காணாமல் போகும் மாகாணசபைகள்..?(வெளிச்சம்:089)

காணாமல் போகும் மாகாணசபைகள்..?(வெளிச்சம்:089)

— அழகு குணசீலன் —

அன்றிலிருந்து இன்றுவரை சிறுபான்மையினரின் தேசிய இனக்கோட்பாட்டை வெறும் “அடையாள அரசியலாக” மலினப்படுத்தி வருகின்ற வரலாற்றை  ஜனதா விமுக்தி பெரமுன என்ற ஜே.வி.பி.கொண்டிருக்கிறது. இந்த அடிப்படை நிலைப்பாட்டில் இருந்து அந்தக் கட்சி  ஐம்பது ஆண்டுகளாக விலகவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முதலில் மாகாணசபை முறைமை இனப்பிரச்சினைக்கு தீர்வு அல்ல என்று வாதிட்டவர்கள் பின்னர் வாக்குகளுக்காக மாகாணசபை முறைமையை இல்லாமல் செய்யமாட்டோம், புதிய அரசியல் அமைப்பு அமைக்கப்படும் வரை அதை தொடர்வோம், மாகாணசபை சபை தேர்தல்களை நடாத்துவோம் என்று அறிவித்திருந்தார்கள்.

இப்போது மாகாணசபை தேர்தல்கள் நடாத்தப்பட மாட்டாது என்பது படிப்படியாக உறுதியாகி வருகிறது. தேர்தலை நடாத்தாமல் விடுவது மட்டும் அல்ல புதிய அரசியல் அமைப்பில் அந்த முறைமையும் மாற்றப்படும் என்ற கருத்து அரசாங்கதரப்பில் ஓங்கி ஒலிக்கிறது. மாகாணசபை முறைமை இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வு அல்ல என்பதை சிறுபான்மை தமிழ், முஸ்லீம், மலையக சமூகங்கள் கூட அனுபவ ரீதியாக ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் அது அதிகாரப்பகிர்வுக்கான ஒரு அடிப்படை. அந்த அடித்தளத்தில் இருந்து மாகாணசபைகள் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதே சிறுபான்மை தேசிய இனங்களின் கோரிக்கையாகும். 

இந்திய -இலங்கை சமாதான உடன்படிக்கை ஊடான அரசியல் அமைப்பின் 13 வது திருத்தம் நீங்கப்படுமாயின் அந்த அடித்தளம் அழிக்கப்பட்டுவிடும். இதனால் அதற்கான மாற்று முறைமை மற்றும் அதற்கு அதிகாரப்பகிர்வு ஊடாக வழங்கப்படவுள்ள அதிகாரங்கள் என்பன தெளிவாக விவாதிக்கப்படாமல்- அறிவிக்கப்படாமல் அதனை நீக்குவதை  சிறுபான்மை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் என்.பி.பி.கூட்டணி இதற்கான உத்திரவாதத்தை வழங்கியிருந்தது. இனப்பிரச்சினைக்கான தாம் ஏற்றுக்கொள்ள கூடியதான ஒரு தீர்வை வேண்டி நிற்கின்ற வடக்கு, கிழக்கு, மலையக மக்களில் ஒரு பகுதியினர் என்.பி.பி.யை நம்பியே பாரம்பரிய அரசியல் செய்யும் கட்சிகளில் இருந்து விலகி திசைகாட்டியை ஆதரித்தனர்.  

இதன் அர்த்தம் அந்த மக்கள் தங்கள் இனத்துவ, மத, கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை என்.பி.பி.க்கு விலை பேசினார்கள் என்பதல்ல. தங்களது அடையாளங்களுடன் இலங்கையர்களாக- பன்மைத்துவ சமுதாயமொன்றின்  பங்காளிகளாக வாழ விரும்புகிறார்கள். தனித்துவ அடையாளங்களை துறந்து இலங்கையர்களாக தங்களை முதன்மைபடுத்தி அடையாளப்படுத்தும் அரசியலை அவர்கள் விரும்பவில்லை.இந்த செய்தியை என்.பி.பி. – ஜே.வி.பி. தனது பேரினவாத கொள்கைக்கு அளவாக வெட்டி -ஒட்டி, பொருத்திக்கொண்டு தவறாக விளங்கிக்கொண்டுள்ளது. அதே வேளை ஜே.வி.பி. பேசுகின்ற இலங்கையர் அரசியலும் பௌத்த பேரினவாத அடையாள அரசியலே.

ஆனால் என்.பி.பி.வழங்கிய பல்வேறு மற்றைய சமூக, பொருளாதார, அரசியல் தேர்தல் வாக்குறுதிகள் போன்று இதில் இருந்தும் விலகி ஓடுகிறது. கடந்த ஒருவருட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சியில் இது விடயமாக நாளுக்கு நாள் முரண்பட்ட கருத்துக்களையும், விளக்கங்களையும் கூறிவந்த அரசாங்கமும், அதன் அமைச்சர்களும், ஏன், கொழும்பில் கூறுவதை வடக்கு, கிழக்கு, மலையகத்தில் இன்னொரு ஊடகச்சந்திப்பு நடாத்தி அரைத்தமாவை திருப்பி அரைக்கும் என்.பி.பி.  எம்.பி.க்களும் தற்போது வாயை வாயைச் சப்புகிறார்கள்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் வரை இருக்கின்ற மாகாணசபை சபைமுறைமையை பேணுவோம், நடாத்தப்படாதுள்ள மாகாணசபை தேர்தலை நடாத்துவோம் என்று கூறியவர்கள் பின்னர் எல்லைநிர்ணயத்தின் தலையில் பிரச்சினையை கட்டிவிட்டார்கள்.

 அரசாங்கம் கட்டளையிட்டால் மாகாணசபை தேர்தலை நடாத்த தயார் என்று இதுவரை கூறிய தேர்தல் திணைக்களம் இப்போது சட்டத்திருத்தம் இன்றி தேர்தலை நடாத்த முடியாது என்று கூறுகிறது.

 இத்தனைக்கும் பழைய சட்டத்தின் படி தேர்தலை நடாத்துவதற்கான வாய்ப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணைகள் ஊடாக செய்யமுடியும். இவை எல்லாவற்றையும் கிடப்பில் போட்டு என்.பி.பி.க்குள் ஏற்பட்டுள்ள வெடிப்புகளால்  மாகாணசபைகள் வீழ்ந்து காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றம் உள்ளுக்குள் குளிர்யுத்தமாக மாறியிருக்கிறது.

 “மக்கள் விரும்பாத எந்த ஒரு சட்டத்தையும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றாது. சட்டங்கள் மக்களுக்காகவேயன்றி ஆட்சியாளர்களுக்காக அல்ல. அரசியல் அமைப்பே ஆட்சியாளர்களுக்காக மாற்றப்பட்ட காலம் ஒன்று இருந்தது”   என்ற ஜனாதிபதியின் கருத்து  ஜனநாயகப் போர்வையில் பெரும்பான்மை, சிங்கள பௌத்த பெரும்பான்மை கருத்தியலுக்கு வலுக்கூட்டக்கூடியது. இதன் படி அதிகாரப்பகிர்வுக்கு எதிராக சிங்கள மக்கள் வாக்களித்தால் சிறுபான்மையினர் நிலை என்ன?  அரசாங்கம் ஆரம்பத்திலேயே செய்திருக்கவேண்டிய புதிய அரசியல் அமைப்பை செய்யாததன்  மூலம் எதிர்க்கட்சிகள்  அதை எதிர்ப்பதற்கான வாய்ப்பை  மறைமுகமாக வழங்கி வருகிறது. அரசாங்க ஆதரவு சமூக ஊடகக்காரர்கள் என்ன அரசாங்க ஆதரவு பதிவுகளை இட்டாலும் அரசாங்கத்தின் மக்கள் ஆதரவு குறைவடைந்து வருகின்றது. எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு தனித்தும், கூட்டாகவும் அதிகரித்துள்ளது. 

இந்த நாட்டில் கறுப்பு ஆட்சி ஒன்றும் இருக்கிறது” என்று ஜனாதிபதி அண்மையில் கூறியிருந்தார்.  உண்மைதான். என்.பி.பி.அரசாங்கத்திற்கு சமாந்தரமாக பாதாள உலகக்குழு – போதைப்பொருள் குற்றக்குழு ஒரு நிழல் ஆட்சியை நடாத்துகிறது. இதற்கு கடந்த கால அரசாங்கங்கள் மட்டும் பொறுப்பல்ல இன்றைய அரசாங்கமும் தான். ஏனெனில் போர்க்காலத்தில் இவ்வாறான குழுக்களும், சட்டத்திற்கு புறம்பான கறுப்பு இராணுவக் கட்டமைப்பும் உருவாகுவதற்கு யுத்தத்தை ஆதரித்ததன்மூலம், சிங்கள கிராமங்களில் யுத்தத்திற்கு ஆட்சேர்ப்பு பிரச்சாரங்களை செய்ததன்மூலம் ஜே.வி.பி.யும் இன்றைய  இந்த நிலைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஜே.வி.பி. 1987 இல் விதைத்ததை இப்போது அறுவடை செய்கிறது. கடந்த ஒரு ஆண்டில் – இதுவரை இடம்பெற்றுள்ள 100க்கும் அதிகமான துப்பாக்கி சூடுகளும், 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதும் 1987-1989 காலத்தை திரும்பி பார்த்தால் ஜே.வி.பி.பாணியிலானவை. இந்த நிலை நாட்டின் தேசிய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. வடக்கு கிழக்கில் கடந்த அரை நூற்றாண்டுகளாக இராணுவத்தை குவித்து தென்னிலங்கைக்கு, “பாதுகாப்பும்”  “சுதந்திரமும்” வழங்கியதன் மொத்த அறுவடை தான் இன்றைய தென்னிலங்கை நிகழ்வுகள்.

அரசாங்கத்தின் பலம் என்பது பாராளுமன்றத்தின் 159 பேரில், அல்லது என்.பி.பி. சமையலறை அமைச்சரவையில் இன்று இல்லை. என்.பி.பிக்குள் ஏற்பட்டுள்ள வெடிப்பை ஒட்டுவதற்கு அமைச்சரவை மாற்றம் உதவப் போவதில்லை. உள்ளுக்குள் “புகை மூட்டம்” அதிகரித்திருக்கிறது. இப்போது எழுகின்ற இன்னொரு கேள்வி ஜனாதிபதி குறிப்பிட்ட கறுப்பு ஆட்சி எது என்பதுதான். பெலவத்தவில் ரில்வின் சில்வா – விமல் ரத்நாயக்க கறுப்பு ஆட்சியாக அது ஏன் இருக்கமுடியாது.?  இதற்கு எதிராக அநுர – ஹருணி அணி பலவீனமாகவே இருக்கிறது. வெளியுறவை பொறுத்தமட்டில் ஒருபக்கம் ரில்வின் – விமல் அணியை சீனா, ரஷ்யா கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேற்குலகையும், இந்தியாவையும் திருப்திப்படுத்தும் வேலையில்  ஹருணி – விஜயஹேரத் அணி களத்தில் நிற்கிறது.  ஜனாதிபதி அநுரவின் கால்கள் இரண்டு தோணியிலும் வைக்கப்பட்டுள்ளன. இதனால்தான் மாகாணசபை தேர்தலை நடாத்துவதில் இந்திய – ஜெனிவா – மேற்குலக விருப்பை செய்யமுடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. ஏனெனில் இலங்கையின் இனப்பிரச்சினை உள்நாட்டு விவகாரம் என்று கூறுகின்ற சீனாவின் பூகோள அரசியல் ஜே.வி.பி.க்குள் பலமாக இருக்கிறது. அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும் வலுச்சேர்க்கிறது.

வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை இலகுவாக கைப்பற்ற முடியும் என்ற கணிப்பு அநுர அரசாங்கத்திற்கு ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் கடந்த ஒரு வருடத்தில் இந்த நம்பிக்கை குறைவடைந்து விட்டது. ஜனாதிபதி, மற்றும் அமைச்சர்களின் அடிக்கடியான வடக்கு களவிஜயங்கள் இதை அவர்களுக்கு உணர்த்தியிருக்கக்கூடும். மன்னார் காற்றாலை திட்டம், திருகோணமலை முத்துநகர் காணிப்பிரச்சினை போன்றவற்றை மக்கள் கொழும்பு வரை கொண்டு வந்தும் அரசாங்கம் அலட்டிக்கொள்ளவில்லை. இவை இரண்டுக்கும் பின்னால் சொந்த மக்களின் நலன்களை விடவும் வெளிநாடுகளின், மற்றும் ஐ.எம்.எப், உலகவங்கி அழுத்தங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்குகிறது. இந்திய உதவியில் மேற்கொள்ளப்படவிருந்த பலாலி விமான நிலைய அபிவிருத்தி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கு பெலவத்தையூடான சீன அழுத்தம் முக்கிய ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும் ஜே.வி.பி.யின் “இந்திய விரிவாக்கம்” கருத்தியலும் இதற்கு பின்னால் ஒழிந்திருக்கிறது. 

கடந்த ஒரு ஆண்டுகாலத்தில் கிழக்கில் எந்த முக்கிய அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மக்களின் அடிப்படை வாழ்வியலில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது இந்தியா கிழக்கு அபிவிருத்திக்கு பச்சை கொடி காட்டியிருக்கிறது. அதுவும் செயல்வடிவம் பெறும் போதுதான் தெரியவரும். அரசாங்கம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக விடுவித்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் மக்களின் காணிகளை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அவர்களின் விருப்பு க்கு மாறாக அடாத்தாக பறித்து அவர்களின் அடிப்படை சமூக வாழ்வியலையும், பொருளாதார வாழ்வியலையும் சிதைத்ததற்கு – இதுவரை அந்த மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு  எந்த நஷ்டஈடும் இன்றி, ஆகக்குறைந்தது ஒரு நன்றி, அல்லது ஒரு கவலையோ, மன்னிப்போ தெரிவிக்காது அரசாங்கமும் – இராணுவமும் அவர்களின் சொந்த காணிகளை மக்களுக்கு வழங்குவதுபோல் படம் காட்டுவதுதான். இந்த நாட்டின் பொருளாதாரத்தின் உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு இந்த காணிகளை அரசாங்கம் கையகப்படுத்தி இருந்ததும் ஒரு காரணம் இல்லையா? இராணுவத்தேவைகளும், இராணுவச்செலவுகளும் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படவில்லை. 

வடக்கு, கிழக்கு மாகாணசபை தேர்தல்களை அன்றைய சூழ்நிலையிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கூட நடாத்தியிருந்தது. நல்லாட்சியின் பங்காளர்களான மைத்திரி -ரணில் – சம்பந்தன் -சுமந்திரன் -சஜீத்  கூட்டாளிகள் “புதிய அரசியலமைப்பு”  என்று கூறி தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்தார்கள். இப்போது அதே மந்திரத்தை அநுர அரசாங்கம் ஓதுவது மட்டும் நல்லாட்சியும், அதற்கு முட்டுக்கொடுத்தவர்களும் என்ன செய்தீர்கள் என்று திருப்பிக்கேட்கிறது. 

அரசாங்கம் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவோம் என்று ஒன்றுக்கு நூறு தடவைகள் இதுவரை கூறிவந்தது. அண்மையில் பிரதமர் ஹருணி அமரசூரியவும் அடுத்த ஆண்டில் நடாத்துவோம் என்று கூறியிருந்தார். ஆனால் போகின்ற போக்கிலும், அவதானிப்புக்களின் படியும் அதற்கான வாய்ப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகின்றது. இதற்கு பின்னால் பிராந்திய பூகோள அரசியல் ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. அதுதான் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வரதராஜபெருமாள் இந்தியாவில் இருந்து வந்து இங்கு இது விடயத்தில் கவனம் செலுத்திவருவதும், தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைத்து மாகாணசபை தேர்தலை நடாத்துமாறு அரசாங்கத்தை கோருவதுமாக இருக்கலாமா? என்பதுதான் அந்த சந்தேகம். 

வரதரின் இந்த அரசியல் செயற்பாட்டிற்கு பின்னணியில் டெல்கி நிர்வாகம் இருக்கிறது என்று கொழும்பு குறிப்பாக பெலவத்த நிர்வாகம் சந்தேகிக்கிறது. இன்றைய நிலையில் ரில்வின் சில்வாவின் பெலவத்த நிர்வாகத்தை வெட்டி ஓடும் நிலையில் அநுர -ஹருணி நிர்வாகம் பலமாக இல்லை. ஜே.வி.பி. யின் மாகாணசபை சபைகள் குறித்த ஆரம்பக்கொள்கையை தூசிதட்டி, பிராந்திய அரசியல் தலையீட்டை தவிர்ப்பதாக காட்டவும், சீனாவை திருப்திப்படுத்தவும், இன்னொரு பக்கத்தில் ஜெனிவாவில் இந்தியா வலியுறுத்திய 13 வது திருத்தத்தின் அடிப்படையிலான அதிகாரப்பகிர்வையும் நிராகரித்து , உள்ளகப்பொறிமுறை மீதான உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துவதாகவும் அமையும். ரில்வின் சில்வா ஜே.வி.பி. தேசிய சபை உறுப்பினர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் இந்த திசையிலேயே சென்றிருக்கின்றன.

ஆக, வரதராஜப்பெருமாள் எறிந்த கல்லால் ரில்வின் சில்வா விழித்துக்கொண்டதே மாகாணசபை தேர்தல்களை நடாத்துவதில்லை என்று அரசாங்கத்திற்கு திசைகாட்டியதா?