— சட்டத்தரணி,பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா —
‘இது என் கதையல்ல,
என்னைத் தாங்கிய என் மண்ணின் கதை’
1969 ஆம் ஆண்டு, கோட்டமுனை மகா வித்தியாலயத்தில் (இப்போதைய இந்துக்கல்லூரி) மாவட்டப் பாடசாலைகளின் விஞ்ஞானப் பொருட்காட்சியொன்று நடைபெற்றது. அதில், பட்டிருப்பு மகாவித்தியாலயத்தின் சார்பில் வைக்கப்பட்டிருந்த காட்சிப் பொருட்களோடு நாங்கள் அங்கே கடமையில் இருந்த வேளையிலேதான், எங்களது முதலாவது க.பொ.த.(சா.த) பரீட்சை முடிவுகள் வெளிவந்தன.
அந்தக்காலத்தில் பரீட்சை முடிவுகள் வருவதற்கு ஆறு மாதங்கள் எடுக்கும். எப்போது வரும் என்று எதிர்வு கூற முடியாது. எப்போதாவது வரும் எதிர்பாராதவிதமாக!
அடுத்த வருடத்தில் இருந்து அந்த நிலை மாறியது. பரீட்சைத்திணைக்கள ஆணையாளராகப் புதியவர் ஒருவர் பொறுப்பேற்றார். அவரது பெயர் பிரேமதாச உடகம என்று நினைக்கிறேன். விடைத் தாள்கள் அவற்றைத் திருத்துபவர்களின் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் முறையை அவர் மாற்றினார். விடைத்தாள்களைத் திருத்தும் நிலையங்களில் குறிப்பிட்ட தினங்களுக்குள் அவை திருத்தப்படும் இப்போதைய ஒழுங்கு முதன் முதலில் 1969 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. (சா/த) பரீட்சையிலிருந்துதான் ஆரம்பிக்கப்பட்டது. அதனால் இரண்டு மாதங்களில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் முறை செயற்பாட்டுக்கு வந்தது.
பரீட்சை முடிவுகளின் பட்டியலை எடுத்துக்கொண்டு எங்கள் உயிரினவியல் ஆசிரியர் திரு.பி.நடராசன் அவர்கள் இந்துக்கல்லூரிக்கு ஓடோடி வந்தார். எங்கள் வகுப்பில் படித்தவர்களில் பெரும்பாலானோர் மிக நல்ல பெறுபேறுகளையே பெற்றிருந்தோம். எட்டுப்பாடங்களிலும் சித்திபெற்று, உச்சப் பெறுபேற்றைப் பெற்ற இருவரில் நானும் ஒருவர். மற்றவர் அமரராகிவிட்ட மு.குருகுலசிங்கம் (முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட தொழில்திணைக்கள உதவி ஆணையாளர்)
இது முதலாவது அமர்வுதான். பரீட்சை முடிவுகளை கேட்டவுடன், பொருட்காட்சியில் காட்சிப்படுத்துபவர்களான எங்களுடன் ஒருவராக இருந்த எங்கள் வகுப்பு மாணவி கிருபாதேவி என்னிடம் கேட்டார், “ஸ்ரீ, இனி நீங்க லோங்க்ஸ் போடுவீங்க என்ன?” (லோங்ஸ் என்றால் ட்ரௌசர்- நீளக்காற்சட்டை) அதற்கு நான் “இல்ல கிருபா! நான் இந்த முறை ஆங்கிலம் எடுக்கல்ல. அடுத்த முறை ஆங்கிலம் எடுத்துப் பாஸ் பண்ணின பிறகுதான் லோங்க்ஸ் போடுவேன்.” என்று சொன்னேன். “அப்பிடியா. அதுதான் சரி” என்று கிருபா சொன்னார்.
இப்போது இதனை ஏன் சொல்கிறேன் என்றால், இதுதான் பெரும்பாலும் அப்போதைய நிலைமை என்பதை வெளிப்படுத்துவதற்காகவே. ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களும், ஆங்கிலத்தில் பரிச்சயம் இல்லாவிட்டாலும் அலுவலகங்களில் உத்தியோகம் பார்ப்பவர்களும் மட்டும்தான் பெரும்பாலும் “லோங்க்ஸ்” என்று அழைக்கப்பட்ட நீளக்காற்சட்டை அணிவார்கள். ஆங்கிலம் தெரியாதவர்கள் ட்ரௌசர் எனப்படும் அந்த முழுக்காற்சட்டை போடுவதற்குத் தயங்குகின்ற காலம் அது! இப்போது எல்லோருக்கும் அகில உலகத் தேசிய உடையாக அது மாறிவிட்டது. இந்த மாற்றம் நல்லதுதான். வசதியானதும் கூட!
அடுத்த வருடம், 1969 ஆம் ஆண்டு மார்கழி மாதம், இரண்டாவது அமர்வில், பெரும்பாலானோர் விசேட சித்திகள், மற்றும் திறமைச் சித்திகளுடன் சிறப்பான பெறுபேறுகளை அள்ளிக் குவித்தோம். கலைப்பிரிவில் பயின்ற மாணவர்களும் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுப், பாடசாலையின் பெயரை மாவட்ட மட்டத்தில் உயரச் செய்தார்கள். வித்தியாலயம் விளங்க உழைத்த அதிபரும், அர்ப்பணிப்போடு கற்பித்த ஆசிரியர்களும் மட்டில்லா மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அதுவரையான பாடசாலையின் வரலாற்றில் அந்தவருடத்துப் பரீட்சைப் பெறுபேறு பாடசாலைக்கு மகுடம் சூட்டியது.
இருநேரப் பாடசாலையாக இருந்த காலம் அது. ஒருநேரப் பாடசாலையாக மாறும்போது நாங்கள் பள்ளிக் கல்வியை முடித்துப் பலவருடங்களாகியிருந்தது. காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை முன்னேரப் பாடசாலையில் ஐந்து பாடங்களும், பிற்பகல் 1.00 முதல் 3.00 மணி வரை பின்னேரப் பாடசாலையில் மூன்று பாடங்களும் நடக்கும். இப்போது இதனைப் படிக்கும் பலருக்கு இது புதிராக இருக்கும்!
நாங்கள் படித்த காலத்தில் உயிரினவியல் ஆசிரியர் மயிலங்கூடலூர் பி.நடராசன், திருமதி ஜே.டீ.ராஜசேகரம், செல்வி அம்பிகை சீனிவாசகம், பண்டிதர் சரவணமுத்து போன்ற ஆசிரியர்கள் பிரத்தியேக வகுப்புக்களையும் நடத்தினார்கள். அவை இப்போது நடைபெறும் Tuition வகுப்புக்களைப் போன்றவையல்ல. பாடசாலை விட்ட பின்னரும், சிலவேளை விடுமுறை நாட்களிலும், பாடசாலையிலேயே ஆசிரியர்கள் மேலதிக வகுப்புக்களை வைத்தார்கள். தாங்கள் படிப்பிக்கும் அதே பாடத்தைக் ஊதியமின்றிக் கற்பித்தார்கள். பக்குவமாய்ச் சொல்லிக்கொடுத்தார்கள், பரீட்சைக்குத் தயார் செய்தார்கள். பெரும்பாலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களே இத்தகைய மகத்தான சேவையில் மனமுவந்து ஈடுபட்டார்கள்.
ஏழாம் வகுப்பில் படிக்கும்போது இடம்பெற்ற இரண்டு சம்பவங்களை இங்கு குறிப்பிடுதல் பொருத்தம். காலத்தின் கண்ணாடியாக அன்றைய சமூக நிலைமையின் கோலத்தை பிரதிபலிக்கும் பதிவுகளாக அவை இருக்கும். எங்களுக்கு ஏழாம் வகுப்பில் கணிதம் படிப்பிக்க சிங்கநடை நடந்து ஓர் ஆசிரியர் வந்து சேர்ந்தார். கடோற்கசன் போல உருவம். கன்னங்கரேல் என்ற சரீரம்! காலையில் ஐந்து நாட்களும், முதல் பாடம் கணிதம்! எடுத்ததற்கெல்லாம் அடிப்பார், பாடம் எடுக்காமலும் அடிப்பார் ஏழாம் வகுப்புச் சிறுவர்கள், ஏன் என்றுகேட்கத் தெரியாத பருவம்.
கரும்பலகையில் கணக்கை எழுதுவார், திரும்பி எங்களைப் பார்த்துக் கத்துவார். பெரும்பாலும் எங்களில் சிலருக்கு எந்த ஆசிரியரும் அடித்ததில்லை. அடிவாங்கும் அளவுக்கு நாங்கள் நடந்ததில்லை. ஆனால், அவர் எனக்கும் அடித்தார், ஏன் என்று தெரியவில்லை. ஏதோவெல்லாம் கேட்பார், என்னபதில் சொன்னாலும் அடிப்பார் பள்ளிக்கு காலையில் மகிழ்ச்சியோடு ஓடிவரும் நாங்கள் உள்ளத்தில் பயத்தோடு தயங்கிவரத் தொடங்கினோம்.
இரண்டு வாரங்கள் இப்படியே கழிந்தன. மூன்றாவது வாரத்தின் முதல்நாள் திங்கட்கிழமை காலையில் வகுப்பில் நுழைந்தபோது கனபேர் கூடிநின்றார்கள். ஆசிரியரின் மேசைக்குக் கீழே சீவிய ஓர் இளநீர் திருநீறு, மஞ்சள், குங்குமம் எல்லாம் பூசியபடி கிடந்தது மல்லிகை, செவ்வரத்தைப் பூக்களும் அதன்மேல் இருந்தன. நிலம் ஈரமாகத் தெரிந்தது. வாழைப் பழம் ஒன்றும் கிடந்தது. ஆசிரியரின் மேசையில் சதுரம் சதுரமாக வெண்கட்டியால் அங்குமிங்கும் கோடுகள்கீறப்பட்டு இருந்தன. முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. நண்பர்கள் குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள். என்னவென்று எனக்குப் புரியத் தொடங்கும்போது, பாடசாலை தொடங்குவதற்கான மணி அடித்தது. எல்லோரும் அடித்துப் பிடித்து வரிசையில் நின்று இறைவணக்கத்திற்காகச் சென்றோம்.
வகுப்பிற்குத் திரும்பி நாங்கள் வந்து சேர்ந்தபோது வழக்கம்போல கணக்கு வாத்தியாரும் வந்துவிட்டார். மேசையின் கீழ் இருந்த பொருட்களைக் கண்டார். விக்கித்து நின்றார், வெலவெலத்துப் போனார். என்னவென்று கேட்டார், எல்லோரிடமும். விசாரித்தார். எதுவும் தெரியாதென எல்லோரும் சொன்னாலும் எதற்கு அது வைக்கப்பட்டிருக்கலாம் என்று எங்களின் வகுப்பின் பின்வரிசை மாணவர்கள் இலேசாக ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார்கள். கணக்கு ஆசிரியர் கலவரப்பட்டார். அவர் பயந்துவிட்டார். அதிபரிடம் ஓடினார். அதிபரும் சில ஆசிரியர்களும் வந்தார்கள், பார்த்தார்கள். யாருக்கோ “சூனியம்” செய்து யாரோ அங்கே வைத்திருக்கிறார்கள் என்று சிலர் சொன்னார்கள்.
பெரும்பாலான ஊகங்கள், முதலாவது பாடத்திற்குவரும் கணக்கு ஆசிரியருக்காகத்தான் இருக்கும் என்றே எழுந்தன. வகுப்பாசிரியருக்காகவும் இருக்கலாம் என்று சிலர் மழுப்பினார்கள். எங்கள் வகுப்பாசிரியர் தியாகராஜா அவர்கள், இதைக் கண்டதுமே சிரித்துவிட்டார். அவருக்கேயுரிய, நக்கல் நளினத்துடன், கணக்கு ஆசிரியரைப் பார்த்து, “சேர், உங்கடதுதான் முதல் பாடம். நீங்கதான் முதல் வருவீங்க. அப்ப இது உங்களுக்குத்தான்…கவனமாக இருங்க சேர்” என்று சொல்லி, இதெல்லாம் சுத்த முட்டாள்தனம் என்பதுபோல ஏழனப் புன்னகையொன்றை வீசிவிட்டுச் சென்றுவிட்டார். “உதெல்லாம் விசர்க்கதை. அதைத் தூக்கி வீசிவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கோ” என்று கூறிய அதிபர்,
மேல்வகுப்பு மாணவர்கள் இருவரிடம் அதை எடுத்து வீசச் சொன்னார். பாடசாலைக்கு முன்னால், வீதிக்கும் பாடசாலைக்கும் இடையில் அகழியைப்போல மாரிகால வெள்ளம் வடிந்தோடுவதற்கான வாய்க்கால் ஒன்றிருந்தது. அதற்குள் அந்த இளநீரும், பூக்களும் வீசப்பட்டன. அன்று கணிதப் பாடத்திற்காக மீதமிருந்த சில நிமிடங்களும் கணக்கு ஆசிரியர் எங்களிடம் இதுபற்றிக் கேட்டதிலேயே கரைந்து போயிற்று. ஆர் செய்திருப்பார்கள் என்று அவர் கேட்கவில்லை. ஆருக்குச் செய்திருப்பார்கள் என்று அறிவதிலேயே பயத்தோடு ஆர்வம் காட்டினார்.
அன்று கணிதபாடம் நடக்கவில்லை. எங்கள் எல்லோருக்கும் இனம் புரியாததோர் மகிழ்ச்சியான நாளாக அந்தநாள் கடந்தது. அந்த வாரம் முழுவதும் கணக்கு ஆசிரியர் வகுப்பிற்கு வரவில்லை. அவர் விடுமுறையில் சென்றுவிட்டார் என்று சொன்னார்கள். அதற்கடுத்த வாரத்திலிருந்து வேறோர் ஆசிரியர் எங்களுக்குக் கணிதம் படிப்பிக்கத் தொடங்கினார். அடுத்த மாதத்திலிருந்து முன்னைய கணக்கு ஆசிரியர் இடமாற்றம் பெற்று எங்கோ சென்றுவிட்டாராம் என்று அறிந்தோம்.
எங்கள் வகுப்பில் படித்த பின்வரிசை மாணவர்கள் சிலர்தான் அந்த வேலையைச் செய்தவர்கள் என்ற இரகசியம் எல்லோருக்கும் கசிந்தது. மந்திரமும் இல்லை, மாயமும் இல்லை, படிப்பைவிடக் குறும்புத்தனத்தில் கூடிய நாட்டம் கொண்ட சில மாணவர்கள் “சும்மா” வைத்த சூனியம் அது. அந்தக்காலத்தில் மந்திரம், மாயம் என்ற மடத்தனமான அச்சம் மட்டக்களப்பிற்கு வருபவர்களுக்கு இருந்தது உண்மை, என்பதற்கு ஒரு சிறிய உதாரணமாக இது அமைகிறது.
பின்வரிசை மாணவர்களில் சிலர் என்னைவிட இரண்டு, மூன்று வயது மூத்தவர்களாக இருந்தார்கள். எப்போதும் அவர்கள் என்போன்ற முன்வரிசை மாணவர்களுடன் முரண்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களில் ஒருவன் பின்னாளில் சொன்னான், “எங்களுக்கு எல்லா சேர்மாரும் ஏசுறதும், அடிக்கிறதும் தான். அது பறவாயில்ல. ஆனால், காரணம் இல்லாமலே இவர் அடிக்கிறதுதான் எங்களுக்குக் கோபம். அதிலயும், உங்களுக்கெல்லாம் ஏன்ரா அவர் அடிக்கிறார்? அதுதாண்டா எங்களுக்குப் பிடிக்கல்ல”
ஆம், “நியாயமற்ற அடக்குமுறை நிகழும்போது, முரண்பட்டு நிற்பவர்களும் ஒன்றுபடுவார்கள்” என்பது பள்ளிப் பருவத்திலேயே எங்கள் அனுபவத்தில் நடந்திருக்கிறது. ஆனால் அந்தச் சின்ன வயதில் அது என்னவென்று புரியாமலேயே நிகழ்ந்திருக்கிறது!
இரண்டாவது சம்பவம் இதே வகுப்பில் படிக்கும்போது நடந்தது. எட்டாவது பாகத்தில் அது என்னவென்று பார்ப்போம்.
(நினைவுகள் தொடரும்….)