— பேராசிரியர்சி. மௌனகுரு —
ஈழத்தில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும்கிழக்கிலங்கையிலிருந்து எழும் பதிற்குறிகளும் (பகுதி 3)
இலங்கைத் தமிழர் வரலாறாகக் கட்டமைக்கப்பட்ட யாழ்ப்பாண மேனிலைத் தமிழர் வரலாறு
இலங்கைத் தமிழ் தேசிய எழுச்சிக்கு இப்பொது விதி பொருந்தும். இலங்கைத் தமிழர் வரலாற்று உருவாக்கத்திற்கான பெளதிகச் சூழல்கள் கனிந்துவிடப்பட்ட சூழலில் நாம் வாழ்கின்றோம். இவ்வரலாறுகள் சம்பந்தமான கருத்து நிலைகள் தோன்றிவிட்டன. பேராசிரியர் இந்திரபாலா, பேராசிரியர் பத்மநாதன், பேராசிரியர் சிற்றம்பலம் போன்ற ஆய்வாளர்களும் அதற்கான தளங்களை இட்டும் விட்டனர். இத்தளங்களில் பெரும்பாலானவை சிங்கள சரித்திர உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட சிங்கள சரித்திர ஆசிரியர்களின் கருத்தினை ஒத்ததாகவே அமைந்துள்ளன.
க. குணராஜா அண்மையில் வெளியிட்ட ஈழத்தவர் வரலாறு இக்கருத்துருவங்களை உருவாக்கி ஒன்று திரட்டப்பட்டு எழுதப்பட்ட வரலாற்றுக்கு உதாரணமாகும். இவ்வரலாறுகள் யாவும் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டுள்ளமையை யாரும் எளிதில் அறிவர்.
யாழ்ப்பாணத்திலும் சைவ வேளாள குலத் தலைவர்கள் வரலாறாகவும் ஆண் நிலைப்பட்டதாகவும், பிராமணமயம் கொண்டதாகவுமே தமிழர் வரலாறு கட்டப்படுகிறது. அங்குள்ள இரண்டாம் நிலை மூன்றாம் நிலை மக்களுக்கோ அவர்களின் பண்பாட்டுக்கோ இவர்கள் எழுதும் ஈழத் தமிழர் வரலாற்றில் இடம் இருப்பதில்லை.
13 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத் தமிழ் இராச்சியம் பற்றியும், ஆரியச் சக்கரவர்த்திகளின் அரசு பற்றியும் பின்னர் பூநகரி, நல்லூர், சிங்கை நகர் ராஜதானிகள் பற்றியும் அம்மன்னர் வழிவரும் செகராஜசேகரன், பரராஜசேகரன், சங்கிலியன் ஆகிய மன்னர்கள் பற்றியுமே இலங்கைத் தமிழர் வரலாறுகள் எழுதப்படுகின்றன அல்லது கட்டியமைக்கப்படுகின்றன.
இங்கெல்லாம் வரலாறான சாதியமைப்பில் மேநிலையிலிருந்த பிராமணர் குல அல்லது சைவ வெள்ளாள குல வரலாறே எழுதப்படுகின்றது. தமிழர்களின் பண்பாடும் சைவப் பண்பாடாக அதிலும் பிராமண மயப்பட்ட சைவப் பண்பாடாகவே கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்து வரலாற்று மூலகங்களாகக் கொள்ளப்படும் யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை, வையாபாடல் போன்ற நூல்கள் இன்னும் சமூகவியல் மானிடவியல் கண்ணோட்டங்களில் நோக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசகுல வரலாறுகளையே வரலாறாக எண்ணும் பழைய சிந்தனையில் இருந்தும், வரலாற்றை எழுதுவதற்குப் புதைபொருள்களும், நாணயங்களும் எழுத்தாவணங்களும் தேவை என்ற பழைய கோட்பாட்டினின்றும் எமது சரித்திராசிரியர்கள் பலர் இன்னும் மீளவில்லை. இச்சூழலில் யாழ்ப்பாணத்திலுள்ள இரண்டாம் மூன்றாம் நிலையிலுள்ள சாதி மக்களின் வரலாறு, பண்பாடு தமிழர் சரித்திரத்தில் இடம்பெற வாய்ப்பிருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் சாதி அதிகார அமைப்பில் மேநிலையில்லாத சாதிகளின் ஆட்சிகளும் அங்கு நடந்துள்ளன. சில சமூகக் குழுக்கள் சில பகுதிகளில் பலம் வாய்ந்தனவாக உள்ளன.
முஸ்லீம்களுக்கு அவ்வரலாற்று ஒட்டத்தில் ஒரு முக்கிய இடம் இருக்கின்றது. சைவப் பண்பாடு சாராத பிராமண மதத்திற்குட்படாத ஒரு ஈழத் தமிழ்ப்பண்பாடு யாழ்ப்பாணத்தில் இருக்கிறது; இருந்திருக்கிறது.
