கனகர் கிராமம்: ஓர் அந்நாள் விதும்பல்

கனகர் கிராமம்: ஓர் அந்நாள் விதும்பல்

( 2026.03.28ஆம் திகதி திருக்கோவில் பண்பாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற “கனகர் கிராமம்” நாவலின் நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய  வி. துலாஞ்சனன் (இலங்கை நிர்வாக்ச் சேவை) அவர்களின் நயவுரையின் திருத்திய வடிவம். )

— வி. துலாஞ்சனன் —

செங்கதிரோன் திரு. கோபாலகிருஸ்ணன் ஐயா அவர்களால் எழுதப்பட்ட  “கனகர் கிராமம் – அரசியல், சமூக, வரலாற்று நாவல்” நூல் பற்றிய நயவுரை ஆற்றும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

செங்கதிரோன் ஐயாவின் கலை இலக்கிய முயற்சிகள் மீது எப்போதும் மதிப்புக் கொண்டவன் நான். இலக்கிய உலகில் எனக்கான முதல் மேடை என்று நான் கருதும் மேடையை 2014 கண்ணகி கலை இலக்கிய விழாவில் என் பிறந்தகத்தில் ஏற்படுத்தித் தந்தவர் அவர். அந்த வகையில் இது என் அதே பிறந்தகத்தில் செங்கதிரோன் ஐயா ஏற்படுத்தித் தந்திருக்கிற இன்னொரு மேடை. அதற்கு நன்றியுடையேன் என்பதைப் பதிவு செய்து கொண்டு…

நயவுரையை ஆற்றமுன்னர் ஒரு சம்பவத்தை நினைவுகூர விரும்புகிறேன். 2017ஆம் ஆண்டு தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கை முன்னிட்டு,  நான் அங்கம் வகித்த தண்பொழில் கலைக்கழகத்தால் “சிலம்பொலி விழா” எனும் கலைநிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தினர்களுள் ஒருவராக செங்கதிரோன் ஐயா அழைக்கப்பட்டிருந்தார். அவர் ஒரு பழுத்த அரசியல்வாதி என்பதால் அரசியலேதும் பேசவேண்டாம் ஐயா என்று கோரியிருந்தேன். (அப்போது ஏதோ சூடான அரசியல் பிரச்சனையொன்று போய்க்கொண்டிருந்ததாக நினைவு.) அதைத் தொலைபேசியில் சொன்னபோது சிரித்தபடியே “அரசியல் பேசாமல் எப்படி தம்பி கலை பண்பாடு பற்றி பேசுவது ”  என்றார் அவர். சொன்னது போலவே “அரசியல் பேசக்கூடாது என்று அன்புக்கட்டளை இடப்பட்டிருககிறது” என்று சொல்லிப் புன்னகைத்து தனக்கே உரிய பாணியில் அரசியல் பற்றி உரையாற்றிச் சென்றிருந்தார். 

இன்று காலச்சக்கரம் சுழன்று, அவரது அதே பாணியில் நயவுரையாற்ற வேண்டிய இக்கட்டு எனக்கு வந்திருக்கிறது. வேறுபாடு என்னவென்றால், ஐயா அவர்களுக்கு அன்று அரசியல் பேசவேண்டாம் என்றபோது அரசியல் பேசவேண்டிய நிலை ஏற்பட்டது. எட்டாண்டுகளுக்குப் பின்னர், ஐயா அரசியல் பேசுமாறு என்னை எதிர்பார்க்கும் இந்த மேடையில் நான் அரசியல் பேசமுடியாத நிலை. 

இரண்டு காரணங்கள். முதலாவது நான் அரசியலை கலை இலக்கியத் துறையில் ஒரு கருத்தியலாக மாத்திரமே பார்க்க விழைகிறேன் என்பது. இரண்டாவது தொழில் சார்ந்து நான் அரசியல் பேசவியலாது என்பது. 

இப்பின்னணியில், எனது நயவுரையை நான் மூன்று பாகங்களாக அமைத்துக்கொள்ள விரும்புகிறேன். முதலாவது, இந்த  நாவல் பற்றிய அறிமுகமும் அது எழுந்துள்ள காலப்பின்னணியும். இரண்டாவது இந்த நாவலின் உள்ளடக்கம், மூன்றாவது நாவல் பற்றிய ஒட்டுமொத்த மதிப்பீடு.

நாவல் பற்றிய அறிமுகம்:

நாவல் என்பது தமிழிலக்கியத்தில் ஒரு புதிய வடிவம். தமிழில் அறிமுகமாகியது இருநூறாண்டுகளுக்குள் தான் என்றபோதும் தமிழ் இலக்கிய நாவல் படைப்புலகானது, உலகளாவிய இரசிய, பிரான்சிய, ஆங்கில படைப்புகளுக்கும் சமனாக செழுமை மிக்க ஒன்றாக வளர்ச்சி கண்டுள்ளது. தமிழகத்தில் செயமோகன், எஸ்.இராமகிருஸ்ணன், சாரு நிவேதிதா, அசோகமித்திரன், புதுமைப்பித்தன் என்று பல இலக்கியவாதிகளை பட்டியல் படுத்தலாம். புலம்பெயர் தமிழர் வரிசையிலும் அ முத்துலிங்கம், சோபா சக்தி, சயந்தன் என்று பலர் பெயர் பொறித்திருக்கிறார்கள். ஆனால் ஈழத்தமிழ் இலக்கியச் சூழலைப் பொறுத்தவரை எஸ் .பொன்னுத்துரை, நீலாவணன், செங்கை ஆழியான் என்ற வரிசையில் சமகாலத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான இலக்கியவாதிகள் உருவாகவில்லை என்பதை ஒரு பெரும் இடைவெளியாகவே எண்ணிப்பார்க்க முடிகிறது. நம்பிக்கையூட்டும் படைப்பாளிகளை உருவாக்குவதில் ஈழத்துப் படைப்புலகம் சிரத்தை காட்டவில்லையோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. அதிலும் கிழக்கிலங்கை ஒப்பீட்டளவில் நாவல் இலக்கியங்களை பெரிதளவில் படைக்கவில்லை என்பது சற்று வருத்தத்தோடு நோக்கவேண்டிய விடயம் தான். எனவே இந்த 2026ஆமாண்டு நூல் வடிவம் கண்டுள்ள “கனகர் கிராமம்” கிழக்கிலங்கையின் இலக்கிய உலகில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுக் கொள்கின்றது. 

எனக்கு இந்த நூலைப் படித்தபொழுது வேறு மூன்று நூல்கள் நினைவுக்கு வந்தன.  

முதலாவது இலங்கையின்  முக்கியமான படைப்பாளியா எஸ். பொன்னுத்துரை தன் இளமைக்கால யாழ்ப்பாண நினைவுகளை எழுதிய “நனவிடைத் தோய்தல்” எனும் நூல். அது பழைய இனிய நினைவுகளை எட்டிப்பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடும் “அந்நாள் விதும்பல்” (nostalgia)  வகையறாவில் அடங்கும் நூல். இந்நூலின் பெரும்பாலான பாகங்கள் அப்படி அந்நாள் விதும்பல் சார்ந்தவை.

இரண்டாவது சுந்தர ராமசாமியின் “ஜே ஜே சில குறிப்புகள்”  நூல். ஒரு படைப்பாளியின் நாட்குறிப்புகள், அவரைக் கண்டு வியக்கும் அவரது வாசகனின் அவதானிப்புகள் இணைந்து உருவான ஒரு விந்தையான இலக்கிய வடிவம் அந்நூல். கனகர் கிராமம் நாவலில் கோகுலன் கனகரெட்ணம் அவர்களை வியக்கும் சில இடங்கள் இந்நூலோடு ஒப்பிட வைத்தன.

மூன்றாவது, இந்த மண்ணில் தோன்றிய ஒரு நூல். நிறைய இலக்கியவாதிகளே அறியாத ஒரு நூல். நாடுகாடுப்பரவணிக் கல்வெட்டு. சம்மாந்துறைக்குத்  தெற்கே சீதாவாக்கையிலிருந்து கண்டி அரசுக்கு மட்டக்களப்பின் அதிகாரம் கைமாறிய காலத்தே,  இராசபக்கிச முதலியார் என்பவரின் குடியேற்றத்தை ஒட்டி, இன்றைய இறக்காமம், அம்பாறை நகர் என்பவற்றைச் சூழ்ந்து “நாடுகாடுப்பற்று” எனும் ஒரு நிருவாகப் பிரிவு தோன்றியமை,  அங்கு ஏற்பட்ட விவசாய, கால்நடைப் பெருக்கம், இறுதியில் ஆட்சி அதிகாரப் போட்டியால் இராசபக்கிச முதலியார் கொல்லப்பட்டு அவ்விடம் கைவிடப்பட்டமை என்பன அந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.  

அமரர். கனகரெட்ணம் அவர்களின் மறைவுடன் மட்டக்களப்பு, அம்பாறைப் பகுதிகளில் ஏற்படும் பெரிய அரசியல் இடைவெளியை  கனகர் கிராமம் நூலாசிரியர் விவரிக்கும் இடத்தில், நாடுகாடுப்பற்றின் தொடர்ச்சியான ஒரு நூலை வாசிக்கும் உணர்வு ஏற்பட்டது. 

ஒரு படைப்பை மதிப்பிட முன்னர், அதன் வகைமையை  (genre) வரையறுத்துக் கொள்வது அவசியமானதாகும். பாடலொன்று குத்துப்பாடலா, மெல்லிசையா, சோகப்பாடலா என்று வரையறுத்துக்கொள்வது போல.

