வளரும் நெருப்பாய் உயரும் வட்டிக் கடனால் குட்டிச் சுவராகும் இலங்கைப் பொருளாதாரம்

வளரும் நெருப்பாய் உயரும் வட்டிக் கடனால் குட்டிச் சுவராகும் இலங்கைப் பொருளாதாரம்

 — அ. வரதராஜா பெருமாள்

இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் —

வரிகளைக் குறைப்போம் என்று மக்களுக்கு வாக்குறுதியைக் கொடுத்துத்தான் ஒவ்வொரு அரசாங்கமும் பதவிக்கு வருகிறது. பின்னர் தொடர்ந்து அதிகரிக்கும் அரச செலவுகளை சமாளிப்பதற்கு தொடர்ந்து வலுக்கட்டாயமாக வரிகளை அதிகரிக்கும் கொள்கைகளை கடைப்பிடிப்பதே வழமையாக ஆகிவிட்டது. பொருளாதார வளர்ச்சி வீதங்களை மீறிய அளவில் வரிவீதங்களை ஏற்றினால் அவை பொது மக்களின் வாழ்க்கைத்தர முதுகெலும்புகளையே வளைக்கும், ஒரு கட்டத்துக்கு மேல் வரிச் சுமைகளை மக்கள் மேல் ஏற்றுகையில் அது ஆட்சி ஆதிகாரத்தையே ஆட்டம் காண செய்து விடும். ஆட்சியாளர்கள் எப்போதும்; பொருளாதார நெருக்கடிகள் தலையெடுக்கையில் அதற்கு தாங்களல்ல காரணம் – தங்களை மீறிய காரணிகளே என தப்பிக் கொள்ளப் பார்ப்பது, ‘இதெல்லாம் சகஜமப்பா’ எனும் மாமூலான அரசியலே.    

எப்படியாயினும் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில் ‘நாட்டை கடன் சுமைகளிலிருந்து மீட்போம்’ என்று தேர்தல் காலங்களில் வீராவேசமாக வாக்குறுதிகளை வழங்குவதில் அனைத்து தேர்தல் அரசியல் கட்சியினரும் ஒரேகுட்டையில் ஊறிய மட்டைகளே. ஆனால் பதவியில் இருக்கும் போது அரசினுடைய வரவு – செலவுகளுக்கிடையில் ஏற்படும் பற்றாக்குறையை ஈடு கட்ட ஒவ்வொரு அரசாங்கமும் வாங்குகின்ற கடன்தொகை வருடாவருடம் ஏறிக் கொண்டே போகின்றது. இதனால் ஒவ்வோர் ஆண்டும் அரசாங்கம் வட்டியும் முதலுமாக திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையும் வருடாவருடம் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. இலங்கை அரசு வாங்கியுள்ள கடன்களுக்காக செலுத்துகின்ற வட்டி மட்டும் அரச வரி வருமானத்தில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட தொகையாக அமைந்து விடுகின்றது. அதாவது, 100 ரூபா வருமானத்தில் 50 ரூபாவுக்கு மேல் வட்டியாக செலவளித்து விட வேண்டிய நிலையில் ஒரு நாடு இருந்தால், ஏனைய பிரதானமான செலவுகளுக்கும் அபிவிருத்திக்கான மூலதனச் செலவுகளுக்கும் மேலும் கடன்களை தேடுவதுவும் நாடுவதுவும்தானே கட்டாயமாகும்.  

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவுகளுக்கென ஒதுக்கிக் காட்டியுள்ள தொகை ஒருபுறமிருக்க, நடைமுறையில் தவிர்க்கமுடியாது மீண்டெழும் செலவுகளுக்கு தேவைப்படும் நிதியில் 80 சதவீதத்தை சமாளிப்பதற்குக் கூட, அரசாங்கம் வட்டியாக செலுத்திய தொகை போக, அரச வருமானததில் எஞ்சிய தொகை போதியதாக இல்லை. அரசாங்கம் ஒவ்வோர் ஆண்டும் அதற்குரிய மூலங்கள் மற்றும் வளங்கள் வழியாக திரட்டுகின்ற மொத்த வருமானத்தோடு ஒப்பிடுகையில் சுமார் 50 சதவீத அளவுக்கு மேல் கடன் வாங்கியே செலவுகளை சரிக்கட்டுகிறது. அபிவிருத்தியை சாதித்துக் காட்ட வேண்டிய ஆட்சியாளர்கள், நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் அளவுரீதியில் அதிகரித்து ‘அரகலய’வாக கொதித்து வெடித்து விடாமல் இருப்பதை கவனித்துக் கொள்வதிலேயே தமது ஆட்சிக் காலத்தை கழிக்கின்றனர் 2022ல் ஜனாதிபதி கோத்தாபய ஆட்சியை விட்டு ஓடியதுதான் பலருக்குத் தெரியும், 1953ம் ஆண்டு பிரதமர் டட்லி சேனநாயக்கா ஆட்சியை விட்டு ஓடியதையும் இங்கு தெரிந்து கொள்ள வேண்டும்.  

2022ல் உச்சமடைந்த பொருளாதார நெருக்கடிகள் ‘அரகலய’ என அரசியல் எரிமலையாக வெடித்து ராஜபக்சாக்களை ஆட்சியிலிருந்து துரத்திவிட,   ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்காவுக்கு சர்வதேச நாணய நிதியம், இந்தியா, சீனா, அமெரிக்கா, யப்பான் என துணைக்கு வந்த எல்லோரும், உதவி என்ற பெயரில் கடன்களை வழங்கி இலங்கையின் எதிர்கால கடன் பொருளாதார சுமையை மேலும் ஏற்றி விடுபவர்களாகவே செயற்பட்டனர். 2024 செப்டம்பரில் புரட்சிகரமான நம்பிக்கைகளையெல்லாம் அள்ளிவீசி ஜனாதிபதி பீடம் ஏறிய  மதிப்பிற்குரிய அநுர திசநாயக்காவும் ரணில் விக்கிரமசிங்கா வகுத்து விட்ட அதே பொருளாதார பாதையிலேயே அதிகார நடை போடுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.  

எரி பொருட்கள் விலையேற்றம், மின்சார கட்டண அதிகரிப்பு என்பவற்றால்  போக்குவரத்து கட்டணம் உட்பட, அனைத்து அத்தியாவசிய பண்டங்களினதும் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்புகள் 2022ம் ஆண்டு ஏற்படுத்திய உச்ச நெருக்கடிகள் நாட்டில் பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை அரைவாசியாக வீழ்த்தின. இறக்குமதிகள் பெரும்பாலானவற்றை தடை செய்து, வரிகளையும் உயர்த்தி, பரந்துபட்ட மக்களின் வயிற்றையும் வாயையும் கட்டியே, ரணிலின் ஆட்சி அரச வருமானத்தையும் அந்நிய செலாவணி இருப்பையும் 2013ம் ஆண்டில் சற்று உயர்த்தியது. இரண்டாண்டுகளின் பின்னர், அதாவது 2024 மற்றும் 2025ல் அரசாங்கம் மேற்கொண்ட சம்பள அதிகரிப்புகளால் இழந்த வாழ்க்கைத் தரத்தை சற்று மீளப் பெறும் நிலையை நோக்கி பொருளாதாரம் நகர்கிறது என மக்கள் நம்பிக்கையோடிருக்க, தித்வா புயல் வெள்ள பேரழிவுகள், அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு ஈரான் மீது தொடுத்த யுத்தம் ஏற்படுத்தியுள்ள பாதகமான விளைவுகளால் ஏற்பட்டுள்ள விலையேற்றங்கள் மற்றும் தட்டுப்பாடுகள், அந்நிய செலாவணி வரவில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிகள் என்பன மொத்தத்தில் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை நோக்கி ‘பழைய குருடா, கதவைத் திறவடா’ என்ற கணக்கில் இட்டுச் செல்கின்றவா எனக் கேட்கத் தோன்றுகிறது.  

அரசாங்கத்தின் வரி வருமானம் 2022ம் ஆண்டு தேசிய வருமானத்தில் 9 சதவீதமென்றிருந்தது, அரசாங்கத்தின் வரி அதிகரிப்புக் கொள்கைகள் மற்றும் வரி திரட்டும் திறனின் அதிகரிப்புகளால் அரசாங்கத்தின் மொத்த வருட வருமானம் 2023ல் தேசிய வருமானத்தில் 11சதவீதமாகி 2024ல் 13 சதவீதமாகி 2025ல் 15 சதவீதமாகியது. ஆனால் 2026ல் அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என அரசாங்கம் ஏற்கனவே அதனது வரவு செலவுத் திட்டத்தில் காட்டி விட்டது. நாடு எதிர்நோக்கும் அனைத்து பொருளாதார நெருக்கடிகளுக்கும் உள்நாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்தும் அந்நிய நாடுகளிடமிருந்தும் தொடர்ந்து கடன் வாங்கிக் கொண்டிருப்பதையே ஒவ்வொரு அரசாங்கமும் தெரிவாக வைத்திருக்கிறது. வெளிநாடுகள் தருவதற்கு என அறிவித்த தொகைகளை விட பேச்சுவார்த்தைகளின் போது நாட்டின் நிலைமை தொடர்பாக அநுதாபத்தை ஏற்படுத்தி அதிக கடன் தொகையை பெற்று விட்டதாக அரசாங்கத்தார் பெருமையில் மிதப்பதுதான் பரிதாபம்.  

நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் மற்றும் பேரழிவுகளின் தாக்கத்தில் இருந்து சற்று தலையை நிமிர்த்தி மூச்சுவிடுவதற்கும் வெளிநாடுகள் மற்றும் அந்நிய நிறுவனங்கள் அனுதாப அடிப்படையில் மிகச் சிறிய அளவில் கொடைகளையும் ஓரளவு கடன்களையும் தருகின்றனவே தவிர உண்மையான பொருளாதார வளர்ச்சியை சாதிப்பதற்கு அவைகள் உதவத் தயாராக இல்லை. ஏனென்றால் இலங்கை ஏற்கனவே அந்நிய நாடுகளிடமிருந்து வாங்கியுள்ள கடன் தொகை இலங்கையின் பொருளாதார சக்தியின் எல்லையைத் தொட்டு நிற்கின்றது. அவற்றைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பதற்கான ஓய்வு காலம் 2028ம் ஆண்டோடு முடிவடைகிறது.

மேற்காசிய யுத்தத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மத்தியிலும் இலங்கையின்  பொருளாதாரம் ஏதோ மூச்சு முட்டாமல் ஓடிக் கொண்டிருப்பது போல தெரிகிறது. ஆனால் அரசாங்கத்தின் வருமான ஊற்றுகளில் வரட்சிகள் காணப்படுகின்றன, மேலும் அந்நிய செலாவணி வரவு வாய்க்கால்களில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன. இவை எப்போது சீராகும் என்று தெரியவில்லை. நாட்டு மக்களைப் பொறுத்தவரையில், ‘தங்களுக்கு தர வேண்டியவைகள் குறையாது தரப்பட வேண்டும், தங்களுக்கு கிடைக்க வேண்டியவைகள் நேரத்துக்கு கிடைக்க வேண்டும், இவற்றை சரியாக செய்வதில் வல்லவர்களாக உள்ளவர்கள் மட்டுமே நல்லவர்கள்’ என சிந்திப்பதற்கே பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்

அழகான இலங்கையின் பொருளாரம் வளமான வாழ்வை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால், இலங்கை அரசின் ஆற்றல்களுக்கு அடக்கமான அளவுக்குள் அது பட்டிருக்கும் கடன்களின் சுமை அமைந்திருக்க வேண்டும். இதனை ஆட்சிக் கட்டிலில் இருப்போர் பொறுப்போடு உணர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்க வேண்டும்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *