~ இதயராசன் – Ithayarasan
அத்தியாயம் – 01
i
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது… என்னும் பழந்தமிழ்ப் பாடலை நினைக்கும் பொழுதெல்லாம், தான் எவ்வளவு வல்லமையுடன் உள்ளேன், தன்னால் எதனையும் தாண்டிச் சாதிக்க முடியும் என்ற வைரக்கியம் ஜஸ்மின் உள்ளத்தில் பதிகின்றது.
அதிகமான சோதனைகளைத் தாண்டி நிமிர்ந்து நிற்கின்றேன் என்ற கர்வம் அப்பப்போ எட்டிப்பார்த்தாலும்,
“ஜஸ்மின் இன்னமும் நீ! எதிர்கொள்ளும் சோதனைகள் உள்ளன. இனிமேல்தான் இன்னமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என்ற உள்ளுணர்வு அவளை எச்சரித்துக் கொண்டேயிருந்தது.
ஜஸ்மின் லண்டன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளாள். பரீட்சை முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை.
தான், முதல் தரத்தில் சித்தி பெற்று, நேரடியாகவே M.Phil படிப்பதற்கு அனுமதி கிடைக்கும் எனத் திடமாகவே நம்பினாள்.
ஜஸ்மின் பல இடங்களில் இரண்டு மணித்தியாலம், மூன்று மணித்தியாலம் என்று வேலையில் பம்பரமாகச் சுழன்று சுழன்று வேலை செய்கின்றாள்.
புதிய சூழல், புதிய சுவாத்தியம் என்று மிரட்டினாலும் துவண்டு விடாமல், ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தனக்கான சோதனைக் களமாகவே எதிர்கொள்ளப் பழகிக் கொண்டாள்.
பல்துறைசார் அறிவையும், தேர்ச்சியையும், அனுபவத்தினையும் தனது சொத்தாகச் சேகரித்துக் கொண்டாள்.
செய்யும் வேலைகளைக் கஷ்டமாக நினைக்காமல் பயிற்சியாக எடுத்துக் கொண்டதால், அதனைக் கைதேர்ந்த நிபுணர்போல் அநாயாசமாகச் செய்கின்றாள்.
வேலை தேடுவது, ஜஸ்மினுக்குக் கஷ்டமாக இல்லாத இடத்தும், தனக்குப் பிடித்த சூழ்நிலையும் சாதகமாக அமையுமாறு பார்த்துக் கொள்வதே பெரிய பிரச்சினையாக உள்ளது.
இந்த மாதம் 30ம் திகதியுடன் கிழக்கு லண்டனில் ஒரு ரெஸ்ரோரண்டில் பார்த்துவந்த வேலை முடிவுக்கு வருகின்றது. அந்த இடத்தில் கடந்த நான்கு வருடங்களாக, நாளுக்கு நான்கு மணித்தியாலங்கள் வேலை செய்து வருகின்றாள்.
என்னவோ காரணத்தால் ரெஸ்ரோரன்ட் கைமாறுகிறது. புதிய நிர்வாகத்தில் வேலை நிச்சயம் என்று சொல்ல முடியாது என்று, போனமாதமே நிர்வாகத்தினர் சொல்லிவிட்டனர்.
ஜஸ்மின், இணையத்தில் வேலைவாய்ப்புப் பற்றிய விளம்பரங்களைப் பார்வையிட்டு, இரண்டு வாரமாக மிகத் தீவிவிரமாகத் தேடுகின்றாள். ஆனால் அவளுக்குத் தோதான வேலை கிடைக்கவில்லை. ஒரு விளம்பரத்தில் ஜஸ்மினின் கண்கள் குத்துட்டு நிற்கின்றன.
ஓரளவு வசதியான சுப்பர்மார்கெட், அந்தக்கடை அமைந்திருக்கும் இடம்தான் உதைக்கின்றது. Brixton சுத்தமாக ஆபிரிக்கர்கள் வசிக்கும் ஏரியா.
மிக அருகில் புகையிரத நிலையம் உள்ளது. அது வசதியானது. ஆனால் தமிழர் கடை. அவ்வாறென்றால் பிரச்சனை இருந்தால் கடையை எப்படி நடாத்துவார்கள்.
கடை நடைபெறும் காலத்தினைப் பார்கின்றாள். கடந்த ஐந்து வருடங்களாக இயங்குகின்றது.
ஓ.கே. போய்ப் பார்ப்போம் என்ற முடிவுடன், தனது மடிக்கணனியை நிறுத்திவிட்டு, அன்றைய இரவு உணவினை ஆயத்தம் செய்கின்றாள்.
ii
நிர்மலமான காலைப் பொழுது, இரவு முழுவதும் சிணுங்கிக்கொண்டிருந்த வானம் சிரிப்பதுபோல், வெண்முகில்கள் ஆங்காங்கே எட்டிப்பார்த்தன.
மழையில் நனைந்து, பனியில் உறைந்த வீதியில், சப்பாத்துக் கால்கள் சரக் சரக் என்று ஒலியெழுப்ப, குளிர்காலத்துக்குரிய உடைகளை அணிந்து கொண்டு, றூமிலிருந்து நடைதூரத்தில் இருந்த CATFORT ட்றெயில்வே ஸ்ரேஸனை நோக்கி நடக்கின்றாள் ஜஸ்மின்.
திட்டமிட்டு அமைக்கப்பட்ட கார்பற் வீதியின் இரு மருங்கிலும் உள்ள, பெரியதும் சிறியதுமான விதவிதமான மரங்கள், தமது வனப்பினை இழந்து, பனித்திவலைகளால் கிளைகள் மூடுண்டு, பனித்தலை மரங்களாகக் காட்சியளித்தன.
வீதியைக் குறுக்கறுத்து நரியொன்று ஓடிவந்தது.
ஒருகணம் துணுக்குற்று, நெஞ்சு படபடக்க ஆ…! என்று கத்தினாள்.
நரி தன்பாட்டில் வீதியைக் கடந்து போனது கண்டு, மூச்சினை ஆழமாக இழுத்து, சுவாசத்தினை நிதானமாக வெளியேற்றித் தன்னைச் சமநிலைப் படுத்தினாள். பயம் நீங்கத் தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
ட்றெயில்வே நிலையம் மனிதத் தலைகளால் நிறைந்திருந்தது. எல்லோரும் தடித்த சப்பாத்தும் நீளக் காற்சட்டையும் நீளக் கோட்டும் அணிந்து, தலையையும் மூடியிருந்தனர். முகம் மட்டுமே தெரிந்தன.
பாதிக்குப் பாதி ஆண்கள் தாடியும் மீசையும் மழித்திருந்ததால் அருகில் செல்லும்வரை ஆண், பெண் பேதம் தெரியவில்லை.
Brixton செல்லும் ட்றெயின் வரும் பிளற்போமில் நின்று, நேரத்தினைப் பார்க்கின்றாள் ஜஸ்மின். ஐந்து நிமிடங்கள் இருக்கின்றது ட்றெயின் வருவதற்கு.
ஜஸ்மின் லண்டனிற்கு முதன்முதலாக ட்றெயினில் போன அனுபவத்தினை ஏனோ நினைத்துப் பார்க்கின்றாள்.
பஸ், ட்றெயின் பயணத்திற்கான காட்டினை ரொப்பப் பண்ணுவதற்கு மறந்து, கேற்திறக்காமல் முழிபிதுங்கி நின்றதையும்,
ஒரு வெள்ளைக்கார இளைஞன் நிலைமையினை உணர்ந்து, ரொப்பப் பண்ணிக் கொடுத்ததையும்,
பணம் கொடுத்தபோது வாங்க மறுத்து, இது போன்ற தருணங்களில் உதவுங்கள் என்று சொல்லி, ஒரு புன்னகையுடன் கடந்து போனதையும் நினைத்துப் பார்த்தாள்.
மின்னல் வேகத்தில் வந்து நின்ற ட்றெயினில், வேகவேகமாகத் தாவி ஏறினார்கள், ஜஸ்மினும் அவர்களுக்குச் சளைத்தவளில்லை என்பதை நிரூபிக்குமாறு தாவி ஏறி, யன்னல் ஓர இருக்கையில் வசதியாக அமர்ந்துகொண்டாள்.
மின்னல் வேகத்தில் பறக்கும் ட்றெயினில் எந்த ஆட்டமும் இல்லாமல் சீராகப் போய்க்கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் தனது விழிகளைச் சுழலவிட்டு, சூழலை நோட்டம்மிடுவது ஜஸ்மினின் வழமை என்பதால், அதனையே இங்கும் செய்கின்றாள்.
எல்லோரின் முகங்களிலும் பரபரப்பினையே காண்கின்றாள். வேலைக்கு நேரத்திற்குப் போகவேண்டும். அன்று வேலையிடத்தில் பிரச்சினையில்லாமல் நன்றாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையில் மூழ்கியிருந்தது போல உணர்கின்றாள்.
புதிய சுப்பர் மார்க்கெட் எப்படி இருக்கும், முதலாளி எப்படி இருப்பான். சிடு மூஞ்சிக்காரனோ, இல்லைப் பெண்களை அசிங்கமாகப் பார்ப்பவனோ, அல்லது அவர்களின் பலவீனத்தினைப் பயன்படுத்திக் குளிர் காய்பவனோ!
முதன் முதலாகத் தமிழ்கடையில் வேலை தேடிப் போகின்றேன், அங்கு சூழ்நிலை எப்படி இருக்கும், தமிழர்கள் இயல்பாகவே அடுத்தவர்களை நோண்டி, நொங்கு எடுப்பதில் கைதேர்ந்தவர்கள். எனக்கு எப்படி அமையப் போகின்றதோ! என்றவாறு ஜஸ்மினின் சிந்தனைகள் அறுந்தறுந்து, தொடர்ந்தன.
மனதை வேறுபக்கம் திசைமாற்ற எண்ணி, றெயினுக்கு வெளியே பார்க்கின்றாள். எங்கு பார்த்தாலும் பனிமூட்டங்கள் படிந்து, மேகங்களாகவே காட்சி அளிக்கின்றன.
ட்றெயினில் பயணம் செய்தாலும் விமானத்தில் பறப்பதுபோன்ற அனுபவமே அவளுக்குக் கிடைக்கின்றது. ஏனெனில் தரையில் உள்ள எதுவுமே பனிமூட்டத்துள், அவளின் கண்களுக்குத் தென்படவேயில்லை.
அரைமணி நேரத்தில் ட்றெயின் Brixton அண்டக்கிறவுண்ட் ஸ்டேசனில் தரித்து நின்றது. அவசர அவசரமாக பிளற்போமில் தாவிக்குதித்து இறங்கிய ஜஸ்மின்,
அண்டக்கிறவுண்டிலிருந்து மேல் நோக்கிச் செல்லும் செயின் லிப்டிலும் தாவியேறி நிதானமாக மூச்சுவிட்டவாறு, தனது தலைமுடியைச் சரிசெய்து, பேர்ஸிலிருந்த கண்ணாடியில் முகத்தினைப் பார்த்து, ரிசுவினால் துடைத்து, அழகு முகத்திற்கு அழகு செய்தாள்.
ஸ்டேஷனுக்கு வெளியே சீரான பிரமாண்டமான ‘கார்பற்’ வீதியின் இருமருங்கிலும் கண்ணைக் கவரும் வானுயர்ந்த கட்டிடங்கள் வரிசைகட்டி நின்றன.
புகையிரத நிலையத்திற்கு அருகில் காப்பி பார் ஒன்று, கண்ணையும் கருத்தைக் கவரும் வகையில் அட்டகாசமாக இருந்தது,
அது அவளை முதலில் கவர்ந்தது. இணையத் தகவலின்படி அதில் நின்றுபார்க்கக் கடை தெரிய வேண்டுமே!
எதிர்த் திசையில் பார்வையினைச் சுழல விடுகின்றாள்.
சண் சுப்பர்மார்க்கெட். வழமையாகச் சண் என்றால் சூரியன் படம்தானே போட்டிருப்பார்கள். ஆனால் ஒரு அழகிய விழியிலிருந்து ஒளிக்கதிர்கள் பரவுவது போல ஓவியம் தீட்டியிருந்தார்கள்.
கடைக்காரர் ஓவியத்திலோ, அழகியலிலோ இரசனை உடையவராக இருக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் கடையை நோக்கி மெல்ல நடந்தாள் ஜஸ்மின்.
பிரதான வீதியை அண்டியுள்ள சிறிய வீதியின் முகப்பில், லண்டனின் புகழைப் பறைசாற்றும் பாரம்பரிய கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கும் அழகான பழைய கட்டிடத்தில், ஒரு சுப்பர் மாக்கற்றுக்கான நேர்த்தியுடன் கடை அமைந்திருந்தது.
அந்தச் சூழலை மேலும் அழகு படுத்துவது போல் சிகப்பு நிறப்பூக்கள் நிறைந்த பாரிய விருட்சம் ஒன்று கம்பீரமாக நின்றது.
கடைக்குள் நுழைந்து, கவுண்டரைப் பார்க்கின்றாள். ரில்லரில் ஒரு பெண் நிற்கின்றாள். நடுத்தரமான வயதுள்ள ஒருவர் அங்குமிங்கும் அலைந்து பொருட்களை ஒழுங்கு படுத்துகின்றார். பிரதான வாயிலில், காவலாளி கடமையே கண்ணாக ஒவ்வொருவரையும் அவதானித்தபடி.
கடைக்குள் நுழைந்தவளை அவர்கள் ஆரம்பத்தில் கஸ்டமர் என்றே நினைத்திருக்கவேண்டும்.
அவள் பொருட்களைத் தேர்வு செய்யாமல் சுற்றும் முற்றும் பார்ப்பதை வைத்து,
யாரைப் பார்க்கவேண்டும் என்று, ரில்லரில் நிற்கும் பெண் கேட்கின்றாள்.
கடை ஓணரைப் பார்க்கவேண்டும் என்று பணிவாகப் பதிலிறுக்கின்றாள்.
முன்னாலுள்ள கதிரையைச் சுட்டிக்காட்டி அமருமாறு பணிக்கின்றாள். பொஸ் வெளியே போய்விட்டார். பத்து நிமிடத்தில் வந்துவிடுவார் என்று பதிலிறுத்தவாறு, ரில்லரில் ஐக்கியமாகிவிட்டாள் அந்தப் பெண்.
ஒருசில நிமிடங்களின் பின்னர், ஒரு நடுத்தர வயது இளைஞன், கடைக்குள் நுழைந்து தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்து, தனது வேலைகளைச் செய்தவாறே சுற்றாடலையும் அவதானித்தான்.
கடை முதலாளியைப் பார்த்த போது, அவன் இணக்கமானவன் என்பதை மூளை முன்னறிவுப்புச் செய்தது. ட்றெயினிருந்து முதலாளி எப்படிப்பட்டவன் என்று மனம் மறுகியதற்கு, விடை கிடைத்ததாய் திருப்தியுற்றாள் ஜஸ்மின்.
அப்போதுதான் ஜஸ்மினைப் பார்ப்பதுபோல, ஏற இறங்கப் பார்த்துவிட்டு,
யாரென்ற தோரணையில் ரில்லரில் நின்ற சுகந்தியைப் பார்த்தான்.
உங்களைப் பார்க்கவேண்டுமாம் என்று. அவளது விழிகள் சுழன்றது.
ஜஸ்மினை அழைத்து ஹலோ! நான் சண் என்று, தன்னை அறிமுகம் செய்தான்.
ஹலோ! நான் ஜஸ்மின் என்று, தன்னை அறிமுகம் செய்தபடி, தான் கடையில் பகுதிநேர வேலைதேடி வந்ததாகச் சொன்னாள்.
ஜஸ்மின் தனது முன்னைய வேலை அனுபவங்களைச் சொல்லி, தான் படித்துக்கொண்டிருப் பதாகவும், சுருக்கமாகத் தன்னை அறிமுகம் செய்து, தனது பைலையும் ஒப்படைத்தாள்.
என்ன நினைத்தானோ ரில்லரில் வேக் பண்ணுமாறு பணித்தான். ரில்லரைப் பொறுப்பேற்ற மறுவினாடியே பம்பரமாக சுழன்று வேலை செய்து, கியூவில் நின்ற கஸ்ரமர்களை விரைவாக அனுப்பிக் கொண்டிருந்தாள்.
இதுவரை ரில்லரில் வேலைசெய்த சுகந்தி மிரட்சிகலந்த பொறாமையுடன் ஜஸ்மினைப் பார்த்தாள்
ஒருமணி நேர வேலையுடன், ஜஸ்மினை ரில்லரைச் சுகந்தியிடம் ஒப்படைக்குமாறு வேண்டினான் சண்.
தற்போதைய ரொக்கத்தினைக் குறித்து, தனது வியாபாரத் தொகையையும் தனியாகக் குறித்துக் கொடுத்தாள்.
ஜஸ்மின் ரில்லரை லாவகமாக கையாண்டவிதம், கஸ்ரமஸிடம் குறிப்பறிந்து மிக விரைவாக அவர்களை அனுப்பிய வேகம் என்பன, அவள் வேலையில் அனுபவம் மட்டுமல்ல தனது வேலையைப் புரிந்து செய்கின்றாள் என்பதையும் கணித்துக்கொண்டான்.
அவள் கொடுத்த பைலை புரட்டிப் பார்க்காமலே, பிரதிகளை எடுத்து வைத்துக் கொண்டான்.
மணித்தியாலத்திற்கு எவ்வளவு சம்பளம் என்பதும் உடன்பாடான பின்னர்.
“எப்போ வேலைக்கு வரப்போகிறீர்? ”
“நாளை வெள்ளிக்கிழமை. திங்கள் தொடக்கம் வருகின்றேன்.”
“ஒ கே. திங்கள் வாரும் உமக்கான நியமனக்கடிதம் ரெடியாக இருக்கும்.”
iii
ஜஸ்மின் சண்ணின் கடைக்கு, நேர்முகத் தேர்வுகுச் சென்று வேலை கிடைத்த மகிழ்ச்சியை, இரவு விருந்துக்குச் சென்று கொண்டாடி மகிழ்ந்தாள் தனது தோழிகளுடன்.
திங்கட்கிழமை மாலை நான்கு மணிக்கு இன்னமும் இருபது நிமிடங்கள் இருக்கின்றன. ட்றெயின் Brixton ஸ்ரேசனில் நிற்கிறது.
சற்றுக் குளிர் அதிகம்போல் உணர்கின்றாள் ஜஸ்மின்.
அவளது தீர்மானம் இல்லாமலே கால்கள் அந்த அட்டகாசமான காப்பி பாரில் நுழைகின்றது.
சரியாக 4 மணிக்கு 10 நிமிடங்கள் இருக்க கடைக்குள் நுழைந்து, எல்லோருக்கும் வணக்கம் சொல்லுகின்றாள்.
சண் சிரித்தபடி பதில் வணக்கம் சொல்லி, கடைக்கு உங்களை வரவேற்கின்றோம் என்று கைகுலுக்குகின்றான்.
சண்ணைத் தொடர்ந்து சுகந்தியும், மூர்த்தியண்ணரும், காவலாளியும் கைக்குலுக்கி வரவேற்கின்றனர்.
சண் கொடுத்த நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்டு, தனது டியூட்டியைப் பார்க்கின்றாள் ஜஸ்மின்.
ஜஸ்மினுக்கு ஷோறூமையும், ஸ்டோர் றூமையும் மூர்த்தியண்ணர் சுற்றிக் காண்பித்தார்.
முதல் பார்வையிலேயே ஜஸ்மின், ஷோறூமில் சிலமாற்றங்கள் செய்தால் மேலும் அழகாக இருக்கும் என்று நினைத்தாள்.
இருப்பினும் எல்லாவற்றினையும் மேதாவித் தனமாக உடனடியாகச் செய்யக்கூடாது. கடையின் வாடிக்கையாளர் தேவையறிந்து, சக பணியாளர் உதவியுடன் செய்வதே முரண்பாட்டையும், தேவையில்லாத பொறாமையையும் தவிர்க்கும், என்று நிதானமாகச் சிந்தித்து, முதல் நாள் செய்த தவறைத் தவிர்த்துக் கொண்டாள்.
ஜஸ்மினுக்குத் தெரியும் பத்துப்பேருடன் போட்டியிடும்போது, பத்தோடு பதினொன்றாக நிற்காமல் முதலாக நின்று காட்டவேண்டும்.
நண்பர்களாகப் பழகும்போது அவர்களில் ஒருவராக நிற்க வேண்டும் என்பதும்.
(தொடரும்..)
