லண்டன் தமிழர் மத்தியில் கொரொனா கால வீட்டுவன்முறைகள்

லண்டன் தமிழர் மத்தியில் கொரொனா கால வீட்டுவன்முறைகள்

— சீவகன் பூபாலரட்ணம் —

(லண்டனில் செயற்படும் ‘தமிழ் சமூக நடுவம்’ அமைப்பின் இணைப்பாளரான ராணி நகுலேந்திரம், கொரொனா தொற்று காலத்தில் செய்த சமூக சேவைகளுக்காக லண்டன் ஹவுன்ஸிலோ கவுன்ஸில் “ஹீரோ விருது(கதாநாயகி விருது)” அறிவித்து கௌரவித்துள்ளது. அவர்களது அமைப்பின் பணி குறித்து ராணி மற்றும் அந்த அமைப்பின் தொண்டர்களில் ஒருவரான நிர்மலா ராஜசிங்கம் ஆகியோருடன் பேசியதில் கிடைத்த தகவல்கள்

கொவிட் 19 தொற்றுக்காலத்தில் பிரிட்டனில் தமிழர் மத்தியில் வீட்டு வன்முறைகள் மோசமாக அதிகரித்துள்ளதாக இங்குள்ள சமூக அமைப்பு ஒன்று கூறுகின்றது. 

லண்டனில் ஹரோ, பிரண்ட், ஈலிங், நியூஹாம், ஹவுன்ஸிலோ  போன்ற பகுதிகளில் தமிழர்கள் மத்தியில் பணியாற்றும் ‘தமிழ் சமூக நடுவம்’ என்னும் அமைப்பு, கொரொனா தாக்குதல் ஆரம்பித்தது முதல், அதாவது கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் வீட்டு வன்முறைகள் குறித்து தமக்கு 500 – 600 முறைப்பாடுகள் வந்துள்ளதாக கூறுகின்றது.  

“உண்மையில் எம்மிடம் வந்த முறைப்பாடுகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவை, அவை, நடந்த சம்பவங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே இருக்கும்” என்றே தாம் மட்டிடுவதாக தமிழ் சமூக நடுவத்தின் இணைப்பாளரான ராணி நகுலேந்திரம் கூறுகிறார்.  

“நாம் சொல்லும் இந்த எண்ணிக்கை எமக்கு கிடைத்த புதிய முறைப்பாடுகள், அதாவது புதிய ஆட்களிடம் இருந்து வந்த முறைப்பாடுகள், எம்மிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்தவர்களும் பலர் இந்தக் காலத்தில் வீட்டு வன்முறைகள் குறித்து திரும்பவும் முறைப்பாடு செய்துள்ளனர். அவற்றை சேர்த்துப்பார்க்கும் போது எண்ணிக்கை 1500 ஐ தாண்டிவிடும் என்கிறார் ராணி. 

அனைத்து சமூகங்களிலும் வீட்டு வன்முறைகள் 

உண்மையில் இந்த கொரொனா காலத்தில் லண்டனில் அனைத்து சமூகங்களின் மத்தியிலும் வீட்டு வன்முறைகள் அதிகரித்துள்ளன. ஆங்கிலேயர்கள் மத்தியிலும் வன்முறைகள் இருக்கின்றன. ஆனால், எமது தமிழர்களின் வீட்டு வன்முறைகள் எமது பாணியிலானவை என்கிறார் நிர்மலா ராஜசிங்கம். இவர் இந்த தமிழ் சமூக நடுவத்தில் ஒரு தொண்டராக பணியாற்றுகிறார். இவர் ஒரு கல்வியாளர் மற்றும் சமூக அரசியல் செயற்பாட்டாளரும் கூட.  

“உண்மையில் ஏனைய அனைத்து சமூகங்களிலும் வீட்டு வன்முறைகள் இருக்கின்ற போதிலும், அத்தகைய வீட்டு வன்முறைகளை நியாயப்படுத்தும் ஒரு மனோநிலை தமிழர் சமூகத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது” என்கிறார் நிர்மலா ராஜசிங்கம். 

கொரொனாவுக்கு முன்னமேயே இங்கு வாழும் தமிழர்கள் மத்தியில் வீட்டு வன்முறைகள் குறித்து தமக்கு அதிக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக கூறும் ராணி நகுலேந்திரம், கொரொனா காலத்தில் அனைவரும் வீட்டில் இருக்கும் நேரம் அதிகரித்ததால், ஒருவர் அடுத்தவரைப் பற்றி அறியும் வாய்ப்பு அதிகரிக்க, அதனால் தம்பதிகளுக்கு இடையே இருக்கும் மன இடைவெளி வெளிப்படுகிறது என்றும் இதன் விளைவால் வன்முறை நடக்கிறது என்றும் கூறுகிறார். 

“தாம் தவறான ஆட்களை தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பது அதிக நேரம் ஒன்றாக ஒரே இடத்தில் இருவரும் இருக்கும் போது இருவருக்கும் வெளிச்சமாகிவிடுகிறது. இது வன்முறையில் முடிகிறது” என்கிறார் ராணி. 

மதுவுக்கு அடிமையாதல் 

ஆண்கள் மதுபானத்துக்கு அடிமையாவது வீட்டு வன்முறைக்கான அடுத்த காரணமாக பார்க்கப்படுவதாக கூறுகிறார் ராணி. “சாதாரணமாக மது அருந்துவது என்ற நிலையைத் தாண்டி, பலர் மதுவுக்கு அடிமையாகிவிடுவதும், கொரொனா காலத்தில் அதிக மது அருந்துவதும் வன்முறையை தூண்டுகிறது” என்கிறார் அவர். 

அடுத்த பிரச்சினை உள நலம் குறித்ததாகும். “தமிழர் சமூகத்தின் மத்தியில் உளநலப் பிரச்சினைகளின் யதார்த்தம் குறித்த சரியான புரிதல் கிடையாது” என்கிறார் ராணி நகுலேந்திரம். தமிழ் ஊடகங்கள் கூட உளநல பிரச்சினைகளின் பாரிய தன்மை குறித்து புரிந்துகொள்ளாத நிலையிலேயே செயற்படுகின்றன என்றும் அவர் கோபப்படுகிறார்.  

உளநலம் 

சமூகத்தில் பலர் உளநல பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பதும் அதன் பாரதூரத்தன்மை சரியாக உணரப்படாமல் இருப்பதும் வீட்டு வன்முறைகள் அதிகரிக்க காரணமாவதாக ராணி குறிப்பிடுகிறார். ஒருவரை “பைத்தியக்காரன், விசரன்” என்று திட்டுவதற்கு அப்பால், உளநலம் குறித்த சரியான புரிதல்கள் தமிழர் மத்தியில் குறைவாகவே இருப்பதாக தமிழ் சமூக நடுவத்தின் தொண்டர்கள் கூறுகிறார்கள். இதனால், குடும்பங்கள் பாதிப்புக்கு தீர்வு காணாமல், அவர்களின் நிலை மோசமாவதால் அவை வீட்டுக்குள்  வன்முறையாக வெடிக்கின்றன. இவை தவிர வேறு பல பிரச்சினைகளையும் அவை தூண்டிவிடுகின்றன. 

பிள்ளை வளர்ப்பு முறை 

எமது சமூகத்தில் காணப்படும் பிள்ளை வளர்ப்பு முறையும் குடும்பங்களில் பிரச்சினை உருவாக வழி செய்வதாகவும் ராணி சுட்டிக்காட்டுகிறார். அதாவது ஆண்கள் பொதுவாக தமக்கு பெண்கள் அடிமை என்ற மனப்பான்மையுடன், ஆணுக்கே அனைத்திலும் முன்னுரிமை என்ற மனப்பாங்கிலும் வளர்க்கப்படுவது, அதே போன்று தமது வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் பெண்கள் புதிய இடத்தின் சூழலுக்கு பொருந்திப்போக தவறுவது இருவரிடையேயும் பல பிரச்சினைகளை உருவாக்கிவிடுகின்றன. 

பெண்ணை அவமதித்தல்  

தனது மனைவி வேறு சாதியை அல்லது பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில், அவரை அவரது சாதியை, இடத்தை சொல்லி ஆண்கள் ஏசுவது, அதேநேரம் பெண்களிடம் காணப்படும் அதிக தூய்மையை பேண விளைதல் போன்ற பிரச்சினைகளும் குடும்பங்களில் பிரச்சினைகளாக உருவெடுக்கின்றன.  

