~பி.கே. பாலச்சந்திரன்
பல தசாப்தங்களாக மேற்கு ஆசியாவை உலுக்கி வரும் அரபு – இஸ்ரேல் மோதலின் தோற்றுவாய், 1917 நவம்பர் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட ‘பால்ஃபர் பிரகடனம்’ (Balfour Declaration) ஆகும்.
அன்றைய பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளராக இருந்த ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபர் (Arthur James Balfour), பிரிட்டிஷ் யூத சமூகத்தின் தலைவர்களில் ஒருவரான லோர்ட் ரோத்ஸ்சைல்டுக்கு எழுதிய மிகச் சுருக்கமான கடிதமே இந்தப் பிரகடனமாகும். இந்தக் கடிதம், டாக்டர் சாய்ம் வைஸ்மன் தலைமையிலான உலக சியோனிசக் கூட்டமைப்பிடம் (World Zionist Federation) கையளிக்கப்படுவதற்காக அனுப்பப்பட்டது.
அந்தக் கடிதத்தில் பால்ஃபர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
“யூத சியோனிச அபிலாஷைகளுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பின்வரும் பிரகடனத்தை, அமைச்சரவையின் பரிசீலனைக்கும் அங்கீகாரத்திற்கும் உட்படுத்திய பின்னர், மாட்சிமை தங்கிய மன்னரின் அரசாங்கத்தின் சார்பில் உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
‘பாலஸ்தீனத்தில் யூத மக்களுக்கான ஒரு தேசியத் தாயகம் அமைப்பதை மாட்சிமை தங்கிய மன்னரின் அரசாங்கம் சாதகமாக நோக்குகிறது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். அதேவேளை, பாலஸ்தீனத்தில் ஏற்கனவே வாழ்ந்து வரும் யூதரல்லாத சமூகங்களின் குடியியல் மற்றும் மத உரிமைகளுக்கோ அல்லது வேறு எந்த நாட்டிலும் யூதர்கள் அனுபவித்து வரும் உரிமைகளுக்கும் அரசியல் அந்தஸ்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எதுவும் செய்யப்படக்கூடாது என்பது தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.’
இந்தப் பிரகடனத்தை சியோனிசக் கூட்டமைப்பின் கவனத்துக்குக் கொண்டுவருமாறு கேட்டுக் கொள்கிறேன்.”
இப்படிக்கு,
ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபர்.
எனினும், பாலஸ்தீனத்தை யூதர்களின் ‘வாக்களிக்கப்பட்ட பூமி’யாக வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டபோதிலும், அங்கு வாழ்ந்த அரபு மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
1922ஆம் ஆண்டு வின்ஸ்டன் சேர்ச்சில் மற்றும் சாய்ம் வைஸ்மன் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பின்போது, பால்ஃபர் மற்றும் டேவிட் லொயிட் ஜோர்ஜ் ஆகியோர், பால்ஃபர் பிரகடனம் ‘எப்போதுமே ஒரு யூத அரசையே குறிக்கிறது’ என்பதை ஒப்புக்கொண்டனர்.
“சியோனிசம் சரியானதா, தவறானதா, நல்லதா, கெட்டதா என்பது ஒருபுறமிருக்க, அந்தப் பழைமையான நிலத்தில் தற்போது வாழும் 700,000 அரபு மக்களின் விருப்பங்களையும் முன்முடிவுகளையும் விட இது மிகவும் ஆழமான முக்கியத்துவம் கொண்டது” என்று பால்ஃபர் 1922ஆம் ஆண்டு எழுதினார்.
இந்தப் பிரகடனத்தை வெளியிடுவதற்கான தீர்மானம் பேரழிவை ஏற்படுத்துவதாக அமைந்தது. 1920ஆம் ஆண்டு முதலே அரபு – யூதக் கலவரங்கள் வெடிக்கத் தொடங்கின. அதன் பின்னர் போர்களும் இனப்படுகொலைகளும் மேற்கு ஆசியாவின் அடையாளங்களாக மாறின.
பால்ஃபர் பிரகடனத்தின் பின்னணியில் மறைந்திருந்த நோக்கம்..
2003ஆம் ஆண்டு பிரிட்டன் – பாலஸ்தீனத் திட்டத்தினால் வெளியிடப்பட்ட ‘பால்ஃபர் பிரகடனமும் அதன் விளைவுகளும்’ (The Balfour Declaration and its Consequences) என்ற ஆய்வுக் கட்டுரையில், வரலாற்றாசிரியர் அவி ஷ்லைம் (Avi Shlaim), ஐரோப்பாவில் துன்புறுத்தப்பட்ட யூதர்கள் மீதான உண்மையான அனுதாபத்தை விட, மத்திய கிழக்கில் பிரிட்டனின் புவிசார் அரசியல் இலட்சியங்களே பால்ஃபர் பிரகடனத்தை வெளியிடுவதற்கான தீர்மானத்தில் தீர்மானகரமான பங்கு வகித்ததாகக் குறிப்பிடுகிறார்.
ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் மாயிர் வெரேட்டே (Mayir Vereté), பால்ஃபர் பிரகடனத்தை வெளியிடுவதற்கான முன்முயற்சி சியோனிசத் தலைவர்களிடமிருந்து அல்ல, பிரிட்டிஷ் அதிகாரிகளிடமிருந்தே உருவானது எனக் கூறுகிறார். எனினும், இரு தரப்பினருக்கும் பாலஸ்தீன நிலத்தின் மீது தனித்தனியான ஆர்வங்கள் இருந்தன.
பால்ஃபர் பிரகடனம் வெளியிடப்படுவதற்கு முன்னரே, 1915–16ஆம் ஆண்டுகளில் மத்திய கிழக்கில் பிரிட்டனின் நலன்கள் தெளிவாக வகுக்கப்பட்டிருந்தன. முதலாம் உலகப் போருக்குப் பின்னர் ஒட்டோமான் பேரரசை பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் பிரித்துக்கொள்வதற்கான ‘சைக்ஸ் – பிகோ’ (Sykes–Picot) உடன்படிக்கைக்கு இந்த நலன்களே வழிவகுத்தன.
இன்றைய தெற்கு இஸ்ரேல், ஜோர்தான் மற்றும் தெற்கு ஈராக் ஆகிய பகுதிகளின் கட்டுப்பாடு பிரிட்டனுக்கு வழங்கப்படுவதாக அந்த உடன்படிக்கை தீர்மானித்தது. அத்துடன், மத்தியதரைக் கடலுக்கான போக்குவரத்து வழியை பெற்றுக்கொள்வதற்காக ஹைஃபா மற்றும் அக்கா துறைமுகங்களை உள்ளடக்கிய சிறிய நிலப்பகுதியும் பிரிட்டனுக்கு ஒதுக்கப்பட்டது.
தென்கிழக்கு துருக்கி, குர்திஸ்தான் பிராந்தியம், சிரியா மற்றும் லெபனான் ஆகியவை பிரான்ஸுக்கு ஒதுக்கப்பட்டன. பாலஸ்தீனம் தனியாகப் பிரிக்கப்பட்டு, அதற்கு ‘சர்வதேச நிர்வாகம்’ வழங்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
எனினும், சைக்ஸ் – பிகோ உடன்படிக்கை அரபு மக்களிடமிருந்து இரகசியமாக வைக்கப்பட்டது. 1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் புதிதாக ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் அரசாங்கம் அந்த உடன்படிக்கையை வெளியிட்ட பின்னரே அரபு மக்கள் அதைப் பற்றித் தெரிந்துகொண்டனர்.
சைக்ஸ் – பிகோ உடன்படிக்கை இருந்தபோதிலும், சூயஸ் கால்வாயிலிருந்து பிரான்ஸையும் ரஷ்யாவையும் விலக்கி வைப்பதற்கு பாலஸ்தீனத்தை நேரடியாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று பிரிட்டன் கருதியது.
வெரேட்டேயின் ஆய்வின்படி, சியோனிச இலட்சியத்தின் மீதான பெரும் அனுதாபத்தை விட, பாலஸ்தீனத்திலிருந்து பிரான்ஸை வெளியேற்ற வேண்டும் என்ற விருப்பமே, அங்கு யூத மக்களுக்கான தேசியத் தாயகத்தை அமைப்பதற்கு பிரிட்டன் ஆதரவளித்ததற்கான பிரதான காரணமாகும்.
டாக்டர் சாய்ம் வைஸ்மன் பிரிட்டனின் ஆளும் வர்க்கத்துடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வந்ததால், சியோனிசத் தலைவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழான பாலஸ்தீனத்தையே விரும்பினர் என்பதையும் பிரிட்டன் அறிந்திருந்தது.
அவி ஷ்லைமின் கருத்துப்படி, சியோனிசத்துக்கு ஆதரவான பிரகடனத்தை வெளியிடுவதன் மூலம், ஜெர்மனிக்கு எதிரான போரில் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் வாழ்ந்த யூதர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பிரிட்டன் நம்பியது.
