உபகண்டம் முதல் ஐரோப்பா வரை: தீவிரவாதத்திற்கு இந்திரா காந்தி வழங்கிய பதிலடி

உபகண்டம் முதல் ஐரோப்பா வரை: தீவிரவாதத்திற்கு இந்திரா காந்தி வழங்கிய பதிலடி

~ ஸ்வதேஷ் ராய்

இன்று இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டு 42 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஒரு வங்காளியை/ வங்கதேசத்தவரை  பொறுத்தவரை, சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும், அவர்களது தேசத் தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த மற்றும் நினைவு தினங்களை நினைவுகூருவது இயல்பானது. அவருடன் இணைந்த வகையில், இந்தியாவின் புகழ்பெற்ற தலைவரான திருமதி இந்திரா காந்தியையும் அவர்கள் நினைவுகூருவார்கள்.

ஆனால், இம்முறை ஒக்டோபர் 31 மீண்டும் காலச் சுழற்சியில் வந்திருக்கின்ற இந்தத் தருணத்தில், உலகின் முற்போக்குச் சிந்தனையாளர்கள் அனைவரும் திருமதி இந்திரா காந்தியைப் பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டும். அவர் இந்த உலகில் ஆரம்பித்த போராட்டம் குறித்து புதிதாகச் சிந்திக்க வேண்டும். அந்தப் போராட்டத்திற்காகவே அவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.

மேலும், இந்திரா காந்தியின் வாழ்க்கையையும் பணிகளையும் ஆராய்பவர்கள், இந்தப் போராட்டத்தைத் தொடங்கிய பின்னர் தாம் சுட்டுக்கொல்லப் படலாம் என்பதை இந்திரா காந்தி நன்கு அறிந்திருந்தார் என்பதையும் ஓரளவுக்குப் புரிந்திருப்பார்கள். இருந்தபோதிலும், அவர் பின்வாங்கவில்லை.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டுத் தலத்தில் இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டதன் மூலம் இந்திரா காந்தி அந்த மதத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே அவரைக் கொலை செய்ததாகவும் தோன்றலாம். பெரும்பாலான மக்கள் இந்தத் தவறான புரிதலுக்குள் சிக்கியிருந்தார்கள் என்பது மட்டுமல்ல, வெளிப்படையான நாத்திகரான குஷ்வந்த் சிங்கும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. அவரும் அதனை ஒரு வழிபாட்டுத் தலத்தின் மீதான தாக்குதலாகவே கருதினார். அதனால்தான், நவீன சிந்தனைகளைக் கொண்டிருந்த அவரைப் போன்ற ஒருவர் கூட, எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட அரச விருதைத் திருப்பிக் கொடுத்தார்.

அந்தக் காலகட்டத்தில் இந்திரா காந்தியின் அரசாங்கத்துக்குள்ளேயே பலரும் குஷ்வந்த் சிங்கின் கருத்தையே கொண்டிருந்தனர். அதனால்தான், ஆயுதமேந்திய தீவிரவாதிகள் ஆயுதக் கிடங்காக மாற்றியிருந்த பொற்கோயிலில் (Golden Temple) இராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பதில் இந்திரா காந்தி மிகுந்த இரகசியத்தைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது.

இந்திரா காந்தியின் இந்த உறுதியினாலும், தனது உயிரையே தியாகம் செய்ததன் மூலமும் இந்திய மக்கள் எதைப் பெற்றுக்கொண்டார்கள் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள இந்தியாவுக்கு இன்னும் நூறு ஆண்டுகள் கூட ஆகலாம்.

எனினும், மதத் தீவிரவாதிகளால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டு 42 ஆண்டுகள் கடந்துள்ள இன்றைய நிலையில், அவரது நினைவு தினத்தில், அவரது நாட்டின் அரசியலின் ஒரு பகுதி வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழைந்திருப்பதை நாம் காண்கிறோம்.

அதேபோன்று, அவரது பிறப்புடன் என்றும் தொடர்புபட்டிருக்கும் அண்டை நாடான பங்களாதேஷிலும், அரசாங்கத்தைக் கவிழ்ப்பதன் மூலம் அடிப்படைவாதத்தை நிலைநாட்டுவதற்காக மிக நுட்பமாகத் திட்டமிடப்பட்ட இயக்கமொன்றின் பின்னர், பல வழிபாட்டுத் தலங்கள் ஆயுதக் குழுக்களின் தளங்களாகச் செயல்பட்டமை வெளிப்பட்டுள்ளது. அவரது நாட்டின் ஏனைய இரண்டு அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பல வழிபாட்டுத் தலங்கள் ஆயுதமேந்திய தீவிரவாதிகளின் தளங்களாக உள்ளன.

1984ஆம் ஆண்டு இந்திரா காந்தியைக் கொலை செய்த தீவிரவாதிகள் வழிபாட்டுத் தலங்களுக்குள் ஆயுதங்களுடன் தங்கியிருந்ததைப் போலவே, இன்று ஆயுதமேந்திய மதவெறிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வகையான வழிபாட்டுத் தலம் தீவிரவாதிகளின் மனங்களுக்குள்ளும் படிப்படியாக உருவாகியுள்ளது.

இவ்வாறு, எந்த வகையான மதவெறியால் ஆட்கொள்ளப்பட்டாலும், அதனால் உந்தப்படும் ஒவ்வொரு தனிமனிதரும் தமக்குள்ளேயே ஓர் ஆயுதமேந்திய வழிபாட்டுத் தலமாக மாறிவருகின்றனர்.

பல அரசுகளும், அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிப்பவர்களும், மூடநம்பிக்கையைப் பேணி வளர்ப்பவர்களும், இத்தகைய மனிதர்களின் சிந்தனைகளையும் அவர்களை அணிதிரட்டுவதையும் மதத்தின் பெயரிலான வன்முறைத் தீவிரவாதம் என்று அழைப்பதற்குப் பதிலாக, மத தேசியவாதம் என்று அழைக்கின்றனர்.

உண்மையில், இன்று பல நாடுகளில் இந்த மதத் தீவிரவாதத்துக்கு தேசியவாதத்தின் போர்வை போர்த்தப்பட்டு, கருத்தியல் தேசியவாதம், கலாசார தேசியவாதம் மற்றும் பிராந்திய தேசியவாதம் ஆகியவற்றுக்கு எதிராக அது நிறுத்தப்பட்டுள்ளது. இதனை நியாயப்படுத்துவதற்காக வலுவானதொரு கருத்தியல் கதையாடலும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராகப் போராடும் முற்போக்குச் சக்திகள் பல நாடுகளில் இன்று பெருமளவுக்குச் செயலற்ற நிலையில் உள்ளன.

இந்திரா காந்தி இந்த ஆயுதமேந்திய மதவாத வன்முறைக்கு எதிராகப் போராடி அதற்காகத் தனது உயிரையே தியாகம் செய்தபோது, தமது சிந்தனையிலும் நவீனத்துவத்திலும் முன்னேறியவர்கள் என்று கூறிக்கொள்ளும் மேற்குலக நாடுகள்கூட அவரது போராட்டத்தைப் புரிந்துகொள்ளத் தவறின. மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்கள் இவ்வாறுதான் உயிரிழப்பார்கள் என்று அவர்கள் கருதினார்கள்.

இந்திரா காந்தியின் மறைவின் 42ஆவது ஆண்டு நினைவு தினமான இன்று, பிரான்ஸ், இத்தாலி, அல்பேனியா ஆகிய நாடுகள் தமக்குள் ஆயுதமேந்திய வழிபாட்டுத் தலங்களாக மாறியுள்ள தனிநபர்களின் தீவிரவாதத்தால் எரிந்துகொண்டிருப்பதையும், இங்கிலாந்தும் நியூயோர்க்கும் மிக விரைவில் அதே நிலைக்குத் தள்ளப்படக்கூடும் என்பதையும் காணமுடிகிறது.

எனவே, நாடுகளையும் மக்களையும் பொருளாதாரங்களையும் அழிக்கும் இந்தக் குருட்டுத்தனமான மதவெறித் தீவிரவாதிகளிடமிருந்து உலகைக் காப்பாற்ற வேண்டுமானால், ஆயுதமேந்திய தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக இந்திரா காந்தி பின்பற்றிய பாதையை அல்லது அவர்களை ஒடுக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக அவர் எடுத்த பாதையை உலகம் பின்பற்ற வேண்டும்.

அதேவேளை, மரணத்தையே எதிர்கொள்ள நேர்ந்தாலும், ஒவ்வொருவரும் தமது ஆழ்மனத்திலிருந்து மதச் சார்பின்மையையும் நவீனத்துவத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இது இத்தகைய போர்களுக்கு மட்டுமல்ல; எந்தவொரு போரும் நீண்டகாலம் தொடர அனுமதிக்கப்படக்கூடாது. இந்த உலகில் நன்மைக்காக நடத்தப்பட்ட போர்கள்கூட நீண்டகாலம் தொடர்ந்தபோது அவை தமது நோக்கத்தையும் திசையையும் இழந்துவிட்டன. பிரச்சினைகள் மேலும் ஆழமடைந்துள்ளன.

ஒரு பிரச்சினை காலம் செல்லச் செல்ல மண்ணுக்குள் தனது வேர்களை ஆழமாகப் பதித்து, கிளைகளைப் பரப்பி, இறுதியில் சிக்கலான ஆலமரத்தைப் போன்றதாக மாறிவிடுகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா இதற்கான ஆதாரத்தை நேரடியாகக் கண்டுள்ளது. ஒரு தசாப்தத்துக்கும் மேலாகப் பல டிரில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்ட பின்னரும், இறுதியில் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் மேலும் வலுவடைந்துள்ளார்கள் என்பதே வெளிப்பட்ட உண்மையாகும்.

அமெரிக்கா ஏன் இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டது என்பதற்கான பதிலை, 1971ஆம் ஆண்டு போருக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 1979ஆம் ஆண்டு இந்திரா காந்தி தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் காணலாம்.

இந்தியா – பாகிஸ்தான் போரின்போது ஏற்பட்ட அழுத்தங்களைத் தாங்கி நிற்க அவருக்கு வலிமை அளித்தது எது என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு இந்திரா காந்தி அளித்த பதில்:

“ஒன்று இந்து தத்துவம்; இரண்டு, ஆழமான அர்ப்பணிப்பு.”

(வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்து தத்துவமும் இந்தியாவின் மீதான அவரது ஆழமான பற்றுறுதியும் இதனைச் சாத்தியமாக்கின.)

உண்மையில், ஒரு போரைத் தொடங்குவதைவிட, அதிலிருந்து வெற்றிகரமாக வெளியேறுவதே முக்கியமானது என்பதை இந்திரா நன்கு அறிந்திருந்தார்.

ஏனெனில், ஒரு போரிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பதை முன்கூட்டியே அறியாமல் அதனைத் தொடங்குவது, மகாபாரதத்தில் அபிமன்யு சக்கரவியூகத்துக்குள் நுழைந்ததைப் போன்றதாகும். அந்தச் சிக்கலான போர்வியூகத்துக்குள் எவ்வாறு நுழைவது என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது; ஆனால் அதிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது அவனுக்குத் தெரியாது.

ஒரு போரிலிருந்து தம்மை எவ்வாறு விடுவித்துக்கொள்வது என்பது தெரியாவிட்டால், மிகப் பெரிய வீரர்கள்கூட கைகளில் கதாயுதங்களையும் தடிகளையும் ஏந்திக்கொண்டு கோபத்தில் நிற்பதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. உள்ளே சிக்கியிருப்பவரைக் காப்பாற்ற அவர்களால் முடியாது.

எனவே, தீவிரவாதிகளுக்கு எதிரான அல்லது பெருமளவிலான படுகொலைகளை மேற்கொள்பவர்களுக்கு எதிரான எந்தவொரு போரிலும், ஒரு போர்வீரன் அல்லது அரசியல் தலைவரின் பிரதான பொறுப்பு, வெற்றியை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதையும், அந்தப் போர் நீண்டகாலம் நீடிக்காமல் கூடிய விரைவில் அதிலிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பதையும் தீர்மானிப்பதாகும்.

நவீனகாலப் போர் வரலாற்றில் இந்த விடயத்தில் மிகவும் வெற்றிகரமாகச் செயல்பட்ட தலைவர் இந்திரா காந்தியே ஆவார்.

பாகிஸ்தானின் கொலைகார இராணுவத்தினாலும் அதன் தீவிரவாத மனப்பான்மை யினாலும் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த பங்களாதேஷை விடுவிப்பதற்காக மிகக் குறுகிய காலத்தில் வெற்றிகரமான போரை முன்னெடுத்து, அந்தப் போரிலிருந்து விரைவாகவும் முழுமையாகவும் அவர் வெளியேறினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இதற்கு இணையான மற்றொரு முன்னுதாரணம் இல்லை.

இவ்வளவு சிக்கலானதொரு விடயமான பங்களாதேஷை பாகிஸ்தானிடமிருந்து விடுவித்தல், ஒரு புதிய நாட்டை உருவாக்குதல், ஒரு கோடி அகதிகளைத் தாயகம் திரும்பச் செய்தல் ஆகிய அனைத்தையும் அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகளுக்கு எதிராக நின்றுகொண்டே வெறும் ஒன்பது மாதங்களில் அவர் தீர்த்து வைத்தார்.

அவரது அரசியல் ஞானம், வரலாற்று அறிவு மற்றும் தலைமைத்துவ ஆற்றல் ஆகியவற்றை ஆராயும்போது, ஒரு பிரச்சினையை அதன் முதல் கட்டத்தைக் கடந்து இரண்டாவது கட்டத்துக்கும், பின்னர் மூன்றாவது கட்டத்துக்கும் செல்ல அனுமதிப்பது அதனை மேலும் வலுப்படுத்தும் என்பதை அவர் நன்கு புரிந்திருந்தார் என்பது தெளிவாகிறது.

எனவே, ஒரு பிரச்சினை அதன் ஆரம்பக் கட்டத்திலேயே முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே அவரது அணுகுமுறையாக இருந்தது.

பொற்கோயில் விவகாரத்திலும் இந்திரா காந்தி உளவுத்துறை அதிகாரிகளையோ ஆலோசகர்களையோ முழுமையாகச் சார்ந்திருக்கவில்லை. தனது சொந்த அறிவாற்றலாலும் துணிச்சலாலும் ஆயுதமேந்திய தீவிரவாதிகளை ஒடுக்கினார். அதேபோன்று, தனது அரசியல் நுண்ணறிவையும் இராணுவப் புவியியல் பற்றிய புரிதலையும் பயன்படுத்தியே பங்களாதேஷ் விடுதலைப் போரை முன்னெடுத்தார்.

பங்களாதேஷ் விடுதலைப் போரில், இராணுவ வலிமையைவிட புவியியல் அமைப்பு வழங்கிய சாதகமான நிலைமைகள், சர்வதேசக் கருத்துநிலை மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக பங்களாதேஷுக்குள் இருந்த முற்போக்குச் சக்திகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கே அவர் அதிக முக்கியத்துவம் அளித்தார்.

இன்று இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் மட்டுமல்ல, ஐரோப்பாவும் ஏனைய நாடுகளும்கூட பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் வன்முறைத் தீவிரவாதத்தினதும் அடிப்படைவாதத்தினதும் பிடியில் சிக்கியுள்ளன. இவை மக்களையும் நாடுகளையும் பொருளாதாரங்களையும் அழித்து, உலகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்லக்கூடியவை.

எனவே, இத்தகையதொரு தருணத்தில் இந்த உபகண்டம் மட்டுமல்ல, முழு உலகமுமே இந்தியாவின் புகழ்பெற்ற தலைவரான திருமதி இந்திரா காந்தியை மீண்டும் திரும்பிப் பார்க்க வேண்டும்.

அவரது நடவடிக்கைகளிலிருந்தும் அவர் பின்பற்றிய வழிமுறைகளிலிருந்தும் படிப்பினைகளைப் பெற்று, இந்த உபகண்டத்திலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் தமது விடுதலைக்கான பாதையைத் தேடிக்கொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர் பங்களாதேஷின் உயரிய அரச விருதைப் பெற்ற ஊடகவியலாளர். இவர் சரகோன் (Sarakhon) மற்றும் தி பிரசென்ட் வேர்ல்ட் (The Present World) ஆகிய இதழ்களின் ஆசிரியராவார்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *