— அழகு குணசீலன் —
சித்திரைப் புத்தாண்டு தமிழ் புத்தாண்டா? என்ற கேள்வியை ஒரு புறம் ஒதுக்கினால், இலங்கையின் இருபெரும் தேசிய இனங்களும் இந்து – பௌத்த மத சாயல்களுடன் கொண்டாடுகின்ற, பஞ்சாங்க நாட்காட்டி அட்டவணையை அடிப்படையாகக் கொண்டது சித்திரை வருடப்பிறப்பு. இது தமிழர் புத்தாண்டா? என்பதற்கு அப்பால் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து கொண்டாடுகின்ற ஒரு தேசிய புத்தாண்டு விழா. இதனால் இன்றைய அரசியல் முரண்பாடுகளை கொண்ட பிரிவினை- உரிமை கோசங்களை கடந்து இலங்கை சமூகங்களின் வரலாற்று வாழ்வியல்.
ஆகக்குறைந்த பட்சம் வேறுபாடுகளுக்கு மத்தியிலும் ஒரு கலாச்சார உறவுக்கு இது பாலமிடுகிறது. கடந்த பல நூற்றாண்டுகளாக பண்டைய ஈழம் முதல் பழைமை வாய்ந்த இந்த பாலத்தை தகர்த்தவர்கள் யார்? என்று ‘சூத்திரதாரியை’ தேடவேண்டியதில்லை. அவர்கள் நான்கு திசைகளிலும் நிறைந்து இருக்கிறார்கள். இன்றைய மொழியாடலில் அதன் சூத்திரதாரிகள் யார்? என்பதை தேடுவது இந்த பதிவின் நோக்கமும் அல்ல. ஆனாலும் இந்த வரலாற்று தவறுக்கு பொறுப்பானவர்கள் யாரும் ‘நாங்கள் இல்லை’ என இதில் இருந்து தப்பிக்கொள்ளமுடியாது என்பது வரலாற்றை திரும்பிப் பார்க்கும் ஒரு புத்தாண்டு செய்தியாக பேசப்படலாம்.
புதிய ஆட்சியாளர்களான ஜே.வி.பி/ என்.பி.பி. ஆட்சியின் குடியரசுத்தலைவர் அநுரகுமார திசாநாயக்க இலங்கையின் சகல சமூகங்களுக்குமான ஒரு இலங்கையர் தினத்தை கடந்த ஒக்டோபர் மாதம் கொண்டாட இருப்பதாக முன்னறிவிப்பு செய்திருந்தார். ஆனால் அது பின்னர் டிசம்பர் மாதத்திற்கு திகதியிடப்பட்டது. அந்த அறிவிப்பையும் தித்துவா அள்ளிச்சென்றுவிட்ட நிலையிலும் இன்றைய இலங்கையின் இக்கட்டான சமூக, பொருளாதார, அரசியல் சூழலில் சித்திரைப் புத்தாண்டு பிறந்துள்ளது.
இத்தாலியின் ‘வெனிஸ்’ என்றும், இலங்கையின் ‘பெந்தோட்ட’ என்றும் இயற்கை புவியியல் அமைவிடத்தை கொண்டு மட்டக்களப்பின் இயற்கை அழகு பேசப்படுகிறது. வாவிகளாலும், கால்வாய்களாலும் சூழப்பட்டுள்ள ‘வெனிஸ் ‘ சுற்றுலாப்பயணிகளை கவரும் ‘காந்தம்’. அதேபோன்று இந்து சமுத்திரத்திற்கும், வாவிக்கும் இடையே இடம் பிடித்துள்ள ‘பெந்தோட்டை’ மட்டக்களப்பின் வங்காளக்கடலுக்கும், வாவிக்கும் இடையே இடம்பிடித்துள்ள ‘நாவலடி’ யின் இயற்கை புவியியல் அமைப்பினை நினைவு கூரும். இந்த அமைவிட இயற்கை அழகைக்கொண்ட ‘மட்டக்களப்பு பெந்தோட்டைகள்’ பல இங்கு உண்டு. ஆனால் சுற்றுலாவுக்கு பெந்தோட்டைக்கு இருக்கின்ற ஈர்ப்பு நாவலடிக்கு இல்லை என்பது கசப்பான உண்மை.
இந்த மட்டக்களப்பு மண்ணின் கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள், மக்கள் வாழ்வியல், ஆலயத்திருவிழாக்கள், சிறுதெய்வ வழிபாட்டு சடங்குகள் – சம்பிரதாயங்கள், கொண்டாட்டங்கள், அவற்றிற்கே உரித்தான தனித்துவமான உணவு பழக்கவழக்கங்கள், மச்சம் விடுதல்/ கூட்டுதல், மானிடவியல் நம்பிக்கைகள், மட்டக்களப்பு மாந்திரீகம்……, பாயோடு ஒட்டுதல்… போன்ற இன்னோரன்ன…. இன்னோரன்ன தனித்துவங்களை பட்டியல் இட்டு அடக்குவது அவ்வளவு இலகுவானதல்ல. இவை அனைத்தும் எங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் புகுந்து விளையாடும் அழகு மட்டக்களப்பின் தனித்துவம். யாரும் பிரதேசவாதம் என்று கச்சை கட்டவேண்டாம். ஒருவன் தனது ‘தாயின்’அருமை, பெருமைகளை பேசும் உரிமை இல்லையென்றால், அவன் அதற்காக போராடுவது வரலாற்று நியதி.
மட்டக்களப்பில் தைப்பொங்கல் தமிழ் புத்தாண்டு, சித்திரைப் புத்தாண்டு கொண்டங்களுக்கும், அந்த மக்களின் பொருளாதார வாழ்வியலுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இவை பெரிதும் இயற்கை சார்ந்து விவசாயம், கடல் தொழிலோடு பெரிதும் பிணைக்கப்பட்டவை. இயற்கையும், காலநிலையும் இதில் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன. ஒரு பகுதி பொருளாதார வாழ்வியல் காலநிலையினால் நிர்ணயிக்கப்படுகின்ற உலக பொது வழக்கிற்கு இது மாறுபட்டதல்ல என்றாலும் வேறுபாடுகளையும் கொண்டுள்ளது.
பொதுவாக தைப்பொங்கல் புத்தரிசி கொண்டு பொங்கல் செய்யப்படுகிறது என்று கூறப்பட்டாலும் அது நீண்டகாலமாக மட்டக்களப்பில் காணாமல் போன ஒன்று. சித்திரைப் புத்தாண்டு காலமே புத்தரிசிக்காலமாக இருக்கிறது. ‘புதிர் உண்ணுதல்’ என்ற வழக்கம் மட்டக்களப்பு பிரதேசத்தில் தற்போது தைப்பொங்கலுக்கு பின்னரும், சித்திரைப்புத்தாண்டுக்கு முன்னரும் நிகழும் ஒரு சடங்காக மாறிவிட்டது. மேலும் சித்திரைப் புத்தாண்டு காலமே நெல் அறுவடையைத் தொடர்ந்து, பொருளாதார பலமான காலமாக இருக்கிறது. இது புத்தாண்டுக்கான கொண்டாட்ட செலவுகளை எதிர்கொள்ள வசதியாக அமைகிறது.
மட்டக்களப்பில் பாரம்பரியமாக சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் கிராமங்களில் எட்டு நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். புத்தாண்டு தினத்தில் பஞ்சாங்கம் கூறுகின்ற ‘புண்ணிய காலத்தில்’ ‘கைவிஷேடம்’ செய்யப்படும். குடும்பத்தினர்களுக்கு இடையே வெற்றிலையில் வசதிக்கேற்ப பணம், நகை வைத்து ஒருவருக்கு ஒருவர் கொடுத்து பரிமாறும் நிகழ்வு இது. அதற்கு பின்னர் எட்டு நாட்கள் கழித்தே பொதுவான வெளிக்கொடுக்கல்வாங்கல் இடம்பெறும். இந்தக் காலத்தில் கடைகளில், வியாபாரிகளிடம் பொருட்கள் கொள்வனவு செய்வது தவிர்க்கப்படும். அப்படி செய்தால் இந்த ஆண்டு இலாபகரமானதாக அமையாது அல்லது இலாபத்தை விடவும், நட்டம் கூடுதலாக இருக்கும் என்ற மரபுவழி மானிடவியல் மக்கள் நம்பிக்கையாக இது உள்ளது.
புத்தாண்டுக்கு மதரீதியாக கோயிலுக்கு சென்று வழிபடுதல், வீட்டு வாசலில் பொங்கி உள்வீட்டில் (சாமியறை) பொங்கல், வாழைப்பழம், புத்தாண்டு பலகாரங்கள் வைத்து வணங்கப்படும். ஆனால் இது மதரீதியான கொண்டாட்டம் அல்ல. மட்டக்களப்பில் ஆடுவெட்டாமல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்படுவது மரபல்ல. அயலவர்கள், குடும்பங்கள் சேர்ந்து ஆடுவெட்டி பங்கு போட்டு இறைச்சியை பிரித்து எடுப்பது புத்தாண்டு வழக்கம்.
இந்த இறைச்சி விருந்தினர் வருகைதரும் காலமான எட்டு நாட்களுக்கும் போதுமானதாக இருக்காது. இதனால் புத்தாண்டுக்கு சில தினங்களுக்கு முன்னர் ஏறாவூர், காத்தான்குடி, கல்முனை… போன்ற பெரிய சந்தைகளுக்கு சென்று நீண்ட நாட்கள் பயன்படுத்தக் கூடிய உப்பு போட்ட கடற் கருவாடு, உருளைக்கிழங்கு, பருப்பு, சுரக்காய், மாசிக்கருவாடு…. போன்ற பொருட்களை கொள்வனவு செய்து சேகரிப்பது கிராமங்களில் வழக்கம். பொதுவாக விவசாயக் கிராமங்களில் குளத்துக்கருவாடுகள், குளத்து மீன்கள், மட்டக்களப்பு வாவி மீன்களே பழக்கப்பட்டவை. வாய்ப்பு கிடைத்தால் காயவைத்த மான், மரை இறைச்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது.
புத்தாண்டு கொள்வனவை முடித்து மட்டக்களப்பு நகரில் இருந்து திரும்பும் போது அருகில் உள்ள தவறணையில் இரண்டு போத்தல்கள் வாங்கிக்கொண்டு வராவிட்டால் அது வருஷக்கொண்டாட்டம் இல்லை. இரண்டு போத்தல்கள் என்பது வயது வந்த ஒருவர் இரண்டு சாராய போத்தல்கள் தான் ஒரே தடவையில் சட்டரீதியாக கொண்டு வரமுடியும். மட்டக்களப்பு அரசடிச்சந்திக்கு வடக்கே பார்வீதி – புகையிரத வீதி சந்தியில் வலதுகரையில் ஒரு சாராயத்தவறணை நினைவுக்கு வருகிறது, ஆரைப்பற்றை, எருவில், பெரியநீலாவணை, செங்கலடியிலும் தவறணைகள் இருந்தன.
ஆட்டு இரத்தம் சுண்டல், இறைச்சி கருக்கல், ஆட்டு இறைச்சி குழம்பு, வழுதிலங்காயும் ஆட்டுக்குடலும் ஒரு பால்கறி, மரவள்ளி கிழங்கு சேர்த்து ஆட்டு எலும்பு சொதி…. ஆடு…ஆடு.. என எல்லாம் ஆடுதான். இவற்றோடு அந்த பானமும் சேர்ந்தால் இனி என்ன ….ஆட்டமும், பாட்டும் தான். இப்போது இவைகள் படிப்படியாக மறைந்து பரோட்டாவும் பன்றிக்கறியுமாகப் போய்ச்சி.
மண்டூர்க்கீரை, பழுகாமம் வழுதிலங்காய், களுதாவளை வெற்றிலை, வாகரை முருங்கைக்காய், தேன், நண்டு, உன்னிச்சை கருவாடு, படுவான்கரை கட்டித்தயிர், கல்லாற்று கூனி, களுவாஞ்சிக்குடி பனங்கிழங்கு… சித்திரைப் புத்தாண்டை கொண்டாட தேடித்தேடி வாங்கிய மட்டக்களப்பு கிராமிய வாழ்வியல் அழகியல் காட்சிகள் அவை.
என்று எம்மிடம் எஞ்சியிருப்பது பெருமூச்சு மட்டுமே.
அன்று கணையான் கருவாட்டை இடித்து சமைத்தோம், உழுவமீன் சுரண்டலுக்கு நற்சீரகம் சேர்த்தோம், மீன் பொரியலுக்கு சின்ன வெங்காயம் தேடினோம்…..! இன்று…?
அந்த கொத்து, இந்த கொத்து என்று அது வேறு. சவளில் அள்ளி கல்லையில் படைக்கிறது போன்ற கலாச்சாரமாய்ச்சி. ஒப்பீட்டளவில் சிங்கள மக்கள் மத்தியில் அவர்களின் பாரம்பரிய உணவுக் கலாச்சாரம், பலகார வகைகள் இன்னும் வாழ்கின்றன. தென்னிலங்கையில் வளர்ந்துள்ள உல்லாச பயணம் இதற்கு மேலும் வாய்ப்பளிக்கிறது. உரலில் இடித்து, அம்மியில் அரைத்து, வாழை இலைக்குள் சமைத்து உல்லாசப் பயணிகளுக்கு சிங்கள பெண்கள் வகுப்பு எடுக்கிறார்கள். தமிழ்பிரதேச உல்லாச விடுதிகள் சீன, இந்திய, மேற்குலக பாணியிலான உணவுகளால் நிரம்பியிருக்கின்றன.
புத்தாண்டு காலத்தில் பலகாரங்கள் விதம்விதமானவை. சீனி, சர்க்கரை, பயிறு, எள்ளு, முந்திரிப் பருப்பு…. போன்றவற்றை கொண்டு இந்த பலகாரங்கள் செய்யப்படும். இது போன்று பல்வகையான முறுக்குகள், மேலும் தொதல் / துதல் இவை எல்லாம் வருடப் பிறப்பிற்கு சில தினங்களுக்கு முன்னர் அல்லது அந்த எட்டு நாட்கள் காலத்தில் செய்யப்படும். இவை அனைத்தும் அயலவர்கள், உறவினர்களுக்கு இடையே வீடுவீடாகச்சென்று பகிரப்படும். அது போன்று மறுதரப்பில் இருந்தும் இவை கிடைக்கும். பிள்ளைகள்/ இளையோர் கூட்டம், கூட்டமாக நண்பர்கள் வீடுகளுக்கு சென்று இவற்றை உண்டு மகிழ்வார்கள்.
மட்டக்களப்பு சித்திரை புத்தாண்டில் மதவழிபாட்டை விடவும் விளையாட்டுகள் முக்கியமானவை. ஊஞ்சல் ஆடுதல், பிள்ளையார் கட்டை, உத்துக்கம்பு, தட்டுக்கோடு/ கிளித்தட்டு/ தாய்ச்சி…, எவடம் எவடம் புங்கம் புளியடி கண்கட்டு வித்தை, நிலத்தில் படம்கீறி நொண்டியடித்தல் போன்றவை முக்கியமானவை. நெல் வேளாண்மை பயிர்ச்செய்கை காலத்தில் வயல்வாடிகளில் பழகப்பட்ட வட,தென்மோடி நாட்டுக்கூத்துக்கள், அறுவடைக்கு பின்னர் ஊருக்குள் கொண்டு வந்து களரியில் ஆடுதல், சலங்கை கட்டுதல், அடுக்குப்பார்த்தல், அரங்கேற்றம், அரங்கேற்றத்திற்கு மறுநாள் வீடுவீடாகச் சென்று ஊருக்குள் ஆடுதல் போன்ற நாட்டுக் கூத்து சம்பிரதாயங்கள் இடம்பெறும்.
பொதுவாக சித்திரை புத்தாண்டு பாடசாலை விடுமுறைக்காலம் கிராமங்களில் ‘வேளாண்மை வெட்டு விடுமுறை’ என்றே அழைக்கப்பட்டது. இந்த காலத்தில் கிராமங்களில் இருந்து குடும்பமாக வயல்வாடிகளுக்கு செல்வதும், அறுவடைக்கான மற்றைய தேவைகளை குடும்பத்தினர் பூர்த்தி செய்வதும் வழக்கம். பிள்ளைகள் நெல் வயல்களில் ‘உப்பட்டி ‘ கட்டியபின்னர் கதிர் புறக்குவது வழக்கம். கட்டப்பட்ட உப்பட்டிகள் ‘சூடு’ வைக்கப்படும். வயல் வட்டைகளில் வேளாண்மை வெட்டு காலத்தில் விவசாயிகள் கூட்டமாக செயற்படுவர். ‘வெட்டுக்கூட்டம்’ அமைத்து அவர்களுக்குள் தங்கள் தங்கள் வயல்களை வெட்டிக்கொள்வர். இப்படி ஒரு கூட்டு தொழில் சார் வாழ்வியல் இருந்தது. சூடு மிதிப்பதிலும்/ அடிப்பதிலும் இப்படித்தான். அநேகமாக இந்த கூட்டத்தினரே கூத்து ஆடுவதற்கான குழுவாக இயல்பாக மாறினர்.
இன்று இந்த காட்சிகளை காண்பது அரிதிலும் அரிது. இந்த வேளாண் பாரம்பரியங்களை தொலைத்து, இயற்கை வனப்பை அழித்து , இறந்திரமயமாக்கப்பட்டது மட்டும் அன்றி வாழ்க்கையையும் இயந்திரமாக்கிக்கொண்டுள்ளோம். மட்டக்களப்பு புத்தாண்டு கொண்டாட்டம், அதன் பாரம்பரியங்கள் குறித்து இரைமீட்பதற்கும், தொலைத்தவற்றை தேடுவதற்கும், மீட்டெடுப்பதற்குமான. ஒரு காலக்கடிகாரம் மறுதிசையில் இனி ஓடப்போவதில்லை. குறைந்த பட்சம் நாங்களே எங்கள் வளங்களையும், வசதி வாய்ப்புக்களையும் அழித்தை – இழந்ததை எண்ணி நவீன மயமாக்கல் மூலமான வர்த்தக மயமாக்கத்திற்கு “அபிவிருத்தி/ வளர்ச்சி/ நாகரிகம்” என்று பெயரிட்டு மாற்றுச் சமநிலை ஒன்றை பேணத் தவறிய குற்ற உணர்வை மறைக்க இந்த புத்தாண்டில் ஆவது யானைகள் மீது பழியைப்போடுவதை தவிர்ப்போம் என்றால் அது ஒரு மாற்று சிந்தனை துளியாக அமையும்.
யானைகள் எங்களோடு முரண்படவில்லை நாங்கள் மனிதர்கள் யானைகளின் பாரம்பரிய வாழ்விடத்தை ஆக்கிரமித்ததால் வந்த வினை இது .
அரங்கம் வாசகர்களுக்கு சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.
