— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —
துரோகி’, ‘தியாகி’ குறிசுடும் தமிழ் ஊடகங்கள்
1944இல் அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை நிறுவி, ‘தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!’ என்ற கோசத்துடன் தனிப்பெருந் தலைவராக வலம் வந்தபோது அவர் ‘தியாகி‘.
பின் அக்கட்சியிலிருந்து அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ஜி.ஜி.யுடன் முரண்பட்டுப் பிரிந்துவந்து, 1949 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியை நிறுவித் ‘தமிழரசுத் தந்தை’ (தந்தை செல்வா) ஆகிய பின்னர் ஜி.ஜி. பொன்னம்பலம் ‘துரோகி‘, தந்தை செல்வா ‘தியாகி‘.
பின்னர் 1972 இல் நிறைவேற்றப்பட்ட குடியரசு அரசியலமைப்பைத் தொடர்ந்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாகிய போது இருவருமே ‘தியாகி‘கள் ஆனார்கள்.
1970 இல் ஆட்சிக்கு வந்த காலஞ்சென்ற பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்தை ஆதரித்த யாழ் மாநகர சபை முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பா ‘துரோகி‘ ஆக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார். அக்காலத்தில் தமிழரசுக்கட்சியின் ‘தளபதி’ அமரர் அ. அமிர்தலிங்கம் ‘தியாகி‘. அல்பிரட் துரையப்பாவைச் சுட்டுக் கொன்ற அதே ஆயுத அணியினரால் பின்னாளில் 1989 இல் அமிர்தலிங்கமும் ‘துரோகி‘யாக ஆக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
திருமதி சந்திரிகா விஜயகுமாரணதுங்க பண்டாரநாயக்கா ஜனாதிபதியாகப் பதவி வகித்த 1994– 2004 காலப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகமாக விளங்கிய இரா.சம்பந்தன் ‘துரோகி‘யாக ஆக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டுவிடுவாரோ என்ற நிலையில் அவருக்குச் சந்திரிகா அரசாங்கம் குண்டு துளைக்காத கார் உட்பட பாதுகாப்புக்கென பொலிஸ் குழு ஒன்றையும் வழங்கியிருந்தது. பின்நாளில் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக வந்தபின் அவரின் ‘துரோகி‘ப் பட்டம் இல்லாமல் போனது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானபோது அதன் முதல் தலைவரான வீ. ஆனந்தசங்கரி ‘தியாகி‘. அவர் பின்னர் புலிகளின் ஏக பிரதிநிதித்துவக் கொள்கையோடு உடன்படவில்லை என்றதும் ‘துரோகி‘ ஆக்கப்பட்டார். ஒரு காலகட்டத்தில் புலிகளின் ‘ஹிட் லிஸ்டில்’ (HIT LIST) இடம் பெற்றுத் ‘துரோகி‘ எனப் பார்க்கப்பட்ட அமரர் குமார் பொன்னம்பலம், அவர் பின்னர் புலிகளால் கொல்லப்படவில்லையென்பதனால் மரணத்தின் பின் ‘மாமனிதர்’ பட்டம் பெற்றுத் ‘ தியாகி‘யானார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய தமிழ்ப் போராளி இயக்கங்களைத் ‘துரோகி‘ப் பட்டம் சூட்டி அவர்களை ஓரங்கட்டி அல்லது ஒழித்துக்கட்டி இராணுவ மேலாண்மை பெற்றுத் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக இருந்த போது புலிகள் மட்டும் ‘தியாகி‘கள். ஏனைய தமிழ்ப் போராளி இயக்கங்கள் யாவும் ‘துரோகி‘கள். ஈரோஸ் புலிகளின் சொற்கேட்டு நல்ல பிள்ளையாக நடந்து கொண்டதால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் ‘துரோகி‘யாக ஆக்கப்படவில்லை.
புலிகளால் கொல்லப்பட்ட எல்லோரும் ‘துரோகி‘கள். புலிகள் அல்லாதோரால் கொல்லப்பட்ட எல்லோரும் ‘தியாகி‘கள் என்பதே எழுதப்படாத விதியாகிப்போன வாய்ப்பாட்டுடன் கூடிய கொலைக் கலாசாரம் தமிழ்த் தேசிய அரசியலிலும் ஆயுதப் போராட்டத்திலும் கோலோச்சிற்று.
முன்பு ‘துரோகி‘யாக நோக்கப்பட்ட டெலோ, ஈபிஆர்எல்எப் என்பவற்றையும் உள்ளடக்கித் தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்பன இணைந்து 2001இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவான போது ரெலோ மற்றும் ஈபிஆர்எல்எஃப் மீதான ‘துரோகி‘ப் பட்டங்கள் நீக்கப்பட்டன.எனினும் ஆரம்பத்தில் ‘புளட்டிற்கு’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம் வழங்கப்படாததால் அதன் தலைவர் ‘துரோகி‘யாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டார். பின்னர் 2012-இல் நடைபெற்ற வடமாகாணச் சபைத் தேர்தலின் போது புளொட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்வாங்கப்பட்டு முன்பு ‘துரோகி‘யாக நோக்கப்பட்ட அதன் தலைவர் திடீரெனத் ‘தியாகி‘யானார்.
2001 இல் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது இல்லை. கடந்த ஒன்பது வருடங்களாக அது பல வடிவங்களை எடுத்து விட்டது. இப்போது அதில் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி இல்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இல்லை. ஈபிஆர்எல்எஃப் இல்லை. ரெலோவின் ஒரு பகுதியினர் (சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா அணி) இல்லை. தமிழரசுக்கட்சியின் வாலில் ‘அரை’ ரெலோவும், புளொட்டும் தொங்கிக் கொண்டிருக்கின்ற கூட்டுத்தான் தற்போதைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகும்.
இப்போது ஈபிஆர்எல்எப் தனது பெயரையும் ‘பூ’ ச் சின்னத்தையும் மாற்றிக் கொண்டு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற பெயரிலும் ‘மீன்’ சின்னத்திலும் மறுவடிவம் எடுத்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணி என்னும் பதிவு செய்யப்படாத கட்சியின் தலைவரும் முன்னாள் வட மாகாண சபையின் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசருமான சி. வி. விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு எனும் கட்சியின் தலைவராக உள்ளார். ரெலோவில் இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தும் வெளியேறிய சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா அணியினர் தமிழ்த் தேசியக் கட்சி எனும் புதிய கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளனர். முன்னாள் புலி உறுப்பினரான அனந்தி சசிதரன் தமிழர் சுயாட்சிக் கழகம் வைத்துள்ளார். கடந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எஃப்) சி. வி. விக்னேஸ்வரன் (தமிழ் மக்கள் கூட்டணி), சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா (முன்னாள் ரெலோ–இந்நாள் தமிழ்த் தேசியக் கட்சி) மற்றும் அனந்தி சசிதரன் அனைவரும் இணைந்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டும் உள்ளனர்.
அதாவது முன்னாள் ‘துரோகி‘களும் ‘தியாகி‘களும் இணைந்து இப்போது எல்லோருமே ‘தியாகி‘கள் ஆகிவிட்டார்கள்.
இன்றைய தமிழ் அரசியல் சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்), தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளுமே தமிழ் ஊடகங்களில் ‘தமிழ்த்தேசியவாதிகள்’ –‘தியாகி‘ கள் எனக் குறிசுடப்பட்டுள்ளனர்.
இவைகளுக்கு வெளியே நிற்கின்ற தமிழர் விடுதலைக் கூட்டணி அதாவது வீ. ஆனந்தசங்கரி ஒரு ‘அரை’த் ‘துரோகி‘. டக்ளஸ் தேவானந்தாவும், பிள்ளையானும், கருணா அம்மானும் முழுத் ‘துரோகி‘கள் என முத்திரை குத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு ‘தியாகி‘ மற்றும் ‘துரோகி‘ எனக் குறிசுடுவதில் தமிழ் ஊடகங்கள் பெரும் பங்காற்றுகின்றன.
இப்படித் தமிழர்களுடைய அரசியல் வரலாற்றில் ‘துரோகி‘ ‘தியாகி‘ விடயத்தை விவரித்துக் கூறப் போனால் அது அனுமார் வால் போல நீளும்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அகிம்சை வழியில் போராடிய மகாத்மா காந்தியும் அதனோடு உடன்பாடு இல்லாமல் ஆயுதம் ஏந்திப் போராடிய சுபாஷ் சந்திரபோஸும் ஒருவரையொருவர் ‘துரோகி‘ என அழைத்துக் கொண்டதில்லை. இருவருடைய வழிமுறைகளினதும் நோக்கங்கள் ஒன்றானவை. அவை முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்தவை. இருவருடைய செயற்பாட்டிலும் ஆன்மீகமும் தர்மமும் அடிப்படையாக இருந்தன. இந்திய சுதந்திரப் போராட்டம் வெற்றிபெற இத் தார்மீகமும் ஒரு காரணமாகும்.
ஆனால் இலங்கைத் தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தை வழி நடத்தியவர்கள் அவர்கள் ஜனநாயக அரசியல் தலைவர்களாயினும் சரி, ஆயுதப் போராட்ட அரசியல் தலைவர்களாயினும் சரி, பெரும்பாலானவர்கள் தன்னலமும் தன் முனைப்பும் மேலோங்க மக்கள் நலன்களை மறந்து செயற்பட்டமையே, தமிழர்களுடைய உரிமைக்கும் சுதந்திரத்திற்குமான போராட்டம் பின்னடைவதற்கும் இன்றைய சீரழிவுகளுக்கும் காரணமாகும்.
சகோதர முஸ்லிம் சமூகத்தை எடுத்துப் பாருங்கள், அவர்களுக்கிடையே பல அரசியல் கட்சிகள் உண்டு. கருத்து முரண்பாடுகள் உண்டு. தேசியக் கட்சிகளிலும் அதாவது பௌத்த சிங்கள பேரினவாதக் கட்சிகளிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இணைந்து அரசியல் செய்கிறார்கள். ஆனால் இவர்கள் ஒரு போதும் ஒருவரையொருவர் ‘துரோகி‘கள் எனத் தூற்றிக் கொண்டதும் இல்லை, ஒருவரை ஒருவர் துரத்தித் துரத்திச் சுட்டுக் கொண்டதும் இல்லை. அவர்கள் தங்கள் சமூகத்தின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்படுகின்றனர். அதில் தவறுமில்லை. அதுவே சரியான வழிமுறையுமாகும்.
இப்பத்தி எழுத்தின் நோக்கம் நம்மவர்களில் யாரையாவது குற்றஞ்சாட்டுவதோ அல்லது குறை காண்பதோ அல்ல. தமிழ்த் தேசிய அரசியல் அதன் பிற்போக்குத் தனங்களில் இருந்தும் அதன் குறுந் தமிழ்த் தேசியவாத மனப்போக்கிலிருந்தும் விடுபட்டு, முற்போக்குத் திசை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதே நோக்கம். அதற்கு முதற்படியாக இந்தத் ‘துரோகி‘– ‘தியாகி‘ பட்டம் சூட்டும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.