— ச. மணிசேகரன் —
ஆரையூர்(ஆரையம்பதி) ஈன்றெடுத்த மீன்பாடும் தேனாட்டின் மூத்த படைப்பாளி, முன்னோடிக் கலைஞன் மூனாகாணா எனும் மு. கணபதிப்பிள்ளை தனது 96 வது வயதில் 24/10/2020 சனிக்கிழமை மாலை 3.15 மணியளவில் கலைத் தாய்க்கு தான் செய்த பணிகள் போதுமென தன் ஒளியை அணைத்துக் கொண்டார். 1922/01/22 இல் மண்ணில் உதித்து ஏறக்குறைய எட்டு தசாப்தத்தை கலைக்காக அர்ப்பணித்து, காலத்திற்கு காலம் பல்வேறு பட்டங்களை தனதாக்கிக் கொண்டு, அந்த பட்டங்களுக்கே ஒரு கௌரவத்தை கொடுத்து, ஆசிரியராக, அதிபராக, பாடலாசிரியராக, கவிஞராக, சிறுகதை எழுத்தாளராக, கூத்தராக பல்வேறு பாத்திரங்களில் மிளிர்ந்தவர் இவர்.
கிழக்கு மாகாணத்தில் பல பாடசாலைகள் உட்பட பல நிறுவனங்களுக்கு கீதங்களை இயற்றிய பெருமை இவரையே சாரும். கிழக்கு மாகாணத்தில் அதிக கீதங்களை இயற்றிய கவிஞர் இவரன்றி வேறு யாருமல்ல. அந்த நிறுவனங்கள் வாழும் வரை அந்த கீதங்களும் ஒலித்துக் கொண்டேயிருக்கும், அந்த கீதங்களினூடு தினமும் அந்த மாணவர்களோடும் மக்களோடும் அவர் வாழ்ந்து கொண்டேயிருப்பார்.
மட்டக்களப்பென்றாலே எங்கும் சலங்கையொலி கேட்கும் அக்கால, அச்சூழலில் தானும் கூத்து எழுதுபவராகவும், கூத்து ஆடுபவராகவும், அண்ணாவியராகவும் மிளிர்ந்து, வடமோடி, தென்மோடி என இரண்டிலும் வல்லவராக விளங்கினார்.
புராண இதிகாச கதைகளையே மையம் கொண்டு உலாவந்த கூத்தின் கருப்பொருளில் சமூக உள்ளடக்கத்தையும் புகுத்தி வெற்றி பெறலாம் என்பதனை “லெட்சுமி கல்யாணம்” எனும் நவீன கூத்தினூடாக சாதித்துக் காட்டினார். மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் மாணவராய் இருந்தபோது, அங்கு அதனை மேடையேற்றி, அங்கிருந்த சக மாணவர்களினூடாக நாடெங்கும் கொண்டு சென்று ஆடச் செய்தார். இவ்வகையில் நவீன கூத்தின் முன்னோடியாக இவரே விளங்குகிறார். அத்துடன் கூத்துப் பற்றியும் மருத்துவம், சோதிடம், மாந்தீரிகம், நாட்டார் பாடல், நாட்டார் கதைகள் என பல் துறை சார்ந்தும் பல கட்டுரைகள் பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்று பலவற்றிலும் எழுதியுள்ளார்.
40 களிலேயே கவிதைத்துறையில் நுழைந்து கவிஞராக மிளிர்ந்ததுடன் காலாகோலம், புழுகு புராணம் போன்ற நெடுங்கவிதைகளை எழுதி பலரின் கவனிப்புக்குரியவரானார். இங்கும் உள்ளடக்க ரீதியில் மாற்றங்கள் பலவற்றை செய்திருக்கிறார். புழுகு புராணம் தினகரனின் வெளிவந்த வேளை ஒரு புரட்சி புராணமாகத்தான் இருந்தது.
உரைநடையில் சிறுகதைகளும் எழுதி, சிறுவர் கதைகளும் எழுதியுள்ளார். இலக்கியவாதியாய் வீட்டிற்குள் முடங்காமல் தான் சுகதேகியாக இருந்த நிலைவரை, சகல சமூக கலை இலக்கிய அமைப்புக்களிலும் செயற்பாடுகளில் அவரது பங்களிப்பும் ஆலோசணையும் வழிகாட்டலும் இருந்தது. இது மிக கவனிப்புக்குரிய விடயம். இறுதிவரை மக்களுடனும் மண்ணுடனும் பிணைந்தே வாழ்ந்தார். தொண்ணூரைத் தாண்டியும் அவரின் வாகனம் அந்த ஒரே சைக்கிள் தான். வீரகேசரியின் விடாப்பிடியான வாசகன்.
கலைமணி, கலாபூசணம், மக்கள் கவிமணி, கலைஞாயிறு, தலைக்கோல் விருது, ஆளுநர் விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காரர். இப்படிப்பட்ட எங்கள் முன்னோடி, வழிகாட்டி மிகவும் இறுக்கமான ஒரு சூழலில் எம்மை விட்டு பிரிந்துவிட்டார்.
நாட்டின் கொரானா சூழல் ஒரு பக்கம், ஊரின் விரதகால சமய பண்பாட்டு சூழல் மறுபக்கம். இந்த இறுக்கமான சூழலில் ஞாயிறன்று அவசர அவசரமாக இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன. எனினும் இந்த மண் உள்ளவரை இந்த மா கலைஞன் வாழ்வான். சென்று வாருங்கள் எம் மூத்த கலைஞனே, எம் சிரம் தாழ்ந்த அஞ்சலிகள்.