— அழகு குணசீலன் —
உலகின் இன்றைய மேற்காசிய போர்ச்சூழல் எரிபொருள், உரம், உணவு மற்றும் உற்பத்தி உள்ளீடுகளுக்கான விநியோகச்சங்கிலித்தொடரில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ஏற்கனவே பொருளாதாரதாரத்தில் நலிவடைந்துள்ள இலங்கைக்கு இதன் பாதிப்பு பல மடங்கு அதிகமானது. இதன் தாக்கத்தை மக்கள் எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, உற்பத்தி துறைசார்ந்த மூலப்பொருள் தட்டுப்பாட்டுடன், மின்வெட்டு, பண்டங்கள், சேவைகளுக்கான விலையுயர்வு என பல்வேறு வழிகளில் அனுபவிக்கின்றனர்.
இந்த நிலைமையானது பூகோள அரசியல் சார்ந்து இலங்கைக்கு மட்டும் உரியதல்ல என்றாலும், ஒரு நாட்டின் தேசிய ரீதியான முகாமைத்துவமும், கொள்கை வகுப்பும் இத்தாக்கங்களை கையாள்வதில் தேசிய மட்டத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவை. இந்த வகையில் இலங்கையின் எரிசக்தி அமைச்சருக்கு எதிராக எதிர்கட்சிகளின் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான பாராளுமன்ற விவாதத்திற்கு ஏப்ரல் 10 ல் திகதி நிர்ணயிக்கபட்டுள்ளது.
இன்றைய காலச்சூழலில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான இலங்கை தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பதே இன்றைய கேள்வி. பொறுப்பு வாய்ந்த ஒரு எதிர்க்கட்சியாக தமிழரசுக்கட்சி உறுதியான நிலைப்பாடொன்றை எடுக்கப்போகிறதா…. இல்லை இன்னும் ஏதாவது சாக்கு போக்குகளை தேடித்கொண்டிருக்கிறதா? கிடைக்கின்ற தகவல்களின் படி ஏப்ரல் 9ம் திகதி வரை தமிழரசு காத்துக் கிடப்பதாக தெரிகிறது. காத்துக்கிடப்பதில் சுகம் உண்டு?
ஏற்கனவே தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிட சறுக்கிவிட்டது. எரிபொருள் ஊழல் குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற வகையில் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழத்தலைவர் இரா.சாணக்கியன் அதற்கு விளக்கம் சொல்லியிருந்தார். அதேவேளை தமிழரசுக்கட்சியின் மௌனம் குறித்து சாராயக்கடை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமிழரசு எம்.பி.க்களின் உரிமம் குறித்தும் யாழ். பத்திரிகை ஒன்று நினைவுபடுத்த தவறவில்லை. அதனால்தான் தமிழரசு பின்னடிக்கிறாதா? என்றும் அது கேள்வி எழுப்பியுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வியை எழுப்பியதால், அதுவும் எம்.ஏ. சுமந்திரனுக்கு ஆதரவாக தேடித் தேடி நியாயப்படுத்தல்களை செய்யும் அந்த பத்திரிகை இந்த கேள்வியை எழுப்பியிருப்பது பாராளுமன்ற குழுவுக்கும் அப்பால் தீர்மானம் எடுப்பதில் இன்னொரு சக்தி பின்னால் இருப்பதை இது வெளிப்படுத்துகிறது.
ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணையில் ஒப்பமிடாதது ஒன்று, பிரேரணை விவாதத்தில் பங்கு கொள்ள்வதும், வாக்களிப்பதும், அளிக்காமல் விடுவதும் இன்னொன்று. வழக்கம் போல் தமிழரசுக்கட்சி கடைசி பஸ்ஸில் மிதிபலகையில் ஓடி ஏறிக்கொள்ளும் தந்திரோபாயத்தையே இங்கும் கையாளப்போகிறது என்றே நம்பப்படுகிறது.
இது பாராளுமன்ற அரசியலில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை. தமிழர் அடையாள அரசியலுக்கு அப்பால் தென்னிலங்கை எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பு. இந்த நிலக்கரி ஊழல் வடக்கு கிழக்கிலும் ஒவ்வொரு வீட்டிலும், அடுப்பங்கரையிலும் எதிரொலிக்கிறது. இதனால் “சிறிலங்காவின் சுதந்திரதினம், குடியரசு தினம்….. போன்று அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை” என்று தமிழரசுக்கட்சி நழுவிவிடமுடியாது. கறுப்புக்கொடிக்கு பதிலாக நிலக்கரி சாம்பலை அள்ளி முகத்தில் பூசிக் கொள்ளவும் முடியாது. தேசிய விவகாரங்களில் எதிர்க்கட்சி என்ற வகையில் தமிழரசுக்கட்சி எதிர்க்கட்சிகளோடு பொதுவான விவகாரங்களில் ஒத்துழைக்காது விட்டால், மாகாணசபை தேர்தல் கோரிக்கை போன்ற, மற்றும் தமிழர் விவகாரங்களில் மற்றைய எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. 159 எம்.பி.க்களை கொண்டுள்ள என்.பி.பி.அரசாங்கம் மிகவும் இலகுவாக இந்த நம்பிக்கை இல்லாப்பிரேரணையை தோற்கடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் குறிப்பிட்ட விவகாரம் தொடர்பான கொள்கையே இங்கு முக்கியமானது.
என்.பி.பி. அரசாங்கத்தின் 23 அமைச்சர்களில் 6 பேர் தேசியப்பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்கள். 159 எம்.பி.க்களை கொண்ட அரசாங்கத்தில் 18 பேர் தேசியப்பட்டியல் எம்.பி.க்கள். இவர்களுக்கு நேரடியாக வாக்குகேட்டு வாக்குப்பெற்ற எம்.பி.க்கள்/ அமைச்சர்களைவிடவும். மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய- பொறுப்பு கூற வேண்டியது ஒப்பீட்டளவில் குறைவு. பொறுப்புக் கூற தொகுதியும் இல்லை, மாவட்டமும் இல்லை. இந்த ஆறு அமைச்சர்களில் பிமல் ரத்நாயக்க ஒருவர். சிவப்பு லேபல் ஒட்டப்பட்ட கொள்கலன்கள் விவகாரத்தில் அவர் பொறுப்புக்கூறவில்லை. கொள்கலன்கள் சோதனையற்று விடுவிக்கப்பட்ட பின்னர் தான் போதைப்பொருள் பாவனை, ஆயுத கொலைக்கலாச்சாரம் தென்னிலங்கையில் அதிகரித்தது என்ற ஒரு கருத்தும் இல்லாமல் இல்லை.
இதுவிடயமாக அரசாங்கம் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கவில்லை. கொள்கலன்கள் எங்கிருந்து வந்தன, யாரால் யாருக்கு அனுப்பப்பட்டன என்ற விபரங்கள் எல்லாம் இன்னும் இருட்டறையில் இருக்கின்றன.
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியும் தேசிய பட்டியில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர். ஒப்பீட்டு ரீதியான பொறுப்புக்கூறல் குறைவு. மேலும் தேசியப் பட்டியல் மூலமான அமைச்சர்கள் ஜே.வி.பி.யின் முக்கிய புள்ளிகள். ரில்வின் சில்வாவுக்கும், அநுரகுமார திசாநாயக்கவுக்கும் நெருக்கமான “சமையலறை அமைச்சரவை” அமைச்சர்கள். இதனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சில தடைகள் இருப்பதாக கூறப்படுகிறது. குமார ஜெயக்கொடியை பதவி விலக்கவோ, பதவியில் இருந்து விலகுமாறு கோரவோ ஜனாதிபதி விரும்பவில்லை என்றும், அவர் தானாக விலகினால் இராஜினாமாவை ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி தயார் என்றும் கொழும்பு ஊடக வட்டாரங்களில் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்தக்கசிவு மணம் சுமந்திரனின் மூக்குக்கு எட்டியதால் குமார ஜெயக்கொடி தானாக பதவி விலகினால், நம்பிக்கை இல்லாப் பிரேரணை என்ற அந்த அரசியல் விபத்தில் சிக்காமல் தமிழரசு தப்பிக்க காத்திருக்கிறது என்றும் புகைகிறது.
குமார ஜெயக்கொடி ஒரே நேரத்தில் இரண்டு இடுக்குபிடிகளில் மாட்டிக் கொண்டுள்ளார்.
ஒன்று : 2016 இல் இலங்கை உரநிறுவனத்தின் கொள்முதல் மற்றும் இறக்குமதி பிரிவின் தலைவராக இருந்த போது, தனியார் நிறுவனம் ஒன்றிற்கு முறையற்ற வகையில் சாதகமாக செயற்பட்டார் என்பது. இது தொடர்பாக இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவில் முறையீடு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இங்கும் வேறுபட்ட நடைமுறை கைக்கொள்ளப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இங்கு 8,859.708 மில்லியன் ரூபாய் மோசடிக்கு குற்றபத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு: குமார் ஜெயக்கொடியை நம்பிக்கை இல்லாப்பிரேரணைக்குள் மாட்டியுள்ள நிலக்கரி ஊழல். தென்னாபிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம்குறைவானது என்பதே மூலப் பிரச்சனை. ஏற்கனவே அரிசி இறக்குமதி ஊழலில் கறுப்பு பட்டியலில் இருந்த இந்திய நிறுவனம் ஒன்றிற்கு இறக்குமதி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தரம் குறைந்த இறக்குமதி மூலம் – அதுவும் இன்றைய எரிசக்தி நெருக்கடி காலத்தில் 847 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இலக்கங்களுக்கு அப்பால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தரம்குறைந்த நிலக்கரியினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்களின் பெறுமதி மிக உயர்வானது.
கடந்த ஆட்சியில் தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பான ஊழலில் அன்றைய அமைச்சர் கெஹெலய ரம்புக்வெல்ல மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டபோது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரை பதவியில் இருந்து நீக்கினார். இதற்கான அழுத்தத்தை கொடுப்பதில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இன்றைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கும், நானூறு பைல்களும் முக்கியமானவை.
ரணில் விக்கிரமசிங்க கொண்டு வந்த கடுமையான இலஞ்சம் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் மூலமே இவற்றிற்கு எதிரான இன்றைய நீதித்துறை செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. சட்டத்தை மட்டும் அன்றி குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான அமைச்சர் குமார ஜெயக்கொடியை விசாரணைகள் முடியும் வரை, ரணில் விக்கிரமசிங்கவின் மேற்கூறிய முன்மாதிரியை பின்பற்றி அநுரகுமார திசாநாயக்க பதவி நீக்குவாரா…. அல்லது பதவி விலகக்கோருவாரா…?
இது நடந்தால் இந்த அரசாங்கத்தின் மீதான கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட சரியான நிலைப்பாடு மக்களால் மெச்சப்படும். இல்லையேல் என்.பி.பி. / ஜே.வி.பி. அரசியலில் இன்னும் ஒரு கறை படியும்.
