கிரிக்கெட்டில் மது அருந்தும் கலாச்சாரம்

கிரிக்கெட்டில் மது அருந்தும் கலாச்சாரம்

~ ரெக்ஸ் கிளெமென்டைன்

போத்தம் போன்ற தனித்துவமான ஆளுமைகளால் கிரிக்கெட் விளையாட்டு புகழ்பெற்றது. ஆனால், விளையாட்டு அறிவியல் வளர்ச்சி, அந்த விளையாட்டின் சில சுவாரசியமான அம்சங்களை இல்லாமல் செய்துவிட்டது.

புகழ்பெற்ற முன்னாள் இலங்கை (அன்றைய சிலோன்) அணித்தலைவர் மகாதேவன் சதாசிவம் உயிருடன் இருந்திருந்தால், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மத்தியில் நிலவும் மதுப்பழக்கக் கலாசாரத்தைப் பற்றிய கவலைகளைத் தொடர்ந்து, தற்செயலான மதுப் பரிசோதனைகளை அறிமுகப்படுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்ற செய்தியைக் கேட்டு அவர் தனது கல்லறையிலேயே புரண்டிருப்பார்.

சதாவின் துடுப்பாட்டச் சாதனைகள் கிரிக்கெட் உலகில் இன்றும் புகழ்பெற்றவை. அதேபோன்று மதுபான விடுதிகளில் அவர் நிகழ்த்திய சாகசங்களைப் பற்றிய கதைகளும் பிரபலமானவை. கிரிக்கெட் உலகின் மிகவும் வண்ணமயமான ஆளுமைகளில் ஒருவரான அவரை நினைவுகூரும் வகையில், கொழும்பு தமிழ் யூனியன் கழகம் தனது மதுபான விடுதிக்கு அவரது பெயரைச் சூட்டியிருப்பது மிகவும் பொருத்தமானது.

கிரிக்கெட்டுக்கும் மதுபானத்துக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. சில வேளைகளில் ஒன்றிரண்டு குவளைகளுடன் அது முடிந்துவிடுவதில்லை. பல குவளைகளும் காலியாகும். அந்தக் கதைகள் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்துள்ளன.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக அண்மையில் தெரிவுசெய்யப்பட்ட டேவிட் பூன், ஆஷஸ் தொடருக்காக சிட்னியிலிருந்து லண்டனுக்குச் சென்ற விமானப் பயணத்தின்போது 52 பியர் டின்களை அருந்தியதாகப் புகழ்பெற்றவர்.

இது குறித்து ஊடகவியலாளர்கள் முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் இயன் சேப்பலிடம் கருத்துக் கேட்டபோது, அவர் அதனால் பெரிதாக ஆச்சரியப்படவில்லை.

“எனது காலத்தில் லண்டனுக்கும் சிட்னிக்கும் இடையிலான விமானப் பயணத்தில் 52 பியர்களை அருந்தியிருந்தால், உங்களைப் பெரும்பாலும் மதுவைத் தொடாதவர் என்றே வகைப்படுத்தியிருப்பார்கள்” என்றார் அவர்.

சேப்பலின் அணித்தோழர்களான ராட் மார்ஷ், டக் வோல்டர்ஸ், டென்னிஸ் லில்லி ஆகியோரும் மதுபான விடுதிகளுக்குப் பரிச்சயமானவர்களே. ஆட்டம் முடிந்து மைதானத்தில் ஸ்டம்புகள் அகற்றப்பட்டதும், பல சந்தர்ப்பங்களில் மற்றொரு சுற்று ஆரம்பமாகிவிடும்.

பின்னர் ஷேன் வோர்னும் அந்தப் பாரம்பரியத்தை அதே உற்சாகத்துடன் தொடர்ந்தார். துடுப்பாட்ட வீரர்களைத் தனது சுழற்பந்துவீச்சால் திணறடிப்பதில் காட்டிய ஆர்வத்துக்கு நிகராக, மதுபானத்திலும் அவருக்கு ஆர்வம் இருந்தது.

