— அழகு குணசீலன் —
மூத்த குடி, முதல்மொழி என்று பேசினாலும் தமிழில் நாவல் இலக்கியம் மூத்ததும் இல்லை , தமிழுக்கே உரியதும் அல்ல. நாவல் என்ற நவீனத்துவம் தமிழுக்கு ஒரு தத்தெடுப்பு, மேலைத்தேய தாக்கங்கள் தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்திய நவீன இலக்கிய போக்கின் வளர்ப்பு. இது சமூகம், சீர்திருத்தம், வரலாற்று புனைவுகள், துப்பறியும் நாவல்கள் என வியாபித்து, அரசியல், சமூக அவலங்கள், பெண்ணியம், வர்க்கம், பின்நவீனத்துவம், போர்க்கால இலக்கியம் வரை வளர்ந்து விட்ட ஒரு நவீன இலக்கிய பரப்பாக இன்று மிளிர்கிறது.
தமிழில் முதல் நாவல் என்பது 1879 இல் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்று நம்பப்படுகிறது. தொடர்ந்து பி.ஆர்.ராஜம்பாளின் ‘கமலாம்பாள் சரித்திரம்’, அ.மாதவய்யாவின் ‘பதமாவதி சரித்திரம்’ ஆகியவை சமூக ஜதார்த்தங்களைப்பேசின. அகிலன், சாண்டில்யன், கலைஞர் கருணாநிதி ….. போன்றவர்கள் கதாபாத்திரத் தேர்வு, விறுவிறுப்பான கதைக்களம் ஆகியவற்றுடன் வரலாற்று உண்மைகளை கலந்து நாவல்களை படைத்தனர். இலங்கையில் தமிழ் இலக்கியப் பரப்பில் வரலாற்று உண்மைகளை பகிர்ந்த – அதுவும் உண்மையான சமூக அரசியல் வரலாற்றை பகிர்ந்து கொண்ட நாவல்களைத் தேடவேண்டிய நிலை.

இந்த போக்கில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான நாவல் இலக்கிய தாக்கம் எங்கள் கரங்களில் சமூக, அரசியல் ஜதார்த்தத்தை மட்டும் அல்ல புனைவுகளில் – பொய் அழகில், மிகைப்படுத்தலில் கஞ்சத்தனத்தை கடைப்பிடித்து இலங்கையின் கிழக்கு கரையின் சமூக, பொருளாதார, அரசிரசியல் வாழ்வியலை, போர்வைகளை அகற்றி அம்மணமாக பேசும் “கனகர்கிராமத்தை” தந்திருக்கிறது. ஈழத்து நாவல் இலக்கிய மக்கள் மன்றத்தில் “நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத்தவிர வேறில்லை” என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் செங்கதிரோன் – கோபால கிருஷ்ணன். “கனகர் கிராமம்”. ஈழத்து தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு “கோகுலன் சரித்திரம்”.
தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சி வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் மத்தியகாலம்(1940-1960) முக்கியமானது. கல்கி கிருஷ்ணமூர்த்தியின் படைப்புக்களான “பொன்னியின் செல்வன்”, “சிவகாமியின் சபதம்”,பார்திபன்கனவு என்பன முதல் மூன்று இடங்களில் குறிப்பிடக்கூடியவை. 1950 க்கு பின்னர் இன்னொரு கட்டம் ஆரம்பமாகிறது. ஜெயகாந்தன் சமூக அவலங்களைப் பேசுகிறார். புதுமைப்பித்தனுக்கு பின்னர் நாவல் இலக்கியம் புதிய பாணியில் பயணிக்கிறது. ராஜம் கிருஷ்ணன், லட்சுமி பெண்ணியக்கருத்துக்களை தன்படைப்புக்களில் உள்வாங்கினர். இவர்களின் படைப்பியல் பாதிப்பு ஈழத்து தமிழ் நாவல் இலக்கியத்தையும் சாதகமாக பாதித்தது.
இலங்கையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சமூகச் சீர்திருத்தம், பிராந்திய உணர்வு, அரசியல் பிரச்சினைகள் பற்றி பேசும் பாணியை இஸ்லாமிய படைப்பாளிகளே ஆரம்பித்து வைத்தனர். இலங்கை நாவல் இலக்கிய வளர்ச்சியில் இவர்களே முன்னோடிகள் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். சித்தி லெப்பை மரைக்கார், ஊடாக இஸ்லாமிய அடையாளங்களுடன் ஆரம்பித்த நாவல் இலக்கிய பயணம் பின்னர் யாழ்ப்பாணம், மலையகம் …என சமூக, பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட நாவல்கள் வெளிவர உந்துசக்தியாக அமைந்தது. சித்தி லெப்பை மரைக்காரின் “அஸன் பேயுடைய கதை” இலங்கையின் முதல் நாவல் என்று கருதப்படுகிறது. எஸ். இன்னாசித்தம்பி, தி.த.சரவணமுத்துப்பிள்ளை ….. போன்றோரும் இவரைத் தொடர்ந்தார்கள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து ஈழகேசரி, வீரகேசரி பத்திரிகைகளின் பங்கு நாவல் இலக்கிய வளர்ச்சியில் முக்கியமானது. தொடர் நவீனங்களாக பிரசுரிக்கப்பட்டு பின்னர் பல நாவல்கள் வீரகேசரி வெளியீடாக வெளிவந்துள்ளன.
ஒரு நாவல் குறித்த வரையறைகளை கடினமான கண்ணாடிகளை அணிந்து மதிப்பீடு செய்பவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் முற்போக்கு -பிற்போக்கு என்று, எஸ்.பொன்னுத்துரையின் சமூக உண்மைகளை பேசுகின்ற படைப்புக்களை கூட அங்கீகரிக்கவில்லை. அதற்காக எஸ்.பொ. துவண்டு விடவில்லை. தனக்கென ஒரு பாணியை அமைத்துக்கொண்டு அதற்கு நற்போக்கு எனப் பெயரிட்டு பயணித்தார். அதற்காக அவரின் படைப்புகள் “முகாம்களுக்கு” அப்பால் பேசப்படாமல் போகவில்லை. எஸ்.பொ.வின் படைப்புக்களின் நற்போக்கு தனித்துவம் இன்றும் பேசப்படுகிறது. படைப்பாளி எதைப் பேசுகிறார் என்பதும், அதன் சமூக, பொருளாதார, அரசியல் ஜதார்தமுமே முக்கியமே அன்றி எப்படி பேசுகிறார் என்பது முக்கியம் அல்ல. எதைப்பேசுவது என்பது மக்கள் கலை, இலக்கிய வடிவத்தின் அடிப்படை. எப்படி பேசுவது என்பது பல சந்தர்ப்பங்களில் கதைசொல்லும் யுக்திக்கு அப்பால் , கலையும், இலக்கியமும் அழகியலுக்கானது என்ற தவறான ஒரு இடத்தில்-தடத்தில் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது.
அந்த வகையில் “கனகர்கிராமம்” ஒரு நாவலா? என்ற கேள்வி கூட எழுப்பப்படலாம். எஸ்.பொ. மீதான குற்றச்சாட்டுக்களுள் ஒன்று அவர் பல படைப்பாளிகளால் பேசப்படாத – பேசத்தயங்கிய ஜதார்த்தங்களை “பச்சையாக” பேசினார் என்பது. அதுபோல் கிழக்கின் சமூக, பொருளாதார, அரசியல் வரலாற்றை “கனகர்கிராமம்” குத்துமதிப்பாக பேசவில்லை. சுட்டு விரலைக்காட்டி ஆதாரங்களோடு பேசுகிறது. இந்த ஆதாரங்கள், நிகழ்வுகள் கேள்விச்செவியன் ஊரைக்கெடுப்பான் என்ற செவியேறல்கள் அல்ல. அத்தனையும் “கோகுலன்” என்ற கதாபாத்திரமாக செங்கதிரோன் – கோபாலகிருஷ்ணன் அள்ளி, அணைந்து, அநுபவித்த சத்தியங்கள் என்பது கனகர்கிராமம் நாவலின் முக்கியத்துவம். இங்கு கிழக்குக்கரை வாழ்வியலின் சமூகங்களுக்கிடையிலான உறவும், அதன் தாற்பரியங்களும், அரசியல் சதிகளும், வியூகங்களும் “பச்சையாக” பேசப்படுகின்றன. இவை முகஸ்துதி அற்றவை என்பதால் ஒரு பகுதியினரின் முகத்தை சுழிக்கவைக்கலாம், அவற்றை எல்லாம் உண்மைகள் கசக்கும் என்று “கனகர்கிராமம்” கடந்து சென்று விடும்.
“கனகர் கிராமம்” நாவலில் மூன்று முன்னீடுகள் இடம்பெற்றுள்ளன. அரங்கம் மின்னிதழ் ஆசிரியரும், தமிழ் ஊடகப்பரப்பில் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளருமான சீவகன் பூபாலரெட்ணத்தின் முன்னீடும் அவற்றில் ஒன்று. ஏற்கனவே இப்பத்தியில் எழுப்பப்பட்ட இலக்கியம் அழகியலுக்கானதா? மக்களுக்கானதா? என்ற கேள்விக்கு சீவகனின் முன்னீடு சாட்சியம் அளிக்கிறது.
இலக்கியம் சார்ந்த படைப்புக்களை செங்கதிரோன் என்ற புனைபெயரிலும், அரசியல், சமூகம் சார்ந்த ஆக்கங்களை தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் என்ற பெயரிலும் எழுதும் வழக்கை கொண்டிருப்பவர் கனகர்கிராமம் நாவலாசிரியர். இங்கு இலக்கியத்திற்கு பொய் அழகு. அரசியலுக்கு தரவுகள், தகவல்கள், வெளிப்படைத்தன்மை மற்றும் உண்மையானவையாகவும் நேர்மையானவையாவும் அமைவதே அரசியலில் அறம்சார்ந்தது. இங்கு இரு இலக்குகளுக்கும் இடையே “செங்கதிரோனுக்கும் -கோபாலகிருஷ்ணனுக்கும் “ இடையே நடைபெறும் உளப்போரை அரங்கம் மின்னிதழில் தொடராக வெளிவந்த “கனகர்கிராமம்” நாவலில் துல்லியமாக அடையாளப்படுத்துகிறார் அரங்கம் ஆசிரியர் சீவகன்.
” புனைகதை எழுத்தாளராக அழகூட்ட, வாசகர்களைக்கவர பொய் எழுதவேண்டிய செங்கதிரோனுக்கும், தான் அறிந்த உண்மைத் தகவல்களை ஒரு தொடர்போல தரமுனையும் கோபாலகிருஷ்ணனுக்குமான போட்டி என்னை திக்குமுக்காடச்செய்தது…….. கோபால கிருஷ்ணனை செங்கதிரோன் காப்பாற்றி இருக்கிறார்” என்று பதிவிடுகிறார். இன்றைய இலங்கையின் சமூக,அரசியல் சூழலில் இந்த இரு இலக்குகளுக்கும் இடையே சமூக – அரசியல் – வரலாற்று சமநிலை ஒன்றை நிலை நிறுத்துவது அவ்வளவு இலகுவானதல்ல. அதை செங்கதிரோனும், கோபாலகிருஷ்ணனும் தங்களுக்குள் மனதால் மல்லுக்கட்டி சமநிலையை பேசியிருக்கிறார்கள் என்பதே கனகர் கிராமத்தின் தனிச்சிறப்பு.
மட்டக்களப்பின் சமூக கட்டமைப்பு, அதன் கலாச்சார பாரம்பரியம், மானிடவியல் நம்பிக்கைகள் மற்றும் வரலாறு பற்றி எப்.எக்ஸ் நடராசாவின் “மட்டக்களப்பு மான்மியம்,” கந்தையா பண்டிதரின் “மட்டக்களப்பு தமிழகம்” சா.இ.கமலநாதன் – கமலா கமலநாதன் ஆகியோரின் கூட்டுபடைப்பான “மட்டக்களப்பு பூர்வீக வரலாறு” என்பன பேசுகின்றபோதும், இவை பொதுவாக கிழக்கு கரையின் சமூக வாழ்வியலில் பெரிதும் ஒரு குறுக்கு வெட்டுமுகங்களாகவே உள்ளன. குறிப்பிட்ட சமூக, பொருளாதார, புவியியல் களத்தை துண்டு, துண்டாகப் பதிவு செய்கின்றன. மேலும் கிழக்கு மாகாணத்தின் கடந்த கால சமூக அரசியல் வரலாற்றை இவை பதிவு செய்யவில்லை. அது அன்றைய காலத்தேவையில் முக்கியமற்றதாக இருந்திருக்கலாம்.
இந்தத் தவிர்ப்பு கிழக்கு மாகாணத்தின் அரசியல் வரலாறு பதிவு செய்யப்பட்டே ஆகவேண்டும் என்ற அழுத்தத்தை எமக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் “கனகர்கிராமம்” முக்கியமாக இன்றைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான சமூக, அரசியல் வரலாற்று பாடநூலாக அமைகிறது. அழகு மொழியியல் புனைவுகளை சிக்கனப்படுத்தியதன் மூலம் அந்தத் தகுதியை அது பெறுகிறது. இதனாலேயே “கனகர்கிராமம்” கிழக்கு கரையின் சமூக அரசியல் வாழ்வியலை தேர்வு செய்து குறுக்காகவோ – துண்டுதுண்டாகவோ பேசவில்லை. கிழக்குகரையின் வெருகல் ஆற்றையும் தாண்டி வடக்கே தென்னைமரவாடி தொடக்கம் தெற்கே குமுக்கன் ஆற்றையும் தாண்டிய மாணிக்ககங்கை வரை செங்கதிரோனின் பேனா பாய்கிறது. இதனால் கிழக்குகரை என்ற பெருநிலப்பரப்பின் நீள்வெட்டுமகமாக அது அமைகிறது.
செங்கதிரோன் -கோபாலகிருஷ்ணன் அம்பாறை மாவட்டம் – பொத்துவில் தொகுதியில் – ஒரு கிராமத்தை களமாக கொண்டு இந்தக் கதையை நகர்த்தினாலும் கிழக்கின் அரசியல் வரலாறாக மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதிமுதல் பொத்துவில் இரட்டை அங்கத்தவர் தொகுதிவரையும், இடையில் மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியை கடந்து அவரது அரசியல் கதைக்களம் வியாபித்துள்ளது. இதனால் கிழக்கு கரையில் சமூக வாழ்வியலை குறுக்காக வெட்டிப்பார்ப்பது “கனகர்கிராமத்தின்” முக்கியத்துவத்தை முழுமைப்படுத்தாது. கிழக்கு கரை முழுவதுமாக நீண்டு கிடக்கின்ற சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார, பண்பாட்டு, ஒழுங்குபடுத்தப்பட்ட, மற்றும் ஒழுங்கு படுத்தப்படாத மதங்கள் சார்ந்த மானிட நம்பிக்கைகள் நிறைந்த, மேலும் அனைத்திலும் “பன்மைத்துவம்” வெளிப்படும் தனித்துவமான கிழக்கின் நீள் கரையோர வாழ்வியலில் இதுவரை தெரிந்தும், தெரியாமலும், திட்டமிட்டும் தவிர்க்கப்பட்டு வந்த சமூக, பொருளாதார, அரசியல் உண்மைகளை பதிவு செய்வதில் ஆசிரியர் வெற்றியடைந்துள்ளார்.
வடக்கு -கிழக்கில் இரட்டை அங்கத்தவர் தொகுதிகள் கூட கிழக்கின் பன்மைத்துவ தனித்துவத்தின் ஒரு வெளிப்பாடு. ஆனால் தென்னிலங்கை மூன்று, இரண்டு அங்கத்தவர் தொகுதிகளை விடவும் இங்கு அந்தந்தச் சமூகங்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தை தக்கவைப்பதில் சிக்கல்களே அதிகமாக இருந்துள்ளன. பன்மைத்துவ சமூக அரசியல் சுமூக வாழ்வுக்கு ஒரு அரசியல் அங்கீகாரமாக முன்மொழியப்பட்ட இந்த பன்மைப்பிரதிநிதித்துவ அரசியல் அந்த இலக்கிற்குமாறாக, சமூக முரண்பாடுகளையே மூட்டி விட்டது. இது முறைமையின் குறைபாடா? அல்லது கட்சி அரசியல் அணுகுமுறையின் குறைபாடா? இதற்கு “கனகர்கிராமம்” பதிலளிக்கிறது.
பொதுவாக சமூக, பொருளாதார, அரசியல் பன்மைத்துவம் என்பது இருபதாம், இருபத்தியோராம் நூற்றாண்டுகளில் தேசங்களின் நல்வாழ்வு, நல்லாட்சி முறையாக அங்கீகரிக்கப்படுகின்றது. உண்மையில் ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் அங்கீகரிக்கும் சமூக வாழ்வியலின் வரப்பிரசாதம். ஆனால் இலங்கையில் பொதுவாகவும், கிழக்கில் சிறப்பாகவும் இந்த பன்மைத்துவ வளம் அந்த மக்களின் சகல வாழ்வியலிலும் ஏன் குறுக்கே நிற்கின்றது? இதற்கு யார், யாரெல்லாம் பொறுப்பு? எந்தெந்த தலைமைத்துவங்கள் பொறுப்பு …. என்ற இதுவரை கிழக்கு மக்களுக்கு புரியாது அல்லது தெரியாது இருந்த அரசியல் ஆதிக்க பின்னணியை கனகர் கிராமத்தின் பிற்பகுதி முடிச்சை அவிழ்க்கிறது.
“வந்தாறுமூலை மத்திகமாகாவித்தியாலய மாணவர் விடுதியில் இருந்து றங்குப்பெட்டியுடன், பொத்துவிலில் உள்ள வீட்டுக்கு பஸ் ஏறிய கோகுலன் பொத்துவில்லை வந்தடைந்து , அம்மா…! அம்மா …! என்று. தாயை எழுப்ப நள்ளிரவைத்தாண்டியிருந்தது…..” என்ற ஒற்றை வசனத்தில் கதையை முடிக்காது, திருகோணமலை -மட்டக்களப்பு- கல்முனை – பொத்துவில் வீதிகளில் அந்த பஸ் போன்று தரித்து…. தரித்து, குலுக்கி … குலுக்கி கதை சொல்லும் செங்கதிரோன் பாணியின் மர்மம் என்ன…?
தொடரும்….
