சமஷ்டிமுறை தொடர்பான ஒரு நூற்றாண்டு விவாதமும் அதிகாரப்பகிர்வு அலகாக மாகாணங்கள் வந்த கதையும் 

சமஷ்டிமுறை தொடர்பான ஒரு நூற்றாண்டு விவாதமும் அதிகாரப்பகிர்வு அலகாக மாகாணங்கள் வந்த கதையும் 

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நோர்வேயின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் அரசாங்கத் தூதுக் குழுவுக்கு தலைமை வகித்த பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அண்மையில் ‘இலங்கையின் சமாதான செயன்முறை; ஒரு உட்பக்க நோக்கு’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டிருந்தார். 

சமாதானச் செயன்முறையை அந்த நேரத்தில் அரசாங்கம் எந்தளவுக்கு நேர்மையுடன் முன்னெடுத்தது என்பதைப் பற்றி எங்களுக்கு தனியான அபிப்பிராயம் இருக்கிறது என்ற போதிலும், அரசாங்கத்தின் தலைமைப் பேச்சாளராக பேராசிரியர் பீரிஸ் பங்கேற்றவர் என்பதால் அவரது நூல் பரவலான கவனத்துக்கு உரியதாக இருக்கிறது. 

நூலின் முதல் அத்தியாயத்தின் முதற் பந்தியிலேயே அவர் இலங்கையில் அதிகாரங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பிலான யோசனையின்  தோற்றுவாய் குறித்து தெரிவித்த கருத்து இன்று சகல தமிழ்த் தேசியவாத அரசியல் கட்சிகளும் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையின் அடிப்படையில் நிலையான தீர்வொன்று காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நிற்கும் பின்புலத்தில் சகல சமூகங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. 

தனது நூலின் ஊடாக  ஆராயப்படும் அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கம் மற்றும் சமஷ்டிமுறை என்ற  தொனிப்பொருட்கள் அவற்றின் தோற்றுவாயை இனத்துவத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளில் கொண்டிருக்கவில்லை என்று எழுதியிருக்கும் பேராசிரியர், இலங்கைக்கு பொருத்தமான ஒரு ஆட்சிமுறைக் கட்டமைப்பாக சமஷ்டிமுறை  என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு பின்புலத்திலேயே முன்மொழியப்பட்டது என்பதை நினைவூட்டுகிறார். 

தொடக்கத்தில் சமஷ்டி முறை யோசனை தமிழர்களின் அபிலாசைகளுடன் அல்ல, கண்டிச் சிங்களவர்களின் அபிலாசைகளுடனேயே தொடர்புபட்டதாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க இலங்கையில் சமஷ்டி ஆட்சிமுறைக்காக குரலெழுப்பி இந்த வருடத்துடன் சரியாக ஒரு நூற்றாண்டு நிறைவடையும் நிலையில்  பேராசிரியர் இதைக் குறிப்பிட்டிருப்பது தற்செயலானதாக இருந்தாலும் கூட, அதில் ஒரு பொருத்தப்பாடு இருக்கிறது. 

 கனடாவில் வாழும் மூத்த இலங்கைப் பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் ‘100 வருடங்களுக்கு முன்னர் பண்டா ரநாயக்க விடுத்த சமஷ்டி ஆட்சி முறைக்கான அறைகூவல்’ என்ற தலைப்பில் அண்மையில் ஒரு கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். 

தமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ்டி ஆட்சிமுறைக்காக குரலெழுப்புவதற்கு நீண்டகாலத்துக்கு முன்னதாகவே 1920 களின் முற்பகுதியில் இளம் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவும் அந்த தசாப்தத்தின் பிற்பகுதியில் டொனமூர் ஆணைக்குழுவின் முன்னிலையில் கண்டிச் சிங்களப் பிரதிநிதிகளும் சமஷ்டி முறைக்காக குரல் கொடுத்தனர் என்றும் வடக்கு — கிழக்கு மாகாணம் ஒன்று உட்பட மூன்று மாகாணங்களுடனான சமஷ்டி இலங்கை யோசனையை கண்டிச் சிங்களவர்கள் முன்வைத்தனர் என்றும்  அரசியலமைப்புச் சட்ட  நிபுணரான கலாநிதி றொஹான் எதிரிசிங்க ‘சமஷ்டி முறை; மாயைகளும் யதார்த்தங்களும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டியே ஜெயராஜ் தனது கட்டுரையை தொடங்கினார்.

“அந்த யுகத்தின் அரசியல் தலைவர்கள் மத்தியில் தலைசிறந்த அறிவுஜீவியான பண்டாரநாயக்க  ஒரு வகையான சமஷ்டிமுறை மாத்திரமே இலங்கையின் ஆட்சிமுறைப் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கமுடியும் என்று முன்கூட்டியே 1926 ஆம் ஆண்டளவில் வாதாடினார். 

“கரையோரச் சிங்களவர்களுக்கும் மலைநாட்டுச் சிங்களவர்களுக்குமாக இரு அலகுகளையும் தமிழர்களுக்காக வடக்கு — கிழக்கில் ஒரு அலகையும் கொண்ட ஒரு சமஷ்டி ஏற்பாட்டை 1927 ஆம் ஆண்டில் கண்டிச் சிங்களவர்கள் முன்மொழிந்தனர்.

“சிங்களவர்களினால் முன்மொழியப்பட்டபோது சமஷ்டிமுறையை இலங்கைத் தமிழர்கள் நிராகரித்தார்கள்.  தங்களுக்கு கிடைத்த அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் வடக்கு — கிழக்கு தமிழர்களுக்காக சமஷ்டிமுறையை வழங்குமாறு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கோரிக்கையை முன்வைத்திருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கக்கூடிய சகல சாத்தியப்பாடுகளும் அன்று இருந்தன.

“பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலத்தில் இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ்டி முறையையோ அல்லது தனிநாட்டையோ கூட  கோரவில்லை. பதிலாக அந்தக் கோரிக்கைகளை தமிழ்த் தலைவர்கள் பிரிட்டிஷார் இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் மாத்திரமே முன்வைத்தனர்” என்று அவர் எழுதியிருந்தார்.

நூறு வருடங்களுக்கு முன்னர் ‘மோர்ணிங் லீடர்’ பத்திரிகைக்கு ஆறு கடிதங்களை எழுதிய பண்டாரநாயக்க இலங்கைக்கு சமஷ்டி ஆட்சிமுறையே பொருத்தமானது என்று தமிழர்களை நம்பவைப்பதற்கு ‘யாழ்ப்பாண விரிவுரையை’ நிகழ்த்த 1926 ஜூலை 26 ஆம் திகதி  யாழ்ப்பாணத்துக்குச் சென்றார். அன்றைய தினம் ‘எமது அரசியல் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு சமஷ்டி முறையே’ என்ற தலைப்பில் உரையாற்றிய அவர் இனவேறுபாடுகளைக் கையாளுவதற்கும் பிராந்திய சுயாட்சியே சீரான வழி என்று வாதிட்டார்.

 சமஷ்டி முறைக்காக குரல்கொடுக்க தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு அவர் விடுத்த வேண்டுகோளை தமிழர்கள் நிராகரித்தார்கள். யாழ்ப்பாண மாணவர்  காங்கிரஸ் (பிறகு அது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றது) சமஷ்டிமுறை யோசனையை எதிர்த்தது. 

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிரகாசமான கல்வியைப் பெற்றதன் பின்னர் 1925 ஆம் ஆண்டில் நாடுதிரும்பிய பண்டாரநாயக்க இலங்கை தேசிய காங்கிரஸின் உறுப்பினராக இருந்த அதேவேளை, அரசியல் சுயாட்சி இலக்கை அடைவதற்காக முற்போக்கு தேசியக் கட்சியை ஆரம்பித்தார். அந்த கட்சியின் யாப்பு பண்டாரநாயக்கவின் மனதில் இருந்த சமஷ்டி ஆட்சிமுறை பற்றிய திட்டவரைவு ஒன்றை உள்ளடக்கியதாக இருந்தது.

கரையோரச் சிங்களவர்களையும் மலைநாட்டுச் சிங்களவரையும் தமிழர்களையும் நாட்டின் பிரதான குழுக்களாகக் குறிப்பிட்ட அந்த யாப்பு ஒவ்வொன்றும் முற்றுமுழுதான சுயாட்சியைக் கொண்ட ஒன்பது மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

பண்டாரநாயக்கவின் யோசனையை அவரின் நெருங்கிய நண்பரான கல்விமான் ஜேம்ஸ் ரி. இரத்தினத்தை தவிர,  முற்போக்கு தேசிய கட்சியின் சகல உறுப்பினர்களும் ஆதரித்தனர். சமஷ்டிமுறை தொடர்பிலான யோசனை அந்த காலகட்டத்தில் இனவாத உணர்வுகளையோ அல்லது சிங்களவர்களிடமிருந்து எதிர்ப்பையோ கிளப்பவில்லை. அந்த யோசனைக்கு கடுமையான எதிர்ப்பு ஒரு சிங்களவரிடமிருந்து அல்ல, தமிழரிடமிருந்தே வந்தது என்று ஜெயராஜ் எழுதினார்.

இது இவ்வாறிருக்க, காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இலங்கையில் பிரபல்யமான பிரிட்டிஷ் சிவில்சேவை அதிகாரியாக இருந்த லெனார்ட் வூல்வ் 1930 களின் பிற்பகுதியில் இலங்கைக்கு சுவிட்சர்லாந்தின் கன்ரோன் முறையே அதிபொருத்தமானது என்ற கருத்தை முன்வைத்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. 

1938 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பிய அறிக்கை ஒன்றில் லெனார்ட் வூல்வ் கரையோரச் சிங்கள மாகாணம், கண்டியச் சிங்கள மாகாணம், தமிழ் வடக்கு மாகாணம், தமிழ் கிழக்கு மாகாணம் என்று நான்கு கன்ரோன்களையும் மலைநாட்டில்  இந்திய வம்சாவளி தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தேயிலைத் தோட்டப்பகுதிகளை உள்ளடக்கி ஐந்தாவது கன்ரோன் ஒன்றையும் உருவாக்கலாம் என்று யோசனையை முன்வைத்தார். 

மலையகத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் தேசிய நலன்களைப் பேணுவதற்காக அவர்களுக்கென்று தனியொரு கன்ரோனை  பரிந்துரைத்த ஒருவர் என்றால் நாமறிந்தவரை அது லெனார்ட் வூல்வ் மாத்திரமேயாவார்.

கன்ரோன் முறையை அறிமுகப்படுத்தக்கூடிய அளவுக்கு இலங்கை பெரிய நாடு அல்ல என்ற வாதம் முன்வைக்கப்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த அவர் இலங்கையின் பரப்பளவு சுவிட்சர்லாந்தின் பரப்பளவை விடவும் 10 ஆயிரம் சதுரமைல்கள் அதிகம் என்று சுட்டிக் காட்டியதுடன் இனத்துவ அடிப்படையிலான சனத்தொகையைப் பொறுத்தவரை சுவிட்சர்லாந்தில் ஜேர்மன் மொழி பேசுபவர்களை இலங்கையில் சிங்களவர்களுடனும் பிரெஞ்சு மொழி பேசுபவர்களை தமிழர்களுடனும் இத்தாலி மொழி பேசுபவர்களை முஸ்லிம்களுடனும் ஒப்பிட்டார். 

 இவை ஒரு காலனித்துவ நிருவாகியாக இருந்த முற்போக்குவாதியான ஆங்கிலேயர் ஒருவர் ஏழு ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்து அதன் மக்களை நெருக்கமாக அறிந்து  பெற்றுக்கொண்ட அனுபவங்களின் விளைவாக முன்வைத்த யோசனைகளாகும்.

பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து அன்றைய தமிழ்த் தலைவர்கள் சமஷ்டிமுறைக்காக குரல்கொடுத்துப் போராடியிருந்தால் இலங்கையின் அரசியல் வரலாறு நிச்சயமாக வேறுபட்டதாக இருந்திருக்கும். 

1931 ஆம் ஆண்டில் டொனமூர் அரசியலமைப்பின் மூலமாக சர்வஜன வாக்குரிமையும் பிராந்திய அடிப்படையிலான பிரதிநிதித்துவமும் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பண்டாரநாயக்கவின் அரசியல் நோக்கில் மாற்றம் ஏற்பட்டது. இதற்கு பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகளை அடுத்தவாரம் பார்ப்போம்.(தொடரும்)