— அழகு குணசீலன் —
இலங்கையின் ஜனநாயக அரசியலில் மையமாக கருதப்படுகின்ற பாராளுமன்றத்தின் நிறைவேற்று சட்டவாக்க அதிகாரம், நீதி, நிர்வாகம் என்ற மூன்று தூண்களும் பொய்களினாலும், புனைகதைகளினாலும் கட்டி எழுப்பப்பட்ட கட்சி அரசியல் சார்பு, காழ்ப்புணர்ச்சியாக காட்சிப்படுத்தப்படுகிறது.
தனிநபர் தாக்குதல்களும், தரவுகள், விபரங்கள் பற்றாக்குறையும் கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கமுடியும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமையை பயன்படுத்தி எதையும் பேசிவிட்டு போகலாம் என்ற அரசியல் வறுமை எமது பாராளுமன்ற உறுப்பினர்களிடையே மலிந்து விட்டது. பாராளுமன்ற ஜனநாயகத்தை மலினப்படுத்துகிறது.
அண்மையில் பாராளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து 12 வது முறையாகவும் விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு, தமிழரசுக்கட்சி எம்.பி. சாணக்கியன் தனது விவாதத்திற்கு சில சான்றுகளை முன்வைக்க முயன்று மூக்குடைபட்ட கதையாகவும் இது இருக்கலாம். ஈஸ்டர் தாக்குதல்களின் எட்டு குண்டுதாரிகளும் யார் என்பதும், குழுத்தலைவர் யார் என்பதும் வெளிப்படையானது. ஆனால் அதற்கு பின்னால் உள்ள சூத்திரதாரியை தேடும் படலமே இன்றைய இலங்கை அரசியலாகிவிட்டது. தாக்குதல்கள் நடந்த போது பாதுகாப்பு அமைச்சராகவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன அந்த சக்தி வாய்ந்த சூத்திரதாரியை இலங்கையால் எதிர்கொள்ள முடியாது என்று கையைவிரித்து பல ஆண்டுகள் கடந்து விட்டன. கம்மன்பெலவின் புத்தக வெளியீட்டில் சூத்திரதாரிகள் முன் வரிசையில் அமர்ந்திருக்க கண்டதாக அரசாங்க, எதிர்தரப்பினர் கூறுகின்றனர். அப்படியானால் இன்னும் இவர்கள் யாரைத்தேடுகிறார்கள்?
விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் கருத்து பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் “பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல்” தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்துவதுடன், பிள்ளையான் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சில தகவல்களை அறிந்திருந்தார் என்று கூறியிருக்கிறார். இந்த தகவல்களை பிள்ளையான் தனது “ஈஸ்டர் படுகொலை: இன-மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும்” என்ற நூலில் குறிப்பிடாதவையா? என்பது அமைச்சருக்கே வெளிச்சம்.
இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு எம்.பி.இ.சாணக்கியன் “எழுதத்தெரியாத பிள்ளையான்” எப்படி புத்தகம் எழுத முடியும் என்று பாராளுமன்றத்தில் கேட்டிருக்கிறார். எழுதத் தெரியாதவர்கள் எழுதியிருந்தால் கேட்கவேண்டிய கேள்விதான். ஆனால் சாணக்கியன் போன்ற “வாசிக்கத் தெரியாதவர்கள்” இந்த கேள்வியை எழுப்புவதுதான் வேடிக்கை.
பாராளுமன்ற சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்து இரண்டு உண்மையற்ற, குழப்பமான தகவல்களை சாணக்கியன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
1. பிள்ளையான் சிறை அனுபவங்களையும், தனது சுயசரிதையையும் கலந்து எழுதிய “வேட்கை” என்ற நூலை ” வேட்டை” என்று குறிப்பிட்டு தனது வாசிப்பு பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளார் சாணக்கியன். . இந்த நூல் ஈஸ்டர் படுகொலைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் 2017, செப்டம்பர், 9ம் திகதி மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. “வேட்கை” நூலுக்கும் ஈஸ்டர் படுகொலைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சாணக்கியனின் கருத்துப்படி அவர் உச்சரிப்பு பிழையாக சொல்லும் “வேட்டை” 2021- 2022 இல் வெளியிடப்பட்டதாக கூறுவதில் உண்மை இல்லை.
2. ஈஸ்டர் படுகொலை குறித்து பிள்ளையான் எழுதிய நூல் பிள்ளையானின் இரண்டாவது நூல். இதுவே “ஈஸ்டர் படுகொலை இன-மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும்”. இந்த புத்தகம் 2024 மார்ச் 23 ம் நாள் மட்டக்களப்பு அஞ்சனா மண்டபத்தில் வெளியிடப்பட்டது. சாணக்கியனுக்கு இது விடயத்தில் தெளிவில்லை. இதனால் பிள்ளையானின் இரண்டு வெவ்வேறு படைப்புக்களை ஒன்றாகப்போட்டு குழப்பியுள்ளார். இதற்கு பெயர் – கலங்கிய குளத்தில் மீன் பிடிக்கும் கட்சி காழ்ப்புணர்ச்சி -சந்தர்ப்பவாத அரசியல் கண்களை மூடிக்கொண்டு வலையை வீசலாம். ஏதும் பட்டாலும் படும். படாவிட்டாலும் சேதாரம் இல்லை. இந்த நூலை சாணக்கியன் கருதியிருந்தால், 2021- 2022 என்பது அவரின் தவறான தகவல். இவை சிறப்புரிமையை பயன்படுத்தி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை பயன்படுத்தி தவறான தரவுகளை சமூகமயமாக்க வழி வகுக்கிறார்கள் என்பதற்கு சிறந்த உதாரணங்கள்.
சாணக்கியனின் கூற்றுப்படி “வேட்டை” நூலை பிள்ளையான் எழுதவில்லை என்றும், எழுதத்தெரியாதவர் எப்படி எழுத முடியும் என்றும் கேள்வி எழுப்புகிறார். பிள்ளையானுக்கு இது போன்ற சாணக்கியனின் நிலப்பிரபுத்துவ மேட்டுக்குடி தடிப்பு உளவியல் ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே சமூக நாகரிகத்திற்கு மாறாக அநாகரிகமாக படிக்காதவன், மாடு மேய்த்தவன், வேடன்… போன்ற பல சமூக அநீதியான வார்த்தைகளை சாணக்கியன் பயன்படுத்தி இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த விடயம். ஆனால் இவை அனைத்தும் கொண்ட பிள்ளையானின் மக்கள் அரசியலை விடவும் மேலான அரசியலை, சாணக்கியனாலும், தமிழரசுகட்சியினாலும் மட்டக்களப்பு மக்களுக்கு மாகாணசபை ஊடாகவும், எம்.பி.பதவி ஊடாகவும் வழங்கமுடியாமல் இருப்பதும் ஈஸ்டர் தாக்குதல் போன்ற ஒரு பெரும் துயரம் தான்.
பிள்ளையானின் “வேட்கை”, சாணக்கியனின் தமிழ் வாசிப்பில் “வேட்டை”. உண்மையில் சாணக்கியன் சொல்ல வருவது பிள்ளையான் எழுதிய ஈஸ்டர் படுகொலை தொடர்பான நூலைத் தான் என்று கொள்ள வேண்டியுள்ளது. இந்த நூலை பிள்ளையான் எழுதவில்லை என்று கூறும் சாணக்கியன், அதை எழுதியவர் ஹோஹான் குணரட்ன என்றும், அவர் தொழில் நுட்பத்தில் பாதுகாப்பு ஆய்வுகள் பேராசிரியராக இருக்கிறார் என்றும் கூறுகிறார். இவை அனைத்தும் தவறுகள் நிறைந்த தரவுகள் என்றாலும் பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி ஒப்புவிக்கப்பட்டவை. சாணக்கியன் பொதுவெளியில்- பாராளுமன்றத்திற்கு வெளியில் ஹோஹான் குணரட்ன தான் இந்த நூலை எழுதியவர் என்பதை நிரூபிப்பதே அரசியல் நேர்மையாக அமையும். அவர் இன்னொரு விசாரணைக்குழுவை கோரவேண்டியதில்லை. இருப்பதிலேயே சுயவிருப்பில் ஆஜராகலாம்.
பாராளுமன்றத்திற்குள் எம்.பி.க்கள் வெளியிடும் தவறான கருத்துக்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாராளுமன்ற சிறப்புரிமை தடுக்கிறது. அவர்களை பாதுகாக்கிறது. இதனால் சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்து பொய் சொல்லுவதற்கான முழு வாய்ப்பையும் இது வழங்குகிறது. இதற்கு காரணம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் அறம் தவறாமல், நேர்மையாக, உண்மைகளையே பேசுவார்கள் என்ற எடுகோளின் அடிப்படையிலான ஜனநாயக விழுமியம். இதற்கு மாறாக இருதரப்பு அரசியல் வாதிகளும் இந்த துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றனர். சட்டவாக்க சபையின் உறுப்பினர்களாக சட்டங்களை உருவாக்கும் இவர்களாலேயே அவர்கள் உருவாக்கிய சட்டங்களின் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க முடியவில்லை என்றால் இந்த சட்டவாக்க நடைமுறையும், சட்டங்களும் அப்பாவி மக்களுக்கு மட்டும் தானா?
ஈஸ்டர் படுகொலை விவகாரம் ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் இருட்டில் இருக்கிறது. அமைச்சர் ஆனந்த விஜயபால பாராளுமன்றத்தில் ஒன்பதாம் திகதி ஆற்றிய உரையில், கம்மன்பெலவின் நூல் பேசுகின்ற சில விடயங்களை பேசுவதன் மூலம் சில சந்தர்ப்பங்களில் இணங்கிப் போகிறார். இணங்கிப் போகாத விடயங்களும் உண்டு. ஆனாலும் சூத்திரதாரியை தேடுதல் படலம் அரசாங்க, எதிர்த்தரப்புகளில் இன்னும் தெளிவாக இல்லை. இருதரப்பு கட்சி அரசியல் நலனுக்குள் மக்களின் துயர் அடிபட்டுப்போகிறது.
மைத்திரிபால சிறிசேனவின் “அந்த மாபெரும் சக்தி”, அரசாங்க/ எதிர்த்தரப்புக்கள் பேசுகின்ற கம்மன்பெலவின் புத்தக வெளியீட்டில் முன்வரிசையில் அமர்ந்து இருந்த “பிரதான சூத்திரதாரிகள்”, அன்று சாரா இந்தியாவுக்கு தப்பி சென்று விட்டார் என்று கூறிய இன்றைய ஜே.வி.பி.அமைச்சர், மற்றும் சஜீத் கட்சியில் உள்ள முஜிபுர் ரஹ்மான் போன்ற அரசியல் வாதிகளின் இந்தியாவை நோக்கிய மறைமுக சுட்டுவிரல் ..இவற்றிற்குள் தான் பிரதான சூத்திரதாரி மறைந்திருக்கிறார் என்றால், ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் சுரேஷ் சாலேயின் கைதுக்கும் அப்பால் நகர்வது சாத்தியமற்றது. அநுர அரசாங்கத்தால் மட்டும் அல்ல எந்த அரசாங்கமும் இதைச் சாதிக்க வாய்ப்பில்லை. மேற் குறிப்பிட்ட மூன்று தரப்பு தேங்காய்களும் ஒரு கல்லில் சந்திக்கும் போது பிராந்திய பூகோள அரசியல் வெடித்துச் சிதறும். அவ்வளவுதான்…!
