— சீவகன் பூபாலரட்ணம் —
(மேற்கத்தைய ஆடையலங்கார நிறுவனங்கள் கொள்வனவு உத்தரவுகளை ரத்துச் செய்ததால், பாலியல் தொழிலில் குதிக்கும் ஆடைத்தொழிற்சாலை பெண்கள்.)
கொரொனா தொற்று இப்போதுதான் இலங்கையில் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. அங்கு அடுத்த அலை தீவிரமாக பரவத்தொடங்கினால், சுகாதார ரீதியில் மாத்திரமல்லாமல் பொருளாதாரம், சமூகம் ஆகிய அடிப்படையிலும் பெரும் வீழ்ச்சி உணரப்படலாம் என்று பலராலும் அஞ்சப்படுகின்றது. இத்தனைக்கும் சுமார் பத்து வருடத்துக்கு முன்னதாக உள்நாட்டுப் போரில் இருந்து விடுபட்ட இலங்கை இன்னமும் அதனால் ஏற்பட்ட பொருளாதார அடியில் இருந்து இன்னமும் விடுபடவில்லை. தடுமாறிக்கொண்டிருக்கிறது.
ஆனாலும் இன்னமும் ஒப்பீட்டளவில் இலங்கையில் சமூக மற்றும் பொருளாதார ரீதியான தாக்கம் என்பது ஏனைய சில ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் குறைவுதான்.
உதாரணமாக அந்தப் பிராந்தியத்தை சேர்ந்த இன்னுமொரு நாடான பர்மாவில் கொரொனா தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார அடி என்பது அங்கு சமூக பொருளாதர நிலையில் பெரும் பாதிப்பை ஏற்கனவே ஏற்படுத்தி விட்டது.
உதாரணமாக, இலங்கையைப் போல், வங்கதேசத்தைப் போல் பர்மாவும் ஆடைகளை தைத்து ஏற்றுமதி செய்வதில் அதிக கவனம் செலுத்தும் ஒரு நாடு. அங்கு பல பெண்கள் தமது வருமானத்துக்காக ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள். கொரொனா தாக்கத்தின் பின்னரான அவர்களின் நிலை இப்போது வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியுள்ளது.
இது குறித்து அண்மையில் பிரிட்டனின் “த கார்டியன்” பத்திரிகையில் வெளியான ஒரு செய்தி பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. அந்தத் தகவலை இங்கு சுருக்கித்தருகிறோம்.
மூடப்படும் ஆடைத்தொழிற்சாலைகள்
ஒரு குழந்தையை பிரசவித்த ஹலா என்னும் 19 வயதான பெண், மகப்பேற்றை அடுத்து, 7 மாதங்களுக்கு முன்னதாக தனது பணிக்கு திரும்பியுள்ளார். ஆனால், அங்கு அவருக்கு வேலை நிலைக்கவில்லை. கொரொனா தொற்று காரணமாக மேற்கத்தைய நாடுகளைச் சேர்ந்த பல ஆடையலங்கார நிறுவனங்கள் தமது கொள்முதலுக்கான உத்தரவுகளை ரத்துச் செய்ததால், பர்மாவில் நூற்றுக்கணக்கான ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. அதனால், ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.
பர்மாவின் யங்கூன் நகரை கொரொனா முடக்கம் ஆக்கிரமித்ததால், ஹலாவின் திருமணமும் முறிந்து போனது. கணவன் கைவிட்டு போய்விட்டான். அவரது தந்தையின் ஆட்டோ ரிக்ஷாவுக்கு சவாரி இல்லாததால், அவர் அதனை விற்றுவிட்டார். ஹலாவின் பெற்றோரும் குழந்தையும் பட்டினியில் விழ நேர்ந்தது. இதனால், 5 மாதங்களுக்கு முன்னதாக ஹலா பாலியல் தொழிலில் ஈடுபடத்தொடங்கிவிட்டார்.
பாலியல் தொழிலில் வீழ்ந்தவர்கள்
“எனக்கு சரியான பயமாக இருக்கிறது” என்கிறார் அவர். “எந்த நேரமும் இருட்டில் பணியாற்ற வேண்டியிருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. எனது குடும்பத்தை, அவர்களது உணவை மனதில் வைத்து இந்த தொழிலை நான் செய்ய வேண்டியுள்ளது”.
“கொரொனாவால், தொழில் இழந்து போனதால் பாலியல் தொழிலில் குதித்த பல நூற்றுக்கணக்கான பர்மிய பெண்களின் நிலையை ஹலாவின் கதை பிரதிபலிக்கிறது” என்கிறனர் செயற்பாட்டாளர்கள். கொவிட் 19 பர்மாவின் ஆடைத்தொழிற்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலவிதமான தாக்கங்கள். சீனாவில் தொழிற்சாலைகளை மூடியதால் பெப்ரவரி மாதம் முதலே மூலப்பொருட்கள் கிடைக்காததால், பர்மாவில் தொழிற்சாலைகள் மூடப்பட, பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் பேருக்கு வேலை இல்லாமல் போனது.
பர்மாவின் பலவீனமான சுகாதாரத்துறையை பாதுகாக்க அதிகாரிகள் போராடிக்கொண்டிருக்க, ஏப்ரலில் நடந்த ‘யங்கூனின் முதலாவது ஊரடைப்பு காலத்தில்’ தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. பின்னர் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 21 வரை அடைப்பு.
223 தொழிற்சாலைகள் முற்றாக மூட அல்லது தற்காலிகமாக மூட மற்றும் ஆட்களை பணிநீக்கம் செய்ய விண்ணப்பித்துள்ளதாக ஒரு பிராந்திய அமைச்சர் உள்ளூர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
பெரும் வேலையிழப்பு
ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் நடந்த வேலை இழப்புகளைவிட இப்போது 60 தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், நாற்பதினாயிரம் தொழிலாளர்கள் பணியிழந்துள்ளனர்.
தற்போது வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலையில் ஹலா ஒரு பாலியல் தொழிலாளியாக நாளொன்றுக்கு சுமார் 750 இலங்கை ரூபாய்களை சம்பாதிக்கிறார்.
“தெருவில் ஆண்கள் வருவதற்காக நீண்ட நேரம் காத்துக்கிடப்போம்” என்கிறார் ஹலா. தனது குழந்தையுடன் செலவிட அவருக்கு நேரம் கிடையாது. “இந்த வேலையைச் செய்வதற்காக குழந்தைக்கு தாய்ப் பாலூட்டுவதை முற்றாக நிறுத்திவிட்டேன். இப்போது அதற்கு சோறும், மலிவான பால் மாவும் கொடுக்கிறோம்.”
ஹலாவைப் போல 30 வயதான ஹைனியும் இதே தொழிலில்தான் இப்போது ஈடுபட்டுள்ளார். அவரது கணவரும் ஒரு ஆட்டோ ஓட்டுனர். அவருக்கும் சவாரி இல்லை. வீட்டைவிட்டு போகாதே என்று ஹைனியின் 16 மற்றும் 7 வயதான மகன்மார் அவரை கெஞ்சுகிறார்களாம்.
“என்னை போகவேண்டாம் என்று அவர்கள் அழுகிறார்கள். அழாதீர்கள் என்று சொல்லிவிட்டு நான் போக வேண்டியுள்ளது. அவர்களது வயிற்றுக்காக நான் இதனைச் செய்துதானே ஆகவேண்டும்” என்கிறார் அவர்.
கொடுமைப்படுத்தும் ஆண்கள்
சில ஆண்கள் தமது பாலியல் தேவைகளின்போது கொடுமைப் படுத்துகிறார்களாம். வன்முறையில் ஈடுபடுகிறார்களாம். “காதை திருகுதல், முகத்தில் தாக்குதல் என்று துன்புறுத்துகிறார்களாம். “அவர்கள் என்னை கொன்று விடுவார்களோ என்று தினமும் பயம்தான்” என்கிறார் ஹைனி.
சில நாட்களில் 1100 இலங்கை ரூபாய்கள் வரை கிடைக்குமாம், இல்லையென்றால் வீட்டுக்கு போக பஸ்ஸுக்கும் காசு இல்லாத நிலைதானாம். அப்படி எதுவும் கிடைக்காவிட்டால் நடந்துதான் வீடு போக வேண்டுமாம். குறுக்குப்பாதை வழியாக போகவேண்டும். அங்கு வழியில் ஆண்கள் மறித்து தொல்லை கொடுப்பார்களாம். வீட்டுக்கு போகும் போது, தனது அயலவர்கள் தன்னை அவமதிப்பதாக அவர் கூறுகிறார்.
சிலர் முகத்தை திருப்பிக்கொண்டு போக, ஏனையோர் தரக்குறைவாக நடத்துவார்களாம்.
“என்னைப் பற்றி கிசுகிசுப்பதைவிட, எனது பிள்ளைகளுக்கு அயலவர் கொஞ்சம் சோறு கொடுத்திருக்கலாம்” என்கிறார் கவலையாக.
கொவிட் 19 ஐவிட இன்னுமொரு விடயத்துக்கு ஹைனி நிறைய பயப்படுகிறார். அது எச் ஐ வி. பர்மாவில் உள்ள சுமார் 66,000 பாலியல் தொழிலாளிகளில் 5.6 வீதத்தினர் எச் ஐ வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
48 வயதான நின் நின் யூ, பாலியல் தொழிலாளர்களுக்கான அமைப்பான “மியான்மரில் உள்ள பாலியல் தொழிலாளர்” என்னும் அமைப்பின் ஸ்தாபகர். இந்த அமைப்பு 200 பெண்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தனிப்பட்ட உபயோகப் பொருட்களையும், அங்காடிகளுக்கான பணம் செலுத்தப்பட்ட அட்டைகளையும் கடந்த இரு மாதங்களாக வழங்கியுள்ளது.
சமையல் எண்ணெய் மற்றும் அரிசியுடன் அரசாங்கம் அவ்வப்போது பணக்கொடுப்பனவுகளையும் வருமானம் போதாத குடும்பங்களுக்கு கொடுக்கிறது. ஆனால், பர்மாவில் பாலியல் தொழில் சட்டவிரோதம் என்பதால், இவற்றை பெறுவதற்கான அதிகாரபூர்வ அடையாள அட்டையோ, முழு நேரமாக கம்பனிகளின் வேலை செய்வதற்கான பதிவுகளோ பாலியல் தொழிலாளர்களுக்கு கிடையாது.
அதிகரிக்கும் பெண்கள்
வாடிக்கையாளரின் எண்ணிக்கை குறைந்து வருகின்ற போதிலும், தொற்று நோய் காலத்தில் பெருமளவு பெண்கள் பாலியல் தொழிலில் இறங்குவதாக யூ கூறுகிறார்.
பெரும்பாலும் இந்தக் காலங்களில் மூடப்படும் ஆலைகளில் பணியாற்றிய பெண்களே அதிகம் பாலியல் தொழிலில் நுழைகின்றனர். “அவர்கள் தமது வாடகையை கட்டவேண்டும், குடும்பத்துக்கு சாப்பாடு போடவேண்டும், கடன்களை கட்ட வேண்டும்…” என்கிறார் அவர்.
வீட்டு வன்முறைகள் அதிகரிப்பதோடு, பாலியல் தொழிலாளர் கைது செய்யப்படுவதும் அதிகரிப்பதாக அவர் கூறுகிறார்.
“எங்கேயாவது வெளியே போய், காசு சம்பாதித்து வா” என்று கூறும் கணவன்மார்களாலேயே பல பெண்கள் தாக்கப்படுகின்றனர். “சில இடங்களில் ஆண்கள் பணம் கொடுக்காமல் போய் விடுவதாலும், பொலிஸார் லஞ்சம் கோருவதாலும், கைது செய்வதாக மிரட்டுவதாலும் பெண்கள் பெரும் கஸ்டத்துக்கு உள்ளாகிறார்கள்’ என்றார் யூ.
சட்ட விரோதமும் சிறையும்
பாலியல் தொழிலாளர் பர்மாவில் ஆபத்தில் இருக்கிறார்கள். பெண்கள் பொலிஸுக்கும் பயப்பட வேண்டியுள்ளது. மாறுவேடத்தில் ஆட்களை அனுப்பும் பொலிஸார் இவர்களை கைது செய்தால், இவர்களுக்கு 3 வருட சிறைவரை கிடைக்கலாம்.
“பொலிஸில் இருந்து தள்ளியிருக்கவே நாம் பார்ப்போம்” என்கிறார் ஹலா. கடையடைப்பு மற்றும் ஊரடங்கால், கடந்த இரவு தொழிலே இல்லாமல் வீடு திரும்பியதாகவும், பெரும் விரக்தியில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தெருவெல்லாம் ஆலைகளில் பணியாற்றிய பெண்களால் நிரம்பிக்காணப்படுவதாக இன்னுமொரு பாலியல் தொழிலாளியான 38 வயதான கீ கூறுகிறார். அவர்களில் பலருக்கு இந்தத்தொழிலில் எந்தவிதமான அனுபவமும் கிடையாதாம். நொந்துபோய் இருக்கிறார்களாம். பொலிஸாரின் உளவாளிகளுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் வித்தியாசம் தெரியாததால் அவர்கள் இலகுவாக கைதாகிவிடுகிறார்களாம்.
கைதை தவிர்ப்பதற்காக கீயும் ஏனைய பாலியல் தொழிலாளர்களும் பொலிஸாருடனும் போய்வரவேண்டுமாம். சிறிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டுமாம். அப்படி செய்தால் உளவாளிகள் வரும்போது அவர்கள் தகவல் தருவார்களாம்.
“இதெல்லாம் சேர்ந்துதான் வாழ்க்கை” என்கிறார் அவர்.
பல பெண்கள் தாம் பாலியல் தொழிலாளியாக இருப்பதை வீட்டில் மறைத்து விடுகிறார்கள்.
ஹலா குடும்பத்தை பொறுத்தவரை அவரும் அவரது தாயும் சேர்ந்துதான் இந்த தொழிலையாவது செய்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள். தந்தையிடன் கூறினால், அவர் அடிப்பார் என்று ஹலா நினைத்திருக்கிறார். ஆனால், அவர் இந்த விசயத்தை கேள்விப்பட்ட போது, வாயடைத்து மௌனமாக நின்றாராம்.
கொவிட் 19 என்பது பர்மாவில் இன்னும் அச்சுறுத்தலான விடயமாகவே இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் நோயாளர் எண்ணிகை சில நூறுகளால் அதிகரித்தது. இதுவரை நாற்பதினாயிரம் பேருக்கு அங்கு கொவிட் 19 தொற்றியுள்ளது. அவர்களில் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
“என்னைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனது குடும்பத்துக்கு நோயைக் கடத்தி விடுவேனோ என்பதுதான் எனது கவலை” என்கிறார் ஹலா. “இப்பவே எங்களுக்கு நிறைய பிரச்சினை. நிறைய அனுபவித்துவிட்டோம். யாருக்காவது குடும்பத்தில் தொற்றிவிட்டால், நிலைமை கேட்கவேண்டியதில்லை” என்கிறார் அவர். “எங்களிடம் பணம் இல்லை. ஆகவே யாரும் எங்களுக்கு சிகிச்சையளிக்க மாட்டார்கள்”.