இலங்கை : ஒருபுறம் வேடன், மறுபுறம் நாகம்!

இலங்கை : ஒருபுறம் வேடன், மறுபுறம் நாகம்!

— வி. சிவலிங்கம் — 

சீனா – இலங்கை – அமெரிக்கா

இலங்கை மிகப் பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. ஒரு புறத்தில் ‘கொரொனா’ தொற்று நோயின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஏற்கனவே மிகவும் பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரம், மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நாட்டின் செலவினங்களைச் சமாளிப்பதற்கு உள்நாட்டு வருமானம் போதியதாக இல்லை. உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், இறக்குமதியும் தடுக்கப்பட்டுள்ளதால் நிலமை மோசமான நிலையிலுள்ளது. 

இந்த நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டுமெனில் இலங்கை கடன்களைப் பெற வேண்டும். ஏற்கனவே கடன்களுக்கான வட்டியையே செலுத்த முடியாத நிலையில் மேலும் கடன்களைப் பெறுவது என்பது மிகவும் சிக்கலானது. இலங்கையின் இவ்வாறன நெருக்கடியினை உலகின் ஆதிக்கம் நிறைந்த நாடுகள் பயன்படுத்துவதற்கான ஒரு தருணமாகவே இப்போது  உள்ளது.  

ஒரு காலத்தில் இலங்கை உள்நாட்டுப் போருக்குள் சிக்கி, மீளமுடியாத நிலையில் இருந்த வேளை அமெரிக்கா, இந்தியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் கடன்களையும், ஆயுதங்களையும் வழங்கிப் போரை முடிவுக்குச் செல்ல உதவின. இதன் விளைவாக இலங்கை உலக வல்லரசு நாடுகளின் செல்வாக்கு மண்டலத்தில் சிக்கியது.  

இவ்வேளையில் தமிழ் மக்களால் நடத்தப்பட்ட ஜனநாயக உரிமைக்கான கோரிக்கைகள் சர்வதேச சதியாக வர்ணிக்கப்பட்டன. தமிழ் அரசியல் தலைமைகள் நாட்டைத் துண்டாட முயற்சிப்பதாகவும், இதற்கு மேற்குலக நாடுகள் உதவுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டன. ஆனால் உண்மையில் யார் அந்நிய நாடுகளின் வலைக்குள் நாட்டை எடுத்துச் சென்றார்கள்? உள் நாட்டுப்போரை யார் உக்கிரப்படுத்தினார்கள்? ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்தியாவில் அகதிகளாக தங்கும் நிலை யாரால் ஏற்பட்டது?  

இலங்கையின் கடந்த கால அரசுகள் இன வக்கிரங்களை உக்கிரப்படுத்தியதன் விளைவாக இந்தியா நுழைந்தது. போரை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றின் பின்னணியில் நோர்வே அனுசரணையாளராக அழைக்கப்பட்டது. தற்போது போர்க்காலத்தை விட மிக மோசமான வெளிநாட்டு பூகோள அரசியல் நிலமைக்குள் நாட்டின் பெருந்தொகையான கடன் சுமை புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.  

பொம்பேயோ விஜயம் 

தற்போது அமெரிக்காவின் பிரதான இரு அமைச்சர்கள் ஆசிய நாடுகளை நோக்கி வந்துள்ளனர். தற்போது இந்தியா வந்துள்ள அமெரிக்க ராஜாங்க அமைச்சர் மைக் பொம்பேயோ, மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் ரி எஸ்பர் என்போரே அவர்களாவர்.  

சம காலத்தில் அமெரிக்காவின் பிரதான அமைச்சர்கள் இருவர் ஆசியாவை நோக்கி வருவதும், குறிப்பாக இன்னும் சில நாட்களே அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் இருக்கையில் இவர்கள் இந்தியா, இந்தோனேஷியா,  மாலைதீவு, இலங்கை போன்ற நாடுகளுக்கு வருவதன் பிரதான காரணம் என்ன? வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் அவதானிக்கும்போது தற்போது இலங்கை வரவுள்ள அமெரிக்க ராஜாங்க அமைச்சர் மைக் பொம்பேயோ அவர்கள் அடுத்த முறை அமெரிக்க செனட் சபைக்குக் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

சில விடயங்களை கசிய விட்ட இலங்கை 

கடன் தொல்லைக்குள் மூழ்கியுள்ள இலங்கை அரசு இந்த அமைச்சர்களின் வருகை காரணமாக உள்நாட்டில் எழக்கூடிய அரசியல் எழுச்சிகளை அமைதிப்படுத்தும் வகையில் சில செய்திகளைக் கசியவிட்டுள்ளது. இச்செய்திகளை அவதானிக்கும்போது உள்நாட்டில் அமைதியற்ற நிலை ஏற்படலாம் என்பதை அரசு முன்கூட்டியே அறிந்திருப்பதாக அல்லது அமெரிக்க மற்றும் உலக செய்தி நிறுவனங்களுக்குத்  தமது நிலைப்பாட்டை முன்கூட்டியே தெரியப்படுத்தி அமெரிக்க அணுகுமுறைகளைச் சாந்தப்படுத்தும் நோக்கமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  

இலங்கையில் வெளிவரும் ஊடகங்களின் கருத்துப்படி அமெரிக்க அமைச்சர்கள் எதனை இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டமைச்சர் என்போரிடம் எதிர்பார்ப்பார்கள் என்பதனையும், அதற்கான தமது பதில்கள் எதுவாக இருக்கும் என்பதையும் செய்திகளாக கசியவிடப்பட்டுள்ளன. இச்செய்திகளின்படி இலங்கை அரசு தாம் ஓர் பலமான தரப்பிலிருந்து பதில்களை வழங்குவது போல காண்பிக்க முயற்சிப்பதாக தெரிகிறது. ஆனால், நாடு மிகவும் கடன்சுமையில், உள்நாட்டு அபிவிருத்தி குன்றி பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுக்கையில் இவ்வாறு பதிலளிப்பார்களா? என்பது சந்தேகமாகவே உள்ளது. 

உதாரணமாக, அமெரிக்க தரப்பினர் இலங்கை அரசிடம் மிக நேரடியாகவே சீனாவுடனான உறவுகளை மீள் பரிசீலனை செய்யுமாறு கோருவார்கள் எனவும். அமெரிக்காவின் ஆலோசனைகளின் அடிப்படையில் இலங்கையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை மாற்றி அமைக்குமாறு கோரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவின் கடனுதவிகளால் மேற்கொள்ளப்படும் திட்டங்களைத் தொடராமல் வேறு நாடுகள் மற்றும் உலக நிதி நிறுவனங்களின் உதவியைப் பெறுமாறு கோருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல, அமெரிக்காவுடன் தற்போது மேற்கொள்ளப்படவுள்ள எம் சி சி அதாவது மிலேனியம் நிதி 480 மில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமெரிக்கா நிர்ப்பந்தித்தால்  தமது நிலைப்பாடு எவ்வாறு அமையும் என்பதை விபரித்த விதம் கவனத்திற்குரியது. 

அமெரிக்கா எமக்கு கற்றுத்தரத் தேவையில்லை 

பிரதமர், ஜனாதிபதி, வெளிநாட்டமைச்சர் என்போர் அமெரிக்க ராஜாங்க அமைச்சரிடம் இலங்கை அரசை எவ்வாறு நடத்துவது? என்பதை வெளிநாட்டவர்கள் எமக்குக் கற்றுத்தரத் தேவையில்லை என்பார்கள் எனவும், மிலேனியம் நிதி தொடர்பாக வற்புறுத்தினால் தாம் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விதந்துரையை மேற்கோள் காட்டப்போவதாகவும், அதாவது தற்போதுள்ளதை முழுமையாக நிராகரிக்க வேண்டும். இல்லையேல் திரும்பவும் பேச்சுவார்தை நடத்தி இலங்கைச் சட்டங்களுக்கும், அரசியல் யாப்பிற்கும், அரசியல், சமூக, பொருளாதார யதார்த்தத்திற்கும் ஏற்றவாறானதாக மாற்றவேண்டும் எனத் தெரிவிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தகவல்களைப் பார்க்கும்போது தாம் ஓர் பலமான நிலையிலிருந்து பதிலளிப்பது போல மக்களுக்குக் கூற விழைகின்றனர்.    

இலங்கை சீனாவின் கடன் பொறிக்குள் தள்ளப்படுவது தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகளில் இலங்கையின் சீனக் கடன் என்பது அமெரிக்கா சீனாவிடம் பெற்ற கடன்களை விட மிகச் சிறிய தொகை எனவும் உதாரணமாக இலங்கையின் சீனாவுக்கான கடன் 5.6 பில்லியன் டொலர்கள் எனவும், ஆனால் அமெரிக்காவின் சீனாவுக்கான கடன் 55 பில்லியன் எனவும் குறிப்பிட்டுத் தமது கடன் என்பது மிகச் சிறிய தொகை எனக் கூறித் தட்டிக் கழிக்கும் ஓர் பாங்கு அரசின் போக்கில் உள்ளது.  

ஆனால் அமெரிக்காவினால் அக்கடனைத் திருப்பிச் செலுத்த முடியும். இலங்கையால் முடியுமா? என்பதே கேள்வியாகும். இங்கு கடன் தொகை பற்றியது அல்ல பிரச்சனை. இலங்கை அரசின் ஏனைய பிரச்சனைகள் குறித்துப் பார்க்கையில் இலங்கை மிக ஆழமான நெருக்கடியை நோக்குகிறது என்பது வெளிப்படையாகும். உதாரணமாக, கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி சீனாவின் கம்பனி ஒன்றினால் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான முதலீடு 1.4 பில்லியன் அமெரிக்க டொலராகும். தற்போது ஏற்பட்டுள்ள அமெரிக்க- சீன வர்த்தக மோதல்களினால் இந்தச் சீனக் கம்பனி அமெரிக்க வர்த்தக தடைகளுக்குள் சிக்கியுள்ளது. இதனால் இந்த அபிவிருத்தி தொடருமா? என்பது கேள்வியாகும்.  

இலங்கை – அமெரிக்க வருமானம் 

இலங்கையின் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி என்பது வருடாந்தம் 2.5 பில்லியன் டொலர்களாகும். இது இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியின் 3 சதவீதமாகும். இலங்கையின் ஆடைகள் ஏற்றுமதியின் தனிச் சந்தையாக அமெரிக்க உள்ளது. அத்துடன் அமெரிக்க ஏற்றுமதிச் சலுகையும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதால்தான் ஏனைய நாடுகளுடன் இலங்கை உற்பத்தி போட்டியிட முடிகிறது.  

அது மட்டுமல்ல, அமெரிக்கா நாட்டின் ஜனநாயக கட்டுமானங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்துகிறது. தேசிய இனப் பிரச்சனையில் காத்திரமான முடிவுக்குச் செல்லுமாறு அமெரிக்கா வற்புறுத்தினாலும், அப் பிரச்சனைக்கு நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு ஏற்புடைத்தான தீர்வையே தாம் வழங்குவதாக கூறவுள்ளார்கள்.  

இராணுவ ஒப்பந்தங்களும்இலங்கையின் இறையாண்மையும் 

இலங்கை அரசு தனது இறையாண்மை குறித்து பெரும் பிரசங்கம் செய்கிறது. இந்த இறையாண்மை என்பது உண்மையில் எவ்வாறான நிலையிலுள்ளது? என்பதை நாம் அவதானித்தால் நாடு எற்கனவே தனது இறைமையை இழந்து விட்டதை நாம் காணலாம். ஒருவேளை உள்நாட்டு நுகர்வுக்காக அவ்வாறான ஒன்று இருப்பதாகக் கூறிக்கொண்டாலும் நிலமை அவ்வாறில்லை.  

இலங்கை அரசு இரண்டு பிரதான இராணுவ ஒப்பந்தங்களை அமெரிக்காவுடன்  செய்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் குறித்து அரசின் தலைவர்கள் தமது பதவிக் காலங்களில் பொதுமக்களுக்கு மிகவும் மறைத்தே வந்தனர். ஐ தே கட்சி பதவியிலிருந்த போது இவ்வாறான ஒப்பந்தங்கள் நாட்டின் இறைமைக்கு மிகவும் ஆபத்தானது எனக் கூறி பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியவர்கள் பின்னர் தாம் பதவிக்கு வந்த வேளையில் அந்த ஒப்பந்தங்களுக்கு அவர்களே ஒப்பமிட்ட வரலாறு தற்போது வெளிவந்துள்ளது.  

இராணுவ ஒப்பந்தம் –

இந்த ஒப்பந்தம் கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவை ஒப்பந்தம் (Acquicition and Cross Servicing Agreement – ACSA) எனப்படுவதாகும். இந்த ஒப்பந்தம் 2007ம் ஆண்டு மார்ச் 5ம் திகதி காலாவதியாகியது. அவ் வேளையில் நாட்டின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஸவும், பாதுகாப்புச் செயலாளராக இன்றைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவுமே ஒப்பந்தத்தினை மேற்கொண்டனர். இவை பற்றி இவர்கள் யாருடனும் விவாதித்தில்லை. போரைக் காரணம் காட்டி ஒப்பந்தத்தினை மேற்கொண்டார்கள்.  

இந்த ஒப்பந்தம் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் திகதி 10 வருடங்களின்  பின்னர் புதுப்பிக்கப்பட்டது. இதனை மைத்திரி- ரணில் தலைமையிலான அரசே புதுப்பித்தது. அந்த வேளையில் மந்திரி சபையில் மிகவும் அவசர அவசரமாக சமர்ப்பிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது. அந்த வேளையில் நாட்டின் பிரதான இராணுவ உயர்  அதிகாரிகளிடமும் இவ் விபரங்கள் குறித்துக் கலந்துரையாடப்படவில்லை. அப்போது எதிர்க்கட்சியாக செயற்பட்ட மகிந்த தரப்பினரும் ஆரவாரிக்கவில்லை. ஏனெனில் அந்த ஒப்பந்தத்தை அவர்களே முதலில் ஏற்றனர். அவ் வேளையில் அரசின் அமைச்சரவையிலிருந்த மங்கள சமரவீர அவர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார். இருப்பினும் அவ் ஒப்பந்தம் நாட்டிற்கு ஆபத்து எதனையும் தராது எனக் கூறப்பட்டது. அவ்வாறு ஆபத்து இல்லையெனில் ஏன் அதன் மூலப் பிரதியை நாட்டு மக்களுக்கு மறைக்கிறீர்கள்? என அவர் வினவியுள்ளார்.  

இந்த ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதங்கள் ஏற்பட்ட வேளையில் தாம் 2007இல் இருந்த அதே ஒப்பந்தத்தையே புதுப்பித்ததாக ரணில் தெரிவித்தார். ஆனால் மகிந்த தரப்பினர் தாம் 2007 இல் ஒப்பமிட்ட பத்திரம் 8 பக்கங்களைக் கொண்டிருந்ததாகவும், தற்போது அது 83 பக்கங்களாக எவ்வாறு மாறியது? எனக் கேட்டார்களே தவிர தாம் கையொப்பமிட்ட 8 பக்கங்களில் எவை இருந்தன? என்பதை மறைத்து பக்கங்களின் தொகை மாறுதல்களையே விவாதமாக்கினர். இங்கு எமது கவனத்திற்குரியது எதுவெனில் 2007 இல் மக்களின் இறைமைக்கு ஆபத்து எனக் குரலிட்ட   அவர்களே அந்த ஒப்பந்தத்தின் பிதாமகர்கள் என்பது மறைக்கப்பட்டது. 

இராணுவ ஒப்பந்தம்- 

இந்த ஒப்பந்தம் ‘படைகளின் நிலை ஒப்பந்தம்’ (Status Of Forces Agreement – SOFA) என்பதாகும். இந்த ஒப்பந்தமும் புதிதானது அல்ல. ஆரம்பத்தில் 1995 இல் கைச்சாத்திடப்பட்டது. பின்னர் இந்த ஒப்பந்தத்தினை மேலும் சீரமைக்கும் பொருட்டு அமெரிக்க வெளிநாட்டமைச்சு கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதன் புதிய வரைபை இலங்கை அரசிற்கு அனுப்பி வைத்தது. இவ் வரைபின் நோக்கம் இலங்கைக்கு வரும் அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கும் ஏற்பாடுகள் குறித்த ஓழுங்கு முறைகளை விபரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

அதன் உள்ளடக்கத்தின் விபரங்களை நோக்கினால் அவை அமெரிக்க பாதுகாப்பு படையினர், சிவில் அதிகாரிகள்,  அமெரிக்க சேவை ஒப்பந்தகாரர்கள், மற்றும் இலங்கையரல்லாத தொழிலாளிகள் தொடர்பாகவும், அமெரிக்க கப்பல்கள் பயிற்சிக்காக அல்லது மனிதாபிமான உதவிகளுக்காக துறைமுகத்திற்கு வரும் வேளையில் மேற்கொள்ள வேண்டிய ஒழுங்குகள் பற்றியும் அது பேசுகிறது. 

இருப்பினும் நாம் இந்த ஒப்பந்தத்தின் பிரதான கூறுகள் சிலவற்றை ஆராயும் போது இதன் உள்ளடக்கம் வேறுபட்டுச் செல்வதை அவதானிக்கலாம்.  

உதாரணமாக அமெரிக்க பாதுகாப்பு படையினர் இலங்கையில் நிற்கும் வேளையில் அவர்களுக்கு இராஜதந்திர கௌரவம், பிரத்தியேக தனித்துவ வசதிகள், நிர்வாக, இராஜதந்திர மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கான விஷேட ஏற்பாடுகள் குறித்துக் கவனிக்கலாம்.  

–           அமெரிக்க அதிகாரிகள் தமது உத்தியோகபூர்வ கடமைகளை மேற்கொள்ளும் வேளையில் தமது சீருடைகளை அணியவும், ஆயுதங்களை எடுத்துச் செல்லவும் உள்ள உரிமை. 

–           இலங்கைக்குள் பிரவேசிக்கும் வேளையில் அமெரிக்க அடையாள அட்டை மட்டுமே போதுமானது. அதாவது கடவுச் சீட்டு அவசியமற்றது என்பதாகும். 

–           இலங்கைக்குள் நுழைவதற்கு அவர்களுக்கு விசா அனுமதி தேவையில்லை. 

–           அமெரிக்க கப்பல்கள், வாகனங்கள், விமானங்கள் போன்றன நாட்டை விட்டு சுதந்திரமாக எவ்வேளையிலும் வெளியேற அனுமதியுண்டு. 

–           அமெரிக்கர்களது சுதந்திர நடமாட்டம் குறித்து பொலிசார் பரிசோதிக்க முடியாது.    

–           அத்துடன் நாட்டுக்குள் எடுத்தவரும் பொருட்களுக்கு வரி அறவிடுதல் அல்லது பரிசோதனை செய்தல் போன்றன விதிக்க முடியாது.  

இந்த ஒப்பந்தத்தினையும் இலங்கை கைச்சாத்திட வேண்டும். இந்த ஒப்பந்தத்திற்கான பின்புலம் என்பது மிகவும் சிந்திக்க வைக்கிறது. 2017ம் ஆண்டு இலங்கையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இலங்கையால் அதனைக் கையாள முடியாது என்ற நிலையில் அமெரிக்க உதவியை நாடினார்கள். அவ்வாறு அமெரிக்க இராணுவம் இலங்கைக்கு வந்தபோது அரசாங்கத்தின் சில நடைமுறைகள் உதவிகள் விரைவாக மக்களிடம் அடைவதற்குத் தடையாக அமைந்தன.  

வெள்ளப் பெருக்குக் காரணமாக இலங்கை அரசே அமெரிக்கர்களை அழைத்தது. அவர்கள் வந்தபோது உதவிகள் சென்றடைய நிர்வாகச் சிக்கல்கள் இருந்தமையால் எதிர்காலத்தில் அவ்வாறான நிலமைகள் ஏற்படாமல் தடுப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என அமெரிக்க தூதுவர் விளக்கம் அளிக்கிறார். இந்த ஒப்பந்தம் குறித்தும் இலங்கை சில தகவல்களை மட்டுமே வெளியிட்டுள்ளது.  

இந்த ஒப்பந்தங்கள் தொடர்பாக இலங்கை அரசு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட செய்திகளை மக்களுக்கு வழங்குவதன் பின்னணியில் பல சந்தேகங்கள் எழுகின்றன. நாட்டின் இறைமையின் பாதுகாவலர்கள் எனத் தம்மை வர்ணிக்கும் இன்றைய ஆட்சியாளர்கள் மேலும் பல சிக்கல்களை எதிர்நோக்கலாம் எனத் தெரிகிறது.  

இலங்கை அமெரிக்க தளமாகுமா? 

வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் அமெரிக்கா ‘டியாகோ காஸியா’ விலுள்ள தனது இராணுவத் தளத்தைக் கைவிட்டு புதிய தளங்களை நோக்கிச் செல்வதாகவும், அதனடிப்படையில் இலங்கையை அமெரிக்க தளமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் சந்தேகம் எழுப்பப்படுகிறது.  

நாம் ஏற்கனவே குறிப்பிட்ட SOFA ஒப்பந்தம் என்பது அவ்வாறான ஓர் தளத்தை உருவாக்குவதற்கான சில முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆரம்பமாகவே உள்ளது. ஏனெனில் இந்த ஒப்பந்தம் சில நிர்வாகச் சிக்கல்களைக் களைவதற்காகவே என விளக்கம் அளிக்கப்படுகிறது. அரசும் அவ்வாறான விளக்கத்தை நோக்கிச் செல்லக்கூடும்.  

இங்குள்ள பிரச்சனைக்குரிய அம்சம் எதுவெனில் அமெரிக்காவின் இந்த முயற்சி சாத்தியமானால் இலங்கையின் நீண்டகால பாதுகாப்பு எவ்வாறு அமையப் போகிறது?  ஏதாவது பிரச்சனை அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் அல்லது ஈரானுக்கும் இடையே மோதல்  ஏற்படின் அமெரிக்க படைகளுக்குத் தங்க அனுமதித்துள்ள இலங்கை போரிற்குள் நேரடியாகவே இழுத்துச் செல்லப்படும்.  

இலங்கை வெளியுறவுச் செயலர் கருத்து 

இப் பிரச்சனை குறித்து இலங்கையின் வெளிநாட்டமைச்சின் செயலாளரின் கருத்து எதிர்கால ஆபத்துகளை அடையாளம் காட்டுவதாகவே அமைந்துள்ளது.  

வெளியுறவு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல். பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே அவர்களின் கருத்துப்படி இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மாற்றமடைந்து செல்வதாகவும், சர்வதேச அதிகார சக்திகளான அமெரிக்கா, இந்தியா, சீனா, அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகார விளையாட்டு எல்லைக்குள் இலங்கை வந்துள்ளதாகவும், இலங்கை மேல் கவனங்கள் குவிந்துள்ளதாகவும், இதிலுள்ள பல விளையாட்டாளர்கள் இலங்கையைப் போர்க்களமாக்க முயற்சிப்பதாகவும், தாம் இவற்றை முடிந்த வரையில் தவிர்க்கவே முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.  

இலங்கை வெளிநாட்டமைச்சின் செயலாளர் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களுக்கும், உள் நாட்டில் காணப்படும் போக்குகளுக்குமிடையே பல வேறுபாடுகள் காணப்படுகின்றன.  

முதலில் அவரது கருத்துப்படி இலங்கை தொடர்ந்தும் கூட்டுச் சேராக் கொள்கையை பின்பற்றுவதோடு, அதில் நடுநிலையாகவே இருக்கப் போவதாக கூறுகிறார். இலங்கையில் அமையும் அரசுகளின் தொடர்ச்சியான வெளிநாட்டுக் கொள்கைகளின் தொடர்ச்சியாக இல்லாமல் தற்போதைய அரசு தமக்கென ஓர் வெளிநாட்டுக் கொள்கையைக் குறைந்த பட்சம் எதிர்க்கட்சிகளோடுகூட கலந்துரையாடாமல் தன்னிச்சையாக நடுநிலைப் போக்கு என அறிவிப்பது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. நடுநிலை என்பது எவ்வாறு அமையும்? என்ற கலந்துரையாடல்களும் இதுவரை இல்லை.  ஒரு புறத்தில் சீனாவின் முதலீடுகளைப் பெருமளவில் பெறும் இலங்கை அம் முதலீடுகளுக்கான பாதுகாப்பை நடுநிலமை எனக் கூறிக்கொண்டு எவ்வாறு பாதுகாப்பை வழங்குவது? ஏற்கனவே குறிப்பிட்ட இராணுவ ஒப்பந்தங்கள் அமெரிக்க இராணுவத்தின் இருப்பிடமாக இலங்கையை மாற்றும் அனுமதியை வழங்கிய பின் அமெரிக்க- சீன தகராறில் நடுநிலமை என்பது அர்த்தமற்றதாகிறது.  

இலங்கையின் புதிய வெளிநாட்டுக் கொள்கை 

செயலாளர் ஜெயநாத் கொலம்பகே இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை 5 பிரதான அம்சங்களைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் அவையாவன. 

–           தொடர்ந்தும் நடுநிலை வகித்தல்.  

–           அதிகார போட்டியிலிருந்து விலகி நிற்றல். 

–           சகல நாடுகளுடனும் நட்பைப் பேணுதல். 

–           சகல நாடுகளுடனும் சகல வழிகளிலும் அபிவிருத்தி உறவுகளை மேற்கொள்ளல். 

–           இந்தியாவின் பூகோள நலன்களைக் கவனத்தில் கொண்டு செயற்படுதல். 

என்பதாகும்.  

இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசு தமக்கென புதிதான வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்க முடியாது. ஏனெனில் கடந்த 72 ஆண்டுகளாக இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் பல்வேறு விதங்களில் மாறிச் சென்றுள்ளன. ஐ தே கட்சி பதவியிலிருந்த வேளை அமெரிக்க ஆதரவாகவும், அதனால் இந்திய எதிர்ப்புகளையும் சம்பாதித்து இந்திய சமாதானப் படைகள் இலங்கைக்குள் பிரவேசிக்க வழி ஏற்பட்டது.  

அதே போலவே திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கா பதவியிலிருந்த வேளை சீனாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணிய வேளையில் இந்தியாவுடனும், இதர கூட்டுச் சேரா நாடுகளுடனும் நெருக்கமான உறவுகளைப் பேணினார்.  

இவை யாவும் உலக அளவில் நாடுகள் அமெரிக்க, சோவியத் பிளவுகளின்(பனிப்போர் காலகட்டம்) அடிப்படையில் ஆரம்ப காலங்களில் தமது வெளிநாட்டுக் கொள்கையை வகுத்தன. தற்போது நிலமைகள் அவ்வாறில்லை. தற்போது சீனாவும் அந்த அதிகாரப் போட்டிக்குள் வந்துள்ளது. ராஜபக்ஸ அரசுகள் தமது ஆட்சிப் பலத்தை உறுதி செய்யும் நோக்கில் சீனாவிடம் பெரும் தொகைகளைக் கடன் பெற்றனர். சீனாவின் கடன்களுக்கு வட்டி அதிகம். ஆனால் கட்டுப்பாடுகள் குறைவு. இதனால் அக் கடன்களை விரும்பிய விதத்தில் ஊழல் செய்வதற்கு வசதி ஏற்பட்டது. ஆனால் மேற்குலக கடன்கள் ஜனநாயகம், மனித உரிமை மற்றும் பல கட்டுப்பாடுகள் உண்டு. அத்துடன் அவை நீண்ட கால, குறைந்த வட்டி உடையனவாகவும் உள்ளன. அத்துடன் பணம் பயன்படுத்துவதில் கண்காணிப்பு உண்டு.  

ஜனநாயகம், மனித உரிமை குறித்து இலங்கை அரச தரப்பினர் தற்போது கவலைப்படுவதில்லை. நாட்டின் அபிவிருத்தி பற்றியே பேசுகின்றனர். ஆனால் பல சந்ததிகள் வரை வரி செலுத்தும் வகையில் கடன் பெறும் இந்த ஆட்சியாளர்கள் 5 அல்லது 10 வருடங்களில் பதவியிலிருந்து ஒதுங்குவர். ஆனால் சாமான்ய மக்களே சந்ததி சந்ததியாக வரிகளைச் செலுத்தி தமது வாழ்வைத் தொலைப்பார்கள்.  

வாசகர்களே! 

இலங்கையில் நிலவும் சமூக, பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்க இலங்கை ஆட்சியாளர்கள் சீனாவையே பெரிதும் நம்புகின்றனர். இலங்கையின் ஏற்றுமதிகள் மேற்குலக நாடுகளிற்கு அதிகளவில் செல்லும் நிலையில் ஏற்கனவே குறிப்பிட்டது போல, இலங்கை சீனா பக்கம் சரியுமானால் மேலும் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. 

தற்போது அமெரிக்க- இந்திய உறவுகள் மிகவும் பலமடைந்துள்ளன. அமெரிக்கா, இந்தியா, யப்பான், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் தற்போது நாற்கோண வியூகம் வகுத்துச் செயற்படுகின்றன. தென் கிழக்கு ஆசியாவிலுள்ள சிறிய நாடுகள் இப் பயில்வான்களின் போட்டிக்குள் சிக்குண்டுள்ளன. சமீபத்தில் மாலைதீவு அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இதனை இந்தியாவும் வரவேற்றுள்ளது. ஒரு புறத்தில் இந்திய – சீன தகராறுகள் போரை நோக்கிச் செல்லும் நிலையில் இலங்கை தனது பொருளாதார நோக்கங்களுக்காக தனது நீண்ட காலப் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளாது சீனாவுடன் இணைவது நாட்டின் நலனுக்கு உதவுமா? என்பது பிரச்சனைக்குரியது. 

ஏற்கனவே இலங்கையின் வெளிநாட்டுச் செயலாளர் தெரிவித்த 5 அம்சங்களும் சரியான சமநிலையில் பேணப்படாவிட்டால் இந்த வெளிநாட்டுக் கொள்கை என்ற விளையாட்டில் தோற்றுவிடுவோம் எனவும் அவர் எச்சரித்திருந்தார். அத்துடன் இலங்கையின் கடந்தகால வரலாற்றினை கவனத்தில் கொண்ட அவர், இலங்கை பல தடவைகளில் முன்னேற்றத்திலிருந்து பின்னோக்கிச் சென்றுள்ளது என்றுள்ளார். உள்நாட்டில் முரண்பாடுகள் தோன்றும் வேளையில் ஒவ்வொரு தடவையும் கூட்டுச் சேராக் கொள்கையிலிருந்து இலங்கை விலகிச் சென்றதாக குறிப்பிட்ட அவர், “இலங்கைக்கு ஒரு நாடு சரிவரவில்லை எனில் இன்னொரு நாட்டை தெரிவு செய்யும் ஆடம்பரமான தெரிவு நிலை இல்லை என்பதால் இதில் ஓர் சமநிலையைப் பேணுவது அவசியமாகிறது. அதுவே ஒரே வழி” என்றும் வலியுறுத்தியுள்ளார்.