நிக்சனின் ‘பைத்தியக்காரன் கோட்பாட்டை’ நினைவுக்குக் கொண்டுவரும் டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகள் 

நிக்சனின் ‘பைத்தியக்காரன் கோட்பாட்டை’ நினைவுக்குக் கொண்டுவரும் டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகள் 

— வீரகத்தி தனபாலசிங்கம் —

போரின் போக்குகள் குறித்து அமெரிக்காவும் ஈரானும் வெவ்வேறு வியாக்கியானங்களைச் செய்துகொண்டிருந்த போதிலும், இரு நாடுகளுக்குமே போர் நிறுத்தம் ஒன்றுக்கு இணங்க வேண்டிய அவசரமும் அவசியமும் இருந்தது என்பதே  உண்மை.  ஆனால், அறிவிக்கப்பட்டிருக்கும் இரு வாரகால போர்நிறுத்தம் சஞ்சலமான ஒன்றாகவே இருக்கிறது.  

போர்நிறுத்த ஏற்பாட்டிற்குள் லெபனான் உள்ளடங்கவில்லை  என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு மாத்திரமல்ல, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் கூட கூறிய அதேவேளை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீவ் லெபனானும் போர் நிறுத்தத்திற்குள் வருவதாக  ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் செய்த பதிவில் கூறியிருந்தார். 

போர்நிறுத்த அறிவிப்பு  வெளியான பிறகு கடந்த புதன்கிழமை மாலைக்குள் பத்து நிமிடங்களில் லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் 100 தடவைகள் நடத்திய தாக்குதல்களில் 250 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள். 

 போர் நிறுத்தத்தை தனது நாட்டிலும் நடைமுறைப்படுத்துமாறு லெபனான் பிரதமர் நவாஸ் சலாம் பாகிஸ்தான் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த அதேவேளை நெதான்யாகு லெபனான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு தனது அமைச்சரவைக்கு உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.  

லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் போர்நிறுத்த நிபந்தனைகளுக்கு இணங்க முடியாது என்று அறிவித்த  ஈரான்,  ஹோர்முஸ் நீரிணையை திறந்துவிட மறுத்து விட்டது. ஈரானின் அனுமதியுடனும் கட்டணத்தைச் செலுத்தியும் மாத்திரமே நீரிணையை கப்பல்கள் கடந்துசெல்லக்கூடிய நிலையே இன்னமும் தொடருகிறது. 

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் ஏற்பாடுகளை  செய்கின்ற போதிலும், அமெரிக்கா மத்திய கிழக்கில் அதன் ‘அடங்காக் குதிரையான’ நெதான்யாகுவை கட்டுப்படுத்தாத  பட்சத்தில் போரை முடிவுக்குக்  கொண்டு வரும்  நோக்கில்  முன்னெடுக்கப்படும் எந்தவொரு இராஜதந்திர முயற்சியும் பயனளிக்கப் போவதில்லை.

போர் நிச்சயமற்ற ஒரு புதிய கட்டத்திற்குள் பிவேசிக்கிறது என்பதே  சர்வதேச இராணுவ மற்றும் அரசியல் அவதானிகளின் பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது. இரு வாரங்களுக்கு போர்நிறுத்தம் நீடிக்குமா என்பதும் கேள்விக் குறியே. ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. 

போர்நிறுத்த அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னர் கடந்த சில நாட்களாக  டொனால்ட் ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும்  பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர்  இரத்த வெறிகொண்டு கனவுலகில் இருந்து பேசுவது போன்று வெளியிட்ட கருத்துக்கள் விளைவுகளைப் பற்றிய கவலை இன்றி  உலகில் தாங்கள் நினைத்ததை செய்யமுடியும் என்ற மமதையில் அவர்கள் இருப்பதை வெளிக்காட்டுகின்றன. 

தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்  உடன்பாடொன்றுக்கு வந்து ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்காவிட்டால் “ஈரானின் முழு நாகரிகமுமே அழிந்து போகும்” என்று ட்ரம்ப்  செவ்வாய்க்கிழமை  இரவு சமூக ஊடகத்தில் எச்சரிக்கை செய்தார். நீரிணை திறக்கப்படாவிட்டால் 

செவ்வாய்க்கிழமை, “மின்உற்பத்தி நிலையங்களையும் பாலங்களையும் அழிக்கும் நாளாக இருக்கும்…. நீரிணையத் திறவுங்கள் அல்லது நீங்கள் நரகத்தில் வாழவேண்டியிருக்கும்” என்றும் அவர் கூறினார். நாகரிகத்தை அழிப்பதென்பது இனவழிப்பைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? இதன் மூலம் மனிதகுலத்தின் விரோதியாக தன்னைத் தானே உலகிற்கு அம்பலப்படுத்தி நிற்கிறார் ட்ரம்ப். 

ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலளித்த தெஹ்ரான் அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் பல வருடங்களுக்கு எண்ணெயும் எரிவாயுவும் கிடைக்காமல் போகும் என்று எச்சரிக்கை செய்தது. அமெரிக்கா முன்வைத்திருக்கும் 15 அம்ச யோசனைக்கும் ஈரானின் 10 அம்சத் திட்டத்துக்கும் இடையில் பெரிய அகலமான இடைவெளி இருக்கிறது.

 அதேவேளை, இதுவரையில் தாங்கள் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்காத கருவிகள் தனது நாட்டிடம் இருப்பதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஹங்கேரிக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது கூறியிருந்தார். அவர் அதை விபரமாகக் கூறவில்லை  என்ற போதிலும்,  அணுவாயுதங்களைப் பயன்படுத்தும் அர்த்தத்தில் அவரது கருத்துக்கள் அமைந்திருக்கவில்லை என்று வெள்ளை மாளிகை பிறகு ஒரு  விளக்கத்தைக்  கூறியது. 

பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ஈரானுக்கு எதிரான “காவியச் சீற்றம்” (Operation  Epic Fury)  இராணுவ நடவடிக்கை  ‘பக்தியற்றவர்களின் பற்களை உடைப்பதற்கான 21 ஆம் நூற்றாண்டின் சிலுவைப்போர்’ என்று வர்ணித்தார். 

இவர்கள் எல்லோரும் பென்டகனில் இருந்து உலகம் பூராவும் மரணத்தையும் அழிவையும் கட்டவிழ்த்து விடும் அதிகாரத்தைக் கொண்டவர்கள்  போன்று நாகரிக உலகம் வெறுக்கத்தக்க மிகவும் கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அச்சுறுத்தல்களை விடுத்துவருகிறார்கள்.

உண்மையில் ட்ரம்பும் அவரைச் சார்ந்தவர்களும் பேரழிவைச் செய்யப் போவதாக விடுக்கும் அச்சுறுத்தல்களை  வலிமையின் அடையாளமாக அன்றி, மூலோபாயப் பலவீனமாகவே நோக்கவேண்டும். மனிதப் பண்புகளுக்கு எந்தவிதத்திலும் பொருந்தாத  தரம் தாழ்ந்த சொற்கள் நிறைந்தவையாக ட்ரம்ப் வெளியிடும் அச்சுறுத்தல்கள் நடைமுறைப்படுத்தபடுமானால், அவை போர்க் குற்றங்களாகவே கருதப்படும்.

ஜெனீவா சாசனங்கள் குடிமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதை தடை செய்கின்றன. சர்வதேச சட்டங்களைப் பற்றி தனக்கு அக்கறையில்லை என்று பகிரங்கமாக பிரகடனம் செய்கின்ற ஒரு ஜனாதிபதி ஜெனீவா சாசனங்களை மதித்துப் போர் செய்வார் என்று எதிர்பார்க்க முடியாது. 

உக்ரெய்ன் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்திய  ரஷ்ய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை  பிற்பித்திருக்கிறது. மக்களை அச்சுறுத்தவும் அவர்களின் மனவுறுதியைச் சிதைக்கவும் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசுவது போர்க் குற்றமாகும். இதே விதிதான் அமெரிக்காவுக்கும் பொருந்தும். ஈரானைக் கற்காலத்துக்கு கொண்டு செல்லப் போவதாக ட்ரம்ப் விடுக்கும் அச்சுறுத்தல் நடைமுறைப்படுத்தப்பட்டால் அது மனித குலத்திற்கு எதிரான குற்றமேயாகும்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தொடுத்த இந்த சட்டவிரோதமான போர் இதுவரை அறியப்படாத மோசமான விளைவுகளைக் கொண்டுவரக்கூடிய பேரழிவுக் கட்டத்தை  எட்டாது என்று நம்புவதைத் தவிர, உலக நாடுகளுக்கு வேறு  வழியில்லை. ஐக்கிய நாடுகள் சபையினால் எதையும் செய்ய முடியாமல் இருக்கும் நிலையில், தனது  சொல்லைக் கேட்டு நடக்கக்கூடிய பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் ஈரானுடன் பேசுவதற்கு ட்ரம்ப் முன்வருவது இன்றைய உலக ஒழுங்கின் இலட்சணத்தை வெளிக்காட்டுகிறது.

ஈரானின் இராணுவத் திறனை அழித்து விட்டதாக ட்ரம்ப் தற்பெருமை பேசினாலும் ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதே அது ஒரு வெற்று மிரட்டல் என்பதைக் காட்டுகிறது. தெளிவான மூலோபாயத் திட்டமோ அல்லது சட்டபூர்வ நியாயப்பாடோ இல்லாத ட்ரம்பின் இந்த முட்டாள்தனமான போரை ஆதரிக்க அமெரிக்காவின் நேசநாடுகள் திட்டவட்டமாக மறுத்து விட்டன.

ட்ரம்ப் முன்னுக்குப்பின் முரண்பாடாகச் செயற்படுகின்றார். இராணுவ வல்லமை அழிக்கப்பட்டுவிட்ட ஒரு நாட்டுடன் போர்நிறுத்தம் செய்வதற்கு இணங்குவது என்பது அவரின் அந்த முரண்பாடுகளின் ஒரு உச்சம் எனலாம். கோடிக்கணக்கான உயிர்களும் உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலமும் தனது சுயநல உள்ளுணர்வுகளினாலும் தன்னைச் சுற்றியுள்ள துதிபாடிகளினாலும் வழிநடத்தப்படும் ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் விருப்பு வெறுப்புக்களைச் சார்ந்திருந்திருக்கும் ஒரு உலகில் இன்று நாம் வாழ்கிறோம். போர்க் குற்றங்களைச் செய்யும் தங்கள் நோக்கத்தைப் பற்றி ட்ரம்ப் கும்பல் பகிரங்கமாக பெருமை பேசிக்கொள்கிறது.

சினமூட்டும் வகையில் அட்டகாசமாகவும் ஆபாசத்தனமாகவும் பேசுவதும் இனவழிப்பு அச்சுறுத்தல்களை விடுப்பதும் தான் வகிக்கும் பதவிக்கு இழுக்கு என்பதுடன் சர்வதேச இராஜதந்திரத்தில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதையும் தானாகவே சிக்கிக்கொண்ட இடர்பாட்டில் இருந்து விடுபட வேண்டுமானால் தனது வாயை அடக்கிப் பேசவேண்டும் என்பதையும்  புரிந்து கொள்ளக்கூடிய மனநிலை ட்ரம்புக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே.

மனநிலை பற்றிய விமர்சனங்கள்

நிமிடத்துக்கு நிமிடம் முன்னுக்குப் பின் முரணாக அறிவிப்புக்களைச் செய்கின்ற ட்ரம்பின் சுபாவம் குறித்து விமர்சனங்களை முன்வைக்கும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்களில் சிலர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி றிச்சர்ட் நிக்சன் கடைப்பிடித்ததாகக் கூறப்படும் ‘பைத்தியக்காரன் கோட்பாட்டை’ (Madman Theory )  நினைவுபடுத்துகிறார்கள்.

அதாவது, ஒரு நாட்டின் தலைவர் தனது மனநிலை மீது எதிரிகளுக்குச் சந்தேகம் வரும்படி நடந்து கொள்வதும் தான் எதையும் செய்யத் துணிந்த ஒரு பைத்தியக்காரன் என்று எதிரிகளை நம்பவைப்பதன் மூலம் அவர்களைப் பயமுறுத்தி சாதகமான சமரசங்களுக்கு கொண்டுவருவதும்தான் அந்த ‘பைத்தியக்காரன் கோட்பாட்டின்’ சாராம்சமாகும்.

ஜனாதிபதியாக வருவதற்கு முன்னதாக 1968 ஆம் ஆண்டில் பசுபிக் சமுத்திரத்தின் கரையோரத்தில் தனது வருங்கால வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி பொப் ஹால்ட்மேனிடம் நிக்சன் இந்த கோட்பாடு குறித்து விபரித்ததாகவும் அதன் மூலம் வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று நம்பியதாகவும் ஐரிஷ் புலனாய்வுப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அந்தோனி சம்மர்ஸ் “அதிகாரத்தின் செருக்கு” (The arrogance of Power) என்ற தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். 

இதை  வாஷிங்டனில் உள்ள ‘த கார்டியன்’ பத்திரிகையின் செய்தியாளர் றொபேர்ட் ரெய்ட் கடந்த வாரம் எழுதிய கட்டுரை ஒன்றில் தெரிவித்திருந்தார். 

“பொப், இதை நான் ‘பைத்தியக்காரன் கோட்பாடு என்று அழைக்கிறேன். போரை நிறுத்துவதற்காக எதையும் செய்யத் துணிந்த நிலைக்கு  வந்துவிட்டேன் என்று வட வியட்நாமியர்கள் நம்பவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ‘ கடவுள் மேலாணையாக,  நிக்சனுக்கு கம்யூனிஸ்டுகள் மீது எவ்வளவு வெறி என்று உங்களுக்குத் தெரியும். அவர் கோபமாக இருக்கும்போது எங்களால் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. — அணுவாயுதப் பொத்தான் அவர் கையில் இருக்கிறது’ என்ற தகவலை மட்டும் அவர்களின் காதுக்குக் கொண்டுசெல்லுங்கள். அடுத்த இரு வாரங்களில் ஹோ சி மின் தானாகவே பாரிஸுக்கு வந்து சமாதானத்துக்காக கெஞ்சுவார்” என்று நிக்சன் பொப் ஹால்ட்மேனிடம் கூறியதாக சம்மர்ஸ் தனது நூலில் எழுதியிருக்கிறார்.

“அடுத்தடுத்த வருடங்களிலும் நிக்சன் இந்த உத்தியை திரும்பத் திரும்பப் பயன்படுத்தினார். தனது உதவியாளர்களிடம் தான் ‘சற்றே பைத்தியக்காரன்’ என்றும் கொடூரமான வன்முறையில் ஈடுபடக்கூடியவர் என்றும் சோவியத் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு நிக்சன் தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

“1972 ஆம் ஆண்டில் நிக்சனின் இந்த பாசாங்குகளுக்கு மத்தியிலும் வியட்நாம் போர் மேலும் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது அவர் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கீசிங்கரிடம் கம்யூனிஸ்ட் வட வியட்நாமுக்கு எதிராக அணுவாயுதங்களைப் பயன்படுத்த விரும்புவதாக தெரிவித்தார்” என்று சம்மர்ஸின் நூலில் பதிவாகியிருக்கிறது.

நிக்சன் வடவியட்நாம் மீது எவ்வளவுதான் குண்டு வீச்சுக்களை நடத்த உயிரிழப்புகளையும் அழிவுகளையும் விழைவித்த போதிலும், இறுதியில் வியட்நாம் கம்யூனிஸ்டுகள் தங்களது நாட்டை அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருந்து 1975 ஏப்ரலில் விடுவித்து ஐக்கியப்படுத்தி வரலாறு படைத்தார்கள்.

ஈரானின் முழு நாகரிகத்தையும் மீட்டெடுக்க முடியாத வகையில் முற்றாக  அழிக்கப்போகிறேன் என்று பாலங்கள், ரயில் நிலையங்கள், எண்ணெய்வள நிலைகள் மற்றும் சிவிலியன் இலக்குகளை நிர்மூலம் செய்யப்போகிறேன் என்றும் ட்ரம்ப் விடுத்த அட்டகாசத்தனமான அச்சுறுத்தல்களைச் செய்த மறுநாளே போர்நிறுத்தத்துக்கு இணங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.  

 ட்ரம்பின் இன்றைய நிலை நிக்சனின் அன்றைய நிலையை நினைவுக்கு கொண்டுவருகிறது. 

சுமார் ஆறுவார கால குண்டுவீச்சுக்களுக்கு பின்னரும் கூட ஈரான் அடிபணியும் அறிகுறிகளைக் காட்டாத நிலையில் ட்ரம்புக்கும்  நிக்சனைப் போன்றே தான் பலவீனமாகத் தெரிவதைத் தவிர்க்க ஒரு உபாயம் தேவைப்பட்டது. அதற்காக  பேரழிவு மிரட்டல்கள் ஒரு வசதியான கருவியாக இருக்கும் என்று நம்பியிருக்கக்கூடும். 

சர்வதேச நெருக்கடிக் குழுவின் (International Crisis Group) ஈரான் திட்ட இயக்குநர் அலி வேஸ் கூறியிருப்பதைப் போன்று  இந்த மோதலில் இதுவரை ட்ரம்பினால் எந்தவொரு தெளிவான வெற்றியையும் பெறமுடியவில்லை என்பதால் விமர்சகர்கள் தனது வெற்றிச் செய்தியில் ஓட்டைகளைத் தேடமுடியாதவாறு ஒரு மாபெரும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுவிட்டு, அதையே வெற்றியாக அறிவித்து தானே உருவாக்கிய நெருக்கடியில் இருந்து வெளியேறுவதற்கு முயற்சித்தார். ஆனால், அது பலிக்கவில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *