— வீரகத்தி தனபாலசிங்கம் —
(கடந்த வாரத்தைய தொடர்ச்சி )
1931 — 1947 காலப்பகுதியில் நடைமுறையில் இருந்த டொனமூர் அரசியலமைப்பு ஐக்கியப்பட்ட தேசிய அடையாளம் ஒன்றை உருவாக்கும் குறிக்கோளுடன் கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டபோதிலும், அது உண்மையில் இலங்கையில் இனவாத அரசியலை தீவிரப்படுத்தியதன் மூலமாக எதிர்மறையான ஒரு திருப்புமுனையாக மாறியது.
இனரீதியான பிரதிநிதித்துவத்தை ஒழித்து சர்வஜன வாக்குரிமையுடன் பிராந்தியப் பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்தியதன் மூலமாக அந்த அரசியலமைப்பு சிங்களப் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை நகர்த்தியது. இதன் விளைவாக சிறுபான்மைச் சமூகங்கள் பாகுபாட்டுக்குள்ளாகின.
பெரிய அரசியல் அபிலாசைகளைக் கொண்டிருந்த பண்டாரநாயக்கவும் முற்போக்கு தேசிய கட்சியை கைவிட்டு சிங்கள மகாசபையை ஆரம்பித்தார். சமஷ்டி முறைக்காக குரல் கொடுப்பதை நிறுத்திய அவர் அதற்கு பதிலாக பன்முகப்படுத்தலை ஆதரிக்கத் தொடங்கினார். உள்ளூராட்சி முறையை மேம்படுத்தி பன்முகப்படுத்தலின் மூலமாக பெருமளவில் சுயாட்சியை வழங்குவதை பண்டாரநாயக்க ஆதரித்தார்.
பெரிய உள்ளூராட்சி அதிகார அலகாக மாகாணங்களை நோக்கத்தொடங்கிய பண்டாரநாயக்க மாகாணசபைகளை அமைக்க விரும்பினார். இரண்டாவது அரசாங்க சபையில் உள்ளூராட்சி அமைச்சராக அவர் பதிவி வகித்தபோது அந்த அமைச்சின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக இருந்த ஆர்.எஸ். எஸ். குணவர்தன மாகாணசபைகளை அமைப்பதற்காக கொண்டுவந்த பிரேரணையை அரசாங்க சபை அங்கீகரித்தது.
ஆனால், விளங்கிக்கொள்ள முடியாத காரணங்களுக்காக பண்ட ரநாயக்க மாகாணசபைகளை அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்கவில்லை என்று ஜெயராஜ் எழுதியிருக்கிறார்.
பிறகு தனது சிங்கள மகாசபையுடன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து சுதந்திர இலங்கையில் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் முதலாவது அமைச்சரவையில் உள்ளூராட்சி அமைச்சராக பதவியேற்ற பண்டாரநாயக்க மக்களுக்கு நெருக்கமாக அரசாங்கத்தைக் கொண்டு செல்வதற்கான ஒரு வழிமுறையாக மாகாணசபை திட்டத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்க முயற்சித்த போதிலும், அமைச்சர்களாக முழுமையாக தாங்கள் அனுபவித்த அதிகாரங்களை இழக்க அவரது சகாக்கள் விரும்பவில்லை. அதனால் பண்டாரநாயக்காவினால் மீண்டும் மாகாணசபை திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது.
பண்டாரநாயக்க மாகாணசபைகளை அமைப்பது குறித்து சிந்தித்த காலப்பகுதியில் அவற்றுக்கு இன்று இருப்பதைப் போன்று இனத்துவ அரசியல் பரிமாணம் ஒன்று இருக்கவில்லை என்பதால் பெருமளவுக்கு பிரச்சினைகள் இல்லாமல் அவற்றை அன்று அமைத்திருக்க முடியும் என்பது ஜெயராஜின் அவதானிப்பாக இருக்கிறது.
1951 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறிய பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அமைத்து ஐந்து வருடங்களில் பிரதமராக பதவிக்கு வந்த பிறகு அவரது அரசாங்கம் முன்னெடுத்த கொள்கைகள் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது எதிர்கால இருப்புக் குறித்து அச்சம் கொள்கிற அளவுக்கு இனவாத அரசியலை முனைப்படையச் செய்தன. தனிச்சிங்களச் சட்டம் அதில் முக்கியமானது.
இலங்கையில் முதன்முதலாக சமஷ்டி ஆட்சிமுறைக்காக குரல்கொடுத்த ஒரு அறிவார்ந்த தலைவர், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் எஸ். ஜே வி. செல்வநாயகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது சமஷ்டி பற்றி பேசுவதை தவிர்ப்பதில் கடுமையான கவனம் செலுத்திய அளவுக்கு அவரின் கொள்கைகளில் தலைகீழான மாற்றம் ஏற்பட்டது என்பது கவலைக்குரியது.
இன்று நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபைகள் முறை 39 வருடங்களுக்கு முன்னர் இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையை தொடர்ந்து ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டிருந்தாலும், அது. அடிப்படையில் பல தசாப்தங்களுக்கு முன்னர் பண்டாரநாயக்கவின் சிந்தனையில் உதித்ததே என்பது கவனிக்கத் தக்கது.
பிராந்திய சபைகளை அமைப்பதற்காக செல்வநாயகத்துடன் பண்டாரநாயக்க செய்துகொண்ட 1957 ஒப்பந்தத்துக்கு எதிராக தென்னிலங்கையில் எதிர்ப்பைக் கிளப்புவதில் முன்னரங்கத்தில் நின்ற ஜெயவர்தன, மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மாகாணசபைகளை அமைப்பதற்கு வழிவகுத்த நிகழ்வுப் போக்குகளை இனிமேல் பார்ப்போம்.
சமாதான உடன்படிக்கை:
பிராந்தியங்களுக்கு அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடு எதையும் ஒருபோதும் கொண்டிராத இலங்கையில் இந்தியாவின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் மாகாணசபைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்காது என்பதில் சந்தேகமில்லை.
தேசிய இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய சகல விவகாரங்களிலும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவரான ஜனாதிபதி ஜெயவர்தனவை அந்த பிரச்சினைக்கு முடிவைக் கொண்டுவர வேண்டும் என்றால் அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடு ஒன்று அவசியம் என்று நம்பவைப்பதில் அல்லது வழிக்குக் கொண்டுவருவதில் இந்தியா அந்த நேரத்தில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியது.
1983 கறுப்பு ஜூலைக்கு பிறகு இலங்கையில் முரண்பட்டு நின்ற இரு தரப்பினருக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வதற்கு நல்லெண்ண உதவிகளை வழங்க முன்வந்த அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, தனது விசேட தூதுவராக நியமித்த கோபாலசுவாமி பார்த்தசாரதிக்கு ஜெயவர்தனவை இணங்க வைப்பதில் முக்கிய பங்கு இருந்தது.
தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தலைசிறந்த அரசியலமைப்புச்சட்ட நிபுணருமான காலஞ்சென்ற கலாநிதி நீலன் திருச்செல்வம் பத்திரிகைகளுக்கு எழுதிய கட்டுரை ஒன்றில், ஜனாதிபதி ஜெயவர்தன ஒரு அரசியலமைப்பு நிபுணராக இருந்த போதிலும் கூட, அதிகாரப் பரவலாக்கல் கோட்பாட்டின் பயனுடைத்தன்மை மீது அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பெரும் கஷ்டப்பட வேண்டியிருந்தது என்று தன்னிடம் பார்த்தசாரதி ஒரு தடவை கூறியதாக குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை, முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜெயதிலக எழுதிய கட்டுரையொன்றில் கறுப்பு ஜூலைக்கு பின்னரான காலப் பகுதியில் இலஙகையில் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது எதிர்நோக்க வேண்டியிருந்த கஷ்டங்கள் குறித்து பார்த்தசாரதி புதுடில்லி சந்திப்பொன்றில் தன்னிடம் கூறியதாக தெரிவித்திருந்தார்.
1984 பேச்சுவார்த்தைகளின் போது ஒரு கட்டத்தில் ஜனாதிபதி ஜெயவர்தனவின் வேண்டுகோளின் பேரில் கண்டியில் உள்ள பௌத்தபீடங்களின் மகாநாயக்கர்களைச் சந்தித்ததாகவும் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பது சாத்தியமில்லாத அளவுக்கு கடுமையானது என்பதை தெரிந்து கொண்டதாகவும் பார்த்தசாரதி தன்னிடம் கூறியதாகவும் கலாநிதி ஜெயதிலக எழுதியிருந்தார்.
சிக்கல் மிகுந்த மத்தியஸ்த முயற்சிகளை பொறுமையுடன் முன்னெடுப்பதற்கு எமது பிராந்தியத்தின் பூகோள அரசியலை முறையாகப் புரிந்து கொண்டவராகவும் இலங்கையின் அரசியலமைப்பின் சிக்கலான தன்மைகளைப் புரிந்து கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வல்லவராகவும் இருக்கக்கூடிய இராஜதந்திரி ஒருவரே அவசியம் என்று கருதியதனால்தான் இந்திரா காந்தி தனது நம்பிக்கைக்கு பெரிதும் பாத்திரமானவரான பார்த்தசாரதியை விசேட தூதுவராக அனுப்பினார். அவர் வெளியுறவுச் செயலாளர் உட்பட பல இராஜந்திர பதவிகளை வகித்தவர்.
தனது பணிக்கு முன்னதாக இருந்த சிக்கல்களும் இடறுகுழிகளும் பாரதூரமானவை என்பதை தெளிவாகப் புரிந்து கொண்ட பார்த்தசாரதியின் முதற்பணி அன்றைய அரசாங்கத் தலைவர்களினதும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களினதும் அச்சங்கள், ஏக்கங்கள், பிரமைகள் மற்றும் எண்ணப் போக்குகளை மிகுந்த நிதானத்துடன் கிரகிக்க வேண்டியதாகவே இருந்தது. இலங்கையின் பழைய இடதுசாரித் தலைவர்களுடன் அவரால் எளிதாகப் பழகிக் கொள்ளக்கூடியதாக இருந்தது.
தமிழ்த் தலைவர்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய அரசியல் தெரிவுகளின் மட்டுப்பாடுகளை புரிந்துகொள்ள வேண்டும் என்பதும் பேச்சுவார்த்தை செயன்முறைகள் தொடர்பில் அடிப்படைவாத நிலைப்பாடுகளில் பிடிவாதமாக இருப்பவர்கள் போராடிக்கொண்டே பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட வேண்டும் என்பதே அவர்களுக்கான பார்த்தசாரதியின் ஆலோசனையாக இருந்ததாக கலாநிதி திருச்செல்வம் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
பிராந்திய சபைகளுக்கு (Regiinal Councils) அதிகாரங்களைப் பகிர்வதற்கான ஒரு தொகுதி யோசனைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தியதே பார்த்தசாரதியின் தனித்துவமான பங்களிப்பாகும். அந்த யோசனைகளே ‘இணைப்பு — சி’ ( Annexure — C ) என்று பிரபல்யமாக அழைக்கப்பட்டவையாகும். 1983 ஆகஸ்ட் தொடக்கம் டிசம்பர் வரை கொழும்பிலும் புதுடில்லியிலும் ஜனாதிபதி ஜெயவர்தனவுடன் நடத்திய சந்திப்புக்களில் இந்த இணைப்பு -. சி யைப் பூரணப்படுத்தும் செயற்பாடுகளை பார்த்தசாரதி நிறைவு செய்தார் என்று கூறப்பட்டது.
தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் ஜெயவர்தன அரசாங்கத்துக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிப்பதில் ஒரு முழுநிறைவான சமரசப் பேச்சுவார்த்தையாளருக்குரிய சகல திறமைகளையும் மதிநுட்பத்தையும். வெளிக்கொணர்ந்தாகக் கூறப்பட்ட பார்த்தசாரதியினால் முன்வைக்கப்பட்ட திட்டத்தின் அம்சங்களை. ஜெயவர்தன உடனடியாகவே இணங்கிக் கொண்டார்.
ஆனால், அதிகாரப் பகிர்வுக்கான அடிப்படை அலகு (Unit of Devolution) தொடர்பில் இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவதென்பது தொடர்ந்தும் கஷ்டமானதாகவே இருந்தது. ஒரு மாகாணத்திற்குள் இருக்கும் மாவட்டங்களை இணைத்த பெரியதொரு அதிகாரப்பகிர்வு அலகு தமிழர்களுக்கு வழங்கப்படக்கூடாத ஒரு சலுகையாக நோக்கப்பட்டது.
பிறகு 1983 டிசம்பரில் ஜெயவர்தன புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது தனியொரு மொழிரீதியான பிராந்தியத்தை (Single Linguistic Region) அமைப்பதற்கான யோசனையை முன்வைப்பதற்கு இந்திரா காந்தியின் ஆதரவை பார்த்தசாரதி பெற்றிருந்தார். அத்தகைய யோசனைக்கு இணங்குவதன் மூலம் தென்னிலங்கையில் தனது ஆதரவுத்தளத்தை இழப்பதற்கு ஜெயவர்தன விரும்பவில்லை. ஆனால், அவர் விட்டுக்கொடுப்பு ஒன்றைச் செய்வதற்கு இணங்கினார்.
இணைப்பு — சி யில் பிராந்திய சபைகள். என்று இருந்ததை மாகாண மட்டத்துக்கு மட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். புதுடில்லி அஷோக் ஹோட்டலில் நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தையின்போது இந்தியத் தரப்பின் நெருக்குதலினால் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஜெயவர்தன, பார்த்தசாரதியை நோக்கி “நான் எங்கே கையெழுத்திட வேண்டும்” என்று கேட்டதாகவும் அதற்கு பதிலளித்த பார்த்தசாரதி “இது ஒரு உடன்படிக்கை அல்ல. கையெழுத்து ஒன்றும் தேவையில்லை” என்று கூறியதாக அந்த நேரத்தில் இந்திய ஊடகங்களில் செய்தி வௌயாகியது.
1984 ஜனவரியில் கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாட்டில் இணைப்பு — சி சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், சிங்கள அமைப்புக்கள், பௌத்த குழுக்கள் மற்றும் சில எதிர்க்கட்சிகளிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பைத் தொடர்ந்து ஜெயவர்தன அதிலிருந்து தன்னைத் தூரவிலக்கிக் கொண்டார். இணைப்பு — சி யின் உள்ளடக்கங்களுக்கு தான் எந்த வகையிலும் பொறுப்பு இல்லை என்று அவர் கைகழுவிவிட்டார். அதனால் சர்வகட்சி மகாநாடு தோல்வியில் முடிவடைந்தது.
இந்திரா காந்தியின் மறைவுக்கு பிறகு அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்றதை தொடர்ந்து 1985 முற்பகுதியில் புதுடில்லியில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், தாயாரின் நம்பிக்கைக்குரியவராக விளங்கிய பார்த்தசாரதியை பேச்சுவார்த்தை செயன்முறைகளில் ஈடுபடுத்துவதை மகன் தவிர்த்தார்.
தமிழ் அரசியல் தலைவர்கள் வழிகாட்டலுக்காகவும் ஆலோசனைக்காகவும் பெருமளவுக்கு பார்த்தசாரதியில் தங்கியிருந்த காரணத்தால் அவரின் வகிபாகத்தில் இலங்கை அரசாங்கத்தரப்புக்கு சந்தேகம் ஏற்படத் தொடங்கியமை அவரை ஓரங்கட்டுவதற்கு ராஜீவ் காந்தி தீர்மானித்தற்கான ஒரு காரணி என்று கூறப்பட்டது.
வெளியுறவு செயலாளர் ரொமேஷ் பண்டாரி, அமைச்சர்கள் பி. சிதம்பரம் மற்றும் நட்வர்சிங் ஆகியோரையே இலங்கை இனப்பிரச்சினையைக் கையாளுவதற்கு ராஜீவ் காந்தி பயன்படுத்தினார்.
1987 ஜூலை 29 சமாதான உடன்படிக்கையில் கொழும்புக்கு வருகைதந்த ராஜீவ் காந்தியுடன் செல்வாக்குமிக்க அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய பெரிய தூதுக்குழுவொன்று வந்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் ஆரம்பக்கட்டங்களில் தீர்க்கமான பாத்திரத்தை வகித்து சமாதான உடன்படிக்கைக்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த பார்த்தசாரதி அந்த தூதுக்குழுவில் இல்லாதது ஒரு பிரகாசமான வெற்றிடமாக இருந்ததாக அந்த நேரத்தில் அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் வர்ணிக்கப்பட்டது.
எது எவ்வாறிருந்தாலும், இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்துக்கான கோட்பாட்டு அடிப்படையையும் பல்லின சமுதாயமொன்றுக்கான அரசியலமைப்பு அத்திபாரத்தையும் (Constitutional foundation for a multi – ethnic polity) அமைத்த பெருமையில் பெரும்பகுதி பார்த்தசாரதிக்கே உரியது என்று என்பதில் சந்தேகமில்லை என்று நீலன் திருச்செல்வம் எழுதினார்.
மாகாணசபைகளை அமைப்பதற்காக இலங்கை அரசியலமைப்புக்கு 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்டு 38 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அது இதுவரையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவுமில்லை, மாகாணசபைகள் ஒழுங்காக இயங்கவுமில்லை. கடந்த எட்டு வருடங்களாக மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படவில்லை.
ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் ஒரு வருட காலத்திற்குள் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதாக உறுதியளித்த போதிலும், சாத்தியமானளவுக்கு அந்த தேர்தல்களை மேலும் பின்போடுவதற்கான வியூகங்களே முன்னெடுக்கப்படுகின்றன போன்று தெரிகிறது.
தமிழ் அரசியல் கட்சிகள் இனப்பிரச்சினைக்கு சமஷ்டிமுறையின் அடிப்படையிலான தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகின்றன. வேறு காரணத்துக்காக என்றாலும் சிங்களவர்கள் தரப்பில் சமஷ்டி ஆட்சிமுறை யோசனை முன்வைக்கப்பட்டு ஒரு நூற்றாண்டும் தமிழர் தரப்பினால் அந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு முக்கால் நூற்றாண்டும் கடந்துவிட்ட நிலையில், அரைகுறையான அதிகாரங்களுடன் கூடிய மாகாண சபைகளைக் கூட ஒழுங்காக செயற்பட வைப்பதில் அக்கறையில்லாமல் சிங்கள அரசியல் சமுதாயம் இருக்கிறது.
தமிழர் அரசியல் சமுதாயம் சமஷ்டி முறைத் தீர்வொன்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாலும், புதிய அரசியலமைப்பை அரசாங்கம் கொண்டுவரும் பட்சத்தில் முதலில் மாகாணசபைகளைக் காப்பாற்றப் போராடவேண்டியிருக்கும்.
