தமிழ்த்தேசியத்தை அழிக்கும் தன்னகம்பாவம்.!(வெளிச்சம்:088)

தமிழ்த்தேசியத்தை அழிக்கும் தன்னகம்பாவம்.!(வெளிச்சம்:088)

 — அழகு குணசீலன் —

” தமிழ் அரசியல்வாதிகளின் தன்னகம்பாவம் நீங்கும் வரை தமிழ்த்தேசிய அரசியல் என்பதற்கு எதிர்காலமே இல்லை…..”  இந்த உளவியல் உள்ளக்கிடக்கையை ஒரு உளவியலாளர் வெளியிட்டுள்ளார்.  தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகள் தங்கள் வரலாற்று தவறுகளை மறைத்துக்கொண்டு அரசியல் புனிதர்களாக, அனைத்துத் தோல்விகளுக்கும் மற்றையவர்களை நோக்கி சுட்டுவிரலை நீட்டும் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலான புனைவுக்கு முதல் அடி விழுந்திருக்கிறது.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மூத்த பத்திரிக்கையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய “தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்” என்ற நூல் அறிமுக விழாவில் இந்த கருத்தை வெளியிடுவதற்கு ஒரு உளவியலாளர் துணிந்துள்ளார். மாற்று கருத்தாளர்களை “துரோகிகள்” என்று மிகவும் மலினத்தனமாக பட்டம் சூட்டும் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளுக்கு அவர்களை முன்னால் வைத்துத் கொண்டு அவர்களின் “தன்னகம்பாவம்” குறித்து முகத்தில் காறித்துப்பியுள்ளார் உளவியல் டாக்டர் சி.சிவதாஸ்.  சட்டவாளர் சோ. தேவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நூல் அறிமுக விழாவில் அரசியல் வாதிகளுக்கு சால்வைபோடும் வழமையான பல்லவிக்கு பதிலாக  இவரோடு , பிரதான உரையாற்றியிருக்கிறார்கள் பொறியியலாளர் க.சிவகுமார் , மற்றும் படைப்பாளியும், சமூகச்செயற்பாட்டாளருமான சி.கருணாகரன் ஆகியோர்.

விழாவில் முன் வரிசையில் அமர்ந்து மத்திய அமைச்சர் சந்திரசேகர் இராமலிங்கம், யாழ்.மாவட்ட எம்.பி. இளங்குமரன், தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், முன்னாள் எம்.பி.எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் அமர்ந்திருக்கையில் இந்த உளவியல் இடி தமிழ்த்தேசிய எதிர்காலத்திற்கு விழுந்திருக்கிறது. நிச்சயமாக என்.பி.பி. அரசாங்கத்தின் செல்வாக்கு யாழ்பாணத்திலும் குறைந்து வருகின்ற இன்றைய சூழலில் அமைச்சருக்கும், எம்.பி.க்கும்  ஒரு ‘கூலான ‘ செய்திதான்.

 இந்த தன்னகம்பாவம் நோய் தமிழ்த்தேசிய அரசியலோடு கூடப்பிறந்தது. அன்றைய தலைவர்கள் முதல் இன்றையவர்கள் வரை இது உளவியல் தொற்றாக பரவி கிடக்கிறது. தங்களின் சுய நோய்க்கே வைத்தியம்தேடாத இந்த அரசியல் வாதிகள் , உளவியலாளர் சிவதாஸ் எழுப்புகின்ற சமூக நோய்களுக்கு எவ்வாறு வைத்தியம் செய்யமுடியும்?. 

“PRIDE / ARROGANCE:  இந்த வார்த்தைகள் அகங்காரத்தையும், தன் தகுதியை அளவுக்கு அதிகமாக மதிப்பிடுவதையும் குறிக்க பயன்படுத்தப்படுபவை.  வேண்டுமானால் அரசியல்வாதிகளின் தன்னகம்பாவம் என்பதை நாம் “THE ARROGANCE OF POLITICIENS” என்று குறிப்பிடலாம்.  இது தமிழ்த் தேசியத்தின் கருவறையில் இருந்து வருகின்ற இரத்த உறவுக் குணாம்சம். இதில் இருந்து யாழ்ப்பாண மேட்டுக்குடி குணாம்சத்தை பிரித்து பார்க்க முடியாது என்பதை கடந்த கால தமிழ்த்தேசிய வரலாறு எமக்கு ஒன்றுக்கு பலதடவைகள் உணர்த்தியிருக்கிறது. இது பிறப்பால் ஊறியது, பரம்பரை அதிகார வர்க்க குணாம்சத்தை உள்வாங்கிக்கொண்டது என்பதனால் தான் ஆயுதபோராட்ட அமைப்புக்களின் தலைமைகளும் இவற்றில் இருந்து விலகி இருக்க முடியவில்லை. 

ஜீ.ஜீ.பொன்னம்பலம் , எஸ்.ஜே.வி.செல்வநாயகம், அமிர்தலிங்கம்,  மாவை சேனாதிராஜா,  இரா.சம்பந்தர் , சி.வி.கே. சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன் ….. உள்ளிட்ட தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் வாதிகள் அனைவரும் இந்த “தன்னகம்பாவம்” நோயினால் பாதிக்கப்பட்டுத்தான் இருந்தார்கள்/ இருக்கிறார்கள். இதற்கு  விடுதலைப்புலிகளின் தலைவர்  வே.பிரபாகரன் உள்ளிட்ட  ஆயுதப்போராட்ட அமைப்புக்களின் தலைவர்களும் விதிவிலக்கல்ல.  இந்த தன்னகம்பாவம் மலையக மக்களின் வாக்குரிமையை பறித்தது முதல்,  பிரபாகரன் – உமாமகேஸ்வரன் அதிகாரப் போட்டி,  சகோதர அமைப்புக்கள் மீதான அழிப்பு,  இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கை நிராகரிப்பு, ராஜீவ் காந்தி கொலை, மாற்றுக்கருத்து அரசியல் வாதிகள் உள்ளிட்ட சகோதர இயக்கப்படுகொலைகள்,  சகோதர இனங்கள் மீதான தாக்குதல்கள், பிரபாகரன் – கருணா பிரிவு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உடைவு,  இன்று சங்கு- சைக்கிள் கூட்டணிக்குள் நடக்கும் குத்தும் வெட்டும் , ….. வரையான அனைத்து தமிழ்த்தேசிய வரலாற்றின் கடந்த காலத்தை உளவியல் ரீதியில் இந்த  தன்னகம்பாவம் ஊடாகவே நாம் விளங்கிக்கொள்ள முடியும். அர்ச்சுனாவையும்  இந்த தன்னகம்பாவம் விட்டு வைக்கவில்லை.

உளவியலாளர் சி.சிவதாஸ்  இன்னும் சில விடயங்களை அந்த கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். “தமிழ் அரசியல் தலைவர்களிடம் காணப்படும் தன்னகம்பாவமே இன்று வரை எமக்கு தீர்வொன்று கிடைக்காததற்கு காரணமாகும்………..  பொதுவாக நாம் எல்லோரும் கறுப்பு வெள்ளை மனநிலையில் இருக்கிறோம். கறுப்புக்கும், வெள்ளைக்கும் இடையில் ‘கிறே’ நிறமென்று ஒன்று இருப்பதை யாருமே ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை.”  என்கிறார் அவர்.

இதன்படி தமிழ்த் தரப்பு   தமக்கு மட்டுமே சாதகமான முழுமையான சாதகத்தை  வெள்ளையாக பார்க்கிறது. தமக்கு சாதகமற்ற மற்றையவை அனைத்தையும்  முழுமையான கறுப்பாக பார்க்கிறது.  ஆனால் உண்மை அப்படியிருக்க முடியாது கறுப்புக்கும், வெள்ளைக்கும் இடையே ஒரு ‘இடைநிறம்’ இருக்கிறது. இந்த இடைவெளியை கறுப்பு, வெள்ளைக்கப்பால் அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகள் பயன்படுத்தவில்லை, தவறவிட்டுவிட்டு மறுதரப்பு மீது கறுப்பு பூசுகிறது தமிழ்த்தேசியம் என்று சொல்ல வருகிறார் சிவதாஸ். 

இங்குதான் விட்டுக்கொடுப்பு, இணங்கிப்போதல், ஒரு தரப்பு மறுதரப்பை அங்கீகரித்தல், தரப்புக்கள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளல், சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கை …. போன்ற தீர்வு நோக்கிய இலக்கில் நெருங்கி வரமுடியும். ஆனால் நானா? நீயா? என்ற அகம்பாவ அணுகுமுறையில் – அதிகார வெறியில் இதற்கு இடமில்லை. இதுவே இன்றைய தமிழ்த்தேசிய அரசியலின் நிர்வாணம்.

  இதற்கு காரணம் தமிழ்த்தேசிய அரசியல் தனது பக்க சொந்த தவறுகளை விளங்கிக்கொள்ள தயாரில்லாமல் இருப்பது. மறுபக்கத்தில் மறுதரப்பு மீது குற்றம்சாட்டி – தன்னை ஒரு பாதிக்கப்பட்ட தரப்பாக காட்டி, உணர்ச்சி அரசியல் செய்து, கவனர்ப்பை பெற்று, அனுதாபத்தை பெற்று அதனூடாக ஒரு அரசியல் நியாயத்தை அடைய முயலுகிறது.  இந்த அணுகுமுறை கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக தேசிய, பிராந்திய, சர்வதேசிய மட்டத்திலும், சமகால அரசியலிலும் தோற்றுப்போன -காலாவதியான ஒன்று.  இதற்கு காரணம்  “UNDERSTANDING HOW TO DEAL WITH YOUR OWN MISTAKES”  அதாவது சொந்த தவறை விளங்கிக்கொண்டு தீர்வு முயற்சிகளை கையாளமுடியாமல் உள்ள தமிழ் தேசிய பலவீனமாகும். இந்த அரசியல் வங்குரோத்து வெளிப்படையாக தீர்வுக்கு வழிகாட்டாமல் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி தன்னகங்கார அரசியல் செய்யவே உதவுகிறது.

உளவியலாளர் சிவதாஸ் தமிழ்த்தேசிய அரசியல் மூடி மறைக்கும் ஒரு சமூக உண்மையை  வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். போருக்கு பின்னரான ஒரு சமூகத்தின் ஜதார்த்தம் இது. “போருக்கு பின் பெரும்பான்மையானவர்கள் வாழ்விற்காக வாழவில்லை, வாழ்வாதாரத்திற்காகவே வாழ்கின்றனர்”.  இது தமிழ்த்தேசிய அரசியல் முட்டாள்தனமாக பேசிக்கொண்டிருக்கும் – எழுப்பும் சோறா? சுதந்திரமா? / சலுகையா? உரிமையா?  என்ற கேள்விக்கு பதிலாக அமைகிறது. இதில் இன்னும் கேவலம் என்னவென்றால் போரின் போது தென்னிலங்கையில்  சாய்மனை கதிரை சமாதான சகவாழ்வு வாழ்ந்தவர்கள்  போருக்கு பின்னர் அந்த மக்களுக்கு  அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதாகக்கூறிக்கொண்டு போரின் வலி தெரியாமல் வலியைபற்றி பேசுவதுதான்.

தென்னிலங்கையை அடுத்து வடக்கில் போதைவஸ்து கடத்தல்/வியாபாரம்,  கொள்ளை, கொலைகள் -குற்றச்செயல்கள், ஆயுத வன்முறைகள், சிறுவர்துஷ்பிரயோகம், பாலியல் வன்முறை, சமூகச்சண்டை … என்பனவற்றிற்கு குறைச்சல் இல்லை. போருக்கு பின்னரான ஒரு தேசத்தில் விடுதலையின் பேரில் போராடிய ஒரு சமூகத்தில் 16 ஆண்டுகள் கடந்தும் இது எப்படி சாத்தியம்? இது ஒன்றே தமிழ்த்தேசிய அரசியல் போருக்கு பின்னர் தனது கடமையை சரியாகச் செய்யவில்லை என்பதற்கும், அந்த அரசியல் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை  உளவியல் ரீதியில் குணப்படுத்துவதற்கு தவறியதன் காரணமாக அது சமூக விரோத நோய்களைக்கொண்ட ஒரு சமூகமாக மாறிவிட்டது என்பதற்கும் சான்றாகும்.

போருக்கு பின்னரான தேசத்தில், தேசத்தைகட்டியெழுப்பவும், மக்களை வழி நடத்தவும் ஒரு சமூக, பொருளாதார, அரசியல் புதிய ஒழுங்கு தேவை. எந்த தமிழ்த்தேசிய கட்சியிடமும் இவற்றிற்கான கொள்கைதிட்டம் எதுவும் இல்லை. இதனால்தான் போருக்கு பின்னர் மக்கள் அபிவிருத்திக்கும், வாழ்வாதாரத்திற்கும் முன்னுரிமை வழங்கி தென்னிலங்கை கட்சிகளை ஆதரித்தனர். இந்த கட்சிகள் அனைத்தும் தமிழ்மக்கள் மீதான போரை பயங்கரவாதத்திற்கு‌ எதிரான போர் என்று முரசு கொட்டியவை. போரை செய்த அரச படைத்தரப்பை பாதுகாப்பவை. போர்க்கால பாதிப்புக்கள் எதற்கும் இதுவரை தீர்வு காணத்தயார் இல்லாதவை. அப்படி இருந்தும் தமிழ்மக்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்படுகின்ற ஜே.வி.பிக்கு  யுத்தபூமியான வடக்கில் ஐந்து  நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்தார்களே இது எப்படி சாத்தியமானது?   இதற்கான விடை உளவியலாளர் சி.சிவதாஸின் இந்த உரையில் இருக்கிறது.

இந்தத் தொப்பி தலைக்கனம் – தன்னகங்கார அளவுகளுக்கு அப்பால் அனைத்து தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் பொருத்தமானது. 

இனியாவது தொப்பியை அணிந்து கொண்டு கண்ணாடிக்கு முன் நில்லுங்கள் ……!