செயற்கை நுண்ணறிவு (AI) மூலமான சிறார்  பாலியல் துஷ்பிரயோகப் தயாரிப்புகள் பற்றிய முறைப்பாடுகள் 8,400 சதவீதத்தால் அதிகரிப்பு – ஆய்வில் தகவல்

செயற்கை நுண்ணறிவு (AI) மூலமான சிறார்  பாலியல் துஷ்பிரயோகப் தயாரிப்புகள் பற்றிய முறைப்பாடுகள் 8,400 சதவீதத்தால் அதிகரிப்பு – ஆய்வில் தகவல்

   ~ ஹரி டெய்லர்

சிறுவர்களை பாலியல் ரீதியாகச் சுரண்டுவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்படுவது தொடர்பான முறைப்பாடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 8,400 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

எடின்பரோவைத் தளமாகக் கொண்ட Childlight – Global Child Safety Institute வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 2023ஆம் ஆண்டில் சுமார் 4,700 ஆக இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் 400,000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.

இதில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலிப் படங்கள் மற்றும் ஒருவரின் ஆடைகளை டிஜிட்டல் முறையில் அகற்றிக் காட்டும் ‘Nudify Apps’ எனப்படும் செயலிகள் மூலம் உருவாக்கப்படும் ஆபாசப் படங்களும் அடங்குகின்றன.

இவ்வாறான படங்கள் போலியானவையாக இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தி சிறுவர்களை மிரட்டி, பணம் அல்லது மேலதிக படங்களைக் கோரும் வகையில் குற்றவாளிகள் செயற்பட முடியும்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட காணாமற்போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர்களுக்கான தேசிய நிலையத்திற்கு (National Center for Missing and Exploited Children – NCMEC), தொழில்நுட்ப நிறுவனங்கள் சமர்ப்பித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Childlight நிறுவனத்தின் உலகளாவிய தரவுப் பிரிவின் பணிப்பாளரான பேராசிரியர் டெபி ஃப்ரை (Debi Fry), இந்த ஆய்வு சிறுவர்கள் மீதான பாலியல் சுரண்டலின் அதிர்ச்சியூட்டும் அளவை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்:

“சிறுவர்கள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தின் அதிர்ச்சியூட்டும் அளவையும், குறிப்பாக இணையவழியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் எவ்வளவு வேகமாக மாறிவருகின்றன என்பதையும் எமது ஆய்வு வெளிப்படுத்துகிறது.

“எனினும், அரசாங்கங்கள் எவ்வாறு இதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் இந்த ஆய்வு காட்டுகிறது. கருத்துக்கணிப்புகள், பொலிஸ் பதிவுகள் மற்றும் ஏனைய தரவுகளை ஒன்றிணைப்பதன் மூலம், சிறுவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்த தெளிவான புரிதலைப் பெற முடியும்.

“பாதுகாப்பு கட்டமைப்புகளில் உள்ள பலவீனங்களைக் கண்டறிந்து, எங்கு அதிகளவில் வளங்களையும் தடுப்பு நடவடிக்கைகளையும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் தீர்மானிக்க முடியும்” என்றார்.

AI மூலம் உருவாக்கப்படும் சட்டவிரோதப் படங்கள் அதிகரிப்பு:

இணைய கண்காணிப்பு அமைப்பான Internet Watch Foundation (IWF), கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையிலும், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் இணையத்தில் வேகமாக அதிகரித்து வருவதாகத் தெரிவித்திருந்தது.

2026ஆம் ஆண்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட சட்டவிரோதப் படங்களின் எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டு முழுவதிலும் பதிவான எண்ணிக்கையை ஏற்கெனவே கடந்துவிட்டதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு உலகளாவிய ரீதியில் இத்தகைய துஷ்பிரயோகப் படங்களைக் கண்காணிக்கும் இந்த அரச சார்பற்ற நிறுவனம் (NGO), 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், யதார்த்தமான தோற்றத்தைக் கொண்ட சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சட்டரீதியாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் என வகைப்படுத்தப்படும் 6,310 AI உருவாக்கப் படங்களைத் தமது ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளதாக IWF தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டின் மொத்த எண்ணிக்கையான 4,500க்கும் அதிகமான படங்களுடன் ஒப்பிடுகையில் 40 சதவீத அதிகரிப்பாகும்.

2025ஆம் ஆண்டிலும் இத்தகைய படங்களின் எண்ணிக்கை ஏற்கெனவே அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகளவில் 30 கோடிக்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு:

உலகளவில் ஆண்டுதோறும் 30 கோடிக்கும் அதிகமான சிறுவர்கள், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குறைந்தபட்சம் ஒரு வகையான பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர் என Childlight நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

அத்துடன், 18 வயதை அடைவதற்கு முன்னர் ஒவ்வொரு நான்கு சிறுவர்களில் ஒருவர் குறைந்தபட்சம் ஒரு வகையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுவதாகவும் அந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது.

இந்த ஆய்வு இணையவழித் துஷ்பிரயோகங்கள் மட்டுமன்றி, நேரடியாக இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான தரவுகளையும் ஆராய்ந்துள்ளது.

வட அமெரிக்காவில் சிறுமிகளில் மூன்றில் ஒரு பகுதியினரும், சிறுவர்களில் பத்தில் ஒன்றுக்கும் அதிகமானவர்களும் தமது சிறுவயதில் நேரடியான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பாலியல் தாக்குதல், வன்புணர்வு மற்றும் பிறர் அறியாமல் பெண்களின் ஆடைகளுக்குள் மறைந்திருந்து படம் பிடித்தல் (Upskirting) போன்ற குற்றங்களும் இதில் உள்ளடங்குகின்றன.

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் அறிவித்தல்களின் பதிவுசெய்யப்பட்ட எண்ணிக்கை, அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையில் 63 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. கனடாவில் இந்த அதிகரிப்பு 18 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

பேராசிரியர் டெபி ஃப்ரை இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்:

“செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி சிறுவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை மாற்றியமைக்கும் வேகம் மிகவும் கவலையளிக்கிறது. வெறும் இரண்டு ஆண்டுகளில் AI மூலம் உருவாக்கப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அசாதாரணமான அளவில் அதிகரித்துள்ளதை இந்தப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

“மேம்படுத்தப்பட்ட கண்டறிதல் முறைகள் மற்றும் அதிகரித்த முறைப்பாடுகள் இந்த உயர்வுக்கு ஓரளவு காரணமாக இருக்கலாம். இருப்பினும், வளர்ந்து வரும் இத்தகைய புதிய வகையான துஷ்பிரயோகங்களைப் புரிந்துகொள்வதற்கும், அவற்றைத் தடுப்பதற்கும், சட்டவிரோதமான உள்ளடக்கங்களை விரைவாக இணையத்திலிருந்து அகற்றுவதற்கும் அரசாங்கங்களும் தொழில்நுட்ப நிறுவனங்களும் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது” என்றார்.

தடுக்கக்கூடிய பொது சுகாதார அவசரநிலையாக அங்கீகரிக்க வேண்டும்:

Childlight நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி போல் ஸ்டான்ஃபீல்ட் (Paul Stanfield) கூறுகையில்:

“மில்லியன் கணக்கான சிறுவர்கள் பாலியல் சுரண்டலுக்கும் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாக்கப்படுகின்றனர். எனினும், எந்த இடங்களில் இத்தகைய பாதிப்புகள் அதிகமாக இடம்பெறுகின்றன, யார் அதிக ஆபத்தில் உள்ளனர் என்பது குறித்த முழுமையான தகவல்கள் இல்லாத நிலையிலேயே பல அரசாங்கங்கள் செயற்பட்டு வருகின்றன.

“துஷ்பிரயோகத்தின் உண்மையான அளவையும் அதன் தன்மையையும் புரிந்துகொள்ளாமல், அதனைத் திறம்படத் தடுக்கவோ சிறுவர்களைப் பாதுகாக்கவோ முடியாது.

“ஆனால், சிறுவர்கள் மீதான பாலியல் சுரண்டலும் துஷ்பிரயோகமும் தவிர்க்க முடியாதவை அல்ல. அவற்றைத் தடுப்பதற்கான அறிவும் கருவிகளும் எம்மிடம் உள்ளன.

“எனவே, சிறுவர்கள் மீதான பாலியல் சுரண்டலைத் தடுக்கக்கூடிய ஒரு பொது சுகாதார அவசரநிலையாக அரசாங்கங்கள் இதனை அங்கீகரிக்க வேண்டும் என நாம் கோருகிறோம்.

“மேம்பட்ட தரவுகளையும் ஆதாரங்களையும் திரட்டுவதற்கு முதலீடு செய்ய வேண்டும். அவற்றின் மூலம் கிடைக்கும் தகவல்களை நடைமுறை நடவடிக்கைகளாக மாற்ற வேண்டும்.

“தொடர்ச்சியான அரசியல் தலைமைத்துவமும் சர்வதேச ஒத்துழைப்பும் இருந்தால், பாதிப்புகளைத் தடுக்கவும், ஆரம்பக் கட்டத்திலேயே தலையிடவும் முடியும். இதன் மூலம் மேலும் மில்லியன் கணக்கான சிறுவர்களுக்குப் பாதுகாப்பான குழந்தைப் பருவத்தை உறுதிப்படுத்த முடியும்” என்றார்.

  • (மூலம்: த கார்டியன் | ஹரி டெய்லர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *