கனகர் கிராமம்: கிழக்குகரை வாழ்வியலின் நீள்வெட்டுமுகம்…!      (பகுதி 2)(மூன்றாவது கண்:XIII)

கனகர் கிராமம்: கிழக்குகரை வாழ்வியலின் நீள்வெட்டுமுகம்…! (பகுதி 2)(மூன்றாவது கண்:XIII)

— அழகு குணசீலன் —

 கிழக்கு கிராமங்களைச்சேர்ந்த அன்றைய மாணவர்கள் பாடசாலை விடுதிகளில் இருந்து விடுமுறைக்கு  பெட்டியைக்கட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்ற அனுபவம் கோகிலனுக்கு மட்டும் உரியதல்ல. எமது கிராமிய மாணவர்களின் பொது அனுபவம். செங்கதிரோன் இந்த அனுபவத்தை பஸ்ஸின் கண்ணாடி ஜன்னல்களுக்கு ஊடாக வாசகர்களுக்கு படம் பிடித்துள்ளார். மட்டக்களப்பு, அம்பாறை கரையோர கிராமங்களின் கிடையான அடுக்கு, அவற்றின் பெயர்கள் மற்றும் அவற்றின் குறிப்பிடக் கூடிய சிறப்பு அம்சங்கள் அங்கு பதிவு செய்யப்படுகின்றன.  கிராமங்களுக்கு ஊடான அந்த பஸ் பயணம் ஒரு ஊர்கோல ஊர்வலம். ஒரு சமூக வரலாற்று நாவலில் அதன் கதைக்களத்தின்  புவியியல் அமைவிடம் முக்கியமானது அதை கனகர்கிராமம் பதிவு செய்கிறது – பட்டியலிடுகிறது.

பொதுவாக ஒரு கட்டுரையை எழுதுவதற்கே எங்கிருந்து தொடங்குவது என்பது ஒரு பிரச்சினையாக இருக்கும். ஆனால் மிகவும் கச்சிதமான யுக்தியுடன் நாவல் ஆரம்பமாகிறது. கடந்த கால நினைவலைகளை சமகால பத்திரிகைச் செய்தியொன்றின் ஊடாக கதையை நகர்த்தும் பாணி செங்கதிரோனின் தனித்துவம் . 

ஆம்! செங்கதிரோன் பேசுவதுபோன்று  பத்திரிகை செய்தியால் காலக்கடிகாரம் பின்னோக்கி ஓடுகிறது. எண்ணற்ற நினைவலைகள், சொந்த அனுபவங்கள், நிகழ்வுகள், சமூக, அரசியல் செயற்பாடுகள் கனகர்கிராமத்தை  கிழக்கு கரையின் சமூகவாழ்வியலின் சமூக ஆரோக்கியத்திற்கான படைப்பாக அடையாளப் படுத்துகின்றன.

அதனுடைய ஆரம்பமே கதைசொல்லும் பாணியில் தனிநபர் -குடும்ப ஆரோக்கிய பாணி. திபெத்  ஆன்மிகத்தலைவர் தலாய்லாமாவின் பொழுதுபோல் விடிகிறது கோகுலன் – சாந்தி தம்பதிகளின் பொழுது. ஒரு வித்தியாசம் -ஒன்று திபெத்மலைச்சாரலில் மற்றையது மட்டக்களப்பு வாவிக்கரையில். இளம் சூட்டு வெந்நீர், பாதாம்பருப்பு, கோப்பி, நடைப்பயிற்சி, சில் என்ற காலைக்குளிர்காற்று இந்த…..  உடல், உள ஆரோக்கியத்தை கனகர்கிராம வாசகர்களும்  அதன் இறுதிவரை அங்காங்கே தங்கள் சொந்த அனுபவங்களையும் கலந்து அனுபவிக்க முடியும்.

“சாரதி சற்றும் தாமதமின்றி ‘கியரை’ அடுத்தடுத்து மாற்றி ஆர்முடுகல் விசையை அழுத்தினான்.’பஸ்’ குறவர்கள் காட்டுக்குள் கொண்டு செல்லும் வேட்டைநாய் உடும்பு ஒன்று ஓடக்கண்டதும் கயிற்றுப்பிடியில் இருந்து பிய்த்துக்கொண்டு பாய்ந்து போவதுபோல் உறுமிக்கொண்டு பாய்ந்து ஓடியது”. ஆபத்தில் இருந்து தப்பித்தல் இங்கு முரணாக கையாளப்பட்டிருப்பதும் ஒரு வழக்கத்திற்கு மாறான கதை சொல்லும் யுக்தி. யானையிடம் இருந்து பயணிகள் தப்பித்தல் போன்று வேட்டைநாயில் இருந்து உடும்பு தப்பித்திருக்கவேண்டும்.  ஆனால் இங்கு வேட்டை நாய் பஸ்ஸின் வேகத்திற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது.  

கோகுலனின் வாழ்விடச்சூழல்,  இந்த நாவலை வாசிப்பவர்களுக்கு அவனது  சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வில் செலுத்தியுள்ள செலவாக்கும், புடம்போடலும்  தெளிவாகத்தெரிகின்றது. அவனது வீட்டு அமைவிடம் இதை உறுதிப்படுத்துகிறது. “மெதடிஸ்த தேவாலயத்திற்கு எதிரே, போதிராஜராமய வீதியில், இன்று விபுலானந்த வீதி, இறந்த அயலவர் ஒரு பறங்கியர், மானிடவியல் நம்பிக்கைகள் பஞ்சமி, பேய், பிசாசு, பில்லி, சூனியம்… முதல் குழல்புட்டு வரை  …..” கிழக்கின் அந்தத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பன்மைத்துவ சமூக – மத – இன கட்டமைப்பையும் அதன் வாழ்வியலையும் அப்படியே பேசுகிறது.  கிழக்கில் கிறிஸ்தவ மிஷரிகளால் ஆரம்பிக்கப்பட்ட கிராமிய பாடசாலைகளின் பெயர்கள்  சைவசமயப்பெயர்களை இன்று  கொண்டிருப்பதைப் போன்று  போதிராஜராமய வீதியும், விபுலானந்த வீதியாக மாற்றப்பட்டிருப்பது கோகுலன் வளர்ந்த அன்றைய கிராமியச்சூழல் இன்று இல்லை என்பதை காட்டுகிறது. இது ஒரு சிறிய உதாரணம் அல்ல. பொதுவாக இலங்கையின், சிறப்பாக கிழக்கின் இன, மத உறவுகளின் அன்றைய அடித்தளம் சிதைக்கப்பட்ட இன்றைய இன, மதவாத அரசியலின் அடிப்படை..  விபுலானந்தர் இன்றிருந்திருந்தால்……….?

கிழக்கின் விவசாய குடும்பம் ஒன்றின் சேனைப் பயிர்ச்செய்கை வாழ்வியல் அதை அனுபவித்தவர்களுக்கே தெரியும். கோகுலனுடன் சேர்ந்து பயணிப்பது போன்ற உணர்வை அதை அனுபவித்தவர்களுக்கு அது நினைவு கூரும்.  விடுதி வாழ்க்கை, நெல் வேளாண்மை – சேனைப்பயிர்ச்செய்கை,  இலங்கையில் சேகுவேரா கிளர்ச்சி காலத்தில் பாடசாலைகள் நீண்ட காலம் மூடப்பட்ட போது  சாமந்தியாற்றில் முயலும், உடும்பும் பிடிக்க  நாயுடன் காட்டுக்குப்போனது, கதிர்காம பாதயாத்திரை, 1977 கிழக்கின் தமிழ்தேசிய அரசியல், 1990 களில் இருந்து தமிழ்த்தேசிய அரசியல் போக்கு குறித்த அதிருப்தியும், விமர்சனமும் என்ற பயணப்பாதையில் அனுபவங்களூடாக கோகுலன் என்ற ‘செங்கதிரோன்’ கோபால கிருஷ்ணனும் நானும் பல இடங்களில் அனுபவங்கள், நினைவுகள் ஊடாக மனதால் சந்திக்கின்றோம். அது கனகர்கிராமம் வரலாற்று நாவலின்  பெறுமானத்தை, கிழக்குச் சமுக, பொருளாதார, அரசியலில் வரலாற்றில் அது ஒரு  உண்மையான மறுக்கமுடியாத வரலாற்று ஆவணமாகிறது. 

இதுவரை கிழக்கின் அரசியல் வரலாறு, யாருக்கோ வீட்டு வேலைக்காரன்/ காரியாக இருந்த ஏமாற்று அரசியல் வரலாற்றை மறுதலிக்கிறது. இந்த இதுவரையான பாரம்பரிய அரசியல் வரலாற்றை மறுதலிப்பது என்பது வெறுமனே தனிப்பட்ட குரோதமோ, பிரதேசவாதமோ, தேர்தல் அரசியல் கட்சி சார்புத்தன்மையோ அல்ல. மாறாக அனைத்து  மேலாதிக்க அநீதிகளையும் அனுபவித்து…. அனுபவித்து  பெற்ற படிப்பினைகளின் விளைவு. இந்த வரலாறு இதுவரை 

பேசப்படவில்லை. சிலவேளைகளில் அங்கொருவர், இங்கொருவர் எஜமானர்களுக்கு முதுகு சொறிந்திருக்கக்கூடும். அந்த வரலாற்றை வெளிப்படையாக பேசுகின்ற கிழக்கின் வரலாற்று ஆவணம் இந்த கனகர்கிராமம்” என்பதே செங்கதிரோன் கோபாலகிருஷ்ணனுக்கு கிடைத்துள்ள வெற்றியும், அதன் முக்கியத்துவமுமாகும்.

ஆசிரியர் நாவலில் நிறையவே கிழக்கின் மண்வாசனை -பேச்சு வழக்கு வார்த்தைகளை அள்ளி வீசி விதைத்துள்ளார். அத்துடன் மண்வாசனைக்குரிய கிராமிய -பொருளாதார பண்பாட்டு வாழ்வியலையும், விழுமியங்களையும் கூடவே பேசுகிறார். அவை அனைத்தையும் இங்கு பட்டியலிடுவதல்ல இப்பதிவின் நோக்கம். கனகர்கிராமம் வாசகர்கள் அதனை சுயமாக அனுபவிக்க வேண்டும் என்று அவர்களிடம் விட்டு விடுகிறேன். ” கீரிச்சூட மீன்கருவாடும் உருளைக்கிழங்கும் குழம்பு, சேனையில் எடுத்த பூசனித்தலைப்பு கடையல், காட்டுக்குள் கிடந்த கானந்தி இலை சொதி, குத்தரிசிச்சோறு” இந்த மண்மணம் கிழக்கிற்கே உரியது. ஏனெனில் புலம்பெயர்ந்த வாழ்வில்  என்னங்க…? நீங்கள் மட்டக்களப்பார் மரக்கறிக்குள் மச்சம்- மாமிசம் போட்டு சமைக்கிற நீங்கள் என்ன? மட்டக்களப்பார் சொதி இல்லாமல் சோறு சாப்பிட மாட்டினம் என்ன? என்ற வார்த்தைகளை ஆரம்பத்தில் கேட்டதுண்டு.  இப்போது கேட்டவர்களும் மட்டக்களப்பு சமையலா? என்று வாயூறுகிறார்கள்.  இப்படி இந்த நாவலில் எங்கள் வாழ்வியலை, வழக்கை பேசும் சந்தர்ப்பங்கள் நிறைந்து உள்ளன. சீனியை நக்கி, சிரட்டையில் தேனீர் குடித்த வாழ்வியல் உண்மை. சமூகசமத்துவம் குறித்த  வேறு ஒரு பார்வவை குறித்து வெட்கப்பட வைக்கிறது. இப்போது அது முள்ளிவாய்க்கால் கஞ்சி கலாச்சாரமாம்….(?) அண்மையில் ஈழப்போரில் மரணித்த மாவீரர்களின் பட்டியலை சமூகரீதியாக பார்க்கக்கூடியதாக இருந்தது. சிரட்டை!

கோகுலன் இயலுமானவரை தனது பயணத்தில் தான் சந்தித்த கிராம முக்கியஸ்தர்களை எங்கள் முன் நிறுத்துகிறார். அவர்களில் கந்தையா நொத்தாரிஸ், சிவஞான செல்வக்குருக்கள், வேல்முருகு மாஸ்டர், எம்.எச்.எம். அஸ்ரப், உதுமாலெப்பை ….. போன்ற அம்பாறை மாவட்ட அரசியல் முக்கியஸ்தர்கள் பலரைப் பேசுகிறார். இவர்கள் எனக்கும் அரசியலால் அறிமுமானவர்கள், என் முன்னால் நிற்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.  இதே உணர்வு பத்து, பனிரெண்டு வயதில் “சின்னச்சாமி யாக”  அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு கதிர்காமத்திற்கு தாளங்குடா சந்தியில்  இருந்து பொத்துவில் பஸ்பிடித்து -உகந்தையில் இருந்து நடந்த கதை நினைவுக்கு வருகிறது.  கதிர்காம யாத்திரையில் பெயரைச்சொல்லி  கூப்பிடாது சின்னச்சாமி, பெரியசாமி என்ற வழக்கு இருந்தது.  பெயரோடு சேர்த்து பெரியசாமி என்று பெரியவர்களைக் கூப்பிட்டார்கள். கோகுலன் பேசுகின்ற இயற்கை வளங்கள் ஒரு தனி அனுபவம். யானைக்கு கூட யாத்திரிகர்கள் அன்று பயந்ததில்லை. ஒரு அரோகராவுடன் யானையுடன் உறவாட முடிந்தது. நாங்கள் பயந்தது எல்லாம் கூட்டம் கூட்டமாக திரியும் காட்டு எருமைகள் – குளுமாடுகளுக்குத்தான். பயணப்பாதையில் படர்ந்து கிடக்கும் வெள்ளி முள் இன்னும் நினைவில் நிற்கிறது.

கனகர் கிராமத்திற்கு முன்னீடு எழுதியுள்ள ஓய்வுநிலை கல்விப்பணிப்பாளர் வி.எஸ். இதயராசாவின் வார்த்தைகள் இவை.

வெறுமனே புறவாழ்க்கையை வைத்து ஒருவரின் ஒருகட்டத்து அகக்கோலங்களை மதிப்பிட முடியாது. பொத்துவிலில் இருந்து உகந்தை சென்று அங்கிருந்து கால்நடையாக கொடிய விலங்குகள் நிறைந்த ‘யால’ வனத்தினூடே கதிர்காமத்திற்கு யாத்திரைபோன பக்தர்களுடன் வாசகர்களையும் அழைத்துச்சென்று, அம்மக்களின் பண்பாட்டு கோலங்களை சொல்லிய பாங்கினை எப்படி பாராட்டினாலும் நிறைவுபெறாது”.

 உண்மைதான். 

இப்பதிவும் இன்னும் நிறைவுபெறவில்லை.

தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *