூண்டப்படும் தொடர்ச்சியான எரிபொருள் விலை அதிகரிப்புகளும் மக்களைப் பாதிக்கின்றன. இதனால், முன்னர் முச்சக்கரவண்டிகளில் பயணித்த பலர் இப்போது அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால், ஜயவீர போன்ற சாரதிகள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பளம் பெறும் குடும்பங்களும் இதேபோன்ற நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

நிகழ்ச்சி ஏற்பாட்டுத் துறையில் பணியாற்றும் குஷானி ஜோசப், தனது இரண்டு பிள்ளைகளுக்கும் வயதான பெற்றோருக்கும் ஆதரவளிக்கும் ஒரே வருமானம் ஈட்டுபவராக உள்ளார். அவரது மாதச் சம்பளம் 185,000 ரூபாய். ஆனால், குடும்பச் செலவுகளைச் சமாளித்த பின்னர் சேமிப்புக்காக அவரிடம் எதுவும் எஞ்சுவதில்லை.

“கணக்கில் பார்க்கும்போது எனது சம்பளம் நல்லதொரு தொகையாகத் தெரிகிறது. ஆனால், உண்மையில் அடிப்படைத் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்து ஐந்து பேர் கொண்ட குடும்பமொன்றை நடத்துவதற்கு அந்தச் சம்பளம் போதுமானதாக இல்லை” என அவர் கூறினார்.

முன்னர் ஒவ்வொரு உணவு வேளையிலும் நான்கு வகையான மரக்கறி மற்றும் இறைச்சி உணவுகளைச் சாப்பிட்டு வந்த அவரது குடும்பம், தற்போது இரண்டு வகையான மரக்கறி உணவுகளுடன் சமாளிக்க வேண்டியுள்ளது. மீன் அல்லது கோழி இறைச்சி வாரத்தில் அதிகபட்சம் இரண்டு தடவைகள் மட்டுமே அவர்களது உணவுப் பட்டியலில் இடம்பெறுகின்றன.

உலக வங்கி கடந்த ஜூலை மாதம் இலங்கையை கீழ் நடுத்தர வருமானம் கொண்ட நாடு என்ற நிலையிலிருந்து உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடு என்ற நிலைக்கு உயர்த்திய சில மாதங்களுக்குப் பின்னர், உழைக்கும் வர்க்கக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் யதார்த்த நிலைமை இதுவாகும்.

2024ஆம் ஆண்டில் 3,870 அமெரிக்க டொலராக இருந்த இலங்கையின் தனிநபர் மொத்த தேசிய வருமானம் (GNI), 2025ஆம் ஆண்டில் 4,670 டொலராக உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த வகைப்பாட்டு மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

உயர் நடுத்தர வருமான நாடு என்ற வகைப்பாட்டுக்கான குறைந்தபட்ச வருமான வரம்பான 4,636 டொலரை விட, இலங்கை வெறும் 34 டொலர் மட்டுமே அதிகமாகப் பெற்றிருந்தது.

பேரண்டப் பொருளாதாரத் தரவுகளும் (Macroeconomic data) மக்களின் அன்றாடப் போராட்டங்களையும், பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாக அவர்கள் உணரும் நிலையையும் எடுத்துக்காட்டுகின்றன.

இலங்கை கொள்கை ஆய்வு நிறுவனத்தின் (Institute of Policy Studies of Sri Lanka) ஆய்வாளரான அசங்க விஜேசிங்க, பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் இருந்த குடும்பங்களின் கொள்வனவுச் சக்தி இன்னமும் மீளவில்லை எனக் கூறுகிறார்.

உலக வங்கியின் தரவுகளை மேற்கோள்காட்டிய அவர், பணவீக்கத்தின் தாக்கத்தை நீக்கிக் கணக்கிடும்போது, 2025ஆம் ஆண்டில் குடும்பங்களின் நுகர்வுச் செலவு (Household consumption) 2019ஆம் ஆண்டின் மட்டத்தை விட 7.9 சதவீதம் அதிகரித்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

எனினும், அதே பணவீக்கச் சரிசெய்தலின் அடிப்படையில், 2019ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையில் தொழிலாளர் வருமானம் 40 சதவீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அந்த வருமானம் இன்னமும் முழுமையாக மீளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“ஒட்டுமொத்தப் புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போது மக்களின் செலவுகள் மீண்டுள்ளன. ஆனால், அந்த மீட்சி வேகம் குறைந்து வருகிறது. செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், மக்களின் கொள்வனவுச் சக்தி அதற்கேற்ப மீளவில்லை” என அவர் நிக்கேய் ஆசியாவிடம் தெரிவித்தார்.

மேலும், “2019ஆம் ஆண்டில் நாம் எதிர்கொண்டதைப் போல, ஒரேயொரு மோசமான ஆண்டு கூட நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பின்னோக்கித் தள்ளிவிட முடியும்” என்றும் அவர் எச்சரித்தார்.

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள், சுற்றுலாத்துறையைப் பெரிதும் பாதித்திருந்தன.

உலக வங்கியின் சிரேஷ்ட பொருளாதார நிபுணரான யாக்கொப் எங்கல், இலங்கையின் வருமான வகைப்பாட்டில் ஏற்பட்டுள்ள இந்த உயர்வு, குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தில் பரவலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் குறிக்கவில்லை என்றும், மாறாக தேசிய வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பையே பிரதிபலிக்கிறது என்றும் கூறினார்.

பொருளாதார நெருக்கடியின்போது இலங்கையின் வறுமை விகிதம் இரண்டு மடங்காக அதிகரித்ததுடன், அது இன்னமும் நெருக்கடிக்கு முந்தைய மட்டத்தை விட அதிகமாகவே உள்ளது.

அதேவேளை, “உண்மையான ஊதியங்கள் (Real wages) 2019ஆம் ஆண்டின் மட்டத்தை விட சுமார் 12 சதவீதம் குறைவாகவே உள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் வருமான வகைப்பாட்டை உயர்த்துவதைச் சிறிது காலத்துக்கு ஒத்திவைக்குமாறு அரசாங்கம் கோரியிருக்க முடியுமா என்ற கேள்வியையும் இந்த அறிவிப்பு எழுப்பியுள்ளது.

பங்களாதேஷும் நேபாளமும் ஐக்கிய நாடுகள் சபையின் மிகக் குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகள் (Least Developed Countries – LDC) என்ற பட்டியலிலிருந்து வெளியேறும் காலக்கெடுவை நீடித்துக்கொள்ளும் வகையில் ஏற்கெனவே கால அவகாசத்தைப் பெற்றுள்ளன.

எனினும், இந்த இரண்டு வகைப்பாடுகளும் வெவ்வேறு நடைமுறைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.

“பங்களாதேஷுக்கும் நேபாளத்துக்கும் வழங்கப்பட்ட கால நீடிப்புகள், ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்திக் கொள்கைக் குழு (UN Committee for Development Policy) அவற்றின் கோரிக்கைகளை மதிப்பீடு செய்த பின்னர், ஐ.நா. பொதுச் சபையினால் வழங்கப்பட்டவை” என ஒக்ஸ்போர்ட் எக்கனோமிக்ஸ் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் ஆடம் ஒனோஸ்கோ தெரிவித்தார்.

“உலக வங்கியின் வருமான வகைப்பாட்டு நடைமுறையில் இவ்வாறான அரசியல் ரீதியான கட்டம் எதுவும் கிடையாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வகைப்பாட்டு உயர்வு உடனடியாக இலங்கைக்கு எந்தவொரு பொருளாதாரப் பாதகத்தையும் ஏற்படுத்தாது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிடமிருந்து சலுகை அடிப்படையிலான கடன்களைப் (Concessional loans) பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இலங்கை தொடர்ந்து கொண்டிருக்கும்.

“எனவே, இலங்கை எதையும் இழக்கவில்லை. இந்த வகைப்பாட்டு உயர்வு காகிதத்தில் மட்டுமே இடம்பெற்றுள்ள ஒன்றாகும்” என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ. விஜேவர்தன தெரிவித்தார்.

மேலும், இதனை ஒரு “தொழில்நுட்ப ரீதியான பதவி உயர்வு” என அவர் வர்ணித்தார். ஏனெனில், 4,636 டொலர் என்ற வருமான வரம்பை இலங்கை வெறும் 34 டொலர்களால் மட்டுமே தாண்டியுள்ளது.

“2024ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையில் இலங்கையின் சனத்தொகை சுமார் 0.7 சதவீதம் குறைந்துள்ளது. இதுவும் தொழில்நுட்ப ரீதியாகத் தனிநபர் மொத்த தேசிய வருமானத்தை உயர்த்தி, இந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைவதற்கு உதவியுள்ளது” என்றும் அவர் கூறினார்.

எனினும், நீண்டகால அடிப்படையில் இந்த மாற்றத்தின் விளைவுகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம். குறிப்பாக, இலங்கையின் ஏற்றுமதிப் போட்டித்தன்மை பாதிக்கப்படக்கூடும்.

இந்த வகைப்பாட்டு மாற்றம் எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா ஆகியவற்றின் முன்னுரிமை வர்த்தகச் சலுகைகளை இலங்கை இழக்க வழிவகுக்கலாம் என ஆடம் ஒனோஸ்கோ எச்சரிக்கிறார்.

இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதியில் சுமார் 30 சதவீதம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவுக்குச் செல்கின்றன. இந்தச் சலுகைகள் இழக்கப்பட்டால், தற்போது பூச்சிய சுங்கவரியுடன் ஏற்றுமதி செய்யப்படும் ஆடை உற்பத்திப் பொருட்களுக்கு சுமார் 12 சதவீதம் வரை சுங்கவரி விதிக்கப்படக்கூடும்.

உலக வங்கியுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த வகைப்பாட்டை மாற்றுவது சாத்தியமற்றதாக இருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

எனினும், பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தின் அனுபவங்கள், நடைமுறை ரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நிறுவனங்களுடன், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன், முன்கூட்டியே பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார்.

சாதாரண மக்களைப் பொறுத்தவரை, இந்த வகைப்பாட்டு உயர்வின் அர்த்தம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.

“உலக வங்கி இலங்கை இப்போது உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாறிவிட்டதாகக் கூறினாலும், அதன் உண்மையான அர்த்தம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில், எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை” என நிகழ்ச்சி ஏற்பாட்டுத் துறையில் பணியாற்றும் குஷானி ஜோசப் தெரிவித்தார்.

“சாதாரண மக்களாகிய எங்களைப் பொறுத்தவரை, இது எந்தப் பயனும் இல்லாத வெறும் பெயர்ப்பலகையாகவே தெரிகிறது. எங்களுடைய வாழ்க்கை நிலைமை மோசத்திலிருந்து மேலும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது என்பதைத்தான் என்னால் கூற முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *