— கருணாகரன் —
“இலங்கையில் மாற்றம் நிகழுமா? அதற்கான சாத்தியங்கள், அடையாளங்கள் உண்டா?” என்று தமிழ்நாட்டைச்சேர்ந்த அரசியற் தலைவர்களில் ஒருவர் தொலைபேசி உரையாடலின்போது கேட்டார். NPP அரசாங்கத்தை – ஆட்சியை- ப் பற்றிய பொது அபிப்பிராயத்தை மனதில் வைத்தே இந்தக் கேள்வியை அவர் கேட்கிறார். இதற்கு முன்பெல்லாம் அவரிடமிருந்து இப்படியான கேள்வி வந்ததில்லை. ஏனென்றால், முன்பிருந்த ஆட்சியாளர்களிடம் மாற்றம் குறித்த நம்பிக்கைகள் எதுவுமே இருக்கவில்லை. சரியோ, பிழையோ NPP தான் அந்த நம்பிக்கையை பொதுவெளியில் உருவாக்கியது. அதனால்தான் இந்தக் கேள்வி அவரிடம் எழுந்தது.
“இலங்கையில் மாற்றம் நிகழவேண்டுமானால், அது மக்களுடைய சிந்தனையில் நிகழவேண்டும். மக்களுடைய சிந்தனையில் மாற்றம் குறித்த எண்ணங்கள் ஏற்பட வேண்டும் என்றால், அதை ஊடகங்களும் அறிஞர்களும் அரசியற்தலைவர்களும் ஏற்படுத்தவேண்டும். அதாவது, இதுவரையான அரசியல் சிந்தனையும் நடைமுறைகளும் தவறானவை. அது இனவாதமாகவும் மதவாதமாகவுமே இருந்தது. சற்றுத் தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால், சிங்கள மக்களிடம் சிங்களத்துக்கும் பௌத்தத்துக்குமே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. இந்த எண்ணத்தை சிங்கள அரசியற் தலைவர்களும் அறிஞர்களும் மதத் தலைவர்களும் ஊடகத்துறையினரும் வலுவாகவே வளர்த்துள்ளனர்.
பல்லினத்தவர்கள் வாழ்கின்ற ஒருநாட்டில் இப்படி ஒரு மதத்துக்கும் ஒரு மொழியினருக்கும் அதைப்பின்பற்றும் சமூகத்தினருக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டால், அதை அவர்கள் கோரினால், அது அமைதிக்குப் பாதிப்பையே உண்டாக்கும். அது ஒரு நீதியற்ற செயலாகும். சமத்துவத்தின் அடிப்படையில் அறையப்படும் ஆணியாகும்.
இவ்வாறான சூழலில் ஜனநாயக விழுமியங்களைப் பேணவே முடியாது. அமைதியும் சமத்துவமும் ஜனநாயகமும் சிதைந்தால், அந்த நாட்டின்நிலை மோசமடைந்ததாகவே இருக்கும். இலங்கையின் நிலை இதுதான். இது பச்சையான இனவாதமாகும். இதற்காகச் சிங்கள அறிஞர்களும் ஊடகத்துறையினரும் மதத்தலைவர்களும் வெட்கப்படவேண்டும். ஏன் அரசியற்தலைவர்களும்தான். வளமான இந்த நாட்டை முன்னேற்றுவதற்குப் பதிலாக, அமைதியை நிலைப்படுத்துவதற்கு மாறாக, அதைக் கீழிறக்கும் அரசியலைச் செய்வதற்காக அரசியற்தலைவர்கள் வெட்கப்படுவதின்றி, தலைநிமிரவா முடியும்? ஆனால், எந்த வெட்கமுமில்லாமல், எத்தகைய குற்றவுணர்ச்சியும் இல்லாமல், இனவாதத்தின் நிழலிலேயே எல்லாரும் உறங்குகின்றனர்.
இந்த இனவாதமே இலங்கை அரசியலை தலைமையேற்று நடத்தி வருகிறது. NPP ஆட்சிக்குவந்தாலும் சிங்கள மக்களுடைய உள நிலையில் பெரியமாற்றங்களில்லை. அவர்கள் இன்னும் பழைய சிந்தனையிலேயே உள்ளனர். ஏனைய சமூகத்தினரைப் பற்றிய அக்கறை அவர்களிடம் இல்லை. ஆனால், மாற்றம் வேண்டும் என்று மட்டும் விரும்புகின்றனர். மாற்றத்துக்கான அடிப்படைகளை உருவாக்காமல், அதற்கான சிந்தனையை வளர்க்காமல் மாற்றங்களை நிகழ்த்துவதற்கு இதென்ன மாயாவியின் ஆட்சியா? மாயாவியின் அரசியலா?
சிங்கள மக்களைச் சுற்றி இரும்புக் கோட்டையாக அமைந்திருக்கும் அரசியற்சூழலும் மதவாதிகளும் சிங்கள மக்களுக்குத் தெளிவூட்டவில்லை. பலருக்கும் உண்மை நிலவரம் என்ன என்று நன்றாகவே தெரியும். ஆனால், அதைச் செய்வதற்கு யாரும் முன்னுக்கு வரவில்லை. அங்கொன்று, இங்கொன்று என சிறிய சிறிய ஒளிப்பொட்டுகளைப்போல உண்மையை எடுத்துரைப்போரும் மாற்றங்களுக்கான சிந்தனையை வலியுறுத்துவோரும் உள்ளனரே தவிர, ஒரு பெரிய அலையாக உருக்கொள்ளவில்லை. NPP யும் இதைச் செய்யவில்லை. இதைச்செய்யாமலேதான் மாற்றங்களைப் பற்றி அது பேசுகிறது. அதனால்தான் அதனால் மாற்றங்களைச் செய்வது கடினமாக இருக்கிறது. ஏனென்றால், மாற்றம் என்பது எளிதானதல்ல. அது மந்திரக்கோலினால் செய்யப்படுவதுமல்ல.
ஆகவே, இதெல்லாம் தவறு என்று மக்களுக்குத் தெரியாத அளவுக்கு இனப் பற்றும் மதப்பற்றும் அவர்களைப் பற்றிப்பிடித்துள்ளது. இதற்குள் மறைந்திருப்பது தூயஇனவாதமே (Pure racism). இதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும். இதற்குஅறிவுப் பரப்பில் இயங்குவோரும் ஊடகங்களும் துணிய வேண்டும். அப்படித் துணிந்து செயற்பட்டால், ஆரம்பத்தில் சிங்களச் சமூகத்திற்குள்ளேயே கடுமையான எதிர்ப்புகளும் துரோகிப்பட்டங்களும் அவர்களுக்கு ஏற்படலாம். ஆனால், நாட்டின் எதிர்காலத்துக்காக அதையெல்லாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
தவறாகச் சிந்திப்போர், குறுகிய வழிகளில் நலன்களைப்பெறுவோர் எப்போதும் நல்லனவற்றை எதிர்ப்பவர்களாகவே இருப்பர். விரிந்து சிந்திப்போர், நாட்டையும் மக்களையும் நேசிப்போர், நல்லனவற்றை விரும்புவோர், எதிர்காலத்தின் மீது அக்கறையோடிருப்போர் இந்த எதிர்ப்பையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. பொருட்படுத்தவும் கூடாது. உலகவரலாறு திரும்பத்திரும்ப அதையே நிரூபித்துள்ளது.
இதே நிலைமைதான் தமிழ்ச்சூழலிலும் உள்ளது. தமிழ்த்தேசியம் என்பதை, தமிழ் மக்களுடைய இனரீதியான ஒடுக்குமுறையை, இன ஒடுக்குமுறைக்கெதிரான அரசியலை, அதனுடைய போராட்டத்தையெல்லாம் தவறான முறையில் இனவாதமாகச் சுருக்கிப்பார்க்கின்ற ஒரு பார்வையே – போக்கே – தமிழ்ச் சூழலில் உள்ளது. இதனால் தமிழ்ச்சூழலிலும் ஜனநாயகத்துக்கானவெளி குறைவாகவே இருக்கிறது. அதிகாரமற்ற தரப்பாக இருப்பதால், சிங்களச்சமூகத்தின் அளவுக்கு இல்லை என்றாலும் மேலாதிக்கச்சிந்தனையும் பாசிசக் கூறுகளும் தமிழ்ச் சமூகத்திடமும் உண்டு. இதனால், யதார்த்தமான நிலை என்ன? உண்மைத் தன்மைஎன்ன? என்பதையெல்லாம் அதனால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அப்படிப் புரிந்துகொள்வோரும் அதை வெளியே சொல்வதற்கும் தாம் புரிந்துகொண்டவற்றைச் செயற்பாடாக முன்னெடுப்பதற்கும் துணிவற்றிருக்கிறார்கள். அதீதமான கற்பனையிலும் தம்முடைய நம்பிக்கைக்குமாறான முறையிலுமே பலரும் உள்ளனர். குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வுதொடக்கம், தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்தைக் கட்டமைப்பது வரையில் எவரிடத்திலும் உண்மையான, யதார்த்தமான எத்தகைய திட்டங்களும் தீர்மானங்களும் இல்லை. ஒவ்வொரு தரப்பும் மறு தரப்பின் அரசியலை கவர் பண்ணவே முயற்சிக்கின்றன.
இன்னொரு பக்கத்தில், தன்னை முதன்மைப்படுத்திக் கொள்வதற்கே தமிழ் மேலாதிக்கச் சமூகம் விரும்புகிறது. குறிப்பாக முஸ்லிம்களை ஏற்றுக்கொள்வதில் – அங்கீகரிப்பதில் தமிழ்ச் சமூகத்துக்கு உளநிலையில் பல இடைஞ்சல்கள் உண்டு. முஸ்லிம்களின் அரசியலில் தவறுகள் இருக்கலாம். தமிழ் அரசியலில் தவறுகளே இல்லையா. அதற்காகஅந்தச் சமூகத்தின் பிரச்சினைகளையும் நியாயங்களையும் மறுதலிக்க முடியாது. அவற்றைப் பேசவதற்கும் அணுகுவதற்குமான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். அவற்றைக் கையாள வேண்டும். பதிலாக அவர்களை எதிர்நிலைக்குத் தள்ளுவதோ, புறக்கணிப்பதோ நியாயமல்ல.
சிங்கள சமூகத்திடம் ஒடுக்குதலுக்குள்ளாகும் – ஒதுக்கப்படும் தமிழ்ச்சமூகமானது, தனக்கு அடுத்த நிலையில் உள்ள முஸ்லிம்களின் மீது ஆதிக்கம் செலுத்த முற்படுகிறது. இது எவ்வளவு தவறானது, துயரம் நிறைந்த வேடிக்கைக்குரியது அல்லவா! இதற்குள் மறைந்திருப்பது என்ன? இனவாதம்தானே. இதற்குச் சில கசப்பான வரலாற்றுச் சம்பவங்களைச்சொல்லி, அடிப்படைப் பிரச்சினையையும் நியாயமான கோரிக்கைகளையும் சமப்படுத்த முடியாது.
இதையொத்த பொறுப்பும் நிதானமும் முஸ்லிம் சமூகத்துக்கும் உண்டு. ஆகவே இலங்கைச் சமூகங்கள் முதலில் தங்களிடம் உள்ள குறைபாடுகளிலிருந்து – இருண்ட குகைகளிலிருந்து வெளியே வர வேண்டும். இருளும் குகையும் தமக்குப் பாதுகாப்பான அரண் என்று அவை கருதவேகூடாது. இது அறிவின் ஒளிசுவறிய யுகம். வெளியே இன்றைய அரசியலாகும். பன்மைத்துவமும் ஜனநாயகமும் சமத்துவமுமே அதனுடைய மொழியும் வழியுமாகும்.
ஆகவே கதவுகளைத் திறந்து வெளியரங்குக்கு வர வேண்டும். கைகளைக் குலுக்க வேண்டும். மனங்களைக் கோர்க்க வேண்டும். இது ஏதோ மதபோதனையைப்போல, உபதேசங்களல்ல. நியாயமான, சரியான, உண்மையான, நடைமுறைப் படுத்தப்படவேண்டிய வார்த்தைகள்; விடயங்கள் ஆகும்.
இதைச் செய்யாமல், ஆட்சித்தரப்புகளை (ஆட்களை) மாற்றுவதால் மாற்றங்கள் நிகழ்வதில்லை – அப்படி எந்த அற்புதங்களும் நிகழாது. ஆகேவே, மாற்றங்களைச் செய்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அதற்கான சூழல் என்பது சிந்திக்கக்கூடியோர், மாற்றங்களை மெய்யாகவே விரும்புவோர், ஜனநாயகத்தை நாடுவோரினால் உருவாக்கப்பட வேண்டியது. ஆகவே மாற்றம் நிகழ வேண்டும் என்றால், அது அனைத்துத் தரப்பினரிடமும் உணரப்பட வேண்டும். அனைத்துத் தரப்பினரின் பங்கேற்புடன் நிகழ வேண்டும். அதுவே சாத்தியமானது. அந்த அடிப்படையில்தான் இந்தச்சொற்கள் அமைகின்றன என நீண்டதொரு விளக்கத்தைக் கொடுக்க வேண்டியிருந்தது.
“அப்படியென்றால், NPP யை எப்படி மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள்? அது ஒருமாற்று அரசியலுக்கான தரப்பு என்ற அடிப்படையில்தானே! அதனால்தானே ஒரு இடதுசாரிக்கட்சி, வரலாற்றுப் போக்குக்குமாறான முறையில் ஆட்சியைக்கைப்பற்ற முடிந்தது? என்று பதில்கேள்வியைப் போட்டார் அந்தத்தலைவர்.
இங்கேதான் பல சிக்கல்களும் உண்மைகளும் மயக்கங்களும் உள்ளன என்றேன். உண்மையும் அதுதான்.
மாற்றத்துக்கான சக்தியாக மக்கள் NPP யை அங்கீகரித்ததும் அதை ஆதரவளித்ததும் உண்மையே. அந்த விருப்போடும் நம்பிக்கையோடும்தான் NPP யும் ஆட்சிக்கு வந்தது. அதிகாரத்துக்கு வந்ததற்குப்பிறகுதான் NPP க்கு விளங்கியது, எதிர்பார்த்த மாதிரி எல்லாவற்றையும் மாற்றி விடமுடியாது என்று. அப்படியிருக்கும்போது நினைத்த மாத்திரத்தில் எதைச் செய்யமுடியும்?
NPP விரும்புகின்ற, அது எதிர்பார்க்கின்ற மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றால், மாற்றங்களைச் செய்வதற்கு இடைஞ்சலாக, தடையாக இருக்கும் விடயங்கள் என்ன என்பதைப் பட்டியலிட்டு, அதை, அது மக்களுக்குச் சொல்ல வேண்டும். அந்தத் தடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை NPP மேற்கொள்வது அவசியம். அதற்குமுதல் NPP க்குள் இதைக் குறித்த தெளிவு வேண்டும். எனவே மாற்றங்களுக்கான பயில்கை அவசியமானதாகும்.
என்பதால் இதுமாற்றங்களுக்கான பயில்கைக்காலம் (This is a learning period for changes) என்றேன்.
அவர் சிரித்தார். யுத்தத்தின் பாதிப்புகளும் பொருளாதாரநெருக்கடியும் இருண்ட யுகமும் உங்களுக்குத் தந்த படிப்பினை என்ன என்று கேட்டார் நண்பர்.
பதிலுக்குச் சிரிப்பதைத் தவிரவேறு எதைச் சொல்ல? எதையும்படிக்காத (கற்காத), படித்துக்(கற்று) கொள்ள விரும்பாத மக்களைக் கொண்டிருக்கும் இலங்கைத் தீவை எப்படி மீட்பது?
