— அழகு குணசீலன் —
கிழக்கிலங்கையின் சமூக, பொருளாதார, அரசியலில் – கல்வி ,கலை, இலக்கிய, பண்பாட்டு தளத்தில் தடம்பதித்த பல ஆளுமைகளுள் முத்துக்குமார் இராசரெட்ணமும் ஒருவர். இந்த பயணத்தில் 1970 களின் நடுப்பகுதியில் இருந்து இறக்கும்வரை “இராசரெட்ணம் சேர்” என்று எங்களால் அழைக்கப்படும் அவரை நினைவுகூர ஒன்றல்ல, இரண்டல்ல…. எண்ணற்ற நினைவுகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றிற்கு இப்பதிவு வெளிச்சம் பாய்ச்சுகிறது.
இராசரெட்ணம் சேரின் மரணம் இயற்கையானது என்றாலும் அவரோடு பழகிய அனைவருக்கும் அது ஒரு இதயவலி. நண்பர் மகாதேவாவின் குறிப்பை படித்தேன் அவர் அமரரின் “வாசகர்வட்ட காலத்தை” சுருக்கமாக பேசுகிறார். இராசரெட்ணம் ஆசிரியருக்கும் மகாதேவாவுக்குமான நட்பு. மிக நீண்டது. அவரை முழுமையாக அறிந்தவர்களுள் – இன்று இருப்பவர்களுள் மகாதேவா முக்கியமானவர். நண்பர்கள் பால.சுகுமார், க.குமரகுரு ஆகியோரின் நினைவுக்குறிப்புக்களையும் படிக்க முடிந்தது. அவர்கள் இருவரும் “பொலநறுவைக்காலத்தை” நினைவுகூருகிறார்கள்.
இராசரெட்ணம் என்ற உழவு இயந்திர சாரதிக்கும் எனக்குமான உறவு காற்சட்டை சிறுவனாக நான் இருந்த காலத்தில் ஆரம்பிக்கிறது. 1970 களின் முன் அரைப்பகுதியில் அன்றைய அரசாங்கம் அறிமுகப்படுத்திய மூடப்பட்ட பொருளாதார கொள்கை காலத்தில் நெல் விவசாயம், உப உணவுப்பொருட்களின் உற்பத்தி விருத்தி அடைந்தது. அதேவேளை தன்னிறைவு அற்ற நிலையில் உணவுத்தட்டுப்பாடும், ஒறுப்பாக வாழவேண்டிய காலமாகவும் அது இருந்தது. அப்போதுதான் ஐயா முத்துக்குமார் குடும்பம் ஒரு உழவு இயந்திரத்துடன் மட்டக்களப்புக்கு வந்தது. கல்லடி பாலத்து இறகத்தில் வாவிக்கரை பக்கம் ஒரு வளவு வாங்கி தற்காலிகமாக ஒரு வீடமைத்து வசித்தார்கள். இராசரெட்ணம் அவர்களுக்கு ஒரு இளம் சகோதரர் இருந்தார் அவர் பெயர் சந்திரகுமார். அவரும் என்னோடு சிவாநந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். ஆனால் வெவ்வேறு வகுப்புக்களில் நாம் இருந்தோம்.
அன்றைய சூழலில் உழவு இயந்திரத்திற்கு போதுமான வேலை படுவான்கரையிலே இருந்தது. அந்த பேர்குஸன் உழவு இயந்திரத்தின் சாரதியாக படுவான்கரைக்கு அறிமுகமாகிறார் இராசரெட்ணம். தொழில் ரீதியான அவர்களின் உறவு முனைக்காடு, முதலைக்குடா கிராமங்களின் சிறு விவசாயிகள், போடியார்களுடன் ஏற்படுகிறது. இந்த போடியார்கள் உழவு இயந்திரம் அற்றவர்கள். அவர்களின் நெற்செய்கைக்கு வாடகைக்கு உழவு இயந்திரம் தேவைப்பட்டது. அந்த தேவையை முத்துக்குமார் ஐயாவின் குடும்பம் பூர்த்தி செய்தது.
இப்படித்தான் சாமந்தியாற்றில் எங்கள் வயல் உழவு, சூடடிப்பு வேலைகளில் இராசரெட்ணம் சேர் எங்கள் குடும்பத்திற்கு அறிமுகமாகிறார். அப்போது எருமை/எருது மாட்டு உழவு, சூடடிப்பு முறையில் இருந்து விவசாயம் இயந்திரமயமாக்கலுக்கு மாறிக்கொண்டிருந்த நிலைமாறுகாலம் என்று சொல்லலாம். அப்போதெல்லாம் வயல் வாடியில், ஊரில், மண்முனைத்துறையில் சந்திக்கும் போதெல்லாம் படிப்பை பற்றியே இராசரெட்ணம் சேர் கேட்பார்.
இந்த நிலையில் 1977 பாராளுமன்ற பொதுத்தேர்தல் நெருங்கிய காலத்தில் அன்றைய கல்வி அமைச்சர் பதியூதீன் முகமட் அவர்களால் மட்டக்களப்பில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. அந்த வாய்ப்பு இராசரெட்ணம் சேருக்கும் கிடைக்கிறது. இதுவே சாரதி இராசரெட்ணம் ஆசிரியரான கதை. அதையடுத்து அவரது வாழ்க்கை முற்றாக 360 பாகைக்கு திரும்புகிறது. மட்டக்களப்பின் கலை, பண்பாட்டு, இலக்கிய ஆர்வலர்களோடும், அதுசார்ந்த நண்பர்களோடும் அவரது தொடர்பு புடம்போடப்படுகிறது. இராசரெட்ணம் அவர்கள் தேடல், வாசிப்பு, விடாமுயற்சி ….. போன்ற இயல்புகளுக்கு முன்னுதாரணமானவர். மட்டக்களப்பு வாசகர் வட்டத்தில் நல்ல நண்பர்களை அவர் சந்திக்கிறார். மகாதேவா, யுவி தங்கராசா, ஆனந்தன்,சிவராம், சாருமதி, சுபத்திரன், கணேஸ்வரன் போன்ற முற்போக்கு இலக்கிய மாற்று சிந்தனையாளர்கள் ….. போன்ற இன்னும் பலர் இவர்களில் முக்கியமானவர்கள். ஆசிரியர் தொழில் அவரை இத்துறை சார்ந்த மட்டக்களப்பு ஆசிரியர் குழாமில் இயல்பாகவே இணைத்து விடுகிறது. மட்டக்களப்பு வாசகர் வட்டத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றும் அளவுக்கு அவரது நடத்தை அவரை உயர்த்துகிறது.
அப்போது மட்டக்களப்பு வாசகர் வட்டத்தினால் “களம் ” என்ற ஒரு சஞ்சிகையை வெளியிடப்பட்டது. இடையில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் “களத்தில்” என்றொரு சஞ்சிகையை உத்தியோகபூர்வமாக வெளியிட்டனர். இரண்டு பெயர்களுக்குமான ஒற்றுமை, அன்றைய காலத்தில் மட்டக்களப்பில் இருந்த “கள” நிலைமை என்பன காரணமாக வாசகர் வட்டம் களம் சஞ்சிகையை நிறுத்திக்கொண்டது. களம் சஞ்சிகையின் வளர்ச்சியில் வாசகர் வட்ட தலைவராக அமரரின் பங்கு அளப்பரியது. மட்டக்களப்பு புளியந்தீவில் அவர் சறோ அக்காவை திருமணம் செய்த பின்னர் இந்த வாசகர் வட்ட செயற்பாடுகளுக்கு அது அவருக்கு மேலும் வசதியாக அமைந்தது.
இந்த கால கட்டத்தில் 1981 இல் வேலையற்ற பட்டதாரியாக இருந்த நாங்கள் முனைக்காடு ஒளிக்கல்லூரிக்கு சமாந்தரமாக “விபுலானந்த வெளிவாரிப் பட்டப்படிப்புகள் நிறுவனத்தை” ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் இதன் முதலீட்டாளராக இருந்தவர் முனைக்காடு பா.ஏரம்பமூர்த்தி. பின்னர் அதிக முதலீட்டு தேவை காரணமாகவும், விபாலாநந்தாவின் வளர்ச்சி காரணமாகவும் கன்னன்குடா க.ஆறுமுக அண்ணர், புதுக்குடியிருப்பு மா.சதாசிவம் ஆகியோர் இணை முதலீட்டாளர்களாக பொறுப்பேற்றனர்.
அப்போதுதான் ஆசிரியர் இராசரெட்ணம் வெளிவாரிப்பட்டப்படிப்புக்காக தன்னை எங்கள் நிறுவனத்தில் பதிவு செய்கிறார். அவர் பட்டப்படிபுக்கு நான் கற்பித்த பொருளியலை ஒரு பாடமாக எடுக்கவில்லை. என்றாலும் அப்போது எனது சமூக, பொருளாதார, அரசியல் கட்டுரைகள் இலங்கை தேசிய பத்திரிகைகளில் வெளிவந்தன. அது பற்றிய விமர்சனங்களை திறந்த மனதோடு முன் வைக்கின்ற ஒரு வாசகராக- விமர்சகராக அவர் இருந்தார். அவர் பட்டப்படிப்புக்காக தமிழ்மொழியை சாருமதியிடமும், அரசியல் விஞ்ஞானத்தை வசந்தராசபிள்ளையிடமும், இந்து கலாச்சார த்தை பேரின்பநாதனிடமும் விபுலாநந்தாவில் கற்றார். அவரின் நண்பர்கள் தான் அவரின் ஆசிரியர்கள் என்பது வியப்பானது. அவரைப்பொறுத்தமட்டில் அதிகளவான தேடல், வாசிப்பு இவற்றிற்கு மத்தியில் இந்த வகுப்புகள் ஒரு மீட்டலாகவே இருந்தன.
மேலும் முற்போக்கு இலக்கியவாதி லெ.முருகபூபதி புலம் பெயர்வதற்கு முன்னர் வீரகேசரிவாரமலரில் தொடர்ச்சியாக தொகுத்து எழுதி வந்த “இலக்கிய பலகணி/ இலக்கிய சாளரம்” பகுதியை வாரமலர் ஆசிரியர் ராஜகோபாலின் வேண்டுதலுக்கு இணங்க “ஜய சாந்தன்” என்ற பெயரில் தொகுத்து எழுதி வந்தேன். அதற்கு இராசரெட்ணம் சேர் எனக்கு பேருதவியாக இருந்தார். இலக்கிய நிகழ்வுகள், தகவல்களை தேடித்தந்துதவினார். ஆலோசனைகளையும் வழங்கினார். விபுலாநந்தாவினால் ” வயல்” என்ற சஞ்சிகையை வெளியிட்டோம். இதில் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணனும் இணைந்து கொண்டார். “வயலை” பண்படுத்துவதில் , பசளையிடுவதில், பயிரிடுவதில் இராசரெட்ணம் சேர் நிறையவே ஆலோசனைகளை கூறினார். இவை அவர் “களம்” கண்ட அனுபவங்கள்.
அப்போதெல்லாம் பாடசாலை விடுமுறை நாட்களில் விபுலானந்தாவில் சிவராம், ஆனந்தன், சாருமதி, நெல்லை நடேஸ், இரா.துரைரெட்ணம் ஆகியோர் சேர்ந்து பலதும், பத்தும் பேசுவோம். அந்த சந்தர்ப்பங்களில் இராசரெட்ணம் சேர் உடனிருக்க தவறுவதில்லை. இன்று அவரிலும் வயதில் குறைந்த இவர்களில் பலர் எம்மத்தியில் இல்லை. இராசரெட்ணம் சேரின் ஆத்ம நண்பர்கள் பலர் இன்றியே அவரை வழியனுப்ப வேண்டிய துயரத்தால் நாம் நனைந்து நிற்கிறோம்.
விபுலாநந்தாவில் வெளிவாரிபட்டத்திற்காக அவர் கற்றுக்கொண்டிருந்த, நான் கற்பித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்களுக்கு பொலநறுவை – கதுருவெல – மாணிக்கம் பிட்டி முஸ்லிம் மகாவித்தியாலத்தில் எதிர்பாராத விதமாக மற்றைய நண்பர்களான களுதாவளை வசந்தராசபிள்ளை, அரசடித்தீவு குமரகுரு ஆகியோருடன் நியமனம் கிடைத்தது. இந்த சுமார் ஐந்து ஆண்டுகள் எங்கள் நட்புறவை கலை, இலக்கிய ரீதியாக வளர்த்துக்கொள்வதற்கு பெரும் வாய்ப்பை வழங்கியது. பாடசாலை முடிந்த பின்னர் கலை, இலக்கிய கருத்துக்களை அவரவர் வாசிப்பில் இருந்து பகிர்ந்து கொள்வோம். அப்போது கல்லல மிருகவைத்தியர் காரியாலயத்தில் கடமையாற்றிய மட்டக்களப்பின் குறிப்பிடக்கூடிய இலக்கிய ஆளுமை மாமா என்று எங்களால் அழைக்கப்படும் எஸ்.எல்.எம் .கனிபாவும் இந்த உரையாடல்களில் கலந்து கொள்வார். ஒரு சில நாட்களில் நண்பர் பால.சுகுமாரும் வந்திருந்தார் என்று நினைக்கிறேன்.
பேராதனை பல்கலைக்கழக வெளிவாரிப்பட்டப்படிப்பில் சித்தியடைந்து கலைமாமணி (BA) பட்டதாரியானபின்னர் இராசரெட்ணம் சேர் அதிபர் தரத்திற்கு உயர்வதற்கான கதவு திறந்து விடப்பட்டது. இதன் ஊடாக மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் அதிபர் வரை அவர் உயர்ந்தார். சுனாமிக்கு பின்னர் சுவிஸ் வாழ் கிழக்கு மாகாணத்தவர்களால் உருவாக்கப்பட்ட உதவி அமைப்பான “உதயம்” அமைப்பு மட்டக்களப்பு “ஏடு” அமைப்புடன் இணைந்து செயற்படுத்திய கல்வி அபிவிருத்தி திட்டங்களில் நண்பர்கள் அருளானந்தம், தேவராஜா, ஜெபராசா… போன்ற வர்களுடன் இணைந்து சமூகப்பணி செய்தார். இறுதியாக உதயம் சந்திப்பு ஒன்றுக்கான ஏற்பாடுகளையும் இந்து கல்லூரியில் நண்பர்களுடன் இணைந்து ஒழுங்கு செய்து தந்தார்.
அன்னாரின் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த இரங்கல்கள்.
சேர் ! உங்கள் நினைவுகளைச் சுமந்த கனத்த மனதோடு இயற்கையோடு இணைந்து வழியனுப்புகிறோம்.
அஞ்சலிகள் சேர்!
