— சீவகன் பூபாலரட்ணம் —
(ஆங்கில ஊடகங்களின் மூலங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்)
உலகின் இரண்டு வல்லரசுகள் நிலவுக்கு போக உதவிய ஒரு சீன விஞ்ஞானி அவர். ஆனால், அதில் ஒரு நாடு அவரை துரத்திவிட்டது. அடுத்த நாடு அவரைக் கொண்டாடுகிறது.
அமெரிக்காவிலும் சீனாவிலும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் சாதனை படைத்த இந்த விஞ்ஞானி ‘சியான் சூசென்’.
சீனாவில் இன்று ‘மக்கள் விஞ்ஞானி’ வர்ணிக்கப்படும் இவரது நினைவாக ஷங்காய் நகரில் ஒரு அருங்காட்சியகத்தில் சுமார் எழுபதினாயிரம் நினைவுப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அமெரிக்காவோ அவரை நாட்டில் இருந்து குற்றஞ்சாட்டி துரத்தி விட்டது.
சீனாவின் ஏவுகணை மற்றும் செய்மதி திட்டத்தின் தந்தையாக மதிக்கப்படும் சியான் சூசென், தனது ஆய்வுகள் மூலம் சீனாவின் முதலாவது செய்மதியை விண்ணில் செலுத்துவதற்கான ராக்கட்டுகளை உருவாக்கியதுடன், அணுஆயுதங்களை காவிச்செல்லும் ஏவுகணைகளையும் அந்த நாட்டுக்காக உருவாக்கியவர்.
ஆனால், அவர் படித்து, பத்து ஆண்டுகள் வரை பணியாற்றிய அமெரிக்காவிலோ, அவரது பங்களிப்பு கிட்டத்தட்ட முற்றாக மறக்கப்பட்டுவிட்டது.
சீனாவின் கடைசி ‘முடியாட்சி’ குடியரசாக மாறிய காலப்பகுதியில் 1911இல் சியான் சூசென் பிறந்தார். இவரது பெற்றோர் இருவரும் நன்கு படித்தவர்கள். ஜப்பானில் பணியாற்றிய இவரது தந்தையார், பின்னர் சீனாவின் தேசிய கல்வித்திட்டத்தை வடிவமைத்தவர்களில் ஒருவராவார். இதனால், சியான் சூசென்னுக்கு இளமை முதலே நல்ல கல்வி வாய்ப்பு கிடைத்தது. ஷங்காய் ஜியாவோ தொங் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர், ஒரு அபூர்வமான புலமைப்பரிசிலைப் பெற்று, அமெரிக்காவின் மஸ்ஸாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரிக்கு சென்றார்.
அமெரிக்காவில் சியான் சூசென்
1935 இல் ஒரு இளைஞனாக இவர் பொஸ்டன் நகர் சென்று அடைந்தபோது, அவர் கொஞ்சம் இனவாதத்துக்கும், அயல் நாட்டு வெறுப்புணர்வுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனாலும், அங்கு அந்தக்காலகட்டத்தில் ‘சீனா அடிப்படையில் கணிசமான வழிகளில் மாற்றம் கண்டுவருகின்றது’ என்ற ஒரு எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் கூட அமெரிக்க மக்கள் மத்தியில் உருவாகிக்கொண்டிருந்தது. அதனால், சீனரான அவரது அறிவுக்கு அங்கு ஒரு நல்ல கௌரவமும் மறுபுறம் கிடைக்கத்தான் செய்தது.
பின்னர் சியான் சூசென் ‘கல்டெக்’ எனப்படும் கலிபோர்னியாவின் தொழில்நுட்பக் கற்கைகளுக்கான நிறுவனத்துக்கு கற்கச் சென்றார். அந்த நிறுவனத்தில் சிறந்த விமான பொறியியல் நிபுணரான, ஹங்கேரி நாட்டில் இருந்து அரசியல் காரணங்களுக்காக குடிபெயர்ந்து வந்த, தியோடர் வொன் கார்மன் அவர்களின் கீழ் கற்கும் வாய்ப்பை பெற்றார். அதே நிறுவனத்தில்தான் சியான் சூசென், இன்னுமொரு முக்கிய விஞ்ஞானியான பிராங்க் மலினாவுடன் அலுவலகத்தை பகிர்ந்துகொண்டார். அங்கு ‘தற்கொலை அணி’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஆய்வாளர் குழு ஒன்றின் முக்கிய உறுப்பினராக பிராங்க் மலினா திகழ்ந்தார்.
தற்கொலை அணி
அந்தக் குழுவினர் கல்லூரி வளாகத்துக்குள்ளேயே ஒரு ராக்கட்டை செய்து, ஏவ முயற்சிக்க, அது ஏதோ தவறாக இரசாயண கூட்டால் வெடித்து விட்டதாம். அதனால்தான் அந்தக் குழுவுக்கு அந்தச் செல்லப்பெயராம். ஆனாலும், அந்தச் சம்பவத்தில் எவரும் இறக்கவில்லை.
மலினா உட்பட இந்த தற்கொலை அணியுடன் ஒரு நாள் முக்கிய கணித விவாதம் ஒன்றில் சியான் சூசென் கலந்துகொண்டார். அதன்போது அவரது கணித அறிவைக்கண்ட அந்தக் குழுவினர் ‘ராக்கட் உந்துவிசை’ குறித்த தமது ஆய்வுக்கான நடவடிக்கைகளில் சியான் சூசெனையும் சேர்த்துக்கொண்டனர்.
அந்தக்காலகட்டத்தில் ராக்கட்டை ஏவுதல் போன்ற விடயங்கள் வெறுமனே பரபரப்பைத்தரும் புனைகதைகளாக மாத்திரமே இருந்தன. எவரும் அந்த விடயத்தை சீரியசான விடயமாக பேசுவதில்லை. ‘எதிர்காலத்தில் ராக்கட்டுகளை ஏவமுடியும், அதன் மூலம் செய்மதிகளை ஏவலாம், வெடிபொருட்கள் கொண்டு தாக்கலாம்’ என்றெல்லாம் எந்த கணிதவியல் நிபுணர்களும் பேசுவது கிடையாது. அப்படிப் பேசினால் தமது கணித அறிவும் அந்தஸ்தும் கேலிக்குள்ளாகிவிடும் என்ற பயம் அவர்களுக்கு. ஆனால், இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்த பின்னர் அந்த நிலைமையில் வேகமான மாற்றம் வந்துவிட்டது.
அமெரிக்க இராணுவத்தை ஈர்த்த தற்கொலை அணி
அந்தக் காலகட்டத்தில் அமெரிக்க இராணுவத்தின் கவனத்தை இந்த ‘தற்கொலை அணி’ ஈர்த்துவிட்டது. விமானம் ஒன்றின் இறக்கைகளில் ஊக்கிகளை பொருத்தி, ஜெட் துணையுடன் அவற்றை மிகவும் குறுகிய இறங்குதரைகளிலேயே ஏற, இறங்க வழிசெய்யும் இவர்களது தொழில்நுட்பமே அதற்கு காரணமாகும்.
அதனால், இந்தக்குழுவின் ஜெட் உந்துவிசை குறித்த ஆய்வுகளுக்கு 1943 இல் இராணுவத்தின் நிதியுதவியும் கிடைத்தது. இதன் மூலம் ஜெட் இயந்திரங்களின் உதவியுடன் விமானங்களை ஏற்றச் செய்வது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வுகளுக்கு தியோடர் வொன் கார்மன் தலைமை தாங்கினார். சியான் சூசென் மற்றும் பிராங்க் மலினா ஆகியோர் இந்த ஆய்வின் முக்கிய உறுப்பினரானார்கள்.
சியான் சூசென் ஒரு சீன நாட்டுப் பிரஜை. இரண்டாம் உலகப்போர் காலத்தில் சீனா அமெரிக்காவின் ஒரு கூட்டாளியாக இருந்தது. ஆகவே அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் ஒரு சீனர் பணியாற்றுவது எவருக்கும் பெரும் சந்தேகத்தை கிளப்பவில்லை.
அமெரிக்காவின் மிக முக்கிய ஆயுதத் தயாரிப்புக்கான ஆய்வுகளில் பணியாற்றுவதற்கான பாதுகாப்பு அனுமதியும் சியான் சூசென்னுக்கு கிடைத்தது. அமெரிக்க அரசாங்க விஞ்ஞான ஆலோசனை சபையிலும் அவர் பணியாற்றினார்.
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த காலத்தில் உலகில் ‘ஜெட் உந்துசக்தி’ குறித்த ஆய்வுகளில் இவர் ஒரு முக்கிய நிபுணரானார். ஒரு தற்காலிக லெப்டினண்ட் கேணல் அந்தஸ்து வழங்கப்பட்டு, தியோடர் வொன் கார்மனுடன் ஒரு சிறப்பு நடவடிக்கைக்காக ஜேர்மனிக்கும் அவர் அனுப்பப்பட்டார்.
நாஸி விஞ்ஞானிகள் மீது விசாரணை
ஜேர்மனியின் முக்கிய ராக்கட் தொழில்நுட்ப விஞ்ஞானியான வார்ன்ஹெர் வொன் பிரவுன் உட்பட ஜேர்மனியின் நாஸி விஞ்ஞானிகளிடம் ஒரு விசாரணையை செய்வது இவர்களுக்கு வழங்கப்பட்ட பணி. அதாவது ஜேர்மனிய விஞ்ஞானிகளுக்கு என்னவெல்லாம் தெரியும் என்பதை இவர்கள் மூலம் அறிய அமெரிக்கா விரும்பியது. அதன் பின்னர் அமெரிக்கா தனது நாட்டுக்கு கொண்டுவந்து தமது ஆய்வுகளைச் செய்தது.
ஆனால், அந்த தசாப்தத்தின் இறுதியில் சியான் சூசென்னின் அமெரிக்க பணிகள் எல்லாம் சிக்கலுக்குள் தள்ளப்பட்டது. அவரைப்பற்றி பல வதந்திகள் எல்லாம் வெளிவரத்தொடங்கின.
சியான் மீது சந்தேகம்
1949 இல் சீனாவில், கம்யூனிஸ மக்கள் குடியரசை சீனத் தலைவர் மாவோ பிரகடனம் செய்தார். உடனேயே, முதலாளித்துவ அமெரிக்காவில் சீனர்கள் விரோதிகளாக பார்க்கப்படும் சூழ்நிலை ஆரம்பமாகிவிட்டது. அமெரிக்காவில் இருந்த சீனர்கள் எல்லாம் சீன மோகம் கொண்டவர்களாக பார்க்கப்பட்டனர். சீனாவில் ஏதாவது நடந்தால் உடனேயே இவர்களை சீனாக்காரன் என்று உள்ளூர் அமெரிக்கர்கள் திட்டத்தொடங்கிவிடுவார்கள்.
அதேவேளை, ஜெட் உந்துவிசை ஆய்வு நிலையத்தில் புதிதாக பதவிக்கு வந்த இயக்குனர் ஒருவருக்கு, ஆய்வுகூடத்தில் யாரோ உளவாளிகள் ஊடுருவி விட்டதாக சந்தேகம் வந்துவிட்டது. சில யூதர்கள் மற்றும் சீனர்கள் மீதுதான் அந்தச் சந்தேகம் இலக்கு வைக்கப்பட்டது.
உலக மட்டத்தில் சோவியத் ரஸ்யா – அமெரிக்கா இடையிலான பனிப்போரும் ஆரம்பமாகிவிட்டது. கம்யூனிஸ்டுகளை இலக்கு வைத்து குற்றவாளிகளை தேடும் நடவடிக்கைகளும் ஆரம்பமாகிவிட்டன. சியான் சூசென் பிராங்க் மலினா ஆகியோரை கம்யூனிஸ்டுகள் என்று அமெரிக்க எப் பி ஐ உளவு நிறுவனம் குற்றஞ்சாட்டியது. தேசிய பாதுகாப்புக்கு அவர்கள் அச்சுறுத்தல் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.
அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் 1938ஆம் ஆண்டின் ஆவணம் ஒன்றின் அடிப்படையில் சியான் சூசென் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அந்தக் கட்சியின் கூட்டம் ஒன்றில் சியான் சூசென் கலந்துகொண்டதாக எப் பி ஐ சந்தேகித்தது. சியான் சூசென் அந்தக் குற்றச்சாட்டை மறுத்தாலும் மலினாவைப் போல் இவரும் அதில் 1938 இல் இணைந்ததாக ஒரு ஆய்வு கூறுகின்றது.
ஆனால், அதற்காக அவரை ஒரு மார்க்ஸிஸ்ட் என்று கூறிவிட முடியாது என்றும், அவர்மீதான குற்றச்சாட்டுக்கு முக்கிய காரணம் இனவதமே என்றும் அவரை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இதனை ஒரு பாசிச அச்சுறுத்தல் என்றும் அமெரிக்க இனவாத பயங்கரவாதத்தின் ஒரு உதாரணம் இது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதேவேளை, சீனாவுக்காக சியான் சூசென் உளவு பார்த்ததாகவோ அமெரிக்காவில் அவர் ஒரு உளவாளியாக இருந்ததற்கோ ஆதாரம் எதுவும் கிடையாதாம்.
இறுதியில் அவரது பாதுகாப்பு அனுமதி ரத்துச் செய்யப்பட்டு, அவர் வீட்டுக்காவலில் போடப்பட்டார். ‘கல்டெக்’கில் அவரது சகாக்களும், தியோடர் வொன் கார்மனும் ‘சியான் சூசென்’ ஒரு அப்பாவி என்று அரசுக்கு எழுதினார்கள், ஆனால் பலன் எதுவும் கிடைக்கவில்லை.
நாடு கடத்தல்
5 வருடங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான எய்செனோவர் ‘சியான் சூசென்’னை சீனாவுக்கு நாடு கடத்துவது என்று முடிவு செய்தார்.
தனது மனைவி மற்றும் அமெரிக்காவில் பிறந்த தனது இரு குழந்தைகளுடன் அவர் படகின் மூலம் சீனாவுக்கு புறப்பட்டார். ‘நான் இனி அமெரிக்காவுக்கு திரும்பி வரவே மாட்டேன்’ என்று அங்கு காத்திருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறினார். அதேபோல அவர் அமெரிக்காவுக்கு மீண்டும் திரும்பி வரவே இல்லை.
சீனாவில் சியான் சூசென் ஒரு கதாநாயகனாகத்தான் வரவேற்கப்பட்டார். ஆனால், சீன கம்யூனிஸ்ட் கட்சி அவரை உடனடியாக உள்வாங்கிவிடவில்லை. அவர் பற்றிய கருத்து ஒன்றும் அப்பழுக்கற்றதாக பார்க்கப்படவில்லை. அவருடைய மனைவி பிரபுக்குகள் குடும்பத்தை சேர்ந்த தேசியவாத தலைவரின் மகள். சிக்கல்கள் வரும் வரை ‘சியான்’ ஒரு சந்தோசமான வாழ்க்கையையே அமெரிக்காவில் வாழ்ந்தவர்.
சியான் சூசென்னை அங்கீகரித்த சீன கம்யூனிஸ்ட் கட்சி
எப்படியிருந்தபோதிலும் 1958 இல் அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்புரிமை கிடைத்தது. அதனை வரவேற்று ஏற்றுக்கொண்ட அவர், அன்றிலிருந்து எப்பொதும் ஆட்சியின் சரியான பக்கத்தில் இருக்க பழகிக்கொண்டார்.
சீனாவில் நடந்த சுத்திகரிப்புகள், கலாச்சாரப் புரட்சி ஆகியவற்றில் இருந்து தப்பித்தும் கொண்டார். அதேவேளை தனது விஞ்ஞானி வாழ்க்கையையும் எப்படியோ காப்பாற்றிக்கொண்டார்.
சீனாவில் விஞ்ஞான முன்னேற்றம்
அவர் சீனாவை வந்தடைந்தபோது, ராக்கட் விஞ்ஞானம் குறித்து அங்கு பெரிதாக எவருக்கும் அறிவு இருந்திருக்கவில்லை. ஆனால், 15 ஆண்டுகளின் பின்னர், சீனாவின் முதலாவது செய்மதி அவரது மேற்பார்வையில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. பல நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளை சீனாவில் அவர் பயிற்றுவிட்டார். அவரது வழிகாட்டலில் சீனா தனது ஆட்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியிலும் வெற்றி கண்டது.
சியான் சூசென் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் அமெரிக்கர் மீதே தாக்கவும் பயன்பட்டன. 1991இல் வளைகுடா போரில் சியானின் ‘சில்க்வேர்ம்(பட்டுப்புளு)’ ஏவுகணைகள் அமெரிக்கர்கள் மீது ஏவப்பட்டன. 2016இல் மீண்டும் ஏமனில் ஹூட்டி கிளர்ச்சிக்காரர்கள் அமெரிக்காவின் கடற்படைக் கப்பலான ‘யூ எஸ் எஸ் மெசன்’ மீது இதே ஏவுகணையால் தாக்கினர்.
ஆக, அமெரிக்கா தனது நிபுணர் ஒருவரை துரத்திவிட, அவரது நிபுணத்துவம் அமெரிக்கா மீதே மீண்டும் திரும்பி வந்து தாக்கிவிட்டது. உள்ளூரில் கம்யூனிஸத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம் என்ற நினைப்பில் அமெரிக்கா முட்டாள்தனமாக எடுத்த நடவடிக்கை, அவர்களது முக்கிய போட்டியாளரான கம்யூனிஸ சீனாவில் ஏவுகணை மற்றும் விண்வெளி ஆய்வை மேற்கொள்ளும் திறனை உருவாக்கிட்விடிருக்கிறது. இது அமெரிக்கா செய்த புவிசார் அரசியல் தவறு என்று பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவின் முட்டாள்தனம்
‘இதுவரை காலத்தில் அமெரிக்கா செய்த படுமுட்டாள்தனமான செயல் இது’ என்று அமெரிக்க கடற்படையின் முன்னாள் தலைமைச் செயலர் டான் கிம்பல் கூறியுள்ளார். இவர் பின்னர் ‘ஏரோஜெட்’ ராக்கட் உந்துவிசை கம்பனியின் தலைவராகவும் பணியாற்றியவராவார்.
இன்று அமெரிக்காவுக்கும் சீனாவுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது. கம்யூனிஸமா, முதலாளித்துவமா என்ற கொள்கை அதற்கு இப்போது காரணமல்ல. வணிகம், தொழில்நுட்பப் பாதுகாப்பு குறித்த கரிசனைகள், அதிபர் ட்டிரம்ப் கூறுவதுபோல ‘கொவிட் 19 ஐ கட்டுப்படுத்த சீனா போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை’ என்ற குற்றச்சாட்டு ஆகியனவே தற்போதைய நெருக்கடிக்கு காரணம்.
பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு சியான் சூசென்னை இன்று தெரிந்திருக்காவிட்டாலும், சீன அமெரிக்கர்களுக்கும், அமெரிக்காவில் உள்ள சீன மாணவர்களுக்கு அவரைபற்றி நன்றாகத்தெரியும். சியான் மீது அமெரிக்காவில் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையும் இன்றைய நிலையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதாகவே அங்கிருக்கும் பல சீன வம்சாவழியினர் கருதுகிறார்கள். சியான் சூசென் காலத்தைப் போலவே இன்றும் சந்தேகம் அதீதமாக அதிகரித்துள்ளது.
அறிவாளியை வெளியேற்றினால் ஏற்படும் பாதகம்
ஒரு அறிவாளி வெளியேற்றப்படும் போது என்ன நடக்கும் என்பதற்கு சியான் சூசென்னின் கதை ஒரு உதாரணம் என்று பலர் இன்று கருதுகிறார்கள். வெளியிடங்களில் இருந்து வந்தவர்களாலேயே அமெரிக்காவின் பல விஞ்ஞான திட்டங்கள் முன்னேற்றமடைந்துள்ளன. ஆனால், இன்றைய பழமைவாதப் போக்கில் அப்படியான வெற்றிக்கதைகள் கொண்டாடப்படுவதில்லை.
வொன் கார்மனும், சியான் சூசென்னும் ‘ஜேர்மனி’ சென்று விஞ்ஞானிகளை விசாரித்து வந்த பின்னர் வார்ன்ஹெர் வொன் பிரவுன் போன்ற ஜேர்மனிய விஞ்ஞானிகள் ரகசியமாக அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டு வேலைவாங்கப்பட்டனர். இரண்டாம் உலகப்போரின் வெற்றியின் பின்னர், இவ்வாறு சுமார் 1600 ஜேர்மனிய விஞ்ஞானிகள் அமெரிக்காவுக்கு கொண்டுவரப்பட்டு வேலைவாங்கப்பட்டனர். அமெரிக்காவின் ஏவுகணைகளின் முன்னேடிகளாக இவர்கள் பார்க்கப்படுகின்றனர். இவர்களோடு ஒப்பிடும்போது சியான் சூசென் போன்றவர்களின் பங்களிப்பு அமெரிக்காவில் புறக்கணிக்கப்படுகின்றது.
ஆனால், உண்மையில் அமெரிக்காவின் முதலாவது விண்வெளித்திட்டம் உள்ளூர் சோஸலிஸ்டுகளாலேயே (யூதர்கள் அல்லது சீனர்கள் உட்பட) ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கதையைப் பேச பெரும்பாலான அமெரிக்கர்கள் இப்போது விரும்புவதில்லை.
சியானின் வாழ்க்கை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம்வரை பரந்தது. அவரது வாழ்வுக்காலத்திலேயே பொருளாதாரத்தில் பிந்தங்கிய நிலையில் இருந்த சீனா உலகிலும், விண்வெளியிலும் வல்லரசானது. இந்த மாற்றத்தில் சியான் சூசென்னின் பங்களிப்பும் கணிசமானது. அவரது கதை, ஒரு சிறந்த அமெரிக்கனின் கதையாக வந்திருக்க வேண்டியது. ஆனால், தலைவிதி எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. அமெரிக்காவின் இனவாதத்துக்கும் இதில் கொஞ்சம் பங்கிருக்கிறது. மூலக்காரணிகளை சரியாகக் கணிக்கத்தெரியாத போக்குக்கும்தான்.