யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையிலுள்ள காங்கேசன்துறைத் துறைமுகத்தை (Kankesanthurai Port – KKS) புனரமைத்து அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கையும் இந்தியாவும் விரைவில் கைச்சாத்திடவுள்ளன. இரு நாடுகளினதும் அமைச்சரவை அனுமதி கிடைப்பது மட்டுமே தற்போது எஞ்சியுள்ளதாக இலங்கை அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இதற்கு சில கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பலாலி, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றமின்றி முடங்கியுள்ளன. காணி தொடர்பான சர்ச்சைகளே இதற்குக் காரணம் என இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதில் அரசாங்கத்திற்கு விருப்பமில்லை என மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர், தனது பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் தெரிவித்துள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, காங்கேசன்துறைத் துறைமுக அபிவிருத்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
“காங்கேசன்துறைத் துறைமுக அபிவிருத்திப் பணிகளுக்கு எந்தத் தடையும் இல்லை. ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. அதில் கைச்சாத்திடுவதும் விரைவில் இடம்பெறும்” என அவர் கூறினார்.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள இருதரப்பு உறவுகள் தொடர்பான விளக்கத்தில், காங்கேசன்துறைத் துறைமுக அபிவிருத்திக்காக இலங்கைக்கு 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா மானியமாக வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த ஏற்பாட்டை முறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னமும் இடம்பெற்று வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைச் சேவைகளுக்கான செலவுகளையும் உள்ளடக்கிய இந்த மானியம், இத்திட்டத்தின் முழுமையான செலவையும் ஈடுசெய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதிப்படுத்தும் பணிகள் முன்னேறிய கட்டத்தில் இருப்பதாக இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் தொடர்பில் இரு அரசாங்கங்களும் கொள்கை ரீதியாக இணக்கப்பாட்டை எட்டியுள்ளன. சில சொற்றொடர்கள் மற்றும் வாசகங்கள் தொடர்பில் மட்டுமே இணக்கப்பாடு எட்டப்பட வேண்டியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த இரண்டு திட்டங்கள் தொடர்பாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் வெளியிட்ட கருத்துக்களையும் இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் நிராகரித்துள்ளன.
இந்த விவகாரத்துக்குப் பொறுப்பான அமைச்சர் அவர் அல்ல என்றும், இத்திட்டம் தொடர்பான இந்தியாவின் பேச்சுவார்த்தைகள் உரிய துறைசார் அமைச்சருடனும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடனுமே இடம்பெறுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
2025 ஒக்டோபரில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்துக்கு முன்னர் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சுப் பொறுப்பை பிமல் ரத்நாயக்க வகித்திருந்தார். அதன் பின்னர் அந்தப் பொறுப்பு அனுர கருணாதிலக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பிமல் ரத்நாயக்க, விமான நிலையம் மற்றும் துறைமுகத்தை எப்போது, எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும் எனக் கூறியிருந்தார். நிதியுதவி வழங்குவது யார் என்பதைப் பொருட்படுத்தாமல் இந்த முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
விமான நிலைய அபிவிருத்திக்காக இந்தியா ஓரளவு நிதியை வழங்கியிருந்தாலும், பணிகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான நிதி அதில் இல்லை என்றும், எஞ்சிய தொகையை இலங்கை கடனாகப் பெற வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார். எனினும், இத்திட்டம் எப்போது முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் எந்தக் கால அட்டவணையையும் அவர் வெளியிடவில்லை.
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் பாரிய நட்டத்தைச் சந்தித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், முறையான திட்டமிடலின்றி முன்னெடுக்கப்படும் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இந்த இரண்டு அபிவிருத்தித் திட்டங்களுக்கும் பிமல் ரத்நாயக்க தடையாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சரக்குப் போக்குவரத்துக்கான நீண்ட சுற்றுப்பாதை..
இந்தியாவிலிருந்து வடபகுதிக்கு வரும் பெரும்பாலான பொருட்கள் தற்போது நீண்ட சுற்றுப்பாதை ஊடாகவே கொண்டுவரப்படுகின்றன.
சென்னை உள்ளிட்ட தென்னிந்தியத் துறைமுகங்களிலிருந்து ஏற்றப்படும் சரக்குக் கப்பல்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கடந்து தெற்கே கொழும்புக்குச் செல்கின்றன. அங்கு சுங்க நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், ஏறத்தாழ 400 கிலோமீற்றர் தொலைவிலுள்ள வடபகுதிக்கு ஏ9 நெடுஞ்சாலை வழியாக லொறிகளில் அவை கொண்டுசெல்லப்படுகின்றன.
ஆனால், இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைத் துறைமுகத்துக்கான கடல் வழித் தூரம் சுமார் 56 கடல் மைல்களே ஆகும்.
இந்தியாவிலிருந்து நேரடியாகக் காங்கேசன்துறைக்குச் சரக்குகளைக் கொண்டுவருவதற்கான போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டால் பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியும் என யாழ்ப்பாண வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆடை வகைகள், வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட 350 முதல் 500 மெற்றிக் தொன் வரையான சரக்குகளைக் காங்கேசன்துறைத் துறைமுகம் ஊடாக இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு யாழ்ப்பாண மாவட்ட வர்த்தக சம்மேளனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது இத்துறைமுகம் பயணிகள் போக்குவரத்துக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த ஆண்டு இந்தியச் செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் வெளியிட்ட செய்தியின்படி, காங்கேசன்துறைத் துறைமுக அபிவிருத்திக்கான சாத்தியவள ஆய்வுகள், மாதமொன்றுக்கு 2,000 முதல் 5,000 தொன் வரையான சரக்குகளைக் கையாளும் திறனை இலக்காகக் கொண்டுள்ளன.
துறைமுகம் முழுமையாகச் செயற்படத் தொடங்கினால், வடபகுதியின் மீன்பிடி, விவசாயம், பால் உற்பத்தி மற்றும் பனைசார் கைத்தொழில்களை பாக்கு நீரிணைக்கு அப்பாலுள்ள சந்தைகளுடன் இணைக்க முடியும் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளில், கடல் அலைத்தடுப்புச் சுவர் (Breakwater) மற்றும் தற்போதுள்ள துறைமுக இறங்குதுறை ஆகியவற்றைப் புனரமைத்தல், வர்த்தகச் சரக்குகளைக் கையாள்வதற்காகப் புதிய இறங்குதுறை ஒன்றை அமைத்தல் ஆகியவை உள்ளடங்குகின்றன.
காங்கேசன்துறைத் துறைமுகத்திலிருந்து தமிழகத்தின் நாகப்பட்டினத்துக்குப் பயணிகள் கப்பல் சேவையும் ஏற்கெனவே இடம்பெற்று வருகின்றது.
சுமார் நான்கு தசாப்த கால இடைவெளிக்குப் பின்னர், 2023 ஒக்டோபரில் இந்தப் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த இச்சேவை, 2024 ஆகஸ்ட் முதல் மீண்டும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
பயணக் கட்டணங்களை மக்களால் செலுத்தக்கூடிய அளவில் வைத்திருப்பதற்காக இந்தியா நிதியுதவி வழங்கி வருகின்றது. மீண்டும் சேவை ஆரம்பிக்கப்பட்ட முதல் பத்து மாதங்களில் 15,000 இற்கும் அதிகமான பயணிகள் இந்தக் கப்பல் சேவையைப் பயன்படுத்தியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
பலாலி விமான நிலையம்..
பலாலி விமான நிலைய அபிவிருத்தியில் இந்தியா ஈடுபடவில்லை என இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2023ஆம் ஆண்டு அலையன்ஸ் எயார் (Alliance Air) நிறுவனம் சென்னை – பலாலி விமானச் சேவையை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, விமான ஓடுபாதையை நீடிப்பதற்காக இந்தியாவிடம் இலங்கை நிதியுதவி கோரியிருந்தது.
எனினும், 2024 டிசம்பரில் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம், பலாலி விமான நிலைய விரிவாக்கத்துக்கான சாத்தியவள ஆய்வை மேற்கொள்வதற்காக முன்மொழிவுகளைக் கோரியபோது, இந்தியா உள்ளிட்ட கொழும்பின் விமானத் தகவல் பிராந்தியத்தைச் சூழவுள்ள நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அதில் பங்கேற்பதற்குத் தடை விதித்திருந்தது. நலன் முரண்பாடு ஏற்படக்கூடும் என்ற காரணம் இதற்காகக் குறிப்பிடப்பட்டது.
பயணிகள் முனையத்தின் விரிவாக்கப் பணிகள் 2027 ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், பணிகளின் முன்னேற்றம் மிகவும் மந்தமாக உள்ளது. விமான நிலையத்தின் நீண்டகால விரிவாக்கத் திட்டம் காணி சுவீகரிப்பு, நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்தியின் அளவு ஆகியவை தொடர்பான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கப்டன் தமிந்த ரம்புக்வெல்ல, காணிகளைக் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களே தாமதத்துக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
சில காணிகள் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டிலும் ஏனையவை தனியார் உரிமையிலும் இருப்பதாக அவர் கூறினார்.
அடுத்தகட்ட அபிவிருத்திக்குத் தேவையான காணிகள் விமான நிலையத்தின் மாஸ்டர் பிளானில் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும், காணிகளைக் கையகப்படுத்துவது தொடர்பில் எதிர்ப்புப் போராட்டங்களும் இழப்பீடு தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
“விமான நிலைய அபிவிருத்திக்காக அடையாளம் காணப்பட்டுள்ள சில காணிகள் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஏனையவை தனியாருக்குச் சொந்தமானவை. காணிகளைக் கையகப்படுத்துவதற்கு எதிராகப் போராட்டங்களும் இடம்பெற்றுள்ளன” என அவர் கூறினார்.
எனினும், கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்புப் பத்திரிகையொன்றிடம் கருத்துத் தெரிவித்த சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பேச்சாளர், விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான காணிகளின் அளவு இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனக் கூறியிருந்தார்.
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் விரிவாக்கத் திட்டத்தின் வரையறை மற்றும் அதன் அளவு குறித்து இதுவரை தெளிவுபடுத்தவில்லை என்பதே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்திருந்தார்.
இத்திட்டம் தொடர்பான தகவல்களை அறிந்துள்ள ஏனைய தரப்பினரும், அந்த மூத்த அரசாங்க அதிகாரி உட்பட, விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் விருப்பமின்றி இருப்பதாகக் கூறுகின்றனர்.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் பல தசாப்தங்களாக இருந்த வலிகாமம் வடக்குப் பகுதியில் உள்ள மயிலிட்டி மற்றும் அயற்கிராமங்களைச் சேர்ந்த மக்கள், விமான நிலைய விரிவாக்கத்துக்காக அடையாளம் காணப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் அறிவித்தல்களைப் பெற்றுள்ளனர்.
தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி அவர்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விமான நிலைய விரிவாக்கத்துக்காக சுமார் 3,000 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படக்கூடும் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பலாலி விமான நிலையத்தில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்கக்கூடும். ஆனால், மேலதிக காணிகளைக் கையகப்படுத்த வேண்டிய ஒரு விரிவாக்கத் திட்டத்துக்கு அவர்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(நன்றி: ஜப்னா மொனிட்டர்)
