சொல்லித்தான் ஆகவேண்டும்:        ‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர். (சொல்-53) 

சொல்லித்தான் ஆகவேண்டும்: ‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர். (சொல்-53) 

 

— தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —

 அண்மைக் காலத்தில் இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் உத்தேச புதிய அரசியலமைப்புக் குறித்தும் அதில் இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த ‘சமஸ்டி’ அடிப்படையில் இடம்பெற வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று குறிசுடப்பட்டுள்ள கட்சிகள் மாநாடுகள் கூடித் தீர்மானங்களை நிறைவேற்றுவதையும் அறிக்கைகள் விடுவதையும் 1985இல் முன்வைக்கப்பெற்ற திம்புக் கோட்பாடுகள் மற்றும் 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் (தமிழீழத் தனி நாட்டுத் தீர்மானம்) ஆகியவற்றை மீண்டும் தூசி தட்டியெடுத்து அவை குறித்தும் பேசப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. இவையெல்லாம் வழமைபோல் வெறுமனே ஏட்டுச் சுரக்காய் அரசியல் செயற்பாடுகள்தான்.

 கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய அரசியலமைப்பு வாக்குறுதியையும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கி ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ள தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே புதிய அரசியலமைப்பு விவகாரத்தை நெடுங்கயிற்றில் விட்டுள்ளது. 

புதிய அரசியலமைப்பு விவகாரம் கிணற்றுக்குள் தூக்கிப்போட்ட கல்லைப்போல் கிடக்கிறது. நிலைமை இப்படியிருக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் (?) மட்டும் புதிய அரசியலமைப்பு குறித்து வெளியிடுகின்ற எதிர்பார்ப்புகள் யாவுமே விழலுக்கு இறைத்த நீர்தான்.

 இந்த அரசாங்கத்தின் காலத்தில் புதிய அரசியலமைப்பு வருவதற்கான சாத்தியமேயில்லை. அப்படி வந்தாலும்கூட அது தமிழ்த் தேசியக் கட்சிகள் எதிர்பார்ப்பதைப்போல இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வை (சமஷ்டியை) உள்ளடக்கியதாக இருப்பதற்கும் சாத்தியமில்லை. அதிகாரப் பகிர்வைப் பொறுத்தவரை எந்தக் கட்சி அரசாங்கம் வந்தாலும் இப்போது அமுலிலுள்ள 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்குப் பகிரப்பட்டுள்ள அதிகாரங்களைவிடக் கடுகளவுதானும் கூடியதாக அது அமையப்போவதில்லை.

 இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை புதிய அரசியலமைப்பு ஒரு மாயமான்; கானல் நீர். அதனை எதிர்பார்த்து இருப்பது இலவு காத்த கிளியின் கதையாகத்தான் முடியும். 

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அதிகாரப் பகிர்வுக்காகக் கடந்த காலத்தில் கிடைத்த பல அரிய சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் ஆரம்ப காலத்தில் அரசியல் மதீயீனத்தாலும் பின்னர் சண்டித்தனத்தினாலும் தொலைத்துவிட்டோம். இறுதியில் விவேகமற்ற வீரம் உயிரழிவுகளையும் சொத்தொழிவுகளையும் விளைவித்த பின்னர் தமிழர்களைப் பிச்சை வேணாம், நாயைப் பிடி எனும் நிலைக்குத் தள்ளிவிட்டு கையறு நிலையில் திக்குத் தெரியாத காட்டில் கண்களைக் கட்டிவிட்ட நிலைக்கு ஆக்கிவிட்டு 2009 இல் முள்ளிவாய்க்காலில் அப்பாவி தமிழர்களைச் சமாதியாக்கித் தானும் சமாதி அடைந்தது. 

 பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தில் ஓட்டைகள் (குறைபாடுகள்) இருந்தாலும்கூட அந்த ஓட்டைகளை அடைக்கின்ற வல்லமை இந்திய அரசாங்கத்திற்கு மட்டுமே உண்டு. இலங்கைத் தமிழர்களின் இருப்பைக் காப்பதற்கான ஒரே ஒரு கவசம் 1987இல் கைச்சாத்திடப்பெற்ற இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் மட்டுமே. 

 1987-இல் கைச்சாத்திடப்பெற்ற இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம் 39 வருடங்களைக் கடந்தும்கூட இன்னும் முழுமையாகவும் முறையாகவும் அர்த்தமுள்ள விதத்திலும் அமுல் செய்யப்படவில்லை என்பது உண்மைதான். அதற்குக் காரணம் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் மட்டுமல்ல தமிழர் தரப்பும்தான் (தமிழீழ விடுதலைப் புலிகளும்தான்).

 39 வருடங்கள் கடந்தும் அது அமுல் செய்யப்படவில்லை என்பதற்காக அதனை நிராகரிப்பதோ அல்லது எதிர்ப்பதோ அல்லது கைகழுவி விடுவதோ அரசியல் புத்திசாலித்தனமல்ல. அதனைக் கைவிடுவது தமிழர்களைப் பொறுத்தவரை எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

 புதிய அரசியலமைப்பின் மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வாக சமஸ்டி கிடைக்குமென எதிர்பார்த்து இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கைவிடுவது பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டுக் கோவணத்தை இழந்ததற்கு ஒப்பாகும். அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட முடியாது. நாளை வரும் பலாக்காயிலும் பார்க்க இன்றுள்ள கிளாக்காய் நன்று. 

 இந்த அரசியல் யதார்த்தத்தை அறிவு பூர்வமாகப் புரிந்துகொண்டு அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் காலங்கடந்தாயினும் முழுமையாக அமுல் செய்வதற்கான இராஜதந்திர அரசியல் வியூகத்தை வகுப்பதற்குக் கூட்டாக முன்வர வேண்டும். இது ஒன்றே இலங்கைத் தமிழர்களின் இருப்பை எதிர்காலத்தில் ஓரளவேனும் காப்பாற்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *