இயக்கச்சி படையினரின் ஆக்கிரமிப்பு நில மீட்பு போராட்டத்தில் கட்சி அரசியல்

இயக்கச்சி படையினரின் ஆக்கிரமிப்பு நில மீட்பு போராட்டத்தில் கட்சி அரசியல்

— கருணாகரன் —

இயக்கச்சியில் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமது நிலத்தை விடுவிக்குமாறு கோரி நில உரிமையாளர்களும் அந்தப் பகுதி மக்களும்  போராட்டத்தை(2026.04.02) முன்னெடுத்திருந்தனர். இலங்கை இராணுவத்தின் 4வது படைப்பிரிவின் மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணி “முகாம் அமைத்திருக்கும் பொதுமக்களுக்கு உருத்துடைய காணிகளை” அளவீடு செய்து சுவீகரிப்பதற்கு முயற்சிக்கிறது. இதை எதிர்த்தே மக்கள் போராட்டத்தை மேற்கொண்டனர். இந்தப் போராட்டத்துக்கு  ஆதரவாக இலங்கைத் தமிழரசுக் கட்சி, சமத்துவக் கட்சி, அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்தோரும் காணி ஆக்கிரமிப்புக்கு எதிரான செயற்பாட்டாளர்களும் இணைந்திருந்தனர். 

போராட்டத்தைப் பிளவுபடுத்திப் பலவீனப்படுத்துவதற்கான முயற்சி

மக்கள் போராட்டத்தை ஆரம்பிப்பதற்குத் தயாரான வேளை, எதிர்பாராத விதமாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன், “எங்களுடைய கட்சிக்காரர் எல்லாரும் இந்தப் பக்கமாக வாருங்கள்” என்று தனியாக அழைத்துச் சென்றார். அவர் அப்படிச் சொன்னதை அவரோடு அங்கே கூடிநின்ற பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் உட்பட ஏனைய பிரதேச சபை உறுப்பினர்களோ, சிறிதரனின் ஆதரவாளர்களோ கண்டிக்கவும் இல்லை. அது தவறான செயல் என்று சொல்லவும் இல்லை. அவர்கள் சிறிதரனின் சொல்லை ஏற்று அவருக்குப் பின்னால் சென்றனர்.

இது  அங்கே – போராட்டக்களத்தில் கூடியிருந்த மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை உடனேயே அங்கே கூடியிருந்த மக்களில் ஒரு தொகுதியினர் கடுமையாக ஆட்சேபித்தனர். “இது அரசியற் கட்சிகளின் போராட்டமும் அல்ல. இதை உங்களுக்கான அரசியலாக ஆக்கிப் பார்க்கவும் வேண்டாம்” என்று நேரடியாகவே சொன்னார்கள். 

“இப்படித் தனித்தனியாகப் பிரிந்தும் பிளவுபட்டும் நின்றால், அது படையினருக்கும் அரசுக்கும்தான் ஆதாயமாகும். மக்கள் போராட்டம் என்பது ஒற்றுமையாக, ஓரணியாக நடக்க வேண்டும். மக்களாகிய நாம் அதையே எதிர்பார்க்கிறோம். இப்படி ஆளாளுக்கு பிரிந்து நிற்பது நல்லதல்ல. இது பிரித்தாளும் தந்திரத்துக்கே நம்மைப் பலியிடுவதாக அமையும்” என்று சிலர் அந்த இடத்திலேயே சத்தமாகச் சொன்னார்கள். 

மக்களுடைய இந்தக் கருத்து  சரியானது. 

மக்களுடைய போராட்டத்தின்போது, அது நிகழும் களத்திலே திரண்டிருக்கும் மக்களை இப்படித் திடீரென அணிகளாகப் பிரிப்பது குழப்பத்தை உண்டாக்கும். இந்தக் குழப்பம் எதிர்த்தரப்புக்கு அதாவது ஒடுக்குமுறையாளர்களுக்கே சாதமாக அமையும். சிறிதரன் அநேகமான சந்தர்ப்பங்களில் இவ்வாறு செய்கிறார். இதனால்தான் அவரை, ‘அரசுக்குச் சாதமாகச் செயற்படுகிறார்’ என்று அவர் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினரே கண்டித்து வருகின்றனர். எதிர்த்தரப்பினர் கண்டித்தால் அது அரசியல் எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு என்று சொல்லலாம். இது அப்படியல்ல. அவருடைய சொந்தக் கட்சியினரின் வலுவான குற்றச்சாட்டாகும். 

சிறிதரனின் இந்தக் குறைபாடும் இவ்விதமான செயற்பாடும் இயக்கச்சியில் நடந்த அந்தப் போராட்டத்தில் இது மட்டும் நிகழவில்லை. வெவ்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு சூழல்களிலும் நிகழ்ந்து வருகிறது. ஏன் பாராளுமன்ற விவகாரங்களிலும் நடந்து வருகிறது. 

நான்கு தடவை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கின்ற ஒருவரிடம் அரசியல் முதிர்ச்சியும் அரசியல் நாகரீகமும் விவேகமும் வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு இலக்கு வைத்தவர் சிறிதரன்; அதற்குத்தேர்வு செய்யப்பட்டவர். அப்படியானவர் அரசியல் வெளியில், மக்கள் போராட்டங்களில், பொது அரங்குகளில் மிக நிதானமாகவும் பொறுப்புணர்வோடும் நடந்து கொள்வது அவசியம். பிறருக்கும் அவரைத் தொடர்வோருக்கும் தன்னுடைய சிறந்த வழிகாட்டல்களையும் நற்பண்புகளையும் செயற்பாடுகளில் வழியாகக் காட்ட வேண்டும். 

ஆனால் நடப்பது என்ன? இதைப்பற்றி இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் மேலும் பேசலாம். 

மக்களின் அதிரடித் திருப்பம்:

சிறிதரன் அப்படிச் சொன்னாலும் மக்கள் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அவர்களுக்குத் தமது போராட்டமும் தமது காணியை விட்டு இராணுவம் வெளியேறுவதுமே முக்கியமானதாகும். ஆகவே தமது சொந்த நிலத்தை விட்டு படையினரை வெளியேறுமாறு மக்கள் போராடிக் கொண்டிருந்தவேளை திடீரென, ஆக்ரோசமாகப்  படையினரின் பிரதான வாசலை நோக்கி விரைந்து சென்றனர். அந்த மக்களோடு இணைந்து சமத்துவக் கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமாரும் சென்றார். அப்படி விரைந்து சென்ற மக்களைக் கண்டு ஒரு கணம் படையினர் தடுமாறி விட்டனர். உண்மையில் அதுவரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த படையினருக்கு அதொரு திடீர் அதிர்ச்சி (sudden shock) யே. அதுவரையிலும் படைமுகாமுக்கு எதிர்ப்பக்கமாக, வீதியோரத்தில் கூடியிருந்த மக்களை வழிப்படுத்திக் கொண்டிருந்த காவல்துறைக்கும் இது அதிர்ச்சி (shock) தான். 

எப்படியோ தம்மைச் சுதாகரித்துக் கொண்டு படைமுகாம் வாசலை நோக்கி ஓடிச் சென்ற காவல்துறையினர், தடுப்பு அணியாக வாசலை மறித்து நின்றனர்.

படைமுகாம் வாசலை அடைத்து நின்ற மக்களிடம் பொலிஸ் உயரதிகாரி, மக்களை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு கேட்டார். மக்கள் அதைப் பொருட்படுத்தவேயில்லை. அவர்கள், ‘எங்கள் நிலம்  எமக்கு வேண்டும்’. ‘படையினருக்கு இங்கே என்ன வேலை?’ ‘யுத்தம் முடிந்து 17 ஆண்டுகளாகி விட்டது. இதற்குப் பிறகும் ஏன் இராணுவம் மக்களுடைய காணிகளில் இருக்க வேண்டும்?’, ‘இதோ எங்களுடைய காணிக்கான உறுதிப்பத்திரம். உங்களிடம் என்ன ஆதாரம் உண்டு?’, ‘இது  மக்களுக்கான ஆட்சியா? படைகளுக்கான அரசாங்கமா?’, ‘படையே வெளியேறு. எங்கள் நிலங்கள் எமக்கே வேண்டும்’, ‘எங்கள் காணிகளை விட்டுப் படையினரைப் போகச் சொல்லுங்கள். காணி உரித்துடைய மக்களாகிய எங்களை எப்படி நீங்கள் விரட்டலாம்? என்றெல்லாம் கேட்டுத் தொடர்ந்து குரலிட்டுக் கொண்டிருந்தனர்.   

மக்களுக்கு ஆதரவாக சந்திரகுமாரும் (அவரும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்) பொலிசாருடன் விவாதத்தில் ஈடுபட்டார். “மக்களுடைய நியாயத்தையும் அவர்களுடைய உணர்வுகளையும் புரிந்து கொள்ளுங்கள். யுத்தம் முடிந்து17 ஆண்டுகளுக்குப் பிறகும், மீள் குடியேற்றம் நிகழ்ந்து முடிந்த பிறகும், மீள்குடியேற்ற அமைச்சின் பணிகள் முடிந்த பிறகும் படைகள் மக்களுடைய காணிகளில் – அவர்களுடைய வசிப்பிடங்களில் வாழ்வது எந்த வகையில் நியாயம்?” என்று சந்திரகுமார் பொலிஸ் அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார்.

மக்களுடைய போராட்டத்தின் தாற்பரியத்தை – அதனுடைய உண்மையான நிலவரத்தை உணர்ந்தாலும் காவல்துறையினரால் அதை அனுமதிக்க முடியவில்லை. படைமுகாம் வாசலை அடைக்காமல் ஓரமாக நின்று போடுமாறு பொலிஸ் உயர் அதிகாரி கேட்டார். 

மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதே ஆக்கிரமிப்பாளருக்கும் ஒடுக்குமுறையாளருக்கும் நெருக்கடி கொடுப்பதற்கே தவிர, அவர்களுடைய வசதிகளுக்காக அல்ல. ஆகவே மக்கள் அசைய மறுத்து சில மணிநேரம் குரல் எழுப்பியபடியே நின்றனர். 

அந்தச் சில மணி நேரம் படையினருக்கும் பொலிசாருக்கும் பெரிய நெருக்கடியாகவும் சங்கடமாகவும் இருந்தது. 

ஊடகவியலாளர் சந்திப்பு:

போராட்டக் காட்சிகளைப் படமாக்கிய ஊடகர்கள், மக்களிடத்திலும் அரசியற் தரப்புகளிடமும் நேர்காணல்களைச் செய்தனர். அநேகமான போராட்டத்தின்போது ஊடகவியலாளர்களும் கட்சிகளின் YouTupe பர்களும் தடுமாறுவதுண்டு. பாதிப்புக்குள்ளாகிய மக்கள் தங்களுக்கான நீதிக்காக ஆக்ரோஷமாகவும் உணர்வுபூர்வமாகவும் போராடுவார்கள். ஏனெனில் அது அவர்களுடைய வாழ்க்கையோடும் வாழ்க்கைக்கான அடிப்படைகளோடும் நேரடியாகச் சம்மந்தப்பட்டிருப்பது. ஆகவே அவர்களுடைய ஒவ்வொரு சொல்லும் பெறுமதிகள் பலவற்றைக் கொண்டவையாக இருக்கும். ஒவ்வொரு குரலுக்கும் வலு உச்சம். போராட்டத்தில் அதிரடியான முடிவுகளை எடுப்பார்கள். ‘அரகலய’ போராட்டம் இதற்கு உதாரணம். திடீரென ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு, அதற்குள் மக்கள்.  நுழைந்த காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரும். 

ஆனால் அரசியல்வாதிகள் எப்போதும் தங்களுடைய முகங்களைக் காட்டவும் குரல்களை அடையாளப்படுத்தவும் கட்சி நலன்களை முதன்மைப்படுத்தவுமே முயற்சிப்பதுண்டு. அவர்களுக்கு மக்களும் மக்களுடைய பிரச்சினைகளும் தமது அரசியலுக்கான மூலதாரம் என்ற எண்ணமே இருக்கும். போராட்டமும் அதனுடைய அரசியல் முக்கியத்துவமும் அந்தப் போராட்டத்தின் நியாயத் தன்மையும் இரண்டாம் பட்சமானவை. 

ஆகவே இடைவெளிகளோடு நிற்கும் இந்த இரண்டு தரப்பையும் எப்படிச் சமன் செய்வது? அல்லது இந்த இரண்டு தரப்பையும் எப்படி Media coverage பண்ணிக் கொள்வது என்று ஊடகர்கள் தடுமாறிக் கொள்வர். இன்னொன்றும் நிகழ்வதுண்டு. அரசு அல்லது படைகள் அல்லது ஒடுக்கும் தரப்பினுடைய எதிர்வினைகள்(Reactions of the oppressor) எப்படி உள்ளது என்பதையும் coverage பண்ணிக் கொள்ளும் தேவை. 

இயக்கச்சியில் நிகழ்ந்ததும் இதுதான். போராடும் மக்களைச் சில ஊடகர்கள் கவனப்படுத்த முயற்சித்தனர். அவர்களுடைய நோக்கம், போராட்டத்துக்கு, மக்களுடைய நியாயமான கோரிக்கைக்கு, அவர்களுடைய உணர்வுகளுக்கு முன்னுரிமையளிப்பதாகவே இருந்தது. பதிலாக, தம்மைக் கவனப்படுத்திக் கொள்வதற்குச் சில அரசியற் தரப்பினர் முயற்சித்தனர். அதற்காக ஊடகர்களை அழைத்துக் கொண்டேயிருந்தனர். இதற்காக அரசியல் பிரதிநிதிகளுக்கு நெருக்கமான ஆதரவாளர்களும் கட்சிகளின் உறுப்பினர்களும் ஊடகர்களைத் தமது தலைவர்களிடம் அழைத்துச் செல்வதற்கு முற்பட்டனர்; பெரும்பாடுபட்டனர். சிலர், தங்கள் முகங்களை பலவந்தமாகக் கமராவுக்குள் நுழைக்க முயன்றனர். இந்த மாதிரியான மதிப்பிறக்கச் செயல்கள் ஒரு நியாயமான போராட்டத்தின் வீரியத்தையும் அதனுடைய நியாயத்தன்மையையும் வியாபார நிலைக்கு மாற்றுவதோடு, இது மக்களுடைய போராட்டமல்ல. அரசியல் தரப்புகளின் போராட்டம் என்று திசை மாற்றத்தையும் உருவாக்கி விடுகின்றன. 

கேப்பாப்பிலவில் அரசியல் தரப்பினரை வெளி எல்லையில் தள்ளி நிறுத்தி வைத்து விட்டு, மக்கள் ஓரணியாக நின்று போராடியதால்தான் அவர்கள் இன்று குடியிருக்கும் நிலப்பகுதியை மீட்டெடுத்தனர். அங்கே சென்ற அரசியல்வாதிகளும் கட்சிகளும் ஓரமாக நின்றனரே தவிர, அரசியற் படமெடுப்பதற்கும் அரசியற் படங்காட்டுவதற்கும் அனுமதிக்கப்படவில்லை. என்றபடியால்தான் அந்த மக்களுடைய போராட்டம் வெற்றியடைந்தது. 

அப்படித்தான் இரணைதீவை மக்கள் மீட்டெடுத்ததும் நடந்தது. 

அரசியற் கட்சிகளோ அரசியல்வாதிகளோ மக்களுக்காகப் போராடாமல் விடலாம். அதனால் ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஆனால்,மக்களுடைய போராட்டத்தைச் சிதைக்கக் கூடாது. அந்த உரிமை யாருக்கும் இல்லை. மக்களுடைய போராட்டங்களில் தமக்கான அரசியல் நலனைத் தேடினால், அது அந்த மக்களைக் கண்ணீரில் தள்ளுவதாகவே அமையும்.

இந்தப் போராட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக காணிகளை இழந்து நிற்கும் அவலத்தையும் துயரத்தையும் மனதிற் கொள்ள வேண்டும். போர் முடிந்த  பிறகும் மக்களுடைய காணிகளில் அத்துமீறிப் படையை அமைத்துள்ள அரசைக் கண்டிக்க வேண்டும். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள், ஆளுநரின் சந்திப்புகள் மற்றும் பாராளுமன்றத்தில், ஜனாதிபதி கலந்து கொள்ளும் மேடைகளில் என சாத்தியமான எல்லா இடங்களிலும் இந்த மாதிரிப் பிரச்சினைகள் தொடர்ந்து பேசப்பட வேண்டும். ஆனால், அங்கும் அரசியல்தான் நடக்குமே தவிர, மக்களுக்கான நீதி கோரல்கள் அல்ல என்பது நிரூபணமாகும். 

இதற்கும் ஓர் உதாரணம் உண்டு. 

போராட்டத்தைத் திசை திருப்பும் சூழ்ச்சியும் முயற்சியும்.

இயக்கச்சிப் போராட்டத்துக்கு மக்கள் சேரக் கூடாது என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், இரண்டு நாட்களுக்கு முன்பாக ஓர் ஊடக அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் படைகளுக்கான நிலத்தை அளவீடு செய்யும் நடவடிக்கையைத் தான் இடைநிறுத்தியுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இளங்குமரனின் அறிவிப்பை எவரும் பொருட்படுத்தவில்லை. வேண்டுமானால், படைகளை விலக்கிக் காட்டுங்கள். அதுதான் எங்களுக்கு வேணும். நீங்கள் ஆட்சியில் இருப்பதால் அதைச் செய்வது சுலபம். இப்படித் தற்காலிகத் தடை என்று சொல்வதெல்லாம் ஏமாற்றாகவே இருக்கும். மக்களுடைய போராட்டத்தைத் திசைதிருப்புவதாக – தளர்ச்சியடையச் செய்வதாகவே இருக்கும் என்று மக்களால் கூறப்பட்டது. 

இதேவேளை இந்தப் போராட்டத்தின்போது பிரதேச செயலகத்திலிருந்து காணிப்பகுதி உத்தியோகத்தர்கள் வருகை தந்திருந்தனர். அவர்கள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரின் (மாவட்டச் செயலர்) தகவல் ஒன்றை மக்களுக்கு அறிவித்தனர். அதில் தற்காலிகமாக காணி அளவீடு செய்வது இடைநிறுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பைச் செய்வதற்கு வந்திருந்த பிரதேச செயலக உத்தியோகத்தர்களை, மறித்து, பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் தவிசாளர்  சுரேன், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் அழைத்துச் செல்வதற்குக் கடுமையாக முயற்சித்தார். அதைப் படம் எடுத்துக் கொள்வதற்கும் தமது அணியைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால். பிரதேச செயலக உத்தியோகத்தர்களோ, நாம் மக்களுக்கே தகவல் சொல்ல வேண்டும். அதற்காகவே வந்தோம் என்று மக்களுக்கு முன்னிலையில் தெரிவித்தனர். 

இப்படி ஏராளம் இழுபறிகள், திசைமாற்ற முயற்சிகளுக்கு மத்தியில் ஒரு சிறிய மக்கள் போராட்டம் நடந்து முடிந்திருக்கிறது. 

ஆனால், முடியாமல் காதுகளிலும் நம்முடைய மூளையின் நரம்புகளிலும் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பது அந்த மக்களுடைய குரல்தான். அதிலும் அந்தப் படைமுகாமில் தன்னுடைய ஐந்து தலைமுறையின் காணியை இழந்து நிற்கும் ஒரு முதிய பெண்ணின் குரலுக்கு இந்தப் பூமியில் பதிலே இல்லை. ஆம், அந்த முதிய தாய் சொன்னார், “ஒரு காலத்தில் இங்கதான் நாங்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடி பொங்கிச் சந்தோசமாகச் சாப்பிட்டம். இப்ப இந்தக் காம்புக்குப் பின்னால் வேலியில் ஒளித்து நின்று அந்த இடத்தைப் பார்க்க வேண்டியிருக்கு. ஆமி வந்தால் ஓடி மறையிறம்”. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *