கொரொனாவும் தமிழர் திருமணங்களும் : ஆச்சரியமான தகவல்கள்

கொரொனாவும் தமிழர் திருமணங்களும் : ஆச்சரியமான தகவல்கள்

— சீவகன் பூபாலரட்ணம் —

கொரொனா போற போக்கைப் பார்த்தா மகனுடைய நிச்சயித்த கல்யாணத்தை எப்பிடி நடத்துறது என்று தெரியல்ல?” 

பெடியனுக்கு இலங்கையில இருக்கிற பிள்ளையை பார்த்தனாங்க, எப்ப பிளைட் ஓடுறது, எப்ப நாங்க கொழும்புக்கு போய் கல்யாணத்தை வைக்கிறது?” 

இதுவொன்றும் ஒரு தனிப்பட்ட நபரின் அல்லது குடும்பத்தின் பிரச்சினையல்ல. இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் பல தமிழர் குடும்பங்களின் இன்றைய பிரச்சினை இது.  

ஆம், கொரொனா அல்லது கொவிட் 19 தொற்று உலகில் ஏனைய சமூகங்களைப்போல தமிழர் வீட்டுத்திருமணங்களிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

அப்படியானால், முதலில் எழுகின்ற கேள்வி, “சரி, அப்படியான தமிழர் திருமணங்கள் கொரொனா காலத்தில் குறைந்து விட்டனவா?” என்பதுதான். ஆனால், இதற்கான பதிலாக “ஆம்” என்று இலகுவில் சொல்லிவிட முடியாது. 

சரி, பிரச்சினையை கொஞ்சம் ஊடுருவிப்பார்ப்போம்.  

கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அலுவலகங்களைக் கொண்டு உலகம் முழுவது தமிழர்கள் மத்தியில் திருமணங்களை ஏற்பாடு செய்து நடத்தி வைக்கும் சேவையைச் செய்யும் நிறுவனம் “அருந்ததி இணைய திருமண சேவை”. 

உண்மையில் கொரொனாவால் உலகெங்கும் பாதிக்கப்பட்ட காலத்தில் தமது சேவையை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறுகிறார் அந்த நிறுவனத்தின் முகாமையாளரான சி. மோகன்.  

கொரொனாவால், இணைய வழியில் திருமணங்களை ஏற்பாடு செய்ய நினைப்பவர்களின் எண்ணிக்கை ஒரு புறம் அதிகரித்தாலும், மறுபுறம் கொரொனா காரணத்தால் அவசர அவசரமாக தமது வீட்டு பிள்ளைகளுக்கு திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தம்மை அணுகுவதும் அதிகரித்துள்ளதாக அவர் கூறுகிறார். 

கொரோனா காரணமாக இப்போது இணைய வழியில்தான் பெற்றோர் கிட்டத்தட்ட 100 வீதம் தமது சேவையை நாடுவதாக கூறுகிறார் மோகன். 

உண்மையில் போர்க்காலத்திலும் பிள்ளைகளுக்கு அவசர அவசரமாக திருமணத்தை நடத்த பெற்றோர் நினைத்த ஒரு சூழல் முன்னர் காணப்பட்டது என்றும் அவர் கூறுகிறார். அப்படியான ஒரு போக்கை இப்போது மீண்டும் காணக்கூடியதாக இருக்கிறது என்கிறார் மோகன். 

ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த “அருந்ததி இணைய திருமண சேவை”, பின்னர் கொழும்பிலும் தனது சேவைக்காக ஒரு அலுவலகத்தை திறந்துள்ளது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் உலகில் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளை சேர்ந்தவர்களை திருமண பந்தத்தில் இணைத்து வைப்பது இவர்களது பணி. 2014ஆம் ஆண்டு முதல் இதனை இணைய வழியில் இவர்கள் செய்து வருகிறார்கள். இதுவரை சுமார் 800 க்கும் அதிகமான திருமணங்களை இவர்கள் நடத்தி வைத்துள்ளனர். கொழும்பில்தான் தலைமை அலுவலகம். 

ஆரம்பத்தில் இணையத்தின் மூலம்(இணையம், வட்ஸ்ஸப், வைபர் உட்பட) இவர்கள் சேவையை ஆரம்பித்தாலும் மாப்பிள்ளை மற்றும் பெண்களின் தாய், தந்தையர் இவர்களை இணையத்தின் மூலம் தொடர்புகொள்வது குறைவாம். ஆகவே, அவர்களுக்காக ஒரு சஞ்சிகையையும் இவர்கள் ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். பத்திரிகை விளம்பரங்களும் செய்கின்றனர். பெரும்பாலான பெற்றோர் இவர்களது அலுவலகங்களுக்கு வந்தே விபரங்களை நேரடியாக பெறுவார்களாம். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது என்கிறார் மோகன்.  

இப்போதெல்லாம், இணைய வழியில் அருந்ததி நிறுவனத்தை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்கள், ஜாதகங்களைக் கூட வட்ஸ்ஸப் போன்றவை மூலம் பார்த்து முடிக்கிறார்களாம். இந்த நிலை கொரொனா வந்தவுடன் இன்னும் அதிகரித்து விட்டதாம். 

திருமணங்களை ஏற்பாடு செய்து, ஜாதகம் போன்றவை பார்த்து, மண்டபங்கள், கோயில்களை ஏற்பாடு செய்து, போட்டோ, வீடியோ, உணவு, பெண் அலங்காரம், ஐயர், தாலி செய்தல் ஆகியவற்றை ஏற்பாடு செய்தல் போன்ற அனைத்தையும் இவர்கள் தாமே ஏற்பாடு செய்கிறார்கள். அதேபோல வெளிநாடுகளில் இருந்து மணமக்கள் வந்தால், அவர்களுக்கு தங்குமிடம், போக்குவரத்து போன்றவற்றையும் இவர்களே ஏற்பாடு செய்கிறார்கள். இவை அனைத்தையும் இணையம் மூலம் அவர்களை தொடர்புகொண்டே வாடிக்கையாளர் பெற முடியும். 

இலங்கையை பொறுத்தவரை கொரொனா தொற்று ஏற்பட்ட காலம் முதல் திருமணத்தை எப்படிச் செய்வது என்பதில்தான் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதாம். ஆனால், திருமணங்களை நடத்துவது என்பது குறையவில்லை என்கிறார் மோகன். உண்மையில், கொரொனா நீடித்தால் என்னாவது என்ற பயத்தில் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்களாம். அதற்கான கோரிக்கைகள் அதிகரித்திருக்கிறதாம்.  

திருமண முறையில்தான் மாற்றம் 

ஆனால், திருமணத்தை எப்படி செய்வது என்பதில்தான் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெருமெடுப்பில் ஆடம்பரமாக திருமணங்களை ஏற்பாடு செய்வதை மக்கள் தவிர்க்கிறார்கள். பெரிய மண்டபத்தை/ ஹொட்டலை ஏற்பாடு செய்து ஆயிரக்கணக்கில் ஆட்களை அழைத்து, சங்கீத்/மெஹிந்தி, நிச்சயதார்த்தம், கல்யாணம், வரவேற்பு என்று ஏற்பாடுகளை ஆடம்பரமாக செய்வதை தவிர்த்து,  சிம்பிளாக, குறைந்த செலவில், கோயிலில் மாத்திரம், குறைந்த விருந்தினருடன் நடத்த பலரும் முயற்சிக்கிறார்களாம்.  

“வாழ்க்கை முறையில் மாற்றம் வந்திருக்கிறது. ஆட்களுக்கு காட்ட ஆடம்பரமாக செய்வதைவிட, 50 பேரோட சாதாரணமாக எளிமையாக செய்துவிட்டுப் போகலாம் என்ற எண்ணம் பலர் மனதில் உருவாகத்தொடங்கிவிட்டது” என்கிறார் மோகன்.  

திருமணம் ரத்தானது குறைவு: 

“கொரொனா காரணமாக இலங்கையில் பொதுவாக திருமணங்கள் ரத்துச் செய்யப்பட்டமை அல்லது பிற்போடப்பட்டமை மிகவும் குறைவு” என்கிறார் மோகன். “பெரிய எடுப்பில் இல்லாமல் அவை எளிமையாக, குறைந்த விருந்தினர்களுடன் செய்யப்பட்டன.” அண்மைக்காலத்தில் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்து திருமணம் செய்பவர்களின் திருமணங்கள்தான் பின்போடப்பட்டுள்ளனவாம். விமானப் போக்குவரத்து இல்லாமைதான் முக்கிய காரணம். இதனால் வெளிநாட்டில் இருந்து வந்து அதிக செலவழித்து கல்யாணம் செய்பவர்கள் மூலமான வருமானம் குறைந்துள்ளது. 

உள்ளூரில் மாப்பிள்ளை / பெண் பார்த்தல் 

ஆரம்பத்தில் வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு இலங்கையில் பெற்றோர் பெண் தேடுவது அதிகமாக இருந்தது. ஆனால், கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் உள்ள மாப்பிள்ளைகள் இலங்கையில் பெண்ணை தேடி வந்து செய்வது குறைந்து போயுள்ளது. இலங்கையில் உள்ள பெண்களுடன் தமக்கு ஒத்துப்போகுமா என்ற சந்தேகம் காரணமாக பல வெளிநாட்டில் பிறந்த இளைஞர்கள் தாய் நாட்டுக்கு வந்து பெண் தேடுவது குறைந்து வருகின்றது. தாம் வாழும் நாடுகளில் உள்ள தமிழ் பெண்கள் அல்லது வேறு இன பெண்களை பல இளைஞர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். 

அதனால், சில வருடங்களாகவே, தமது பெண்பிள்ளைகளுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தேடும் இலங்கை பெற்றோரின் ஆசை, சிரமமாகிக்கொண்டுதான் வந்திருக்கிறது. ஆனால், அண்மைக்காலமாக இதில் இன்னுமொரு மாற்றமும் நடந்திருக்கிறதாம். 

அதாவது கொரொனா தாக்குதல் ஆரம்பித்த பின்னர் பல இலங்கைப் பெற்றோர் தமது பெண்களுக்கு இலங்கையிலேயே மாப்பிள்ளை கிடைத்தால் போதும், வெளிநாட்டு மாப்பிள்ளை தேவையில்லை என்று நினைக்கத் தலைப்பட்டுள்ளதாக அருந்ததி இணைய திருமண சேவை நிறுவனத்தின் முகாமையாளர்  கூறுகிறார். 

தம்மிடம் வரும் உள்ளூர்காரர்களில் 60 – 75 வீதமானோர் இப்போது உள்ளூர் மாப்பிள்ளை கேட்கிறார்களாம். 

அதேபோல வெளிநாடுகளில் உள்ளவர்களும் தமது நாட்டுக்குள்ளேயே துணை தேடுவதும் அதிகரித்துள்ளதாம். 

திருமண ஏற்பாட்டாளர்களின் சிரமம்:  

அருந்ததி இணைய திருமண சேவைக்கு வரும் சேவைக்கான கோரிக்கைகள் அதிகரித்துள்ள போதிலும், அவற்றுடன் இணைந்து செயற்படும் தனி நபர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கத்தான் செய்துள்ளதாம். உண்மையில் ஆடம்பர திருமணங்களை வாடிக்கையாளர் குறைக்கத்தொடங்க, புகைப்பட/வீடியோ கலைஞர்கள், பெண்களை அலங்கரிக்கும் ஒப்பனைக் கலைஞைகள் ஆகியோரின் வருமானம் மிகவும் குறைந்து போய்விட்டதாம். அவர்கள் வருமானம் இன்றி நிறையவே சிரமப்படுகிறார்களாம். 

பல பெரிய திருமண மண்டபங்கள், ஹோட்டல்களை பொறுத்தவரை கடந்த 3 மாதங்களில் பல திருமண ஏற்பாடுகள் ரத்துச் செய்யப்பட்டு, முன்பணத்தை திருப்பிக் கொடுக்கும் நிலை ஏற்பட்டதாம். அதனால் அவற்றுக்கும் பெரிய இழப்பாம். 

“திருமணம் செய்பவர்களும் எளிமையான இடங்களை கண்டுபிடித்து, செலவைக் குறைத்து, சுருக்கமாக செய்ய நினைக்கிறார்கள்” என்கிறார் மோகன். 

கொரொனாவிலும் மாறாத தமிழர் குணங்கள்: 

கொரொனா வந்த பிறகு அவசர அவசரமாக திருமணத்தை செய்தல், குறைந்த செலவில் திருமணங்களைச் செய்தல், ஆடம்பரங்களை தவிர்த்தல் என்று பல மாற்றங்கள் தமிழர் திருமணங்களில் நடந்தாலும், கொரொனாவாலும் மாற்ற முடியாத இலங்கை தமிழரின் குறைகள் சில இன்னமும் அப்படியேதான் இருக்கின்றனவாம். 

அதாவது, சீதனம் வாங்குவது / அரச உத்தியோகத்துடன்  மாப்பிள்ளை தேடுவது / சாதி பார்ப்பது / பிரதேசம் பார்ப்பது போன்ற தமிழர் குணங்கள் மாறவில்லை. எப்படியாவது தமது சாதிக்குள்ளேயே வரன் தேடுகிறார்களாம். சீதனம் இல்லாமல் பெண் எடுப்பதற்கு விருப்பமில்லை. “அத்துடன், தங்கட இடத்துக்குள்ளேயே அதாவது வடமராட்சியில்தான் வேணும், தென்மராட்சியில்தான் வேணும், தீவுப்பகுதியில்தான் வேண்டும்” என்று கேட்பதும் குறையவில்லை என்கிறார் மோகன். “திருமணத்தில பிரதேசவாதம் அதிகம்” என்கிறார் அவர். 

தாதியை, ஒப்பனை பெண்களை நிராகரிக்கும் மாப்பிள்ளைகள்: 

பெண்களைப் பொறுத்தவரை, அவர்களில் பலரும் அரசாங்க மாப்பிள்ளைகள்தான் வேண்டும் என்பார்களாம். அண்மையில் கூட மாப்பிள்ளை(பட்டதாரி, தனியாக தொழில் செய்பவர், மாதாந்தம் பல லட்சம் சம்பாதிப்பவர்) ஒருவரின் ஜாதகம் வந்ததாம். ஆனால், அவ்வளவு வசதியான அந்த நல்ல மாப்பிள்ளையை திருமணம் செய்ய எந்த பெண்ணும் விரும்பவில்லையாம். பியோண் என்றாலும் அரசாங்க பணியில் இருக்க வேண்டும் என்பதுதான் அங்கு இப்போது பெண்களின் விருப்பமாம். 

அதற்கு மாறாக, மாப்பிள்ளைமாரும் மருத்துவ தாதியாக பணியாற்றும் பெண்களை விரும்புவதில்லையாம். டாக்டராக இருந்தால் முன்னுரிமை, ஆனால், தாதி வேண்டாம் என்பார்களாம். அதேபோல ஒப்பனை கலைஞராக பணிபுரியும் பெண்களுக்கும் மாப்பிள்ளை கிடைப்பது கஸ்டமாம்.  

உண்மையில் அண்மைக்காலத்தில் ஒப்பனைக்கலைஞராக வர விரும்பும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். அவற்றுக்காக பயிற்சி பெறும் பெண்களின் எண்ணிக்கையும், ஆர்வமும் அதிகரித்துள்ளதாம். ஆனால், அவர்களை பெண்ணெடுக்க மாப்பிள்ளைகள் விரும்புவதில்லை என்கிறார் மோகன். இத்தனைக்கும் அழகு/ ஒப்பனை நிலையங்களை நடத்தும் பெண்கள் சாதாரண அரச பணியில் உள்ள பெண்களை விட அதிகமாக சம்பாதிப்பதுடன், மூன்று நான்கு பெண்களுக்கு வேலையும் கொடுக்கிறார்களாம். ஆனால், அவர்களை மாப்பிள்ளைகளுக்கு பிடிப்பதில்லை என்பது துரதிர்ஸ்டம். 

வயது கடந்தும் திருமணம் ஆகாமல் காத்திருப்போர்  

உரிய வயதில் திருமணம் செய்யாமல் தவறியதால் திருமணமாகாமல் காத்துக்கிடக்கும் வடக்கு கிழக்கின் மாப்பிள்ளைகளும் பெண்களும் அதிகம் என்கிறார் மோகன். தமது நிறுவனம் இதுவரை 800 க்கும் அதிகமான திருமணங்களை நடத்தி முடித்திருக்க, 40 வயதாகியும் பொருத்தம் வராமல் தேங்கிக்கிடக்கும் ஜாதங்களின் எண்னிக்கையும் அதிகம் என்கிறார் அவர். அதாவது சுமார் 700 பேரின் ஜாதகங்கள் அவ்வாறு தேங்கிக் கிடக்கின்றனவாம். 

அண்மைக்காலமாக பெண்கள் அதிகமாக படிப்பதனால், 40 வயதான ஆண்களை அவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லையால். அல்லது தம்மைவிட அதிகமாக அந்த மாப்பிள்ளைகள் படித்திருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பார்களாம். ஒரு ஆணுக்கு 25 – 33 வயதுக்குள்ளும் பெண்ணுக்கு 22 – 29 வயதுக்குள்ளும் திருமணம் செய்யாவிட்டால், அவர்களுக்கு வரன் பார்ப்பது சிரமமாகிவிடுவதாக மோகன் கூறுகிறார். 

இது ஒரு திருமண ஏற்பாட்டு நிறுவனத்தின் அனுபவமும் கருத்துந்தான். வெவ்வேறு நிறுவனங்களிடம் பேசினால் இன்னும் பல விடயங்களும் தெரியவரும். இந்த விடயங்களில் ஒரு பூரணமான புள்ளிவிபரங்களைப் பெறுவதும் சிரமந்தான். 

ஆனால், ஒருவிடயம் புலனாகின்றது. தமிழர் திருமண போக்குகளிலும் பல மாற்றங்கள் வருகின்றன. அவை நிரந்தரமானதா அல்லது கொரொனா போக அவையும் போய்விடுமா என்றும் இப்போதைக்கு கூறமுடியாது. ஆனால், என்ன வந்தாலும் மாற்ற முடியாத சில குணங்களும் தமிழர்களிடம் இருக்கத்தான் செய்கின்றன. சாதி பார்த்தல், சீதனம் வாங்குதல் போல…