உலகின் கரையோர   மக்களின்  வாழ்வு கூறும்  காவியங்களின் பின்னணியில் “அந்தோனி”  திரைப்படம்

உலகின் கரையோர   மக்களின்  வாழ்வு கூறும்  காவியங்களின் பின்னணியில் “அந்தோனி”  திரைப்படம்

  — சி.  மௌனகுரு —

ஒரு  சிறு  அறிமுகம்

அந்தோனி படம் பற்றி திரைப்படம் பற்றிய  என்னுடைய அவதானக் குறிப்புகள் மூன்று பகுதிகளாக இங்கே பதியப்பட இருக்கின்றன, இது நீண்தொரு  கட்டுரை..

முதல் பகுதி எடுப்பு:

இத் தலைப்பில் கட்டுரை  ஆரம்பம் ஆகிறது. இது அந்தோனி திரைப்படத்திற்கு  முன்னர் உலகிலும் தமிழகத்திலும் வந்த கடல் வாழ் மக்களின் கதை கூறும் சில நாவல்கள், நாடகங்கள்,   திரைப்படங்கள் பற்றிக் கூறுகிறது.

இரண்டாம்  பகுதி தொடுப்பு 

இத் தலைப்பின் கீழ் அமையும் கட்டுரை அந்தோனியின் படக்கதையையும் அது படமாக்கப்பட்ட விதம் அதன் சிறப்புகள் பற்றியும் கூறுகிறது. 

மூன்றாம்  பகுதி முடிப்பு 

இத் தலைப்பின் கீழ் வரும் மூன்றாவது தொடர்ச்சி அந்தோணி யின்  திரைப்பட நெறியாக்கம், படம் சார்ந்த அனுபவம், எதிர்பார்ப்பு என்பன பற்றிக் கூறுகின்றது 

————————————————————————————————————–

எடுப்பு  -1

உலகப்  பரப்பில் கடலும் மக்களும்  அவர்கள் வாழ்க்கை  கலை யாக்கம் பெற்றமையும்  சுருக்க அறிமுகம்: 

அண்ட வெளியிலே நின்று சுழலும் புவிப் பந்திலே கடலும் நிலமும்  இரண்டாக பிரிந்து கிடக்கின்றன, நிலத்தை விடக் கடலின் பரப்பே அதிகம்.  இந்தக் கடலில் இருந்துதானே நிலம்  பிறந்தது?

 அவ்வகையில் நிலத்தின் தாய் கடல் அதிகம்  பேரிரைச்சலோடு. அலை எறிந்து காட்சிதரும்   அசைந்து கொண்டிருக்கும்  திரவப்பொருளாகக்  கடல்  

மனிதர், தன்னை   மிதித்து  உதைத்து, கொத்தி, வெட்டிக் காயப்படுத்தினாலும்  எல்லாவற்றையும் தாங்கிகொண்டு  அமைதியாக் கிடக்கும்  திடப்பொருளாக  நிலம். கடல் ;ஆர்ப்பாட்டம்  நிலம்  அமைதி.

ஆர்ப்பாட்டமும்  அமைதியும்   ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் என்ற மஹா  தத்துவத்தைப்  போதிக்கின்றன    இந்தக் கடலும் நிலமும். 

கடல்  சமூகம்

உலகம் பூராவும் அந்தக் காலம் தொடக்கம் இன்று வரை  இந்தத்  திரவப்  பொருளான  கடலின்   கரைப்பகுதியிலே, அதன்  ஓரத்திலே உலகப்பரப்பில் பலர்   கடற்சமூகமாக  வாழ்ந்து வருகிறார்கள். 

பண்டைக் காலத்திலே இந்த சமூகம் கடலை நம்பியே வாழ்ந்தது. கடலே அவர்களுக்கு தாயானது. கடலே  அவர்களுக்கு  உறவானது. கடல் அவர்களோடு பேசியது. கடல் அவர்களுக்கு பல கதைகள் கூறியது. தன் அருகில் தன்னையே நம்பி   வாழ்ந்த மக்களின் உள்ளக் கதைகளெல்லாம் அந்தக் கடல் அன்னை அறிவாள். 

 உலகப் பரப்பில் கடல் நிலம்

உலக பரப்பிலே கடலுக்கும் கடல் அருகில் வாழ்ந்த மக்களுக்கும் இடையே உள்ள உறவுகளை கூறுகின்ற பல இலக்கியங்கள் உருவாகின. அவற்றில் ஒன்றிரண்டை இங்கு பார்ப்போம். 

உலகப் புகழ்பெற்ற நாவலான ஹெமிங்கேயின் “கடலும் கிழவனும்” தொடக்கம் தமிழ்நாட்டில் கரையோரப் பகுதி மக்களின் வாழ்க்கையை கூறுகின்ற வண்ண நிலவனின் 

“கடல்புரத்திலே” வரை

பலமொழிகளிலும் கடல் அருகிலே வாழ்ந்த மக்களை  ஒட்டிய பல புகழ் பெற்ற இலக்கியங்கள் உருவாகின. பல திரைப்படங்களும் உருவாகின. அவை இலக்கியமாகவும்  திரைப்படமாகவும் எடுத்துரைக்கும் முறையினால்    உலகப் புகழ் பெற்றன. 

1. The Old Man and the Sea – Ernest Hemingway  -கடலும் கிழவனும் எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய இந்த நூல் வெளியான ஆண்டு: 1952. அது  Pulitzer பரிசு பெற்ற புகழ்பெற்ற நாவல்.

கதாநாயகன்: சாந்தியாகோ என்ற வயதான மீனவர். 84நாட்களாக மீன் பிடிக்க முடியாத நிலையில் அவர் ஆழ்கடலுக்குச் சென்று ஒரு பெரிய மார்லின் மீனைப் பிடிக்க போராடுகிறார். மூன்று நாட்கள் கடலோடு, மீனோடு போராடும் அந்த மனிதனின் மனவலிமை கதையின் மையம்.

ஆனால் திரும்பும் போது சுறாக்கள் மீனைச் சாப்பிட்டு எலும்பாக மட்டுமே மீதமாகிறது.

இந்த நாவல் மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டம், தோல்விக்குள் உள்ள கண்ணியம், தொழில் வாழ்க்கையின் போராட்டம் 

ஆகியவற்றை ஆழமாகக் காட்டுகிறது.

தமிழில் மீனவர் வாழ்க்கையைப் பேசும் நாவல்கள்  பல வந்துள்ளன. 

வண்ண நிலவனின் 

“கடல் புரத்திலே”  எனும் நாவல் முக்கியமானது. 

இந்த நாவல் தமிழில் மீனவர் வாழ்க்கையை மிகவும் இயல்பாக சித்தரித்த ஒரு முக்கியமான படைப்பாக கருதப்படுகிறது.

இந்த நாவலில் கடற்கரை கிராம வாழ்க்கை மீன்பிடி தொழிலின் சிரமங்கள் குடும்ப உறவுகள்   வறுமை மற்றும் சமூக மாற்றங்கள்  போன்ற பல அம்சங்கள் வருகின்றன.

கடல் மீனவர்களின் வாழ்க்கையில் எப்படி ஒரு தாயாகவும் ஒரு ஆபத்தாகவும் இருக்கிறது என்பதை இந்த நாவல் மிக உணர்ச்சிகரமாகச் சொல்கிறது.

 அத்தோடு ராஜம் கிருஸ்ணனின் “அலைவாய்க் கரையில்”  எனும் நாவல்’ சாதாரண மீனவர்களின் வாழ்க்கையில் விசைப்படகுகள் நிகழ்த்திய மாற்றங்கள் பற்றிக் கூறுகிறது. கடற்கரை உழைப்பாளர் மக்களின் வாழ்கை கூறப்படுகிறது 

இன்னும் பல நாவல்கள் தமிழில் எழுந்துமுள்ளன. 

 நாடகங்களில்  கடலோர  வாழ்வு

கடல் ஓர மக்களின் வாழ்க்கை உலக நாடகங்களிலும் முக்கியமான கருப்பொருளாகத் தோன்றுகிறது. கடல் உணவையும் வாழ்வாதாரத்தையும் தரும். அதே நேரத்தில் அது அபாயமும் மரணமும் நிறைந்த உலகமாகவும் இருக்கிறது. அதனால் கடலோர மீனவர் வாழ்க்கை பல நாடக ஆசிரியர்களை ஆழமாக பாதித்துள்ளது.

கடல் வாழ்க்கையை மிகத் தெளிவாகச் சித்தரிக்கும் முக்கிய நாடகங்களில் ஒன்று Riders to the Sea. இதை எழுதியவர் ஜோன் மில்லிங்டன் சிஞ். இந்த நாடகம் அயர்லாந்து மீனவர் குடும்பத்தின் துயர வாழ்க்கையைச் சொல்கிறது. ஒரு தாய் தனது குடும்பத்தினரை கடலில் ஒன்றன்பின் ஒன்றாக இழக்கிறாள். கடலின் கொடூர சக்தி இதில் வெளிப்படுகிறது.

அமெரிக்க நாடக ஆசிரியர் Eugene O’Neill எழுதிய Anna Christie நாடகமும் கடலோர வாழ்க்கையைப் பேசுகிறது.

இதில் ஒரு கடலோடியின் குடும்ப உறவுகளும் வாழ்க்கைப் போராட்டங்களும் காட்டப்படுகின்றன.

ஆங்கில நாடக மரபில் The Tempest என்ற நாடகம் கடல் புயலையும் மனித விதியையும் மையமாகக் கொண்டது. இதனை எழுதியவர் வில்லியம்  சேக்ஸ்பியர். 

இந்திய இலக்கியத்தில் மலையாளத்தில் “செம்மீன்” என்ற  நாவல் முக்கியமானது. இதை எழுதியவர் தகழி  சிவசங்கரன் பிள்ளை.  இது  நாடகமாகவும் சினிமாவாகவும் வந்துள்ளது. கேரள மீனவர் சமூகத்தின் காதல், நம்பிக்கை, மரபு ஆகியவை இதில் கூறப்படுகின்றன.

இலங்கையிலும் கடற்கரை மக்களின் வாழ்வு கூறும்  நாடக மரபுகள் உள்ளன.   

மஹா கவி  ருத்ரமூர்த்தியின்  “புதியதொரு வீடு” முந்தல்  கிராம கடற்கரை வாழ்  மக்களின் ஆசாபாசங்களைப்  பேசுகிறது. 

அவர்கள்  வாழ்வு கடல்  வாழ்வு.  ஆனால் அதனை  அவர் வென்று    மீள்வார்  என்பது  அவரது   கூற்று. 

‘சிறு நண்டு  மணல் மீது  படம் ஒன்று கீறும்

சில வேளை  அதை வந்து கடல்  கொண்டு போகும்

எறிகின்ற  கடல் என்று மனிதர்கள்  அஞ்சார்

எது வந்த  தெனில்  என்ன  அதை வென்று  மீள்வார்’

என கடலையும் வாழ்வையும்   வெல்லும்  மனிதரைக் காட்டுகிறர்  நாடக ஆசிரியர்  மஹாகவி  ருத்ர  மூர்த்தி. 

மொத்தத்தில், கடல் வாழ்க்கை மனிதனின் துயரம், துணிவு, நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த கருப்பொருளாக உலக நாடகங்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

கடலோர மீனவர் வாழ்வு கூறும் உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களும், இந்தியத் திரைப்படங்களும், அதன் பின்னணியில் தமிழ்த் திரைப்படங்களும்”

கடல் மனிதனுக்கு வாழ்வையும் அபாயத்தையும் ஒரே நேரத்தில் தருகிறது. கடலோரத்தில் வாழும் மீனவர்கள் தினமும் கடலுடன் போராடி வாழ்கின்றனர்.

அவர்களின் வாழ்க்கை கடின உழைப்பு, வறுமை, நம்பிக்கை, அன்பு ஆகியவற்றால் நிரம்பியுள்ளது.  இந்த வாழ்க்கை அனுபவங்கள் உலக திரைப்படங்களிலும் பலமுறை சித்தரிக்கப்பட்டுள்ளன.

உலக திரைப்படங்களில் கடலோர மீனவர் வாழ்க்கையை உணர்ச்சிகரமாகக் கூறிய படங்களில் ஒன்று The Old Man and the Sea.

இது Ernest Hemingway எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது.  ஒரு முதிய மீனவர் கடலில் பெரிய மீனைப் பிடிக்க போராடும் கதையை இது கூறுகிறது.

மனிதனின் உறுதி, தனிமை, கடலுடன் இருக்கும் உறவு ஆகியவற்றை படம் ஆழமாக வெளிப்படுத்துகிறது.

மற்றொரு முக்கியமான படம் The Perfect Storm.

இது ஒரு மீன்பிடி கப்பல் பேராபத்தான புயலில் சிக்கிக்கொள்ளும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

கடலில் மீன்பிடி தொழில் எவ்வளவு ஆபத்தானது என்பதை படம் வலியுறுத்துகிறது.

அதேபோல் இத்தாலிய இயக்குநர் Luchino Visconti இயக்கிய La Terra Trema என்ற திரைப்படம் மீனவர் சமூகத்தின் வறுமையையும் சுரண்டலையும் வெளிப்படுத்துகிறது.

இது உலக சினிமாவில் “நியோ ரியலிசம்” என்ற கலைநடையின் முக்கியமான படமாகக் கருதப்படுகிறது.

இந்திய திரைப்படங்களிலும் கடலோர மீனவர் வாழ்க்கை பலமுறை சித்தரிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் மிகவும் புகழ்பெற்ற படம் “செம்மீன்”. மலையாள மொழியில் உருவான இந்தப் படம் கடற்கரை மீனவர் சமூகத்தின் மரபுகள், நம்பிக்கைகள், காதல் மற்றும் துயரங்களை உணர்ச்சிகரமாகச் சொல்கிறது.

இந்தப் படம் இந்திய தேசிய திரைப்பட விருதையும் பெற்றது.

தமிழ் திரைப்படங்களிலும் மீனவர் வாழ்க்கை பின்னணியாக சில படங்கள் உருவாகியுள்ளன.

அவற்றில் ஒன்று “நீர்ப்பறவை”. 

இந்தப் படம் கடற்கரை கிராமத்தில் வாழும் மீனவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தையும் குடும்ப உறவுகளையும் சித்தரிக்கிறது.

மேலும் “கடல்”என்ற திரைப்படமும் கடற்கரை கிராமத்தை மையமாகக் கொண்டு மனித வாழ்க்கையின் நல்லதும் கெட்டதுமான போராட்டத்தை வெளிப்படுத்துகிறது.

இதனால் உலக சினிமாவிலிருந்து இந்திய சினிமா வரை கடலோர மீனவர் வாழ்க்கை ஒரு முக்கியமான கலைப் பொருளாக இருந்து வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. 

இந்தத் திரைப்படங்கள் கடலில் உழைக்கும் மக்களின் துயரத்தையும் தைரியத்தையும் உலகத்திற்கு அறிமுகப்படுத்துகின்றன.

அதே நேரத்தில் கடல் மனித வாழ்வின் அழகையும் அபாயத்தையும் நினைவூட்டுகின்றது.

கடற்கரைப் பண்பாடும் தமிழரும்

இந்தப் பின்னணியிலே  பார்க்கும் பொழுது  தமிழ்நாட்டின்  கிழக்கும்  தெற்கும் மேற்கும் சங்ககாலத்தில்  நீண்ட நிலம் கடல் சார்ந்த பிரதேசமாக  இருந்தது, தமிழகத்தின் தென்கரை ஓரத்திலே தான் குமரித் தெய்வம் உருவானது, 

கடல் கோபம் கொண்டு  குமரி நாட்டையும் மக்களையும் தனக்குள்  இழுத்துகொண்ட தொன்மங்கள் உருவாகின. 

தமிழர் பரப்பிலே  கடல் நிலம் மக்கள்

 தமிழ் சங்க இலக்கியங்களிலே

 “நெய்தல்”என்றொரு  நிலம் இலக்கிய அந்தஸ்து பெற்றது. 

  அதன்  பாடல்கள்  இரங்கல்   எனும் ஒழுக்கம் கூறும் பாடல்கள்  என  இலக்கணப்படுத்தப்பட்டு  தொல்காப்பியத்தில்   அகத்திணை  எனும்  தமிழ்  இலக்கிய மரபுக்குள்  அடக்கப்பட்டது. 

கடலுக்குச் செல்கின்ற கணவன் திரும்பி வருவான் என்று நம்பி    அவன் வரவை வழிமேல் விழி  வைத்து எதிர்பார்த்து இரங்கிக் கொண்டிருக்கின்ற காதலிக்கு ஏற்படுகின்ற உணர்வுதான் அந்த 

இரங்கல். சங்க காலத்திலேயே பாண்டிய மன்னர்கள் கடலோடு சேர்த்து அடையாளம் காணப்பட்டார்கள். மீன் கொடி அவர்களது சின்னம் ஆயிற்று. 

கேரளக் கடற்கரை  வாழ்மக்கள்

 பண்டைய  தமிழ் நாட்டின் சேர  நாடு இன்றைய கேரளம். அந்தக்  கேரள கடற்கரையிலே வாழ்ந்த மீனவர்கள் வாழ்கையைக் கூறிய தகழி சிவசங்கரன்  பிள்ளையால் எழுதப்பட்ட  “செம்மீன்” நாவல்   

எங்களுக்கு கிடைத்த கடலை அண்டி வாழ்ந்த கேரள  மக்களின் நம்பிக்கை, பழக்க  வழக்கம், வாழ்வு கூறும் ஒரு பெரிய நவீன  இலக்கியம். 

ராமு கரியத் எடுத்த அந்தப் படம் அந்த காலத்தில் கேரள கரையோர மீனவர்களைப் பற்றிய ஒரு காதல் காவியம்.   இது முன்னமேயே  குறிப்பிடப்பட்டும் உள்ளது. 

காதல் கதை ஆயினும் கடலுக்கும் மனித உறவுக்கும் வாழ்க்கைக்கும் இடையே உள்ள உறவை கூறுகின்ற அற்புதமான படம். 

தமிழர் வாழ்ந்த நெய்தல் நிலம்பற்றி மானுடவியல் முறையிலே ஆராய்ந்த பக்தவச்சல பாரதி “கடலை உழுது  ஆடவர் மீன் கொண்டுவர

அந்த மீனை உலர்த்தி சந்தைப்படுத்தி பண்டமாற்று செய்தவள் மீனவப் பெண்கள்”  என்று கூறுவார்.  உலர்வும் உழைப்பும் கொண்ட பெண்கள் இந்தக் கரையோரப் பெண்கள் குடும்பத்தின் அச்சாணிகள் ஆயினர். 

கரையோர மக்களிடையே அவர்கள் தொழிலைப் பற்றியும் கடலைப் பற்றியும் பல்வேறு கதைகள் இருந்தன 

மீனவப் பெண் இன்னொரு  ஆடவனுடன்  தொடர்பு கொண்டால், கடல் அந்தப்  பெண்ணின் மீனவக் கணவனைத்  தனக்குள் இழுத்துக் கொள்ளும் என்று ஒரு பழங்கதை  கேரள மீனவரிடம்      நிலவி இருந்தது. அந்தத் தொன்மத்தை மையமாகக் கொண்டதுதான் “செம்மீன்” நாவலும்  அதனை  ஒட்டி எழுந்த   திரைப்படமும். 

கிறிஸ்தவர்கள் ஆயினும்  இஸ்லாமியராயினும் ஒரு காலத்தில் பொங்கல் வைத்து பூஜை வைத்து படகை கடலுக்குள் தள்ளும் வழக்கம் மேற்கொண்டிருந்தனர். 

இலங்கையின் கரையோர மீனவர்கள் முக்கியமானவர்கள். 

 இலங்கையில்  கடலோர  மக்கள்

கரையோரச் சிங்கள மீனவர்கள்,

கரையோர வேடுவ மீனவர்கள், 

கரையோர தமிழ் மீனவர்கள்,  

கரையோர இஸ்லாமிய மீனவர்கள் என்று இவர்களை நாங்கள் இனரீதியாக   இலங்கையில் பிரித்தாலும்

கடலுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள பழங்கதைகள்,  மரபுக் கதைகள் பெரும்பாலும் ஒற்றுமையாகவே இருந்தன. 

படகுக்கும் அல்லது தோணிக்கும் பூசை செய்த பின்னரே அவர்கள் புறப்பட்டனர். மீன் கிடையாதபோது அவர்கள்  கடல் அன்னையைக் கோவிக்கவில்லை. தமது படகையோ தோணியையோ தான்  கோபித்தனர். அதற்கு  ஏசினர், அடித்தனr. அதைப்பிடித்த பேயை பிரண்டம்  செடி கொண்டு அடித்து  அப்பேயை விரட்டினர்.  

இலங்கை தமிழரிடையே  கடல்-நிலம் வாழ்வு

இலங்கைத் தமிழர்களை பொருத்தவரை  நீர்கொழும்பு தொடக்கம் வடக்காக சிலாபம், முந்தல், புத்தளம், உடப்பு, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு எனச் சென்று 

கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை என ஒரு மீன்பிடிச் சமூகம் வாழ்ந்து வருவதை ஈழத்து அல்லது  இலங்கை  நிலவியல் எங்களுக்குக் காட்டுகிறது. 

இந்த மக்களின் வாழ்க்கை பற்றி நாவல்கள் வந்திருக்கின்றன, கதைகள் வந்திருக்கின்றன. திரைப்படங்கள் கூட வந்திருக்கின்றன. இலங்கையில் வந்த தமிழ் சினிமா படங்களிலே கடலோரக் கதையைக் கூறுவன இரண்டு படங்கள். 

ஒன்று “வாடைக்காற்று”, 

இன்னொன்று “பொன்மணி”. வாடைக்காற்று முழுக்க முழுக்க   மன்னார்ப்  பகுதியில்  வாழ்ந்த  கரையோர தமிழ் மக்கள் கதை கூற, பொன்மணி    யாழ்ப்பாணக் கரையோர தமிழ் மக்களுக்கும் யாழ்ப்பாண  நிலத்தில் உள்ளே வாழ்ந்த இன்னொரு சமூக மக்களுக்கும் இடையில் இருந்த உறவுகளைக் கூற வருகின்றது. 

பொன் மணி பற்றி அன்று விமர்சனம் எழுதிய பேரா. சிவத்தம்பி, கரையோரக் கோவிலான  முனியப்பர் கோவிலில் ஆரம்பமாகும் கதை 

  நாவாந்துறைக்  கிறிஸ்தவ   சவக்காலையில் முடிவது ஒரு  சமூகக் குறியீடு என்கிறார். அந்த கூற்றுக்குள் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து  கிடக்கின்றன அல்லவா?

அடுத்து  இந்தப்  பின்னணியில்  நமது அந்தோனிக்கு  வருவோம்..

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *