படுவான் திசையில்…

படுவான் திசையில்…

— படுவான் பாலகன் —

மகிழடித்தீவு, முதலைக்குடா இறால்வளர்ப்பு: 

எடுக்கப்பட்ட முயற்சிகளும் – எதிர் பேச்சுக்களும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள இரு கிராமங்கள்தான் முதலைக்குடா,  மகிழடித்தீவு போன்றனவாகும். இக்கிராமங்களின் எல்லையாக ஒரு பகுதியாக கடலேரி(ஆறு என்று பொதுவாக அப்பகுதி மக்களால் அது அழைக்கப்படுகின்றது) இயற்கையாக அமைந்துள்ளது. இவ்வாற்றின் அருகில்தான் 33 வருடங்களுக்கு முன்பு இறால் உற்பத்தி செய்த நிலப்பரப்பு உள்ளது.  

மண்முனைப்பாலத்தினை கடந்து வருகின்றபோது அவ்வீதியின் இருபகுதிகளிலும் இந்நிலப்பரப்பு காட்சிகொடுக்கும். இக்குறித்த நிலப்பரப்பில் 33 வருடங்களுக்கு முன்பு இறால்வளர்ப்பு மேற்கொண்ட போது பலருக்கு தொழில்வாய்ப்பும் கிடைத்திருந்தது. அதேவேளை இன்றுவரை இம்மக்களின் உள்ளத்தில் இருந்து மாறாத துயரச்சம்பவமொன்று பதிவாகி இருக்கின்றமையும் மறந்துவிடமுடியாது. இறால்வளர்ப்பில் வேலை செய்தவர்கள் 1987.01.27இல் படுகொலை செய்யப்பட்டனர். அன்றோடு இவ்விறால் வளர்ப்பு பண்ணையும் கைவிடப்பட்டது. இதன் பின்னர் ஒருசிலர் இறால் வளர்ப்பில் ஈடுபட்டாலும் கூட, 1987க்கு முன்னர் இடம்பெற்ற இறால்வளர்ப்பு பண்ணையாக, அந்த அளவுக்கு பாரிய அளவில் அவை  அமையவில்லை.  

ஆகவே, மீண்டும் அங்கு இறால்வளர்ப்பு பண்ணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என அரசாங்கம் முயற்சிகளை எடுத்திருந்தாலும், இதற்கு மக்களில் ஒரு பகுதியினர்  எதிர்ப்பினையே வெளியிட்டு வந்தனர். இதனால் இறால் வளர்ப்பு உற்பத்தி செய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போது இதனை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அரசாங்கத்தின் முன்னெடுப்பு 

மகிழடித்தீவு, முதலைக்குடா பகுதியில் இறால், நன்னீர் மீன் வளர்ப்பு போன்றவற்றினை மேற்கொள்வதற்காக அரசாங்கமும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்தது. இதில் நக்டா நிறுவனம் அதிகளவு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. குறிப்பாக, 2016ம் ஆண்டு அரசாங்க அதிபருடனான ஆரம்ப கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாகவும், அதனைத்தொடர்ந்து, 2017.11.31ல், 30 வருட நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டு, 2018.02.14ல் அமைச்சரவை அங்கீகாரம் தொடர்பான ஆவணங்கள் நக்டா பணிப்பாளர் நாயகத்தினால் மட்டு அரச அதிபருக்கு கையளிக்கப்பட்டிருப்பதாகவும், 2018.02.20ல் அமைச்சின் செயலாளர் அமைச்சரவை அங்கீகாரம் தொடர்பாக பிரதேச செயலாளர், மாவட்ட செயலக உயர்பிரதிநிதி நக்டா, முதலீட்டுச்சபை ஆகியவற்றினூடான கலந்துரையாடலும், 2018.02.26ல் அமைச்சரவை அங்கீகாரம், ஆகியன நடந்ததாக “கருத்திட்ட சுருக்கம்” மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது. இச்செயற்பாடுகளை நக்டா முன்னெடுத்திருந்தது.  

11.04.2018ல் சமூக மட்டத்தில் சூழவுள்ள கிராமமக்களின் ஆலோசனையை பெற்றதாகவும், 25.04.2018ல் சூழவுள்ள கிராமமக்கள், பிரதேச செயலக ஊழியர்களுக்கான வெளிக்கள விஜயத்தினை மேற்கொண்டதாகவும், 25.06.2018ல் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் சிபார்சு பெறப்பட்டதாகவும் திட்டத்தை கிராமிய மக்கள் ஒருசாரார் நிபந்தனையுடன் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், மற்றொருசாரார் முற்றாக மறுத்துள்ளதாகவும் நக்டா 2018இல் கூறியிருந்தது.  

இறால் பண்ணை அமைவதற்கு எதிர்ப்பு 

2015.06.17ம் திகதி இறால் வளர்ப்புப் பண்ணையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கக்கூடாது என வலியுறுத்தி கண்டனப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கண்டனப் பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர். 

குறித்த பகுதியில் இறால்வளர்ப்பு இடம்பெறக்கூடாதென மக்கள் எதிர்ப்பு பேரணியை மேற்கொண்டிருந்த அதேவேளை, அரசியல்வாதிகளும் தமது கருத்துக்களை குறிப்பிட்டிருந்தனர். 2015ல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களாகவிருந்த சீ.யோகேஸ்வரன், பொ.செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோரும் எதிர்த்திருந்தனர். 

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு, முதலைக்குடாப் பகுதியில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரின வளர்ப்புப் பண்ணையை  தொடர்ந்தும் மேற்கொள்வதற்காக 2018.08.14ம் திகதி பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் அனுமதிக்காக நக்டாவால் குறித்த பண்ணை தொடர்பான விடயம் முன்வைக்கப்பட்ட போது, அப்பகுதியில் உள்ள மக்களின் நூறுவீத அனுமதியைப் பெற்றே நடாத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் குறிப்பிட்டிருந்தார். 

தற்போதைய மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கமும், உறுப்பினர்களும் குறித்த நன்னீர் உயிரின வளர்ப்பு பண்ணை ஆரம்பிக்கப்படக்கூடாதென கூறி தமது எதிர்ப்பினை ஊடகங்கள் மூலமாகவும், அபிவிருத்திக்குழுக்கூட்டத்திலும் குறிப்பிட்டிருந்தனர். இதேவேளை, இவ்வாறான உயிரின வளர்ப்பு உற்பத்தியை மேற்கொள்கின்றபோது ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தான விடயத்தினை அறிவதற்காக பிரதேசசபையினால் குழுவொன்று நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

எதிர்ப்புக்கான காரணம் 

நன்னீர் உயிரின வளர்ப்பு உற்பத்தியின் மூலமாக தொழில்வாய்ப்பு, அதிக இலாபம் கிடைக்ககூடியதாக உள்ள அதேவேளை பல்வேறு பிரதிகூலங்கள் உள்ளதாக இங்குள்ள மக்களும், அரசியல்வாதிகளும் எதிர்ப்பு பேரணியினையும், எதிர்ப்பு கருத்துக்களையும் முன்வைத்திருந்தனர். இது தொடர்பில் அவர்கள் குறிப்பிட்ட காரணங்களாக,” மகிழடித்தீவு, முதலைக்குடா, தாழையடித்தெரு, படையாண்டவெளி, பண்டாரியாவெளி கிராமங்களின் குடிநீர் உவர்த்தன்மையடையும். விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, சூழலுக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படக்கூடும்” எனவும், “இறால் பண்ணையில் இருந்து ஆற்றுக்கு வெளியேற்றப்படும் செறிவு கூடிய உவர் நீரால் ஆற்றிலுள்ள மீன்கள் இறக்கும் நிலை ஏற்படும். இதனால் நன்நீர் மீன்பிடியாளர்களின் தொழில் வளம் பாதிப்படையும்” என்ற காரணங்களையும் கூறியிருந்தனர். 

கிடைக்ககூடிய நன்மை 

குறித்த பகுதியில் நன்னீர் உயிரின வளர்ப்பில் ஈடுபடுவதற்கான நிலப்பரப்பு உள்ளமையினால், இப்பகுதியில் நீரினை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பும், வசதிகளும் உள்ளமையினால் அதிக இலாபத்தினை பெறக்கூடியதாகவிருக்கும் என கூறப்படுகின்றது. குறிப்பாக 2014.03.06இல் இறால்வளர்ப்பு தொடர்பில் நடாத்திய செயலமர்வு ஒன்றில் இறால் வளர்ப்பிற்கும், கண்காணிப்பிற்குமான பொறுப்பாளர் கூறுகின்ற போது, “4மில்லியன் இறால் குஞ்சுகளை பண்ணைகளில் சரியான முறையில் பராமரித்து வளர்த்தால் 60,000 கிலோ கிராம் இறால்களை அறுவடைசெய்யலாம், இதில் பெறப்படும் மொத்த வருமானம் 48 மில்லியனில் 15 மில்லியன் தேறிய வருமானமாகப் பெறலாம். அதன் அறுவடைக்காலம்  4 முதல் 5 மாதங்களாகும்” எனக்கூறியிருந்தமையும் எடுத்துக்காட்டத்தக்கதே.  

இதன்மூலமாக தொழில்வாய்ப்புக்களும் கிடைக்கப்பெறும். இதேவேளை, தேசிய ஆராச்சி அதிகாரசபையும் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்திய ஆய்வில் மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு மற்றும் கோரளைப்பற்று பிரதேசங்களில் 3000 ஏக்கர் நிலம் இறால் வளர்ப்பிற்கு ஏதுவாக உள்ள போதிலும் போதிய வளங்கள் இன்மையால் அவை கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.  

2020இல் இறால் வளர்ப்பினை மேற்கொள்வதற்கான முயற்சி 

மட்டக்களப்பு மாவட்டத்தில் இறால் வளர்ப்பினை ஊக்குவித்து, அதனூடாக வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தவும் அந்நிய செலாவணியை ஈட்டும் வகையிலும் புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்படி, மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவில் உள்ள இறால் பண்ணையினையும் மீண்டும் ஆரம்பித்து அதன்மூலம் கிராம மட்டத்திலான வேலை வாய்ப்பினையும் வருமானத்தினையும் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட (அப்போதைய) அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையிலும், நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டிலும் நடைபெற்ற கூட்டத்திலே உறுதியளிக்கப்பட்டது.   

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் நிமால்சந்திராரட்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.  

இதன்போது மக்களும் நீர் உவர்த்தன்மை அடைதல், விவசாய செய்கை பாதிப்படைதல் போன்ற காரணங்களை குறிப்பிட்டிருந்தனர். இதற்கமைய குழுவொன்று அமைக்கப்பட்டது. மேலும், இந்தத் திட்டம் செயற்படுத்தப்படும்போது குறித்த பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் பங்காளிகளாக மாறும் நிலையேற்படுவதுடன் பெருமளவானோர் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன் மாதாந்தம் ஐயாயிரம் மில்லியன் ரூபாயினை அந்நிய செலாவணியாக ஈட்டமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  

தொடர்ந்து, மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவில் இறால் மற்றும் மீன் வளர்ப்பு திட்டங்களை அரச காணியில் ஆரம்பிப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் மீண்டும் தற்போதைய மாவட்ட அரசாங்க அதிபர் க. கருணாகரன் தலைமையில் அண்மையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கடந்த காலங்களில் இப் பகுதிகளில் இறால் பண்ணைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியதினால் ஏற்பட்ட குடிநீர் மற்றும் விவசாய நிலங்கள் உவராதல் போன்ற பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாய அமைப்புக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை கவனத்திற் கொண்டு இவ்வுயர் மட்டக்குழுவானது அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஆராய்ந்தது.  

அனைவருக்கும் குடிநீர் வசதியைப் பெற்றுக் கொடுக்கும் தொனிப்பொருளில் குடிநீர் வசதியற்றவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுக்க 850 மில்லியன் ரூபாய் தேவை ஏற்படும் எனவும் இதில் முன்னுரிமை அடிப்படையில் இப்பகுதிக்கான குடிநீர் வசதினை ஏற்படுத்தத் தேவையான 200 மில்லியன் ரூபாவினை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு பெற்றுக் கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.  மேலும் வயல் நிலங்கள் உவராதலைத் தடுத்தல் மற்றும் இறால் மற்றும் மீன் பண்ணைகளுக்காகப் பயன்படுத்தப்படும் நீரினை மீள்சுழற்சி செய்யத் தேவையான நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், துறைசார் நிபுனர்களைக் கொண்ட குழுவினையும் அமைத்துள்ளது.  

இவ்வுயர் மட்டக் கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், இரா சாணக்கியன் மற்றும் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை உதவிப் பணிப்பாளர் ரவிகுமார், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன் உள்ளிட்ட பல திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

தற்காலத்தில் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு இன்மையினால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதுடன், மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் குறித்த பிரதேசங்களிலேயே வேலைவாய்ப்புகள் அமைகின்றபோது தொழிலில்லாத பிரச்சினைகள் நீங்கப்பெறும். அதேவேளை 1987இல் இப்பகுதியில் இருந்த மக்களின் குடியிருப்பு எண்ணிக்கைக்கும், தற்போதைய எண்ணிக்கையும் பாரிய வித்தியாசமே. இந்த நிலையில் அப்போதைய சூழலுக்கும் இப்போதைய சூழலுக்கும் நிறையவே மாற்றமுள்ள நிலையில், மக்களின் கருத்துக்கமைய இருக்ககூடிய பிரச்சினைகளை தீர்த்து மக்களின் எதிர்ப்பின்றி நடாத்துவது சிறந்ததே.