தன்னைப் பற்றி அவர் ஒருமுறை எளிமையாகக் கூறியிருந்தார்:

“எனக்கு உரத்த இசை பிடிக்கும். நான் புகைபிடித்தேன், மது அருந்தினேன். அவ்வப்போது லெக் ஸ்பின் பந்துவீச்சும் செய்தேன். அதற்காக எனக்கு எந்த வருத்தமும் இல்லை.” இது அவர் கூறியது.

இயன் போத்தத்தின் மதுபானக் கதைகளை மட்டும் தொகுத்தாலே, துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றிய புத்தகத்துக்கு நிகரான தடிப்புடைய ஒரு நூலை எழுதிவிடலாம்.

இங்கிலாந்து அணியின் புகழ்பெற்ற 12ஆவது வீரரான கிளாட்ஸ்டோன் ஸ்மால் அண்மையில் நினைவுகூர்ந்த ஒரு சம்பவம் இதற்கு நல்ல உதாரணம். மதிய உணவு அல்லது தேநீர் இடைவேளைகளில் வீரர்களுக்கு வழங்கப்படும் பானங்கள் தொடர்பாக போத்தம் விடுத்த அறிவுறுத்தல் மிகவும் தெளிவானதாம். போத்தலில் நிறைய பியர் இருக்க வேண்டும்; அதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு கலந்த பானத்தையும் சேர்த்துத் தர வேண்டும் என்பதே அவரது விருப்பம்.

2005ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பின்னரான கொண்டாட்டங்களும் கிரிக்கெட் உலகின் மறக்க முடியாத கதைகளில் ஒன்றாகின. அன்றைய கொண்டாட்டங்களில் அன்ட்ரூ பிளின்டொஃப் முன்னணியில் இருந்தார்.

வெற்றிக் கொண்டாட்ட ஊர்வலம் 10 டவுனிங் வீதியில் உள்ள பிரிட்டிஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தைச் சென்றடைந்தபோது, இங்கிலாந்து அணியின் சில வீரர்கள் ஆடுகளத்தில் துடுப்பெடுத்தாடியபோது இருந்த உறுதியுடன் நிற்க முடியாத நிலையில் இருந்தனர்.

இலங்கை கிரிக்கெட்டுக்கும் அதன் சொந்த மதுபானப் பாரம்பரியங்கள் இருந்தன.

இலங்கையின் முதலாவது டெஸ்ட் அணித்தலைவரான பண்டுல வர்ணபுர, தனது ஹோட்டல் அறையில் அடிக்கடி விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்து வீரர்களை உபசரிப்பதில் தாராள மனப்பான்மை கொண்டிருந்தார்.

இவை பெரும்பாலும் அணிக்குள் ஒற்றுமையையும் நெருக்கத்தையும் வளர்க்கும் சந்தர்ப்பங்களாக அமைந்தன. மது அருந்தாத வீரர்களும் அவற்றில் கலந்துகொண்டனர்.

டி.எஸ். டி சில்வா அங்கு வந்தால், அவர் விரும்பும் குளிர்பானங்கள் இருப்பதை அணித்தலைவர் உறுதிப்படுத்திக்கொள்வார்.

அணியின் ஓய்வறையில் அனைவரும் ஒரே திசையில் பயணிப்பது அவசியம் என்பதை வர்ணபுர நன்கு புரிந்துகொண்டிருந்தார். அவருக்கு ஆதரவாக எந்த எல்லைக்கும் செல்லத் தாங்கள் தயாராக இருந்ததாக அன்றைய வீரர்கள் இன்றும் நினைவு கூருகின்றனர்.

அந்தச் சந்திப்புகள் அணிக்குள் வலுவான பிணைப்பை உருவாக்க உதவின. அதேவேளை, எங்கு எல்லைக் கோடு வரையப்பட வேண்டும் என்பதையும் வர்ணபுர அறிந்திருந்தார்.

பாடசாலை மாணவர்கள் தேசிய அணிக்குள் இடம்பெறத் தொடங்கியபோது, இத்தகைய விருந்துபசாரங்களில் இளம் வீரர்கள் கலந்துகொள்வதற்கு அவர் திட்டவட்டமாகத் தடை விதித்தார்.

அனுர தென்னகோன், ரஞ்சன் மதுகல்லே உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்களுடன் வர்ணபுர சிலோன் டுபாக்கோ நிறுவனத்தில் பணியாற்றியவர். அந்தக் காலத்தில் சிகரெட்டுகளுக்கும் ஒருபோதும் தட்டுப்பாடு ஏற்படாமல் அவர் பார்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அவை முற்றிலும் வேறுபட்ட காலங்கள்.

அன்றைய காலகட்டத்தில் புகையிலை மற்றும் மதுபான நிறுவனங்களின் வர்த்தகப் பெயர்கள் கிரிக்கெட் விளையாட்டுடன் பின்னிப்பிணைந்திருந்தன.

பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் போட்டிகள், வி.பி. தொடர், ரோத்மன்ஸ் தொடர் போன்றவை கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவையாக இருந்தன. 1996ஆம் ஆண்டு இலங்கை வெற்றிபெற்ற உலகக் கிண்ணப் போட்டிக்கும் வில்ஸ் (Wills) நிறுவனத்தின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

காலப்போக்கில், இத்தகைய விளம்பரங்களும் அனுசரணைகளும் இளைய தலைமுறையினர் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்த கவலைகள் அதிகரித்தன. இதனால் விளம்பரங்களுக்கும் அனுசரணைகளுக்கும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. கிரிக்கெட்டும் காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்படியிருக்கும் போது, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இப்போது ஏன் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் தீர்மானித்துள்ளது?

அதற்குப் பின்னால் நியாயமான காரணங்கள் இருப்பதாகத் தெரிகிறது. ஒரு காலத்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பதாகக் கருதப்பட்ட மதுபான விருந்துகள், தற்போது அதிகாரிகளுக்குக் கவலையளிக்கும் அளவுக்குச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கு எதிராக அண்மையில் காலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது, ஒரே நாளில் ஏழு போத்தல் சிங்கிள் மால்ட் விஸ்கி அருந்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, வேகப்பந்துவீச்சுக் குழுவில் உள்ள வீரர்கள் சிலர் புகைபிடிப்பது குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இவை முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய குற்றச்சாட்டுகளாகும். எனினும், கிரிக்கெட் நிர்வாகம் ஏன் கட்டுப்பாடுகளை இறுக்கத் தீர்மானித்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள இந்தத் தகவல்கள் உதவுகின்றன.

வீரர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்தகுதி தொடர்பான கவலைகளையும் கருத்திற்கொண்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனம், இனிமேல் வெறுமனே அறிவுரை கூறுவதால் மட்டும் நிலைமையைச் சீர்செய்ய முடியாது எனத் தீர்மானித்துள்ளது.

வீரர்கள் என்ன உண்கிறார்கள், எவ்வாறு பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள், தங்களது அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பன நெருக்கமாகக் கண்காணிக்கப்படவுள்ளன.

தற்செயலான மதுப் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், விதிமுறைகளைப் பின்பற்றத் தவறும் வீரர்கள் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

இதில் உள்ள வேறுபாடு மிகவும் தெளிவானது.

ஒரு குவளை மதுபானத்தை அருந்தி மகிழ்வதற்கும், மதுப்பழக்கத்தால் போட்டிக்கான தயார்நிலை பாதிக்கப்படுவதற்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.

நாட்டின் சார்பில் விளையாடுவதற்காக உங்களுக்கு ஊதியம் வழங்கப்படும்போது, மிகச் சிறந்த உடல் மற்றும் மனநிலையில் போட்டிக்குத் தயாராக இருப்பதும் உங்கள் பணியின் ஓர் அங்கமாகும்.

விளையாட்டு அறிவியல் இந்தச் சமன்பாட்டையே மாற்றிவிட்டது.

இன்றைய கிரிக்கெட் வீரர்களின் தயார்படுத்தல் என்பது மைதானத்தைச் சில சுற்றுகள் ஓடுவதிலும், வலைப்பயிற்சியில் ஈடுபடுவதிலும் மட்டும் முடிந்துவிடுவதில்லை.

உணவுப் பழக்கம், உடல் மீட்சி, தூக்கம், உடற்தகுதி ஆகிய அனைத்துக்கும் இப்போது மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.

போட்டியில் வெற்றியைத் தீர்மானிக்கும் வித்தியாசங்கள் மிகச் சிறியவையாக இருக்கின்றன. எதிரணியினர் நீங்கள் விட்டுக்கொடுக்கும் ஒவ்வொரு சிறிய வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளத் தயாராக இருப்பார்கள்.

நீண்டகாலம் சர்வதேச கிரிக்கெட்டின் உச்சத்தில் நிலைத்திருப்பதற்குத் தேவையான ஒழுக்கத்துக்கு விராட் கோலி ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறார்.

திறமை உங்களுக்கு வாய்ப்பின் கதவைத் திறந்துவிடலாம். ஆனால், நல்ல பழக்கவழக்கங்களும் கட்டுப்பாடும் அந்தக் கதவு தொடர்ந்து திறந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய நடவடிக்கைகளையும் இந்தப் பின்னணியிலேயே பார்க்க வேண்டும்.

வீரர்கள் உடற்தகுதியுடன் இருப்பதையும், போட்டிகளில் பங்கேற்கத் தயாராக இருப்பதையும், தொடர்ச்சியாகச் சிறப்பாகச் செயற்படுவதையும் உறுதிப்படுத்துவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும்.

அதேவேளை, நீண்டகாலமாகத் தளர்வடைந்து காணப்படும் கிரிக்கெட் கட்டமைப்பில் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் மீண்டும் நிலைநாட்டுவதும் இதன் நோக்கமாகும்.

முன்னணி வீரர்கள் காயங்கள் காரணமாகத் தொடர்ந்து அணியிலிருந்து விலகியிருப்பது ஏற்கெனவே இலங்கை அணிக்குப் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கிண்ணப் போட்டிகளிலும்கூட இதன் பாதிப்புகளை அணி எதிர்கொண்டுள்ளது.

காயங்கள் ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், உடற்தகுதியைப் பேணுவதும் முறையான தயார்படுத்தல்களில் ஈடுபடுவதும் வீரர்களின் பொறுப்பாகும். அதற்குப் பொறுப்பானவர்களும் தமது கடமைகளுக்குப் பதிலளிக்க வேண்டியவர்களாக இருக்க வேண்டும்.

தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்குரிய தரநிலைகள் நீண்டகாலமாகப் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தக்கூடியவையாகவும், விருப்பத்துக்கேற்ப மாற்றிக்கொள்ளக்கூடியவையாகவும் கருதப்பட்டு வந்துள்ளன.

தற்போதைய நிர்வாகமாவது அந்த நிலைமையைச் சீர்செய்ய முயற்சிக்கிறது.

1980களிலும் 1990களிலும் விளையாடிய வீரர்களின் தனித்துவமான ஆளுமைகளையும் அவர்களது சுவாரசியமான பழக்கவழக்கங்களையும் நாம் நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை.

மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏராளமான மறக்க முடியாத நினைவுகளை வழங்கியுள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் ஒன்றுகூடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களைப் பற்றிய கதைகள் நிச்சயமாகப் புன்னகையை ஏற்படுத்தும்.

ஆனால், கிரிக்கெட் விளையாட்டு இப்போது வெகுவாக மாறிவிட்டது.

போட்டிகள் நிறைந்த அட்டவணை, மூன்று வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், அதிகரித்துவரும் உடற்தகுதித் தரநிலைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உழைப்பதற்கும், அளவுக்கு அதிகமாகக் களியாட்டங்களில் ஈடுபடுவதற்கும் இன்றைய வீரர்களுக்கு அதிக இடமில்லை.

சிதத் வெத்தமுனி, கேரி கேர்ஸ்டன், ரொஷான் மகாநாம ஆகிய மூவரும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கக்கூடிய முக்கியமான ஆதரவாளர்களாக உள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் வீரர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களையும் சவால்களையும் புரிந்துகொள்ளக்கூடியவர்கள் அவர்கள். வீரர்களின் குறைகளையும் முறைப்பாடுகளையும் செவிமடுக்கவும் அவர்கள் தயாராக இருப்பார்கள்.

ஆனால், அதேவேளை, வீரர்கள் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்குரிய பொறுப்புணர்வுடனும் ஒழுக்கத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

(நன்றி: தி ஐலண்ட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *