2026 இன் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்தது

2026 இன் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்தது

2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டி, 12.01 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 11.52 பில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 4.26 சதவீத அதிகரிப்பாகும்.

இந்த வளர்ச்சியானது இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தொடரும் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. பொருட்கள் ஏற்றுமதியும் சேவைகள் ஏற்றுமதியும் இக்காலப்பகுதியில் சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

பொருட்கள் ஏற்றுமதி 3.63 சதவீதத்தால் அதிகரித்து 9.41 பில்லியன் டொலர்களை எட்டியுள்ள அதேவேளை, சேவைகள் ஏற்றுமதி 6.59 சதவீதத்தால் அதிகரித்து 2.60 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. மொத்த ஏற்றுமதி வருமானத்தில் சேவைகள் துறையின் பங்களிப்பு அதிகரித்து வருவது, இலங்கையின் ஏற்றுமதித் தளத்தை வலுப்படுத்துவதுடன், ஏற்றுமதி வருமானத்தைப் பல்வகைப்படுத்தவும் உதவுகிறது.

2026 ஆகஸ்ட் மாதத்திலும் இந்தச் சாதகமான போக்கு தொடர்ந்தது. அந்த மாதத்தில் மொத்த ஏற்றுமதி வருமானம் 1.60 பில்லியன் டொலர்களை எட்டியதுடன், வருடாந்த அடிப்படையில் 1.77 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்தது. குறிப்பாக, சேவைகள் ஏற்றுமதி 13.97 சதவீதத்தால் அதிகரித்து 331.87 மில்லியன் டொலர்களை எட்டியது. பொருட்கள் ஏற்றுமதி 1.27 பில்லியன் டொலர்களாகப் பதிவானது.

ஆண்டின் முதல் எட்டு மாதங்களிலேயே 12 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமான இலக்கை எட்டியிருப்பது, இலங்கையின் ஏற்றுமதித் தளத்தை விரிவுபடுத்துதல், பல்வகைப்படுத்துதல், சர்வதேசச் சந்தைகளில் தனது நிலையை வலுப்படுத்துதல் மற்றும் தேசியப் பொருளாதாரத்தில் ஏற்றுமதியின் பங்களிப்பை அதிகரித்தல் ஆகிய முயற்சிகளில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகும்.

இலங்கை சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள தற்காலிகத் தரவுகளின்படியும், இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள், பெற்றோலியப் பொருட்கள் ஆகியவற்றுக்கான மதிப்பிடப்பட்ட ஏற்றுமதி வருமானங்களையும் உள்ளடக்கிய வகையில், 2026 ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 1,269.49 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது 2025 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.0 சதவீத வீழ்ச்சியாகும்.

இதற்கிடையில், சேவைகள் ஏற்றுமதித் துறை தனது வளர்ச்சிப் போக்கைத் தொடர்ந்து பேணியுள்ளது. 2026 ஆகஸ்ட் மாதத்தில் இத்துறையின் மதிப்பிடப்பட்ட ஏற்றுமதி வருமானம் 331.87 மில்லியன் டொலர்களாகும். இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 13.97 சதவீத அதிகரிப்பாகும்.

சேவைகள் ஏற்றுமதியின் தொடர்ச்சியான விரிவாக்கம், இலங்கையின் ஏற்றுமதி வருமானம், அந்நியச் செலாவணி ஈட்டல் மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதார மீள்திறன் ஆகியவற்றில் இத்துறையின் பங்களிப்பு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.

இதன் விளைவாக, பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் மதிப்பீட்டின்படி 1,601.36 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.77 சதவீத வருடாந்த வளர்ச்சியாகும்.

ஒட்டுமொத்தமாக, 2026 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதிச் செயல்திறன், நாட்டின் வெளித்துறையின் தொடர்ச்சியான மீள்திறனை வெளிப்படுத்துகிறது. மொத்த ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர் என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது.

பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி ஆகிய இரண்டும் சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பது, பல்வகைப்படுத்தப்பட்ட, போட்டித்தன்மை மிக்க, ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான இலங்கையின் முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

சேவைகள் ஏற்றுமதியின் தொடர்ச்சியான விரிவாக்கம், அறிவுசார் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் இலங்கையில் அதிகரித்து வருவதையும் வலியுறுத்துகிறது. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT), வணிகச் செயல்முறை முகாமைத்துவம் (BPM), கட்டுமானம், நிதிச் சேவைகள், போக்குவரத்து மற்றும் தளவாடச் சேவைகள் போன்ற உயர் பெறுமதிமிக்க சேவைத் தொழில்துறைகள், இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள் மற்றும் சேவைகளின் பல்வகைப்படுத்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்துடன், பெறுமதி சேர்த்தல், அந்நியச் செலாவணி வருமானம் மற்றும் உயர் திறன் கொண்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் இவை பங்களிக்கின்றன.

ஆகஸ்ட் 2026 ஏற்றுமதிச் செயல்திறன் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி மங்கள விஜேசிங்க கூறியதாவது:

“2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளமை, இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது எமது ஏற்றுமதிச் சமூகத்தின் மீள்திறன், மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் மற்றும் தொடர்ச்சியான முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.

பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி ஆகிய இரண்டிலும் பதிவாகியுள்ள சாதகமான வளர்ச்சியும், குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் சேவைகள் ஏற்றுமதி வெளிப்படுத்திய வலுவான செயல்திறனும், இலங்கையின் ஏற்றுமதித் தளத்தின் பல்வகைத் தன்மையையும் வலிமையையும் எடுத்துக்காட்டுகின்றன.

இந்த வளர்ச்சியை மேலும் முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, ஏற்கனவே உள்ள ஏற்றுமதித் துறைகளின் போட்டித்தன்மையை வலுப்படுத்துவதிலும், புதிய பொருட்கள், சேவைகள் மற்றும் சந்தைகளை விரைவாக அபிவிருத்தி செய்வதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

பெறுமதி சேர்த்தலை அதிகரித்தல், புத்தாக்கம், தொழில்நுட்பப் பயன்பாடு, சந்தைகளைப் பல்வகைப்படுத்துதல் மற்றும் உலகளாவிய பெறுமதிச் சங்கிலிகளில் ஆழமான ஒருங்கிணைப்பு ஆகியவை ஏற்றுமதி வளர்ச்சியைத் தொடர்ந்து பேணுவதற்கும் தேசியப் பொருளாதாரத்திற்கு அதிக பெறுமதியை உருவாக்குவதற்கும் முக்கியமானவையாகும்.

வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்வதற்கும், சர்வதேச வர்த்தகத்திற்குச் சாதகமான சூழலை மேம்படுத்துவதற்கும், நிறுவனங்கள் தமது உலகளாவிய இருப்பை விரிவுபடுத்துவதற்கு ஆதரவளிப்பதற்கும் ஏற்றுமதியாளர்கள், கைத்தொழில் சங்கங்கள் மற்றும் அரசாங்கத் தரப்பினருடன் இணைந்து EDB தொடர்ந்து செயற்படும்.

நிலையான ஒத்துழைப்புடனும், போட்டித்தன்மை மற்றும் பல்வகைப்படுத்தல் மீதான வலுவான கவனத்துடனும், இலங்கையின் நீண்டகால ஏற்றுமதி இலக்குகளை அடைவதற்கும், மேலும் மீள்திறன் மிக்க, போட்டித்தன்மை கொண்ட, ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நாம் உறுதிபூண்டுள்ளோம்.” என்றார் அவர்.

2026 ஆகஸ்ட் மாதத்தின் முக்கிய ஏற்றுமதிகள்..

அ) சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்த பொருட்கள் மற்றும் சேவைகள்

இறப்பர் மற்றும் இறப்பர் சார்ந்த உற்பத்திப் பொருட்கள்

2026 ஆகஸ்ட் மாதத்தில் இறப்பர் மற்றும் இறப்பர் சார்ந்த உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் வருடாந்த அடிப்படையில் 9.24 சதவீதத்தால் அதிகரித்து 94.98 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. பல முக்கிய உற்பத்திப் பிரிவுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் இந்த வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளது.

குறிப்பாக, கைத்தொழில் மற்றும் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் இறப்பர்  கையுறைகளின் ஏற்றுமதி 10.71 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இது இத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.

அதேவேளை, கேஸ்கெட்டுகள் (Gaskets), வாஷர்கள் (Washers), சீல்கள் (Seals) மற்றும் ஏனைய கடின இறப்பர் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி, 2025 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 68.26 சதவீதத்தால் கணிசமாக அதிகரித்துள்ளது. இது சர்வதேசச் சந்தையில் தொடரும் கேள்வியையும் இலங்கையின் இறப்பர் சார்ந்த உற்பத்தித் துறையின் போட்டித் தன்மையையும் வெளிப்படுத்துகிறது.

மசாலாப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள்:

2026 ஆகஸ்ட் மாதத்தில் மசாலாப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களின் ஏற்றுமதி வருமானம் 82.08 சதவீதத்தால் அதிகரித்து 75.29 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

இந்தக் கணிசமான வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக மிளகு ஏற்றுமதி அமைந்துள்ளது. 2025 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் மிளகு ஏற்றுமதி 564.73 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இது இத்துறையின் ஒட்டுமொத்தச் செயல்திறனுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது.

உணவு மற்றும் பானங்கள் துறை:

2026 ஆகஸ்ட் மாதத்தில் உணவு மற்றும் பானங்கள் துறையின் ஏற்றுமதி வருமானம் வருடாந்த அடிப்படையில் 25.62 சதவீதத்தால் அதிகரித்து 57.32 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் பிரிவில் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணமாகும். இப்பிரிவின் ஏற்றுமதி வருமானம் 38.96 சதவீதத்தால் அதிகரித்து 25.18 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இலங்கையின் உணவு மற்றும் பானப் பொருட்களுக்கான சர்வதேசக் கேள்வி தொடர்ந்து நிலவுவதால், இத்துறை சர்வதேசச் சந்தைகளில் தனது வலுவான நிலையைத் தொடர்ந்து பேணி வருகிறது.

செயற்படுத்தப்பட்ட கரி  [சிரட்டைக்கரி](Activated Carbon):

தேங்காய் ஓடுகளிலிருந்து தயாரிக்கப்படும் உயர் பெறுமதி கொண்ட பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திப் பொருளான செயற்படுத்தப்பட்ட கரியின் ஏற்றுமதி வருமானம், 2026 ஆகஸ்ட் மாதத்தில் வருடாந்த அடிப்படையில் 12.72 சதவீதத்தால் அதிகரித்து 21.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

தேங்காய் சார்ந்த பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திப் பொருட்கள் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்திற்கு அதிகரித்து வரும் பங்களிப்பை இது எடுத்துக்காட்டுகிறது. மேலும், பெறுமதி சேர்த்தல், உற்பத்திப் பல்வகைப்படுத்தல் மற்றும் உலகச் சந்தைகளில் விரிவாக்கம் ஆகியவற்றுக்கான இத்துறையின் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது.

மின் மற்றும் இலத்திரனியல் கூறுகள்:

மின் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் துறை (Electrical and Electronic Components) 2026 ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிடத்தக்க 56.31 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் ஏற்றுமதி வருமானம் 62.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, காப்பிடப்பட்ட மின்கம்பிகள் மற்றும் கேபிள்களின் ஏற்றுமதி 30.83 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. உலகளாவிய பெறுமதிச் சங்கிலிகள் மற்றும் விநியோக வலையமைப்புகளில் இலங்கையின் பங்கேற்பு விரிவடைந்து வருவதை இந்த வளர்ச்சி எடுத்துக்காட்டுகிறது.

கடலுணவுப் பொருட்கள்:

2026 ஆகஸ்ட் மாதத்தில் கடலுணவுப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் வருடாந்த அடிப்படையில் 3.58 சதவீதத்தால் அதிகரித்து 19.09 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

குறிப்பாக, உறைந்த மீன் மற்றும் இறால்களின் ஏற்றுமதி முறையே 17.02 சதவீதம் மற்றும் 92.0 சதவீதம் அதிகரித்துள்ளன. இவை இத்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன.

கனிம மற்றும் கனிமம் சார்ந்த உற்பத்திப் பொருட்கள்:

2026 ஆகஸ்ட் மாதத்தில் கனிம மற்றும் கனிமம் சார்ந்த உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 15.32 சதவீதத்தால் அதிகரித்து 8.96 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இம்மாதத்தில் ஏற்பட்ட ஏற்றுமதி வருமான அதிகரிப்பு, இத்துறையின் சாதகமான செயல்திறனைப் பிரதிபலிக்கிறது.

சேவைகள் ஏற்றுமதி – ICT/BPM..

சேவைகள் ஏற்றுமதியைப் பொறுத்தவரையில், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செயல்முறை முகாமைத்துவம் (ICT/BPM) ஆகியவற்றின் ஏற்றுமதி வருமானம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் மதிப்பீட்டின்படி 135.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

இத்துறை நாட்டின் ஒட்டுமொத்தச் சேவைகள் ஏற்றுமதியில் வலுவான பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. அறிவுசார் திறனை அடிப்படையாகக் கொண்ட இத்துறையின் விரிவாக்கம், இலங்கையின் சேவைகள் பொருளாதாரத்தின் மீள்திறனையும் ஏற்றுமதி வருமானத்தில் அதன் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

அத்துடன், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட சேவைகளை வழங்குவதற்கான போட்டித்தன்மை மிக்க நாடாக இலங்கை சர்வதேசச் சந்தைகளில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

ஆ) வீழ்ச்சியைப் பதிவு செய்த பொருட்கள்..

ஆடை மற்றும் துணிநூல் துறை:

2026 ஆகஸ்ட் மாதத்தில் ஆடை மற்றும் துணிநூல் துறை சவால்களை எதிர்கொண்டது. இத்துறையின் ஏற்றுமதி வருமானம் வருடாந்த அடிப்படையில் 8.4 சதவீதத்தால் குறைந்து 464.27 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

முக்கிய ஏற்றுமதிச் சந்தைகளுக்கான ஏற்றுமதிகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 15.96 சதவீதத்தாலும், ஐக்கிய இராச்சியத்திற்கான ஏற்றுமதி 11.79 சதவீதத்தாலும் குறைந்துள்ளன.

உலகளாவிய ஆடைத் தொழில்துறையில் நிலவும் நுகர்வோர் கேள்வியின் மந்தநிலை மற்றும் மாறிவரும் சந்தை நிலைமைகள் காரணமாக ஏற்றுமதி ஆணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவே இவ்வீழ்ச்சிக்குக் காரணமாகும்.

தேயிலை:

2026 ஆகஸ்ட் மாதத்தில் தேயிலை ஏற்றுமதி வருமானம் 7.76 சதவீதத்தால் குறைந்து 130.92 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

பெருந்தொகையாக ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் (Bulk Tea) வருமானம் 16.57 சதவீதத்தால் குறைந்ததே இதற்கான முக்கிய காரணமாகும்.

குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏற்றுமதி 41.05 சதவீதத்தால் வீழ்ச்சியடைன் துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம், ஈரான், சவூதி அரேபியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி முறையே 72.22 சதவீதம், 76.2 சதவீதம், 13.68 சதவீதம் மற்றும் 49.36 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன.

இது இலங்கையின் தேயிலை ஏற்றுமதியைப் பாதிக்கும் வகையில் முக்கிய சந்தைகளில் நிலவும் சவாலான சூழ்நிலையை எடுத்துக்காட்டுகிறது.

தேங்காய் சார்ந்த உற்பத்திப் பொருட்கள்:

2026 ஆகஸ்ட் மாதத்தில் தேங்காய் சார்ந்த உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 17.28 சதவீதத்தால் குறைந்து 104.27 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

மூன்று முக்கிய உற்பத்திப் பிரிவுகளில், தேங்காயின் பருப்பை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் (Coconut Kernel Products) மிக அதிகமான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இவற்றின் ஏற்றுமதி வருமானம் 32.15 சதவீதத்தால் குறைந்துள்ளது.

இந்தப் பிரிவில் தேங்காய் எண்ணெய் மற்றும் திரவத் தேங்காய்ப்பால் ஆகியவற்றின் ஏற்றுமதி வருமானம் முறையே 16.39 சதவீதம் மற்றும் 31.79 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது இத்துறையின் ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

தேங்காய் நார் சார்ந்த உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியும் 9.66 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதேவேளை, கோகோ பீட் (Coco Peat), நார் பித் (Fibre Pith) மற்றும் அச்சிடப்பட்ட உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி 21.87 சதவீதத்தால் குறைந்து, 2026 ஆகஸ்ட் மாதத்தில் 20.40 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

அலங்கார மீன்கள்:

2026 ஆகஸ்ட் மாதத்தில் அலங்கார மீன்களின் ஏற்றுமதி வருமானம் 10.3 சதவீதத்தால் குறைந்து 1.48 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.

2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியிலான ஏற்றுமதிகள்..

2026 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதிச் செயல்திறன் சாதகமாகத் தொடர்ந்துள்ளது. மொத்த ஏற்றுமதி வருமானம் மதிப்பீட்டின்படி 12,006.64 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4.26 சதவீத வளர்ச்சியாகும்.

இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள், பெற்றோலியப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட ஏற்றுமதி வருமானங்களையும் உள்ளடக்கிய பொருட்கள் ஏற்றுமதி 3.63 சதவீதத்தால் அதிகரித்து 9,405.91 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, சேவைகள் ஏற்றுமதி 6.59 சதவீத வளர்ச்சியுடன் 2,600.73 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

உலகச் சந்தைகளில் மாறிவரும் நிலைமைகளுக்கு மத்தியிலும் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி ஆகிய இரண்டிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, இலங்கையின் ஏற்றுமதித் துறையின் மீள்திறனை எடுத்துக்காட்டுகிறது.

குறிப்பாக, சேவைகள் ஏற்றுமதியின் தொடர்ச்சியான விரிவாக்கம், ஏற்றுமதிப் பல்வகைப்படுத்தல், அந்நியச் செலாவணி வருமானம் மற்றும் நாட்டின் வெளித்துறையை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் இத்துறையின் பங்களிப்பு அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.

அ) சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்த பொருட்கள் மற்றும் சேவைகள்

2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் பல முக்கிய ஏற்றுமதித் துறைகள் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

தேங்காய் சார்ந்த உற்பத்திப் பொருட்கள், இறப்பர் சார்ந்த உற்பத்திப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட பொருட்கள், மின் மற்றும் இலத்திரனியல் கூறுகள் ஆகிய துறைகள் முறையே 5.63 சதவீதம், 5.51 சதவீதம், 19.99 சதவீதம், 24.09 சதவீதம் மற்றும் 57.49 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

இந்தப் பல்துறை வளர்ச்சி, பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திப் பொருட்களுக்கான அதிகரித்து வரும் கேள்வி மற்றும் சர்வதேசச் சந்தைகளில் மேம்பட்ட போட்டித்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையின் ஏற்றுமதித் தொழில்துறைகள் மீள்திறனுடன் செயற்படுவதை எடுத்துக்காட்டுகிறது.

தேங்காய் சார்ந்த உற்பத்திப் பொருட்கள்:

2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியில் தேங்காய் சார்ந்த உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் வருடாந்த அடிப்படையில் 5.63 சதவீதத்தால் அதிகரித்து 830.92 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

நாரை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் 8.07 சதவீத வளர்ச்சியையும், ஓட்டை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் 44.49 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.

தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி 3.61 சதவீதத்தாலும், தேங்காய் மட்டைத் துண்டுகள் (Coconut Husk Chips) 327.03 சதவீதத்தாலும், செயற்படுத்தப்பட்ட கரி (Activated Carbon) 36.99 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன.

இந்த வளர்ச்சி, உலகச் சந்தையில் தொடரும் கேள்வியையும் இத்துறையில் பெறுமதி சேர்க்கும் நடவடிக்கைகள் மேம்பட்டு வருவதையும் பிரதிபலிக்கிறது.

இறப்பர் மற்றும் இறப்பர் சார்ந்த உற்பத்திப் பொருட்கள்..

2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியில் இறப்பர் மற்றும் இறப்பர் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் துறை 674.54 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டியுள்ளது. இது வருடாந்த அடிப்படையில் 5.51 சதவீத வளர்ச்சியாகும்.

காற்றழுத்த இறப்பர் டயர்கள், மீள்பதப்படுத்தப்பட்ட இறப்பர் டயர்கள் மற்றும் ரியூப்கள், கைத்தொழில் மற்றும் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் இறப்பர் கையுறைகள் ஆகியவற்றின் ஏற்றுமதி முறையே 4.15 சதவீதம் மற்றும் 4.36 சதவீதம் அதிகரித்துள்ளன.

இவ்வளர்ச்சி, இலங்கையின் இறப்பர் சார்ந்த உற்பத்தித் துறையின் மீள்திறனையும் போட்டித்தன்மையையும் உலகச் சந்தைகளில் அதன் தொடர்ச்சியான இருப்பையும் எடுத்துக்காட்டுகிறது.

உணவு மற்றும் பானங்கள் துறை..

2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியில் உணவு மற்றும் பானங்கள் துறையின் ஏற்றுமதி வருமானம் 19.99 சதவீதத்தால் அதிகரித்து 462.52 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 33.76 சதவீதத்தால் அதிகரித்து 214.61 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளமை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

இலங்கையின் பெறுமதி சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கான சர்வதேசக் கேள்வி அதிகரித்து வருவதையும், உலகச் சந்தைகளில் இத்துறையை மேலும் விரிவுபடுத்து வதற்கான சாத்தியக் கூறுகளையும் இந்த வளர்ச்சி எடுத்துக்காட்டுகிறது.

மசாலாப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள்..

2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியில் மசாலாப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களின் ஏற்றுமதி வருமானம் 24.09 சதவீதத்தால் அதிகரித்து 355.78 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

மிளகு மற்றும் கறுவா ஆகியவற்றின் ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணமாகும். இக்காலப்பகுதியில் மிளகு ஏற்றுமதி வருமானம் 49.27 சதவீதத்தாலும், கறுவா ஏற்றுமதி வருமானம் 24.47 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன.

மிளகு ஏற்றுமதியின் வளர்ச்சிக்கு இந்தியாவுக்கான ஏற்றுமதி 56.21 சதவீதத்தால் அதிகரித்தமை முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அதேவேளை, மெக்சிகோவுக்கான கறுவா ஏற்றுமதி 68.47 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இந்த முக்கிய மசாலாப் பொருட்களுக்கான சர்வதேசக் கேள்வி தொடர்வதையும், இலங்கையின் உயர்தர மசாலாப் பொருட்கள் ஒட்டுமொத்த ஏற்றுமதி வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்குவதையும் இந்தச் செயல்திறன் எடுத்துக்காட்டுகிறது.

மின் மற்றும் இலத்திரனியல் கூறுகள்..

2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியில் மின் மற்றும் இலத்திரனியல் பொருட்களின் ஏற்றுமதி 57.49 சதவீதத்தால் அதிகரித்து 440.31 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

மின்மாற்றிகள் (Electrical Transformers) ஏற்றுமதி 32.24 சதவீதத்தாலும், காப்பிடப்பட்ட மின்கம்பிகள் மற்றும் கேபிள்கள் 76.8 சதவீதத்தாலும், சுவிட்சுகள், பலகைகள் மற்றும் கட்டுப்பாட்டுப் பேனல்கள் (Switches, Boards and Panels) 28.94 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன.

மேலும், தொலைபேசித் தொகுதிகள், ஒலி/ஒளி உபகரணங்கள் மற்றும் கொதிகலன்கள், பிஸ்டன் இயந்திரங்கள், பம்புகள், வெற்றிடப் பம்புகள் ஆகியவற்றின் ஏற்றுமதி முறையே 273.03 சதவீதம் மற்றும் 497.24 சதவீதம் என்ற மிகப் பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

இந்தத் துறையின் வலுவான செயல்திறன், இலங்கையின் மின் மற்றும் இலத்திரனியல் உற்பத்திக் கைத்தொழிலின் அதிகரித்து வரும் போட்டித்தன்மையையும் ஏற்றுமதிச் சாத்தியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

ICT/BPM ஏற்றுமதிகள்..

மேலும், 2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியில் ICT/BPM ஏற்றுமதி வருமானம் 9.76 சதவீதத்தால் அதிகரித்து 1,145.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது இலங்கையின் டிஜிட்டல் மற்றும் அறிவுசார் பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது. அத்துடன், நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் இத்துறையின் பங்களிப்பு அதிகரித்து வருவதையும், உயர் பெறுமதியைக் கொண்ட சேவைகள் ஏற்றுமதித் துறையாக அதன் முக்கியத்துவம் வளர்ந்து வருவதையும் வெளிப்படுத்துகிறது.

ஆ) வீழ்ச்சியைப் பதிவு செய்த பொருட்கள்

ஆடை மற்றும் துணிநூல் துறை

2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியில் ஆடை மற்றும் துணிநூல் துறையின் ஏற்றுமதி வருமானம் வருடாந்த அடிப்படையில் 6.76 சதவீதத்தால் குறைந்து 3,344.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய முக்கிய ஏற்றுமதிச் சந்தைகளில் நிலவிய மந்தமான கேள்வியே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் பாதிக்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள சந்தைகள் இவை.

இக்காலப்பகுதியில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 5.09 சதவீதத்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி 6.94 சதவீதத்தாலும், ஐக்கிய இராச்சியத்திற்கான ஏற்றுமதி 11.15 சதவீதத்தாலும் குறைந்துள்ளன.

உலகளாவிய சந்தை நிலைமைகளில் நிலவும் சவால்கள் இத்துறையின் ஒட்டுமொத்தச் செயல்திறனைப் பாதித்துள்ளன.

தேயிலை:

2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி வருமானம் வருடாந்த அடிப்படையில் 7.56 சதவீதத்தால் குறைந்து 948.45 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

முக்கிய உற்பத்திப் பிரிவுகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்கான காரணமாகும். பெருந்தொகையாக ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் வருமானம் 10.86 சதவீதத்தாலும், தேயிலைப் பொதிகளின் ஏற்றுமதி வருமானம் 6.07 சதவீதத்தாலும் குறைந்துள்ளன.

கடலுணவுப் பொருட்கள்:

2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியில் கடலுணவுப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 2.89 சதவீதத்தால் குறைந்து 157.19 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

உறைந்த மீன்களின் ஏற்றுமதி 4.05 சதவீதத்தாலும், புதிய மீன்களின் ஏற்றுமதி 5.51 சதவீதத்தாலும் குறைந்தமையே இதற்கான முக்கிய காரணமாகும்.

மாறிவரும் சர்வதேசச் சந்தை நிலைமைகள் மற்றும் கேள்வி முறைகளுக்கு மத்தியில் இலங்கையின் கடலுணவு ஏற்றுமதித் துறை தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டு வருவதை இந்த வீழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையின் முக்கிய ஏற்றுமதிச் சந்தைகளில் ஏற்றுமதிச் செயல்திறன்:

முதல் 15 ஏற்றுமதிச் சந்தைகளில் இந்தியா, சீனா, துருக்கி, பெல்ஜியம் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பல முக்கிய நாடுகள், 2026 ஆகஸ்ட் மாதத்திலும் ஜனவரி – ஆகஸ்ட் ஒட்டுமொத்தக் காலப்பகுதியிலும் வருடாந்த அடிப்படையில் சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

இந்தச் சந்தைகளில் பலவற்றிலும் ஏற்றுமதி அதிகரித்திருப்பது, இலங்கையின் ஏற்றுமதி வளர்ச்சியையும் அந்நாடுகளில் உருவாகி வரும் சந்தை வாய்ப்புகளையும் எடுத்துக்காட்டுகிறது.

அமெரிக்கா:

இலங்கையின் மிகப்பெரிய தனிப்பட்ட ஏற்றுமதிச் சந்தையான அமெரிக்கா, மொத்தப் பொருட்கள் ஏற்றுமதியில் சுமார் 20.7 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளது.

2026 ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வருமானம் 13.43 சதவீதத்தால் குறைந்து 263.24 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியில் அமெரிக்காவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானமும் 2.09 சதவீதத்தால் குறைந்து 1,971.15 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இந்த வீழ்ச்சிகளுக்கு மத்தியிலும், இலங்கையின் முன்னணி ஏற்றுமதிச் சந்தையாக அமெரிக்கா தனது முக்கியத்துவத்தைத் தொடர்ந்து பேணி வருகிறது.

இந்தியா:

ஐக்கிய இராச்சியத்தைப் பின்னுக்குத் தள்ளி, இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக இந்தியா தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.

2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியில் இந்தியாவுக்கான ஏற்றுமதி வருமானம் 10.15 சதவீதத்தால் அதிகரித்து 776.62 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

2026 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவுக்கான ஏற்றுமதி 32.8 சதவீதத்தால் அதிகரித்து 107.26 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இதற்கு மாறாக, 2026 ஆகஸ்ட் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திற்கான ஏற்றுமதி 7.65 சதவீதத்தால் குறைந்து 76.08 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திற்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 10.04 சதவீதத்தால் குறைந்து 582.66 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இந்தியாவுக்கான ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வலுவான வளர்ச்சி, இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதிச் சந்தை என்ற அதன் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் (UAE):

2026 ஆகஸ்ட் மாதத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான ஏற்றுமதி வருமானம் 32.09 சதவீதத்தால் குறைந்து 21.63 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானமும் 9.13 சதவீதத்தால் குறைந்து 198.40 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இந்தத் தற்காலிக வீழ்ச்சிக்கு மத்தியிலும், இலங்கையின் முக்கிய ஏற்றுமதிச் சந்தைகளில் ஒன்றாக ஐக்கிய அரபு இராச்சியம் தொடர்ந்து விளங்குகிறது.

துருக்கி:

2026 ஆகஸ்ட் மாதத்தில் துருக்கிக்கான ஏற்றுமதி 141.20 சதவீதம் என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்து 34.66 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியில் துருக்கிக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானமும் 99.95 சதவீதத்தால் அதிகரித்து 187.53 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

துருக்கிச் சந்தையில் இலங்கைப் பொருட்களின் சந்தைப் பங்களிப்பு அதிகரித்து வருவதையும், அவற்றுக்கான கேள்வி வளர்ந்து வருவதையும் இந்த வலுவான வளர்ச்சி பிரதிபலிக்கிறது.

குறிப்பாக, துருக்கிக்கான தேயிலை ஏற்றுமதி 2026 ஆகஸ்ட் மாதத்தில் 165.48 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியில் துருக்கிக்கான ஒட்டுமொத்த தேயிலை ஏற்றுமதியும் வருடாந்த அடிப்படையில் 136.33 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இந்த அபரிமிதமான வளர்ச்சி, துருக்கிச் சந்தையில் இலங்கைத் தேயிலைக்கான கேள்வி வேகமாக அதிகரித்து வருவதையும், அச்சந்தையில் மேலும் விரிவாக்கம் செய்வதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் இருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

சீனா:

2026 ஆகஸ்ட் மாதத்தில் சீனாவுக்கான ஏற்றுமதி 29.08 சதவீதத்தால் அதிகரித்து 26.19 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 17.39 சதவீதத்தால் அதிகரித்து 208.92 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

செயற்படுத்தப்பட்ட கரி (Activated Carbon) உள்ளிட்ட முக்கிய ஏற்றுமதிப் பொருட்களுக்கான அதிகரித்த ஏற்றுமதியே இந்த வளர்ச்சிக்கு ஆதரவாக அமைந்துள்ளது.

செயற்படுத்தப்பட்ட கரியின் ஏற்றுமதி 2026 ஆகஸ்ட் மாதத்தில் 59.9 சதவீதத்தாலும், 2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியில் 81.25 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது.

அட்டவணை 2, 2025 மற்றும் 2026 ஆகஸ்ட் மாதங்களுக்கான முதல் 15 ஏற்றுமதிச் சந்தைகளின் பொருட்கள் ஏற்றுமதிச் செயல்திறனையும், 2025 மற்றும் 2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதிகளுக்கான ஒட்டுமொத்தப் புள்ளிவிபரங்களையும் ஒப்பிட்டுக் காட்டுகிறது.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பங்காளி நாடுகளுக்கான ஏற்றுமதி (இந்தியா மற்றும் பாகிஸ்தான்)

அ) 2026 ஆகஸ்ட் மாதம்

2026 ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையின் மொத்தப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கான ஏற்றுமதி 9.02 சதவீதப் பங்கைக் கொண்டிருந்தது.

இவ்விரு நாடுகளுக்கான மொத்த ஏற்றுமதி வருமானம் 114.57 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 30.13 சதவீத அதிகரிப்பாகும்.

இந்தியாவுக்கான ஏற்றுமதி 32.8 சதவீதத்தால் அதிகரித்து 107.26 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. மிளகு மற்றும் கால்நடைத் தீவனங்களின் ஏற்றுமதி அதிகரித்தமை இதற்கு முக்கிய காரணமாகும்.

அதேவேளை, பாகிஸ்தானுக்கான ஏற்றுமதி 0.55 சதவீதம் என்ற சிறிய வளர்ச்சியுடன் 7.31 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

ஆ) 2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதி

2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியில் இந்தியாவுக்கான ஏற்றுமதி வருமானம் வருடாந்த அடிப்படையில் 10.15 சதவீதத்தால் அதிகரித்து 776.62 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

கொதிகலன்கள், பிஸ்டன் இயந்திரங்கள், பம்புகள் மற்றும் வெற்றிடப் பம்புகள், தேங்காய் ஓட்டுக் கரி, கால்நடைத் தீவனம் மற்றும் அடிப்படை உலோகப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்தமை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

பாகிஸ்தானுக்கான ஏற்றுமதியும் இக்காலப்பகுதியில் 26.16 சதவீதத்தால் அதிகரித்து 62.80 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.

ஏனைய துணிநூல் உற்பத்திப் பொருட்கள், உலர்ந்த தேங்காய் (Desiccated Coconut) மற்றும் கல்லினால் செய்யப்பட்ட ஏனைய பொருட்கள் ஆகியவற்றுக்கான ஏற்றுமதி அதிகரித்தமை, பாகிஸ்தானியச் சந்தையில் இலங்கைப் பொருட்களுக்கான கேள்வி அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.

பிராந்திய ரீதியான இலங்கையின் ஏற்றுமதிச் செயல்திறன்

இலங்கையின் மொத்தப் பொருட்கள் ஏற்றுமதியில் சுமார் 22.2 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கான (EU) ஏற்றுமதி, 2026 ஆகஸ்ட் மாதத்தில் கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.1 சதவீதம் என்ற சிறிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

எனினும், 2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் வருடாந்த அடிப்படையில் 0.42 சதவீதத்தால் குறைந்துள்ளது.

மாதாந்த மற்றும் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானங்களில் ஏற்பட்டுள்ள இந்தச் சிறிய மாற்றங்கள், இக்காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியச் சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிச் செயல்திறன் பெருமளவில் நிலையாக இருந்ததை எடுத்துக்காட்டுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் ஐந்து முக்கிய ஏற்றுமதிச் சந்தைகளில் இத்தாலி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

2026 ஜனவரி – ஆகஸ்ட் காலப்பகுதியில் இத்தாலிக்கான ஏற்றுமதி வருமானம் 451.12 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 0.89 சதவீத அதிகரிப்பாகும்.

ஜேர்மனிக்கான ஏற்றுமதி 450.03 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது 5.76 சதவீத வீழ்ச்சியாகும்.

நெதர்லாந்துக்கான ஏற்றுமதி 5.72 சதவீதத்தால் குறைந்து 287.75 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

பிரான்ஸுக்கான ஏற்றுமதியும் 7.49 சதவீதத்தால் குறைந்து 174.01 மில்லியன் டொலர்களாக உள்ளது.

இதற்கு மாறாக, பெல்ஜியத்திற்கான ஏற்றுமதி 2.83 சதவீதத்தால் அதிகரித்து 170.26 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

ஆதாரங்கள்:

  • இலங்கை மத்திய வங்கி (CBSL)
  • இலங்கை சுங்கத் திணைக்களம்

2026 ஆகஸ்ட் மாதத்திற்கான சேவைகள், இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள், பெற்றோலியப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி வருமானங்கள் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் (EDB) மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *