உலகின் கரையோர   மக்களின் வாழ்வு கூறும்  காவியங்களின் பின்னணியில் “அந்தோனி”  திரைப்படம்.                   (பகுதி 2)

உலகின் கரையோர   மக்களின் வாழ்வு கூறும்  காவியங்களின் பின்னணியில் “அந்தோனி”  திரைப்படம். (பகுதி 2)

— சி. மௌனகுரு —

தொடுப்பு  2

அந்தோனி திரைப்படக்கதையும் அது படமாக்கப்பட்ட  விதமும்

உலகப்பரப்பிலும் தமிழ்ப்பரப்பிலும் கடலை  அண்டி வாழும் மக்கள்   வாழ்க்கை கலையாக்கம் பெற்ற  கதை இதுவரை கடந்த பகுதியில் குறிப்பிடப்பட்டது. 

இந்த அகண்ட பின்னணியில் தான் அண்மையிலே வந்த அந்தோணி திரைப்படத்தை வைத்து நாம் மதிப்பிட வேண்டி இருக்கிறது. 

சங்கத் தமிழர் பண்பாட்டின் நெய்தல் நில மக்களின் வாழ்வின் தொடர்ச்சியும் நீட்சியும் தான்  இந்த  அந்தோனி. பண்டைத் தமிழர் பண்பாட்டின் நெய்தல் பண்பாட்டின் அடித்தளங்கள் இன்றைய நகர மயமாக்க, உலக மயமாக்க

டிஜிரல் மயமாக்கச் சூழலில் சுருங்கிச் சுருங்கி இல்லாதாகும்  

காலச்சூழலில் கடலோரத் தமிழர் வாழ் குக்கிராமங்களில்தான் அந்தப் பழைய எச்சங்கள் மனித உணர்வுகள், நேர்மை, நீதி, நியாயம், வாழ்க்கை முறைகள், பண்பாடுகள் யாவும் ஒரு   வாழ்வாகக் காணவும் படுகின்றன. அந்த எச்சம் கலை நயத்தோடு அந்தோனியில் தரப்படுகிறது. 

இனி  படியுங்கள்..

அந்தோனி படம் பாசையூர்  அல்லது நாவாந்துறைக் கிராமம்  போன்ற ஒரு மீனவக்  கிராமத்தின் வாழ்க்கை என நினைக்கிறேன். 

நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் அதனை கண்முன் கண்டேன். காலஞ்சென்ற  டானியல் அன்ரனி வீட்டில்  உண்ட உணவு அதன்  வித்தியாசமான சுவை, நண்டுச்  சுண்டல், பெரிய மீன் துண்டுக் குழம்பு, அந்தக் குடும்பத்தின்  அன்பான உபசரிப்பு எல்லாம்     ஞாபகம் வருகிறது. 

அப்பகுதிகளில் பார்த்த கூத்துகள் ஞாபகம் வருகிறது. 

அங்கு அலுப்பாந்தியில் மீன் வாங்கசென்ற காலங்கள் ஞாபகம் வருகின்றன. 

“பொன்மணி” படப்பிடிப்பில் தர்மசேன பத்திராஜா அந்தக்   கிராம தொழில்சார்  அசைவியக்கத்தை 1978 இல்  கமராவுக்குள் கொணர்ந்தார்.  அந்த நினைவுகள் ஞாபகம்  வருகின்றன. 

அந்த மீனவக் கிராமங்களுக்கென்று  

தனித்துவமான வாழ்க்கை முறை ஒன்று இருக்கிறது.  

தனித்துவமான பண்பாடு  ஒன்று இருக்கிறது. தனித்துவமான பேச்சு வழக்கு  ஒன்று இருக்கிறது. தனித்துவமான உறவும் முறைகளும் இருக்கின்றன. இந்து மதம் சார்ந்தவர்களாக இருந்து கிறிஸ்தவர்களாக அவர்கள் மாறிய போதிலும் பழைய இந்து மத மரபுகளைக் கடைப்பிடிக்கும் பழைய தலைமுறையினரையும்  நாங்கள் அவர்களிடம் காணுகிறோம். அந்தோனி  திரைப்படம் அந்த ஒரு  கிராமத்தின் மக்களையும் அவர்களுடைய உளவியலையும் அவர்களுடைய உறவுகளையும் மனித உணர்வுகளையும் ஒரு கதை மூலம் சிறப்பாகக் காட்டுகிறது. 

அந்தோனியின் கதைச் சுருக்கம் இதுதான்.. 

இதில்  வரும் அந்தோனியுடைய பூர்வீகம் நமக்குத்தெரியாது. 

செம்மீனில் வரும்  கதாநாயகன் போல்  இவனும் ஒருவன். 

அந்தோனிக்கு சொந்த பந்தம்  இல்லை. வாலிபனாக இருந்த போதும் சொந்த பந்தம் எதுவும் இல்லாமலே இருந்த அவனுக்கு சொந்தமெல்லாம் அந்தக் கடல் அன்னைதான். 

ஆழக்கடல் சென்று மீன்பிடித்து வருவதிலே அவன் அசாத்திய கெட்டிகாரனாக இருந்தான். 

அவர்கள் பாசையில் தொழில் தெரிந்தவனாக இருந்தான். தொழிலை அவன் நேசித்தான், அதனைப் பூசித்தான். ஒரு நாள் கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது அங்கே இன்னொரு படகிலே வந்த  நினைவற்று   தனியாக உலர்ந்து கிடந்த பெண்ணை மாத்திரம் காணுகின்றான். அவளைத் தூக்கிக்கொண்டு வந்து கரைக்குச் சேர்க்கின்றான். அவள் எதையும் பேசாத ஒரு அமைதியானவள். அவனும் அவளுடைய பூர்வீகத்தை அறிய விரும்பவில்லை. கரையோரத்தில் இருந்த கோயில் பாதிரியார் அவர்களுக்கு ஆலோசனை கூறி அவளைப் பார்த்துக் கொள்ளுமாறு அவனைவேண்ட, இரண்டு அனாதைகளும் கருணையினால் இணைந்து காதலால் கட்டுப்படுகின்றனர். அந்தோனியைப்  பொறுத்தவரை  அவள் அவனுக்குக் கடல் அன்னை தந்த கன்னி. அந்தோனியைத்  திருமணம் செய்து அவள் கணவனிடம் தூரக் கடலுக்குச் செல்லக்கூடாது என்று வாக்குறுதி வாங்குகிறாள். 

அதற்கேற்ப அவன் தன் சம்மாட்டியாரிடம் கடல் ஓரத்தில் இருந்து மீன் பிடிக்க ஒரு சிறு படகை கேட்டுப் பெற்றுக் கொள்கின்றான்.

அதற்கு வாடகைப்பணம் தேவையில்லை என்று அவர் சொன்ன போதும் பழக்க மரபு காரணமாக அவன் தினமும் அவருக்கு ஒரு சிறிது பணம் கொடுத்து வருகின்றான். 

அவனின் வாகனங்கள் இரண்டு. 

 ஒன்று அவனது கால்கள் இன்னொன்று 

லொடலொத்துப்போன ஒரு பழைய சைக்கிள். 

அந்தோனியின் வாழ்க்கை அமைதியாகப் போகிறது. அந்தோனிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அவன் அவளை இன்னொரு அம்மாவாவைக் காணுகின்றான். அவனது முதல் அம்மா கடல் அன்னை, இரண்டாவது அம்மா அவனுடைய மனைவி, மூன்றாவது அம்மா அவருடைய மகள். அந்தோணியின் உலகமே அந்தக்குடும்பம் தான். ஒரு நாள் மனைவி மயங்கி விழுகின்றாள் 

அவளை அவன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்கின்றான். இரத்தப்  பரிசோதனை நடக்கின்றது. அவள் உடலில்  வினோதமான ஒரு நோயைக் கண்டுபிடிக்கின்றார் டாக்டர்.  அது ஒரு ஆட்கொல்லி நோய். மெல்ல ஆளைக் கொல்லும் நோய் என்கிறார் டொக்டர். 

 அந்தோனியையும்  அந்தோனியின் மகளையும்  டொக்டர் பரிசோதிக்க விரும்புகின்றார். 

மகளை இவன் பாடசாலையில் இருந்து அழைத்து வருகின்றான், அவளும் பரிசோதிக்கப்படுகின்றாள். 

அந்த புது விதமான வருத்தம்  மகளுக்கும் இருப்பதை   பரிசோதனை மூலம் டொக்டர்  கண்டுபிடிக்கின்றார்,

பெரும் செலவுகோரும் வைத்தியம் பண்ண முடியாத  வருத்தம் அது. 

அதற்கு வைத்தியச் செலவுக்கு நிறைந்த பணம் தேவை. 

அந்தோனி உடைந்துவிடுகிறான். 

இந்த செய்தியை மகளிடமும் மனைவியிடமும் சொல்ல முடியாத, மற்றவரிடமும் சொல்ல முடியாத அந்தோணி குடிக்கிறான்.  

தனக்குள் புலம்புகிறான் நடைப் பிணமாக வாழ்கிறான். 

அவன் குணாதிச மற்றத்திற்கான காரணம் அறிய முடியாத அமைதியான அந்த  அப்பாவி மனைவி தவித்துப் போகிறாள். 

சம்மாட்டியாரிடம் மனைவிக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மீறி மனைவியக் காப்பாற்ற  பணம் வேண்டும் என்பதற்காக  மீண்டும் தான் ஆழக்கடலுக்கு மீன் பிடிக்கப்போவதாக   கூறுகிறான். ஆழக் கடலில்  இருந்து அவன் இரவில் வந்து சேர்ந்தபோது மகள் தூங்குவதைக் காணுகின்றான். அப்பா என ஓடி  வந்து  அணைக்கும் அந்த குழந்தை  நித்திரையில் ஆழ்ந்து கிடப்பதைக்  காணுகிறான். 

மகளை அன்போடு அழைக்கின்றான், ஆனால் அது அவளது நிரந்தர தூக்கம். அவன் மகள் இந்த நோயினால் பிணமாகிவிட்டாள். அழுதபடியே

 தான் நடைபணமாக வாழ்ந்த ரகசியத்தையும் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியையும் மீறி ஆழ்கடலுக்கு சென்ற கதையையும் தன் நடைப்பிண  வாழ்கைக்கான  காரணத்தையும் அவள் காலடியில் வீழ்ந்து கதறி  அழுது கூறுகிறான். 

அவளுக்கும் மிக விரைவில் மரணம் சம்பவித்து  விடும்  என்பதை இருவரும் உணர்கிறார்கள். தனித்து வாழ்ந்து அவனுக்கு வந்து சேர்ந்த குழந்தையும் போய்விட்டது மனைவியும் போகப் போகின்றாள், அவனுக்கு இனி ஒரே ஒரு ஆறுதல் அவனது தாய் கடல் அன்னை தான். இடையில்  அவனது நிலையை அறிந்த மீனவத்தொழிலாளர்கள்

அனைவரும் மறுநாள் ஆழக்கடல் சென்று, அன்று கிடைக்கும் முழு மீனையும் அதனால் கிடைக்கும் பணத்தையும் அந்தோணிக்குக் கொடுத்து உதவ முடிவு செய்கிறார்கள். மீன் கிடைக்கிறது அதனை விற்ற பணம் கிடைக்கிறது, அந்தப் பனக்கட்டை  எடுத்துக் கொண்டு   அந்த இரவிலே அவர்கள் அந்தோனியின் வீட்டுக்கு வருகிறார்கள். 

அங்கே அந்தோனியைக் காணவில்லை. அவன் மனைவியைக் காணவில்லை. 

அவன் மகளையும் காணவில்லை. அந்த அரிக்கன் லாம்பு மாத்திரம் அங்கே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அதுவும் வழக்கமான இடத்தில் அல்ல இன்னொரு பற்றைக்குள்ளே. 

அவர்களுக்கு தெரிந்து விட்டது அந்தோணி மகளோடும் மனைவியோடும் ஆழ்கடலுக்கு சென்று விட்டான் என்று.  

அவர்களை மீட்டு வர மீனவர் கூட்டம் தமது வள்ளங்களிலே புறப்பட்டுச் செல்கிறார்கள். 

தமது அன்னையோடு போராடி அவனை மீட்க ஆரோகணித்துச்  செல்கிறார்கள். படத்தின் உச்சக் காட்சி ஆழக்கடலில் அந்தோணியின் பிரியத்துக்குரிய வள்ளம்  அவனது அன்னை மடியான கடலில் நிற்கிறது. 

இறந்த குழந்தையை தோழிலே போட்டுக் கொண்டு, இயேசு நாதர் சிலுவை சுமந்து நிற்பது போல அந்தோனி நடுக்கடலின் மத்தியில் தனது குழந்தையைத் தோழிலே சுமந்தபடி நிற்கின்றான். 

கடல் குமுறுகிறது, அலைமேல் அழுகிறது. அவன் தன்னையும் குழந்தையையும் மனைவியையும் கடல் அன்னையிடம் ஒப்புவிக்கின்றான். அப்படியே அவனையும் அவன் மனைவியையும் பிணமான அவள் குழந்தையையும் கடல் அன்னை உள்வாங்கிக் கொள்ளுகின்றாள். 

யாரும் அறியாத அந்த  அந்தோனி கிராமத்தின் ஒரு மாமனிதனாக மதிக்கப்படுகின்றான். ஏசுவின் திருப்பாடுகள் காட்டப்படுகின்றன. மக்களுக்காக தன்னை வருத்திய அந்த மகானின் காட்சியோடு அவன் நினைவும் இணைக்கப்படுகின்றது. மக்களை பாவத்திலிருந்து மீட்க வந்தவர் இயேசுபிரான். அதானால் கசையடிபட்டவர்.  முள்முடி தாங்கியர் இரத்தம் சிந்தியவர். 

தன்னையும் சிலுவையில் அறைந்து கொண்டு மக்களை மீட்க வந்த இயேசுவாக மக்கள் மனதிலே அந்தோனி  அக்கிராம  மக்கள் மனதில் இடம் பெறுகிறான். 

கதையைப் படமாக்கிய  விதம்

இந்தக் கதையை மையமாகக் கொண்டு இன்னும் சில கிளைக் கதைகளை அதனோடு   இணைத்து அந்தோணியோடு முரண்படுகின்ற பாத்திரங்களையும் உடன்படுகின்ற பாத்திரங்களையும் ஒன்று கூட்டி 

கரையூரிலே அந்தக்  கரையோரத்தில் நாம் அன்றாடம் காணுகின்ற சம்மாட்டி, அவன் மனைவி,  அவன் பிள்ளைகள்,  தொழிலாளர்கள் மீன்பிடிப்பவர்கள், மீன் விற்பவர்கள்  கடல் தொழிலாளர் சங்கம், கடல் தொழிலாளர்களின் நம்பிக்கைகள், வள்ளம்  நிமிர்த்தல், வள்ளம் கவிழ்த்தல், வலை வீசும் முறை, ஆழக் கடலில் மீன் பிடிக்கும் முறை,  வலை வளைக்கும் முறை, அவர்கள் கொண்டாட்டத்தின் போது மகிழும் பாங்கு  என்று ஒரு கிராமத்தின் வாழ்க்கையை  அதன் உயிர்ப்பை நம் முன் கொண்டு வந்து விடுகிறது இந்த படம். 

படத்தில் முக்கியமாக குறிப்பிடக்கூடிய பல விடயங்கள் உள்ளன. 

ஒன்று அதன் வலிமையான திரைக் கதையும் அந்தத் திரைக்கதையை படம் ஆக்கிய விதமும். 

திரைக் கதையும் அதனை திரைப்படம் ஆக்கிய  விதமும்.. 

நான் முதலில் நேர்கோட்டில் சொல்லிய இந்தக்கதை இப்படியே திரைப்படத்தில்  ஒன்றன்பின் ஒன்றாக வரவில்லை. 

நவீன ஓவியத்தில் முக்கியமாக  கொலாஜ் ஓவியத்தில் அங்கொன்று இங்கொன்றாக காட்சியளிக்கும் சில ஆழமான கோடுகள் வர்ணங்கள்தான்  தெரியும். ஆனால், ஓவியத்தை  உற்று நோக்கும் ஒரு ரசிகன்  பார்வையில் இறுதியில் அது  திரண்டு ஒரு பேருணர்வு தரும்       பெரும் காட்சி  தரும். அது போல 

நான் நேர்கோட்டில் கூறிய இக்கதை முன் பின்னாக கூறப்பட்டு இறுதியில் ஒரு பேருணர்வு தரப்படுகிறது. 

படத்தின் ஆரம்பத்தில் நடு வயது தாண்டிய நரை வெளிக்காட்டும்  கிழவனாகவும் ஒரு குடும்பத்தவனாகவும் காட்சியளிக்கின்றான் அந்தோனி.  

அவனது முன்னைய  வாழ்வு எப்படியிருந்திருக்கும் என நாம் யோசிக்கிறோம். இது இடைவேளைவரை. 

பின்னர் தான் அவனுடைய வாலிப வயதும் அவன் தன் துணையை கடலில் கண்டெடுத் ததும் அவனுடைய திருமணமும்  அவனுடைய முதல் குழந்தையின் பிறப்பும் அவன் வாழ்வு என்ற அற்புதத்தில்  திளைத்த அவனுடைய ஆரம்ப  வாழ்க்கையும் காட்டப்படுகிறது. படத்தின் ஆரம்பக்கட்டங்களில்   முதிர்ந்த வயதினனும்  தொழில் பக்தியும் மிகுந்த அந்தோனி   இளம் தலைமுறை  வாலிபர்களோடு தொழில் நிமித்தம் முரண்படுகின்ற சந்தர்ப்பங்கள் வருகின்றன. 

தொழிலையே தெய்வமாகவும் கடலையே தாயாகவும் பக்தியாகவும் செய்தவன் அவன். தொழில் தெரிந்தவன் என்ற பெரும்பெயர் எடுத்தவன். 

தொழில் தெரிதல் ஒரு மீனவனுக்கு சமூகம் அளித்த பி எச் டி  பட்டம். 

பின்னாளில் தனது அடுத்த தலைமுறை பீடித்துண்டை வாயிலேயே வைத்துக்கொண்டு  

பியர் போத்தலை கையிலே  வைத்துகொண்டு தொழில்  தெரிந்தவர்களைப்போல   போல பாவனை செய்வதை கண்டு அவன் மனம் வெதும்புகின்றான். தொழிலுக்குப் போகும்போது அதைப் புனிதமாக செய்த பரம்பரையைக் கண்டவன். அவர்களோடு வாழ்ந்தவன் இந்த அந்தோனி. 

ஆனால் அவன் காணும்   இளைய பரம்பரையோ  நன்றாகக் குடித்துவிட்டு படகுகளை கவனிக்காமல் பீடி குடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில்  சுற்றும் பழைய விழுமியங்களை  உதாசீனம் செய்கின்ற இளம் தலைமுறை. இந்த இரு வேறுபட்ட வாழ்க்கை முறைகளை அழகாகப் பின்னி இருக்கிறார் திரைக்கதை ஆசிரியர். 

திரைக்கதை  வசனங்கள்.. 

திரைக்கதையினை விழிப்புள்ளதாக்குவது அதில் வரும் சின்னச் சின்ன வசனங்கள். இந்தப்படத்தின் ஒவ்வொரு வசனங்களின் பின்னாலும் ஒவ்வொரு தத்துவ கருத்துக்கள் அடங்கியிருப்பது போல எனக்கு தெரிந்தது. 

ஒரு இடத்திலே அந்தோனியின் மகள் அவனிடம் “அப்பா நீங்கள் என்னையும் அம்மா என்று கூப்பிடுகிறீர்கள் அம்மாவையும் அம்மா என்று கூப்பிடுகிறீர்கள்”என்று கேள்வி கேட்க,  

“நீயும் என்னை அப்பா என்று கூப்பிடுகிறாய் அம்மாவும் என்னை அப்பா என்று தானே கூப்பிடுகின்றாள்” என்று அவன் கூறுகின்ற அந்த பதிலுக்குள் ஆயிரம் அர்த்தங்களும் உணர்வுகளும் அன்பும் உறவு முறைகளும் அடங்கி விடுகின்றன. 

இது ஒரு சின்ன உதாரணம். 

இதேபோலவே அதிகமான வசனங்கள் ஆழ்ந்த அர்த்த பாவம் உடையவை. படத்தோடு ஒட்டி அவற்றைப் பார்க்கின்ற பொழுது அது எம்மை இன்னொரு தளத்துக்கு  இட்டுச் செல்கின்றன. திரைக்கதையும் பாத்திரமும் இருந்தால் போதுமா அதனை காட்சிப்படுத்த வேண்டாமா. 

கமரா மேனும் ஒரு கலைஞனே

கமராமேன் இதிலே புகுந்து விளையாடி இருக்கிறார். 

கிட்டடிக் காட்சிகளிலும் 

 தூரக் காட்சிகளிலும்  

மேலிருந்து கீழ் நோக்கும் காட்களிலும் கீழிருந்து மேல்  நோக்கும்  காட்சிகளிலும்  

அவர் பார்வை புரிகிறது. அந்தோனியின் வாழ்வை தமது  கமராக் கண்ணூடாக கண்டு நமக்குத் தருபவர் இந்தக் கமராமேன். 

நுணுக்கமான நடிப்பை ஒரு கண் அசைவை, உதட்டுத் துடிப்பை, ஒரு பெருமூச்சை மிக  அருகில் கொணர்ந்து அந்த நடிப்பை கேமராவில் உள்ளடக்குவதிலும் கேமரா அசைகின்ற விதம் ஒரு தேர்ந்த கேமராக்காரனின் கைவண்ணத்தை காட்டுகின்றது.   

காட்சிகள் இங்கே கலையாகின்றன. 

கமராமேன்  இங்கே கலைஞன் ஆகி விடுகின்றார். உலகப் புகழ் பெற்ற கமராக் கலைஞர்கள் வரிசைக்கு நெருங்குகிறார். 

படத் தொகுப்பு

ஒரு திரைக்கதையை எடுப்பதற்கு அவர்கள் பல்வேறு விதமாக அலைவார்கள். பல்வேறு சொட்டுகளை  எடுப்பார்கள். சிலவேளைகளில் திரைக்கதையில் இல்லாதது கூட அந்த கணத்தில் கற்பனையில் எடுக்கப்படும். சில காட்சிகளை தேவையில்லாத காட்சிகளைக்கூட படம்  எடுத்து வைப்பார்கள். இவை எல்லாவற்றையும் தெரிந்து, எடுத்து, வெட்டி, ஒட்டுகின்றவர் தான் எடிட்டர்; அதாவது படத்தொகுப்பாளர். 

ஒரு எடிட்டர் தான் ஒரு சினிமாக் கலைக்கு ஒரு முக்கியமான ஆளாக இருக்கிறார். 

அவரை நாங்கள் அதிகமாக கவனிப்பதில்லை. 

டைட்டிலில் அவர் பெயர் பத்தோடு பதினொன்றாக இடம் பெறும். இங்கே எடிட்டிங் மனதிலேயே பதியுமாறு செய்யப்பட்டிருக்கிறது. 

பாத்திரங்களும் நடிப்பும்

படத்தில் அடுத்ததாக முக்கியமானது பாத்திரங்களும் அதில் வரும் நடிப்புகளும். நடித்தவர்கள் எல்லோருமே நடிக்கவில்லை, அந்தந்த பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். 

மீனவர் சங்க தலைவராக வருபவரின் பேச்சு மொழி மாத்திரம் ஏனையவர்களில் இருந்து சற்று வித்தியாசமாக காணப்படுகிறது. 

ஏனையோர் எல்லோரும் அசல் கரையூர் யாழ்ப்பாணத் தமிழ் பேசி நடித்திருக்கிறார்கள். 

கரையூர் தமிழ் வேறு. ஏனைய இடங்களில் வழங்கும் யாழ்ப்பாணத் தமிழ் வேறு. 

தமிழின் சிறப்பே அதுதான். எங்கெங்கே அது வேர் கொள்கிறதோ அங்கெல்லாம் அது அந்தந்த நிலத்துக்கு ஏற்ப உணர்ச்சி பூர்வமான சொற்களை, ஒரு வகையான ஓசை நயம் மிகுந்த பேச்சை உருவாக்கும். ஆனால் பொதுவாக யாழ்ப்பாணத்தமிழ் என அறியப்பட்ட ஒரு பேச்சுத் தமிழ் இருக்கிறது. 

 பிரதேசத்திற்கேயுரிய பிரதேசத் தமிழையும் யாழ்ப்பாணத்திற்குரிய அந்தப் பொதுத்தமிழ் மொழியையும் அணைத்துக் கொண்டு சினிமாவுக்கு ஆன ஒரு பொது மொழியையும் பேசிக்கொண்டு கரையூருக்கான பேச்சு மொழியை பிரதானமாக்கி எந்த வித பிசுறும் இல்லாமல் படம் செல்வது படத்துக்கு கிடைத்த முக்கிய வெற்றி எனலாம். பாத்திரங்கள் தோன்றினால் மாத்திரம் போதுமா நடிகர்கள்  நடிகைகள் முக்கியமல்லவா 

நடிப்பிலே மனதில் மிகவும் இடம்பெறுகிறார்கள் அந்தோனியும் அவன் மனைவியும் அந்த குழந்தையும் 

சம்மாட்டியும் எதிர்பாத்திரங்களான அந்த வாலிபன், அவனது நண்பர்களும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயம், மனித இயல்பு அதுதான், எல்லோரும் ஒத்த குணாதிசயமுடையவர்கள் அல்ல. அவரவர் குணாதிசயம் அவர்களை வேறுபடுத்துகிறது. அவர்களுடைய பேச்சிலே, மூச்சிலே, அசைவிலே, பேச்சு ஓசையிலே, அவர்களின் எடுத்துரைப்பிலே, அவர்கள் நிற்கும் நிலையிலே, நடக்கும் நடையிலே, பார்க்கும் பார்வையிலே, பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ளும் விதத்திலே, அவர்கள் குணாதிசயம் வெளிப்படும்.  

இதற்கான நடிப்புப்பயிற்சியும் மிக மிக முக்கியமானது. இதில் நடித்தவர்கள் பலர் நான் அறிந்த முகங்கள். நாடகங்களில் நடித்து பழக்கப்பட்டவர்கள். 

நாடக நடிப்பு வேறு, கேமரா முன் நடிப்பது வேறு. நாடக நடிப்பில் முழு அவையமும் நடிக்க  வேண்டும். அங்கு எடுத்துரைப்பு  முறையும் வேறு. கேமரா முன் நடிப்பது மிக நுணுக்கமான நடிப்பு. அதனை அவர்கள் நன்றாக செய்திருந்தார்கள். நெறியாளரின் நெறிப்படுத்தல் இங்கேதான்  தொடங்குகிறது.  

அந்தோனியின் மனைவியின் நடிப்பு இன்னும் மனதை விட்டுப் போகவில்லை. அந்த  அப்பாவித் தனமான மெல்லிய தோற்றமும்  அந்த மெல்லிய புன்னகையுமே  அந்தப்  பாத்திரத்துக்கான பிளஸ் பாயிண்ட். அழகான மெல்லிய உடல்வாகு. 

ஆனால், அதற்குள்ளே ஒரு நோய் இருப்பது போல ஒரு தோற்றம். அமைதியான அவள் பார்வை, அவள் அதிகம் பேசவில்லை. ஆனால் அவருடைய கண்கள்,  அவருடைய அசைவுகள், அவருடைய பெருமூச்சு, அவள் இருக்கின்ற விதம் எல்லாமே பேசுகின்றன. 

அந்தோனியின் மகள் ஒரு அருமையான நடிப்பு கொண்ட ஒரு சிறுமி. வெகுளித்தனமாக அப்பாவிடம் கேள்விகள் கேட்கின்ற பொழுது அவருடைய முகபாவம் மிக அருமையாக வருகிறது. 

அந்தோனியின் நடிப்பு ஒரு தனித்துவமானது. அந்தப் பாத்திரம் அப்படியானது. இதிலே நாங்கள் வாலிப அந்தோனியை காணுகிறோம். திருமணம் முடித்தபின் குடும்பஸ்தனாக வருகின்ற அந்தோனியை காணுகின்றோம்.  

பிள்ளை பிறந்த பின்நடுத்தரவயது தாண்டிய அந்தோனியைக் காணுகின்றோம்.  

காலம் போக வயது முதிர்ந்து நரைத்துப்போன அந்தோனியைக் காணுகின்றோம். 

ஒரு பெரிய காலமாற்றம் அவன் உடலிலும் நடையிலும் பார்வையிலும் மூச்சிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. 

இவை அனைத்தையும் அந்தோனியாக  நடித்தவர்  நன்றாகக் கொண்டு வருகின்றார். 

அவர் இயல்பு குறும்புத்தனமானது என்றும்  அவர் எறும்புபோல மிகவும் சுறுசுறுப்பானவர் என்றும் என்னிடம் ஒருவர் கூறினார். அந்த இயல்புக்கு உள்ளே ஒரு அப்பாவித்தனமான குறும்பு இருப்பதை நான் அவர் நடித்த   “கயல்” படத்திலே கண்டேன். 

இந்த அப்பாவித்தனமான குறும்புதான் அவருடைய பிளஸ் பாயிண்ட். 

இங்கு அவர் குறும்பாக இருக்கவில்லை, அப்பாவித்தனமாக இருக்கிறார்.  

அது வெறும் அப்பாவித்தனம் அல்ல வாழ்க்கையை உணர்ந்ததால் வந்து அப்பாவித்தனம். 

அந்தோனியின் நடிப்பு

அந்த நடிப்புப்பற்றி நான் சிறிது கூற வேண்டும். 

அந்தோனியாக அவர் நடிக்கவில்லை, அந்தோனியாக அவர் வாழ்ந்தது போலவே எனக்கு தெரிகிறது. 

நான் நம்புகிறேன் அந்த சூழலும் அந்த வாழ்க்கையும் அவருக்குள் ஊறி கிடக்கின்றது. 

அவரது ஒவ்வொரு நரம்பும் தசையும் நடித்தது போன்ற உணர்வே எனக்கு ஏற்பட்டது.  

இரண்டு மூன்று கட்டங்களை சொல்லலாம். 

ஒன்று வாலிபனான அந்தோனி ஆழக்கடலில் வேகமாகச் செல்லும் ஒரு படகில் அணியத்திலே நிமிர்ந்து ஒரு படைத் தளபதிபோல ஒரு மிடுக்கான அரசன் போல  நின்று  நடுக்கடல் நோக்கி செல்லுகின்ற அந்த கம்பீரமான தோற்றமும் அதற்குள் உடல் மொழிக்குள் பொதிந்திருந்த  அனாசாயமான ஒரு மிடுக்கோடு  செல்லுகின்ற அந்த வீரமும். அது ஒரு அந்தோனி. 

தன்னை விட இளையவர்கள் பிழையான வழியில் செல்கிறார்கள் என்பதனை கண்டும் அதனால் தான் தாக்கப்பட்டும் அவர்கள் மீது கோபம் வராமல் அவர்களை பரிவோடு நோக்கும் அந்தப் பார்வையும் அந்த அந்தோனியும்;

இது இன்னொரு அந்தோனி. ஆழக்கடல் செல்லாமல் அன்பு மனைவியின் ஒரு சொல்லிற்காக சாதாரண கடலிலே மீன்பிடிக்க செல்கின்ற அந்தோனியும் அவனது நடையும் உடல் அசைவுகளும்.  

இது இன்னொரு அந்தோனி. 

அன்பான மனைவிக்கு வைத்தியம் செய்யப் பணம் தேவை என்று வேகத்தில்  மீண்டும் ஆழ்கடலுக்குப் போகின்ற அந்த  அந்தோணியின் பார்வைகளும் செயல்களும். 

இது இன்னொரு அந்தோனி. 

தனது ஒரே வள்ளத்தை அவன் இன்னொரு குழந்தையாகத் தடவிக்கொடுக்கின்ற, அதற்கு  மஞ்சள் பூசி சாந்தமாக்கும்   அந்தோனி. இது இன்னொரு அந்தோனி. 

வள்ளத்திற்கு பிடித்த பேயை ஓர் இரவில் தனியனாகச் சென்று அந்தப்பிசாசுக்ளை ஓட்ட  அதற்கு பிரண்டை  இலைகள் கொண்டு அடித்து விரட்டி அன்போடு அதனை கழுவி அழகுபார்க்கும் அந்தோனி. இது  இன்னொரு அந்தோனி. 

டாக்டரோடு கதைக்கின்ற பொழுது அந்த நோயின் தன்மைகள் அறியாமல் வெகுளித்தனமாக பதில் கேள்விகள் கேட்கின்ற, பதில் கூறுகின்ற பேச்சும் அப்பாவி  முகமும் கொண்ட அந்தோனி. இது இன்னொரு அந்தோனி. 

குடித்து அழிகின்ற இளைஞரை பார்த்து முறைகின்ற அந்தோனி, 

மனத் துயர் போக்க பாதி வெட்டப்பட்ட அந்த பிளாஸ்டிக் போத்தலில் கள்ளு குடித்து வெறியாகின்ற அந்த அந்தோனி, 

மது போதையில்  கண்களும் உதடுகளும் அடிமன உணர்வுகளின்  கதை கூறக் காட்சி தரும் அந்தோனி,  

செத்த பிணம் போல  மனைவியையும் மகளையும் அணைத்துகொண்டு  கிடந்து கண்ணீர்  விடும் அந்தோனி, 

மகளின் மரணத்தைக் கண்டு அதிர்ந்து போன அந்தோனி, 

ஒரு கணம் அதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த கணங்களில் அவன் உறுதியோடு உதவாத இந்த உலகத்தை விட்டு மனைவியையும் அழைத்துக் கொண்டு மரணத்தை நோக்கி செல்லுகின்ற அந்த அந்தோனி. 

எத்தனை எத்தனை அந்தோனிகள். 

உச்சக்கட்டம் இயேசுவோடு அந்தோனியை இணைத்துக் காட்டும் கட்டம். 

இயேசுவும் ஒரு அப்பாவி தான். ஆனால் கொடுமைகளைக் கண்டு கொதித்து எழுந்து, கேள்வி கேட்ட அப்பாவி. அதனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி. 

கடவுள் கூட தன்னைக் கைவிட்டு விட்டார் என்று கலங்கிய அப்பாவி. அப்பாவிகள் எப்போதும் மனதிலே ஆழமாக இடம்பிடிப்பார்கள். 

அந்தோனி ஆகிய இந்த  அப்பாவி  “வின்செண்ட்” என் மனதில் ஆழமாக இடம் பிடித்திருக்கிறார். 

இசை

இத்தனைக்கும் அப்பால் இந்த படத்தை தூக்கி நிறுத்துவது இளையராஜாவினுடைய இசையாகும்.  பாடல்கள் அருமையாக இருக்கின்றன. பாடல்களைப் பாடியவர்கள் மிகப் பிரபல்யமானவர்கள்  அல்ல. ஆனாலும் தமிழ் படப் பாடல்களின்  தரத்தை  இவை  எட்டி இருக்கின்றன. அந்த தரத்திலும் சில நேரங்களில் அவற்றை விட சற்று தூக்கலாகவும் இந்த பாடல்களும் குரல்களும் அமைந்திருப்பது போல எனக்கு தெரிந்தன. 

இளையராஜாவினுடைய இசை படத்துக்கு உயிர் ஊட்டுகிறது. 

வாழ்க்கை ஓடுகிறது.. சில இடங்களிலே மௌனங்கள் இசையாக வருகின்றன. 

தண்ணீரின் இயல்பான அசைவோசை, கடலின் அலை ஓசை என்ற இயற்கை ஓசைகளை  இளையராசா  பயன் படுத்துகிறார். 

சில இடங்களிலே ஒரே ஒரு ஓசை கேட்கின்றது. அது  குமுறும் கடலோசை. படத்தின் கடைசிக்காட்சியிலே அவர் கொண்டு வருகின்ற அந்த ஓசை, பிரம்மாண்டமான கடல் ஓசை நம்மை கால் விரலின் உச்சத்தில் நின்று கேட்க வைக்கின்றன. இளையராஜா இந்தப் படத்தை அனுபவித்து, அனுபவித்து இசை கொடுத்திருக்கிறார் போல எனக்குப்படுகிறது. 

அதன் நெறியாள்கையும் தாக்கமும் தனியாக பேச  வேண்டியவை  அவற்றை  அடுத்த கட்டுரை பேசும்

( தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *