— சி. மௌனகுரு —
முடிப்பு =3
இந்தப் பகுதி அந்தோனியின் திரைப்பட நெறியாக்கம், படம் சார்ந்த அனுபவம், எமது எதிர்பார்ப்பு என்பன பற்றிக் கூறுகின்றது
திரைப்பட நெறியாக்கம்:
முன் கட்டுரையில் நான் கூறிய எல்லாவற்றையும் இணைத்து ஒருங்கிணைத்து வைத்து ஆரம்பத்தயாரிப்பு pre- production, தயாரிப்புக்கு பின்னர் post production என்று மண்டையை உடைத்துக் கொண்டு உழைப்பவர்தான் நெறியாளர். அவர் மனதில் வைத்துக்கொண்டிருக்கும் அந்தக் காட்சிகளுக்குத்தான் நான் மேற்சொன்னவர்கள் உருவம் தருகிறார்கள். இந்தப்படத்தின் நெறியாளர்கள் இருவர் என்பதனை டைட்டிலில் தெரிந்து கொண்டேன். ஒருவர் சுகிர்தன் கிறிஸ்து ராஜா மற்றவர் ஜெனூசன்.
இணை நெறியாள்கை (Co-direction) என்பது இரண்டு இயக்குநர்கள் சேர்ந்து ஒரு திரைப்படத்தை உருவாக்கும் நடைமுறை.
இதில் சில சாதகங்களும் பாதகங்களும் உள்ளன.
சாதகங்கள்: இரண்டு பேரின் சிந்தனைகள் சேருவதால் படைப்பாற்றல் அதிகரிக்கும். வேலைப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ள முடியும். கதை, காட்சி அமைப்பு, நடிகர் இயக்கம் போன்றவற்றில் பல கோணங்களில் சிந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இதனால் படம் ஆழமும் தரமும் பெறலாம்.
பாதகங்கள்: சில நேரங்களில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படும். ஒரே கலைப்பார்வை இல்லாவிட்டால் படத்தின் ஒருமை பாதிக்கப்படலாம்.
சுருக்கமாக, நல்ல புரிதல் இருந்தால் இணை நெறியாள்கை சிறந்த படைப்பை உருவாக்க உதவும். இல்லையெனில் அது சிக்கல்களையும் உருவாக்கலாம்.
உலக சினிமாவிலும் தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் இணை நெறியாளர்கள் சேர்ந்து இயக்கியவையாகும்.
தமிழ் சினிமாவில் பழைய காலத்தில் கிருஸ்ணன்-பஞ்சு என்ற கூட்டணி மிகவும் முக்கியமானது.
சில நேரங்களில் இரண்டு இயக்குநர்கள் இணைந்து புதிய சிந்தனைகளுடன் சிறந்த படைப்புகளை உருவாக்க முடியும் என்பதும் தெளிவாகிறது.
நெறியாளர் ஜெனூசன் ஒரு நாடக அரங்கியல் மாணவர் என்பதையும் எங்கள் வகுப்புகளிலேயே கலந்து கொண்டிருக்கின்றார் என்பதையும் அவர் எனக்கு எழுதிய போதுதான் நான் அறிந்து கொண்டேன். அது பழைய காலக் கதை. நான் அவரை மறந்து விட்டேன்
உரிமையோடு எனக்கு அவர் எழுதிய வார்த்தைகள் இவை.
“வணக்கம் Sir, எங்கள் திரைப்படத்தின் சிறப்பு காட்சி கொழும்பில் நாளை மறுநாள் 11ம் திகதி மாலை 6 மணியளவில் திரையிடுகின்றோம்.
நாடகங்கள் ஊடாக உங்களிடம் கல்வி பயின்று வந்த மாணவனின் படைப்பை நீங்கள் காண முடிந்தால் அது என் பாக்கியம்.
ஒரு மசாலா சினிமாவாக இல்லாமல் எங்கள் வாழ்வியலை திரைப்படமாக எடுத்திருக்கின்றோம்.
நீங்கள் கட்டாயம் வருகை தந்தால் அகமகிழ்வேன்.
அன்புடன்
ஜெனோசன்.”
இத்தகைய ஒரு படத்தை தயாரிக்க அவர்கள் எடுத்த முயற்சிகளே முக்கியமானவை. இந்தப் படத்தை நெறியாள்கை செய்ய முதலாவதாக ஒரு கரையோர சமூகத்தை அறிய வேண்டும். அதனுடைய வாழ்க்கை முறையைக் காட்சிப்படுத்த வேண்டும். அந்த சமூகத்தின் மன உணர்வுகளை துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் பெருமூச்சுகளை, வாழ்க்கை அனுபவங்களை,
உறவுகளை, பேச்சு மொழிகளை அறிந்து கொள்ள வேண்டும்.
அவர்களுடைய மத நம்பிக்கைகள், கிறிஸ்தவ மதமாக இருந்தாலும் அவர்களுடைய முன்னோர்கள் போற்றிய அந்தப் பழைய இந்து மத நம்பிக்கைகளை அவர்கள் இன்னும் விடாமல் இருப்பதை மானுடவியல் ரீதியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு அந்தப் பழைய சம்பிரதாயங்கள், பழைய பழக்க வழக்கங்கள் மதம் சார்ந்தவை அல்ல. அவை பண்பாடு சார்ந்தவை என்ற பண்பாட்டு மானிடவியல் அறிவு வேண்டும்.
அந்தச் சமூகத்திற்கென
ஒரு உளவியல் உண்டு. அந்தச்சமூக உளவியல் அறிவு வேண்டும். இது எல்லாம் நமது இணை நெறியாளர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் போலவே எனக்குப்பட்டது. நமக்கு இரு நெறியாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். திரைக்கதை வசனமும் அவர்களது என அறிகிறேன். படத்தின் ஆரம்ப அறிமுகத்தில் மேடையில் இருவரையும் அவதானித்தேன். நெறியாளருள் ஒருவர் பேசினார். ஆனால் அவர் பேச்சிலே ஒரு அங்கதம் வெளிப்படையாகத் தெரிந்தது. மற்ற நெறியாளரோ இரண்டு வார்த்தைகளில் முடித்துக் கொண்டார்.
இதில் நான் ஒருவரை ஒருவர் குறைத்துக்கூறவில்லை, இரண்டு பேரும் இரண்டு குணாதிசயங்கள் என்பதை சொல்லவே இதனை நான் குறிப்பிட்டேன்.
படம் ஓடும்போது அவதானித்தவை
படம் ஆரம்பமானது. சில வசனங்களுக்கு இடையிடையே கைதட்டல்கள் வந்தன. ஒருவிதமான சத்தமும் எழும்பவில்லை. எல்லோர் மனதும் மெல்ல மெல் ல இறுகிப்போய் இருந்தது போன்ற உணர்வே வந்தது.
இடைவேளைக்கு வெளிச்சம் போடப்படவில்லை தொடர்ந்து படம் போடப்பட்டதால் அந்த முடிவு ஏற்படவில்லை. சில இடங்களில் காட்சிகளும் வசனங்களும் மனதைக் கசக்கிப் பிழிந்தன.
மனதிலே ஏதோ ஒரு பாரம் மெல்ல மெல்ல ஏறிக்கொண்டு வந்தது, மனம் கனத்துப் போய் இருந்தது.
அந்தோனியையும் ஏசுநாதரையும் இறுதியில் இணைத்துப் பார்க்கின்ற பொழுது ஒரு மகா மனிதனின் இறப்புத்தான் மனதில் தேங்கி நின்றது. படம் முடிந்து விட்டது , எழுத்துக்கள் ஓடத் தொடங்கின, வழக்கமாக எழுத்துக்கள் போடப்பட்டதும் சனம் எழும்பி விடும், சபையிலே ஒரு சலசலப்பும் உருவாகிவிடும். இங்கே ஒரு பெரும் அதிசயம் நிகழ்ந்தது. படம் முடிந்து எழுத்துக்கள் காட்டப்படும் போது ஒரு சிறிது நேரம் தான் சங்கீதம் சென்றது. அதற்குப் பின்னால் மயான அமைதி. அந்த அமைதியின் பின்னணியிலே எழுத்துக்கள் மெல்ல மெல்ல ஓடிக் கொண்டிருந்தன. அதில் பங்கு பற்றிய அதற்காக உழைத்த அனைவரின் பெயர்களும் வரிசையாக வந்து கொண்டு இருந்தன.
சபையில் உட்கார்ந்து கொண்டிருந்த (அதாவது கிட்டத்தட்ட ஹவுஸ் ஃபுல்) எவருமே எழும்பவில்லை.
அசையவில்லை
அப்படியே உறைந்து போய் இருந்தார்கள். நான் நம்புகின்றேன், அந்த மனித உணர்வும் அந்த அமைதியும் அந்தப் படத்தின் வெற்றியை நிரூபித்தது என நினைத்துகொண்டேன்.
அழைக்கப்பட்டமையினால் அவர்கள் மரியாதையாக இருந்தார்கள் எனவும் இதற்கு ஒருவர் விளக்கம் கொடுக்கக்கூடும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை உண்டு அல்லவா?
இந்தப்படைப்பின் முக்கியஸ்தர்கள் இவர்கள் என அறிகிறேன்.
தயாரிப்பாளர் ரமணன் மற்றும் சுகந்தினி. இயக்குனர்கள் சுகிர்தன் மற்றும் ஜெனோசன்.
இசை இளையராஜா.
ஒளிப்பதிவு ரிஷி செல்வம்.
படத் தொகுப்பு சுரேஸ் ஏ பிரசாத்.
அனைவரும் இளைஞர்கள், இளம் தலைமுறை.
இவர்களோடு சேர்ந்து உழைத்த ஒரு பெரும் தொழிலாளர் படையே இருக்கிறது.
சினிமா உற்பத்தி என்பது ஒரு மிகபெரும் கூட்டுத் தொழில்.
ஈழத்தமிழ்க் கலைத் தனித்துவம்
ஈழத்து தமிழ் நாடகம், ஈழத்து தமிழ் இசை, ஈழத்து தமிழ் இலக்கியம், ஈழத்து தமிழ் ஆராய்ச்சி, ஈழத்தின் தமிழர்தனித்துவம்
என்று நாங்கள் இப்போதல்ல எமக்கும் முந்திய ஒரு தலைமுறையே பண்டைக்காலம் தொட்டுச் சொல்லி சொல்லி வந்துள்ளது. 1960களிலே நாங்கள் இளைஞர், எங்கள் இளம்பருவத்திலே இதனை நாம் அழுத்தி அழுத்திக்கூறினோம்.
எங்கள் கால்களிலே நாங்கள் நிற்போம், எங்களுக்கானதை நாங்கள் உருவாக்குவோம்,
நாம் தனித்துவமானோர்
எமக்கு என ஒரு பண்பாடு உண்டு.
‘நாமும் நமக்கோர் நலியாக் கலையுடையோம்’ என்று மஹாகவி ருத்ரமூர்த்தி கோடை நாடகத்தில் கூறுகிறார்.
இந்த மஹா வாக்கியத்தை நம்பிக்கையோடு கூறிய முதிரா இளைஞர்கள் அன்று நாம்.
அன்று அந்த இளம் தலைமுறை அன்றைய வணிக கலை இலக்கியங்களுடன் போட்டியிட வேண்டி இருந்தது.
பொன்மணி 1978 இல் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட போது தென்னிந்திய தமிழ் சினிமா வசனங்களைக் கேட்டுக் கேட்டு அதற்கு பழகிப்போயிருந்த நமது சனம் உள்ளூர் யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் கேட்டுக் கூச்சலிட டது. அது ஒரு தனி அனுபவம்.
“வாடைக் காற்று” வீசத் தொடங்கியதும் மன்னாருக்குக் கூழைக்கடாக்களும் வந்துவிடும். அது நாவலில் படத்தில் ஒரு குறியீடு. “வாடைக்காற்று” திரைப்படம் வெளிவந்தபோது படத்தில் அதன் கதாநாயகி ஆனந்தராணி குடிசைக்குள் இருந்து வெளிவந்து வானத்தில் பறவையைப் பார்த்து
கூழைக்கடா……………………
எனக் கூறியதும், சபையிலிருந்து “கூ” என்று ஒரு கூச்சலே எழுந்தது.
நமது பேச்சுத்தமிழை நம்மவரே கேலிசெய்த காலத்திலே தான் 1940/50 களில் நமது முன்னோடி பேராசிரியர் கணபதிப்பிள்ளை பேச்சு தமிழில் நாடகம் எழுதினார்.
அதனை பேராசிரியர் வித்தியானந்தன் மேடையிட்டார். கைலாசபதி, சிவத்தம்பி, முன்னாள் தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் ஆகியோர் அதில் நடித்தார்கள். அது நடந்தது 1950 களின் நடுப்பகுதியில் அந்த நாடகங்களை வாசித்துவிட்டு
“மதங்க சூளாமணி” எனும் நாடக வழிகாட்டி நூல் எழுதிய சுவாமி விபுலானந்த அடிகள்
மட்டக்களப்பு தமிழிலும்
இப்படி சில நாடகங்கள் எழுதலாமே என்று ஆலோசனை கூறினாராம். அவர்களெல்லாம் நமது முன்னோடிகள்.
யாழ்ப்பாணப்பேச்சுத் தமிழ்
பேராசிரியர் கணபதிப்பிள்ளை நாடகங்களில் மேடையில் விளையாடியது. தமிழ்நாடு உட்பட முதல் முதலாக தமிழ் நாடக வரலாற்றிலே பேச்சுத் தமிழ் பிரதான தமிழாக பேசப்பட்டது ஈழத்து நாடகங்களி தான்.
நம்மை வெளிப்படுத்த, நம் தனித்துவத்தை நிலைநாட்ட நம் முன்னோரும் நாமும் பட்டபாடுகள் அதிகம், மிகஅதிகம்.
இந்தப் பின்னணிகள் இன்றைய தலைமுறை அறியார். மக்கள் வாழ்வை, அவர் பேசுமொழியை
இலக்கியமாக்க, நாடகமாக்க, சினிமாவாக்க ஒரு பெரும் போராட்டமே அன்று நடத்த வேண்டி இருந்தது. அன்றைய தலைமுறை அன்று ஏதோ செய்தது. இன்றோ எமது அடுத்த தலைமுறை பழைய தலைமுறை யின் தோழிலேயே ஏறி நின்று உலகத்தைப் பார்க்கிறது. பழைய தலைமுறையினரின் பார்வை வட்டத்துள் புலப்படும் காட்சிகளைவிட தோழில் மீது நிற்கும் இவர்கள் காணும் காட்சிகள் வேறானவை.
பழையவர்களின் பார்வை வட்டத்துள் வராத காட்சிகள் பல மேலே நிற்கும் இவர்கள் பார்வைக்குப் புலப்படுகின்றன. சில இடங்களில் அவர்கள் பழையவர்களைக் கடந்து பாய்ந்து செல்கிறார்கள்.
அது பழம் தலைமுறைக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. ஆரவாரமான, ஆர்ப்பாட்டமான
அர்த்தமே இல்லாத, கூச்சல் எழுப்புகின்ற தமிழ்ச்சினிமாப் படங்கள் மத்தியில் அமைதியாக ஒரு வாழ்க்கையை ஆழமாக கூறிச் செல்லும் அமைதியான படமாக அந்தோணி இருக்கிறது. இது எழுதுகின்ற பொழுது ஒரு ரஷ்ய நாவலான “டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது”
என்ற அந்த நாவல்தான் ஞாபகம் வருகிறது. வாழ்க்கை என்பது இப்படி ஆழமாக அமைதியாக ஓடும் ஒரு நதிதான். இடையில் வருபவை எல்லாம் ஆர்ப்பாட்டங்கள் தான். அந்தோனி அந்த நாவல் போல
ஒரு அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்ற, வாழ்வின் பல அர்த்தங்களையும் தருகின்ற ஆழமாக மனதைத் தாக்குகின்ற ஒரு நதிதான்.
கரையோர மக்களின் ஒரு கதையை நம் மனதிலே போட்டு பூட்டி அதை இறுக்கி விடுகிறது படம். அந்தப் படம் பார்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன
இன்னும் நான் அதன் சில காட்சிகளில் இருந்தும் அது தந்த உணர்வில் இருந்தும் மீளவில்லை. ஒரு படைப்பின் வெற்றி எதிலே இருக்கிறது என்று சொன்னால் அந்தக் படைப்பு தரும் அனுபவம் நமது மாசுபட்ட மனங்களை கழுவி விடும் தன்மையில் இருக்கிறது.
அந்தோனி நம் மனதைக் கழுவி விடுகிறது போலவே எனக்குப்பட்டது.
சாதாரண தமிழ்ச்சினிமாப்படம் என்று இதனை ஒதுக்கி விட முடியாது போலவே எனக்குப்படுகிறது.
உலகத்தரப் படங்களோடு ஒப்பீட்டு இதனை அக்கு வேறு ஆணிவேராக பிய்ப்பது வேறு.
அதன் நல்ல அம்சங்களை சிலாகித்து வளர்ப்பது வேறு.
இப்போது மெல்ல மெல்ல வளரும் நம் செடிகளை மேலும் வளர்ப்பதே சிறந்த செயல் போல எனக்குப்படுகிறது.
இதுவும் ஒரு வகையில் ஒரு யாழ்ப்பாணத்தமிழரின் ஒரு போராட்டக் கலைதான்,
ஆம் மனித போராட்டங்களையும்
மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான போராட்டங்களையும்
மனித மனங்களின் போராட்டங்களையும்
கூறுகின்ற ஒரு போராட்டப் படமாக இது இருக்கிறது.
சிலவேளை இந்தப் படம் வசூல் இல்லாமல் போய்விடலாம்.
ஏனென்றால் ஏனைய ஆர்ப்பாட்டங்களுக்கு பழக்கப்பட்ட நமது தமிழ் மக்கள் இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளமாட்டார்கள்.
ஆனால் அழகியல் ரீதியாகவும் இது சில இடங்களைத் தொட்டுள்ளது என்பதே எனது அபிப்பிராயம். இந்த இடத்திலே எனக்கு “தங்கலான்” படம் ஞாபகம் வருகின்றது.
பின்தங்கிய குடிகளின் வாழ்வை, அவர்கள் பெருமூச்சை, வாழ்வை, பழக்க வழக்கங்களை, அவர்களின் தொன்மங்களை, மானுடவியல் ரீதியாக உளவியல் ரீதியாக கண்டு படமாக்கினார் அந்தப் பட நெறியாளர். இங்கே அதேபோல கரையோர மீனவர் கிராமம் ஒன்றின் கதையை அவர்களின் பெருவாழ்வை, மானுடவியல் ரீதியாக உளவியல் ரீதியாக அணுகி அதன் தொன்மங்களை கொண்டு வந்து முன் வைக்கின்றார்கள் நெறியாளர்கள். இறுதியில் வாழ்வை துணிவோடு எதிர்த்து நிற்கும் தைரியம் கொடுக்காமல் தற்கொலையைத் தீர்வு கூறுகிறார்கள் எனக்கூடச் சிலர் வாதிக்கலாம்.
மரணம் சிலருக்கு விடுதலையும் கூட என வாதித்த, செய்து காட்டிய மஹா மனிதர்களையும் நாம் கண்டுள்ளோம்.
விடுதலைக்கான தற்கொலை அது. தற்கொலைக்கும் கலைஞன் ஒரு ஞாயம் வைத்திருப்பான். அது அவனது பார்வை. கலைஞனை இதனைத்தான் செய்ய வேண்டும் என்று கூற நாம் யார்?
கடும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் இது ஒரு கலைப்படம் என்ற அந்தஸ்தைப் பெறாது போகவும் கூடும்.
இப்படி எழுதும்போது நெறியாளருள் ஒருவரான ஜெனூசன் எழுதிய கடித வரிகள் ஞாபகம் வ்ருகின்றன
‘ஒரு மசாலா சினிமாவாக இல்லாமல் எங்கள் வாழ்வியலை திரைப்படமாக எடுத்திருக்கின்றோம்’.
மசாலா — வாழ்வியல் என்ற சொற்கள்-இவற்றை அவர் புரிந்து வைத்திருக்கிறார் போல தெரிகிறது.
அவர் கலைப்படம் எனக் குறிப்பிடாமல் வாழ்வியலை எடுத்திருக்கிறோம் எனக் கூற வந்தமையை நான் புரிந்து கொண்டேன்.
அவர்கள் தங்கள் பலம் -பலவீனங்களை அறிந்து வைத்திருக்கிறார்கள்.
“தரமான கலைப்படைப்பு ஒன்றை அளிக்கும் வல்லமையை நமது இளம் தலைமுறை பெற முயற்சிக்கிறது” என்ற மகிழ்ச்சியே நெஞ்சை நிரப்பி இருக்கிறது.
வாழ்க என் இளம் தலைமுறையே!
மேலும் முயற்சிகள் செய்க.
மேலும் தரம் மிக்க சினிமா பற்றி அறிக. உலகத்தின் உன்னத திரைப்படங்களுடன் மேலும் மேலும் பரிச்சியமாகுக.
உங்களுடைய படைப்பு உலகத்தரத்தில் இருக்கவேண்டுமானால் அது நமது பண்பாட்டில் வேரூன்றி இருக்க வேண்டும். பண்பாடு பற்றிய அறிவும் தெளிவும் படைப்பாளிக்கு மிக மிக அவசியம். பண்பாடோ பன்முகம்கொண்டது
உங்கள் முயற்சி நம்மை மேலும் உயர்த்தட்டும். உழைப்பில் வாரா உயர்வுகள் உண்டோ.
(முற்றும்)
