காலக்கண்ணாடி- 07

காலக்கண்ணாடி- 07

— அழகு குணசீலன் —

இருபதை வென்றவர்!

“இதுவும் ஒரு சினிமாத் திரைக்கதை”

இந்திய சினிமாவில் அரசியலும், அரசியலில் சினிமாவும் கலந்து பந்தடிப்பது ஒன்றும் தெரியாத கதையல்ல. எமக்கு கிடைத்துள்ள மிகப்பிந்திய ஆதாரம் 800. இங்கு இரண்டு பூச்சியங்கள் இருப்பதினாலோ அல்லது 8 இன் மேல் பூச்சியமும் கீழ் பூச்சியமும் கொண்ட நான்கு பூச்சியத்தினாலோ என்னவோ 800 இறுதியில் பூச்சியமாகவே போயிற்று. 

இலங்கை அரசியல் சினிமா கலப்படமற்ற, தூய்மையும் புனிதமும் கொண்டது என்பதல்ல இதன் அர்த்தம். ஒரு பூச்சியத்தை மட்டும் கொண்ட அந்த திரைப்படம் ஆகா, ஓகோ என்று பட்டிதொட்டி எல்லாம் எதிரொலித்து ஓடிக்கொண்டிருக்கிறது. நான் இங்கு சொல்லுகின்ற சினிமாக்கதை இந்திய சினிமாவை விஞ்சிய 20 இன் கதை. 

ஆம்!  இது இருபதாவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பானது. 

சிறிலங்கா அரசாங்கத்தின் ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கும் இந்த திருத்தத்திற்கு எதிராக அணிதிரண்ட கட்சிகளின் சில எம்பிக்கள் “கூட இருந்து குழிபறித்ததாக” எதிரணியினரும்,அக்கட்சிகளை சார்ந்தவர்களும் சினிமாப் பாணியில் வசனம் பேசும் அரசியலின் திரைக்கதை. 

இருபதுக்கு ஆதரவளித்தவர்களை துரோகிகள் என்று, அதேபட்டத்தை முன்னாள் போராளிகளின் பட்டமளிப்பு விழாவில் சுமந்து நிற்கின்ற சுமந்திரன் எம்.பி. சாடியிருக்கிறார். 

நாங்கள் என்ன எடுப்பார் கைப்பிள்ளையா? 

சுமந்திரனுக்குப் பதிலளித்த ஹரிஸ் எம்.பி “நாங்கள் என்ன எடுப்பார்கைப்பிள்ளையா?” என்று முகத்தில் அறைந்தாற் போல், சுமந்திரன் மட்டும் அல்ல எவரும் எதிர்பார்க்காதபடி கேட்டிருக்கிறார். இது பொலிவூட்டில் வரும் வழக்குகளில் இடம்பெறும் சட்டவாதங்களை நினைவுபடுத்துகிறது.  

இருபது என்ற அந்தத் திரைப்படம் என்றும் இல்லாதவாறு பாராளுமன்ற திரையரங்கிலும், நாடு பூராகவும் உள்ள அரசியல் அரங்குகளிலும்  மெட்னி முதல் நள்ளிரவு ஹவுஸ்புள் காட்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

பாராளுமன்ற திரையரங்கில் எந்தப் பிரச்சினையும் இன்றி “இருபது”, மூன்றில் இரண்டு வசூலைப் பெற்றுத்தரும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். எதிர்பார்க்காத ஒன்று மூன்றில் இரண்டு வசூலுக்கும் மேலான வசூலை அது பெற்றுத்தருமா? என்பது. அந்த மேலதிக வசூலின் சொந்தக்காரர்கள் எண்மர். முஸ்லீம் காங்கிரஸ்  எம்.பிக்கள் நால்வர், தலா ஒருவர் தமிழ், சிங்கள எம்.பிக்கள். மற்றைய இருவர் வேறு முஸ்லீம் கட்சி எம்.பி.க்கள். 

சில ஊடகங்கள் கூறுவது போன்று இவர்கள் “விலைபேசப்பட்டார்களா? அல்லது முஸ்லீம், தமிழ் தலைவர்கள் இவர்களை விற்றுப் பிழைத்தார்களா? அல்லது தலைமைக்கும் தெரியாமல்  இலங்கையின் இன்றைய அரசியல் சினிமாவில் ஒரே நேரத்தில் கதாநாயகர்களாகவும்  வில்லன்களாகவும் ஆனார்களா?” என்று, என்றும் இல்லாதவாறு அரசியல் சினிமா விமர்சகர்கள் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கின்றனர். 

எது எப்படி இருப்பினும் இலங்கையின் இன்றைய பேசுபொருள் இந்த சினிமாதான். கொரோனாவையும் விஞ்சிய கொடிய நோய். 

கிழக்கு முஸ்லிம் எம்பிக்களின் முடிவு 

முஸ்லீம் எம்.பிக்கள் குறிப்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இவர்கள் ராஜபக்ஷ அரசாங்கத்தின் எதிரணியில் எதிரும் புதிருமாய் இருந்தும் இருபதை ஆதரிக்கக் காரணம் என்ன? இருபதுக்கு கையை உயர்த்தி அதனூடாக அரசியலில் அவர்கள் அடைய எண்ணிய குறுங்கால நெடுங்கால இலக்குகள் என்ன? இருபது சினிமாவின் அந்தப் பின்னணிக் காட்சிகளின் விம்பங்கள் இந்தக் காலக்கண்ணாடியில். 

1.கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பதவி. 

2.கல்முனை பிரதேச செயலக விவகாரம். 

3.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதம். 

4.ரிஷாட் பதியூதின் கைது. 

5.எதிர் அரசியல் சவால். 

இந்த விடயங்களில் கிழக்கு மாகாண முஸ்லீம்களின் நலன்களைப் பேணுதல் என்ற அடிப்படையிலேயே முஸ்லீம் தரப்பில் இருந்து ஆறு பந்துகள் ராஜபக்ஷ தரப்புக்கு வீசப்பட்டுள்ளன. வீசியவர்கள்  கட்சித் தலைமையின் கடைக்கண் பார்வையோடு வீசினார்களா? தானாகவே கிழக்கின் தனித்துவமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு வீசினார்களா? என்பது இந்த சினிமா எழுப்புகின்ற முக்கிய கேள்வி.  

எப்படிப் பார்த்தாலும் எல்லாம் கதைத்துப் பேசி கண்டும் காணாத மாதிரி, தெரிந்தும் தெரியாதமாதிரி அரங்கேறிய திரைப்படம் போன்றுதான் தெரிகின்றது. கதாநாயகன், வில்லன், துணை நடிகர் மட்டுமன்றி நெறியாள்கை, தயாரிப்பு, ஒலி-ஒளி அமைப்பு, இசை எல்லாம் அந்த பந்துக்கார்கள்தான். 

இந்தச் சினிமாவில் இருக்கின்ற அரசியல் பந்து என்ன?  

கிழக்குமாகாண சபையில் முஸ்லீம் காங்கிரசின் கையை ஓங்கச் செய்வதற்கு, அவர்கள் தங்கள் கைகளை முதலில் உயர்த்தி, தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.  

கல்முனை பிரதேச செயலக விவகாரம் வைக்கோல் இழுத்தவழிபோல் அப்படியே கிடக்கிறது. ஒருவகையில் பௌத்த பிக்கு, கருணா முதல் சுமந்திரன் வரை வந்து கதையளந்ததைத் தவிர நடந்தது எதுவும் இல்லை. 

ஆனால் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத்திற்கு பின்னரான அரசியலில் ராஜபக்ஷக்கள் முஸ்லீம்களை தவிர்த்து வீசுகின்ற  பந்து தமிழ்தரப்பிற்கு  சாதகமாக அமைந்துவிடுமோ என்ற மனப்பயம் அம்பாறை மாவட்ட முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது. 

இந்த பயத்திற்கு கருணா, பிள்ளையான்,வியாழேந்திரன் ராஜபக்ஷக்களுக்கு நெருக்கமாக இருப்பதும் ஒரு காரணம். 

இதனால் மின்னாமல் முழங்காமல் அடித்த மழைபோன்று எந்த நிபந்தனையும் இன்றி தமது கரங்களை உயர்த்தி உள்ளனர். 

ஒருவகையில் இது இறால் போட்டு சுறா பிடிக்கின்ற சினிமாக்கதை. 

ரிஷாட் பதியூதின் கைது கிழக்கு அரசியல்வாதிகளை சற்று அசைத்து விட்டிருக்கிறது. அரசாங்கம் 20 க்கான வாக்கெடுப்புக்கு சில தினங்களுக்கு முன்னர் ரிஷாட்டை கைது செய்தது. இது அரசாங்கத்தின் ஒரு அதிர்ச்சி வைத்தியம். விசாரணைகள் தொடரும்போது சந்தேகத்தின் பேரிலாவது  தங்கள் மீதும் காவல்துறை பாயலாம் என்ற அச்சம்  இவர்களுக்கு இருக்கின்றது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுதான் இந்த பந்துகள் வீசப்பட்டன. 

முஸ்லீம் காங்கிரஸ்

மறைந்த முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப்  அவர்கள் காலத்தின் கட்டாயமாகத்தான் இக் கட்சியை உருவாக்கினார். இதுவரை காலமும் தமிழரசுக் கட்சியுடன் தொடர்புகளைப் பேணிய அவர் தமிழர்கூட்டணியும்,தனிநாட்டுக்கோரிக்கையும் எழுந்தபோது அதில் இருந்து விலகி நின்றார். 

மறுபக்கத்தில் கொழும்பு முஸ்லீம் அரசியல் தலைமைகளையும் அவர்கள் சார்ந்த  தேசிய கட்சிகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். 

கிழக்குமாகாண முஸ்லீம்களின் தனித்துவத்தையும், அவர்களின் அபிலாஷைகளையும் கொழும்பு அரசியல் தலைமைகள் ஏற்கத்தயங்கின. இலங்கை முஸ்லீம்கள் என்ற சிறுபான்மை இனத்திற்குள் கிழக்கு முஸ்லீம்கள் தனித்துவமான ஒரு பிரிவினராக அஷ்ரப்பால் அடையாளம் காணப்பட்டதன் விளைவே முஸ்லீம் காங்கிரஸ் என்ற சுகப்பிரசவம். 

அஷ்ரப் அவர்களுக்குப் பின் அந்த தலைமைத்துவம் தென்னிலங்கைக்கு கைமாறியபோது உட்கட்சி ஜனநாயகத்தில் இது ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகின்றது. இந்தப் பந்து வீச்சின் வெளிப்பாடும் அதுவே. கிழக்கு எம்.பிக்கள் தன்னோடு கிழக்குமாகாண இன்றைய தனித்துவ சூழ்நிலைகள் குறித்து வாதிட்டார்கள் என்று ரவூப் ஹக்கிம் கூறுகின்ற கதையும் இதுவே. 

அபிவிருத்தி, பொருளியல் – அரசியல்  கோட்பாட்டாளர்கள் இதனை இரட்டைத் தன்மை வளர்ச்சி – அரசியல் என்று குறிப்பிடுகின்றனர். 

ஒரு நாட்டில் அல்லது  பிராந்தியங்களில் சமூக, பொருளாதார,அரசியல் வளர்ச்சி  சமமானதாக இல்லாமல் வேறுபட்ட வளர்ச்சி அளவுகளைக் கொண்டிருப்பதை அது குறிக்கின்றது. எனவே இங்கு தென்னிலங்கை முஸ்லீம் சமூகத்திற்கு மாறான, மாற்று அரசியல் அணுகுமுறை ஒன்றைக் கிழக்கில் கைக்கொள்ள வேண்டிய தேவை ரவூப்ஹக்கிம் க்கு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அவரின் கடைக்கண் சிமிட்டு  இல்லாமல் இந்தப் பந்துகள் வீசப்படுவதற்கு வாய்ப்பில்லை. 

இங்கு ஒரு பொறுப்பு வாய்ந்த தலைமைத்துவத்திற்கு இரண்டு தெரிவுகள்தான் உண்டு. 

1. கிழக்கு முஸ்லீம்களின் கோரிக்கையை நிராகரித்து அதனால் ஏற்படக்கூடிய சவால்களுக்கு முகம்கொடுத்தல்(கட்சி பிளவு உட்பட). 

2. பிரச்சினைகள் தனித்துவமானவை என அங்கீகரித்து, பொதுப்பிரச்சினைகள்,தனித்துவப் பிரச்சினைகளை இனம்கண்டு, பிராந்திய சுயாதிக்கத்தை அங்கிகரித்து கட்சி பிளவுபடுவதைத் தடுத்தல். 

ரவூப்ஹக்கிம் இரண்டாவதைச் செய்திருக்கிறார். 20 ஜனநாயகத்திற்கான சாவுமணி என்று தமிழ்தரப்பு உட்பட்ட எதிரணியினர் வாதிடுகின்றனர். இது சிறிலங்கா ஜனநாயகம் சார்ந்தே அன்றி தமிழ், முஸ்லீம் மக்களின் ஜனநாயக உரிமைகள் சார்ந்ததல்ல. சிறுபான்மையினரின் ஜனநாயகத்திற்கான சாவுமணி இந்த 20 இல்தான் அடிக்கப்பட்டதல்ல. இது ஒரு தொடர்கதை – வரலாறு. 

ஆனால் சிறுபான்மை தமிழ், முஸ்லீம் மக்களுக்கு இருக்கின்ற கேள்வி, சிறுபான்மை இனங்களுக்கான ஜனநாயகத்தை, பெரும்பான்மை வாக்களிப்பு   ஜனநாயக முறையினால் ஒருபோதும் எட்டமுடியுமா? இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அரசியல் அமைப்பில் இல்லாதவரை சிறுபான்மையினரின் ஜனநாயகம் என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய் மட்டுமன்றி பெரும்பான்மையினரால் தீர்மானிக்கப்படுவதாயும் அமைகின்றது. 

இந்த  அரசியல் சூழலில் கிழக்கு முஸ்லீம்களின் தனித்துவமான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் ஒரு தந்திர உபாயமாகவே கையுயர்த்தல் காட்சி இடம்பெற்றுள்ளது. இதற்கான அறுவடையை அவர்கள் உடனடியாகப் பெறாவிட்டாலும் எதிர்காலத்தில் இந்தப் பந்துகள் பிரயோசனமாக அமைய வாய்ப்பு இல்லை என்று மறுப்பது கடினமானது. 

இரட்டைத் தன்மை வளர்ச்சி- அரசியல் கோட்பாடு. 

இப்போது இந்தப் பந்து சினிமாவின் திசையை காட்ட காலக்கண்ணாடி வேறுகோணத்திற்கு திரும்புகின்றது 

தென் இலங்கை முஸ்லீம் தலைமைகளின் அரசியலுக்கும் கிழக்குமாகாண முஸ்லீம் மக்களின் தனித்துவ அடையாளங்களைப் பேணும் அரசியலுக்கும் உள்ள முரண்பாட்டிற்கு சமனானதுதான் கிழக்கின் தனித்துவம் சார்ந்த அரசியல். 

வடக்கு அரசியல் தலைமைத்துவங்கள் கிழக்குத் தமிழ் மக்களின் தனித்துவத்தையும் பிரச்சினைகளையும் அங்கிகரித்து, கிழக்கின் அரசியல் தலைமைகள் சுதந்திரமாக செயற்படுவதற்கான அங்கிகாரத்தை  வழங்கவேண்டும்.  

ஒட்டு மொத்த தமிழர் அரசியலில் ஒற்றுமையுடனும் பிராந்தியம்சார் தனித்துவ அரசியலில் வேறுபட்ட அணுகுமுறையைக் கைக்கொள்வற்கும் வாய்ப்பு இருக்க வேண்டும். 

தரப்படுத்தல் உதாரணம் 

பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் இதற்கு சிறந்த உதாரணம். 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வி அபிவிருத்தி ஒரே மட்டத்தில் இல்லை. வளர்ச்சியில் இரட்டைத் தன்மை காணப்படுகிறது. இதன் இடைவெளியை குறைக்கவே தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டது. 

இது வசதிபடைத்தவர்களிடம் வரி அறவிட்டு வறியவர்களுக்கு மானிய உதவி வழங்குவதற்கு சமமான ஒரு சமூகச் சமப்படுத்தல் முறை. இங்கு கிழக்கிற்கும், வன்னிக்கும் நன்மை. யாழ்குடாநாட்டிற்கு தீமை. 

தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றில் யாழ்குடாநாட்டில் எதிர்க்கலாம். வன்னியிலும் கிழக்கிலும் ஆதரவளிக்கலாம். 

அல்லது இங்கு பெரும்பான்மையான தமிழர்களுக்கு தரப்படுத்தல் நன்மையாக   இருப்பதனால் பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் தரப்படுத்தலை ஆதரித்து இருக்க வேண்டும். 

ஆனால் மேலாதிக்க அரசியல் யாழ். குடாநாட்டு நலனுக்காக பிரச்சினையை  தமிழர்களின் பொதுப்பிரச்சினையாகப் படம்காட்டியதுதான் மிகப்பெரும் தவறு. 

இந்தக் கண்ணோட்டத்திலேயே மலையக மக்களின் தனித்துவ பிரச்சினைகளும், அடையாளங்களும் அணுகப்படவேண்டும். இல்லையேல் வன்னி,கிழக்கு, மலையக மக்கள் வெறும் கறிவேப்பிலைகள்தான். 

தந்தை செல்வா காலம் முதல் பிரபாகரன் காலம் வரையும், ஏன்? இன்று வரையும் கையாளப்படும் அணுகுமுறை கறிவேப்பிலை அணுகுமுறை. 

இருபதில் கிழக்கு முஸ்லீம்களின் நலனை ரவூப் ஹக்கிம் முதன்மைப்படுத்தியுள்ளார் என்றே கொள்ள வேண்டியுள்ளது. 

ஆக, கிழக்கிலும் வன்னியிலும்  பூனைக்கு மணிகட்டுவது யார்? 

வடக்கு தலைமைகள் ஹக்கிமின் வேற்றுமையிலும் ஒற்றுமை யதார்த்த அரசியலுக்குத் தயாரா? 

இல்லையேல்  எச்சமாக இருக்கப்போவது வேற்றுமையும் வெறுப்பும் பகையுணர்வும்தான். 

ஊர் இரண்டுபட்டால்………?