சிவன், முருகன், பிள்ளையார், காளியம்மன் வழிபாடுகளும் இதற்குத் தக வேறு வணக்க முறைகளும் அடிநிலை, இடைநிலை மக்களிடையே இன்றும் இருக்கின்றன. திருமண, சாமர்த்திய, செத்தவீட்டுச் சடங்கு முறைகளில் இவ்விடைநிலை, அடிநிலை மக்களிடையே வேறுபட்ட பண்பாடுகள் காணப்படுகின்றன. இவ்வடிநிலை மக்கள் தமது இன்றைய நிலையைப் பெற மிக நீண்டதொரு போராட்டத்தை நடத்தியுள்ளனர். அதற்கும் ஒரு நீண்ட வீர வரலாறுண்டு.
கிறிஸ்தவ வருகை
கிறிஸ்தவத்தின் வருகை இன்னொரு விதமான கலாசார அமைப்பை உருவாக்கியதுடன் பாரிய மாற்றங்களையும் இடைநிலை, அடிநிலை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இவையனைத்தையும் கணக்கில் எடுக்காது யாழ்ப்பாணச் சரித்திரம் சைவ வேளாளர் சரித்திரமாகவும், தமிழரின் பண்பாடு இவ்வுயர்குழாத்தின் பண்பாடாகவுமே காட்டப்படுகின்றது.
எழுதப்படும் தமிழர் வரலாற்றில் இவ்விரண்டாம் மூன்றாம் மக்களுக்கு இடமிருப்பதில்லை. இதனால் சமூக அசைவியக்கம் பெற்ற இம்மக்கள் தம் வரலாற்றை எழுதவும், வெளிப்படுத்தவும் முனைகின்றனர். மு. க. சிவப்பிரகாசத்தின் “விஷ்ணு புத்திர வெடியரசன்’ வரலாறு என்ற நூல் இதற்கு உதாரணமாகும். ஆராய்ச்சி நெறிமுறைகளுக்கு இயைய இந்நூல் எழுதப்படாவிடினும் யாழ்ப்பாணத்தில் ஒரு சமூகப் பிரிவான, ஒரு காலத்தில் அங்கு ஒரு பகுதியை ஆண்ட முக்குவ குலத்தினரின் செய்திகளை – நாட்டார் பாடல்களையும், வாய் மொழிக் கதைகளையும் – அடிப்படையாக வைத்து அந்நூலை ஆசிரியர் ஆக்கியுள்ளார். இந்நூல் பற்றி பேராசிரியர் கா. சிவத்தம்பி “யாழ்ப்பாண வரலாற்றுக் கருத்து நிலையின் அகற்சி நிலைமை வேண்டி நிற்கும் ஒரு பிரசுரம்’ எனக் கூறுகின்றார்.
இந்நூல் எழக் காரணமாயிருந்த நாட்டார் பாடல்களும், வாய் மொழிக் கதைகளும் உயர் நிலையினர் கதைகளைக் கூறும் வையா பாடல், யாழ்ப்பாண வைபவமாலை என்பனவற்றிற்கு எந்த விதத்திலும் குறைந்தனவல்ல.
ஒரு தேசத்தினதோ, ஒரு தேசிய இனத்தினதோ வரலாறு விருத்தி பெறுவதற்கு அதன் அம்சங்களான பிராந்தியங்கள், சமூகப் பிரிவுகள் என்பனவற்றின் வரலாறுகளும் ஆராயப்பட வேண்டும் என்பர். பேராசிரியர் சி. பத்மநாதன் அவரது வன்னியர் என்ற நூல் இவ்வகையில் ஒரு முக்கிய நூலாகும். (அதுவும் சமூகத்தின் உயர் குலத்தினரின் வரலாறுதான்)
யாழ்ப்பாணத்தில் வாழும் வாய்மொழி, வரலாறுகளைக் கொண்ட ஒரு சமூகத்தையே கணக்கில் எடுக்காது கட்டப்பட்ட யாழ்ப்பாண சரித்திரம் எவ்வாறு பிற இனக்குழு மக்களைக் கணக்கில் எடுக்கும்?
பிரதேச சாதி வரலாறுகள் எழக்காரணம்
இலங்கை வாழ் தமிழர்கள் தம்மை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கக் கோரியும் தமது உரிமைகட்காகவும் நீண்ட காலமாகப் போராடி வருகின்றார்கள். இப்போராட்டம் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் வேர் கொண்டதாயினும் பின்னர் யாழ்ப்பாணத்துடன் திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை, மன்னார், வன்னி, மலைநாடு எனப் பரந்தமையை வரலாறு கூறும். வடக்குக் கிழக்கு இணைப்பில் தமிழரின் பாரம்பரிய பிரதேசங்கள் என்ற கருத்துருவங்கள் மேநிலைக்கு வருகின்றமையையும் வரலாற்றினூடே காண்கின்றோம்.
அனைத்துத் தமிழ் மக்களும் இணைந்தமைக்கு ஒர் அரசியல் பின்னணியும் வரலாற்றுப் பின்னணியும் உண்டு. ஆரம்பத்தில் அதிகாரத்தில் உரிமை கோரியோர் – முக்கியமாக தமிழரின் உயர்குழாத்தினரே. எதிர்ப்பைத் தொடக்கி வைத்தோர் அவர்களே. பின்னாளில் கல்வி கற்ற மத்தியதர வர்க்கத்தினரின் – மேநிலைக்கு வந்தோரின் – உரிமை கோரும் இயக்கமாக இது வளர்ந்துள்ளது. இலங்கையில் நடந்தேறிய அரசியல் போக்குகள் உயர்வு தாழ்வின்றி பிரதேச சாதிவேறுபாடுகளின்றி அனைத்து இலங்கைத் தமிழ் மக்களையும் பாதிக்கின்ற பிரச்சினையாக – (இனப் பிரச்சினையாக) மாறியதால் இன்று அனைத்துத் தமிழ் மக்களும் தமக்குள் உள்ள சகல மோதல்களையும் கடந்து உரிமை கோரும் தன்மை கொண்ட அரசியல் சூழலாக இது பரிணமித்திருக்கிறது.
இவ்வுரிமைப் போரில் பல பிரதேசங்களும் பல சாதியினரும் தம் பங்களிப்பை நேரடியாகவோ, மறைமுகமாகவோ நல்குகின்ற சூழ்நிலை உருவாகின்றது.
இந்நிலையில் தமிழர் என்ற ரீதியில் பொதுவாகப் பல இன்னல்களுக்குள்ளாகும் பல் பிரதேசத் தமிழர்களும் (வவுனியா, மன்னார், சிலாபம், மலைநாடு, மட்டக்களப்பு) தத்தம் வரலாற்றைக் காணமுயல்வதும் ஈழத்தமிழர் வரலாற்றில் தம் தனித்துவத்தைக் காட்ட முயற்சி எடுப்பதும் இயல்பு.
இதில் மட்டக்களப்பு, வவுனியா மாத்திரமே தமக்கென சில வரலாற்றுப் பதிவுகளை கொண்டனவாக உள்ளன. மட்டக்களப்பு மான்மியமும் பண்டார வன்னியன் பற்றிய செய்திகளும் இதற்கு ஆதாரங்களாகும். சிலாபம், மன்னார் பகுதிகளுக்கு ஆவணங்களும் சிலரால் சமர்ப்பிக்கப்படுகின்றன. இலங்கையில் முஸ்லீம் சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ள சமூக அசைவியக்கம் அவர்களையும் இத்தகைய வரலாறுகளைப் படைக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. அவர்களுள்ளும் அக்கரைப்பற்று முஸ்லீம்கள் வரலாறு, புத்தள முஸ்லீம் வரலாறு என பிரதேச வரலாறுகள் வரத் தொடங்கியுள்ளமை அவதானிப்பிற்குரியது. மலைநாட்டுத் தமிழர் வரலாறு, பண்பாடு சம்பந்தமான நூல்கள் வெளிவருகின்றன.
பிரதேசத்திற்குப் பிரதேசம் அங்கு வாழும் மக்கள் வரலாறு, பண்பாடு, பழக்க வழக்கம் என்பனவற்றில் வித்தியாசப்பட்டு நிற்பதும் இத்தனித்துவங்களைப் பேண அவர்கள் எடுக்கும் முயற்சியும் முக்கியமானவை.
பிரதேச மட்டத்தில் எழும் இப்பிரதேச உணர்விற்குள் அப்பிரதேசத்தின் மேனிலை பெற்ற சமூகக் குழாத்தின் வரலாறு பண்பாடுகளே அப்பிரதேச வரலாறு, பண்பாடாகக் காட்டப்படுவது ஆரம்பத்தில் நிகழும். இந்நிலையில் அப்பிரதேசத்தில் வாழும் சமூக அசைவு இயக்கம் பெற்ற ஏனைய சாதிகளும் தம் வரலாற்றை எழுதும் முயற்சியில் இறங்கும்.
இத்தகைய வரலாறுகள் தோன்றுவதற்கு மூன்று காரணங்களைக் கூறலாம். முதலாவதாக தேசிய இனப்போர், சமூக மாற்றம் காரணமாக அசைவுறும் தம்முடைய நிலையினைத் தக்க வைத்துக் கொள்ளுதல்.
இரண்டாவதாக, இத்தேசிய இனப்போரில் தங்களுடைய பங்களிப்பினை வரலாற்றுக்கூடாக எடுத்துக்காட்டி, போராட்டப் பங்களிப்பில் தங்களுக்கான சமத்துவ இடத்தினை பெறுவதற்காகவும் இருக்கலாம்.
மூன்றாவது, இரண்டுக்குமான முனைப்பாகவும் இருக்கலாம்.
பிரதேச, சாதி வரலாறுகள் எழுதப்படும் சூழலில் பிரதேசத்திற்குள் வாழும் சாதி வரலாறுகளே முதலில் இடம் பெறுவதும் அவற்றிற்கூடாக பிரதேச வரலாறுகள் எழுவதும் பின் அவை ஒருமித்துத் தேசிய வரலாறாக உருப்பெறுவதும் இயல்பு. இந்நிலையில் இன்று தமிழர் மத்தியில் சாதி வரலாறுகள் எழுதப்படும் சூழல் வந்துள்ளது போலத் தெரிகிறது.
(தொடரும்)