அதேவேளை, ஜெர்மனி சியோனிசத் தலைவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது என்ற வதந்திகளும் பரவியிருந்தன. அந்த முயற்சியை முறியடிக்க வேண்டிய அவசியமும் பிரிட்டனுக்கு இருந்தது.
இந்தக் காரணிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, 1917 நவம்பரில் பால்ஃபர் பிரகடனம் என்ற அதிரடியான அரசியல் அறிவிப்பை வெளியிடுவதற்கு பிரிட்டனை விரைவாக நகர்த்தின என்று ஷ்லைம் கூறுகிறார்.
வெரேட்டே இதைவிடவும் ஒரு படி மேலே சென்று, பாலஸ்தீனத்தின் மீது பிரிட்டன் கவனம் செலுத்துவதற்கு சியோனிசத் தரப்பினர் மேற்கொண்ட அழுத்த நடவடிக்கைகள் ‘மிகவும் அற்பமான பங்களிப்பையே’ வழங்கின என்கிறார்.
அரபு மக்களுக்கு எதிரான பாரபட்சம்..
அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் லொயிட் ஜோர்ஜ் (1916–1922), பாலஸ்தீனம் தொடர்பான பிரிட்டனின் கொள்கை உருவாக்கத்தில் ‘மிகப் பெரிய’ பங்காற்றியதாக டொம் செகேவ் (Tom Segev), தனது ‘பிரிட்டிஷ் மண்டேட் ஆட்சியின் கீழான பாலஸ்தீனம்’ (British Mandate in Palestine) என்ற ஆய்வில் குறிப்பிடுகிறார்.
சியோனிசத்துடன் ஓர் அரசியல் கூட்டணியை ஏற்படுத்திக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்று லொயிட் ஜோர்ஜ் கருதினார். அவரது பார்வையில், சியோனிசம் என்பது பல நாடுகளில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒரு வலுவான சர்வதேச அரசியல் அமைப்பாக இருந்தது. எனினும், தனிப்பட்ட முறையில் அவர் யூதர்களை வெறுத்தார்.
எதிர்ப்புக் குரல்கள்: மொன்டேகு மற்றும் கர்சன்..
பிரிட்டிஷ் அமைச்சரவைக்குள்ளும் இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. ஆனால் அவர்கள் சிறுபான்மையினராகவே இருந்தனர்.
பிரிட்டிஷ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒரேயொரு யூத உறுப்பினரும், இந்தியாவுக்கான வெளியுறவுச் செயலாளருமான எட்வின் மொன்டேகு (Edwin Montagu), சியோனிசம் என்பது பிரிட்டனிலும் ஏனைய நாடுகளிலும் வாழும் யூதர்களுக்கு ஓர் அச்சுறுத்தலாக அமையும் என்று கருதினார்.
யூதர்களைத் தனியான ஒரு ‘தேசமாக’ அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தை அவர் நிராகரித்தார். அவ்வாறு தனியான தேசமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, தாங்கள் வாழும் நாடுகளில் சம உரிமைகளைக் கொண்ட குடிமக்களாக மாறுவதற்கு யூதர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தைப் பாதிக்கும் என்று அவர் வாதிட்டார்.
இந்தியாவின் முன்னாள் வைஸ்ராயான லோர்ட் கர்சனும், ஏற்கனவே பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த அரபு முஸ்லிம் மக்களை வெளியேற்றிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக யூதர்களைக் குடியேற்றும் யோசனை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருந்தார்.
அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்:
“அரபு மக்களும் அவர்களது முன்னோர்களும் கடந்த சுமார் 1,500 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்களும் அவர்களே. அவர்கள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுகின்றனர்.
யூதக் குடியேறிகளுக்காகத் தங்களது நிலங்களிலிருந்து வெளியேற்றப்படுவதையோ அல்லது அவர்களுக்காக வெறுமனே மரம் வெட்டுபவர்களாகவும் தண்ணீர் சுமப்பவர்களாகவும் பணியாற்றுவதையோ அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.”
அரபு மக்கள் கிளர்ச்சி:
பால்ஃபர் பிரகடனம் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பே, பிரிட்டனின் சியோனிச ஆதரவுக் கொள்கைக்கும், சியோனிசத் தரப்பினர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளுக்கும் எதிராகப் பாலஸ்தீனத்தில் வன்முறையான எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்தன.
பால்ஃபர் பிரகடனத்தையும் அதன் பெயரால் மேற்கொள்ளப்பட்ட எந்த நடவடிக்கையையும் அரபு மக்கள் உறுதியாக நிராகரித்தனர். தங்களது நாட்டைக் கைப்பற்றுவதற்காக ஆங்கிலோ – யூதத் தரப்பினர் தீட்டிய சதித்திட்டத்தின் ஆரம்பக்கட்டமே இந்தப் பிரகடனம் என்று அவர்கள் கருதினர்.
பிரிட்டனுக்கும் அதன் ஆதரவுடன் செயற்பட்ட சியோனிசத் தரப்பினருக்கும் எதிராக அரபு மக்களிடையே வளர்ந்த அதிருப்தி, 1920 ஏப்ரலில் இடம்பெற்ற ‘நபி மூசா கலவரங்களில்’ (Nebi Musa riots) உச்சத்தை அடைந்தது.
அந்தக் கலவரங்கள் அரபு தேசியவாதிகளின் அரசியல் இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்வதில் பெரிதாக உதவவில்லை. அதேவேளை, அமைதியான வழியில் தங்களது இலக்குகளை அடையலாம் என்ற சியோனிசத் தரப்பினரின் எதிர்பார்ப்புக்கும் அவை பெரும் பின்னடைவை ஏற்படுத்தின.
பிரிட்டனின் தாமதத்தால் யூதர்களும் அதிருப்தியடைகின்றனர்..
பிரிட்டனுக்கும் இந்த விவகாரம் பெரும் சிக்கலாக மாறியது.
தாங்கள் அரபு மக்களை ஏமாற்றிவிட்டோம் என்பதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அறிந்திருந்தனர். பால்ஃபர் பிரகடனத்தில் அரபு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதற்கு மேலாக, யூதக் குடியேற்றமும் ஊக்குவிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில், பிரிட்டன் தமது விவகாரத்தில் வேண்டுமென்றே தாமதம் செய்கிறது என்று யூதர்கள் குற்றஞ்சாட்டினர். ஜெர்மனியில் நாஜிக்கள் யூதர்களைத் துன்புறுத்தத் தொடங்கியிருந்த காலத்தில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்துவதில் டாக்டர் சாய்ம் வைஸ்மன் போதிய அழுத்தத்தைப் பிரயோகிக்கவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
1948ஆம் ஆண்டு பிரிட்டன் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறி, இஸ்ரேல் உருவானபோது அந்தப் பிராந்தியம் பெரும் குழப்பத்தில் மூழ்கியிருந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலக வல்லரசாக உருவெடுத்த அமெரிக்கா, அந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்பியது. மத்திய கிழக்கில் அரபு தேசியவாதத்தினதும் சோவியத் ஒன்றியத்தினதும் வளர்ந்து வரும் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்கான தனது முயற்சியில், இஸ்ரேலை ஒரு பயனுள்ள கூட்டாளியாக அமெரிக்கா கருதியது.
மாறுகிறதா அரசியல் போக்கு?
ஆனால் 2026ஆம் ஆண்டில் அரசியல் போக்கு மாறி வருவதாகத் தெரிகிறது.
இஸ்ரேலின் பிளவுபடுத்தும் அரசியல், அந்நாட்டின் யூத அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை அமைப்பதற்காக அரபுக் கட்சிகளுடன் கூட்டணி தேடும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
ஒக்டோபரில் நடைபெற்ற நெசெட் (Knesset) தேர்தலுக்குப் பின்னர், பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அணிக்கு 53 ஆசனங்களும், அதற்குப் போட்டியான காடி ஐசன்கொட் (Gadi Eisenkot) தலைமையிலான அணிக்கு 48 ஆசனங்களும், அரபுக் கட்சிகளின் அணிக்கு 19 ஆசனங்களும் கிடைத்தன.
மொத்தம் 120 ஆசனங்களைக் கொண்ட நெசெட்டில் அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 61 ஆசனங்களைப் பெறுவதற்கு அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது இப்போது முக்கியமானதாகியுள்ளது.
இப்போது எழும் மிக முக்கிய கேள்வி இதுதான்:
சியோனிச அரசியல் கட்சிகள் அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முன்வந்து, நீண்டகாலமாகத் தொடரும் மோதல்களுக்கும் இரத்தக்களரிக்கும் முடிவுகட்டுமா? என்பதுதான் அது.
(நன்றி: இண்டோ பசுபிக் அஃபயர்ஸ்)
