— பேராசிரியர் சி. மௌனகுரு —
ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகளும் (பகுதி 4)
மட்டக்களப்பு மாறிவருவதற்கான காரணங்கள், மட்டக்களப்பின் தன்மை
மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தின் ஒரு பிரதேசமாயினும், இது நீண்டு வடக்கே வெருகலாற்றையும்இ தெற்கே குமுக்கனாற்றையும், கிழக்கே கடலையும், மேற்கே காடுகளையும், மலைகளையும் எல்லைகளாகக் கொண்ட ஒரு பிரதேசமாக இருந்திருக்கின்றது. இப்பிரதேசம் தனக்கென ஒரு அரசைக் கொண்டிருந்தது என்ற மரபு வழிக் கதைகளும் உண்டு. – மட்டக்களப்பு அரசு ஆரம்பத்தில் தெற்கே திருக்கோயிலை மையமாகக் கொண்டிருந்தது என்றும், பின்னாளில் அது படுவான்கரையிலுள்ள மண்முனைக்கு மாற்றம் பெற்றது என்றும் போத்துக் கேய, டச்சு வருகையின் பின்னும் முக்கியமாக ஆங்கிலேயர் ஆட்சியின்பின் மட்டக்களப்பை (புளியந்தீவு) மையம் கொண்டது என்றும் கூறப்படுகின்றது.
ஆரம்பத்தில் மட்டக்களப்பில் வேடரே வாழ்ந்திருக்க வேண்டும். பின்னால் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து குடியேற்றங்களும், அந்நியர் படையெடுப்புக்களும் ஏற்பட்டன. இவ்வரலாற்று வளர்ச்சியூடாக மட்டக்களப்புப் பிரதேசத்தில் பிரத்தியேகமாக ஒரு சமூக அமைப்பு உருவாகியது.
இச்சமூக அமைப்பில் ஆரம்பத்தில் இந்துப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் யாழ்ப்பாண சமூக அமைப்புப் போல வேளாளர் தலைமை ஸ்தானம்பெற்ற பிராமணமயமாக்கம் கொண்டதாயில்லை. இதனால் இங்கு கோயில்களில் ஆகமமுறை சாராத முறைகளே பெருமளவு பின்பற்றப்பட்டன.
தேசத்துக் கோயில்கள் எனக் கூறப்படும் கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றீஸ்வரன் கோயில், மண்டூர் கந்தசுவாமிகோயில் என்பனவற்றிற் கூட ஆகம முறையிலமைந்த பிராமண வழிபாட்டு முறைகள் இல்லை. இதனால் யாழ்ப்பாணம் போன்ற சாதியமைப்பு இறுக்கமானதாக அமையவில்லை. யாழ்ப்பாணத்தைவிட வேறுபட்ட பண்பாடுகளையும் சமூக அமைப்பையும் கொண்டதாக இப்பிரதேசம் அமைந்தது.
படுவான்கரை – எழுவான்கரை
இன்றைய மட்டக்களப்பினை எழுவான்கரை, படுவான்கரை எனப் பிரித்து விளங்கிக் கொள்வர். எழுவான்கரை என்பது கடல்சார்ந்த பிரதேசம். படுவான்கரை என்பது வயலும், காடும் சார்ந்த பிரதேசம். இரண்டையும் பிரிப்பது 25 மைல் நீளமுடைய வாவியாகும். இப்பிரதேச மக்களினது வாழ்வில் இவ்வாவி முக்கிய இடம் வகிக்கின்றது. இரு பகுதிகளும் வாவியால் பிரிக்கப்பட்டு இருப்பதாலும் போக்குவரத்து வசதிகள் எழுவான்கரைப் பகுதிக்கு பெருமளவு இன்மையாலும் எழுவான்கரையில் ஏற்பட்ட மாற்றங்கள் படுவான்கரையில் பிரதிபலிக்க வாய்ப்புகள் இருக்கவில்லை. பிரிக்கப்பட்ட பிரதேசமாக, பழைய வாழ்க்கை முறையிலும் பண்பாடுகளிலும் ஊறிய பிரதேசமாக படுவான்கரை அமைய வேண்டியதாயிற்று. இதனால் படுவான்கரைக்கும் எழுவான்கரைக்குமிடையே பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. படுவான்கரையில் பழைய நிலவுடமை முறை பேணப்படுவதனால் அங்கு நிலம் சார்ந்த பொருளாதார உற்பத்தி முறை அமைந்திருப்பதும் அதனால் அவ்வுற்பத்தி முறையை ஒட்டியே வாழ்வு அமைந்திருப்பதும் இதனால் நிலவுடைமைசார் சமூக உறவுகள், பண்பாடுகள், சாதி இறுக்கங்கள், சாதி மரபுகள் என்பன அமைவதும் இயல்பு. அதனையே இங்கும் காணுகின்றோம். எழுவான்கரை பணப்பொருளாதாரம் (முக்கியமாகக் கடைகள், உத்தியோகம்) சார்ந்திருப்பதால் அதன் தன்மையை ஒட்டி சமூக வாழ்வு அப்பகுதியில் அமைந்துள்ளது. பணப்பொருளாதார முறையிலமைந்த பண்பாடுகளை இங்கு காணமுடிகிறது. (முக்கியமாக படுவான்கரையிலில்லாத வித்தியாசமாக சமூக உறவுகளைக் காண்பதுடன் சாதிப் பிரிவினைகள் படுவான்கரையைப் போல் இறுக்கமாகவன்றி தளர்வாகவே காணப்படுகின்றன.)
படுவான்கரையில் போடிமார், கோயில் வண்ணக்கர்மார், கோயில் உரிமையாளர்கள், குடும்ப மரபில் பெருமை பெற்றோர் சமூக மதிப்புடையோராகக் காணப்பட, எழுவான்கரைப் பகுதியில் ஆங்கிலக் கல்வி, பணப் பொருளாதார வருகை காரணமாக அரசாங்க உத்தியோகத்தர்கள், கடைக்கார முதலாளிகள் சமூக மதிப்புடையோராகக் காணப்படுகின்றனர்.
படுவான்கரைப் பகுதியில் முக்குவர், வேளாளர், சீர்பாதக்காரர்களைச் சார்ந்து வாழ்ந்த அடிநிலை மக்களாகக் கருதப்படும் பறையர், வண்ணார், அம்பட்டர் போன்ற இனக் குழுமங்களும், கரையாரும் படுவான்கரைப் பகுதியில் தனித்தும் சுயாதிபத்தியத்துடன் தமக்கென தனிப்பட்ட கோயில்கள், வழமைகள், கொண்டோராய் எழுவான்கரைப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
அண்மைக் காலமாக இவர்களின் கோயில்களுக்கு அனைத்துச் சாதி மக்களும் பெருந்திரளாகச் செல்வது (உதாரணமாக வண்ணாரின் பாரம்பரியக் கோயிலான புன்னச்சோலைக் காளியம்மன், நளவரின் பிரதான கோயிலான கூழாவடி நரசிங்க வைரவர், கரையாரின் கோயிலான நாவலடி கடல் நாச்சியம்மன்) எழுவான்கரைப் பகுதியில் சமூக இறுக்கம் தளர்ந்து வருவதற்கான சிறந்த உதாரணங்களாகும்.
எழுவான்கரையை ஒட்டிப் பரவிய கிறிஸ்தவ மதம் உருவாக்கி விட்ட கிறிஸ்தவ நாகரிகமும் இரண்டாம், மூன்றாம் நிலையில் வைத்துப் பார்க்கும் சாதியினர் முக்கியமாக கரையார் சமூகத்தினர் கல்வி கற்று உத்தியோகங்கள், சிறுதொழில்கள் பார்ப்பதனால் தமது சாதித் தொழில்களையும் தாண்டி புதிய பொருளாதார உற்பத்தி உறவுகளினடியாக செயற்படுவதும் படுவான்கரைப் பகுதியில் வாழும் மட்டக்களப்புச் சாதியமைப்புக்கு அகப்படாத முஸ்லீம்கள், பறங்கியரது வாழ்க்கை முறையும், அவர்கள் ஏனைய சாதியினருடன் கொள்ளும் சாதி பேதமற்ற உதவிகளும், மட்டக்களப்பின் நகர வளர்ச்சியும், வெளியில் ஏற்படும் நாகரிகப் போக்கு மாற்றங்கள், மட்டக்களப்பு நகரைப் படுவான்கரைப் பகுதியைவிட அதிகம் பாதிப்பதும் எழுவான்கரைப் பிரதேசத்தை படுவான்கரைப் பிரதேசத்தினின்றும் வித்தியாசப்படுத்தும் காரணங்களாகும். இதனால் ஒருவகையில் பாரிய சமூக அசைவியக்கம் ஒன்றினை படுவான்கரைப் பகுதியில் காண முடிகின்றது.
மரபுகளைப் பேணும் கட்டிக்காக்கும் பிரதேசமாக படுவான்கரை திகழ, மரபுகளினின்று மாறிவரும் பிரதேசமாக எழுவான்கரை திகழ்கிறது. இப்புதிய மாற்றங்கள் படுவான்கரைப் பிரதேசத்தில் இல்லாமல் இல்லை. தவிர்க்க இயலாத வகையில் புதிய பொருளாதார மாற்றங்கள் கிறிஸ்தவ மதம், கல்வி மாற்றங்கள் என்பன படுவான்கரைக்கும் சென்றமையினால் அங்கும் சமூக அசைவியக்கம் ஏற்படாமல் இல்லை. ஆனால் ஒப்பீட்டளவில் அவ்வசைவியக்கம் மிகக் குறைவானதாகவும், பாரம்பரிய முறைகளை மீறாத அளவிலுமே அப்பகுதியில் காணப்படுகின்றது.
படுவான்கரையினது இடப்பெயர்வு
1960களின் பின் இதில் சில மாற்றங்கள் ஏற்படக் காண்கின்றோம். படுவான்கரைப் பகுதியில் இருந்து எழுவான்கரைப் பகுதிக்கு கல்வி கற்க மாணவர்கள் வருவது இக்காலகட்டத்தில் நிகழ்கிறது. அப்படி வந்தோர் படுவான்கரையில் வசதி பெற்ற குடும்பத்துப் பிள்ளைகளே. 5ஆம் வகுப்புப் புலமைப்பரிசில் பெற்றதன் காரணமாக வறிய குடும்பப் பிள்ளைகளும் படுவான்கரையை விட்டு வெளியே வந்து வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் தங்கிப் படிக்கும் வாய்ப்பு இதற்குச் சற்று முன்னர் ஏற்பட்டதென்பதும் குறிப்பிடற்குரியது.
1970களில் இது இன்னும் அதிகரித்து படுவான்கரை சார்ந்த சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியின் நிமித்தம் மட்டக்களப்புக்குக் குடிபெயர்வதும் நிகழ்கிறது. 1980களின் பின்கூற்றில் படுவான்கரையில் நடைப்பெற்ற போர்ச்சூழல், கிராம அழிவு என்பனவற்றால் படுவான்கரையில் வாழ்ந்த ஒரளவு வசதிபெற்ற குடும்பங்கள் மட்டக்களப்பு நகர் நோக்கி இடம் பெயர்கின்றன. புதிய சூழலில் அமைந்த மக்களுடன் இவர்கள் வாழவும், மாறிய மரபுகளுக்கு முகம் கொடுக்கவும் வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏற்படுகின்றது. தனித்தனிக் குடும்பங்களாக ஒரே இனக்குழாமாக சொந்த பந்தங்களை அருகருகே கொண்டு வாழ்ந்த இவ்வினக்குழு மக்கள் (முக்குவர், வேளாளர், சீர்பாதக்காரர்) ஏனைய இனக்குழு மக்களுடன் அருகருகே வாழவும், இணைந்து செயற்படவும் அவர்களின் வாழ்வு தாழ்வுகளில் பங்குபற்றும் நிலையும் உருவாகின்றது.
யாழ்ப்பாணம் போன்ற சாதி இறுக்கம் சார்ந்த பிராமணியத் தன்மையுள்ளதான இந்துப் பாரம்பரியத்திற்குப் பழக்கப்படாமையினால் மட்டக்களப்புக்குக் குடிபெயர்ந்த படுவான்கரைப் பகுதி (முக்குவர், வேளாளர், சீர்பாதக்காரர்) மக்கள் ஏனைய மக்களுடன் தயக்கமின்றி பழகவும், இணையவும் முடிந்தது. (திருமண உறவுகள் தவிர ஏனைய எல்லாவற்றிலும் இவ்வுறவுகளைக் காணலாம்).
கல்வித் தாக்கம்
மட்டக்களப்பின் எழுவான்கரையிலும் சில நேரம் படுவான் கரையிலும் கட்டப்பட்ட அரசாங்கப் பாடசாலைகள் எழுவான் கரையில் உருவான கிறிஸ்தவப் பாடசாலைகள் (சென்ற் மைக்கல், மத்திய கல்லூரி, வின்சன்ட் மகளிர் கல்லூரி, சிசிலியா கொன்வன்ற் இதனுடன் இந்துப் பாடசாலையான சிவானந்தா வித்தியாலயத்தையும் இணைத்துக் கொள்ளலாம்) என்பவற்றில் பல சாதி மக்களும் கல்விபெறும் வாய்ப்பு உருவாகியது.
குறிப்பாக இதில் சமுதாய ஒழுங்கில் முதனிலை, இரண்டாம் நிலை சார்ந்தோரே அதிகம் பயின்றனர். அடிநிலை மக்கள் பயின்றமை குறைவு. அடிநிலை மக்களாகக் கருதப்படும் (பறையர், வண்ணார், அம்பட்டர், நளவர், கடையர்) போன்றோர் வாழும் இடங்களில் அரசாங்கப் பாடசாலைகள் அமையவில்லை. இராமகிருஸ்ணமிசன் பாடசாலைகள் கூட இவ்வடிநிலை மக்கள் மத்தியில் அமையவில்லை என்பது குறிப்பிடற்குரியது. ஆனால் இக்குறையை ஒரளவு அரசாங்கப் பாடசாலைகள் தீர்த்தன. வந்தாறுமூலை மத்திய கல்லூரி, அரசடி மகாவித்தியாலயம் (மகா ஜனக் கல்லூரி) என்பன இக்குறை தீர்த்த பாடசாலைகளுட் சில.
படுவான்கரையில் முன்னர் கல்வியை திண்ணைப்பள்ளிக்கூட மரபில் பெற்றோர் சமூக அமைப்பில் உயர் நிலையில் இருந்த சாதிகளுக்குள்ளும் வசதி பெற்றோரின் பிள்ளைகளே. வேளாளர், சீர்பாதக்காரர், முக்குவப் போடிமாரின் பிள்ளைகளே கல்வி அறிவு பெறும் வாய்ப்புப் பெற ஏனையோரின் பிள்ளைகள் தத்தமக்குரிய தொழிற்கல்வியினையே பயின்றனர். கிறிஸ்தவ மத வருகையினாலும் அரசாங்கப் பாடசாலைகள் அமைக்கப்பட்டமையினாலும் ஏனையோரின் பிள்ளைகளும் கல்விபெறும் வாய்ப்பு ஏற்பட்டது. முக்கியமாக எழுவான்கரைப் பகுதியில் கிறிஸ்தவ மத வருகை குறிப்பாக கரையாரில் பலரைக் கல்விகற்ற வகுப்புக்கு உயர்த்தியது. அரசாங்க உத்தியோகங்கள் பலதை அவர்கள் ஆக்கிரமித்தனர். ஏனைய அடிநிலை மக்களில் சிலரும் இந்நிலைக்கு உயர்ந்தனர்.
தமிழ்த் தேசியப் போராட்டம்
1980களின் பின்னர் உருவான தமிழ்த் தேசிய போராட்டத்தில் படுவான்கரையிலிருந்தும் எழுவான்கரையிலிருந்தும் பல ஆயிரக் கணக்கான இளைஞர்கள் பங்கு கொண்டனர். முன்னர் தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தமிழ் இனம் என்ற கோட்டின் கீழ் ஒன்றிணைத்ததாயினும் மட்டக்களப்பின் பாராளுமன்ற அரசியலும், அங்கத்தவர்கள் தெரிவும் சாதி சார்ந்ததாகவே இருந்து வருகிறது.
தமிழ் இனத்தில் ஒற்றுமை பற்றி பேசிய தமிழரசுக் கட்சி, பாராளுமன்ற உறுப்புரிமை பெறுவதற்காக மட்டக்களப்பின் பெரும்பான்மை சாதியினரில் ஒருவரையே தம் வேட்பாளராக மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா ஆகியவற்றில் நிறுத்தி வந்தமையை அனைவரும் அறிவர்.
தமிழரசுக் கட்சியின் தமிழரின் உரிமைப்போர் சாதி வரையறைகளை மீறாமலேயே நடந்து வந்தது. ஆனால் 1980களின் பின் நிலைமை மாறியது. அப்போராட்டத்தை இளைஞர் முன்னெடுத்தனர். அவர்களுக்கு பாராளுமன்ற கதிரைகள் நோக்கமின்மையால் சாதியால் வரும் வாக்குச் சீட்டுகள் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ஒரு இலட்சியத்துக்காக ஒன்றிணைந்தமையால் படுவான்கரை எழுவான்கரை சாதி, சமூக, வர்க்க, பால் வேறுபாடுகளின்றி அவர்கள் அதில் இணைந்தனர். இப்புதிய சூழலும் சமூக அசைவு இயக்கத்தில் மாற்றம் ஏற்பட வழி வகுத்தது.
அரசியற் சூழலும், போர்ச் சூழலும்
1980களுக்குப் பிறகு வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட அரசியல் சூழலும் போர்ச் சூழலும் முக்கியமானவை. ஆயுதமேந்திய தனி நாட்டுக்கான போரினை தமிழ் இளைஞர் ஆரம்பிக்கின்றனர். பல அரசியல் இயக்கங்கள் இதில் ஈடுபட்டன. சாதி, பிரதேச வேறுபாடுகளின்றித் தமிழ் இளைஞர்கள் இவ்வியக்கங்களில் இணைந்தனர். ஆயுதப் பயிற்சியும் பெற்றனர். இவ்வியக்கங்களில் அவர்கள் தம் சகாக்களை பிரதேச ரீதியாகவோ சாதி ரீதியாகவோ அடையாளம் காணவில்லை. போராளியாகவே இனம் கண்டனர். இப்பண்பு அப்போராளிகளில் சாதி பேதங்களுக்கு எதிராக இளைஞர் இயக்கங்கள் வைத்த கொள்கைகள், கோட்பாடுகள் முன்னைய அரசியல் தலைமைகளில் இருந்து வேறானவை. சூழலும் அதற்கான அறிவை ஏற்படுத்தியிருந்தது. இது ஏற்கெனவே இறுக்கமாய் இருந்த சாதியமைப்பில் ஒரு தளர்வை ஏற்படுத்தியதெனலாம்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பும் பணப்புழக்கமும்
1980களின் பின் ஏற்பட்ட இனப்போரினாலும் கெடுபிடிகளினாலும் பல இளைஞர்கள் வெளிநாடு சென்றனர். முக்கியமாக மட்டக்களப்பு இளைஞர்கள் பலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை தேடிச் சென்றனர். சமூக மட்டத்தில் உயர்நிலையில் இருந்தோரின் பிள்ளைகள் மாத்திரமின்றி அனைத்துச் சமூக குழுவிலிருந்தும் இளைஞர்கள் முக்கியமாக வேலை தேடியும், இங்கு இருக்க முடியாத சூழ்நிலையினாலும் வெளிநாடு சென்றனர். அவ்விளைஞர்களின் பணம், அவர்களின் மீள்வருகை என்பன அச்சமூக குழுமத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மிக அடிநிலை சமூகத்திலிருந்து ஒன்று அல்லது இரண்டு அல்லது பல குடும்பங்கள் திடீரெனச் சுய காலில் நிற்கும் தன்மையும், பண பலமும் கொண்டனவாக மாறுவது சமூகத்தில் தளம்பலை ஏற்படுத்துகின்றது. இவ்வண்ணம் பணத்தோடு வெளிநாட்டினின்றும் திரும்பிய இரண்டாம் நிலை, முக்கியமாக மூன்றாம் நிலையினர் தம் பணப் பின்புலத்தால் சமூக அங்கீகாரமும், கோயிலமைப்பில் முக்கிய ஸ்தானமும் பெறுகின்றனர். இச்சூழல்கள் ஒரு பாரிய மாற்றத்தை மட்டக்களப்புச் சமூகத்தில் ஏற்படுத்துகின்றது. மட்டக்களப்பில் இருந்து வெளிநாடு சென்றோர் மத்திய கிழக்கு நாடுகட்கு பெரும்பாலும் வேலை தேடிச் சென்றனர் என்பதும் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றோர் மேற்கு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(தொடரும்)