— வீரகத்தி தனபாலசிங்கம் —
அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக பிராந்திய செய்தியாளர்களாக பணியாற்றிவருபவர்கள் என்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று ஒரு சிலரே இருக்கிறார்கள். அத்தகையவர்களில் ஒருவரை இயற்கை நேற்றையதினம் பறித்துச் சென்று விட்டது.
கிழக்கு மாகாணத்தில் அதுவும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நீண்டகால அனுபவமுடைய பத்திரிகையாளரான ஏ.எல்.எம். சலீமின் மரணம் சுமார் மூன்று தசாப்தங்களாக நெருக்கமான உறவைக் கொண்டிருந்த நண்பனை என்னிடமிருந்து அபகரித்து விட்டது.
2023 செப்டெம்பரில் சலீமின் 75 வது அகவையை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து பத்திரிகைகளுக்கு எழுதிய நான், மூன்று வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னதாக அவருக்கு அஞ்சலிக் குறிப்பை எழுத வேண்டிய துரதிர்ஷ்டத்துக்கு உள்ளாகியிருக்கிறேன்.
அண்மைக்காலமாக அவர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் சலீமை அவரது மகளின் திருமண வைபவத்தின்போது கொழும்புக்கு வெளியே தெஹிவளை ஹோட்டல் ஒன்றில் சந்தித்தேன். அதுவே எங்கள் இருவருக்கும் இடையிலான இறுதிச் சந்திப்பாக அமைந்து விட்டது. தமிழ் ஊடகவியாளர் சமூகத்துக்கு அவரது மரணம் பெரியதொரு இழப்பாகும். அதற்கு அப்பால் என்னை நேசித்த நல்லுள்ளம் ஒன்றை நான் இழந்து விட்டேன்.
நிந்தவூரைச் சேர்ந்த சலீம் 1966 ஆம் ஆண்டு வீரகேசரியின் செய்தியாளராக பத்திரிகைத்துறையில் பிரவேசம் செய்தார். பிறகு சுதந்திரன், தினகரன், தினபதி, சிந்தாமணி, தினக்குரல் என்று பல பத்திரிகைகளின் பிராந்திய செய்தியாளராக பணியாற்றி தனது சேவையை விரிவுபடுத்தினார். யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் தினசரியின் அம்பாறை மாவட்டச் செய்தியாளராக அதன் தொடக்ககாலம் முதலிருந்தே சலீம் பணியாற்றிவருகிறார். இதனிடையே, அவரின் பணியின் தரம் கண்டு சில இலத்திரனியல் ஊடகங்களும் கூட அவரது சேவையை நாடின.
இலங்கையின் தமிழ்ப் பத்திரிகைத் துறையில் வளமான ஒரு மரபை விட்டுச்சென்ற புகழ்பூத்த பத்திரிகை ஆசிரியர்களான அமரர்கள் எஸ்.டி. சிவநாயகம், ஆர்.சிவகுருநாதன், கே.சிவப்பிரகாசம், எஸ். நடராசா, கே.கே. இரத்தினசிங்கம், கானமயில்நாதன் ஆகியோரின் காலத்தில் அவர்களின் வழிநடத்தலில் பணியாற்றிய சலீம் இன்றைய இளம் பத்திரிகை ஆசிரியர்களின் காலத்திலும் பிராந்திய செய்தியாளராக பணியைத் தொடர்ந்தார்.
தகவல் தொழில் நுட்பத்தின் அபார வளர்ச்சி காரணமாக பத்திரிகையாளர்களின் செயற்பாட்டு முறைகளில் நவீன கருவிகளைப் பயன்படுத்தி கடைப் பிடிக்கவேண்டியிருக்கும் மாற்றங்களுக்கு தன்னை இசைவாக்கிக் கொண்டு தங்கள் பணியை தொடர்ந்தும் செய்துவந்த தமிழ்பேசும் பத்திரிகையாளர்களில் சலீமும் ஒருவர்.
வெறுமனே பிராந்திய செய்திகளை மாத்திரம் அனுப்பும் ஒரு செய்தியாளராக மாத்திரமல்ல, அரசியல், சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்த பெருவாரியான கட்டுரைகளையும் சலீம் எழுதிவந்திருக்கிறார். பத்திரிகையாளர்களுக்கு இருக்கவேண்டிய சமூகப் பிரக்ஞையின் பால் மிகுந்த சிரத்தை காட்டி தனது பணிகளை முன்னெடுத்துவந்தவர் சலீம்.
பிரதானமாக அம்பாறை மாவட்டத்தை தனது களமாகக் கொண்டு செயற்பட்டு வந்த போதிலும், ஊடகவியலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காக குரல் கொடுக்கும் பல்வேறு அமைப்புக்களில் முக்கிய பங்கை வகித்த காரணத்தால் கிழக்கு மாகாணத்திற்கு அப்பால் வடமாகாணம், மலையகம் மற்றும் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் மத்தியில் மிகுந்த நட்புரிமை கொண்டவராக சலீம் விளங்கினார்.
முஸ்லிம் மீடியா ஃபோரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஆகியவற்றின் தாபக உறுப்பினரான சலீம், கிழக்கிலங்கை செய்தியாளர்கள் சங்கம், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம், தென்கிழக்கிலங்கை செய்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும் இருந்தார்.
சலீமின் பத்திரிகைத்துறைச் சேவைக்காக அவர் பல்வேறு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். கலாபூசணம் விருது (2008), இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து வருடாந்தம் வழங்கும் வாழ்நாள் சாதனயாளர் விருது (2017), கல்முனை மாநகர சபையின் ஊடக முதுசம் பட்டம் என்பவை அவருக்கு கிடைத்த மிகவும் குறிப்பிடத்தக்க விருதுகள்.
பத்திரிகைத்துறையில் சலீம் 50 வருடங்களைப் பூர்த்திசெய்ததை முன்னிட்டு சில வருடங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனம் விமரிசையாகப் பெருவிழா எடுத்து அவரைக் கௌரவித்ததுடன் ‘பொன்விழாக்காணும் சலீம்’ என்ற சிறப்பு மலரையும் வெளியிட்டது. அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றி அவரைக் கௌரவப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அந்த விழாவில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பலரும் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்களும் சமூகப்பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அது தனது பத்திரிகைத்துறை வாழ்வில் சலீம் செய்த பெறுமதியான பங்களிப்புகளுக்காக சமூகம் அவர் மீது கொண்டிருந்த அபிமானத்தின் சான்றாக அமைந்தது.
சலீம் போன்ற மிகவும் நீண்டகால பிராந்திய செய்தியாளர்களின் அனுபவங்கள் இன்றைய இளம் தலைமுறை ஊடகவியலார்களுக்கு முன்னுதாரணமாக அமையக்கூடியவை. இந்த வருடம் சலீமின் பத்திரிகைத்துறை வாழ்வு ஆறு தசாப்தங்களைப் பூர்த்திசெய்யும் நிலையில் அவர் உலகிற்கு விடை கொடுத்துவிட்டார்.
எனக்கும் சலீமுக்கும் இடையிலான நட்பு மூன்று தசாப்த கால நீட்சி கொண்டது. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் தினக்குரல் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதல் செய்தி ஆசிரியர் என்ற வகையில் நான் கிழக்கு மாகாணத்தின் பிரதேசங்களுக்கு செய்தியாளர்களைத் தேடிக்கொண்டிருந்த போது எனக்கு அறிமுகப்படுத்தப் பட்டவர்களில் திருகோணமலையின் மூத்த பத்திரிகையாளர் சின்னையா குருநாதனும் அம்பாறை மாவட்டத்தின் சலீமும் மட்டக்களப்பின் சண். தவராசாவும் முக்கியமானவர்கள்.
அவர்கள் தினக்குரலின் பிராந்தியச் செய்தியாளர்களாக பணியாற்ற முன்வந்ததுடன் மாத்திரம் நின்றுவிடவில்லை, பல்வேறு பகுதிகளில் செய்தியாளர்களாக நியமிக்கப்படக்கூடியவர்களுடன் எனக்கு தொடர்புகளை ஏற்படுத்தியும் தந்தார்கள். அவர்களது உதவிகள் விரிவான பிராந்தியச் செய்தியாளர்கள் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க எனக்கு பெரிதும் உதவியது.
தினக்குரலின் ஆரம்பக் கட்ட வளர்ச்சியில் ஒரு பிராந்தியச் செய்தியாளர் என்ற வகையில் சலீமின் பங்களிப்பு பெரிதும் குறிப்பிடத்தக்கது.
பத்திரிகைத்துறையில் செழுமையான மரபொன்றை விட்டுச்செல்லும் அருமை நண்பர் சலீமின் குடும்பத்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
