போரில் தோற்றாலும் வீரம் குன்றாதவர்கள் : சரணடைய மறுத்த புலனாய்வாளன்

போரில் தோற்றாலும் வீரம் குன்றாதவர்கள் : சரணடைய மறுத்த புலனாய்வாளன்

— சீவகன் பூபாலரட்ணம் —

(ஆங்கில ஊடகங்களில் இருந்து தொகுக்கப்பட்டது) 

ஒவ்வொரு போரிலும் மாவீரர்களும் கதாநாயகர்களும் இருக்கவே செய்வார்கள். வென்ற தரப்பின் மாவீரர்களும் கதாநாயகர்களும் வெகுவாகப் பேசப்படுவர். சரித்திரம் அவர்களை நினைவுகூரும். ஆனால், தோற்றவர்கள் கதைகள் பெரிதாகப் பேசப்படுவதில்லை. 

இலங்கை விடயத்தில்கூட தமிழர் தரப்பு வீரத்தை நாம் நமக்குள் பேசிக்கொள்கிறோமே தவிர உலக அரங்கில் வேறு ஆட்கள் பேசுவது வரவர குறைந்தே வருகின்றது. 

உலகின் அனைத்துப் போர்களிலும் இதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. இரண்டாம் உலகப்போரிலும் இப்படியான பல கதைகள் இருக்கின்றன. ஜேர்மனியின் கதை ஒருபுறம். அதன் மாவீரர்கள் பற்றி யாரும் பெரிதாக பேசுவதில்லை. ஆனால், அந்த நாடு செய்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்துத்தான் உலகமே பேசுகின்றது. 

அதேபோல அதே இரண்டாம் உலகப்போரில் தோற்றுப்போன ஜப்பானுக்கும் இப்படியான பல கதைகள் இருக்கின்றன. பல மாவீரர்கள் இருக்கின்றார்கள். அவர்களை உலகம் பெரிதாக பேசுவதில்லை. ஆனால், அவர்கள் பற்றியும் அவ்வப்போது கதைகள் பேசப்படத்தான் செய்கின்றன. 

அதேவேளை, அந்த நாடு அந்தப் போரில் சரணடைவது என்ற அதன் மன்னரின் முடிவும் ஒரு தரப்பால் விமர்சிக்கப்பட்டாலும், அதனை ஒரு வீரமான முடிவு, கெட்டித்தனமான முடிவு என்று கூறுவோரும் உண்டு. ஆக, சரணடையாது இருப்பதும் வீரம், சரணடைவதும் ஒரு வீரம்தான். 

சரணடையாத வீரன் 

இலங்கைப் போரிலும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அறிவித்த இலங்கைப் படையினர், அவரது சடலத்தை அதற்கு ஆதாரமாகக் காண்பித்தனர். ஆனால், அந்த அமைப்பின் உளவுப்பிரிவின் தலைவர் பொட்டம்மான் குறித்து சரியான தகவல்கள் இலங்கை அரசுக்கே இன்னமும் தெளிவாகக் கிடைத்ததாகத் தெரியவில்லை. அவர் என்ன ஆனார், தப்பிச் சென்றுவிட்டாரா, அல்லது இறந்துவிட்டாரா என்ற கேள்விகளுக்கு சரியான விடையை எவராலும் சொல்ல முடியவில்லை. அவர் இறந்துவிட்டதாக இலங்கை தரப்பினர் அவ்வப்போது கூறினாலும், அதற்கான சரியான ஆதாரத்தை தர அவர்கள் இன்னமும் தடுமாறித்தான் கொண்டிருக்கிரார்கள். அதனால், அவர் தப்பித்துச் சென்றிருக்கலாம் என்று ஒரு தரப்பினர் நம்புகின்றனர். 

வீரன் ஹிரூ ஒணொடா 

அதேபோலத்தான் ஜப்பானிய படையின் உளவாளிகளில் ஒருவரான ஹிரூ ஒணொடா (19/மார்ச்/1922 – 16/ஜனவரி/2014) என்ற வீரரும் தலைமறைவாகிவிட்டார். ஜப்பான் அணுக்குண்டுகளால் நிர்மூலமான நிலையில் சரணடைவதாக 1945 ஆகஸ்டில் அறிவித்தது. ஆனால், அதனை நம்ப ஒணொடா மறுத்துவிட்டார். 

அப்போது பிலிப்பைன்ஸில் பணியில் இருந்தார் ஒணொடா. சரணடையச் சொல்லி ஜப்பானிய மன்னரின் உத்தரவு வந்தபோது, ஏனையவர்கள் சரணடைந்தாலும், அந்த உத்தரவை நம்ப இவரும் சில வீரர்களும் மறுத்துவிட்டனர். 

ஆகவே, அவர்கள் பிலிப்பைன்ஸில் தலைமறைவாகிவிட்டனர். மன்னர் மீது அவருக்கு அவ்வளவு விசுவாசம்.  

அப்போது முடியாட்சியான ஜப்பானில் மன்னர் மீது மக்களுக்கு அளவுக்கு அதிகமான விசுவாசம். மன்னர் அவர்களைப் பொறுத்தவரை கடவுளுக்கு சமமானவர். அவர் எவரிடமும் சரணடைய மாட்டார். ஜப்பானை விட்டுக்கொடுக்க மாட்டார் என்பது அவர்களது நினைப்பு. 

அந்த நினைப்பிலேயே ஹிரூ ஒணொடாவும் இருந்தார். எதிரிப்படைகளின் சூழ்ச்சிதான் தம்மை சரணடையக் கோரும் உத்தரவு என்று அவர்கள் நம்பினர். 

அதனால், அவர்கள் ஆரம்பத்தில் மலைப்பகுதியில் தலைமறைவாகிவிட்டனர். அதேவேளை அவ்வப்போது பிலிப்பைன்ஸ் பொலிசுக்கும் ஏனைய குழுக்களுக்கும் எதிராக கொரில்லா தாக்குதல்களையும் அவர்கள் நடத்தி வந்தனர். இப்படியாக போர் முடிந்த பின்னரும் 29 வருடங்கள் அவர் சரணடையாது தலைமறைவாக இருந்து வந்தார். 

அடுத்தடுத்து பல தடவைகள் சரணடையக்கோரும் துண்டுப்பிரசுரங்கள் விமானங்கள் மூலம் போடப்பட்டன. அதனால், இவர்களைச் சேர்ந்த ஒரு வீரர், இவர்களுக்கு தெரியாமல், சரணடைந்துவிட்டார். இதனால், தமக்கு பாதுகாப்பு அழுத்தம் அதிகரித்துவிட்டதாகவே இந்த குழு கருதியது. ஆகவே தமது தலைமறைவு வாழ்க்கையை இவர்கள் கடுமையாக்கிக்கொண்டனர். 

இப்படி தலைமறைவான காலத்தில் பிலிப்பைன்ஸ் பொலிஸார், மீனவர் குழுக்கள் ஆகியவற்றுடன் இவர்கள் பல தடவைகள் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பல பிலிப்பைன்ஸ் மக்கள் இவர்களால் கொல்லப்பட்டனர். அதுமாத்திரமன்றி இவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வந்தது. 

அவரது பணிக்காலம் 

போர் முடிய முன்னதாக 1944இல் பிலிப்பைன்ஸின் லுபாங் தீவுக்கு ஹிரூ ஒணொடா அனுப்பப்பட்ட போது அங்கு ஏற்கனவே இருந்த ஜப்பானிய படையினருடன் சேர்ந்து மிகச் சிறப்பாக அவர் பணியாற்றியுள்ளார். ஒரு விமான ஓடுபாதை மற்றும் கப்பல் இறங்கு துறை ஆகியவற்றை அழித்து ஒழித்ததில் இவர் பங்கு அதிகம். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட உத்தரவில், எதிரியிடம் சரணடையக் கூடாது மற்றும் எந்தவித காரணத்துகுக்காகவும் உயிரை தானாக மாய்த்துக்கொள்ளக்கூடது என்பவையும் அடக்கம். அதனால்தான், கடைசிவரை தனது மூத்த அதிகாரி உத்தரவிடும் வரை சரணடைய மாட்டேன் என்று அவர் இருந்தார். 

ஜப்பானிய படையினருக்கான பொதுவான உத்தரவு எதிரியிடம் சரணடையக் கூடாது உயிரைக் கொடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால், உளவுப்பிரிவினரான தமக்கு கொடுக்கப்பட்ட உத்தரவு, இறுதிவரை தாமாக உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது, கொரில்லா முறையில் போராட வேண்டும் என்று ஒணொடா தான் வழங்கிய செவ்விகளில் பின்னர் கூறியுள்ளார். ஆகவே தனக்கு உத்தரவிட்ட அதிகாரி வந்து சொன்னால் மாத்திரமே சரணடைவேன் என்று அவர் இருந்துவிட்டார். 

இப்படி 29 வருடங்கள் கடந்த நிலையில், லெப்டினண்ட் ஒணொடாவை தேடி உலகம் எங்கு அலைந்து திரிந்த நொரியோ சுசுகி என்னும் இளைஞர் இவரை சந்தித்துள்ளார். இவரிடம் அவர் சரணடைவதற்கான அரசின் உத்தரவு பற்றி கூறியுள்ளார். ஆனால், அதனை நம்ப ஒணொடா மறுத்துவிட்டார். ஆனால், பல நாட்கள் இவருடன் கழித்த சுசுகி, இவரது நண்பராகிவிட்டார்.  

ஆனாலும் ஒணொடாவின் சரணடைய மாட்டேன் என்ற முடிவில் மாற்றமில்லை. தனது மூத்த அதிகாரி வந்தால்தான் நான் சரணடைவேன் என்று அவர் கூறிவிட்டார். இதனால், நாடு திரும்பிய சுசுகி இவரது மூத்த அதிகாரிகளை தேடியுள்ளார். அரசிடமும் இவர் பற்றிய தகவல்களை கூறியுள்ளார்.  

எவ்வளவோ காலத்துக்கு முன்னதாக சரணடைந்த ஒணொடாவின் தளபதியான யோசிமி தனிகுச்சி, பின்னர் ஒரு புத்தகக்கடையை நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்.  

1974 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி தனிகுச்சி பிலிப்பைன்ஸின் லுபாங் தீவுக்கு ஒணொடாவை தேடிப் போயிருக்கிறார்.  

முதலில் 1944இல் ஒணொடாவுக்கு தான் கொடுத்த உத்தரவுக்கமைய,  அதாவது “என்றோ ஒருநாள் என்ன நடந்தாலும் நான் திரும்பி வருவேன், அதுவரை நீ எவரிடம் சரணடையக் கூடாது” என்ற அந்த உத்தரவுக்கமையவே ஒணொடா தனது தளபதி வரும் வரை காத்திருக்கிறார் என்ற செய்தி இவரை மனமுருகச் செய்துவிட்டது. 

எப்படியோ ஒணொடாவை மீண்டும் சந்தித்த அவர், தமது படைப்பிரிவு தாக்குதல் நடவடிக்கை அனைத்தையும் முடித்துவிட்டதாகவும், அனைத்து வீரர்களின் பணிகளும் அதனால் முடிவுக்கு வருவதாகவும், அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும், ஆகவே வீரர்கள் அனைவரும் அருகில் உள்ள தளபதிகள் அல்லது அமெரிக்க படையினர், அல்லது பொதுநலவாயப் படைகள் அல்லது பிலிப்பைன்ஸ் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

ஆயுத ஒப்படைப்பு 

அதனை ஏற்ற ஹிரூ ஒணொடா தன்னிடம் இருந்த ஆயுதங்களை கையளித்தார். தனது வாள், அரிசகா மாதிரி 99 ரைபிள் துப்பாக்கி, 500 சுற்று தோட்டாக்கள், சில கைக்குண்டுகள் மற்றும் தனது தாய் தனக்கு 1944 இல் கொடுத்து அனுப்பிய ஒரு குத்துவாள் ஆகியவற்றை அவர் கையளித்தார். யாரிடமாவது அகப்பட்டால், தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்காக தனக்கு அந்த குறுவாளை தனது தாய் கொடுத்ததாக ஒணொடா கூறியுள்ளார். இவர்தான் கடைசிக்கு முன்னதாக சரணடைந்த ஜப்பானிய வீரராவார். இவருக்கு அடுத்ததாக தெருவோ நகமுரா என்னும் ஒரு ஜப்பானிய வீரர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார். 

பிலிப்பைன்ஸ் பிரஜைகள் பலரை கொலை செய்ததாக இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், பிலிப்பைன்ஸின் அதிபரான பேர்னினண்ட் மார்க்கஸ் இவருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். 

நாடு திரும்பிய ஒணொடாவுக்கு அங்கே நல்ல வரவேற்பு வழங்கப்பட்டது. பெரும் நிதியை பரிசாக வழங்க ஜப்பானிய அரசாங்கம் முன்வந்தது. ஆனால், ஒணொடா அவற்றை மறுத்துவிட்டார்.  

ஜப்பானிய பெறுமானங்கள் 

வெளிப்படையாகப் பார்த்தால் ஒரு பிடிவாதக்காரன் போல ஒணொடா தென்படலாம். ஆனால் அவர் மிகுந்த ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டவர். நாட்டுக்காக உயிரையும் கொடுக்க வேண்டும்,  மன்னரை காக்க வேண்டும் என்ற கொள்கையுடன் அவரது குடும்பத்தால் வளர்க்கப்பட்டவர். கடைசிவரை தனது தளபதியின் உத்தரவை எந்தவித காரணம் கொண்டும் மீறக்கூடாது என்று கொள்கையைக் கடைப்பிடித்தவர். தான் கைது செய்யப்பட நேர்ந்தால், தன்னைத்தானே மாய்த்துக்கொள்ள தாயால் ஒரு குத்து வாளையும் கொடுத்து அனுப்பப்பட்டவர். தான் சரணடையும் வரை 29 வருடமாக அதனை தன்னுடனேயே வைத்திருந்தவர். 

நாட்டுக்காக ஆற்றிய சேவைக்காகவும், 29 வருட தலைமறைவு வாழ்க்கைக்காகவும் அவருக்கு அரசாங்கம் கொடுத்த சன்மானத்தைக்கூட அவர் மறுத்துவிட்டார். 

தன் மீது அளவுக்கு அதிகமான கவனம் செலுத்தப்படுவது குறித்து அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி இல்லை. ஜப்பானிய பெறுமானங்களை மதிக்கும் தனது வாழ்க்கைக்கு அந்த ஆரவாரங்கள் பாதகமாக அமைந்துவிடும் என்று அவர் கவலைப்பட்டார். ஆகவே, 1975 இல் தனது மூத்த சகோதரரை பின்பற்றி பிரேசில் நாட்டில் ஒரு கால்நடைப்பண்ணைக்கு வேலை செய்ய அவர் சென்றுவிட்டார்.  

ஆனாலும், பின்னர் ஒரு ஜப்பானிய பதின்ம வயது பையன் தனது பெற்றோரை கொன்ற கதை ஒன்றைக் கேள்விப்பட்டு ஜப்பான் வந்து ஜப்பானிய இளைஞர்களுக்கான “ஒணொடா இயற்கைப் பள்ளி” என்று ஒரு கல்வி நிறுவனத்தை ஆரம்பித்து அவர் நடத்தினார். 2014 ஆம் ஆண்டு 16 ஆம் திகதி டோக்கியோவில் அவர் காலமானார். 

சரணடைந்த அரசு 

தான் சரணடையக் கூடாது, ஜப்பானிய மன்னரை என்றும் கைவிடக்கூடாது, மன்னர் சரணடைய மாட்டார், அவர் ஜப்பானுக்கு தோல்வியை ஏற்க மாட்டார், இறுதி வரை போராடுவார் என்றுதான் ஹிரூ ஒணொடா என்று ஜப்பானிய போர் வீரன் நம்பினான். அவர் மாத்திரமல்ல அவரைப் போல பல்லாயிரக்கணக்கான ஜப்பானிய வீரர்களும் அப்படியே நம்பினார்கள். மன்னருக்காக, அவர் வெற்றி பெறுவதற்காக உயிரைக் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தார்கள். அவர்களின் வாழ்வின் குறிக்கோளாக அதுவே இருந்தது. தமது ஜப்பான் என்ற தாய்நாடு தமக்கு வழங்கிய உத்தரவு அது, தமது கடமை அது என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால், ஜப்பானிய மன்னர் தமது நாடு சரணடைவதாக அறிவித்தார்

ஹிரோசிமா மற்றும் நாகஷாகி ஆகிய நகர்கள் அமெரிக்க அணுக்குண்டு தாக்குதலால் சிதிலமானதை அடுத்து ஜப்பானிய அதியுன்னத தெய்வீகத்தலைவராக பார்க்கப்பட்ட பேரரசர் ஹிரோஹிட்டோ, முன்னைய ஜப்பானிய மன்னர்கள் எவரும் செய்யாத ஒரு காரியத்தை செய்தார். வானொலியில் ஒரு அறிவிப்பை அவர் செய்தார். 

ஜப்பானின் சரண் 

அணுகுண்டால் ஜப்பானின் இரு முக்கிய நகரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இரண்டாவது அணுக்குண்டு போடப்பட்ட அன்று சோவியத்தின் ஜோசப் ஸ்டாலின் ஜப்பானின் மீது போரை அறிவித்தார். சோவியத்படைகள் மஞ்சூரியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. ஜப்பானின் வடக்குத்தீவான ஹொக்கைடோவில்  எந்த நேரத்திலும் சோவியத் படைகள் வந்து இறங்கலாம். ஆகவே, இந்த நிலையில் அமெரிக்கர்களிடம் சரணடைந்துவிடலாம் என்று மன்னர் ஹிரோஹிட்டோ முடிவு செய்தார். 

தடுக்க முயன்ற படையினர் 

ஆனால், அந்த சரணடைவுக்கான அறிவிப்பைச் செய்ய அப்போதும் சில இளம் இராணுவத்தினருக்கு விருப்பமில்லை. அரச மாளிகையின் முற்றத்துக்குச் சென்ற அவர்கள் அந்த சரணடைவதற்கான அறிவிப்பு இருந்த ஒலிப்பதிவு நாடாவை பறிக்க முயன்றார்கள்.  

போரில் இன்னமும் தாம் தோற்கவில்லை, இன்னமும் தாம் போராடலாம் என்று அவர்கள் நம்பினார்கள். ஜப்பானின் தாய்த்தீவு இன்னமும் ஆக்கிரமிக்கப்படவில்லை. சீனாவில் உள்ள ஜப்பானின் பெரிய இராணுவப்படை இன்னமும் அப்படியே இருக்கிறது. அது தோற்கவில்லை. ஆகவே இன்னும் தாம் இறுதிவரை போராடலாம் என்று அவர்கள் நம்பினார்கள். 

ஜப்பானிய நகரங்கள் மீது அமெரிக்க குண்டுத்தாக்குதல்களால் பெரும் மக்கள் அழிவு ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர்கள் ஒருபுறம் அஞ்சினர். ஆனாலும், தமது முடியாட்சி முறைமையை காப்பாற்றிவிடவேண்டும் என்றும் அவர்கள் ஆர்வம் காட்டினர். சமாதானம் என்ற பெயரில் ஜப்பான் தண்டிக்கப்படும் போது அதில் தமது மன்னர் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதும் அவர்கள் கவலை.  

சரணடைவதற்கான அந்த ஒலிபரப்பை தடுக்க அந்த இளம் வீரர்களால் முடியாமல் போய்விட்டது. ஆனால், அவர்கள் நினைத்தது நடந்தது. சரணடைந்த பின்னர் மன்னரை போர்க்குற்றங்களுக்காக விசாரிப்பதில்லை என்று அமெரிக்கா முடிவெடுத்தது. சண்டையிட்டு சோவியத்திடம் மாட்டியிருந்தால் சிலவேளை மன்னரின் நிலைமை வேறாகியிருக்கலாம். 

அவரை தொடர்ந்து முடிதரித்திருக்க அமெரிக்கா அனுமதித்தது. ஆனாலும் அமெரிக்காவின் ஒரு பொம்மை போலத்தான் அவர் ஆரம்பத்தில் இருக்க முடிந்தது. 

ஜப்பானில் 1949 வரை ஆட்சி செய்த அமெரிக்க ஜெனரலான மக்ஆர்தரின் புத்திசாலித்தனமான முடிவாக இது இருக்கலாம். தனது சொந்த முடிவுகளை நிறைவேற்ற மக்ஆர்தர் மன்னரை பயன்படுத்திக்கொண்டார். பழமைவாத ஜப்பானை, அமெரிக்க பாணியிலான அரசமைப்பை கடைப்பிடிக்கும் ஒரு நவீன ஜனநாயக நாடாக அவர் மாற்றினார்.  

பிரதமருக்கு தூக்கு 

ஜப்பானின் போர்க்கால தலைமையை சேர்ந்த 28 பேருக்கு எதிராக அமெரிக்கா விசாரணைகளை மேற்கொண்டது. பிரதமர் ஹிடெக்கி டோஜோ உட்பட 7 பேர் தூக்கிலிடப்பட்டனர். ஏனையவர்கள் மீது என்றும் குற்றஞ்சாட்டப்படவில்லை. அவர்களில் மன்னரின் மாமாவான இளவரசர் யசுஹிகோ, சீனத்தலைநகரில் ஜப்பானிய துருப்பினர் செய்த பாலியல் வல்லுறவுகளுக்கு காரணமான ஒருவர் ஆகியோரும் அடங்குவர். 

எப்படியோ மக் ஆர்தரால் ஜப்பானியர் மேலும் தண்டிக்கப்படுதல் தவிர்க்கப்பட்டது. 

இதிலிருந்து தப்பிய இன்னுமொரு  முக்கியஸ்தர் நொபுசுகே கிஸி. மன்சூரியாவை ஆக்கிரமிப்பதில் முக்கிய பங்காற்றிய இவர், போர்க்காலத் தலைவரான ஹிடெகி டோஜோவின் நெருங்கிய சகாவாவர். இவரை விசாரிப்பதில்லை என்று முடிவு செய்ததை அடுத்து 1948இல் கிஸி விடுதலையானார். அமெரிக்க ஆக்கிரமிப்பு அங்கு இருக்கும் வரை அரசியலில் ஈடுபட அவருக்கு தடைவிதிக்கப்பட்டது.  

பிரதமரான கிஸி 

ஆனால், 1955இல் லிபரல் ஜனநாயக கட்சியை அங்கு ஸ்தாபிப்பதில் பங்களித்த கிஸி விரைவில் அதன் தலைவராகவும் பின்னர் ஜப்பானின் பிரதமராகவும் ஆகிவிட்டார். உண்மையில் சோவியத் ஆதரவு பெற்ற சோசலிச கட்சி ஜப்பானை பிடித்துவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்காவே இவரை ஆட்சிக்கு கொண்டுவந்ததாகவும் கூறுவர். 

அதன் பின்னர் ஜப்பானை அவர் உருவாக்கிய கட்சியே நீண்ட நாள் ஆட்சி செய்தது.  

இவர் தனது மகளை ஒரு ஜப்பானின் சக்திமிக்க அரசியல் குடும்பத்தை சேர்ந்தவருக்கு திருமணம் செய்துகொடுத்தார். அவரது மகளின் மகனான சின்சோ அபே. அவரும் ஜப்பானில் இரு தடவைகள் பிரதமராக இருந்துள்ளார். 

இந்த வழியில் ஜப்பான் பலவிதமான தடைகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் பிடியில் இருந்து விடுபட்டு, உலகின் சிறந்த ஒரு பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாடாக பின்னர் உயர்ந்தது. 

அது ஒரு ஜனநாயக நாடாக இருந்த போதிலும் அந்த நாட்டில் முடிக்குரிய குடும்பத்தின் மீதான மரியாதை அவ்வளவாக குறையவில்லை. தமது மன்னர் சரணடைவது என்று எடுத்த முடிவு சரிதான் என்று அந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் இன்று கருதுகிறார்கள். 

ஆக, நாட்டுக்காக சரணடைய மறுத்த வீரரும் அந்த நாட்டைச் சேர்ந்தவரே. அதேபோல சரணடைந்து நாட்டை படிப்படியாக காத்த தலைமுறையும் அங்கேயே இருக்கின்றது. இரு தரப்பையும் அந்த நாடு இன்று போன்றுகின்றது. 

அதேவேளை, ஜப்பானின் சரித்திரம் இப்படி இருந்தாலும் வீரதீரமாக போற்றப்பட்டாலும், மறுபுறம் சீனாவிலும் ஏனைய தான் ஆக்கிரமித்த நாடுகளிலும் அந்த நாட்டின் படைகள் செய்த போர்க்குற்றங்கள் இன்னமும் அந்த நாடுகளால் மறக்கப்படவில்லை என்பதையும் நாம் மனதில் கொண்டாக வேண்டும். 

ஜப்பானின் இந்த வரலாறு நமக்கும் உலகின் பலருக்கும் பல கதைகளை கூறவிழைகிறது.