“கனகர் கிராமம்” இலங்கையின் அரசியல்வாதி ஒருவரின் பின்னணியில் திட்டமிடப்பட்டு,  இறுதி வரை நனவாகாமலே போய்விட்ட ஒரு வீடமைப்புக் குடியேற்றத் திட்டத்தை  முதன்மைப் பேசுபொருளாகக் கொண்டிருக்கிறது. அந்த சம்பவத்தின் முன்னும் பின்னும் அந்த அரசியல்வாதியின் ஆளுமை, முதன்மைப் பாத்திரமான “கோகுலனின்” பார்வை வழியே சொல்லப்படுகிறது. கோகுலன் என்பது நூலாசிரியர் தான். அவரது வீடு, குடும்பம், உறவினர்  முதற்கொண்டு சகல விடயங்களும் இந்நூலில் உண்டு. அதில் வருகின்ற தொண்ணூற்றொன்பது விழுக்காடு பாத்திரங்கள், சம்பவங்கள், ஊர்கள்  உண்மையானவை. எனில் இந்நூலை ஒரு நாவல் என்பதா? அல்லது தன் வரலாற்று நூலென்பதா? அல்லது மறைந்த ஆளுமையொருவரை முன்னிலைப்படுத்தி அவரை நினைவுகூர எழுதப்பட்டுள்ள ஒரு கருத்தியல் பரப்புரை நூல் என்பதா?

ஒன்று, கனகர் கிராமம் தன்னை “அரசியல், சமூக, வரலாற்று நாவல்” என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறது. ஆனால் இதில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான விடயங்கள் நூலாசிரியரின் பார்வையில் அவர் கண்ட, உணர்ந்த விடயங்கள். எனவே இதை தன்வரலாற்று நூல் என்பதே பெரிதும் தகும். 

இரண்டு, இதில் அம்பாறை – மட்டக்களப்பு மாவட்ட தமிழர்களின் நோக்குநிலையில் அவர்களது சொந்த அரசியல் வரலாறு கூறப்பட்டுள்ளதால் இதை வரலாற்று நாவல் என்பதும் தகும். ஆனால் இதில் கூறப்பட்டுள்ள தொன்மங்கள், நம்பிக்கைகள் உட்பட அத்தனை விடயங்களுமே நூற்றுக்கு நூறு விழுக்காடு நடந்த உண்மைச் சம்பவங்களாகக் கருதக்கூடியவையா என்றால் இல்லை என்பதே பதில். 

மூன்று, கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரெட்ணம் அவர்களின் ஆளுமையை விதந்து கூறும் நூலா என்றால் அதுவும் உண்மை தான்.  

எனவே தன்வரலாறு , ஆளுமை நிறுவல், அரசியல் வரலாறு ஆகிய மூன்று வகைமைகளுக்குள்ளும் அடங்கும் ஒரு சாம்பல் பகுதியில் (grey area) எழுதப்பட்ட நாவல் முயற்சி என்று இந்நூலை நாம் வகைப்படுத்திக் கொள்ளலாம். 

நூலின் உள்ளடக்கம்.

“கனகர் கிராமம்”  அரங்கம் இதழில் வெளியான போது சில பகுதிகளை வாசித்துள்ளேன். ஆனால் ஒரு முழுநூலாக இதைப் படிக்கும் போது இந்நூலின் குறிப்பிட்ட சில அம்சங்களை விசேடமாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அதை விரித்துக் காண்பதற்காக, இந்நாவலின் வரலாற்று – சமூக – கருத்தியல் அம்சங்களில் நான் நயந்தவற்றை இங்கு விவரிக்க முயல்கிறேன். 

அ) வரலாறு: 

நாவலின் கதைக்களம் 1960களிலிருந்து 80கள் வரையும் இடம்பெறுவதுடன், இவை முதன்மைப் பாத்திரத்தின் 2019ஆம் ஆண்டிலான அந்நாள் விதும்பலாக பதிவாகின்றன. 1961இல் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதி அம்பாறை மாவட்டமாகத் தனியே பிரிக்கப்பட்ட பின்னணியில் இடம்பெற்ற பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள், தேர்தல்கள், 1978 புயல் நிகழ்வு முதலியன  இந்நூலில் விவரிக்கப்படுகின்றன. இதையொட்டி இரண்டு விடயங்களை இங்கு நயக்கலாம்.

அம்பாறை மாவட்டம் தனியே பிரிக்கப்பட்ட காலத்திலும் அதீத வளர்ச்சி என்பது மட்டக்களப்பு நகரின் தெற்குமுகமானதாகக் காணப்படுகிறது. இன்னும் தெளிவாகச் சொன்னால், 1950 – 1980 இடைப்பட்ட காலத்தில் மட்டக்களப்பிலிருந்து கல்முனையூடாகத் தெற்கே அக்கரைப்பற்று, பொத்துவில் வரையான ஊர்கள் அடைந்த வளர்ச்சியை வடக்கே செங்கலடியூடாக வாழைச்சேனை, ஓட்டமாவடியோ, மேற்காக படுவான்கரைப் பகுதிகளோ அடையவில்லை. அல்லது மந்தமாகவே அடைந்துவந்திருக்கின்றன. இதற்கான வரலாற்றுக்காரணிகளை இந்நாவல் நாசுக்காக விவரிக்கின்றது.

எழுபதுகளில் மன்னம்பிட்டிப் பாலமோ வெருகல் பாலமோ அமைக்கப்படவில்லை. எனவே மகாவலி ஆற்றைக் கடந்து வடக்கே யாழ்ப்பாணம்,  திருக்கோணமலை செல்வது மரபார்ந்த நீர்வழிப் படகு (பாதை) போக்குவரத்தையே நம்பியிருந்தது.  கொழும்புக்கு பேருந்தில் செல்ல வேண்டுமென்றால்,  செங்கலடியூடாக பதுளை சென்று சேர்ந்து அங்கிருந்தே  கொழும்பு செல்லவேண்டும். அல்லது புகையிரதத்தில் மாகோ சென்று அங்கிருந்து ஏனைய நகரங்களுக்கும் செல்லவேண்டும். 

அவற்றைத் தவிர, கொழும்பு செல்ல இருந்த முதன்மையான பாதை, இன்றைய இலங்கையின் மிகநீளமான பாதையும், கொழும்பு – இரத்தினபுரி – வெல்லவாயா – பொத்துவில் – மட்டக்களப்பு பாதை என அறியப்படும் ஏ4 பெருந்தெரு தான். அது  மட்டக்களப்பு நகரை தெற்கே கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில் ஊடாக கொழும்போடு இணைக்கிறது. எனவே தான் இந்த பகுதியில் அதிகமான சன நடமாட்டமும், மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையான ஊடாட்டமும் தொடர்ந்து ஏற்பட்டிருக்கிறது என்பதை அவதானிக்கமுடிகின்றது. அடுத்த காரணமாக வடக்கிலிருந்து தெற்குநோக்கிய கதிர்காம யாத்திரைப் பாதையையும் சொல்லமுடியும்.

இன்னொரு முக்கியமான வரலாற்று அம்சத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். பொதுவாக  தமிழர்களுக்கு ஒரு மனநிலை இருக்கின்றது. ஊரின் மீது அளவு நடந்த பாசம் இருக்கும். அதேவேளை  மறுபக்கம் ஊரைவிட்டு ஓடிவிட வேண்டும் என்ற ஆவலும் இருக்கும்.  இந்த இரட்டை மனநிலை சங்க காலத்திலே தமிழர் மத்தியில் இருந்ததை  “பதி எழு அறியாப் பழங்குடியினர்”, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் இரு சொற்றொடர்கள் சொல்கின்றன. ஊரோடும் இருக்க வேண்டும்,  அதேவேளை பொருள்நாட ஊரைவிட்டு வெளியே செல்லவும் வேண்டும் என்ற மனப்பாங்கு இன்றும் தமிழர்களிடம் காணப்படுகின்ற விசித்திரமான மனநிலை.

இந்த நாவலின் நாயகன் கோகுலனின், அதாவது பெயர் மாற்றப்பட்ட நம் நாவலாசிரியரின் பெற்றோர் காரைதீவைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து முதலில் பாணமைக்குச் சென்று  குடியிருக்கிறார்கள். பிறகு பாணமையில் இருந்து பொத்துவிலுக்கு வந்து குடியேறுகிறார்கள். பின்னர் அவரது பிற்காலம் கல்வி, தொழில், திருமணம் என்று வந்தாறுமூலை, கல்முனை, பாலமீன்மடு, தம்பிலுவில், திருக்கோவில், கோமாரி என்று ஊரூராகச் செல்கின்றது. இப்படி கதையின் நாயகன் ஊரூராக அலைந்தாலும், அவனைப்போல் தன் மண்ணில் பற்றுக்கொண்ட இன்னொருவன் இங்கில்லை. ஆண்டு பல கடந்தும், தன் தாயகத்தில் உருவாகாமல் கனவாகிவிட்ட ஒரு குடியேற்றக் கிராமத்தை  எண்ணி அவன்  ஏக்கப்பெருமூச்சு  விடுகின்றான்.  இந்த இரட்டை மனநிலை இந்த நூலில் பல இடங்களில் மீண்டும் மீண்டும் மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சமூகம்:  

இந்த நூல் பேசுகின்ற சகல ஊர்களுமே பெரும்பாலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குள் இருப்பவை. எனவே இந்த இடத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இந்த நாவலை வாசிக்கும் போது ஏற்படும் உணர்வு சுவாரசியமானது. அதேபோல் கிழக்கிலங்கை சமூகத்தைச் சார்ந்த இந்நூலில் பல்வேறு பண்பாட்டு விடயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உதாரணமாகச் சொன்னால் கிழக்கிலங்கை மக்களின் உணர்வில் கலந்த கதிர்காம நடைச்செலவு இங்கு வருகின்றது. கதிர்காம யாத்திரையோடு சேர்ந்து பாணமை பத்தினியம்மன், சன்னியாசி மலை, உகந்தை,  சங்கமன்கண்டி, திருக்கோவில் போன்ற ஆலயங்கள் பற்றிய பல தகவல்கள் வருகின்றன. அம்மாளுக்குச் செய்தல் வைரவருக்குச் செய்தல், புதிரெடுத்தல், தம்பிலுவில் கொம்பு முறி போன்ற மரபுகள் வருகின்றன.  இந்த மண்ணுக்கு சிறப்பான பேய்க் கதைகள் வருகின்றன. 

அதேபோல பெண்களுக்கு இருந்த சமூகவியல் முன்னிலையையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை பிரதேசங்கள், தாய்வழி உரிமை கொண்ட சமூகங்கள். இந்த தாய்வழி சமூகங்களில் பொதுவாக பெண்களுக்கு எல்லா விதத்திலுமே முன்னுரிமை இருக்கின்றது. கணவனற்ற தன் தாய் தன்னையும் சகோதரர்களையும் பாடுபட்டு வளர்த்தமை, தன் கணவரின் தேர்தல் முயற்சிகளுக்கு ஒத்தாசையாக ஊரூராகப் பயணிக்கும் ஆசிரியர் உதுமா லெப்பையின் மனைவி ஆகியோர் குறிப்பிடத்தக்கோர். 

நாவலில் இடம்பெற்றுள்ள உவமைகளும் தனிக்கவனம் பெற வேண்டியவை.  அவற்றுள் சுவாரசியமான உவமை ஒன்று…

கதிர்காமம் நடந்து செல்கின்ற பொழுது கூமுனை பறவைக் குளத்தில் நாரை நிற்கிறது. அதை பார்க்கின்ற கோகுலனுக்கு ஒற்றைக்காலில்  தவம் புரியும் முனிவர்களைப் போல அந்த நாரைகள் தெரிகின்றன. அப்படியே ஒரு நவீன இலக்கியத்தை நினைவுகூர்ந்து “நாலைப் போல காலை மடித்த நாரைகள்” என்ற வரிகள் அவன் நினைவில் ஓடுகின்றன. அப்படியே சங்க இலக்கியத்துக்கும் தாவி “பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன” செங்கால் நாரைகள் நினைவில் எழுகின்றன.  இறுதியில் ஒற்றைக்காலில் நின்று தாண்டவம் புரியும் நடராசர் அந்த நாரையில் காட்சி அளிக்கிறார்.  

மேலும் சில பழமொழிகள் இந்த நாவலின் கதைப்போக்கோடு வருகின்றன. மாடு வாங்குவதற்கு முதன் நெய்க்கு விலை பேசும் அரசியல்  கிழக்கிலங்கை அரசியல் என்று சொல்கின்றார். ஊராரின் சோத்துக்குள் நாம் மாங்காய் போட்டுப் பினையக் கூடாது என்பது நகைச்சுவையான இன்னொரு உவமை. யானை இரண்டு சண்டையிடும் போது நடுவில் மாட்டிய தகரைப்பற்றையாக இன்னோரிடத்தில் தன்னை உவமிக்கிறார் நாவலாசிரியர். இன்னும் பல சுவாரசியமான பழமொழிகள் மரபுத்தொடர்கள் இந்த இலக்கியத்தின் சுவையைக் கூட்டுகின்றன.

 இப்படி மண் சார்ந்த பல்வேறு சமூகவியல், மானுடவியல் தகவல்கள் இந்த நூலில் உள்ளடக்கியிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும். 

கருத்தியல்:

முன்பே குறிப்பிட்டது போல், நான் அரசியலை ஆராயப்போவதில்லை. பதிலாக இந்நாவலாசிரியரின் கருத்தியல் என்ன, இந்நூலில் அவர் வலியுறுத்துவது என்ன என்பதை தொட்டுச்செல்ல விரும்புகின்றேன்.  அந்தக் கோட்பாட்டுக்கு ஒரு பெயர் சூட்டி அதை அரசியல் கருத்தியலாக நிலைநிறுத்துவது சரியா, தவறா என்பவற்றுக்கு அப்பால்… 

இந்நாவலின் நாயகனின் கருத்தியல் என்னைப் பொறுத்தவரை, இரண்டே. ஒன்று வாழு – வாழவிடு. இரண்டு வேற்றுமையில் ஒற்றுமை.

பொதுவாக மேலாண்மை, நிருவாகத் துறையில் இருப்போருக்குத் தெரிந்திருக்கும், ஏதாவது அபிவிருத்திப் பணிகள், செயற்றிடங்களை முன்மொழிந்து அனுமதி பெற்று நடைமுறைப்படுத்த முன்னர் முதன்மையாக ஒரு விடயத்தில் கவனம் செலுத்துவார்கள். பிரச்சினையை இனங்காணல் – Problem Identification. 

முதலில் ஒரு பிரச்சினை இருக்கிறதா, இருந்தால் அது எப்படி சூழ்ந்திருப்போரைப் பாதிக்கிறது, அதற்குத் தீர்வு காண்பதற்கான வழிவகைகள் என்ன என்பதை நன்கு ஆராய்ந்துவிட்டே பிரச்சினை பற்றி பேசத்தொடங்கவேண்டும். பிரச்சினை ஒன்று இருக்கிறது என்பதற்காக, பேசினால் பிரச்சனை பெரிதாகிவிடும் என்பதற்காக, அதன் மூலகாரணங்களை பேசாது தவிர்த்துவிட்டு  வெறுமனே சோடித்துப் பேசிக்கொண்டிருப்பதால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடாது. 

தமிழர்கள் இப்படி பிரச்சினைகளை மிகைப்படுத்தி பேசிப்பேசியே  பிரச்சினையைத் தீர்க்காமல் ஊதிப்பெருப்பித்து விடுபவர்கள் என்ற கருத்து ஒன்றுண்டு. சாதியொழிப்பு பற்றி இன்று மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டே இருக்கிறோம். சாதி ஒழிந்ததா? முதலில் சாதி இன்று சமூகத்தில் தவிர்க்கமுடியாத இடம்பிடித்து இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு, அதன் மூலவேரைக் கண்டு, அதைத் தீர்ப்பதற்கான வழிவகைகளையும் ஆராய்ந்த பின்னர் அல்லவா அதைத் தீர்ப்பது பற்றி சிந்திக்கவேண்டும்! சாதி என்ற ஒன்று இல்லை என்று வெறுமனே கூவிக் கொண்டிருப்பதால் பலனேதும் கிடைத்திருக்கிறதா, என்ன? மாறாக  மறுபக்கம் சாதிப் பற்று வலுவாகிக்கொண்டு செல்கின்றது என்று தான் சொல்லவேண்டும்.

பிரச்சினை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டால் தான் பிரச்சினையைத் தீர்க்கமுடியும், நோய் இருப்பதை ஏற்றுக்கொண்டால் தான் மருந்தெடுக்கமுடியும். தமிழ் பேசும் மக்களில் பல தரப்பினர் இருக்கிறார்கள், அவர்களுக்கு தங்களுக்குள்ளேயும் பெரும்பான்மைச் சமூகத்தினருடனும் வெவ்வேறு புவியியல், பண்பாட்டு, சமூகக் காரணங்களால் பிரச்சினை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்ட பின்னரே இன ஒற்றுமை, மொழிரீதி ஒற்றுமை என்றெல்லாம் பேசமுடியும். அப்படியெல்லாம் பிரச்சினை ஒன்றுமே இல்லை, அது செயற்கையானது என்பதை மட்டுமே கூறிக்கொண்டிருந்தால், பிரச்சினை தீர்ந்துவிடாது.

தமிழ்ச்சமூகம் சாதியத்துக்கு எதிராக இத்தனை ஆண்டுகளாக போராடி வந்தும், இன்றைக்கு வரைக்கும் சாதியத்தை அழித்து ஒழிக்க முடியவில்லை. ஏனென்றால் சாதியொழிப்புப் போராளிகள் எல்லோருமே “சாதிகள் உண்மையில் இல்லை” என்ற நிலைப்பாட்டில் நிற்பவர்கள். முதலில் சாதி என்ற ஒன்று இருக்கிறது என்று ஏற்றால் தான் சாதியை ஒழிக்க முடியும். வேற்றுமை ஒன்றிருக்கிறது என்று ஏற்றால்தான்  ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். இந்தச் சிக்கலைப் புரிந்துகொள்ளாமல், கிழக்கிலங்கையின் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக தீர்க்க வந்த சகல அரசியல் தலைவர்களுமே ஒரு சட்டாம்பி மனநிலையில் அல்லது ஒரு ஏகாதிபத்தியவாத மனோபாவத்துடன் அமர்ந்து கொண்டு அப்படியெல்லாம் பிரச்சனை இல்லை என்று கூறிக்கொண்டு தான் இன நல்லிணக்க நடவடிக்கையை முன்னெடுத்திருக்கிறார்கள்.  அதன் விளைவே நீறுபூத்த நெருப்பு இன்று கொழுந்துவிட்டெரிந்து  நல்லிணக்க முயற்சிகள் யாவும் வெளிப்படையாக தோல்வியில் முடிந்திருக்கின்றது.

பிட்டு வேறு தேங்காய்ப்பூ வேறு, என்பதை எற்றபின்னர் தான் “பிட்டும் தேங்காய்ப்பூவும்” பற்றிப் பேசவேண்டும். நாம் வேறுபட்டிருக்கிறோம், ஆனால் நம்மால் அந்த வேற்றுமையை ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக வாழமுடியும். நாம் வாழவேண்டும், அருகில் இருப்பவனும் வாழவேண்டும் என்பதால் அவனையும் வாழ விடவேண்டும். இப்படி ஒவ்வொரு சமூகமும் தான் பண்பாட்டால், மொழியால், வாழிடத்தால் வேறுபட்டவர்கள் என்பதை ஏற்றுகொண்டவாறே,  தன் அயலில் இன்னொரு சமூகத்தின் இருப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்படி ஏற்றுக்கொள்வது மட்டுமன்றி,  அந்தந்தச் சமூகங்கள் தன் சுயலாபத்துக்காக இன்னொரு சமூகத்துக்குத் தீங்கிழைக்கக் கூடாது என்ற அறத்தையும் கடைப்பிடிக்கவேண்டும். இது தமிழர் தங்களுக்குள் அல்ல; இதைப் படிக்கும் எம்மொழி பேசும், எந்நெறி நிற்கும் மானுடனும் கடைப்பிடிக்கவேண்டிய பொது அறம் என்பதே அடிப்படை. இதைச் சொல்லும் “வாழு – வாழவிடு, வேற்றுமையில் ஒற்றுமை” என்பதே இந்நாவலின் நாயகனின் கருத்தியல் என்று நான் புரிந்துகொள்கிறேன்.

நாயகனைத் தன் பிரதிவிம்பமாகவே நாவலாசிரியர் படைத்துள்ளபோதும், அவனும் ஆசாபாசங்கள் கொண்ட சாதாரண  மானுடன் தான் என்பதை பல இடங்களில் நாவலாசிரியர் குறிப்பிட்டுக்காட்ட விரும்பியுள்ளார்.  எனவே அவனது கருத்தியல் சார்ந்த அவனது எல்லா நடவடிக்கைகளுமே ஏற்கத்தக்கவையா என்பது வாசகரைப் பொறுத்து வேறுபடலாம். இந்நாவலின் தொண்ணூற்றொன்பது விழுக்காடு பாத்திரங்கள் இரத்தமும் சதையுமாக இம்மண்ணில் வாழ்ந்த அல்லது வாழ்கின்ற மனிதர்கள் என்ற ரீதியில் நாயகன் எதிர்கொண்ட போட்டி பொறாமைகள், பழிவாங்கல்கள் பெயர் குறிப்பிட்டே சித்தரிக்கபட்டுள்ள விதம் சில வாசகருக்கு அசௌகரியத்தையும் ஆவேசத்தையும் உண்டுபண்ணலாம். அந்தத் தார்மிகக் கோபங்களுக்கான வலுவான நியாயமும் இருக்கலாம். அவையல்ல நான் சுட்டிக்காட்ட விரும்புவது. வெறுமனே வட இலங்கை எதிர்ப்பு, சோனக எதிர்ப்பு, சிங்கள எதிர்ப்பு என்ற கோணங்களில் மட்டும் வாசிப்பதற்கு மேல்,  ஒரு இலட்சியவாதப் பார்வை  இந்நாவலின் அடிநாதமாக இருக்கிறது என்பதை மாத்திரம் கருத்தியல் சார்ந்து நான் பதிவுசெய்ய விழைகிறேன்.   

இந்த வேற்றுமை உணரப்பட்டு தமிழ் – சோனக சமூகங்கள் ஒற்றுமையாக வாழ்ந்த இனிய அந்தக்காலம் இந்நூலில் விரிவாகவே பதிவாகியுள்ளது. அவுலியாக்களின் சியாரங்களை அல்லது இசுலாமியத் துறவியரின் அடக்கத்தலங்களை இங்கிருந்த சைவத் தமிழர் வழிபட்டமை, அம்மன் கோவில்களுக்கு சோனகர் வந்து வழிபட்டமை, சோனகர் வழிபட்ட விசக்கல் முதலியன, சுன்னத்துக் கலியாணத்தில் தமிழர்கள் கலந்துகொள்வது, ஆடல் பாடல் நிகழ்த்துவது என்று இன்ன பல. அதை அனுபவித்த  சிலருக்கு மீண்டும் அக்காலம் வராதா என்ற ஏக்கம் பெருமூச்சு எழும். 

இறுதியாக…முடிவுரை.

சுவாரசியமான விடயமொன்றைக் கூறியாகவேண்டும். இந்நாவலில் ஏராளமான நிஜ மாந்தர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டேன். அவர்களில் நாயகன் தவிர, நான் நேரடியாக நெருங்கிப் பழகிய இன்னும் ஒரே ஒருவர் இந்நாவலில் இடம் பெற்றிருக்கிறார். அவர், திரு.ந.தர்மலிங்கம். இந்நாவலின் பாட்டுடைத் தலைவனான முன்னாள் பா.உ. கனகரட்ணத்தை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றவர் அவர். சொல்லப்போனால் இந்நாவலில் எதிர்நாயகன். 

திரு.ந.தர்மலிங்கம் அவர்கள், என் தம்பிலுவில் ஊரைச் சேர்ந்தவர். எங்கள் தூரத்து உறவினர், குடும்ப நண்பர். அவரது மகளார் திருமதி பிரபா அம்மையாரிடம் தரம் ஐந்து  வரை பாடசாலையில்  ஆங்கிலம் கற்றவன் நான். ஆங்கில தினப் போட்டிகளுக்கான பயிற்சி வகுப்புகள், மேலதிக பாடசாலை ஆங்கிலப் பிரத்தியேக வகுப்புகள் என்று,  அங்கு செல்லும் என்னை வீட்டுக்கு ஏற்றி வர சிலநேரங்களில்  அங்கு வரும் தந்தையார் தர்மலிங்கம் அப்பச்சியோடு உரையாடிய படி எனக்காகக் காத்திருப்பார். நரைத்த முடி, மூக்குக்கண்ணாடி, அட்டணக்கால், சாரம், முன்புறம் மடித்து வைத்த ஒரு செய்தித்தாள். சிலநேரங்களில் ஆங்கிலத்திலும் வெளுத்து வாங்கும் அவரை அந்த வயதிலே கண்டு வியந்திருக்கிறேன். 

அப்படி நான் கண்டு வியந்த ஒரு சிறுவயது  ஆதர்சத்தை எதிர்மறைப் பாத்திரமாக் சித்தரித்த இந்நாவலை அந்த முரண் பார்வைக்கோணத்துடன் வாசிப்பது எனக்கு விசித்திரமான வாசிப்பனுபவம் ஒன்றை வழங்கியிருந்தது. எது எப்படியோ நாவல் இறுதியில் திரு.கனகரத்தினம் அவர்களின் ஆளுமையை  வியக்கும் ஒருவனாக மாறியிருந்தேன். நாவலில் பல இடங்களில் முயன்றது போலவே தர்மலிங்கம் தரப்பைச் சேர்ந்த ஒருவனை நன்கு பிரச்சாரம் செய்து கனகரெட்ணம் தரப்புக்கு இழுக்கும் முயற்சியில் –  ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னும் – கோகுலன் வென்றுவிட்டார் எனலாமா? 

இறுதியாக, இந்நாவலின் கதாநாயகர் திரு.எம்.கனகரட்ணம் அவர்கள்.  அவர் பெயரில் என் ஊரில் கனகரட்ணம் வித்தியாலயம் என்ற ஒரு பாடசாலை உண்டு. அவர் பெயரில் கனகநகர் என்ற ஒரு குடியேற்றத்திட்டமும் உண்டு. ஆனால் அந்தச் சின்னச்சின்ன அடையாளங்கள் தவிர ஐம்பதாண்டுகளில் அந்த அரசியல் ஆளுமை முற்றிலும் மறக்கடிக்கப்பட்டு விட்டார். அவரைப்  பற்றி அறியாத தலைமுறையொன்று உருவாகிவிட்டது. 

சரிதான். அவரது அரசியல் மீது விமர்சனங்கள் கொண்டோர் பலர் இருக்கலாம். விமர்சனம் இல்லாமல் எந்த ஆளுமையையும் நாம் ஏற்பதில்லை தான் – நாவலர், பாரதி உட்பட. அவ்வாறே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, தான் ஆற்றிய சேவைகளுக்காக திரு.கனகரட்ணம் அவர்கள் மட்டு. அம்பாறை மாவட்டங்களின் தமிழரால் நினைவுகூரப்படவேண்டியவர். அதற்கு இந்த நாவல் முதன்மையான முன்முயற்சிகளில் ஒன்று என்றே கூறலாம். 

கனகர் கிராமம் சில நாட்களுக்கு முன்னர் உத்தியோகரீதியாக திறந்து வைக்கப்பட்டதாகவும், அதில் இனமத வேறுபாடின்றி பலர் பங்களித்துள்ளதையும் இன்று அறிந்தேன். ஆனால் 2019இல் கோகுலன் கண்ட கனவு இன்னும் முற்றிலும் நனவாகவில்லை என்பது உண்மை. 

பல்வேறு மேடைகளில் சொல்லப்படும் விடயம் லீகுவான்யூ கனவு கண்ட இலங்கையும் இன்று இலங்கை கனவு காணும் சிங்கப்பூரும். நாடு சுதந்திரமடைந்து எண்பதாண்டுகளுக்குப் பின்னும், உள்நாட்டுப்போர் முடிந்து பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னும் நாடு இன்னும் பின்தங்கியே இருக்கின்றதைக் காண்கிறோம். அத்தனைக்கும் பின்னும் நம் தனிப்பட்ட , ஊர் சார்ந்த, சமூகம் சார்ந்த சுயலாபங்களும், பேராசைகளும் புரையோடிப்போயிருப்பதைக் காண்கிறோம். தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு சகுனப்பிழையாகட்டும் என்று எண்ணும் போக்கும் இனங்களிடையே, சமூகங்களிடையே வேரூன்றியுள்ள வன்மமும் வெறுப்பும் சிறிதும் குறையவில்லை என்பதையும் பார்க்கிறோம். 

நாட்டை, நாட்டிலுள்ள நம்மை முன்னேற்ற இனமத வேறுபாடின்றி இலங்கையர் அனைவரும் கைகோர்க்கவேண்டும். அப்படி இணைவதற்கு முன்னர் இங்கு பண்பாட்டால், நிலத்தால், மொழியால் மாறுபட்டோர் பலர் நம்முள் இருக்கிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்த ஏற்பின் பின்னர் தான் கனவுகள் நனவாகும். – அது லீகுவான்யூவாக இருந்தால் என்ன, கனகரட்ணமாக இருந்தால் என்ன, கோகுலனாக இருந்தால் என்ன. 

அதுவரை… கனவு கண்டு கொண்டே இருப்போம். கனகர் கிராமமொன்றை… கனவு  இலங்கையொன்றை…



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *