“எந்த சூழ்நிலையிலும் வெளிநாட்டு உறவுக்காக இலங்கையின் சுதந்திரம், இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை விட்டுக்கொடுக்க முடியாது” என்று இலங்கை வந்த அமெரிக்க இராஜாங்க செயலர் பொம்பெயோவிடம் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இலங்கை வந்த அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பே, இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருடனான பேச்சுக்களின் போது, சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதி ட்டிரம் நிர்வாகத்தின் திட்டங்களை ஆக்ரோசமாக வலியுறுத்தியுள்ளார். ஆனால், இலங்கைக் தலைவர்கள் அமெரிக்காவின் அழுத்தங்களை ஏற்க மறுத்துள்ளனர். அமெரிக்கா முதலீடு மற்றும் பொருளாதார உதவிகளையும் வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, “எந்த சூழ்நிலையிலும் வெளிநாட்டு உறவுக்காக இலங்கையின் சுதந்திரம், இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டை விட்டுக்கொடுக்க முடியாது” என்று இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வந்த பத்திரிகை குறிப்பு ஒன்றிலேயே இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சீனா உட்கட்டமைப்பில் உதவவில்லை என்றும் சீனாவின் கடன் பொறியில் இலங்கை வீழ்ந்துவிடவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு தேவை முதலீடே ஒழிய கடல் அல்ல
இலங்கை தொடர்ந்து வெளிநாடுகளிடம் கடன் பெற விரும்பவில்லை என்றும், தமக்கு தேவை உயர்மட்ட பொருளாதார வளர்ச்சிக்கான வெளிநாட்டு முதலீடே என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
வெளிநாட்டு முதலீடுகளை தடுக்கும் வகையிலான அரச அதிகாரிகளின் “சிவப்பு நாடா” முறைகளை இலங்கை அகற்றிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் உயர்ந்தபட்ச பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவும் ஒத்துழைத்துச் செயற்படும் என்று பதிலுக்கு அமெரிக்க இராஜாங்க செயலர் பொம்பெயோவும் கூறியுள்ளார். இலங்கையில் அமெரிக்க முதலீட்டை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார். ஒழுங்கான திட்டங்களுடன் இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் அமெரிக்கா உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.