— செங்கதிரோன் —
இயந்திர நாகரீகம்- திறந்த பொருளாதாரம்- உலக மயமாக்கம்- நுகர்வுக் கலாசாரம்- தகவல் தொழில்நுட்பத்தின் அதீதவளர்ச்சி – பல்தேசியக் ‘கம்பனி’களின் பணம் மட்டுமே ஈட்டும் வணிகச் செயற்பாடுகள் போன்ற புறக்காரணங்களால் கற்பழிந்துவிடாமல் கன்னி அழகுடன் விளங்கும் முல்லையும் மருதமும் நிறைந்த மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசங்களிலொன்றான மண்முனை தென்மேற்குப் பிரதேசத்திலே கண்ணகி இலக்கியக் கூடலின் பத்தாவது கண்ணகி கலை இலக்கிய விழா கால்பதித்துள்ளமை எமது பயணத்தில் இன்னுமொரு மைல்கல் – பாய்ச்சல் ஆகும்.
வரலாற்றுப் பெருமையும் ஆன்மிக முக்கியத்துவமும் பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் இப்பிரதேசத்தில் அமைந்திருப்பது இவ்விழாவுக்கு மேலும் பெறுமதி சேர்க்கிறது.
இந்தப் பின்புலத்திலே பத்தாவது கண்ணகி கலை இலக்கிய விழாவின் மூன்றாம் நாளான இன்று மகிழடித்தீவு மண்முனை தென்மேற்கு பிரதேச கலாசார மண்டபத்தில் நடைபெறுகின்ற காலை அமர்வின் தொடக்கவிழா அரங்கான கூலவாணிகன் சாத்தனார் அரங்கிற்குத் தலைமை வகிக்கின்ற விழாக் குழுத் தலைவர் அன்புக்குரிய மு.அருட்செல்வம் அவர்களே!
ஆன்மிக அதிதியாக அமர்ந்திருக்கின்ற மட்டக்களப்பு இராமகிருஸ்ணமிசன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மஹராஜ் அவர்களே!
மற்றும் முதன்மை அதிதிகளே! சிறப்பு அதிதிகளே! அரங்க ஆற்றுகையாளர்களே! அவையில் நிறைந்திருக்கின்ற கண்ணகி கலை இலக்கிய ஆர்வலர்களே! எழுத்தாளர்கள்- கலைஞர்கள்- ஊடகவியலாளரர்களே! விசேடமாக வெளிநாடுகளிலிருந்தும் வெளிமாவட்டங்களிலிருந்தும் கண்ணகி கலை இலக்கிய விழாவைக் காணவந்துள்ள அன்பர்களே! விழாக்குழு உறுப்பினர்களே! கண்ணகி கலை இலக்கிய கூடல் தாய்ச்சங்க உறுப்பினர்களே! இன்று காலை இடம்பெற்ற பண்பாட்டுப் பவனியில் பங்கேற்றது மட்டுமல்லாமல் இத் தொடக்கவிழா அரங்கிலே ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ள ஊர்மக்களே! அனைவருக்கும் மீண்டும் எனது அன்பான காலை வணக்கங்கள்.
திருமா மணிவந்தாள்- எங்கள்
தேசந் தழைத்திட வந்தாள் ! வந்தாள்!
வஞ்சகமில்லாத வாழ்க்கை முறையையும் – விருந்திருக்க உண்ணாத வேளாண்மைத் தனத்தையும் – வந்தாரை வாஞ்சையோடு வரவேற்று வாழவைப்பதில் வற்றாத மனப்போக்கையும் – சாதிமத பேதமற்ற சமரச நோக்கையும் – சகோதரத்துவ உளப்பாங்கையுமுடைய கிழக்கிலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் கண்ணகி கலாசாரத்தைப் பேணி வளர்ந்தெடுக்கும் வகையிலும்,
அப்பண்பாட்டு விழுமியங்களுக்கு அடிநாதமாக விளங்கும் இம்மண்ணில் விளைந்த கண்ணகி கலை இலக்கியங்களை மக்கள்மயப்படுத்திப் பரவலாக்கும் வகையிலும்,
கிழக்கிலங்கைத் தமிழ்ச் சமூகத்தை ஒரு குடும்பமாக ஒரு பண்பாட்டுத் தளத்தில் ஒன்றிணைத்து அதன் மூலம் அவர்களது சமூக, பொருளாதார, பண்பாடு, கல்வி கலை இலக்கிய, சூழல் பாதுகாப்பு மற்றும் ஆன்மிக மேம்பாட்டை நோக்கி அவர்களை அறிவு பூர்வமாக ஆற்றுப்படுத்தும் வகையிலும், முதலாவது கண்ணகி கலை விழாவினை நாம் 2011 இல் மட்டக்களப்பு நகரிலே ஆரம்பித்தோம்.
அவ்விழாவிலே வைத்து காரைதீவைச் சேர்ந்த சுவாமி விபுலானந்தரின் மருமகளான (அமரர்) திருமதி.கோமேதகவல்லி செல்லத்துரை அவர்களால் வாசிக்கப்பெற்று அப்போதிருந்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்களிடம் கையளிக்கப்பெற்றுப் பிரகடனப்படுத்தப்பெற்றுக் கச்சேரியிலே பேணப்பெற்று வருகின்ற கண்ணகி கலை இலக்கிய விழாப் பட்டயத்திற்கு அமைவாக ஆண்டுதோறும் கண்ணகி கலை இலக்கிய விழாக்கள் கிழக்கிலங்கையின் வௌ;வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.
முதலாவது விழா 2011 இல் மட்டக்களப்பு நகரிலும் இரண்டாவது விழா 2013 இல் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பிலும் நான்காவது விழா 2014 இல் அம்பாறை மாவட்டம் தம்பிலுவிலிலிலும் ஜந்தாவது விழா 2015 இல் மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலையிலும் ஆறாவது விழா 2016 இல் மட்டக்களப்பு கன்னன்குடாவிலும் ஏழாவது விழா 2017 இல் மட்டக்களப்பு மாவட்டம் கிரானிலும் எட்டாவது விழா 2018 இல் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையிலும் ஒன்பதாவது விழா 2019 இல் மட்டக்களப்பு கல்லடியிலும் நடைபெற்று இந்த வருடம் பத்தாவது விழா மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்குப் பிரதேசத்தில் கால் பதித்துள்ளது.
கண்ணகி கலை இலக்கியக் கூடல் 2011 இல் ஆரம்பித்து வைத்த இவ்விழாவின் தொடர்ப் பயணம் தொலை நோக்குடையது. தூய்மையான இலக்குகளையுடையது சமூக நோக்குடையது. இப்பயணம் நீண்ட நெடும் பயணமாகும். கண்ணகி கலை இலக்கியக் கூடலின் இயங்குதளம் சமூகம் ஆகும்.
கலை இலக்கியங்களினூடாக மனித மனிங்களைச் செழுமைப்படுத்தி மண்ணில் மானுடத்தை ஓங்கச் செய்வதே இவ்விழாக்களின் உயிர் நாடியாகும். பாரம்பரிய இலக்கியங்கள் மற்றும் கலை வடிவங்களைப் பாதுகாத்துப் பேணி வளர்த்தெடுப்பதும் அருகிவரும் பாரம்பரியக் கலை இலக்கியங்களை அழிந்து விடாமல் மீளுருவாக்கம் செய்வதும் கண்ணகி கலை இலக்கியக் கூடல் வரித்துக் கொண்டுள்ள பிரதான பணிகளாகும்.
ஓர் இனக் குழுமத்தின் அல்லது தேசிய இனத்தின் அடையாளத்தைப் பேணுவதிலும் இருப்பைத் தக்கவைப்பதிலும் அவ் இனக் குழுமத்தின் அல்லது தேசிய இனத்தின் மொழி, வாழும் நிலம், சூழல் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு மட்டுமல்ல அந்த இனக்குழுமம் அல்லது தேசிய இனம் பேசும் மொழியில் எழுந்த கலை இலக்கியங்களும் பிரதான பங்கை வகிக்கின்றன. அதனையும் மனம் கொண்டுதான் கண்ணகி கலை இலக்கிய விழாக்களை நடாத்தி வருகிறோம்.
கண்ணகி கலை இலக்கிய விழாக்கள் வெறுமனே கூடிக் களித்துக் கலையும் விழாக்களுமல்ல் பொழுதுபோக்கோ அன்றிக் கேளிக்கையோ அல்ல. கிழக்கிழங்கைத் தமிழ்ச் சமூகத்தின் அடையாளத்தையும் இருப்பையும் பேணிப் பாதுகாத்து வளர்த்தெடுத்து அவற்றை அடுத்த சந்ததிக்கு மடைமாற்றம் செய்கின்றதொரு சமூக அசைவியக்கம் ஆகும். அதற்கமையவே கண்ணகி கலை இலக்கிய விழாக்கள் கட்டமைக்கப்படுகின்றன.
இப் பத்தாவது விழாவைக் கனகச்சிதமாகக் கட்டமைத்து ஒழுங்குகள் மேற்கொண்ட மண்முனை தென்மேற்குப் பிரதேசக் கண்ணகி கலை இலக்கிய விழாக் குழுத்தலைவர் திரு.மு..அருட்செல்வம் – செயலாளர் சோலையூரான் ஆ.தனுஷ்கரன் – பொருளாளர் செ.நகுலேஸ்வரன் – துணைத் தலைவர் சி.அகிலேஸ்வரன் – துணைச் செயலாளர் சி.ஜீவிதன் ஆகியோரைப் பதவியாளர்களாகக் கொண்ட விழாக்குழுவும், இவ்விழாவின் நெம்பு கோலாக நின்று சுழன்று பணியாற்றும் கண்ணகி கலை இலக்கியக் கூடலின் இணைப்பாளர் கதிரவன் த. இன்பராசாவும், அமைதியாகவும் அடக்கமாகவுமிருந்து பல ஆக்கபூர்வமான விடயங்களைச் சாதிக்கின்ற கண்ணகி கலை இலக்கியக் கூடலின் ஆவணக்காப்பாளர் சபா. மதனும், எனது வலது கரமாகத் திகழ்கின்ற கண்ணகி கலை இலக்கியக் கூடலின் செயலாளர் அ. அன்பழகன் குரூஸ் மற்றும் பொருளாளர் ச. ஜெயராஜா துணைத்தலைவர்களான மா.சதாசிவம் மற்றும் அ. செல்வேந்திரன் துணைச் செயலாளர் திருமதி. சுந்தரமதி வேதநாயகம் உள்ளடங்கிய தாய்ச்சங்க உறுப்பினர்களும் மு.அருட்செல்வம் தலைமையிலான மண்முனை தென்மேற்குப் பிரதேசக் கண்ணகி கலை இலக்கிய விழாக்குழு உறுப்பினர்களும் பாராட்டுக்களுக்கும் நன்றிகளுக்கும் வாழத்துக்களுக்கும் உரித்தாவர். விழாக்குழுவின் மற்றும் தாய்ச்சங்க உறுப்பினர்களின் உழைப்புக்கு நான் தலைவணங்குகிறேன்.
இந்தப் பத்தாவது கண்ணகி கலை இலக்கிய விழா மண்முனை தென்மேற்குப் பிரதேச மண்ணில் எதிர்காலத்தில் ஒரு கலை இலக்கிய ஆன்மீக எழுச்சியினை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
மேலும் எவ்வளவுதான் எண்ணங்கள் இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்த பொருள்வளம் இருந்தாலன்றி எதுவும் சாத்தியப்படாது. அந்த வகையிலே இவ்விழாவின் விடயங்களுக்கு நல்வெண்ணத்துடனும் தாராள மனத்துடனும் முன்வந்து நிதிஉதவிகளும் அனுசரணைகளும் வழங்கிய இப்பிரதேச ஆலய நிர்வாகங்களுக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தனிநபர்களுக்கும் பொது அமைப்புக்களுக்கும் நாம் பெரிதும் நன்றியுடையோம்.
மேலும் எமது அழைப்பையேற்று வருகை தந்து இவ்விழாவினையும் விழா அரங்கினையும் அணி செய்து கொண்டிருக்கும் ஆன்மிக அதிதி – முதன்மை அதிதிகள் – சிறப்பு அதிதிகள் – ஆற்றுகையாளர்கள் – கலைஞர்கள் – எழுத்தாளர்கள் – ஊடகவியலாளர்கள் – கண்ணகி கலை இலக்கிய ஆர்வலர்கள் எல்லோருடனும் இணைந்ததாக சகல வழிகளிலும் உதவி ஒத்தாசைகள் ஊக்கங்கள வழங்கிய மண்முனை தென்மேற்குப் பிரதேசக் கிராமங்களின் ஊர்மக்கள் அனைவருக்கும் நன்றியுடையோம்.
அத்துடன் இந்த விழாவுக்கு வருகை தந்தள்ளவர்களில் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு நன்றி சொல்ல வேண்டுமென்பதும் எனது அவா. அவர்கள்,
யாழ்ப்பாணத்திலிருந்து பல போக்குவரத்துச் சிரமங்களுக்கு மத்தியில் வருகை தந்துள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையின் முன்னாள் தலைவருமான சட்டத்தரணி சோ.தேவராசா, ‘சிறுவர்க்கான சிலப்பதிகாரம்’ நூலின் ஆசிரியர் எழுத்தாளர் ராணி சீதரன் – முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வருகை தந்துள்ள வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய முன்னாள் தலைவர் மு.குகதாசன் – கொழும்பிலிருந்து வருகை தந்துள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர் திருமதி வசந்தி தயாபரன் மற்றும் அவர்தம் கணவர் தயாபரன் – அக்கரைப்பற்றுத் தமிழ்ச் சங்கத் தலைவர் ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் வ. குணாளன் ஆகியோராவர்.
இவர்களுடன் தமது தாய் மண்ணில் நடைபெறுகின்ற கண்ணகி கலை இலக்கிய விழாவில் கலந்து இன்புறுவதற்காகப் பல இலட்சம் ரூபாய் செலவழித்துக் கடல் கடந்து அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்துள்ள களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த எழுத்தாளர் செந்தமிழ்ச் செல்வர் சட்டத்தரணி நண்பர் பாடும்மீன் ஸ்ரீகந்தராசா – லண்டனிலிருந்து வருகை தந்தள்ள மட்டக்களப்பைச் சேர்ந்த பி.பி.சி தமிழோசை முன்னாள் ஒலிபரப்பாளரும் தற்போது ‘அரங்கம்’ மின்னிதழ் ஆசிரியருமான ஊடகவியலாளர் பூபாலரட்ணம் சீவகன் ஆகிய இருவரும் இணைந்து கொள்கிறார்கள்.
பாடும்மீன் ஸ்ரீகந்தராசாவின் ‘கொற்றவனின் தீர்ப்பும் குற்றவியல் சட்டமும்’ என்ற தலைப்பிலான ஒரு மணிநேர சிறப்புச் சொற்பொழிவு இன்று நடைபெறவுள்ள மாலை அமர்வான இயலரங்கு சேரன்செங்குட்டுவன் அரங்கிலே இடம்பெறவிருக்கிறது.
இந்தத் தகவலுடன் எனது தொடக்கவுரையின் நிறைவாக,
அன்பானவர்களே! வாருங்கள்!
• கலை இலக்கியங்களினூடாக ஒரு பண்பாட்டுத் தளத்தில் ஒரு குடும்பமாக ஒன்றிணைவோம்.
• கலை இலக்கியங்களினூடாகச் சமூக மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்துவோம்.
• கலை இலக்கியங்களினூடாக மனித மனங்களைச் செழுமைப்படுத்தி மனித உறவுகளையும் மனித விழுமியங்களையும் மானுட நேயத்தையும் கட்டியெழுப்புவோம்.
• கலை இலக்கியங்களினூடாக இயற்கை அனர்த்தங்களினாலும் யுத்தக் கொடுமைகளினாலும் வாழ்வியல் துன்பங்களினாலும் துவண்டு போயுள்ள மனித மனங்களை ஆசுவாசப்படுத்துவோம்.
• கலை இலக்கியங்களினூடாக அறிவார்ந்த சமூகமொன்றினை நிர்மாணம் செய்வோம்.