வீட்டு வன்முறைகள் இங்கு வாழும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் நடப்பதாக நிர்மலா ராஜசிங்கம் கூறுகிறார். படித்தவன் படிக்காதவன், செல்வந்தன், ஏழ்மையில் உள்ளவன், வயதானவர், இளைஞர் என்று பல தரப்பினரும் வீட்டு வன்முறையில் ஈடுபடுகின்றனர் மற்றும் பாதிக்கப்படுகின்றனர். 

அனைத்துத் தரப்பிலும் பிரச்சினை 

“படித்தவன் பெண்களை கொடுமைப்படுத்த மாட்டான் என்ற கருதுகோள் எல்லாம் பொய்” என்கிறார் நிர்மலா. பல பெரிய படித்த,  தொழில்சார் தகமை உடையவர்கள் எல்லாம் வீட்டு வன்முறையில் ஈடுபவது தமிழர் மத்தியில் அதிகமாக காணப்படுவதாக அவர் கூறுகிறார். பல ஆண்கள் முதல் மனைவிக்கு தெரிந்தோ தெரியாமலோ இன்னுமொரு பெண்ணை வைத்துக்கொள்ளும் போதும் இவை நடக்கின்றன. பல பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார் நிர்மலா ராஜசிங்கம்.  

பல இளைஞர்கள் லண்டனில் ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு, இலங்கையிலும் சென்று ஒரு பெண்ணை திருமணம் செய்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். அப்படி இலங்கையில் இருந்து கொண்டு வரும் பெண்களை கிட்டத்தட்ட ஒரு வீட்டு வேலைக்காரி மாதிரி அவர்கள் நடத்துகிறார்களாம். அந்தப் பெண்களுக்கு வீட்டோடு அல்லது பெற்றோரோடு உள்ள தொடர்புகளை துண்டிக்கிறார்களாம். பெண்களை வேலைக்கு அனுப்பிவிட்டு அவர்களுக்கு நிதிச்சுதந்திரத்தை வழங்காமல், ஒரு அடிமைபோல நடத்தும் தமிழ் இளைஞர்களும் இருக்கிறார்கள் என்று கவலைப்படுகிறார் நிர்மலா ராஜசிங்கம். 

பிரச்சினைகளை கையாளத்தெரியாமை 

“கொரொனாவால் எல்லோரும் ஒன்றாக வீட்டில் இருக்கும்போது பிரஷர் குக்கரில் இருப்பதுபோல பிரச்சினை அழுத்தமாகி வெடித்துவிடுகிறது” என்கிறார் நிர்மலா ராஜசிங்கம். 

பிரச்சினைகளை பேசி தீர்க்காமை, தீர்க்கத்தெரியாமை, அவை குறித்து நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடுவது போன்றவை அவை தீர்க்க முடியாத கட்டத்தை அடைய காரணமாகிவிடுகின்றன. 

பெண்களின் தயக்கம் 

“பல குடும்பங்களில் கணவன் அடித்தாலும் அது குறித்து முறைப்பாடு செய்ய பெண்கள் தயங்குகிறார்கள். குடும்ப மானம், மரியாதை என்று அவர்கள் சும்மா இருத்தல் பிரச்சினையை பெரிதாக்கி விடுகின்றது” என்கிறார் அவர். இங்குள்ள புதிய சூழ்நிலை, மொழி தெரியாமையும் பெண்கள் முறைப்பாடு செய்து தீர்வு காண முயற்சிப்பதற்கு தடையாக இருக்கின்றதாம்.  

அதேவேளை, இலங்கையில் போர், அகதி வாழ்வு போன்ற விடயங்களுக்கு ஊடாக வந்த பெண்களை ஆண்கள் அடிமை கொள்ள முயலும் போது, அவர்கள் கேள்வி கேட்க முனைகிறார்கள் என்றும் அதற்குப்  பதிலாக ஆண்கள் அடிக்கிறார்கள் என்றும் நிர்மலா கூறுகிறார். தமிழ் ஆண்களின் மனதில் நிறைந்துள்ள ஆணாதிக்க சிந்தனையே அவர்கள் குடும்ப வன்முறையில் ஈடுபட காரணம் என்கிறார் அவர்.  

இலங்கையில் இருந்து பெண்களை திருமணம் செய்து இங்கு அழைத்துவரும் ஆண்களுக்கு, தாம் ஏதோ அந்தப் பெண்களுக்கு “வாழ்வு கொடுக்கிறோம்” என்ற சிந்தனை இருப்பதாகக் கூறும் நிர்மலா, அது படு மோசமான சிந்தனை என்றும், திருமணம் என்ற அமைப்பின் சரியான வடிவத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்கிறார். 

குழந்தைகளுக்கு பாதிப்பு 

இந்த வீட்டு வன்முறைகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவது மிகவும் துயரமாகும். தந்தை வன்முறையாளனாக நடக்கும் போது, குடும்ப மானத்தைப் பார்த்து தாய் அமைதியாக இருந்தால், இங்குள்ள பிரிட்டன் சட்டங்களின்படி அதுவும் குற்றம் என்று கூறும் நிர்மலா, உண்மையில் அத்தகைய சூழ்நிலையில் தந்தையை விட்டு விலகி குழந்தையை காப்பாற்ற, அதன் குழந்தைப் பராயத்தை காப்பாற்ற தாய் நடவடிக்கை எடுக்காவிட்டால், அவரும் குற்றவாளியாக காணப்படுவதுடன், அரசாங்கம் அவர்களிடம் இருந்து குழந்தையை பிரித்து எடுத்து, அதற்கான தனியான நல வாழ்வுக்கு ஏற்பாடு செய்யும் நிலை ஏற்படும் என்றும் அவர் கூறுகிறார். 

சில குடும்பங்களின் குழந்தைகளின் சுகவீனமும் கணவன் மனைவியிடையே முரண்பாட்டுக்கு காரணமாகின்றது. பல குடும்பங்களில் குழந்தைகளுக்கு உளநலப்பாதிப்புகள், ஆட்டிசம் போன்ற நிலைமைகள் ஏற்படும் போது அவற்றை பராமரிக்க விருப்பமின்றி தந்தை குடும்பத்தைவிட்டுச் செல்லும் சம்பவங்களும் நடப்பதாக கூறப்படுகின்றது. அதேநேரம் தாய்-தந்தையிடையே நடக்கும் மோதல்களால் மன ரீதியாக பல குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. 5 வயது முதலே வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை குழந்தைகள் உணரத்தொடங்குகின்றன. அதனால், அவற்றின் மனமும் பாதிக்கப்படுகின்றது. 

கலாச்சாரம் பற்றிய தவறான புரிதல் 

தமிழர் கலாச்சாரம் பற்றிய நமது புரிதல் மிகவும் தவறானது என்று கூறும் ராணி நகுலேந்திரம், “வேட்டி கட்டுவதும் சேலை கட்டுவதும் மட்டுந்தான் தமிழர் கலாச்சாரம்” என்ற ஒரு எண்ணம் தமிழர் மத்தியில் இருப்பதாக கூறுகிறார். “இலங்கையில், ஒரு சிறு வேலிக்காகவே பெரும் அடிதடியில் கதைகளை முடிப்பது நமது பழக்கமாக இருக்கிறது. அப்படி இருந்த நமக்கு, இங்கு வந்து புதிய சூழலில் பிரச்சினைகளை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் இருக்கிறது, சிலவேளைகளில் சண்டை பிடிப்பதையே ஒரு சிறந்த செயலாக கருதும் போக்கு நமது தமிழர்கள் மத்தியில் இருக்கிறது. எதனையும் சமரசமாக பேசித்தீர்க்க நமக்கு தெரிவதில்லை. தீர்வைக்காணுவதற்கான வழிகளை நாம் அறிந்திருப்பதில்லை.”  என்கிறார் ராணி. 

“வன்முறை என்பதை ஒரு கலாச்சாரமாகவே நாம் விதைத்துவிட்டோமோ, அடுத்த தலைமுறைக்கும் அதனை கடத்திவிட்டோமே என்கிற வருத்தம் தனக்கு இருப்பதாக” ராணி கூறுகிறார். 

உதவி பெறத்தயக்கம் 

இவற்றுக்கு அப்பால் குடும்ப வன்முறைகள் குறித்த தீர்வுக்கான சேவையை ஒரு குடும்பத்தை பெறச்செய்வதே தமக்கும் தமது தொண்டர்களுக்கும் பெரும் சிரமமாக இருப்பதாகவும் ராணி கூறுகிறார். அதாவது, முதலில் தமது குடும்பத்தில் பிரச்சினை இருப்பதாக முறையிடுபவர்கள், குடும்ப மானம், சமூகப் பார்வை, பெற்றோருக்கு பயப்படல் போன்ற காரணங்களால் தீர்வுக்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயங்குகிறார்கள். ஆனால், இவர்களின் பிரச்சினைகள் முற்றும் போது, ‘உள்ளூராட்சி கவுன்ஸில்’ வன்முறை நடக்கும் குடும்பத்தில் இருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக குழந்தைகளை அகற்ற முனையும். அப்போதே பல பெண்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகிறார்கள். ஆனால், பெரும்பாலான சம்பவங்களின் அப்படி செய்வது காலம் கடந்த நடவடிக்கையாகிவிடுகின்றது என்கிறார் ராணி.  

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரசாங்க சமூக சேவைகள் அமைப்பின் மீது முறைப்பாடு செய்யவரும் குடும்பத்தினர் மிகுந்த பயத்துடன் இருக்கிறார்கள். அது தமது குழந்தைகளை பிரித்து எடுத்துச் சென்றுவிடும் என்று பயப்படுகிறார்கள். ஒரு வன்முறை நடக்கும் குடும்பத்தில் குழந்தைகளை தங்க வைத்திருப்பது, குழந்தைகளின் உளநலத்துக்கும் பாதுகாப்புக்கும் பாதகமாகிவிடும் என்பதே அந்த அமைப்பின் கரிசனையாகும். ஆகவே பிரச்சினைக்காக அவர்கள் காட்டும் வழிகளை குடும்பங்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால், அவர்கள் குழந்தைகளை அந்த தம்பதியிடம் இருந்து பிரித்து, பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுபோகவே விளையும். ஆகவே பிரச்சினைக்கு உள்ளான குடும்பங்கள், உளநல ஆலோசனையை பெறுதல், கணவர் மது போதைக்கு ஆளாகி இருந்தால் அதற்கான சிகிச்சைகளுக்கு ஆலோசனைகளுக்கு செல்லல், பிரச்சினை தீர்வுக்கான ஆலோசனைகளை பெறல் போன்றவற்றை ஏற்று நடக்க முயல வேண்டும். இல்லாவிட்டால், தாய் தகப்பனிடம் இருந்து பிரித்து எடுத்துச் செல்லப்படுவதுடன், அவர்களை போய் பார்ப்பதும் பெற்றோருக்கு சிரமமாகிவிடும். ஆகவே குடும்ப வன்முறைக்கு தீர்வு காண்பதற்கான உதவிகளை குடும்பங்கள் தாமாகவே சென்று தேடிப் பெற முயல வேண்டும் என்கின்றது தமிழ் சமூக நடுவம். 

வீட்டு வன்முறையால் ஆண்களுக்கும் பாதிப்பு 

அதேவேளை, வீட்டு வன்முறையால் ஆண்கள் பாதிக்கப்படும் சம்பவங்களும் நடப்பதாகவும் ராணி குறிப்பிடுகிறார். பெண்கள் பாதிக்கப்படுவதுடன் ஒப்பிடும்போது ஆண்கள் பாதிக்கப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும் ஆண்கள் பாதிக்கப்படுவதையும் கடந்து சென்றுவிட முடியாது என்கிறார் அவர். 

“பெண்களிடம் அடிவாங்கும் ஆண்களும் லண்டன் குடும்பங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள்” என்கிறார் ராணி. உடல் ரீதியான தாக்குதல் மாத்திரமல்லாமல், உளரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆண்களும் அதிகம் என்றும் ஆண்களும் தமது பிரச்சினைகளை இலகுவில் வெளியே சொல்வது கிடையாது என்பதும் பெரும் பிரச்சினைதானாம். தமது துணையுடனான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வழி தெரியாத ஆண்கள் அதிகம் என்கிறார் ராணி.